27/1/19

அதிரடி 10% இட ஒதுக்கீடு அவசியமா? அரசியலா? – ஓர் அலசல்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்குக் கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜாதி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியைக் காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்சாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையநீண்ட நாட்களாக முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு  அவர்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்காக, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு. நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத்தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்து, அதில் அமைச்சரவை முடிவுக்கு, ஏற்றாற்போல  நமது அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இதன்மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 60% ஆக அதிகரிக்கப்படும். ஏற்கனவே நம் நாட்டில்  சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கும்  முறையும் அமுலுக்கு வருகிறது. 
மிக முக்கியமான இந்தச் சட்ட திருத்தத்தை அதிரடியாக கொண்டுவந்தது பாஜக அரசு. முதல் நாள் அமைச்சரவைக்கூட்டத்தில் எடுத்த முடிவு. அவசர, அவசரமாக  மறு நாள் மாலை சட்ட வடிவம் பெறுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் இதற்காக இரண்டுநாள் சிலமணி நேர நோட்டிஸில் நீடிக்கப்பட்டது. 
.மக்களவையில் இந்த மசோதாவிற்கு எதிராக 3 வாக்குகளும்,மாநிலங்களவையில் 7 வாக்குகளுமே பதிவாகின. காங்கிரஸ் இத்தகைய ஒதுக்கீட்டைத் தனது தேர்தல் அறிக்கையிலேயே முன் வைத்திருந்தது. கம்யூனிஸ்ட்களும் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு இல்லை என்பதால் ஆதரித்தார்கள்.. ஆம் ஆத்மி  திருணாமூல், இடதுசாரிகள்,  ஆதரித்து வாக்களித்திருக்கின்றன, அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் மட்டுமே மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன..இதில் அதிமுக எதிர் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதாவது பெருவாரியான கட்சிகள் ஆதரித்திருக்கின்றன‌.  இந்த பல கட்சிகளின்  ஆதரவு நிலையை எதிர்பார்த்து பாஜக  திட்டமிட்டிருப்பது அவர்களின் சாணக்கியம். 

  10 சதவீதம் இடஒதுக்கீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படாது, சபைகள் விடாது, எதிர்க்கட்சிகள் இம்மாதிரி விஷயங்களை ஆதரிக்காது என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்., ஆனால் ஆதரித்து  வாக்களித்த  எதிர்க் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறவே பாஜக அரசு அவசரமாக இந்த நேரத்தில் மசோதாவைத் தாக்கல் செய்கிறது எனக் குற்றம்சாட்டின. ‘இது நள்ளிரவு வழிப்பறி’ என ராஷ்டிரிய ஜனதா தளம் சொல்லுகிறது. , ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்தான். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த உடனேயே இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதுதான் கேள்விக்குறி. இந்த விஷயத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும் விதத்தைத்தான் கேள்வி கேட்கிறோம். என்கிறது காங்கிரஸ்.
‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறது. முந்தைய அரசுகளால் நாடாளுமன்றத்தில் சரியான முறையில் இந்த விவகாரம் கையாளப்படாததால் தோல்வியில் முடிந்தது. இந்த மசோதா மூலம் 95 சதவீத மக்கள் பயனடைவார்கள்’’ என்கிறது பாஜக.


.எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல், எந்தப்புள்ளிவிவர தரவுகளும் இல்லாமல் இப்படி  மசோதாவை  அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது  நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாடாளுமன்றவிவாதத்தில் குரல் எழுப்பினாலும் அவர்கள் ஆதரவு வாக்களித்தார்கள். காரணம்,அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டைச் செய்வோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது தான்.  ஆதரவு ஓட்டளிக்காவிட்டால் பஜகா அதை  எதிர் வரும் தேர்தலில் தங்களுக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் என்ற நிலை. தான் காரணம்.  இதை எதிர்பார்த்து பாஜக சாதுரியமாக காய்களை  இறுதி நேரத்தில் நகர்த்தி ஆட்டத்தில்  வென்றிருக்கிறது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டால்  உடனே இது சட்டமாகும். 
இரவு வரை நீடித்த பாராளுமன்ற கூட்டத்துக்குப் பின் பிரதமர்  இது இந்திய  சமூக நீதி வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் என்று ட்விட் செய்திருக்கிறார்.  
இந்த நள்ளிரவு காட்சிகள் சில கேள்விகளை எழுப்புகின்றன

ஏன் இந்த அவசரம்?

விவசாயிகள் போராட்டம்', `பெட்ரோல், டீசல் விலையேற்றம்', `ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு' என மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசைக் குறிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் நடந்த மாநில தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த  பாஜக.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவர்ந்தே ஆக வேண்டும் என்பதில் . மிகவும் தீவிரமாக இருக்கிறது.  அவர்களின் கட்சி ஆய்வின் படி மாநிலங்களில் அவர்களுடைய வாக்கு வங்கி சரிந்ததற்கு காரணம்  பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்பலர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்கு  10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை உடனடியாக கொண்டுவந்து சட்டமாக்கிவிட்டது. இதைத்தான் பாஜக அரசு எடுத்திருப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்று ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்த சட்டத்திருத்தத்தினால் இப்போது நடைமுறையிலிருக்கும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா? 
பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படவில்லை. இந்தத் திருத்தம் இப்போதிருந்ததுவரும் வரும் இட ஒதுக்கீடு முறைக்கு.   மாற்று இல்ல.. அது தொடரும். மேலும்  சட்ட வரைவில்." in addition to existing reservations and subject to a maximum of 10 percent of the total seats in each category" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஜகவை ஆதரிக்கும் பெரும்பாலான பார்ப்பனருக்கு   உதவ இந்தத் திருத்தம் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே
ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத நிலையில்  இதை தமிழககட்சிகள் . அரசியலாக்க முயற்சிக்கின்றன. பொதுப் பிரிவில் 40க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. அவற்றில் சில: பார்ப்பனர்கள், தாக்கூர்கள் (என்ற ராஜபுத்திரர்கள்) ஜாட்கள், மராத்தாக்கள், பூமிகார்கள், பனியாக்கள், கம்மாக்கள், கப்பூக்கள் எனப்பல சாதிகள் இருக்கின்றன. அனைவருக்கும் பலன் கிடைக்கும் தமிழகத்தில் . பார்ப்பனர்களின் எண்ணிக்கை  மூன்று சதவீதத்திற்கும் குறைவு

