23/9/18

அழியும் ஆபத்திலிருக்கும் ஆரண்முளா கண்ணாடிகள்


 
வரலாறு காணாத பெரும் இயற்கை சீற்றத்தின் விபரீத விளைவுகளினால் கேரளத்தில் மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளானது பல நதியோர கிராமங்கள்தான். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மெல்ல மீண்டுகொண்டிருக்கின்றனர்.
இப்படிப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று பம்பா நதிக்கரையிலிருக்கும் அழகான ஆரண்முளா கிராமம். பல கிரமங்களைப் போல வீடுகளையும் உடைமைகளையும் இழந்த இந்தக் கிராம மக்களின் துயரம் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டது. இவர்கள் தங்கள் மண்ணை இழந்தற்காகப் பெரிதும் கலங்கியிருக்கிறார்கள். மண் என்றால் அவர்களது நிலமில்லை. அவர்கள் சேமித்த பாதுகாத்து வந்த ஒரு வகை மண்.
அப்படி அந்த மண்ணில் என்ன விசேஷம்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கிராமத்தின் சரித்திரத்தையும் அங்கு உருவாகும் ஒரு கைவினைப் பொருளின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சபரிமலைக்குப் பயணம் செய்யும் பலரும் முதலில் அதற்கு 75 கீமி முன்னிருக்கும் ஆரண்முளா பார்த்த சாரதியைத்தான் தரிசிப்பார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கொண்டப்படும் இந்தக் கோவிலில்தான்.
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கிய 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின்போது இங்கிருந்து அது ஊர்வலமாக மலைக்கு எடுத்தச்செல்லப்படும்.
இந்தக் கோவிலின் அருகில் வசிக்கும் இருபத்திரண்டு குடும்பங்களின் கலைஞர்கள் பரம்பரையாகச் செய்து வரும் ஒரு கைவினைப்பொருள் ஆரண்முளா கண்ணாடிகள். கண்ணாடி என்றால் நாம் சதாரணமாகப் பயன்படுத்தும் கண்ணாடிப் பலகைகளில் ஒருபுறம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் இல்லை. இதில் கண்ணாடி என்ற பொருளே இல்லாமல் முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன கண்ணாடி. இந்தத் தயாரிப்பு முழுவதும் கைவினைக்கலைஞர்களால் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. கேரளத்தின் கதகளி போல இந்தக் கண்ணாடிகள் மிகப்பிரபலமான ஓர் பாரம்பரியச்சின்னம்.
தமிழகத்திற்கு வரும் தலைவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் நமது கோவில், நடராஜர் உருவங்களை அரசின் சார்பில் பரிசளிப்பதைப் போல, கேரளாவில் அவர்களின் பாரம்பரிய சின்னமான இந்த ஆரண்முளா கண்ணாடியைத்தான் வழங்குவார்கள். யூன்ஸ்கோ பாரம்பரிய கலையைப்போற்றும் கிராமம் என்ற கெளரவத்தையும், இந்தக் கண்ணாடிகளுக்கு உலகளவிலான புவிசார்பு குறியீட்டையும் வழங்கியிருக்கிறது.


காண்பதைப் பல ஆண்டுகளுக்குப் பளிச்சென்று காட்டும் இந்த ஆரண்முளா கண்ணாடி கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல கோவில்களிலும் ஆராதனைக்குப் பின்னர் தெய்வத்துக்குச்செய்யப்படும் உபசாரங்களில் முக்கிய இடம்பெற்றிருக்கும் ஒரு பொருள்.
இந்தக் கண்ணாடி உருவாக்கப் பயன்படும் உலோகத்தைத் தயாரிக்கும் முறை மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. வாரிசுகளுக்குமட்டும் சொல்லிக்கொடுக்கப்படும் இந்தப் பாரம்பரிய கலையைத்தொடர விரும்பாத வாரிசுகளுக்கு அந்தக் கிராமத்தில் இடம் இல்லை என்ற அளவில் ரகசியம் காக்கப்படுகிறது.


