காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா மிகக் குறுகிய காலத்தில் பல நூறு கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துவிட்டார் - புதுக் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கு முன்னால் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டிருக்கும் சில அதிரடித் தகவல்களில் ஒன்று இது. இந்தியாவின் மிகப்பெரிய கட்டடம் கட்டும் நிறுவனமான டிஎல்எஃப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி மாநில அரசுகள் செய்த உதவிகளுக்கு பிரதிபலனாக ராபர்ட்டுக்கு எளிதில் பணம் பண்ணும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குற்றச்சாட்டின் பின்னணி.
இந்த விஷயம் அரவிந்த் கெஜரிவாலின் கண்டுபிடிப்பு அல்ல. கடந்த ஆண்டே எகனாமிகஸ் டைம்ஸ், ராபர்ட் ரியல் எஸ்டேட் பிஸினசில் நுழைந்து சத்தமில்லாமல் பணம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த விஷயத்தை அவர்கள் தொடராதது மட்டுமில்லை மீடியாவும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. இப்போது அரவிந்த், தான் தொடங்கப்போகும் கட்சிக்கு வலுசேர்க்கும் ஓர் ஆயுதமாக இதனைக் கையில் எடுத்திருக்கிறார். அவரும் இதை ஏன் அன்னா ஹசாரேவுடன் இருந்தபோது பேசாமல், அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறார் என்று புரியவில்லை.
*
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முர்தாபாத் நகரம் பித்தளை கைவினைப் பொருள்களின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம். அந்தப் பொருள்களை வாங்கி விற்கும் ஒரு சிறு வியாபாரி ராஜேந்திர வாத்ரா. அவரது மனைவி மௌரீன் ஒரு ஸ்காட்டிஷ் கிருத்துவர். இவர்களது மூத்த மகன் ராபர்ட். டெல்லி பள்ளியில் படிக்கும் போது ஜூனியர் மாணவியாக அவருக்கு அறிமுகமானவர் பிரியங்கா. அப்போது அவருக்கு வயது 13. நட்பாக தொடங்கி மலர்ந்த இவர்கள் காதல் 1997ல் திருமணத்தில் முடிந்தது. மிகச் சாதாரண குடும்பப் பின்னணியுள்ள, அப்படியொன்றும் ஸ்மார்ட் ஆக இல்லாத ராபர்ட்தான் பிரியங்காவின் தேர்வு என்பது அப்போது பலருடைய புருவங்களை உயர்த்தியது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீடியாவின் வெளிச்சம் விழாத அமைதியான வாழ்க்கை அவர்களுடையது. இரண்டு குழந்தைகள். மண வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் சொந்த குடும்பத்தில் குழப்பங்களும் சோகங்களும் தொடர்ந்தன. பிரியங்காவை ஏற்காத ராபர்டின் தந்தை, இவர் என் மகன் இல்லை என அறிவித்தார். சகோதரி ஒரு கார் விபத்திலும், சகோதரன் மர்மமான முறையிலும் இறந்தார்கள். தந்தை தற்கொலை செய்துகொண்டார். தனது ஏர்டெக்ஸ் என்ற சிறிய நிறுவனம் மூலம் ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் பேஷன் நகைகளை வாங்கி ஏற்றுமதி செய்துவந்தார் ராபர்ட்.
அரசியல்? தகுந்த நேரம் வாய்த்தால், அவசியப்பட்டால் வருவேன் என்று சொல்லி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு உத்தரப் பிரேதச மாநிலத் தேர்தல் பிர
சாரத்துக்குச் சென்ற ராபர்ட், பிரியங்காவுடன் பல இடங்களில் கூட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது டைம்ஸ் இந்தியாவின் நிருபர் பிரியங்காவிடம் அவரது கணவரின் அரசியல் பிரவேசம் பற்றிக் கேட்டபோது, அவர் சொன்ன பதில் இது. ‘ராபர்ட் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேன். தொழிலை மாற்றி அரசியலுக்கு வந்தால் அதிலும் வெற்றிபெறுவார். தொழிலை மாற்றிக்கொள்வதில் தவறேதுமில்லையே!’ ராபர்ட்டை மீடியா மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது அப்போதிருந்துதான்.
