இரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக
நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000கோடி மார்க்கெட் இரண்டே நாளில் சரிந்தது. அதைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் ஷேர்கள் வரலாறு காணாத வீட்சியைச் சந்தித்தது. எத்தனை கோடி ரூபாய்கள்
செலவழித்தாலும் ஏற்படுத்த முடியாத உணவு பாதுகாப்பு விழிப்புணர்வை நெஸ்லேயின் இந்த மேகி
இரண்டே நாளில்.ஏற்படுத்திவிட்டது. அலுவலகங்கள், குடும்பங்கள்,
பள்ளிகள் என எல்லா இடங்களிலும் அச்சத்துடன் இதுகுறித்து விவாதங்கள்
நடைபெறுகின்றன.
என்ன நடந்தது?
இந்தப் பிரச்சனையின் துவக்கப்புள்ளி கடந்த ஆண்டு(2014) மார்ச் மாதத்தில்
துவங்கியது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரப்பங்கி என்ற மாவட்ட தலைநகரில்
இருக்கும் வி. கே பாண்டே என்ற உணவு பாதுகாப்பு மற்றும் நிவாக அதிகாரி திடுமென ஒரு
நாள் கடைகளில் இருந்து மேகி பாக்கெட்களைச் சாம்பிளாக எடுத்து கோரக்பூரில்
இருக்கும் பரிசோதனை சாலைக்கு அனுப்பினார். அந்தச் சோதனையின் ரிப்போர்ட் அவருக்கு
அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம், மேகி நூடுல்ஸ்
பாதுகாப்பாற்றது. அதில் சோடியம் குளுட்டாமெட்(SGM) என்ற சுவை
கூட்டும் ரசாயனம் அளவுக்கு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது.
இந்த இந்த ரசாயனம்
குழந்தைகளின் நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சியைப் பாதித்து, மூளைச் செயல்பாட்டை
மந்தமடையச் செய்யக்கூடியது. உடல் பருமன், மனஅழுத்தம்
ஏற்படுத்தக் கூடியது. அதிகக் கொழுப்புச்சத்துக் கொண்ட இந்த வகை
உணவுகள்குழந்தைகளுக்குக் கற்றல் குறைபாடு, மறதி, விழிப்புநிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில்
மந்தம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள்
தெரிவித்திருக்கின்றன.
உடனடியாக நெஸ்லே நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார்.
மிகச் சக்திவாய்ந்த அந்தச் சர்வ தேச நிறுவனம் உடனடியாகப் பதில் அனுப்பாதால்
வழக்குப் போடப்போகிறோம் என ஒரு நோட்டிஸ் அனுப்பினார். அதிர்ந்து போன நிறுவனம்
சோதனை சரியில்லை என்றும் கல்கத்தாவிலுள்ள பெரிய சோதனைக்கூடத்துக்குத் தங்கள்
செலவில் கட்டணம் செலுத்தி அனுப்ப கோரியது. கல்கத்தா சோதனையில் நிறுவனத்துக்குப்
பேரிடி காந்திருந்தது. அந்தச் சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில
காரீயம் போன்ற அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி
சிக்கல் மேலும் சிடுக்கானது.
இ
ந்த அதிகாரி பாண்டே,
இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக்,
வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு
திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது விளம்பரத்தில் இது
அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்குப் பிரிட்டானியா
தள்ளப்பட்டது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில்
போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால் சிவப்பு நிறத்தில் போட
ஆரம்பித்தது. இதே போல வாஹித் பிரியாணி என்று வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும்
பிரியாணி தயாரிப்பு நிறுவனத்தின் மேலும் அதில் சேர்க்க படும் நிறம் குறித்து
வழக்குதொடர்ந்திருக்கிறார்.
