20/3/19

பியானோ இசை பிடித்திருக்கிறது இந்த யானைகளுக்கு...


  யானைகளை நேசிக்கும் தேசம் தாய்லாந்து.   அவர்களது பாரம்பரியத்திலும்  கலாச்சாரத்திலும் யானைகளுக்கும்  முக்கிய பங்குண்டு. யானை தாய்லாந்து நாட்டின்  தேசிய மிருகம் மட்டுமில்லை. 8 மாநிலங்களின் அரசு முத்திரைகளிலும்  யானை இடம்பெற்றிருக்கிறது. ஆண்டு தோறும் மார்ச் மாதக் கடைசி வாரத்தில் யானைகள் தினம் கொண்டாடுகிறார்கள்.

 உலகின் பல நாடுகளைப்போலத்  தாய்லாந்திலும் காடுகள் அழிந்து நகரங்களாகிக்கொண்டிருப்பதால், 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு லட்சத்துக்குமேல் இருந்த இந்த யானைகள் இப்போது  நான்காயிரமாகச்  சுருங்கிவிட்டது...பல நூற்றாண்டுகளாக யானைகளை மரம் இழுப்பது, கட்டுமான பொருட்களைச் சுமப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவதற்காக  வீடுகளில் வளர்க்கப்படும் ஒருமிருகமாக அனுமதிக்கப்பட்டிருப்பதால் இன்றும் சில கிராமங்களில் வீட்டுவாசலில் யானை கட்டிப்போடப்பட்டிருப்பதைப்  பார்க்கலாம். கடந்த 20 ஆண்டுகளாக இந்தநாட்டின்  கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, வேலையுமில்லாமல், வளர்க்கவும் முடியாமல் வயதாகிக்கொண்டிருக்கும் யானைகளை என்ன செய்வது? என்பது தான்.

கால்நடை மருத்துவர்  சாம்ராட்(Dr. Samart,) அவரது மனைவி கூன் ஃபூன் ( Khun Fon) இந்த வயதான யானைகளை பாங்காக் நகரிலிருந்து 30 கீமி தொலைவிலிருக்கும் காஞ்சனாபுரி  வனப்பகுதியில் யானைகள் உலகம்” (Elephant world) நிறுவிப்  பாதுகாக்கிறார்கள். தாய்லாந்தில் வனவிலங்கு சரணாலயங்கள் தனியார்தொண்டு நிறுவனமாகங்களாக இயங்குபவை. .  ஓரளவு நிதியுடன் அரசு  நிலத்தை ஒதுக்கி தரும். ஆனால் நிர்வாக, பாரமரிப்பு செலவுகளை இந்த அமைப்புகள்தான் செய்து கொள்ளவேண்டும்.   இதற்குப் பெரிய நிறுவனங்கள் நன்கொடைகள் அளிக்கிறார்கள்.யானை  வீட்டில்    வளர்க்க முடியாதவர்களும், வயதான நோயுற்ற  யானைகளை சர்க்கஸ்  நிறுவனங்களும் .  இங்கு அனுப்பிவிடுகிறார்கள். சிலர் அதன் பராமரிப்புக்கு பணமும் கொடுக்கிறார்கள்.
       
பசுமை படர்ந்திருக்கும் மலைச்சரிவுகளுக்கும் சலசலக்கும்  ஒரு சிற்றாற்றுக்கும் இடையிலிருக்குக்கிறது இந்த ரம்மியமான இடம்.   யானைகளுக்கான முதியோர் இல்லமா? என்று கேட்டால் திருமதி  சாம்ராட் வருத்தப்படுகிறார்.   மனிதர்களின் முதியோர் இல்லம் போல   இங்குக் கட்டுப்பாடுகள்,  ஒதுக்கப்பட்ட தனியிடங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு என்றெல்லாம்  இல்லை.  இங்கு அவர்கள் இஷ்டம் போல சுதந்திரமாகச் சுற்றலாம், விரும்புமிடத்தில் நிற்கலாம் விளையாடலாம். என்கிறார்.  2008ல் இரண்டு யானைகளுடன்  தொடங்கப்பட்ட   இதில் தற்போது 32 யானைகளிருக்கின்றன.  இந்த குடும்பம் ஆண்டுதோறும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

வரவேற்பு கூடத்தில் அங்கிருக்கும் யானைகளின் படத்துடன்   அதன் பெயர், வயது, அங்கு வந்துசேர்ந்த நாள்  அதன் விசேஷ குணம் ஆகிய விவரிக்கப்பட்டிருக்கின்றன. “ நாக் மாயிஎன்ற 88 வயது பெண் யானைதான் இவர்களில் சீனியர். 18 வயதான காந்தா தான் இருப்பதில்  இளையவர்.  யானைகளைப்பார்க்கும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது எனச்சொல்லுகிறார்கள். அதில் முக்கியமானது செல்பி எடுத்துக்கொள்ளாதீர்கள். நமது யானை நண்பர்கள் அதை விரும்பவில்லை”.

மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட  ஒரு நீண்ட மரப்பாலாம்.  அதில் நாம்  நடந்து செல்லும்போது  அதனருகில்  வரும்  யானைகள் நமக்கு ஹலோ சொல்லுகிறது .அந்தப்பாப்பாதையில் யானைகளைப் பார்த்தபடி நாம் நடக்கலாம்.  சில இடங்களில் குழந்தைகள் உட்கார்ந்து  அருகில் வரும் யானைகளைத்தொட்டுப் பார்க்கிறார்கள்.
பாதுகாப்புமாகத் தொடங்கப்பட்ட இது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பேசப்படும்ஒரு  சுற்றுலாத்தலமாகியிருக்கிறது. பாதுகாப்பகத்தின் பணியாளர்கள் தவிரப் பல தன்னார்வலர்களும் டூரிஸ்ட்களுக்கு உதவுகிறார்கள்.  ஒரு நாள், இரண்டு நாள் முகாம்களும் நடத்துகிறார்கள்.
யானை வளர்ப்பு, பராமரிப்பு முறைகளை மாவுத்என்ற ஆறு மாத பயிற்சியும் அளிக்கிறார்கள். பயிற்சிக்கு இந்தோனிஷியா, கம்போடியா, வியட்நாம்  நாடுகளிலிருந்து  வந்திருக்கிறார்கள்.   சில  பல்கலைக்கழக  மாணவர்கள் இங்கு தங்கி யானைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.   குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் வருகிறார்கள். யானைகளுக்குத்தரும் அரிசிச் சாதத்தைச் சமைத்து  பெரிய கவளமாக உருட்டி அதன் நடுவில் பூசனி, வெள்ளரிக்காய்  போன்றவற்றைப் பதித்து,   டைனிங் ஹாலில் வரிசையாக காத்திருக்கும் யானைகளுக்கு வழங்கும் பணியில் இவர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் சமைத்ததைச்  சாப்பிடும் யானைகளைப்பார்த்து இவர்கள் போடும் சந்தோஷ கூச்சல் யானைகளின் பிளிரலை விட அதிகமாகயிருக்கிறது.  
வனத்தில் யானைகள் விரும்பிச் சாப்பிடக்கூடிய புல் வளர்க்கிறார்கள். அதைக் குழந்தைகளே அறுத்து  யானைகளின் அருகில் சென்று  கொடுக்கிறார்கள்.
யானைகள் குளிப்பதற்கென்று ஒரு  சின்ன நீர்த்தேக்கம் இருக்கிறது.  அதில் யானைகளை  குளிப்பாட்டிக்கொண்டு  டூரிஸ்ட்களும் குழந்தைகளும் குளிக்கிறார்கள்.  யானைகளும் அவர்கள் மீது   தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடுகிறது.  
இங்கு வாழும் யானைகளைப்பற்றி அனைத்தும் அறிந்த சாம்ராட்  தம்பதியினரும் இங்கேயே வசிக்கின்றனர். நாள் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து இவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.  அருகிலிருக்கும் ஒரு யானையை காட்டி கடந்த சில நாட்களாக நான்  பெயர் சொல்லிக் கூப்பிட்ட போது இவர் திரும்பிப் பார்க்கவில்லை. காதில் ஏதோ பிரச்சனை என் நினைக்கிறேன். ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்என்கிறார் டாக்டர்  சாம்ராட். பெரிய ஹ்யரிங்அய்ட்  வைப்பாரோ என எண்ணிக்கொள்கிறோம்

இங்கிலாந்த்தைச்சேர்ந்த பால் பார்ட்ன்(PAUL BHARTON) ஒரு புகழ்பெற்ற பியானோ  இசைக்கலைஞர். லண்டன் ராயல்  அக்கடமி ஆப்  ஆர்ட்ஸ்ஸில் பணிபுரிந்துவந்தவர்.  57 வயதாகும் இவர்  தன் பணி ஓய்வுக்குபின் இந்த காஞ்சனா புரியின் அருகிலிருக்கும் கிராமத்தில் வசிக்கிறார்.  அவர் வாரந்தோறும் தன் பியானோவைத் தனது
சிறிய டிரக்கில் கொண்டுவந்து இந்த யானைகளுக்காக  மேற்கத்திய  சாஸ்திரிய இசையை வாசிக்கிறார்.  யானைகள் ரசித்துக் கேட்கின்றன. நான் ஒரு புதிய ராகம் வாசித்தால் மிக கவனமாகக் கேட்கும். ஏற்கனவே வாசித்தாக இருந்தால் தலையை ஆட்டி, ஆட்டி  ரசிக்கும்.  என்கிறார். லாம் டியூன் (lamp Duin)  என்ற பார்வையை இழந்த யானை இவர் வந்தவுடனேயே ஆஜாராகிவிடுமாம். சில யானைகள்  இசையைப்பற்றிக்  கவலைப்படாமல் இவரை கண்டுகொள்ளாமல்  சுற்றிக்கொண்டு போய்விடுமாம். . 
இவர்  வாசிக்கும் போது  பியானோவிற்கு  மிக அருகில் வந்து யானைகள் ரசிப்பதைத்   தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான்  அச்சமாகயிருக்கிறது. பால் பார்ட்டன் தன் இசையில் மட்டுமே  கவனமாகயிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பியானோ வாசிக்கும் போது  தன் பேத்தியையும்  மடியிலிருத்திக் கொண்டு அவரையும்   வாசிக்கச்செய்கிறார்.
 நினைவாற்றல். சொல்வதைப்புரிந்துகொள்ளும் திறன் போல இசையைப் புரிந்துகொள்ளும் திறனும், ராகங்களின் வேறுபாடுகளும்  அவர்களுக்குப் புரிகிறது.  கோபமாக அல்லது சோர்வுற்றிருக்கும்  யானைகளைப்  பால் பியோனா வாசிக்கும் போது கொண்டுபோய் நிறுத்தினால் அமைதியாகி புத்துணர்வு அடைகிறார்கள் என்கிறார்  டாக்டர் சாம்ராட்..
நமது கோவில்களில் சிறை கைதிகள் போல மண்டபங்களில்  அடைக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கும், சின்னதம்பி, ஒற்றைக்கொம்பன் போன்ற ரவுடி யானைகளுக்கும் இதுபோல ஒரு இடம் தமிழக வனப்பகுதியிலும்  அமைக்கப்பட்டால் எவ்வளவு  நன்றாகயிருக்கும்.?


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்