26/10/18

எங்க ஊர்ல திருவிழா.. வாங்க

 கலாச்சாரவிழாக்கள், கவியரங்கம், ஆன்மீக சொற்பொழிவுகள் இசை, நடன நிகழ்ச்சிகள் இலக்கியக் கூட்டங்கள் என நெல்லை நகரமே  விழாக்கோலத்துடன்  குலுங்கிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்களும், கலைஞைர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.  தினசரி வெளியூர்களிலிருந்து வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருப்பது அல்வாகடைகள் விற்பனையில்  தெரிகிறது.பொதிகை மலையில் புறப்பட்டுப் பாய்ந்தோடிவரும் தாமிரபரணி தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரு வற்றாத ஜீவ நதி. இதில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் “தாமிரபரணி மகா புஷ்கர விழா” அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்மையில் மலைத்தொடர்களில் தொடர்ந்து பெய்த மழையால் பாய்ந்துகொண்டிருக்கிறக்கும் புதுப்புனலைப் பார்க்கும்போது தாமிரபரணியே மகிழ்ச்சியில் பொங்குவது போலிருக்கிறது.தமிழகத்திலிருந்து மட்டுமில்லை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவில் பக்கதர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் பொதிகையின் அடிவாரமான பாபநாசத்தில் தாமிரபரணியின் பிரவாகம் தொடங்குகிறது. பாபநாசத்தில் தொடங்கி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர் எனப் பயணம் செய்யும், தாமிரபரணி நதியின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீரமைக்கப்பட்டு, பக்தர்களின் தீர்த்தமாடுதலுக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி பாய்ந்துசெல்லும் 127 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பக்தர்கள் தீர்த்தமாடலாம். தாமிரபரணி என்பது பல சிறிய நதிகளின் சங்கமம். மாஞ்சோலையில் மணிமுத்தாறு, கடனாநதி, ஜம்புநதி, ராமா நதி பச்சையாறு குற்றாலம் சிற்றாறு எனப் பலநிறு நதிகளை இணைத்துக்கொண்டு மாவட்டம் முழுவதும் பயணிக்கிறது இந்த நதி.
புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள். புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம். அதாவது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல. அதைவிடப் புனிதமான ஆன்மிக தீர்த்தமாடும் தலம்.. நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நதி என்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 புண்ணிய நதிக்கரைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்தப் புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.அதாவது, ஒவ்வொரு நதிக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் நடைபெறும். அதுவே, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறதுபுஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு சுவையான புராணமிருக்கிறது. .புஷ்கரம் என்பது பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம். உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான். அதற்காகப் பிரம்மதேவரை வேண்டித் தவம் இருந்தார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு முன்பு தோன்றி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். குருபகவானும் 'பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும்' என்றார்.புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்குச் சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது.ஒவ்வொரு ஆண்டும் குரு எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதிகளில் இவர் வசிப்பாராம். அப்படி வசிக்கும்போது அந்த நதிகளில் நீராடுவது புண்ணியமாகக் கருதப்படுகிறது. அதன் படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கா புஷ்கரம், ரிஷபத்திற்கு நர்மதா, மிதுனத்திற்கு சரஸ்வதி, கடகத்திற்கு யமுனா, சிம்மத்திற்கு கோதாவரி, கன்னிக்கு கிருஷ்ணா, துலாம் ராசிக்கு காவேரி, விருச்சிகத்திற்கு பீமா மற்றும் தாமிரபரணி, தனுசு ராசிக்கு தப்தி மற்றும் பிரம்மபுத்ரா, மகரத்திற்கு துங்கபத்ரா, கும்பத்திற்கு சிந்து நதி, மீன ராசிக்கு பிரன்ஹிதா என வரையறுக்கப்பட்டுள்ளது.தாமிரபரணியில் இதற்கு முன் புஷ்கர கொண்டாடியதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. இது இந்துவதாக் காரர்கள் கண்டுபிடித்துக் கொண்டாட வேண்டும் என்று சொல்லி மத உணர்வுகளை எழுப்புகிறார்கள் என்ற குரலும் எழுந்திருக்கிறது.முந்தைய நிகழ்வுகளுக்கு ஆதாரமாகப் பதிவுகள் இல்லாமலிருக்கலாம் ஆனால் இது பின்பற்றவேண்டிய ஒரு மரபு. கடந்த ஆண்டு துலாம் ராசியில் குரு இருந்தபோது, தமிழகத்தில் காவேரி புஷ்கரம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டபோதே இதுபற்றி விவாதிக்கப் பட்டுக் காஞ்சி, ஶ்ரீருங்கேரி மடாதிபதிகள், ஆன்மீக வாதிகளுடன் கூட்டங்கள் நடத்தித் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.இந்த ஆண்டு குரு விருச்சிகத்திற்கு வருவதால், தமிழ்நாட்டில் தாமிரபரணியிலும் மஹாராஷ்டிராவில் பீமா நதிக்கரையிலும் புஷ்கரம் நடத்த அந்தக் கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டது. . அதுமட்டுமில்லை. .2026 வரை நாட்டில் எந்தெந்த நதிகளில் இப்படி புஷ்கரம் கொண்டாடப்பட வேண்டும் என்ற பட்டியலையும் தயார் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் ஆன்மீகக் காவலர்கள்
தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி அன்னை தாமிரபரணிக்கு தாமிரத்தால் ஆன இரண்டரை அடி உயரச் சிலை மற்றும் 1 அடி உயரத் தாமிர அகத்தியர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.மாநில அரசு இந்தப் புஷ்கரத்திற்கான ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை எனப் பாஜக தலைவர் பேசியவுடன், இருக்கும் தலைவலிகளுடன் இதுவும் சேர வேண்டாமென்று எண்ணிய மாநில அரசு அவசர கதியில் பல படித்துறைகளை சீமைத்து பாதுகாப்பு, மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்பிக்கைகள் ஆயிரம் இருந்தாலும், புஷ்கரம் நடத்துவதன் மூலம், தாமிரபரணி போற்றப்படுவதும், சுத்தமாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது ஒரு மகிழ்ச்சியான விஷயம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்