12/2/18

நல்ல புத்தகங்களும் நான்கு நண்பர்களும்.



“இப்போது சரியாக 6.மணி 30 நிமிடங்கள்” என்ற வார்த்தைகளூடன் வாசகர்களை வரவேற்கிறார் திரு ரவிதமிழ்வாணன். நிகழ்ச்சி நிரலில்

அட்டவணைபிட்டபடி வினாடி தவறாமல் நிகழ்ச்சிகளை நடத்தி சரியாக 8                   
மணிக்கு நன்றி அறிவிப்போடு முடிகிறது புத்தக நண்பர்கள் என்ற அமைப்பின் மாதந்திர கூட்டம். ஓவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தமிழ் புத்தகம் அறிமுகம் செய்யப்படுகிறது
.
கூட்டத்தின் துவக்கத்தில் ஒலிக்குப்போகும் இறைவணக்கப்பாடல் எத்தனை நிமிடம், எத்தனை வினாடிகள் என்பதைக்கூட அறிவிக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு எழுத்தாளார்/ அல்லது பத்திரிகையாளர்பற்றி நினைவேந்தலாக ஒரு சிறு குறிப்பைச்சொல்லுகிறார்கள். பின்னர் அன்றைய ஆய்வாளாரின் அறிமுகத்துக்குபின் அவர் பேச அழைக்கபடுகிறார்
.
(TAG)(டேக் மையத்தின் தலைவரான தொழிலதிபர் திரு ஆர். டி சாரி. விளம்பரத்துரை வல்லுனர் திரு ஆர். வி ராஜன், மூத்தபத்திரிகையாளார் ‘சாருகேசி” புத்தக பதிப்பாளார் திரு ரவி தமிழ்வாணன் ஆகிய நால்வர் இணைந்து உருவாக்கியது தான் இந்தப் புத்தக நண்பர்கள் அமைப்பு திரு ஆர். டி சாரியின் குடும்ப அறக்கட்டளை இதற்குத் துணை நிற்கிறது   
 இந்த அமைப்பு 2014 பிப்ரவரியிலிருந்து மாதந்தோறும் ஒரு கூட்டத்தை நடத்துகிறது. தேர்ந்த்தெடுக்கபட்ட ஒரு புத்தகம் அதில் திறனாய்வு செய்யபட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. புத்தக அறிமுகம் அலங்கார வார்த்தகளில் அறிமுகமாகவும் இல்லாமல் மிகக்கடுமையான விமர்சனங்களும் இல்லாமல் நேர்மையான திறனாய்வாகயிருக்கிறது. புத்தகத்தைபோலவே திறனாய்வாளரும் இந்த நண்பர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். . சில ஆய்வுகள் பல்கலைகழக ஆய்வுகளைப் போல மிகச்சிறப்பாகயிருக்கிறது. புத்தக ஆசிரியர்களூடையதைப்போலவே அவர்களது உழைப்பையும் உணரமுடிகிறது.

அறிமுகத்துக்குப் பின் புத்தக ஆசிரியர் பேச அழைக்கப்படுகிறார். நூலாசிரியரின் உரைக்குப் பின் கூட்டத்தில் பார்வையாளரின் கேள்விகளுக்குப் பதில் அவர் பதிலளிக்கிறார். இந்தக் கேள்விகள் பார்வையாளர்களிடமிருந்து எழுத்துவடிவில் பெறப்பட்டு அதை நெறியாளர் ரவி தமிழ்வாணன் மேடையில் அவர்கள் சார்பில்  கேட்கிறார். பார்வையாளார்கள் நேரடியாகக் கேட்க    அனுமதியில்லை.

இதுவரை 43 கூட்டங்களை நடத்தியிருக்கும் இந்த அமைப்பில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும் புத்தங்களின் பட்டியல் மிக நீண்டது. அசோகமித்திரனின் புத்தகத்துடன் துவங்கிய முதல் கூட்டம் இந்திரா பார்த்தசாரதி போன்ற உலகம் அறிந்த ஆசிரியர்களிலிருந்து, புதிதாக எழுதத்துவங்கியிருக்கும் எழுத்தாளார் வரை பலரின் படைப்பை அறிமுகம் செய்திருக்கிறது.

சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கும்  பல அமைப்புகளை நமக்குத்தெரியும். இந்தப் புத்தக நண்பர்கள் அமைப்பு ஆண்டின் 12 மாதங்களில் செய்யப்பட்ட திறானாய்வுகளில் சிறந்ததைத் தேர்நெடுத்து திறானாய்வு செய்தவருக்குப் பணப்பரிசு வழங்குகிறார்கள். 2016ம் ஆண்டுக்கான சிறந்த திறானாய்வுக்கு  ரூ 25000 பரிசு அளிக்கபட்டிருக்கிறது. இதைத்தவிர தமிழின் சிறந்த படைப்பாளிகளுக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள்.

ஆய்வுக்குப் புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்? வாசிப்பதை நேசிக்கும் நால்வரும் வாசித்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் பரிந்துரை செய்பவற்றையும்  வாசித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள் நூலாசிரியர், ஆய்வாளார்கள் தொடர்பு கொள்வதை திரு சாருகேசி கவனிக்கிறார்.

“குறைந்தது 100 பார்வையாளர்களையாவது ஒவ்வொரு மாதமும்  வரவேற்க வேண்டும் என்பது. எங்கள் இலக்கு. இந்த ஆண்டு எல்லா மாதங்களிலும் அந்த எண்ணிக்கையைக் கடந்து பார்வையாளார்கள் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்” என்கிறார் அமைப்பாளர் திரு ரவி தமிழ்வாணன். “அதைவிட தொடர்ந்து வரும் பார்வையாளார்கள் நல்ல நண்பர்களாகியிருப்பதும் கூட்டங்கள் ஒரு குடும்பநிகழ்ச்சி போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பதும்தான்  மிக மகிழ்ச்சித்தரக்கூடிய விஷயமாகயிருக்கிறது என்கிறார் இவர்.

 கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு ஓவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் இனிப்புடன் கூடிய இனிய சிற்றுண்டியும் வழங்கிறார்கள் ஆம்! வயிற்றுக்கு நல்லுணவுவிட்ட பின்னர்தான் இலக்கியத்திற்கு செவி சாய்க்க அழைக்கிறார்கள