27/1/19

எல்லாருக்கும் பெய்யும் மழை



சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  எழுதுவதின்  மூலம் பெரிய அளவில் என்ன  சமூக சேவை செய்துவிடமுடியும்? சமூகத்துக்கு  ஏதாவது ஒரு நல்ல பணியைச் செய்ய வேண்டுமென்றால்  அடைப்படையான தேவை பணம். அது  தொடந்து எழுதிக்கொண்டிருப்பதால் மட்டுமே எப்படிக்  கிடைக்கும்?  என்று எண்ணும் நம்மைப்போலப் பலரை திகைக்க வைக்கிறார் கொங்கு மண்டல இளைஞர் வா.மணிகண்டன். தன் வலைப்பூவில் எழுதுவது  மூலமே பெரிய அளவு நிதி திரட்டி உதவிக்கொண்டிருக்கிறார்.

கரட்டடிபாளையம்(ஈரோடுவட்டம்) என்ற கிராமத்துக்காரரான இவர் கணனியிலில் முதுகலைப்பட்டதாரி. தொடர் பணிமாற்றங்களுக்கும், முயற்சிகளுக்கும், பயிற்சிகளுக்கும்  பின்னர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்  நல்ல பணியிலமர்ந்தவர்.  கவிஞரான இவரது வலைப்பூ “நிசப்தம்?.  பேர்தான் நிசப்தமே தவிர மனிதர்  மனித உணர்வுகள் வாழ்வின் யாதர்த்தங்கள், சமூக அவலங்கள் அரசியல் போன்ற பல விஷயங்களில் தன் கருத்தை உறக்கச் சொல்பவர்.  அதனாலேயே இவரது நிசப்தத்தின் வாசகர் வட்டம் குறுகிய காலத்தில்  மிகப் பெரிதாக வளர்ந்தது.


ஒரு முறை இவரது வாசகர் ஒருவர் கேட்டக்கொண்டதற்கு ஏற்ப. கல்விச்செலவுக்கு வந்த வேண்டுகோளை தன் வலைப் பூவில் வெளியிட அதற்கு வந்த ஆதரவைக்கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார் மணிகண்டன். தன்வாசகர்களில் இத்தனை பேர் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையும்,உதவிகள் செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பதை கண்டு ஊக்கமடைந்து தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத்துவங்கினார். உள்நாடு வெளிநாடு என்று பல இடங்களிலிருந்து முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத்துவங்கியது.  ஆரம்பகாலங்களில் தனது பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவி வந்த இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் நிசப்தம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் அறப்பணிகளை நிர்வகித்து வருகிறார். 



கடந்த இரண்டாண்டில் மட்டும் இந்த அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள்  ஒரு கோடிக்கும் மேலிருக்கும். நல்ல இலாபத்தில் இயங்கும் ஒரு கார்பேர்ட்,  தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு தன்னார்வல நிறுவனம்  இதைப்போல செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஒரு தனி மனிதன்,அதுவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர் செய்திருப்பதை அறியும்போது  பிரமிப்பாகயிருக்கிறது 
அறக்கட்டளையின் வரவு செலவுகளை மாதந்தோறும் வங்கியின் அறிக்கையோடு தன் நிசப்தம் வலைப்பூவில் வெளியிடுகிறார். வங்கியின் ஸ்டேட்மென்ட்டில் வரிசை எண்ணிட்டு அவை பெறப்பட்ட நாள் நன்கொடை/ வேண்டுகோளின் விபரங்கள்(எந்த மாதிரி உதவி கோரப்பட்டிருக்கிறது)   அதன் தற்போதைய நிலவரம், போன்ற விபரங்களை ஒரு பட்டியலாக  இணைத்து வெளியிடுகிறார்.  



“உரியத் தளராத ஆர்வத்துடனும் மங்காத அறவுணர்ச்சியுடனும்  வா மணிகண்டன் பணியாற்றிவருகிறார். அவரது நிசப்தம் அறக்கட்டளை ஆதரவற்றவர்களுக்கான மருத்துவ உதவிக்கும், எளியோரின் கல்விக்கும் பெரும்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்முன் இதற்காக  தலைவணங்குகிறேன்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 
கல்வி மருத்துவ உதவிகளைத்தாண்டி சமூகப்பணிகளையும் செய்கிறது நிசப்தம். அறக்கட்டளை. 2015  பெரு வெள்ளத்தில்  அரசு நிவாரணப்பணிகள் அடையாத கிராமங்களைத் தேடிச் சென்று உதவியிருக்கிறார்கள்.  கடந்த ஆண்டு முதல் ஏரி குளங்களை தூர்வாரி மீட்டெடுத்தல், சமுதாய காடுகள் உருவாக்கம் போன்றவற்றைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள் . 




