கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20/3/19

பியானோ இசை பிடித்திருக்கிறது இந்த யானைகளுக்கு...


  யானைகளை நேசிக்கும் தேசம் தாய்லாந்து.   அவர்களது பாரம்பரியத்திலும்  கலாச்சாரத்திலும் யானைகளுக்கும்  முக்கிய பங்குண்டு. யானை தாய்லாந்து நாட்டின்  தேசிய மிருகம் மட்டுமில்லை. 8 மாநிலங்களின் அரசு முத்திரைகளிலும்  யானை இடம்பெற்றிருக்கிறது. ஆண்டு தோறும் மார்ச் மாதக் கடைசி வாரத்தில் யானைகள் தினம் கொண்டாடுகிறார்கள்.

 உலகின் பல நாடுகளைப்போலத்  தாய்லாந்திலும் காடுகள் அழிந்து நகரங்களாகிக்கொண்டிருப்பதால், 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு லட்சத்துக்குமேல் இருந்த இந்த யானைகள் இப்போது  நான்காயிரமாகச்  சுருங்கிவிட்டது...பல நூற்றாண்டுகளாக யானைகளை மரம் இழுப்பது, கட்டுமான பொருட்களைச் சுமப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவதற்காக  வீடுகளில் வளர்க்கப்படும் ஒருமிருகமாக அனுமதிக்கப்பட்டிருப்பதால் இன்றும் சில கிராமங்களில் வீட்டுவாசலில் யானை கட்டிப்போடப்பட்டிருப்பதைப்  பார்க்கலாம். கடந்த 20 ஆண்டுகளாக இந்தநாட்டின்  கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, வேலையுமில்லாமல், வளர்க்கவும் முடியாமல் வயதாகிக்கொண்டிருக்கும் யானைகளை என்ன செய்வது? என்பது தான்.

கால்நடை மருத்துவர்  சாம்ராட்(Dr. Samart,) அவரது மனைவி கூன் ஃபூன் ( Khun Fon) இந்த வயதான யானைகளை பாங்காக் நகரிலிருந்து 30 கீமி தொலைவிலிருக்கும் காஞ்சனாபுரி  வனப்பகுதியில் யானைகள் உலகம்” (Elephant world) நிறுவிப்  பாதுகாக்கிறார்கள். தாய்லாந்தில் வனவிலங்கு சரணாலயங்கள் தனியார்தொண்டு நிறுவனமாகங்களாக இயங்குபவை. .  ஓரளவு நிதியுடன் அரசு  நிலத்தை ஒதுக்கி தரும். ஆனால் நிர்வாக, பாரமரிப்பு செலவுகளை இந்த அமைப்புகள்தான் செய்து கொள்ளவேண்டும்.   இதற்குப் பெரிய நிறுவனங்கள் நன்கொடைகள் அளிக்கிறார்கள்.யானை  வீட்டில்    வளர்க்க முடியாதவர்களும், வயதான நோயுற்ற  யானைகளை சர்க்கஸ்  நிறுவனங்களும் .  இங்கு அனுப்பிவிடுகிறார்கள். சிலர் அதன் பராமரிப்புக்கு பணமும் கொடுக்கிறார்கள்.
       
பசுமை படர்ந்திருக்கும் மலைச்சரிவுகளுக்கும் சலசலக்கும்  ஒரு சிற்றாற்றுக்கும் இடையிலிருக்குக்கிறது இந்த ரம்மியமான இடம்.   யானைகளுக்கான முதியோர் இல்லமா? என்று கேட்டால் திருமதி  சாம்ராட் வருத்தப்படுகிறார்.   மனிதர்களின் முதியோர் இல்லம் போல   இங்குக் கட்டுப்பாடுகள்,  ஒதுக்கப்பட்ட தனியிடங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு என்றெல்லாம்  இல்லை.  இங்கு அவர்கள் இஷ்டம் போல சுதந்திரமாகச் சுற்றலாம், விரும்புமிடத்தில் நிற்கலாம் விளையாடலாம். என்கிறார்.  2008ல் இரண்டு யானைகளுடன்  தொடங்கப்பட்ட   இதில் தற்போது 32 யானைகளிருக்கின்றன.  இந்த குடும்பம் ஆண்டுதோறும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