இது அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நீண்ட நாட்களாக அரசியல் கட்சிகள் அறிவித்துச் செய்ய முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம் என பாஜக இதைச் சாதனையாகப் பேசும். வட மாநிலங்களில் இந்த சட்டத்திருத்தம் பிரசாரம்  அவர்களுக்குப்  பலனளிக்கலாம்.  ஆனால்  தமிழகத்தில்  இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் சமூக நீதி  உரிமைகளுக்கு முரணானது என்ற நிலையைத்  திராவிட கட்சிகள்  எடுத்திருக்கிறது.  அதனால் .  அதிமுக வுடன் கூட்டணியை விரும்பும்  தமிழக பாஜக  இதனால்  பெரும் நெருக்கடியைச் சந்திக்கும்.
சட்ட சிக்கல்கள் வருமா? 

இந்தச் சட்டத்திருத்தம் , அரசியலமைப்புச் சட்டம் 15 (4) (இடஒதுக்கீடு தொடர்பானது) பிரிவில் சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்கள் என்பதோடு, பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் என்கிற பிரிவும் சேர்க்கப்படுகிறது.  மிக முக்கியமான இந்த சட்டத்திருத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில்  அதை  எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
 கட்சி வழக்கறிஞர்கள் இதை எப்படிப்பார்க்கிறார்கள்?
``இது, வட இந்திய உயர் சாதியினரின் வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகம். நான்கரை ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தபோது ஏற்படாத இதுபோன்ற இட ஒதுக்கீடு தேவை இப்போது ஏன் வந்தது? இது முற்றிலும் தவறானது; சமூக நீதிக்கு எதிரானது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பதே தவறு. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது நிலைக்காது. 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நிர்ணயித்தது நீதிமன்றம்தான். இப்போது 10 சத விகிதம் சேர்த்து ஏன் 60 சதவிகிதமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. முதல் நாளில் அமைச்சரவையில் நிறைவேற்றி, மறுநாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பெரிய விவாதம் எதுவுமின்றியே நிறைவேற்றுவதற்கான அவசியம் என்ன? ஐந்து மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி. அடைந்த தோல்விதான் இத்தகைய மசோதாவைக் கொண்டுவரக் காரணம்.. பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என அளவுகோல் வைத்தால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவர நேரிடும். இது ஆபத்தாகிவிடும்  1951-ம் ஆண்டு இட ஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தந்தை பெரியார் தலைமையில் 3 லட்சம் பேர் அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராடித்தான், முதலாவது சட்டத் திருத்தத்தைப் பெற முடிந்தது. ஆனால், இன்று முற்பட்ட வகுப்பினர் கேட்காமலேயே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தப் பிரச்னையில் மௌனம் காத்து வருவது தவறான முன்னுதாரணமாகி விடும். சமூக நீதி பேசுவதாகச் சொல்லிக்கொள்கிற பி.ஜே.பி., குறுகிய கால வாக்கு அரசியலுக்காகக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பவாத முடிவுதான் இது" உச்ச நீதி மன்றம்  இதை ஏற்காது தடை செய்யும் வய்ப்பு அதிகம் . என்கிறார்  பட்டாளி மக்கள் வழக்கறிஞர் திரு பாலு

பாஜக. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.டி. ராகவன், 
``அனைவருக்குமான வளர்ச்சி என்கிற முழக்கத்தோடுதான் பி.ஜே.பி. அரசு, அனைத்துத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இத்தகைய இட ஒதுக்கீடு பற்றி ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் இதற்கான முயற்சிகளை எடுத்தார். மேலும், 1992-ம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை செய்யக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (4) பிரிவில் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தற்போது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி பொருளாதாரம் என்பதையும் சேர்த்துள்ளோம்.
எனவே, `பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று கூறி, நீதிமன்றம் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாமல் நரசிம்மராவ் ஆட்சியில் வெறும் அரசு உத்தரவாக அது கொண்டு வரப்பட்டது. தற்போது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால் சட்டப்பூர்வமாக அதற்கு மதிப்பு அதிகம். அரசியலமைப்புச் சட்டம் தற்போது 124-வது முறையாகத் திருத்தப்படுகிறது. அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் நீதிமன்றம் ரத்து செய்துவிடவில்லையே. எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தையும் நீதிமன்றம் தடை செய்யாது என நம்புகிறோம்.

விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’

உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு  இந்த வழக்கை அனுமதித்து விவாதங்களைக்கேட்டுத் சமூக நீதியுடன் சம நீதியும் வழங்குவது  சரியா என்ற  தீர்ப்பை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் வழங்கும் என்பது நிச்சியமில்லை.   ஆனால்  அரசியில்  கட்சிகள்  தேர்தலில் இந்தத் தீர்ப்பை அரசியலாக்கும் என்பது மட்டும்  நிச்சியம்.
ரமணன்

    


விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி  எழுப்பிய கேள்வி 
 , ‘‘நாடாளுமன்றத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது. ஒரே இரவில் 10% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அதை நிறைவேற்றி மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும்.. 10% இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்’’


























கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்