கல்கத்தா சோதனைச்சாலையின் அறிக்கையின் அடிப்படையில் உ.பி மாநில அரசு நெஸ்லே மீது வழக்குத் தொடர்ந்தது. நீதிபதி நிறுவனத்தின் மீது
மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் மேகிக்காக டிவி பத்திரிகை விளம்பரங்களில் பங்கேற்ற அமிதாப், மாதுரி
தீட்சித, பிரித்துஜிந்தா ஆகியோர் மீதும் FIR போட ஆணயிட்டது. வழக்குப் போடப்பட்டிருப்பது உ.பி
மாநிலத்தில் என்றாலும் செய்தீயாக பரவிய வேகத்தில் 2 நாட்களில் பல மாநிலங்கள் விற்பனைக்குத் தடை விதித்தன. சில விதிக்கவில்லை.
என்ற நிலையில் அதிரடியாக மத்திய அரசின்
உணவுத்துறை நாடு முழுவதற்கும் இதன் விற்பனைக்குத் தடைவிதித்துவிட்டது.
நூடுல்ஸ் என்ற தீடிர் உணவு உலகப்போருக்குப் பின் எழுந்த
உணவுபற்றா குறையைச் சமாளிக்க மோமோஃபுக்கு அன்டொ (momofuku Ando) என்ற ஜப்பானியரால்
கண்டுபிடிக்கப் பட்டது. பின்னாளில் அமெரிக்கர்கள் அதன் தயாரிப்பு முறையில்
மாறுதல்களைச் செய்து மாரக்கெட்டுக்குக் கொண்டுவந்தார்கள். சதாரண மாவில்பிழியபட்ட
இழைகளின் மீது 176 டிகிரி சூடான காற்றை 30 நிமிடம் செலுத்தி அதன் ஈரப்பதத்தை நீக்கிவிட்டால் பின்
அதை எப்போது வேண்டுமானுலும் சூடான நீரில் இட்டுப் பயன்படுத்தலாம்
என்பதே அது. இதன் உரிமைகளைப் நெஸ்லே என்ற ஸ்விஸ் நாட்டு
நிறுவனம் பெற்று உலகெங்கும் பல நாடுகளில்
தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.. இன்று ”உலக உணவாக” அறியப்பட்டிருக்கும் இதைக் கடந்த ஆண்டு சாப்பிட்டவர்களின் எண்ணிக்கை 10200 கோடிக்குமேல். இது 1983ல் இந்தியாவில்
அறிமுகப்படுத்தப் பட்டபோது பள்ளிகளில் இலவசமாகவும், மிக்குறைந்தவிலையிலும்
கொடுக்கப்பட்டது. இன்று உலகளவில் சாப்பிடுவோரில் இந்தியா 4
வது இடத்திலிருக்கிறது( ஆண்டுக்கு(54 கோடி
பாக்கெட்கள்விற்பனை) இந்தியாவில் இப்போது மேகியை பயன்படுத்தியவர்கள் இரண்டாம்
தலைமுறையினர்.
புரியாத கேள்விகள்
அதரடியாக வெடித்திருக்கும் இந்தப் பிரச்சனை அடுக்கடுக்கான
பல கேள்விகளை எழுப்புகிறது. எப்படி இத்தனை நாள் இது அனுமதிக்கப்பட்டது? எந்த மத்திய மாநில
அரசுகளின் உணவு தரகட்டுபாட்டு நிறுவனங்களுமே இதை ஏன் சோதனையிடவில்லை.?
30 ஆண்டுகளுக்கு மேல் விற்கபட்டுகொண்டிருக்கும் ஒரு சர்வ தேச
நிறுவனத்தின் தயாரிப்பில் காரீயம் போன்ற ஆபத்தான பொருட்களைக் கலக்கப்படுவதை
அனுமதிருப்பார்களா? லெட்(lead) கலந்திருப்பதாகச்
செய்திகள் வெளியாகியிருக்கின்றன. (இதை ஈயம் சிலபத்திரிகைகள்
எழுதுகின்றன.) உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது Tin ஆகும். ஈயம் உடலுக்குக் கெடுதல் செய்யக்கூடியது அல்ல. Lead அதாவது காரீயம் விளைவுகளை ஏற்படுத்தகூடியது. . காரீயம் நுண்ணியத் துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது
உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து
உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும் காரீயம்
குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். மூளை வளர்ச்சி ,
உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். என்கிறார்கள் வல்லுநர்கள்
.அப்படியானல் இத்தனைநாள் இதை உண்டவர்கள் பக்க விளைவுகளினால் பாதிக்கப்
பட்டிருக்கவேண்டுமே.? போன்ற பல கேள்விகளை எழுந்திருக்கிறது..
