13/1/18

குடகு மலைக்காற்றினிலே 6அமைதியாகப் பாயுமிடங்களிலெலாம பசுஞ்சோலைகளாக வயல் வெளிகளை வாரியிரைத்துக்கொண்டே போகும், பாயாததால் பிரச்சனைகளையும், அரசியலையும் உருவாக்கும் காவிரிப்பெண்ணின் பிறந்த வீடு மிக மிகச் சிறியதாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆராவார நீர்விழ்ச்சியாக விழுந்து அலைபுரணடு நதியாகப் பரந்து விரிந்து பாயும் காவிரிப் பெண் இந்த இடத்தில் சமர்த்துப்பெண்ணாக, மிகவும் சாதுவான பெண்ணாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறாள். ஆமாம் உண்மையில் உற்பத்தியாகும் சுனையைக்கூட இன்று பார்க்கமுடியவில்லை.
சங்ககாலப் பாடல்களிலிருந்து இன்றைய திரைபாடல் கவிஞர்கள்வரை பாடப்பெற்ற காவிரி பிறந்த தலைக்காவேரிக்கு மெடிக்கேரியிலிருந்து 45 கீமி தொலைவிலிருக்கும் பிரம்மகிரி என்ற மலைப்பகுதிக்கு பயணிக்கிறோம்.
வழியெங்கும் பசுமைபோர்த்திய மலைக்கிராமங்கள். பெரிய தோட்டங்களின் இடையே. சின்னச் சின்ன வீடுகள். எல்லோருடைய வீடுகளிலும் மிளகுக் கொடிகள் கிழங்கு வகைகள் காய்கறிகள் தோட்டம். நாம் சென்ற பாதைகளிலிருக்கும் வீடுகளின் வாசலில் அன்று பறித்த பச்சை மிளுகு காயவைக்கபட்டிருக்கிறது
.
ஒரு வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் தமிழ் நாட்டுக்குக் காவிரி தண்ணீர் வராதது பற்றி அவர்களுக்குத் தெரியுமா என்பது பற்றிப் பேச முயற்சித்தேன். தங்கள் வேலையிலே கவனமாக யிருந்ததாலும், பேசுவது குடகு மொழி கலந்த கன்னடமாகயிருந்தால் அதிகம் பேச முடியவில்லை.
தலக்காவிரி (இங்கு அப்படித்தான் சொல்லுகிறார்கள்) மேற்கு மலைத்தொடர்ச்சியின் மலைப்பகுதியான இதில் 4000 அடி உயரத்தில். ஒரு சிறிய வற்றாத ஜீவ நீர்ச்சுனையாக இருப்பதுதான் காவிரியின் துவக்கம். அந்தச் சுனையிருக்குமிடத்திலிருந்தும் அது நதியாகப் பெருக்கெடுக்க வில்லை. அந்த இடத்தின் கிழே பல மீட்டர்கள் ஆழத்தில் நதியாக வெளிவருகிறது ஓட்டமும் நடையுமாக 800 கீமி ஒடி (கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ.) பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது
.
நதிகளைத் தெய்வமாகப் பூஜிக்கும் நம் நாட்டில் காவிரிக்கு தனியிடமிருக்கிறது. இரண்டு மாநிலத்திலிருந்து மட்டுமில்லை வட மாநிலங்களிலிருந்து வந்தவர்களையும் இங்குப் பார்க்க முடிகிறது. மலைப்பாதையில் ஒரு சுனை போல இருந்த இடத்தை இப்போது மிகப்பெரிய வளாகமாவே ஆக்கியிருக்கிறார்கள். பிரமாண்ட நுழை வாயில் அகலமான படிகள் வரவேற்கிறது. Thalakaveri temple என்ற பெயர் பலகை இதற்குக் கோவிலின் அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருப்பதைச் சொல்லுகிறது. வழவழ தரையுடன் பெரிய பரப்பு, உட்கார்ந்து மேற்கு குடகு மலைகளை ரசிக்க வசதியான நாற்காலிகள் எல்லாம். படு சுத்தமாக இருக்கிறது
.
படிகள் ஏறி காவிரித்தாயின் பிறக்கும் இடத்தைப் பார்க்க சென்ற நம் கண்களில் படுவது ஒரு ஸ்மிங்க் பூல் மாதிரி ஒரு நீர்த்தொட்டி அதன் தலைப்பக்கத்தில் ஒரு சின்ன அலமாரி சைசில் கதவுகள் மூடிய மண்டபம். அதற்குள்ளூம் அதன் கீழும் தான் காவிரிப்பெண் முதலில் மண்ணை முத்தமிடுகிறாளாம். அந்த மண்டபத்தின் முன் சட்டையுடன் இருக்கும் பூஜாரி முன் அமர்ந்து பூஜை செய்கிறார்கள். என்ன பூஜை செய்வீர்கள்? என அந்தப் பூஜாரியிடம் கேட்டதற்கு பதில் “தம்பதிகளுக்கு 100 ரூபாய் குடும்பத்துதுக்கு 500 ரூபாய்” என்றார் . என்ன பூஜை என்பதைச் சொன்னால் இவனுக்குப் புரியாது என அவர் நினைத்திருக்கலாம். அல்லது யாரும் கேட்காத கேள்வியைக் கேட்பவனுக்கு இந்தப் பதில் போதும் என நினைத்திருக்கலாம்.

