7/1/17

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் விலை உயர்வுக்கு வழி செய்கிறதா?


500 மற்றும் 1000 ரூபாய்கள் மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டபின் எழுந்த பணத்தட்டுபாடு இன்னும் தொடர்கிறது. செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு சமமான புது நோட்டு புழக்கத்தில் விடப்படும் என்று முன்பு அறிவித்த மத்திய அரசு, டிஜிட்டல் பரிவர்த்தனையை கருத்தில் கொண்டு தனது முடிவை மாற்றிவிட்டது.  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளுக்குச் சமமான அளவில் புது நோட்டுகள் வெளியிடப்படாது என்றும் . இந்த இடைவெளி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நிரப்பப்படும் என்றும் அறிவித்துவிட்டார்.  இது  பொது மக்கள் கார்டுகளின் மூலம் அல்லது மற்ற டிஜிட்டல் முறைகள் மூலம்  தங்கள் பரிவர்த்தனைகளைச் செய்யது கொள்ள  வேண்டிய கட்டாய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது எந்த  அளவு வெற்றிபெறும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இந்தியாவில் 24 கோடிக்கு மேல் கிரிடிட் கார்டுகளும்  6.50 கோடிகளுக்கு மேல் டெபிட் கார்ட்களும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின்  மார்ச் 2016 அறிக்கை  சொல்லுகிறது. இதில் பயன்படுத்தாத கார்டுகள் 39%க்கும் மேலிருக்கிறது.

 நாட்டின்  மொத்த சில்லறை வணிகம் 12 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டிருக்கிறது. இது ஆண்டுக்கு 6 % வளருகிறது என்றும்  உலகிலேயே மிக அதிகளவில் சில்லறை வணிகம் செய்யும் கடைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.  இந்த நிலையில் சில்லறை வணிக   பரிவர்த்தனைகள்  முழுவதுமாக இல்லாவிட்டாலும் கூட பெரிய அளவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும்   கார்ட் களின் மூலம் நடைபெறமுடியாது.
இந்த நிலையை மாற்ற. கார்டு பரிவர்த்தனைகளை  ஊக்குவிக்கும் வகையில், அதற்கான கட்டண குறைப்பு, ஊக்கப் பரிசுகள் போன்றவற்றை அரசு அறிவித்திருக்கிறது.  தற்போது  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனையின்போது  கட்டணம் ரூப்பய் 2,000 வரை 0.75 சதவீதமாகவும், x2,000க்கு மேல் ஒரு சத வீதமாகவும் உள்ளது. கார்டு பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்தக் கட்டணம்  தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதோடு, பிற சேவை கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவை எந்த அளவுக்கு  நுகர்வோருக்கு உதவும்?
 டெபிட்கார்டுகளுக்கான கட்டணங்கள்  ரத்து செய்யப்பட்டதால், நுகர் வோருக்கு எந்தப் பலனும் கிடைக்காது  காரணம் இந்தக் கட்டணம், வணிகர்களுக்கான கட்டணம்.  இது தள்ளுபடி செய்யப் பட்டதால், அவர்கள்  இது நாள் வரை செலுத்திவந்த இந்தக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வங்கிக்குச் செலுத்த வேண்டியதில்லை.  ஆனால் அதற்காகப் பொருட்களின் விலையைக் குறைக்கப்போவதில்லை.
டெபிட் கார்டுகளுக்கான இந்தக் கட்டணம் ஒரு சதவீதத்துக்கு மேல் கூடாது என்றபோதும், கிரெடிட் கார்டுகளுக்கு இந்தக் கட்டண உச்சவரம்பு இல்லை. இது சில வங்கிகளில் 2.5 % வரை இருக்கிறது. . இதனால் தான் இன்று பல இடங்களில் கார்ட்களுக்கான வங்கி கட்டணத்தை நகர்வோர்களிடம் வசூலிக்கிறார்கள். இந்த முறையில் பெரிய மாற்றம் வராதவரை நுகர்வோர் கார்ட் முறைகளுக்கு மாறுவதால்  வாங்கும் பொருட்களுக்கு  அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டணங்களில் பெரிய பகுதி  கார்ட் முறையில் செலுத்த உதவும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் என்ற கருவி வழங்கியிருக்கும் நிறுவனத்துக்கும் வங்கிகளுக்கும் போகிறது. இதனால் அவர்களின் வருமானம் உயரும். நுகர்வோர்  ரொக்கத்துக்கு வாங்குவதை விட அதிக விலையாக இந்த கட்டங்களைக்  கொடுக்க வேண்டியிருக்கும்.
இதைத்தவிர வங்கிகள் காரட்டுகளை வழங்க ஆண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு ரிசர்வ் வங்கியின் விதிகள் எதுவும் இல்லாதால், இந்தக் கட்டணம்  எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் இந்தக் கட்டணங்கள்  கார்டை பயன்படுத்தாவிட்டாலும் செலுத்த வேண்டும். சில வெளிநாட்டு வங்கிகள் கார்டை பயன்படுத்தாற்காகவும்  அதிக கட்டணம் வசூலிக்கிறது.
கார்ட் பரிவர்த்தனைகளுக்கு சந்தை தயாராகயிருக்கிறதா?
இப்போது நாடு முழுவதிலும் 15.1 லட்சம் ஸ்வைப் மிஷின்கள் இருக்கின்றன.  அரசின் திட்டப்படி கார்ட் மூலம் வணிகம் பரவலாக அதிகரிக்க வேண்டுமானால் இன்னும் 20 லட்சம் மிஷின்கள்  உடனடியாக வேண்டும். ஆனால் இதைச் செயல்படுத்த  குறைந்தபட்சம் ஒராண்டு ஆகும் என்கிறார் பாரத ஸ்டேட்வங்கியின்  முதன்மை பொருளாதாரஆலோசகர்  திரு எஸ். கே கோஷ். மேலும்   அதிவேக இன்டர்னெட் இணைப்புகள் இல்லாமல் இது வெற்றிகரமாகச் சாத்தியமில்லை. மின்சாரமே பிரச்னையாக இருக்கும் பல கிராமப் பகுதிகளில் இது மிகப்பெரிய சவாலாக எழும்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி  நோட்டுகளின் மதிப்பழிப்புக்கு  முன் ஒரு டெபிட் கார்டில் மாதத்துக்கு சராசரியாக 1500 ரூபாய் பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது.  அறிவிப்புக்குப் பின்னர் இந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றமில்லை. அதாவது கார்டுகளை ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்தவர்களை விடப் புதிதாக  அதிகமானோர் இதைப் பயன்படுத்தவில்லை.