உலோகத்தைப் பளபளப்பாக்குவது என்பது கடினமான பணியில்லை என்றாலும் பல ஆண்டுகளானாலும் மங்காமல் தெளிவாகத் தெரியுமளவுக்கு எந்த எந்திர உதவியும் இல்லாமல் ஒரு உலோகத்தை உற்பத்தி செய்வதுதான் இந்தத் தொழிலின் சிறப்பு.
இந்தக் கண்ணாடிகள் சிறிய  வட்டவடிவில் வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப் படுகிறது. பின்னர் அது ஓர் அழகான யானையின் முகம், சங்கு. மலர். போன்று தயாரிக்கப்பட்டிருக்கும் பல விதமான வெங்கல பிரேம்களில் பதிக்கப்படுகிறது.’ முதலில் கண்ணாடிகளின் அளவுகளுக்கேறப்ப வட்ட வடிவ அச்சு (மோல்ட்) உருவாக்கப்படுகிறது. இது ஒரு குடுவை போன்ற மற்றொரு அச்சினுள் பொருத்தப்படுகிறது. அந்தக் குடுவை அச்சின் மேல் பாகதத்தில் காரீயக் குண்டுகளும் வேறுசில பொருட்களும் இடப்படுகிறது. இந்த வேறு சிலபொருட்கள் என்ன என்பது தான் ரகசியம். இந்த மோல்டு மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகும் மண் அடுப்புக்களினுள் இடப்பட்டு இரண்டு நாள் முழுவதும் நெருப்பில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் அந்தக் காரீயமும் பொருட்களும் உருகி உள்ளிருக்கும் வட்டமான கண்ணாடிக்கான வடிவ அச்சில் பரவி ஒர் உலோகத்தகடாகிறது. பின்னர் அச்சு உடைக்கப்பட்டு அந்தத் தகடு வெளியே எடுக்கப்படுகிறது. அந்த உலோகத்தகடு ஒரு சதுர மரக்கட்டையில் ஓட்டப்பட்டு ஒரு வழவழப்பானதேக்குப் பலகையில் தொடர்ந்து கைகளால் ஆறு மணி நேரம் தேய்த்து, தேய்த்து பளபளப்பாக்கப் படுகிறது. இறுதியாகத் தலைமை சிற்பி தன் புருவம் தெளிவாகத்தெரிகிறதா என்று பார்த்தபின் அதைக் கண்ணாடியாக அனுமதிப்பார். இந்தக் கண்ணாடிகள் சதுர மரக்கட்டையிலிருந்து கவனமாகப் பிரிக்கப்பட்டுப் பிரேம்களில் ஓட்டப்படுகிறது. இதற்கான பசைகளையும் இவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.  கோவில்களுக்கு சன்னதியின் முன்னே நிறுத்த பெரிய அளவுகண்ணாடிகளையும் தயாரிக்கிறார்கள். அப்படி 5 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட ஒரு கண்ணாடி லண்டன் மீயூசியத்திலிருக்கிறது.


 


