12/12/17

குடகு மலைக் காற்றினிலே 110/12/2017


பொன்படு நெடுவரைபயணம் எப்படியிருந்தது ? என்றார் நண்பர். விழித்தேன்.

 அதான் சார் கூர்க் (coorg) டிரிப் என்றார். புறநானூறு பாடலில் அப்படித்தான் அந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறது. பொன்போலத்தோன்றும் மலை என்று அர்த்தம் அங்கு மழைபொழிந்தால் காவிரியில் வெள்ளம் வரும். அதானால் தான் காவிரியாற்றுக்கு பொன்னி என்றும் எனப்பெயர் என்றார். மனுஷர் சங்க இலக்கியங்களைத் தினசரி படிப்பவர்,  அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர்

அட! நாம் போன இடம் தமிழிலக்கியத்தில் பேசபட்ட இடமா? என்று ஆச்சரியத்துடன் பயணம் பற்றிப் பேசினேன். HOME STAY பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தார்.( நல்ல வேளையாக இதுவும் சங்க காலத்திலேயே இருந்தது என்று சொல்ல வில்லை.)

கர்நாடகத்தில் கூர்க் ஒரு மிகச்சிறிய மாவட்டம். 3 தாலுக்காக்கள்தான். மக்கள் தொகை 30000க்கும் கீழ்.மக்கள் வாழும் பகுதிகளைவிட மலைப்பகுதிகள்தான் அதிக. . 1000 மீட்டர் உயரத்திலிருக்கும் மடிக்கேரி நகர தான் மாவட்ட தலைநகரம் மைசூரிலிருந்து 120 கீமி. மலைப்பாதை வழியெங்கும் காபிதோட்டங்களும் அதன் அருகே நிற்கும் ஒக் மரங்களைத் தழுவிக்கொண்டிருக்கும் மிளகுக்கொடிகளையும் பார்த்தபோது

 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று சொன்ன பாரதி நினைவிற்கு வந்தான்

இங்கு நல்ல ஹோட்டல்கள் இருந்தாலும் ஹோம் ஸ்டே என்பது மிகப் பாப்புலாரன ஒரு விஷயம். விருந்தோம்பலுக்குப் பெயர்போன குடகு மக்களிடம் தங்கள் வீட்டில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் ஒரு பகுதியை  தங்கள் நகருக்கு வரும் பயணிகளுக்கு  ஒதுக்கி அவர்களைக் கவனித்துக்கொள்ளும் வழக்கமிருந்திருக்கிறது.. இலவசமாகக் இப்படி கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  மெல்ல ஒரு பிஸினஸாக டெவலப்பாகியிருக்கிறது, இன்று அந்தச் சின்ன ஊரில் 1500க்கும் மேல் இப்படி ஹோம் ஸ்டே வீடுகள். இதற்கு நகரசபையில் லைஸ்ஸென்ஸ் வாங்க வேண்டும், ஒவ்வொரு விருந்தினருக்கும் வரி செலுத்த வேண்டும்(நம் பில்லில் வருகிறது). (லைசென்ஸ் இல்லாமல் நடத்துபவர்களும் நிறைய இருக்கிறார்கள்) இந்தப் பிஸினஸ் இன்ட்ர்நெட்டின் புண்ணியத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது
.
டூரிஸ்ட்களுக்கு உதவும் பிசினஸ் ஆகிவிட்டதால், make my trip.com. Mytravel போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் இறங்கிவிட்ட இந்தப் பிஸினஸில் இப்போது airbnb போன்ற சரவதேச நிறுவனங்கள்  இறங்கி விட்டன.(அயர்லாந்திலிருந்து உலகளவில் பல நகரங்களில் இந்த வசதியைத் தருபவர்கள்)

இவர்கள் இப்படி ஹோம் ஸ்டே வசதி தருபவர்களைப் பற்றி அழகான படங்களூடன் தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் வசதிகளை நேரில் பார்த்து உறுதி செய்துகொள்வதாலும், சில கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருப்பதாலும் நம்பி புக்  பண்ணலாம்..
 இந்த நிறுவனங்கள் ஹோம் ஸ்டே தருபவர்களுக்கு டூரிஸ்ட்களிடமிருந்து ஆர்டர் வாங்கிக்கொடுத்து தங்கள் கமிஷனைப்பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நீங்கள் பணம் செலுத்தி புக் செய்யும் வரை host என்று சொல்லப்படும் அந்த வீட்டின் உரிமையாளாரை நீங்கள்  தொடர்பு கொள்ள முடியாது. (நேரடியாகப் பிஸினஸ்பேசிவிடுவதைத் தவிர்க்க)