சோதனைகளின் முடிவு வந்தால் தான் இவற்றுக்கு எல்லாம் விடைகிடைக்கும்.
கலப்படம் மேகியில் இருக்க வாய்ப்புக் குறைவு. சுவைக்காக
அதனுடன் தரப்படும் மசாலாவில் இருக்கும் சோடியம் குளுட்டாமெட்(எஸ் ஜி எம்) என்ற உப்பான அஜினோமோட்டாவில்தான்
இருக்கிறது. இது பலநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள். இந்தச் சுவைகூட்டி பேக் செய்துவரும் சாஷே கவர்களிலும் இருக்கலாம் என்பது சிலரின் கருத்து.
எங்கள் நிறுவனம் தரத்திற்கு உலகளவில் நற்பெயர் பெற்ற
நிறுவனம் நாங்கள் இந்த மசாலாவை இந்திய பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கிறோம்.
அதில் சேர்க்கப்படும் வெங்காயம் ,
மஞ்சள் போன்றவை விளையும் மண் காரீய தாது
நிரம்பியவையாகவிருக்கலாம் என்கிறது நெஸ்லே.
தயாரிப்பில் பயன்படுத்தும் பொருட்களின் தரத்திற்கும்
அவர்கள்தானே பொறுப்பு. இது தப்பிக்க முயற்சிக்கும் தந்திரம் எனச் சீறுகிறார்கள்
சமூக ஆர்வலர்கள்.
இந்தச் சிக்கலில் நாம் புரிந்துகொள்ளும் சில விஷயங்கள்.
1)
இம்மாதிரி விஷயங்களைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள்
இல்லை .மத்திய அரசிலிருந்து நகராட்சி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான
அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் நாடு முழுவதுக்குமான சோதனை, தடைகளுகு
சட்டம் இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்கத்
தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது.
2)
பிரபலங்கள் விளம்பரங்களில் நடிப்பது அவர்கள் விளம்பரப்படுத்தும்
பொருட்களின் தரம் குறித்து பேசுவது அதற்கு உத்தரவாதம்
அளிப்பது போல் ஆகாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.. ஆம் என்றால்
பத்திரிகைகளில் வருகின்ற விளம்பரங்களில் இடம் பெறுகின்ற பொருட்களுக்கு அந்தப்
பத்திரிகை உத்தரவாதம் அளிப்பதாகக் கருதப்படும் நிலையும்
எழும்.
இந்த மோசமான விளவில் ஏற்பட்டிருக்கும் ஒரு நன்மை மக்களிடம்
ரெடிமேட் உணவு வகைகள் பற்றி எழுந்திருக்கும் விழுப்புணர்ச்சி. பாக்கெட்களில் விற்கப்படும்
எல்லாவித உணவுவகைகளை ஆய்வுசெய்ய ஆணையிடவும், தடைசெய்யவும் ,நமது பாரம்பரிய உணவுவகைகளை ஊக்குவிக்கவும் அரசுக்குக் கிடைத்திருக்கும்
அருமையான தருணம். இது
தவறவிடாமல்
மக்களின் உடல் நலம் கருதி அதை உடனே செய்வார்களா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளிக்காலங்களில்
நானும் என் அண்ணனும் ஸ்கூலிலிருந்துவந்தவுடன் மேகி சாப்பிட்டவர்கள்.