 

வாலட் முறை எளிதா?

பிரதமர்  ஒரு கூட்டத்தில் பேசும்போது “கார்டுகள் கூட அவசியமில்லை. உங்கள் போன்களை பயன் படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யுங்கள்” எனத் அறிவித்தார். இந்த ‘இ வால்ட்’ முறையிபடி உங்களுக்கு கார்டுகள் வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு, அல்லது அதுபோன்ற ஒரு அமைப்பில்  நீங்கள் வைத்திருக்கும் பணத்திலிருந்து போன் மூலமாகவே விற்பனையாளர்  வங்கிக்கணக்கு பணத்தை நேரிடையாகச்  செலுத்த முடியும்.
இது எந்த அளவுக்குச் சாத்தியம்? இதற்கு ஸ்மார்ட் போன்கள் தேவை  என்பது மட்டுமில்லை அதை வங்கி பரிவர்த்தனைக்கு  எளிதாகக் கையாள  எல்லோருக்கும் தெரிந்திருக்கவும் வேண்டும். இந்தியாவில்  மொபையல் போன் பயன்படுத்துபவர்கள் 100கோடிக்கும் மேல் என்பதும், உலகில்  இந்தியா 2 வது இடத்தில் இருக்கிறது என்பதும்  உண்மை  என்றாலும்  அதில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 3 கோடிகளுக்கும் குறைவு. முக்கிய காரணம் விலை..
 இவர்கள் ஸ்மார்ட் போன் வாங்குது மட்டுமில்லாமல் இணைய வேகத்துக்குஏற்ப டேட்டா கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த டேட்டா கட்டணத்துக்காக  கூடுதலாக மாத பட்ஜெட்டில் ஒரு தொகையை ஒதுக்கினால்தான்  இ வாலட் முறையைப் பயன்படுத்த முடியும்

 இந்தச்சூழலில் அரசு என்ன செய்ய வேண்டும்?


மிகப் பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்கள் பற்றி  தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், குறிப்பாக கிராமமக்களிடம் இதை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்லவேண்டும்.
கட்டணம் வசூலிப்பதால்,  சிறு வணிகர்கள் ஸ்வைப்பிங் மிஷின்களை நிறுவத் தயங்குகிறார்கள், இதைத் தவிரிக்க வங்கிகள் குறைந்த கட்டணத்தில் இதை வழங்கவேண்டும்  அவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களையும் வெகுவாக குறைக்க வேண்டும். டிஜிட்டல் முறை  மூலம் நடந்த பரிவர்த்தனைகளுக்கு 80 c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இதுபோன்ற திட்டங்களை அறிவிக்காமல், லாட்டரி பரிசுகளை மட்டும்  அறிவிப்பதினால் பயன் ஏற்படாது. டிஜிட்டல்  பண பரிமாற்றத்தினால்  மக்கள்  செலுத்த வேண்டிய  மறைமுக கட்டணங்கள், வேகமில்லாத இணைய இணைப்புகள்  போன்று  சந்திக்கும் பல கஷ்டங்களை  நீக்க உடனடியாக ஆவன செய்யாவிட்டால் வர்த்தக முடக்கமும்  பணத்தட்டுபாடும்   அரசின் மீது மக்களின்  வெறுப்பும் தொடர்கதையாகிவிடும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்