திருமணத்துக்குப் பின் 1997ல் தொடங்கப்பட்ட ஏர்டெக்ஸ் நிறுவனம் பெரிய அளவில் வளரவில்லை. ஆனால் 2007ல் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் இவர் தொடங்கிய நிறுவனங்களின் வளர்ச்சி ஆச்சரியமானது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் இந்த நிறுவனங்கள் வாங்கிய 29 சொத்துகளின் மதிப்பு 300 கோடிக்கும் மேல். எப்படி இது சாத்தியமாயிற்று, என்பதைப் புரிந்துகொள்ள டிஎல்எஃப் நிறுவனத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
*
கடந்த 40 ஆண்டுகளாக டெல்லியின் புறநகர் பகுதியில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி விற்கும் தொழில் செய்துவரும் டிஎல்எஃப் இன்று இந்தியாவின் குடியிருப்புப் பகுதிகளை கட்டும் நிறுவனங்களில் முதல் நிலையில் இருக்கிறது. டெல்லியில் மட்டும் 23 காலனிகளை உருவாக்கியிருக்கும் இவர்களின் வளர்ச்சி எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தடைப்படாத ஒரு விஷயம். இன்று டெல்லியைத் தாண்டி நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 24 நகரங்களில் தங்கள் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியின் சுற்றுப்புற பகுதிகள் நேஷனல் காப்பிடல் ரீஜன் என்று அழைக்கப்படும் சிறப்பு அந்தஸ்து உள்ள பகுதி. கடந்த சில ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்த பகுதியும்கூட. அதில் 60 சதவிகிதத்துக்கு மேல் கட்டடங்களை உருவாக்கியவர்கள் டிஎல்எஃப் நிறுவனத்தினர். இவர்கள் ஒரு ப்ராஜெக்டைத் தொடங்கினால் அருகில் இருக்கும் பெரிய நிலப்பகுதியை அரசிடமிருந்து சலுகை விலையில் பெற்றுவிடுவார்கள். பிறகு, சிறிய பகுதிகளை தனியாரிடமிருந்து மார்க்கெட் விலைக்கு வாங்குவார்கள்.
ராபர்ட் வாத்ரா 2007 முதல் 2010 வரை ஐந்து புதிய கம்பெனிகள் தொடங்கியிருக்கிறார். அதில் ஒன்று ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி. இந்த நிறுவனம் சீக்காபூர் என்ற இடத்தில் டிஎல்எஃப் எழுப்பும் ஓர் ஆடம்பர குடியிருப்புக்கு அருகில் 3.5 ஏக்கர் நிலத்தை 12.39 கோடிக்கு வாங்கி அதை டிஎல்எஃப் நிறுவனத்துக்கு நல்ல விலைக்கு விற்கிறது. நிலம் வாங்கியதிலோ விற்றதிலோ ஆச்சரியமில்லை. ஆனால் வெறும் 50 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் எப்படி இந்த நிலத்தை இவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடிந்தது? அதைவிட ஆச்சரியம் அந்த நிலத்தை வாங்க டிஎல்எஃப் கொடுத்த விலை 50 கோடிக்கும் மேல். ஒரே இரவில் ராபர்ட் வாத்ராவின் நிறுவனத்துக்கு கிடைத்த லாபம் 37 கோடிகளுக்கும் மேல்.