அப்போது இதுபோல் மசாலாக்கள் வராது. வீட்டில் தயாரிக்கப் படும் சைட் டிஷ் தான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மேகியுடன் வரும் டேஸ்ட்
மேக்கர்களில் கெமிகல்கள் இருப்பதைப் பற்றிய செய்திகளைப் பார்ப்பதால். என்
குழந்தைகளுக்கு நான் மேகி தினசரி கொடுப்பதில்லை. நண்பர்கள்,
டிவி விளமபரங்களினால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கேட்டாலும் ஒரு சில
நாட்களில் மட்டும் தருவதுண்டு. நான் மட்டுமில்லை என்போன்ற பல தாய்மார்களும்
அப்படித்தான். செய்கிறார்கள். ஆனால் 9 வயதுக்கு மேல் பள்ளி
செல்லும் குழந்தைகள் பள்ளி கேண்டினிலேயே வாங்கிச் சாப்பிடுவதைப் பெற்றோர்களினால்
கட்டுப்படுத்தமுடியாது. மலிவான விலையில் கிடைக்கும் அதன் ருசிக்கு அடிமையாகி
விடுகிறார்கள். அதனால் இந்தத் தடையை வரவேற்கிறேன்.
பழக்கத்திலிருந்து மாற இது ஒரு வாய்ப்பு. நல்ல தரமான அரிசியில் தயாரிக்கப்பட்ட நூடுல்கள் மற்றும் நிறையச் சிறுதானிய வகைகள் பல
வடிவங்களில் கிடைக்கிறது, அதனுடன் காய்கறிகள் சேர்த்துக்
குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 2 நிமிடத்தயரிப்பு என்பது பெரிய
விஷயமிலை. தன் குழந்தைகளுக்குத் தரமானதைத் தர எந்த அம்மாவும் நேரத்தை ஒரு பெரிய
விஷயமாகக் கருத மாட்டார்கள்.
(திருமதி சுபா குகன்
-குடும்பத் தலைவி)
அஜினோ மோட்டோ என்பது ஒரு வகை உப்பு. மிக மலிவானது. சீன
உணவுவகைகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தபட்டுவருகிறது. ஆனால்
அவர்கள் 20
பேருக்கான உணவில் ஒரு சிட்டிகை என்ற மிகமிகக் குறைந்த அளவிலேயே
பயன்படுத்துவார்கள். காலப்போக்கில் உலகெங்கும் பரவிய இதை மசாலாக்களில்
பயன்படுத்தினால் அதன் மற்ற இடுபொருட்களின் அளவு குறைகிறது என்பதை உணர்ந்தவுடன்
லாபநோக்கில் அதிக அளவில் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நீண்ட நாட்களுக்குப்
பின்னர் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இதை இந்தியாவில் தடை செய்ய முயன்று
தோற்றுவிட்டார்கள். இது மேகியில் மட்டுமில்லை. எல்லா ரெடிமேட் உணவுகளிலும்,
நாம் ஹோட்டலில் விரும்பி சாப்பிடும் எல்லா உணவிலும் இருக்கிறது. அது
அஜினோ மோட்டோவா அல்லது அந்தவகையில் வேறு பொருளா என்பதையும் அது எந்த அளவில்
இருக்கிறது என்பதையும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தேசிய அளவில் அதிநுட்ப
வசதிகளுடன் பரிசோதனைச் சாலைகளும், தடைசெய்யச்
சட்டங்களும் இல்லாததுதான் நம் துரதிர்ஷ்டம்
(திருமதி ஸ்மித்தா
குட்டையா -உணவுக் கலை வல்லுநர்)
மேகி சிக்கல் வெடித்ததிலிருந்து டீவிட்டர்லும் முகநூலிலும்
பரவிய கிண்டல்கள்
- “ மேகி சாப்பிடுவது உடலுக்குக்
கேடு என்ற வரிகளுடன் சென்சார் தீபீகாவின் விளம்பரத்தை அனுமதிக்கலாம்
- என் ஆபிசில் ஒருவர்மேகி
சாப்பிடுகிறார். அவர் தற்கொலை முயற்சியில் இருக்கிறார் எனப் போலீசுக்கு போன் செய்ய
வேண்டுமா?
- சீனாவிலிருந்து வரப்போகிற ஒரு
புதுமேகிக்காக மாரக்கெட்டை ரெடி பண்ணுகிறார்கள். இது பிரதமர் மோடியின் சீன
பயணத்தின் விளைவாக இருக்குமோ?
- கமல்ஹாசன் பஞ்சதந்திரம்
படத்திலே சொன்னார் .மேகியின் பழக்கம் வேண்டாம் நல்லதில்லை. என்று