வரவேற்பு கூடத்தில் அங்கிருக்கும் யானைகளின் படத்துடன்   அதன் பெயர், வயது, அங்கு வந்துசேர்ந்த நாள்  அதன் விசேஷ குணம் ஆகிய விவரிக்கப்பட்டிருக்கின்றன. “ நாக் மாயிஎன்ற 88 வயது பெண் யானைதான் இவர்களில் சீனியர். 18 வயதான காந்தா தான் இருப்பதில்  இளையவர்.  யானைகளைப்பார்க்கும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது எனச்சொல்லுகிறார்கள். அதில் முக்கியமானது செல்பி எடுத்துக்கொள்ளாதீர்கள். நமது யானை நண்பர்கள் அதை விரும்பவில்லை”.

மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட  ஒரு நீண்ட மரப்பாலாம்.  அதில் நாம்  நடந்து செல்லும்போது  அதனருகில்  வரும்  யானைகள் நமக்கு ஹலோ சொல்லுகிறது .அந்தப்பாப்பாதையில் யானைகளைப் பார்த்தபடி நாம் நடக்கலாம்.  சில இடங்களில் குழந்தைகள் உட்கார்ந்து  அருகில் வரும் யானைகளைத்தொட்டுப் பார்க்கிறார்கள்.
பாதுகாப்புமாகத் தொடங்கப்பட்ட இது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பேசப்படும்ஒரு  சுற்றுலாத்தலமாகியிருக்கிறது. பாதுகாப்பகத்தின் பணியாளர்கள் தவிரப் பல தன்னார்வலர்களும் டூரிஸ்ட்களுக்கு உதவுகிறார்கள்.  ஒரு நாள், இரண்டு நாள் முகாம்களும் நடத்துகிறார்கள்.
யானை வளர்ப்பு, பராமரிப்பு முறைகளை மாவுத்என்ற ஆறு மாத பயிற்சியும் அளிக்கிறார்கள். பயிற்சிக்கு இந்தோனிஷியா, கம்போடியா, வியட்நாம்  நாடுகளிலிருந்து  வந்திருக்கிறார்கள்.   சில  பல்கலைக்கழக  மாணவர்கள் இங்கு தங்கி யானைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.   குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் வருகிறார்கள். யானைகளுக்குத்தரும் அரிசிச் சாதத்தைச் சமைத்து  பெரிய கவளமாக உருட்டி அதன் நடுவில் பூசனி, வெள்ளரிக்காய்  போன்றவற்றைப் பதித்து,   டைனிங் ஹாலில் வரிசையாக காத்திருக்கும் யானைகளுக்கு வழங்கும் பணியில் இவர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் சமைத்ததைச்  சாப்பிடும் யானைகளைப்பார்த்து இவர்கள் போடும் சந்தோஷ கூச்சல் யானைகளின் பிளிரலை விட அதிகமாகயிருக்கிறது.  
வனத்தில் யானைகள் விரும்பிச் சாப்பிடக்கூடிய புல் வளர்க்கிறார்கள். அதைக் குழந்தைகளே அறுத்து  யானைகளின் அருகில் சென்று  கொடுக்கிறார்கள்.
யானைகள் குளிப்பதற்கென்று ஒரு  சின்ன நீர்த்தேக்கம் இருக்கிறது.  அதில் யானைகளை  குளிப்பாட்டிக்கொண்டு  டூரிஸ்ட்களும் குழந்தைகளும் குளிக்கிறார்கள்.  யானைகளும் அவர்கள் மீது   தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடுகிறது.  
இங்கு வாழும் யானைகளைப்பற்றி அனைத்தும் அறிந்த சாம்ராட்  தம்பதியினரும் இங்கேயே வசிக்கின்றனர். நாள் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து இவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.  அருகிலிருக்கும் ஒரு யானையை காட்டி கடந்த சில நாட்களாக நான்  பெயர் சொல்லிக் கூப்பிட்ட போது இவர் திரும்பிப் பார்க்கவில்லை. காதில் ஏதோ பிரச்சனை என் நினைக்கிறேன். ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்என்கிறார் டாக்டர்  சாம்ராட். பெரிய ஹ்யரிங்அய்ட்  வைப்பாரோ என எண்ணிக்கொள்கிறோம்