எங்கள் நிறுவனம் ஒரு லிமிடெட் கம்பெனி. அதன் ஆண்டு அறிக்கைகள் ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எவரும் பார்க்கலாம் என்று வாத்ரா அறிவித்திருந்தார். அதனை ஆராய்ந்த தி ஹிந்து போன்ற பத்திரிகைகள் அதிர்ச்சியான தகவல்களைத் தந்தன. நிலம் வாங்க திரட்டப்பட்ட 12.39 கோடியில் 7.94 கோடி டெல்லி கார்ப்பரேஷன் வங்கியின் ஃபிரண்ட்ஸ் காலனி கிளையில் ஓவர் டிராஃப்டாக பெறப்பட்டதாகவும் மீதியில் கணிசமான பகுதி ஏர்டெக்ஸ் கம்பெனியிலிருந்து கடனாகப் பெற்றதாகவும் ஸ்கைலைட் கம்பெனியின் பாலன்ஸ் ஷீட்டில் சொல்லப்பட்டிருந்தது. வெறும் 50 லட்சம் முதலீடு உள்ள கட்டுமானத் தொழிலில் எந்த முன் அனுபவும் இல்லாத ஒரு நிறுவனத்துக்கு எந்தவிதமான செக்யூரிட்டியும் இல்லாமல் எப்படி ஒரு வங்கி இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக வழங்கியது என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கார்ப்பரேஷன் வங்கி அதை மறுத்தது.
மீதி பணத்தை கடனாகத் தந்த ஏர்டெக்ஸ் நிறுவனத்தின் அந்த ஆண்டின் மொத்த லாபமே சில லட்சங்கள் தான். அப்படியானால் பணம் எங்கிருந்து வந்தது? யாருடையது? ஒரு வங்கியின் தலைவர் தரும் தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு அறிக்கை தவறானதா? அதை தணிக்கை செய்து ஒப்புதல் அளித்த ஆடிட்டர்கள் தவறு செய்துவிட்டார்களா? ஆடிட்டர்கள் ஒப்பமிடும் அறிக்கைகளில் எப்போதும் ‘எங்களுக்குத் தந்த தகவல்களின் படி’ என்ற தற்காப்பு வாசகம் இருக்கும். ஆனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான ஆவணங்களைக்கூட சோதிக்காமல் கையெழுத்திட்டிருப்பது மற்றொரு ஆச்சரியம். இத்தனைக்கும் ஆடிட் செய்திருப்பது குரானா என்ற பெரிய தணிக்கை நிறுவனம்.
இதைப்போல தொடர்ந்து எல்லா நிறுவனங்களின் மூலமும் பல இடங்களில் நிலங்களும், பிளாட்களும் வாங்கி பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கிடைத்த லாபங்களிலிருந்து டெல்லியிலுள்ள ஓர் ஆடம்பர ஹோட்டலின் 50% பங்குகளை வாத்ரா வாங்கியிருக்கிறார். இதுவும், மற்ற ஆடம்பர அடுக்குமாடி வீடுகளும் டிஎல்எஃப் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைவான விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. மார்க் கெட்டில் விற்பதைவிட இவருக்கு மட்டும் ஏன் இப்படி குறைந்த விலைக்கு டிஎல்எஃப் விற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
*
டிஎல்எஃப் என்ன சொல்லுகிறது ? ‘தவறு எதுவும் நடக்கவில்லை. இவர்கள் குற்றம் சொல்வதுபோல் இந்த மாநில அரசுகளிடமிருந்து எந்தச் சலுகைகளையும் நாங்கள் பெறவில்லை. ஆசியாவின் மிகப்பெரிய கட்டட நிறுவனமான நாங்கள் மார்க்கெட்டில் பலரிடம் நிலம் வாங்குவதைப்போலதான் இந்த வியாபாரத்தையும் செய்திருக்கிறோம்.’ இது எந்த அளவுக்கு உண்மை எனபதை ராபர்ட் வாத்ராவின் கடந்த 5 ஆண்டு சொத்து விவரங்கள் சொல்லும்.
