25/7/10


பிரார்த்தனைகளின் சங்கமம்                                

சற்றே சரிவாக வழுக்கும் ஈரக்களிமண்ணாகயிருக்கும் அந்த பாதையில் மிக கவனமாக நம்மை நடத்தி  நதியின் கரையிலிருக்கும் படகுக்கு அழத்து செல்லுகிறார் அந்த முதியவர்.  செம்மண் நிறத்தில் ஒரு ஏரியைப் போல் சலனமில்லாமல்    அமைதியாகயிருக்கிறது கங்கை.  படகு  மெல்ல செல்லுகிறது பத்து நிமிடப் பயணத்தில் சட்டென்று  நதியின் நிறம் மாறுகிறது. அதன் வேகத்தை படகிலிருக்கும்  நம்மால் உணரமுடிகிறது. இங்குதான் யமுனை கங்கா மாதாவுடன் சேருகிறார்,  
கண்ணுக்கு தெரியாமல் சரஸ்வதி நதி  இணையும் சங்கமத்திற்கு இன்னும் போகவேண்டும் என்கிறார் படகுகாரார்.  வெளிர்நீல நீர் பரப்பில் அருகே செல்லும் சற்றே பெரிய படகுகளும் அதைத்தொட்டு   சிறகடித்துபறக்கும் வெள்ளைப்பறவைகளும் அந்த  காலைப்பொழுதை ரம்மியமாக்கின்றன. தொலைவில் நிற்கும் நிறைய படகுகள். அவற்றில் பறக்கும் பல வண்ண  கொடிகள்.
அருகில் போனபின் தான் அந்த இடம்தான்  திரிவேணி சங்கமம் என அறிந்துகொள்ளுகிறோம் .கங்கையும், யமுனையும், கண்ணுக்தெரியாத சரஸ்வதியும்  ஒன்றாக இணைந்து சங்கமிக்கும்  உன்னதமான இடம். இந்த இடத்தில் நீராடுவதும் வழிபடுவதும் மிகபுண்ணியம் என இந்தியாவின் எல்லா பகுதிகளிருக்கும் இந்துக்களாலும் போற்றப்படும் புனிதமான இடம்.. மாறுபட்ட திசைகளிலிருந்து வேகத்தோடு  நதிகள் இணையும்  அறுபது அடி ஆழமிருக்கும்,அந்த நடு ஆற்றில்  எப்படி நீராடமுடியும். என திகைத்துகொண்டிருக்கும், நாம் செய்யப்பட்டிருக்கும் எற்பாடுகளை பார்த்து அசந்துபோகிறோம். சங்கமம் என அடையாளம் காணப்பட்டிருக்கும் அரைகிலோ மீட்டர் பகுதியில் பல  பெரிய படகுகள் நங்குரமிடபட்டிருகின்றன. அவைகள் ஜோடிகளாக  இரண்டிற்குமிடையில் 6அடி இடைவெளி இருக்கும் வகையில் இரண்டு மூங்கில்களால் இணைக்கபட்டிருக்கின்றன. இந்த இடைவெளியில்  நாலு பக்கமும் பிடித்துக்கொள்ள வசதியான ஃபிரேமுடன் ஒரு சதுர மேடை தொங்குகிறது. கவிழ்த்து போடப்பட்ட  மேஜை போன்ற   தொட்டி. நதியின் உள்ளேமுழ்கியிருக்கும் இதை   இணைக்கும் நீண்ட நைலான் கயிறுகளை படகிலிருக்கும் உதவியாளார்கள் இயக்க   நதியில் மிதக்கும் அந்த குளிக்கும் மேடையில் இறங்கி  நாம் நீருக்குள் முழுகுகிறோம். முதல்  முழுகலில் பயம் தெளிந்து அமைப்பின் பாதுகாப்பு புரிந்திருப்பதால், பலமுறை ஆனந்தமாக முழ்கி திளைக்கிறோம். குளிக்கும்போது உள்ளே யமுனைநதிநீர்   மேல்பரப்பு செல்லும் திசைக்கு குறுக்காக பாய்ந்து செல்வதை உடல் நமக்குச்சொல்லுகிறது. வெளியே ஒரு படகில் பளபளக்கும் பித்தளை தட்டில் சாமந்தி பூக்களுடனும், பூஜை சாமான்களுடனும் காத்திருக்கும் பண்டா  ஈர உடைகளுடனேயே பிராத்தனை செய்ய அழைக்கிறார். பக்கத்து படகுகளில் அணிந்திருக்கும் சபாரி உடையின் மீதே பூணுலும், மாலையை அணிந்தமஹராஷ்ட்டியர், கைநிறைய வளையல்கள் அணிந்த ராஜஸ்தான் பெண்கள், பஞ்சகச்ச வேஷ்டியில் கையில் ஸ்படிக மாலையுடன்  தெனிந்தியர் என பலபேர். அந்த இடமே பிராத்தனைகளின்        சங்கமாகயிருக்கிறது.   மற்றொரு படகில் பக்கங்களும் மேற்கூரையும் பிளாஸ்டிக் துணியால் முடப்பட்ட டிரெஸ்சிங் ரூம். கண்ணாடி கூட வைத்திருக்கிறார்கள். அந்த படகின் நடுவில் குஷன்கள் இடப்பட்ட பெஞ்ச் நாற்காலியில் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் படகின் சொந்தக்காரர். அவரது ஆசனத்தின் பின் நிற்கும் கம்பத்தில்தான் கொடிபறக்கிறது. இது போல பல படகுகள். பல வண்ணகொடிகள்.  கரையிலிருந்து நம்மை அழைத்து வரும் சின்ன படகுகாரர்களுக்கு அவர்களின்  குரூப் அடையாளம் தெரிவதற்காக இந்த  கொடிகளாம். வருபவர்களுக்கு நல்ல வசதிகள் செய்துதரும் இந்த படகுக்காரர்கள் ஒடும் நதியில் பகுதிகளை பிரித்து பங்கிட்டு உரிமை கொண்டாடி சம்பாதிக்கும்  சாமர்த்தியசாலிகள். நீராடித்திரும்பும் போது பின் காலைப்பொழுதாகவிட்டதால்,யமுனைநதி நீரின் உயரமும் வேகமும் அதிகரித்திருப்பதால் படகு சீக்கிரமாக கரையைத்தொடுகிறது.