இங்கிலாந்த்தைச்சேர்ந்த பால் பார்ட்ன்(PAUL BHARTON) ஒரு புகழ்பெற்ற பியானோ  இசைக்கலைஞர். லண்டன் ராயல்  அக்கடமி ஆப்  ஆர்ட்ஸ்ஸில் பணிபுரிந்துவந்தவர்.  57 வயதாகும் இவர்  தன் பணி ஓய்வுக்குபின் இந்த காஞ்சனா புரியின் அருகிலிருக்கும் கிராமத்தில் வசிக்கிறார்.  அவர் வாரந்தோறும் தன் பியானோவைத் தனது
சிறிய டிரக்கில் கொண்டுவந்து இந்த யானைகளுக்காக  மேற்கத்திய  சாஸ்திரிய இசையை வாசிக்கிறார்.  யானைகள் ரசித்துக் கேட்கின்றன. நான் ஒரு புதிய ராகம் வாசித்தால் மிக கவனமாகக் கேட்கும். ஏற்கனவே வாசித்தாக இருந்தால் தலையை ஆட்டி, ஆட்டி  ரசிக்கும்.  என்கிறார். லாம் டியூன் (lamp Duin)  என்ற பார்வையை இழந்த யானை இவர் வந்தவுடனேயே ஆஜாராகிவிடுமாம். சில யானைகள்  இசையைப்பற்றிக்  கவலைப்படாமல் இவரை கண்டுகொள்ளாமல்  சுற்றிக்கொண்டு போய்விடுமாம். . 
இவர்  வாசிக்கும் போது  பியானோவிற்கு  மிக அருகில் வந்து யானைகள் ரசிப்பதைத்   தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான்  அச்சமாகயிருக்கிறது. பால் பார்ட்டன் தன் இசையில் மட்டுமே  கவனமாகயிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பியானோ வாசிக்கும் போது  தன் பேத்தியையும்  மடியிலிருத்திக் கொண்டு அவரையும்   வாசிக்கச்செய்கிறார்.
 நினைவாற்றல். சொல்வதைப்புரிந்துகொள்ளும் திறன் போல இசையைப் புரிந்துகொள்ளும் திறனும், ராகங்களின் வேறுபாடுகளும்  அவர்களுக்குப் புரிகிறது.  கோபமாக அல்லது சோர்வுற்றிருக்கும்  யானைகளைப்  பால் பியோனா வாசிக்கும் போது கொண்டுபோய் நிறுத்தினால் அமைதியாகி புத்துணர்வு அடைகிறார்கள் என்கிறார்  டாக்டர் சாம்ராட்..
நமது கோவில்களில் சிறை கைதிகள் போல மண்டபங்களில்  அடைக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கும், சின்னதம்பி, ஒற்றைக்கொம்பன் போன்ற ரவுடி யானைகளுக்கும் இதுபோல ஒரு இடம் தமிழக வனப்பகுதியிலும்  அமைக்கப்பட்டால் எவ்வளவு  நன்றாகயிருக்கும்.?


27/1/19

கடவுள்களாக வாழும் கலைஞன்



இன்று  நம் மனதில் பதிந்திருக்கும்,வழிபடும் சரஸ்வதி, லஷ்மி முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்களை இந்த உலகுக்கு அந்த வடிவில் அறிமுகப்படுத்தியவர் இராஜா ரவிவர்மா.
தன் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருப்பதாகச்   சொல்லப்படும் இந்த ஓவியனின் அத்தனைப் படைப்புகளைப் பற்றிய விபரங்கள் இன்று ஒரே இடத்தில் இல்லை. மஹாபாரதம், இராமாயணம், புராணக்கதை மாந்தர்களைத்தவிர அவர் எண்ணற்ற படங்களை  வரைந்திருக்கிறார். அவை இவர் பெயர் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல அரண்மனைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
சாகுந்தலம் போன்ற காவியத்தின் காட்சிகள் இவரது ஓவியங்கள் மூலம் கவிதைகளாயின.  இவர் வரைந்த பெண்களின் கண்கள் உணர்ச்சிகளை மட்டுமில்லை,அந்த உருவங்களும் பெண்ணின்உடல் மொழியைப் பேசின.  இவரது ஓவியங்களில் அந்த இடத்தின் சூழல், அணிந்திருந்த ஆடைகள், தரை, சுவர் ஒளி நிழல் என எல்லாம் மிக நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும்.  அழகான பெண் என்றால் அவர் ரவி வர்மாவின் ஓவியம் போல என வர்ணிக்கப்பட்டார். இதை வரைய எவ்வளவு காலம் பிடித்திருக்கும் என்ற எண்ணவைக்கும் பல படங்களை இவர் சிலமணி நேரங்களில் வரைந்து தள்ளியிருக்கிறார். அதனால் தான் வாழ்நாளில் அத்தனை படங்களை வரைய முடிந்திருக்கிறது.

