2/3/19

பேனாக்களும் பேசுகின்றன



ஒருவரின் எண்ணங்களை எழுத்துக்களாக்குவதில்  பேனாவிற்கு ஒரு முக்கிய இடமுண்டு.. பறவையின் இறகு முனை,  முனை கூராக சீவப்பட்ட கட்டைகள், பொருத்தப்பட்ட உலோக நிப்பை மையில் தொட்டு எழுதும் கட்டைப்பேனாக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சியைம்  நீண்ட சரித்திரத்தையும் கொண்டது  பேனா.  இந்த எழுதுகோல்    இங்க்கையும் நிப்பையும் ஒருங்கே கொண்ட பவுண்டன் பேனாவானது 1867ல் தான். 

ஸ்பிரிங், ரோலர், ஜாட்டர்,  ஜெல் என்று பலவிதமான  பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தும் இன்றைய தலைமுறையினரில் பலர் மைநிரப்பி எழுதும் பேனாக்களை பார்த்தே கூட இருக்கமாட்டார்கள். தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்காக,  ஒரு பொட்டுக்கூட சிந்திவிடாமல் பில்லரினால் எடுத்து  பேனாவில் நிரப்பி நிப்பில் இங்க் சரியாக வருகிறதா என்று சோதித்தபின் பூஜையில் வைத்து மாணவர்களுக்குக்  கொடுத்த  சென்ற தலைமுறை பெற்றோர்கள் கூட மறந்து போன இந்தப் பவுண்டன் பேனாக்கள் இன்னும் தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது என்பது தான் ஆச்சரியம்,
பார்க்கர், வாடர்மென், லெமி மான்ட்பிளாங்க் போன்ற உலகப் புகழ்பெற்ற  நிறுவனங்கள் இன்னும்  பவுண்டன் பேனாக்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சாதாரண பேனாக்களை மட்டுமில்லாமல் மிக விலையுயர்ந்த பேனாக்களைத் தயாரிக்கிறார்கள்  வைரங்கள் பதித்தது, தங்கம்,  வைர நிப், கையால் உருவங்கள் செதுக்கப்பட்ட பேனாக்கள். ஒவ்வொன்றிலும் தனித்தனி வண்ண ஓவியங்கள்  இப்படிப்பல வகைப் பேனாக்கள். எழுத மட்டுமில்லாமல் கலைப் பொருளாக சேர்ப்பவர்கள் இந்தப் பேனாக்களை வாங்குகிறார்கள். 

