18/3/19

சீஸரின் மனைவி ..



இந்திய வான்படை 75 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் , பாரம்பரியத்தையும் கொண்டது.   1932ம் ஆண்டு  அன்று  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்தப்படை . இந்திய  விடுதலைக்குப்  பிறகு  இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமானது.  இன்று  இந்திய வான்படை, 1.70 லட்சம் வீரர்களுடனும்   1,130 போர் விமானங்களுடனும்  1,700 மற்ற பயன்பாட்டு   விமானங்களுடனும்   உலகில் நான்காவது பெரிய வான்படையாகத்  திகழ்கிறது.  நமது  வான் படை வீரர்கள்  பல சாகச சாதனைகள்  செய்து பெருமையை  நிலைநாட்டியவர்கள்.

அண்மையில்  நடந்த ஒரு தாக்குதலில் பாக்கிஸ்தானின் சக்திவாய்ந்த F16  விமானத்தையே  மிராஜ் என்ற விமானத்தின் மூலம் தாக்கி விழ்த்தினதைக்கண்டு  உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. காரணம் மிராஜ் 2000 வகை விமானங்கள் பழையவை. அவற்றை நமது HAL சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்திருந்ததால் அதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பான F16 க்கூட விழ்த்த  முடியும்  என்பதைச்  செய்துகாட்டியது.   மிராஜ் தயாரிப்பாளர்களான இஸ்ரேல்  மட்டுமில்லை  உலகிலுள்ள அனைத்து விமானப்படையினரும் வியந்துபோன விஷயம் இது. (ரபேல் பிரச்சினையில் இந்தHAL க்குதான் நவீன விமானங்களைக் கையாள  போதுமான   கட்டமைப்பு       வசதிகள் இல்லை என்று ஏற்கனவேயிருந்த ஒப்பத்தந்திலிருந்து HAL  கழட்டிவிடப்பட்டு  ரிலயன்ஸ் போன்ற தனியார்நிறுவனங்கள்  சேர்க்கப்பட்டது  என்பது தனிக்கதை)
 ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய விமானப்படை தாக்குதல் பற்றிய விமர்சனங்கள் ,சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.  விமானத் தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி தனோவா  அண்மையில்    அறிவித்திருந்தார்.   ஆனால் இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல்  ஆர்.ஜி.கே.கபூர் இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் சொன்னார்.

இந்தியாவின்  வான்வழித் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதாரம் என்ன? எவ்வளவு பேர்  கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காமலிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், அண்மையில் ‘‘பாகிஸ்தானில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.  பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா இறந்தவர்கள் 200 பேர் என்று ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.  ஆனால்  இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா  சீதாராமனிடம்  கேட்கப்பட்டபோது  அரசின் வெளி விவகார துறைச்செயலர் பத்திரிகையாளார் கூட்டத்தில் அறிவித்ததுதான்  அரசின்  அதிகாரப்பூர்வமான  கருத்து என்று சொல்லியிருக்கிறார். .(இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை)

