6/12/17

உலக இசைநகரங்களில் நம்ம சென்னை


இந்த ஆண்டு இசை விழா துவங்கும் முன்னரே வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி ஜக்கிய நாடுகள் சபையின் ஒர் அங்கமான யூனஸ்கோ சென்னையை உலகின் பாராம்பரிய இசை நகரங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது என்பது... (மகிழ்ச்சியில்லாத செய்தி T.N கிருஷ்ணாவின் பேச்சு என்பது வேறுவிஷயம்)
யூனஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின்(creative cities) பட்டியலிற்காக இந்த ஆண்டு இந்தியாவின் வாரணாசி, சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய 3 நகரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் சென்னையும் வாரணாசியும் இசைக்காகவும் ஜெய்ப்பூர் கைவினை மற்றும் நாட்டுப்புறகலைகளுக்காகவும் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கின்றன.
2004ஆம் ஆண்டு முதல் உலகாளாவிய நிலையில் தனிதன்மையுடன் பாரம்பரியத்தன்மைகளயும், பண்பாட்டுச்சிறப்புகளையும் கலைமரபுகளையும் கொண்டுள்ள நகரங்களைப் பட்டியலிட்டு யூனஸ்கோ அறிவித்துக்கொண்டிருக்கிறது. இத்தாலி, ஸ்வீடன், மெக்ஸிகோ நியுஸிலாந்து, போர்ச்சுகல், கஜகஸ்தான் போன்ற நாடுகளைச்சேர்ந்த சில நகரங்களே ”இசைக்கலைக்காக”. இடம் பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இப்போது. இடம் பெற்றிருப்பது “நம்மசென்னை”.
இந்த நெட் ஒர்க்கில் இணைவது மூலம் உலகின் மற்ற இசைநகரின் கலைஞர்கள் இங்கு வரவும், நமது கலைர்கள் அங்குப் பயணிக்கவும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
யூனஸ்கோ சென்னையை இன்று ஒரு இசை நகரமாக அறிவித்துக் கெளரவித்திருப்பது பெருமையளிக்கும் செய்தியானலும், சென்னை நகரின் இசைப்பாரம்பரியம் 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது.
1927ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னயில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டின் பரிந்துரையில் எழுந்த மியூசிக் அகடமி இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட சபாக்களில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக்கொண்டு நடைபெறும் இசைவிழாக்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 90 ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி இசைவிழாக்களை அதுவும் தனியார் உதவியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஒரே நகரம் சென்னை. இசை விழாக்கள் மட்டுமின்றி நல்ல இசையின் வடிவங்களை நமக்கு அளித்தவர்களைத் தெய்வமாகப் போற்றி ஆண்டுதோறும் ஆராதிப்பதும் உலகில், தமிழகத்தில் மட்டுமே
.
இசையை மட்டுமில்லாமல் நடனம், மற்றும் அது சார்ந்த கலைகளை வளர்க்க பல ஆண்டுகளுக்கு முன்னரே 100 ஏக்கர் பரப்பில் ருக்மணி அருண்டேல் அவர்களால் சென்னையில் துவக்கபட்ட கலாஷேத்திரா என்ற கலைக்கூடம் இன்று உலகப்புகழ் பெற்ற அமைப்பு. இசையை முறையாக இளநிலைப்படிப்பிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புவரை கற்கும் வசதியை முதன் முதலில் அளித்த்து சென்னைப் பல்கலைகழகம் தான். 2013ல் இசையை உள்ளடக்கிய இசைமற்றும் நுண்கலைகளுக்காகத் தனிப் பல்கலைகழமே துவக்கப்பட்டது சென்னையில் தான்.
சென்னை கார்ப்ரேஷன் இந்தியாவின் மிகப்பழமையான கார்ப்பரேஷன். 1688ல் அதற்கான சார்ட்டர்(பிரிட்டிஷ் அரசின் அனுமதி) வந்தபோது அதைப் பராம்பரிய இசைக்கலைஞர்களும், நடனக்கலைஞர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கோலாகலமான ஊர்வலமாகச் சென்னை செயின்ட் ஜார்ஸ் கோட்டைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவு இசைக்கலை பெருமைப் படுத்தபட்ட நகரம் சென்னை.
கர்நாடக இசை மட்டும் சென்னையின் அடையாளமில்லை. வெஸ்ட்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக் என அறியப்படும் மேற்கத்திய சங்கித்தைப் போற்ற மெட்ராஸ் மியூஸிகல் அசோசியஷன் பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் துவங்கியிருக்கிறது. மேற்கத்திய இசையில் பயன்படுத்தப்பட்டுவந்த வயலினை கர்நாடக இசைக்கேற்ப மாற்றி வடிவமைத்ததில் இவர்களின் பணி முக்கியமானது.
இசைக்கச்சேரிகள் என்றால் தெலுங்கு அல்லது சமஸ்கிருத கீர்த்தனைகள் என்ற நிலையை மாற்றிப் பாரம்பரிய தமிழசைக்கு தனி அந்தஸ்துப் பெற ராஜாஜி, டிகேசி, கல்கி போன்றவர்கள் போராடி வெற்றிகண்டதின் விளைவாகத்தான் இன்று ஆண்டுதோறும் சென்னையில் தமிழிசைவிழாக்கள் நடைபெறுகின்றன.
இசைவிழாக்கள் பெரிய அரங்குகளில் மட்டுமில்லாமல் நகரின் பல இடங்களில் சிறிய அளவு ரசிகர்களுடனும் வளர்ந்துகொண்டிருக்கிறது. அண்மையில் நகரின் ஒரு பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷனின் அமைதியான பகுதியிலேயே, அண்மையில் ஒரு இசைக்கச்சேரி நடந்தது
.
இந்துஸ்தானி, கஜல், ராக், மேற்கத்திய கிளாஸிகல். தமிழ் திரையிசை, இந்தி திரையிசை வெளிநாட்டுகுழுவினரின் இசை என்று எல்லா வடிவ இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்னையின் அரங்கங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த அளவு இசை என்பது நகரோடு ஒன்றிப்போன சென்னை நகரத்துக்கு யூனஸ்கோ தந்திருக்கும் கெளரவம் தாமதமானலும் தகுதியானதுதானே?. மகிழ்ச்சியோடு ஏற்போம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்