ஒவ்வொரு முறையும் தயாரிப்பைத் துவக்கும் முன்னரும் கண்ணாடிகளாக உருவான பின்னரும் பார்த்தசாரதி கோவிலில் பூஜைகள் செய்த பின்னரே விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்தக் கண்ணாடிகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதற்காக வைத்திருந்தைவகளும் இப்போது அழிந்துவிட்டன. இழப்பு 1.5 கோடி. ஆரண்முளா பாம்புப் படகு போட்டிகளைப்பார்க்க வரும் வெளிநாட்டுப் பயணிகளில் வழக்கமாக இங்கு தேடி வந்து வாங்க வருபவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது.ஒவ்வொரு கண்ணாடியின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் கைவினைக்கலைஞர்களின் கடினமான, கவனமான உழைப்பு நிறைந்திருக்கும் இந்த ஆரண்முளா கண்ணாடி தயாரிக்கும் கிராமத்தினர் இந்த வெள்ளத்தில் ஒரே நாளில் அவர்களது இரண்டு மாத உழைப்பான 6000 கண்ணாடிகளை இழந்துவிட்டார்கள். “ வீட்டில் புகுந்த வெள்ளம் கண்ணாடிகளை அள்ளிக்கொண்டு போனது, மீட்க நீந்திப்போராடினேன் முடியவில்லை என்கிறார். தலைமை விஸ்வகர்மாவின் பேரன்.
இந்த ஆரண்முளா கலைஞர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக வழங்கி வரும் ஒரு செவி வழிச் செய்தியை அறிந்தபோது ஆச்சரியமாகியிருந்தது. இங்கிருக்கும் பார்த்தசாரதி கோவிலை நிர்மாணிக்கும் பணிக்கு வந்த பல தொழிளாளார்களில் தமிழ்நாட்டின் சங்கரன் கோவிலைச் சேர்ந்த சிலரும் வந்திருக்கிறார்கள். மன்னர் கோவில் பணிகளைப்பர்வையிட வந்தபோது வேலை செய்யாமல் இருந்த அவர்கள்மீது கடும் கோபம் கொண்டு பணியிலிருந்து அவர்களை நீக்கிவிட்டார். மன்னரைச் சமாதானப்படுத்தி மீண்டும் வேலையைப்பெற அவர்கள் அதுவரை யாரும் செய்யாத ஒரு பொருளை உருவாக்கிக் காட்ட தீர்மானித்தனர். அதன் விளைவாக ஒரு பளபளப்பான உலோகதகட்டை உருவாக்கி அதில் மன்னருக்கு ஒருகீரிடம் தயாரித்துக்கொடுத்தனர். அதைக்கண்டு வியந்த மன்னர் அதில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் தயாரித்துக் கோவிலுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன் விளைவாக எழுந்தது இந்தத் ஆரண்முளா கண்ணாடித் தொழில். அந்தத் தமிழர்களின் பரம்பரையினர் தான் இந்த விஸ்வகர்மாக்கள்.தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள் வெள்ளத்தில் போனதைவிட இவர்கள் அதிகம் வருந்தி அழுவது தாங்கள் சேமித்த மண் கரைந்திவிட்டதற்காகத் தான். அடுப்புகளையும், அச்சுக்களையும் உருவாக்க இவர்கள் பயன் படுத்தும் மண்கலவை விசேஷமானது. நதிக்கரையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்படும் அந்த மண் பல முறை சலிக்கப்பட்டு அதனுடன் சில பொருட்கள் சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படும். அந்தச் சேமிப்பு பல ஆண்டுகள் உழைப்பில்  உருவானது. அதிலிருந்து தேவையானபோது மட்டும் மண் எடுத்து அச்சுச் செய்துகொள்வார்கள். அந்த மண் குவியல் தான் இப்போது ஆற்று வெள்ளத்தில் அழிந்துவிட்டது. மழையில்லாத நாட்களில் தேர்ந்தெடுத்துச் சேமிக்கப்பட்ட அந்த விசேஷ கலவை மண்ணை மீண்டும் உருவாக்க ஒராண்டாகும் என்கிறார்கள். அதோடு காரீயகுண்டுகளுடன் கலக்கத் தயாரித்து வைத்திருந்த விசேஷ கலவைப் பொருளும் அழிந்துவிட்டது.


காலத்தால் அழியாத கண்ணாடிகளைப் படைக்கும் இந்தக் கிராம மக்களின் தொழில் அழிந்திருக்கிறது, ஆனால் அவர்கள் “எங்கள் பரம்பரைக்கு வாழ்வளித்த எங்கள் தெய்வம் பார்த்தசாரதிப் பெருமாள் இதிலிருந்தும் மீண்டுவர உதவுவார்” என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்