சுனையிலிருந்து வெளி வரும் நீர் இங்கு முதலில், சேர்கிறது. அதில் நீங்கள் குளித்தால் தலக்காவேரி ஸ்நானம். ஆயிற்று. உடைமாற்றிக்கொள்ள பெரிய அறைகள். துணிகளை அலசிக்கொள்ள வசதிஎல்லாம். துண்டு கொண்டுவர மறந்தவர்களுக்கு நுழைவாயிலில் விற்கிறார்கள். விலை நியாமாகயிருக்கிறது
.
இந்த இடத்திலிருந்து படிகள் ஏறி மலைமீது சென்று அந்தக் குன்றின் உச்சியை அடைய வழி செய்திருக்கிறார்கள். அங்கிருந்து பார்த்தால் மிக அழகாக இருக்கிறது. மலைமுழுவதுக்குமே பச்சை பெட்ஷிட் போர்த்தியது போல எங்கும் பசுமை பனி மூடாத நாட்களில் அரபிக் கடலையே இங்கிருந்து பார்க்கலாம் என்றார்கள். அரபி கடலைவிட மூடுபனி பிடித்திருந்தால் அதைப்பார்க்காததில் வருத்தம் இல்லை.

தலக்காவிரிக்கு போகும் வழியிலிருப்பது பாகமண்டலா கோவில். இந்த இடத்தில் காவிரி கன்னிகே என்ற உபநதியான கன்னிகே என்ற நதியுடனும் கண்ணிற்கு தெரியாத சுஜ்யோதி என்ற தரைக்கடியில் ஒடும் நதியுடன் சங்கமிப்பதால் இதைத் திரிவேணி சங்கமம் எனச் சொல்லுகிறார்கள். இங்கு குளிப்பதும் இந்த பாஹேந்தேஸ்வர் கோவிலுக்குச் செல்வதும் மிகப்புண்ணியம் என்கிறார்கள்.

நதிக்கரையிலிருப்பதால் கோவில் தரைப்பகுதியிலிருந்து நல்ல உயரத்தில் அமைக்கபட்டிருக்கிறது. கோவில் கேரளப் பாணியிலிருக்கிறது. மூன்றடுக்கு முகப்பு உள்ளே பெரிய முற்றத்தில் செப்பு கூரையிட்ட தனிதனிக் கோவில்களில். மஹாவிஷ்ணுவுடன் முருகனும் கணபதியும் இருக்கிறார்கள்.  நம்மூர்களில் சன்னதியைப் பார்த்து நந்தி, கருடன் இருப்பது போல வினாயகர் சன்னதியைப் பார்த்து இருக்கிறார். அர்ச்சனை. ஆர்த்தியெல்லாம் நினைத்த நேரத்தில் கிடையாது. கோவில் பூஜை நேரம்வரை காத்திருக்க வேண்டும்.
1785லிருந்து 1790 வரை திப்புவின் ஆட்சிக்காலத்தில் இந்த கோவில் எரிக்கப் பட்டுவிட்டதாகவும் போரில் வென்ற குடகு மன்னன் வீர ராஜேந்திரன் வெற்றிக்குப் பின் செய்த முதல் காரியமாக இந்தக் கோவிலைச் சீரமைத்ததாக வரலாறு சொல்லுகிறது.
திரும்பும் வழியில் ஆசியாவின் முதல் மின் திட்டமான சிவசமுத்திர திட்டத்தின் ஒரு பகுதியையும், சிவசமுத்திர அருவியைத் தொலைவிலிருந்து பார்க்க ஒரு வியூ பாயிண்ட் இருக்கிறது, எங்கிருந்து பார்த்தலும் நான் அழகாகத்தான் இருக்கிறேன் என்கிறது அந்த அருவி
.
மைசூர் சமஸ்தானத்தில் பதவியிலிருந்த ஆங்கிலேயே அதிகாரிக்குப் படு வேகத்தில் மிக உயரத்திலிருந்து விழும் இந்த அருவியைப் பார்த்தவுடன் ஷாக் அடித்த்து போல எழுந்த எண்ணம் மின் உற்பத்தி. மன்னர் உடையாரிடம் திட்டத்தைசொல்ல அவர் அதையேற்று அத்தனை உதவிகளையும் செய்ய ஆணையிடுகிறார். யானை குதிரை எல்லாம் பயன் படுத்தப்பட்டு அந்த காட்டில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இழுத்து வந்து பொருத்தபட்டு மின் உற்பத்தி துவங்கிறது. அதைக் கோலார் தங்கச்சுரங்கம் வரை கொண்டு செல்ல இறக்குமதி செய்யப்பட்ட மரக்கம்பங்கள் சந்தித்த பிரச்னைகள் அரசரின் கோபம் பற்றிப் படித்த. பெயர் மறந்த புத்தகம் நினைவுக்கு வந்தது. மாலனிடம் கேட்க வேண்டும் 1902 இந்தியாவின் முதல் மட்டுமில்லை ஆசியாவின் முதல் நீர் மின் தொட்டம் இது.  700kw மின்சக்தி தரும் இது இன்னும் இயங்குகிறது 


அந்தப் பகுதில் சற்று நடந்து பின்னர் காரில் பயணத்தைத் தொடர்தோம் ஈரம் மிகுந்த காற்று நம்மைத் தீண்டுவதுபோல என தி ஜ ரா நடந்தாய் வாழி காவிரி யில் எழுதியிருக்கும் வாசகங்கள் நினைவில் தாக்குகிறது.
காவிரி ஓட்டத்தின் சத்தம், நீர்வீழ்ச்சியின் திவலைகள், கரைகளில் வளர்ந்திருக்கும் பூக்களின் வாசனை எல்லாவற்றையுமே அவரது எழுத்தின் வழியாக உணர வைத்த அந்தப் புத்தகத்தைச் சென்னை திரும்ப்பியதும் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டே கொண்டே திரும்பினோம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்