மான்ட்பிளாங்க்  என்ற நிறுவனம் மிக விலையுர்ந்த பேனாக்களைத் தயாரிப்பவர்கள். (இந்தியாவில் குறைந்த பட்ச விலை ரூ51,575)  ஆண்டு தோறும் தேசியத்தலைவர்கள், புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்கள்,  எழுத்தாளர்களை கௌரவிக்க அவர்கள் பெயர், அல்லது கையெழுத்துப் பொறிக்கப்பட்ட  “லிமிட்டட் எடிஷன்” என்று அழைக்கப்படும் பேனாக்களைக் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே  வெளியிடுகிறார்கள். மிக விலையுயர்ந்த இந்தப் பேனாக்களை  வாங்க   உலகின் கோடிஸ்வர வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி காத்திருக்கிறார்கள் .
இந்த ஆண்டு 17ஆம் நூற்றாண்டு சீன மன்னரின் நினைவாக  5 தங்கப்பேனாக்கள் மட்டும் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பேனாவின் விலை   12 கோடிக்கும் மேல்.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மான்ட்பிளாங்க் நிறுவனம்  இம்மாதிரி  விசேஷ பேனாக்கள் வாங்கியவர்களை உலகின் பல பகுதிகளிலிருந்தும்  சுவிஸ்ர்லாந்துக்கு விருந்தினர்களாக அழைத்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்க வைத்து   தங்கள் தொழிற்கூடத்தை காட்டினார்கள். 
ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோவிலிருந்து அதிபர் ஒபாமா வரை  நினைவுப்பரிசாக லிமிட்டட் எடிஷன் பேனாக்கள் தயாரித்திருக்கும் இவர்கள்  சில  பிரச்சினைகளிலும் சிக்கியிருக்கிறார்கள்.  
2010ஆம் ஆண்டு அண்ணல் காந்தியின்  தண்டி யாத்திரையின் நினைவாக  மஹாத்மா காந்தி 241  என்ற பேனாவை வெளியிட்டார்கள். 241 என்பது அவர் தண்டி யாத்திரையில் பயணம் செய்த மைல்களைக் குறிப்பது. அந்தப் பேனாவின் தங்க நிப்பில் காந்தி கைத்தடியுடன் நடக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. பேனாவின் விலை 14 லட்சம்.
‘எளிமையான வாழ்க்கையின் சின்னமாக வாழ்ந்த காந்தியின் பெயரால் இப்படி ஒரு ஆடம்பரப் பேனா வெளியிட்டிருப்பது  அவரது கொள்கைகளுக்கு முரணாது மட்டுமில்லை அவரை அவமதிக்கும் செயல்  என்பதால் இந்த நிறுவனம் பேனாக்களை தயாரிப்பதையும் விற்பதையும் தடைசெய்ய வேண்டும்’ என கேரள நீதி மன்றத்திலும்  உச்ச நீதிமன்றத்திலும்  வழக்குகள் தொடரப்பட்டன.  மான்ட்பிளாங்க் நிறுவனம் இந்தப் பேனாக்களின் விற்பனை மூலம்  9 லட்சம் டாலர்கள்  அரசு சொல்லும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்க இருப்பதாகத் தெரிவித்தது  ஆனாலும் வழக்கை விசாரித்த  நீதி மன்றம் பேனாக்களைத்  தடைசெய்துவிட்டது.  நீதிமன்றம் தடையாணையில்  சொன்ன  காரணங்களில் ஒன்று  காந்தியின் உருவம் 1950 சட்டங்களின் படி  தவறாகப் பயன்படுத்தக்கூடாத  தேசிய சின்னம். அதை வணிக ரீதியாகப் பயன்படுத்தமுடியாது. என்பது.   மான்ட் பிளாங்க் நிறுவனம் மன்னிப்பு கோரி பேனாக்களின்  தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்திவிட்டது. 
அண்ணல் காந்தி நீண்ட நாட்களுக்கு  மெல்லிய கட்டையின் நுனி கூராக்கப்பட்ட மைதொட்டும் எழுதும் பேனாவைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.  மவுன்ட் பேட்டனுக்கு கூட அந்தப் பேனாவினால் தான் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் நான் எழுதும் அழுத்தத்தில் நிப்புகள் வளைந்து போகின்றன. இது வசதியாகயிருக்கிறது என்பது தான். 
ஆந்திர மாநில ராஜமந்திரியில் தங்க ஆபரணங்கள் செய்து கொண்டிருந்த கே.வி ரத்தினம் என்பவர் 1932ல் பேனாக்கள், நிப்புகள்  தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியிருந்தார். காந்திக்கு எபொனைட் என்ற பொருளில்(பிளாஸ்டிக் அப்போது வரவில்லை)  தாங்கள் தயாரித்த பேனாவை அன்பளிப்பாக அனுப்பியிருந்தார்.  அதைப்பயன் படுத்திய காந்தி அதன் நிப்பு வளையாமலும், பேனாவின் வடிவம் எழுத வசதியாகியிருப்பதாகவும் ரத்தினத்துக்குக் கடிதம் எழுதினார்.  இன்று பேனாக்களும், பால்பாயின்ட் பேனாக்களும் தயாரிக்கும் அந்த நிறுவனம் இந்தக் கடித்ததை தங்கள் ஷோரூமில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்   தன் வாழ்நாளின் இறுதிவரை ராஜமந்திரி ரத்தினம் தயாரித்தப் பேனாக்களைத்தான் காந்தி பயன்படுத்திக்கொண்டிருந்தார்.,  அந்தப்பேனாக் களில் சிலவற்றை இன்றும் காந்தி மியூசியங்களில் பார்க்கலாம்.
காந்தியைப்போலவே  ராஜாஜி  இந்திராகாந்தி  போன்ற பல தலைவர்கள் ஒரே மாதிரியான பேனாக்களைத்தான் தொடர்ந்த பயன் படுத்தியிருக்கின்றனர்.  சௌகரியமா, சென்டிமென்டா என்பது தெரியாவிட்டாலும் அந்தப்பேனாக்கள்  அவர்களின் அடையாளமாகிப்போய்விட்டது. 
கலைஞர் கருணாநிதி  பால்பாயிண்ட் உபயோகித்து இல்லை.    சென்னை பிராட்வே பகுதியில் இருக்கும் ஜெம்&கோ  விற்பனை செய்யும்  வாலிட்டி(Walilty) பேனாக்களை மட்டுமே எப்போதும் பயன்படுத்தி வந்தார். எழுதிக்கொண்டிருக்கும்போது இங்க் தீர்ந்தால் அவர் எழுதும் வேகம் தடைப்படும் என்பதால்  அருகிலேயே இரண்டு பேனாக்கள் தயாராகயிருக்கும். .சற்று கனமான பேனாவாகயிருந்தாலும் கலைஞருக்கு நெருக்கமான விஷயங்களில்  இந்தப் பேனாக்களும் ஒன்று.  இதை அவரிடமே பரிசாக கேட்டுப்பெற்றவர்களில் சிலர்  கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் இந்துமதி.
அவரது இறுதியாத்திரையின் கடைசிக் கட்டத்தில்  எப்போதும் தாத்தாவின்  சட்டைப்பையிலிருக்கும் பேனா மிஸ்ஸிங் என்பதைக்கவனித்த பேரன் ஆதித்தியா (கனிமொழியின் மகன்), ஓடிப்போய் ஒரு பேனாவை அவரின் சட்டைப்பையில் சொருகிய நெகிழ்ச்சியான காட்சியை டிவியில் பார்த்தது நினைவிருக்கலாம். 
பேனாக்கள் தனிமனித உணர்வுகளில் மட்டுமில்லை நாடுகளின் சரித்திரங்களிலும்  முக்கிய இடம்பெற்றவை.  
இந்திய அரசியல்  அமைப்புச்சட்டதின் இறுதி வடிவம்  முடிவானதும் அதன் முதல் பிரதியை அழகான கையெழுத்தில் தயாரிக்கும் பணி  பிரேம் பெஹாரி ரெய்ஸ்டா என்ற கையெழுத்துக் கலைஞருக்கு(calligraphist ) வழங்கப்பட்டது. இதற்காக பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பெரிய கெளரவமாக்கருதி  ஆறு மாத காலம் உழைத்த  இந்த  கலைஞர் அதை எழுதப் பயன்படுத்தியது வெவ்வேறு 254  பேனா நிப்புகள். இந்த நிப்புகளையும், அதுபொருத்தப்பட்ட பேனாக்களையும் டெல்லி அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
உலகின்  பல சுவையான வரலாறுகளை எழுத உதவிய கருவியான  பேனாவின் வரலாறும் சுவாரஸ்யமாகத்தான்  இருக்கிறது,



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்