2008ல் 7.95 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு 2010ல் 350% உயர்ந்து 60.53 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது அவர் நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தரும் தகவல். மார்க்கெட் மதிப்பு 300 கோடிக்கும் மேல் இருக்கும். இந்த நிறுவனங்களின் வருடாந்திர கணக்கு அறிக்கையில் காட்டப்பட்டிருக்கும் வருமானம் வங்கி டெபாசிட்டில் இருந்து பெறபட்ட வட்டி பணம் மட்டுமே. ஆனால் டெபாசிட் எவ்வளவு இருக்கிறது எனபது சொல்லப்படவில்லை. எந்த ஒரு தொழிலும் செய்யாமல் வருமானமும் லாபமும் இல்லாமல் இந்த நிறுவனங்கள் சொத்துகளை வாங்கி குவித்திருக்கிறது.
தேவையான பணத்தைக் கடனாக அதுவும் வட்டியில்லாமல் டிஎல்எஃப் நிறுவனத்திடமிருந்து பெற்றதாக வாத்ராவின் நிறுவனம் சொல்கிறது. நாங்கள் கொடுத்தது அட்வான்ஸ் பணம் தான். வட்டியில்லா கடன் இல்லை என்று சொல்லும் டிஎல்எஃப் அந்த நிலங்களை ஏன் மிக அதிக அளவில் விலை கொடுத்து வாங்கினார்கள் எனபதைச் சொல்லவில்லை. நிலம் வாங்க அட்வான்ஸ் கொடுத்து அதில் வாங்கிய நிலத்தையே அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கும் ‘புத்திசாலி’ கம்பெனி டிஎல்எஃப் என்பதை நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
எல்லா நிறுவனங்களிலும் ராபர்ட்டும் அவரது அம்மாவும் டைரக்டர்களாக இருக்கிறார்கள். யார் கொடுத்த அட்வைஸோ எதிலும் பிரியாங்கா டைரக்கராக மட்டுமில்லை பங்குதாரராகவும் இணைத்துக்கொள்ளவில்லை. ஒரு நிறுவனத்திலிருந்து வாத்ரா பெறும் சம்பளம் ஆண்டுக்கு 60 லட்சம்.
இந்த நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளைப் படிக்க மிக வேடிக்கையாக இருக்கிறது. ‘நிறுவனத்துக்காகச் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியர் களுக்கு இயக்குநர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்’. ஆனால், அந்த அறிக்கையில் ஊழியர்களுக்கான சம்பளம் என்று எதுவுமே செலவினங்களில் காட்டப்படவில்லை. எனில், யாருமே இல்லாத நிறுவனத்தில் யாருக்கு இந்த நன்றி? அல்லது சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் சேவை செய்கிறார்களா?
2010ம் ஆண்டு 6 நிறுவனங்களில் ஒன்றில் லாபம் 244.98 லட்சம் என்றும் மற்ற 5 நிறுவனங்களில் மொத்த நஷ்டம் 3 கோடி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் மொத்த முதலீடுமே அழிந்து முதலீடே இல்லாத நிறுவனங்கள் இவை என்று அர்த்தம். ஆனால் 2011ம் ஆண்டு அறிக்கைகள் இந்தக் கம்பெனிகள் வாங்கிய சொத்துக்களின் மதிப்பு 72 கோடி என்கிறது. எந்த வருமானவரி அதிகாரியாலும் புரிந்துகொள்ள முடியாத விசித்திர கணக்கு இது.
அப்படியானால் ராபர்ட் செய்திருப்பது ஊழலா?
*
சட்டத்தின் பார்வையில் இது ஊழல் இல்லை. குறைவான விலையில் நிலம் வாங்கி அதை அதிக விலைக்கு விற்பது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு பிஸினஸ். நிலம் வாங்குவதற்காக கடன் வாங்குவதும் இந்த பிசினஸில் இருக்கும் நடைமுறைகளில் ஒன்று. வேண்டுமென்றே அதிக விலை கொடுப்பது வாங்குபவரின் விருப்பம். அவர் அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
அதே போல் ராபர்ட் வாத்ரா பதவியைத் துஷ்பிரயோகம் செய்தார் என்றும் சொல்ல முடியாது. காரணம், அவர் காங்கிரஸில் உறுப்பினரா என்பதுகூட தெரியவில்லை. சோனியா பதவியை பயன்படுத்தி இவர் ஆதாயம் பெற்றார் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் சோனியா எந்த அரசுப் பதவியிலும் இல்லை. விசாரணை நடத்தப்படவேண்டும் என குரல் எழுந்தபோது தனிப்பட்டவர்களின் விவகாரங்களை அரசு விசாரிக்க ஆணையிட முடியாது என அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துவிட்டார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சி செயலாளர்கள், காபினட் அமைச்சர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து தலைமைக்கு தங்கள் விசுவாசத்தை பறைசாற்றினார்கள்.