இந்த தாக்குதல் அரசியலாக்கப்படுகிறது என்கிறார் ராகுல்காந்தி. தாக்குதல் விவகாரத்தில் விசாரணை தேவை என்கிறார் அகிலேஷ் யாதவ். விமானப்படை தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்கிறார் மம்தா.. ராணுவம் பொய் சொல்லாது. நம் ராணுவத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள். ஆனால், மத்திய பா.ஜ அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்
இந்திய  எதிர்க்கட்சி தலைவர்களின் இக்கருத்துக்கள் பாகிஸ்தானை மகிழ்ச்சியடைய  வைத்துள்ளன. இதற்காக நம் எதிர்க்கட்சி  தலைவர்கள்  வெட்கி, தலைகுனிய வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி..  ஆக இரண்டு தரப்பும் இதை அரசியலாக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே  இந்த விஷயத்தை அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
 இலக்குத் தாக்கப்பட்ட விபரங்கள் உடனடியாக வெளியிடப்படாவிட்டாலும்., சக்தி  வாய்ந்த அதிதொழில் நுட்பத்துடன் அந்த  இடம் பகலில் அடையாளம் காணப்பட்டு,  அதே இடத்துக்கு தொழில்நுட்ப உதவியுடன் இரவில் தாக்கக்கூடிய   லேசர்  குண்டுகளால்தாக்கப்பட்டிருக்கிறது.  அந்த இடம் ஒரு மதார்ஸா என்ற போர்வையில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடம்  என்பதையும்  அங்கு 300 செல்போன்கள் இயங்குவதையும்  கண்டுபிடித்தறிந்து  குறிப்பாக அந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கி,       கட்டிடத்தின்  மேற்பகுதியை துளைத்து     உள்ளே புகுந்து வெடித்து, சேதத்தை ஏற்படுத்தியது"    என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.
உலகெங்கும்  இதுபோல்  அதிரடி தாக்குதல் எதாவது நிகழ்ந்தால் உடனடியாக நிகழ்ந்ததற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று ஒரு பயங்கர வாத அமைப்பு அறிவிக்கும். அல்லது அந்த மாதிரி  அமைப்புகளின் இடங்கள் தாக்கப்பட்டால் அதைச்  செய்த அரசின் படைகள்  படங்களுடன் அந்தச் செய்தியை  வெளியிடும். ஆனால் தாக்குதல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்ட  பாக்கிஸ்தான்  அரசு உயிரிழப்பு, சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.  இறந்தவர்கள் எங்கள் ராணுவம் இல்லை பயங்கரவாதிகள்தான்  என்று சொன்னால் அவர்கள்  பாக்கிஸ்தான் எல்லைக்கு ள்ளிருந்ததை உறுதி செய்வதாகிவிடும் என்பது காரணமாகயிருக்கலாம். இந்த நிலையில்  வெளிநாட்டு ஊடகங்களும் இந்த தாக்குதலைக்  கேள்விக்குறியாகியிருப்பது  இந்தச் சர்ச்சையை வலுப்படுத்துகிறது.   
 இந்நிலையில் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பால்கோட் பகுதியின் செயற்கைகோள் எடுத்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள்  அமெரிக்காவின் சான்ஸ்ப்ரான்ஸ்கோவை சேர்ந்த பிளானட் லேப்ஸ் நிறுவனத்தால்  தாக்குதல் நடந்த  6 நாளைக்குப் பின்  எடுக்கப்பட்டவை.  அந்தப் படத்தையும் அதே இடத்தை கடந்த ஆண்டு எடுக்கப் பட்ட ஒரு  படத்துடன் ஒப்பீட்டு  அங்குள்ள கட்டிடங்களில்,  வனப்பகுதியில் மரங்களில்கூட எந்த மாறுதலும் இல்லை.  என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது.  தாக்குதலில் குறி தவறியிருக்கலாம் என்கிறார்கள் இந்த வல்லுநர்கள்.
புல்வாமா  தாக்குதலினால் கொதித்தெழுந்த  ஒவ்வொரு குடிமகனும்  இந்த பதிலடி விமானத்தாக்குதலினால்  மகிழ்ந்ததும்,  விமானி அபிநந்தன்  சாகசத்தால்  பெருமிதம் கொண்டதும் நிஜம்.  ஒன்றுவிடாமல் நாட்டிலிருக்கும்  எல்லா மீடியாக்களும்  அரசின் செயலைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தாக்குதலின் விபரங்களை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லுங்கள் என எதிர்க்கட்சிகள் கேட்பதை,அவர்கள்  ராணுவத்தைச்  சந்தேகிக்கிறார்கள்  நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று பிரதமரும் அவரது  கட்சிக்காரர்களும்  கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘நமது ராணுவத்தின் வலிமையை நாங்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. பிரதமர் கூறுவது போல் மத்திய அரசை  தர்மச்சங்கடப்படுத்தி,  எதிரி  நாட்டுப் படைகள் சந்தோஷப்படும்படியாகவும் நடந்து கொள்ளவும் இல்லை. அதேநேரம், ஒரு நாட்டின் ராணுவம், மற்றொரு நாட்டின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும்போது, அதன் முடிவு என்ன? என்பதை மக்களுக்கு  தெரிவிக்கவேண்டியது அந்த அரசின்  கடமையில்லையா? . என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
உயிர்ச் சேதம் இருப்பின் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனவும், இல்லையேல்,  உயிரிழப்பைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.  அதுதான்  நமது  ஜனநாயகத்துக்கு ஆளும்  பொறுப்பிலுள்ளவர்கள்   அளிக்கும் மரியாதை.

அரசாளுவோருக்கு எவ்வளவு அதிகாரமிருந்தாலும்

 அவர்கள் சீஸரின் மனைவியாகத்தானிருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்