18/10/18

இந்தோனிஷியாவை துரத்திய துயரம்


பால்வெண்மைநுரைகளை கரையிட்டஅலைகளை நீட்டும் கருநீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும்  நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனிஷியாவின்  அழகான இயற்கை அண்மையில்  தன் கோரமுகத்தை காட்டி உலகையே நடுங்க வைத்திருக்கிறது.
ஒரே நேரத்தில் சுனாமி, பூகம்பம் ஒரு இடத்தைத் தாக்கினால் என்னவாகும்? என்பதை உலகம்  முதல் முதலாகப் பார்த்து  அதிர்ந்த  காட்சி அது. இயற்கையின் கோரதாண்டவத்தால்  இந்தோனிஷியாவின் நகரங்களான பலு, டோங்காலா, மமுஜூ ஆகிய 3 நகரங்களை சுனாமி விழுங்கி உள்ளது. டோங்காலாவில் இந்த கட்டுரையை எழுதும் வரை  மீட்புக்குழுவினரால் நுழைய முடியாத அளவுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் கதி என்னவென்று தெரியவில்லை
இந்தோனிஷியாவிற்கு  சுனாமி புதிதல்ல, அனேகமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து விசாரித்துவிட்டுபோகும். பூகம்பமும் புதிதல்ல ஏதாவது ஓரிடத்தில் அவ்வப்போதுவெடிப்பது வாடிக்கை.  ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் இந்தத் தீவுகளை தாக்கியிருப்பது, அதுவும் மிகப்பெரிய அளவில் தாக்கியிருப்பது இப்போதுதான் .  
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் அண்மையில் ஒரு மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளியாகப் பதிவானது. இந்தப் பூகம்பத்தால் பலு, டோங்காலா  நகரங்கள் அதிர்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் பலு கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து சுனாமி பேரலைத் தாக்கியது.
சுனாமியால் கடற்கரையை ஒட்டிய வீடுகள், கட்டிடங்களில் கடல் நீர் புகுந்தது. அங்குள்ள பிரமாண்ட மசூதி சுனாமி அலையில் இடிந்து தரைமட்டமானது. பூகம்பம், சுனாமியால் தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டதால், உடனடியாக தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், . பலு நகரில் 3.5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோரைக் காணவில்லை. சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பலரின் சடலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்குவதால், அந்நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும்  சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகளை பிபிசிடிவியில் பார்த்தவர்கள்  நிச்சியம் பதறியிருப்பார்கள்.
 சுனாமி வந்தவுடன்  உயரமான கட்டிடங்களின்  உச்சிக்குச் சென்றுவிட வேண்டும் என்ற தற்காப்பு முறையறிந்த மக்கள் இவர்கள்.  ஆனால்  மிக உயரமான ராட்சஅலைகள்  பெரிய உயரமான   மால்கள், பெரிய கட்டிடங்கள்  எல்லாவற்றையுமே உருட்டிபோட்டது... பல இடங்களில் சாலைகள் தகர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர் பலுநகர விமான நிலையத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளதால். மீட்புப் பணிகளுக்காக சென்ற விமானம் தரையிறங்கமுடியாமல் தவிக்கிறது. 
டோங்காலா நகரில்  சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள்  அனைவருமே பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நகரில் ஒரு மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த சுனாமி,அவர்களோடு அந்த மசூதியையும் அழைத்துசென்றுவிட்டது
இந்த நகரில் கடற்கரை அழகானது. அங்கு கடலுக்கு நன்றி சொல்லும்  கடற்கரை திருவிழா  ஆண்டுதோறும் நடக்கும். இப்போது இதை டூரிஸ்ட்களை கவர  ஆர்ப்பாட்டமாக நடத்துகிறார்கள்.  வெளிநாட்டுப்பயணிகள் பலர் பங்குகொண்டிருந்த விழாவிற்கு அழையா விருந்தாளியாக  சுனாமியும் வந்து சேர்ந்து அனைவரையும் விழுங்கி சோகத்தில் விழாவை முடித்துவைத்திருக்கிறது. நிவராணபணிகளுக்கு அமெரிக்க பெரும்ளவில் நிதிமற்றும் இதர உதவிகள் செய்திருக்கின்றன. பல நாடுகள் நிவாரணப்பணி படைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. அன்னிய உதவிகளை ஏற்பதில்லை என்ற தன் கொள்கைகளை இந்தோனிஷிய அரசு தளர்த்திக்கொண்டிருக்கின்றது