திருவனந்தபுரம் அருகிலிருக்கும் கிளிமானுர் ஒரு சின்ன ஜமீன். அன்றைய திருவிதாங்கூர் ராஜ வம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்ற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் 1848ல் பிறந்தவர் ரவி வர்மா. மிகச்சிறு வயதிலேயே கிளிமானுர் அரண்மனைச்சுவர் முழுவதும் கரித்துண்டால் படங்களாக வரைய முயன்றுகொண்டிருந்த இவரின் ஆர்வத்தையும் ஓவியத் திறனையும்  கண்டுபிடித்தவர் இவரது மாமா ராஜா வர்மா. அவரது ராஜா பட்டம் தான்  மறுமக்கத்தாயம் என்ற தாய்வழி மரபுப்படி பின்னாளில் இவரை  அடைந்தது.

மாமா  ராஜ ராஜா  வர்மாவே ஒரு ஓவியராக இருந்ததால், ஓவியத்தில் மிக ஆவர்வம் கொண்ட மருமகனை திருவிதாங்கூர்  மன்னர்  ஆயில்யம் திருநாளிடம்  14 வது வயதில் ஒப்படைத்தார். அங்கு அரண்மனை  ஓவியராக இருந்த தமிழர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் கற்றபின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடம் தைல வண்ண ஒவியநுணுக்கங்களை கற்றார். உலகம் வியந்த இந்தக் கலைஞனுக்கு குருவாகயிருந்தவர்கள்  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.



திருவிதாங்கூர் மன்னரின் ஆதரவுடன்.   இளம் வயதிலேயே இவரது படங்கள் வெளிநாட்டு ஓவிய கண்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது  ஓவியத்தில் தீராத ஆர்வம் கொண்ட ரவி வர்மா ஒரு காலகட்டத்துக்குப்பின் தானாகக் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அந்தக் காலகட்டத்தில் இந்திய ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ணங்களை ஓவியங்களில் பயன்படுத்தி வந்தனர் அந்த உத்திகளைத் . தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர்  1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார்.
 தேடித்தேடிச் சேகரித்த ஐரோப்பிய ஓவியங்கள், புத்தகங்கள் இவருக்கு உதவின.  வண்ணங்களின் கலவை, ஓவியத்திலிருக்கும் உடல் பரிமாணம் இவைகள் தான் ஒரு ஓவியத்தின் கலைநயத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்த ரவி வர்மா அதை தன் ஓவியங்களில் ஐரோப்பிய முப்பரிமாண ஓவியப்பாணியை புகுத்தி தனக்கென ஒரு ஓவியப்பாணியை உருவாக்கிக்கொண்டார்.  முதல் முறையாக இந்திய ஓவியங்களில் முப்பரிமாணத்தில் கடவுளர், இதிகாசக்காட்சிகள் தைல  ஓவியங்களாயின.