வேமாண்டம்பாளையம் ஒரு  சிறிய கிராமம்.   ஒரு வருடத்துக்கு முன்பாக அந்த ஊரில் இருந்த குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரத்தையெல்லாம் நிசப்தம் சார்பில் அழித்துக் கொடுத்திருக்கிறார்கள்.. குளம் மட்டுமில்லை- பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் குளம். சில ஊர்களில் இருக்கும் குளங்கள் அக்கம்பக்கத்து ஆறுகளில், ஓடைகளில் நீர் ஓடினால் நிரம்ப வாய்ப்பிருக்கிறது. இந்தக் குளத்துக்கு அந்த வாய்ப்பில்லை. மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. வானம் பார்த்த பூமி. காய்ந்து கருவாடாக்கிக் கிடந்த அந்தக்குளம். மழையால்  இப்போது  நிரம்பியிருக்கிறது.. ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகான பெரு மகிழ்ச்சி இது.  என்கிறார் மணிகண்டன்.. பல ஆண்டுகளாகக் காய்ந்து கிடந்த பூமியில் நீர் நிரம்பிக் கிடப்பதை பார்க்க யாருக்குத்தான் மகிழ்வாக இருக்காது? அடுத்த இரண்டாண்டுகளுக்கு அந்தக் கிராமத்தில் தண்ணீருக்கு பிரச்சனையில்லை.  நிரம்பிய நீரைக்கண்டு மனம் நிறைந்திருக்கும் நிசப்தம்  இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்குச் செய்திருக்கிறார்கள்.


 இம்மாதிரி நீர் நிலைகளின் அருகில் அடர் வனம் என்ற முறையில் நிறைய மரங்களை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அடர்வனம் என்பது ஒரே இடத்தில் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களைத் தேர்ந்தெடுத்து மிக நெருக்கமாக நட்டு வளர்ப்பது,. மிக வேகமாக வளரும் அந்த மண்ணின் தன்மைக்கேற்ற மரக்கன்றுகளைக் கண்டுபிடித்து நடுகிறார்கள்  ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்த இடத்தில்  ஒரு சின்ன  அடர் வனம் உருவாகிறது. கோட்டுப்புள்ளாம்பாளையம் என்ற கிராமத்தில்  இரண்டாயிரம் செடிகளுடன் ஒரு வனத்தை உருவாக்கி அது செழித்து என அந்தப்பகுதி இப்போது பக்கத்துகிராம்மக்களுக்கு டூரிஸ்ட்ஸ்பாட்டாகியிருக்கிறது



இத்தனை பெரியபணிகளை எப்படி இவரால் சாதிக்க முடிகிறது.? “தொடர்ந்த  முயற்சிகள் தான் சார்” என்கிறார்.  முதலில் கிராமங்களில் இளைஞர்களை அழைத்துபேசுகிறோம். நிறையவே பேசுகிறோம்.. அரசியல் வாதிகளிடம் பெற்ற அனுபவத்தால்  மிகத் தயங்குவார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையைப் பெற்றபின் திட்டங்களை விளக்கினால் முன்வருவார்கள்.  முன் வந்துவிட்டால் பின் வாங்குவதில்லை.வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது உள்ளுர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துபேசினால் 95% பேர்  உதவுகிறார்கள்  என்று சொல்லும் இவர் சில கிராமங்களில்  சவால்களையும் சந்தித்திருக்கிறார்.  ஆனால் மனம்தளாரமல் தொடர்கிறார்.


“நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கித் தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது  என்பது  ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களைவிடவும் உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான் நாம் படுகிற அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும். நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும் அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். என்று சொல்லும் மணிகண்டன் இப்போது பங்களுரிலிருந்து பணிமாறி  கொங்கு நாட்டில் கோவைக்கு வந்திருக்கிறார்
இவர்களைப் போன்றவர்கள் ஓய்வு நேரம் வார விடுமுறைகளை தியாகம் செய்து  சமூக சேவைசெய்வது அவர்களுக்கு அது உள்ளூர அளிக்கும் ஒரு நிறைவுக்காக, விடுதலைக்காக. 
நம்மைப்போன்ற பலரால் அதைச் செய்யமுடியாது. 
மணிகண்டன் போன்றவர்களை முன்வைத்தே 
‘எல்லாருக்கும் பெய்யும் மழை’

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்