21/4/17

ஹலோ ஸ்மார்ட் இந்தியா


மாரத்தான் தெரியும். வாக்கத்தான் கூட தெரியும். அதென்ன ஹாக்கத்தான்?

கணினித்துறையினர் பலர் ஒன்றாகக்கூடி தங்களுடைய புதிய யோசனைகளை- “பெட்டிக்கு வெளியே” என்று சொல்லுவார்களே அந்த அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்கில் உதித்த புதிய எண்ணங்களை ஒரு திட்ட அறிக்கையாக சமர்ப்பித்து அதை விளக்குவார்கள். நீதிபதிகளாக இருக்கும் வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு பரிசுகளும் பெரிய நிறுவனங்கள் அந்த யோசனையை நல்லவிலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கும்.
“ ஹாக்” என்றால்கணினி மென்பொருள் திருட்டு என்ற அர்த்தத்தில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் ஒரு கணினி யின் மென்பொருள் திட்டத்தை “அலசி ஆராய்வது” என்பது. அதில் பலர் பங்கேற்று குறிபிட்ட நேரத்துக்குள் தாங்கள்: யோசனைகளைச்சொல்லும் போட்டியானதால் அதை மாராத்தானுடன் இணைத்து “ஹாக்கத்தன்” எனப் பெயரிட்டார்கள். 1990ல் மிக சாதாரணமாக ஒரு நகர அளவில் துவங்கிய இது 2010லிருந்து உலகின் பல நாடுகளில், சில சமயம் யாஹு போன்ற பெரிய நிறுவனங்களுன் நடத்த ஆரம்பித்தன. இப்போது உலகின் பல நாடுகளில் இது நடக்கிறது. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் முக்கியமான விஷயம் தன்னைப்போல சிந்திக்கும் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புதான். செலவுகள் பங்கேற்பவர்களுடையது. என்பதால் சாதாரண தங்குமிடம், (சிலசமயங்களில் டென்ட் தான்) எளிமையான உணவு போன்றவற்றுடன் ஓய்வு நேரங்களில் இளைஞர் பட்டாளம் பாட்டு, ஆட்டங்களுடன் கலக்கிக்கொண்டிருப்பார்கள்

பிரதமர் மோடி அறிவித்த டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியான ஸ்மாட் இந்தியாவின் ஒரு பகுதியாக இந்தியாவில் “ஹாக்கதான் 2017” ஒரு சில மாற்றங்களுடன். அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதை அரசின் நிறுவனங்கள் முன்னெடுக்கும். போட்டிகளை விதிகளுடன் நடத்த மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு குழு நடத்தி அரசே பரிகளையும் அளிக்கும். நாட்டிலுள்ள அனைத்து பொறியில் கல்லூரியிலிருக்கும் கணினி பிரிவு மாணவர்களின் குழு அந்தக் கல்லூரியின் சார்பாகப் பங்குகொள்ளலாம்.. ஒரு குழுவில் ஆறு பேர் இருக்கலாம்.அதில் கட்டாயமாக ஒரு மாணவி இருக்கவேண்டும். குழுவைக் கல்லூரியின் பேராசியர் ஒருவர் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டும். ஒருகல்லூரி 3 குழுக்கள் வரை அனுப்பலாம். கணனிப்பாடத்தை எடுத்துப் படிக்காத ஆனால் ஆர்வமுள்ள மாணவர்களும் அந்தக் குழுவில் இருக்கலாம் போன்ற நிபந்தனைகளுடன் திட்டம் அறிவிக்கபட்டது. உலகில் இதுவரை இந்த ஹாக்கத்தான் அரசின் ஆதரவுடன் நடந்ததில்லை

இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவிடம் இதை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அவர்கள் செய்த முதல் காரியம் அரசுத்துறைகளிடம் உங்கள் துறையில் சமூகம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பாக அல்லது இருப்பதில் எதை விரிவாக்கம் செய்ய வேண்டும்? என்று கருதுகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கக்கோரினார்கள் . 29 அமைச்சகங்களிலிருந்து வந்து சேர்ந்த பல யோசனைகளில் 598 பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதை ஒரு போட்டியாக ஹாக்கத்தான் 2017க்காக அறிவித்தார்கள்.
முதலாண்டு என்பதால் ஓரளவுதான் பங்கேற்பு இருக்கும் என எதிர்பார்த்த ஐஎஸ் ஆர்வோ போட்டிக்கு பதிசெய்தவர்களின் எண்ணிக்கைக் கண்டு மிரண்டுவிட்டது. ஆன்லனையில் பதிவு என்பதால் கடைசிநிமிடம் வரை விண்ணப்பங்கள் குவிந்தன. 42000 மாணவர்கள் பங்கேற்கும் 7531 குழுக்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 10000 மாணவர்கள் அடங்கிய 1266 குழுக்கள் மட்டும் போட்டிக்கு தேர்ந்த்டுக்கப்பட்டன. இந்தக்குழுக்கள் நாட்டின் 26 மையங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தங்கள் திட்டங்களை வல்லுநர்களுக்கு விளக்கினர். 5 நிமிடம் தான் நேரம் அதில் 3 நிமிட விளக்கஉரைக்கு 2 நிமிடம் கேள்வி பதிலுக்கு என ஒட்டம் நடந்து முடிந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் இறுதிச்சுற்று ஹாக்கதானில் பங்குகொண்டார்கள்
இந்த ஆண்டு ஹாக்த்தானை நடத்திய மையங்களில் ஒன்றான அகமதாபாத் மையம் ஹாக்கதான் 2017 இறுதிச்சுற்றை நடத்தியது. 50 குழுக்கள் பங்கேற்றன. போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 35 பிரச்சனைகளில் ஒன்றுக்கு இவர்கள் தங்கள் கண்டுபிடிப்பான தீர்வுகளை விளக்கினார்கள். தொடர்ந்து 36 மணி நேரம் மாணவர் குழுக்கள் விரைவாக தங்கள் எண்ணங்களை கொட்டிக்கொண்டிருந்தார்கள். நிபுணர்கள் குழு திக்குமுக்காடிபோனது. இறுதியில் டென்ஷனில் நகம் கடித்துக்கொண்டிருந்த போட்டியாளர்களிடம் முதல்பரிசான ஒரு லட்சதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது தமிழகத்தைச்சேர்ந்த காஞ்சிபுரத்திலிருக்கும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் டீம். சரி - இரண்டாவது இடம் யாருக்கு? எனக் காத்திருந்போது ஒலித்த அறிவிப்பு மதுரை தியாகராயர் கல்லூரி
கர்நாடக மாநிலத்தின் கல்லூரிக்கு மூன்றாம் இடமும் டில்லி, மும்பய் கல்லூரிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன. ஐஎஸ் ஆர்வோ தலைவர் பரிசுகளை வழங்கினார்.

இந்த இறுதிச்சுற்றின் முடிவில் போட்டியாளர்களுடன் விடியோ கான்பரன்ஸில் பிரதமர் உரையாற்றினார். இறுதிச்சுற்றுக்கு வராதவர்களும் போட்டிகள் நடந்த மையங்களிடமிருந்து அவருடன் உரையாடினார்கள்.
“உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்ளுகிறேன்” என்று இரவு 8 மணிக்குத் துவங்கிய பிரதமரின் உரையாடல் முடிந்தபோது இரவு மணி 11.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்படவேண்டும், கிராமப்புற இளம்பெண்களுக்கு அரசே நாப்கின்கள் வழங்க வேண்டும் என்பதிலிருந்து அதிநவீன 3டி பிரின்டிங், இயந்திரங்களின் புத்திசாலித்தனம் வரை மாணவர்கள் சொல்லும் சிலயோசனைகளை பிரதமர் பாராட்டுகிறார். சிலவற்றிற்கு கேள்விகள் கேட்கிறார். இறுதியாக

“இன்று அரசாங்கம் அடையாளம் கண்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன் வைத்திருக்கிறீர்கள். அரசாங்க பிரச்சனைகளுக்கு முடிவு சொல்ல வேண்டியது அரசாங்கம் மட்டும் தான் என்ற மாயை உடைத்து எங்களாலும் முடியும் எனச் சொல்லியிருக்கிறீர்கள்” என்று போட்டியாளர்களைப் பாராடினார்.

‘மாராத்தான் ஓட்டங்களின் வெற்றி என்பது பரிசுபெற்ற சிலரால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பங்குகொண்டவர்கள் அனைவரும் தான் இந்தப் போட்டிகளை வெற்றியாக்குகிறார்கள்’ என்ற வாசகங்கள் பாரிஸ் நகரில் இருக்கும் சர்வதேச மாராத்தன் பவுண்டேஷனின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இந்திய ஹாக்கதான் 2017க்கு அது மிகவும் பொருந்தும்.
நாடு முழுவதிலிருந்தும் 42000 ஸ்மார்ட்டான மாணவர்கள் தங்கள் எண்ணங்களை ஓட விட்டிருக்கிறார்களே .


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்