 10 ஆண்டுகளுக்குமேலாக தன் கிளிமானூர் அரண்மனையிலேயே படங்களை வரைந்து தள்ளிக்கொண்டிருந்த ரவிவர்மாவுக்கு  பரோடா மன்னர். சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும்  மிகப்பெரிய அரண்மனையின்  கூடங்களை ரவி வர்மாவின் ஓவியங்களால்  அலங்கரிக்க விரும்பினார்.. அதற்காக அந்த அரண்மனையில் 10 ஆண்டுகள் தங்கி ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

தொடர்ந்து மைசூர் சமஸ்தானத்தின் அழைப்பு. இப்படி மன்னர்கள், பிரபுக்களின் ஆதரவுடன் அவர்கள் படங்களையும் ,ஆங்கிலேயே அதிகாரிகளையும் வரைந்து கொண்டிருந்தாலும், அவரது சில சிறந்த படைப்புகள் அரண்மனைகளில்தான்  பிறந்தவை என்றாலும்  தன் படைப்புகள் சதாரண மனிதர்களை அடையவில்லையே என்ற ஆதங்கம் ரவி வர்மாவுக்கு இருந்தது.  அப்போது அவருக்கு எழுந்த எண்ணம் தான் அன்று ஜெர்மனியில் அறிமுகமாயிருந்த கான்வாஸில்  . வரைந்த ஓவியங்களை அதே வண்ணங்களுடன் காகிதத்தில்  அச்சிடும்  முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தன் படங்களை அச்சிடவேண்டும் என்பது.
தன் சேமிப்பு அனைத்தையும் மூதலீடு செய்து 1894ல் பம்பாயில் ஒரு அச்சகத்தைத் நிறுவினார்.அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல்  ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்.



 அழகான படங்கள் நிறைய அச்சிடப்பட்டும் அச்சகம் லாபத்தில் இயங்கவில்லை. 1896ல் அதை புனா அருகிலுள்ள ஒரு சின்ன நகருக்கு   மாற்றியும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தது அந்த அச்சகம்.  அச்சு இயந்திரங்களை நிறுவியபோது அவரிடம் பணியிலிருந்த ஜெர்மனியாருக்கே அதை விற்றுவிட்டு தனது ஊரான கிளிமானுருக்குத்   வருத்தத்துடன்  திரும்பிய  இந்த ஓவிய மேதையின் இறுதிக்காலம் ஒரு மோசமான ஓவியத்தைப்போலத்தான் இருந்தது.



ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று பிரபல ஓவியர்களைச் சந்திக்க வேண்டும்  என்ற இவரது ஆசை நிறைவேறவில்லை.  அந்த நாட்களில் கடல் தாண்டி பயணம் செய்தால் திரும்பியபின் கோவில்களுகச் செல்லும் உரிமை தடை செய்யப்படும்  என்ற சமூக நிராகரிப்பைச் சந்திக்கவிரும்ப வில்லை அவர்..
அச்சகத்தை வாங்கியவருக்கு தன் கடவுளர் படங்களை அச்சிடும் உரிமையைக்கொடுத்திருந்தார். அதன் விளைவாகத்தான் கடந்த நூற்றாண்டில் காலண்டர்களாகப் பிறந்து பல இந்துக்குடும்பங்களின்  பூஜை அறையில் தெய்வங்களாக இடம்பெற்றிருக்கிறது இவரது ஓவியங்கள்.

எல்லா நல்ல கலைஞர்களைப்போல பாராட்டுகளுடன் கண்டனங்களையும் சந்தித்தவர் ரவி வர்மா.. மேற்கத்திய பாணியைப்புகுத்தி நம் பாரம்பரிய சித்திரகலையைச்சிதைத்துவிட்டார்,  நமது தெய்வங்களை கொச்சைப்படுத்திவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டார். அவரது ஓவியங்கள் இந்திய  கலாச்சாரத்தின் வெளிப்பாடற்றவை என்று விவேகானந்தரும், இந்திய ரசனையையும் அதன் கலைப்பண்பாட்டையும் தரம் தாழ்த்தியவர் என்று அரவிந்தரும்  எழுதியிருக்கிறார்கள்.

விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் சாமானிய மனிதனை ஓவியங்களை ரசிக்க வைத்த கலைஞன் அவன். .இன்றைக்கும் ஓவியராக விரும்புவர்களுக்கு  ஆர்வம்  ரவி வர்மாவின் படங்களிலிருந்துதான் துவங்குகிறது.

ஒரு நல்ல கலைஞனின் படைப்பு காலத்தால் அழிவதில்லை என்பதற்கு, ரவி வர்மா  இறந்து 100 ஆண்டுகளுக்குப்பின்னரும் அவரது படங்கள்  இன்றும் பேசப்படுகின்றன என்பதே சாட்சி.