ஒரு சின்ன இரண்டு பெட் ரூம் ஃபிளாட் +கிச்சன்(கியாஸ். பாத்திரங்களுடன்) வசதியிலிருந்து காபி எஸ்டேட்க்குள்ளிருக்கும் பெரிய பங்களாவரை கிடைக்கிறது. சின்ன காபி எஸ்டேட் வைத்திருப்பவர்கள் நகரிலிருக்கும் தங்கள் வீட்டைப் பெரிதாகக் கட்டி இப்படி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாடகை ஒரு நாளுக்கு 2000(4 பேர்)லிருந்து 25000 வரை இருக்கிறது. உணவு (ஸ்பெஷல் கூர்க் உணவுகள்) தயாரித்துத் தருவார்கள் அதற்குத் தனிக்கட்டணம், ஆனால் ஹோட்டல்களை விடக் குறைவு.
நாங்கள் நகருக்கு அருகில் அதே நேரத்தில் இயற்கைச் சூழலுடனும் இருக்கும் மலைச்சரிவிலிருக்கும் ஒரு வீட்டைப் படத்தைப் பார்த்துத்தேர்ந்தெடுத்திருந்தாலும் நேரில் எப்படியிருக்குமோ என்றுதானிருந்தது. நகரை நெருங்கும்போது எங்கள் ஹோஸ்ட் திருமதி நீத்து விடம் பேசி பாதைகேட்டபோது தெளிவாகச்சொல்லிக்கொண்டே வந்தார். அழகான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமாக யிருந்தது. ஆனால் வீட்டை அடைந்த பின் தான் தெரிந்தவிஷயம் அவர் பெங்களூரிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது.


நான் ஒரு அவசர வேலையாகப் பங்களுர் வர வேண்டியதாகிவிட்டது. உங்களைக் கவனித்துக்கொள்ள என் பெற்றோர்கள் அங்கு வந்திருக்கிறார்கள் (நகரில் வேறு பகுதியில் இருப்பவர்கள்) என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெல்கம் டூ கூர்க் எனக் காபியுடன்       (அருமையான காபி  ) வரவேற்றார் நீத்துவின் தந்தை பொன்னப்பா (78வயது). ந்த அளவுக்கு இதைப் பிஸினஸாக மட்டுமில்லாமல் குடும்பமே சந்தோஷமாகசெய்கிறார்கள். என்று புரிந்தது.
 நகருக்குள் நீங்கள் நுழையும் போதே நான் வீட்டில் இல்லை எனறு சொன்னால் நீங்கள் வருந்தக்கூடும் என்பதால் நான் முதலில் அதைச் சொல்லவில்லை. என் பெற்றோர்கள் உங்களுக்காக மத்தியானத்திலிருந்தே காத்திருக்கிறார்கள் நான் நாளை மாலை வந்துவிடுவேன் என்று நீத்து சொன்ன அந்த வினாடியே அந்த வீட்டை மட்டுமில்லை அந்தக் குடும்பத்தையே எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. மறு நாள் வந்தவுடன் எங்களுக்காக பிரேக்பாஸ்ட் தயாரித்துக் கொண்டுவந்தவருடன்  நிறையப் பேச முடிந்தது. ஹோம் ஸ்டே பிஸினஸ் நன்றாக் இருப்பதாகச்சொன்னார்.. டிசமபரில் இவரது மட்டுமில்லை அனேகமாக எல்லாவீடுகளுமே புக்காகி விட்டது என்றார். ஒவ்வொரு ஆண்டும் டூரிஸ்ட் எண்ணிக்கை உயர்கிறது என்கிறார்.


மெடிகல் டிரான்ஸ்கிரிப்பிஷன், கணவரின் எஸ்டேட்நிர்வாகத்தில் உதவி, இந்த ஹோம் ஸ்டே எல்லாவற்றையும் அழகாகக் கவனிக்கும் இந்தச் "சுப்பர் மாம்" மின்  இரண்டு மகன்கள் கல்லூரியில்.
குடகுப் பெண்கள் மிக ஸ்மார்ட் ஆனவர்கள் என்று நண்பர்கள் சொன்னதுண்டு. இன்று அதை நேரிடையாகப் பார்க்க முடிந்தது.

 அன்று மாலையில் அவர் பார்க்கச்சொல்லியிருந்த அழகான இடத்துக்கு இப்போது  போய்க்கொண்டிருக்கிறோம் .

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்