இந்த இந்தோனிஷியாவில்  மட்டும் ஏன் இந்த கோர தாண்டவம்?
“பசிபிக்கின் ‘நெருப்பு வளையம்’ என கூறப்படும் இந்தோனேஷியாவில் தான் உலகிலேயே அதிகளவில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நடக்குமிடம். காரணம் இந்த நாடு ஒரு வினோதமான நில அமைப்பைக் கொண்டது.  கடல் சூழ்ந்த தீவுகளின் மேலே  எப்போது வேண்டுமானாலும் நெருப்பைக் கொட்டும் எரிமலைகள் சூழ்ந்த தேசம்.
ஒரு தேசத்தின் பகுதியாக சில தீவுகள் இருக்கும்.  ஆனால் பல தீவுக் கூட்டங்களே ஒரு தேசமாகியிருந்தால்? அது தான் இந்தோனிஷியா. (இந்த இடத்தில் எத்தனைத் தீவுகள் தெரியுமா 13000க்கும் மேற்பட்ட பல சைஸ்களில்  தீவுகள். மலைகளும் காடுகளும் நிறைந்த இந்த தீவுகூட்டத்தில் 6000 தீவுகளில்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். பல மொழிகள் இனங்கள் கலாச்சாரங்கள்  கொண்ட இந்தத் தீவுகளை இணைத்து உருவானது தான் இந்தத் தேசம் இதில் முக்கியதீவுகள் ஜாவா,சுமத்ரா,போர்னியோ சுலவாசி.
இந்த சுலவாழி தீவின் நகரங்களில் தான் இந்தப் பேரழிவின் உச்சகட்டம்..  இந்தத் தீவுகளில் பல இடங்களில் இருப்பது எரிமலைகள். இருக்கும் 400 எரிமலைகளில் 130 மலைகள “இயங்கும் நிலையிலிருப்பவை”. அதாவது  அது விரும்பும்போது  வெடித்து நெருப்பைக் கொட்டும். அப்படி வெடிக்கும் சில வினாடிகள் முன் பூகம்பம் வரும். இதே கடலிலுள்ள மலைகளில் நிகழ்ந்தால்  விளைவது சுனாமி. 
.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்கிறார்கள்  புவியியல் நிபுணர்கள்  இந்தத்  தத்துவப்படி  ஆஸ்திரேலியா பகுதியிலிருந்து நகர்ந்த பெருமலைகள் நின்ற இடம் இன்றைய இந்தோனிஷியாவென்றும் அந்த  மலைகள் இந்தப் பகுதி கடலுக்கு அடியிலிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மலைகளில் எழும் அதிர்வினால், நில நடுக்கத்தால் அதன் மேற்பரப்பான கடலில் அலை பொங்கி  மிகப்பிரம்மாண்டாமாக எழுந்து தரையை தாக்குகிறது.  அது தான் சுனாமி. 
இந்த பூவியல் அமைப்பினால் தான்  இந்தோனிஷியப்பகுதிகளில் மிக அதிக அளவில் பூகம்பமும் சுனாமிகளும் நிகழ்கின்றன.
முன்னதாக அறிய முடியாதா?
ஆழங்காணமுடியாத பிரபஞ்ச ரகசியங்களை அறிய, செவ்வாய் கிரகத்திற்கே பயணம் செய்ய கலத்தை உருவாக்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்தவிட்ட இன்றைய சூழலில் இந்தப் பேரழிவின் வருகையை கண்காணிக்க முடியாதா?  முடியும்  முயற்சிக்கொண்டிக்கிறார்கள். ஆனால் இயற்கையின் வலிமைக்கு முன் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்குக் காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1 அன்று ஹவாய் தீவைத் தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949 ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஒன்றை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாகவே அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 
இது எப்படி வேலை செய்கிறது?
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள நுட்பமான கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
ஆனால் இம்முறையில் தகவல் தரையை எட்டும்முன் சுனாமி அதைத் தொட்டுவிட்டது.  ஆழிபேரலையின் வேகம் சாட்டிலைட் அனுப்பும் சிகனல்களை வேகம் கொண்டது என்பதை நிரூபித்திருக்கிறது.  
அனுபங்கள் தான்  சிறந்த ஆசான். 
இந்த சோக அனுவபத்திலிருந்து ஆராய்ந்து அடுத்த சுனாமியும் நிலநடுக்கமும் எழும் முன்னரே  அந்தப்பகுதி எச்சரிக்கை பெறும் வழி வகைகளை நாசா போன்ற அமைப்புகள் செய்யும் என்று நம்புவோம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்