நாங்கள் இவ்வாறு செய்ய நிர்பந்திக்கப்பட்டோம் என்று டிஎல்எஃப் நிறுவனம் சொன்னால் மட்டுமே இது கிரிமினல் வழக்காக முடியும். தவறான பாலன்ஸ் ஷீட்டை சமர்ப்பித்து விட்டோம் என்று அறிவித்து திருத்தியதை சமர்ப்பிக்க கம்பெனி சட்டம் அனுமதிக்கிறது. பொது நல வழக்குகள் போடவும் எந்த முகாந்திரமும் இல்லை.
ஒன்று செய்யலாம். வாத்ராவின் நிறுவனங்களிடம் வருமானவரித் துறை இதுவரை கேட்காமலிருந்த விளக்கங்களை இனி கேட்கலாம். வழக்குகள் போடலாம். ஆனால் அதெல்லாம் காலத்தால் நீர்த்துபோகக் கூடியவை. ஒருவேளை நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை
அசோக் கெம்க்கா விவகாரம் உணர்த்திவிட்டது. ஐஏஎஸ் அதிகாரியான இவர் ஹரியானா மாநிலத்தின் பத்திரப் பதிவுத் துறையின் தலைமை அதிகாரியாக இருந்தவர். ராபர்ட் வாத்ரா பற்றிய செய்திகள் வெளிவந்ததும் அவருக்கும் டிஎல்எஃப் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற நில மாற்றத்தை ரத்து செய்யும்படி இவர் உத்தரவிட்டார். உடனே ஹரியானா அரசு இவரை இடமாற்றம் செய்தது.
ராபர்ட் வாத்ரா விவகாரத்தில் பாஜக அடக்கி வாசிப்பதிலிருந்து ஒன்று புரிகிறது. இந்த சலசலப்பு நீண்ட காலம் நீடிக்காது! காங்கிரஸ் செயலாளார் திக்விஜய் சிங் தன் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘ஆட்சியில் இருப்போரின் குடும்ப உறுப்பினர்களின் பிஸினஸ்களைப் பற்றிப் பேசி அதை அரசியல் பிரச்னை ஆக்குவதில்லை என்பது அரசியல் கட்சிகளிடையே இருக்கும் ஒரு மரபு. வாஜ்பாய் மற்றும் அத்வானியின் உறவினர்கள்மீது இப்படியான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், நாங்கள் அதை அரசியலாக்கவில்லை.’
அரவிந்த கெஜ்ரிவால் இப்போது பிஜேபியின் தலைவரைக் குறிவைத்தும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அதை மறுப்பதற்கான வாதங்களின் அடிப்படையிலேயே காங்கிரசும் பேசக்கூடும். அதனால் இது அரசியலில் எந்தப் பெறும் தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
ஆக, சட்டப்படி தவறுகள் நிகழவேயில்லை என்று எளிதில் நிரூபித்துவிடலாம். ஆனால், ஊழலை ஒழிப்போம் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸுக்கும், கூட்டணி ஆட்சிக்குத் தலைமையேற்றிருக்கும் சோனியா காந்திக்கும் தார்மிக ரீதியிலான கடமை இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. போபர்ஸ் ஊழலால் மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் மனைவி என்ற அளவில் இந்தக் கடமையின் கனம் இன்னமும் கூடிப்போகிறது.