 மொகலாய கட்டிடக்கலையின் மிச்சங்களை ஆங்காங்கே அடையாளம் காட்டும் அலகாபாத் இந்தியாவின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று. பெரிய பல்கலைகழகம்,மாநில தலைநருக்கு வெளியே  துவக்கப்பட்ட ஹைகோர்ட் என பல கெளவரவங்களை பெற்றிருந்தாலும், நகரம் என்னவோ களையிழந்துதான் காணப்படுகிறது. பளபளக்கும் வண்ணத்துணியில்  பூ வேலைகளுடன் வட்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஆடம்பரமான  மேல்கூரையும் பின்திரையுமிட்ட சைக்கிள் ரிக் ஷாக்கள்களை ஒட்டும் சட்டையணியாத ரிக் ஷாகாரர்கள், மேற்கூரையில் பயணிகளுடன் மினிபஸ் போன்ற வினோதங்களை ரசித்தவண்ணம் விசாரித்து வழியறிந்து நாம் செல்லுமிடம் ஆனந்த பவன்.
பரந்த பசும்புல்வெளியின் மறுகோடியில் வெளிர்மஞ்சள் நிறத்தில்  நிற்கும் கம்பீரமான இந்த இரண்டு அடுக்கு மாளிகையில் தான், மூன்று தலைமுறையாக நேரு குடும்பத்தினர் வாழ்ந்திருக்கின்றனர். இந்திரா காந்தி இதை அரசுக்கு நன்கொடையாக தந்து அருங்காட்சியகமாகயிருக்கிறார். அண்ணல் காந்தியடிகள் பலமுறை வந்து தங்கியிருக்கும் இந்த மாளிகையின் அறைகளை அந்த காலகட்டதிலிருந்தது போல், பயன் படுத்திய பொருட்களுடன்  நிர்மாணிக்கபட்டிருக்கும் அறைகளைப் பார்க்கிறோம். மாடியில் .நேருவின் படுக்கை அறையில் அலமாரியிலிருக்கும் புத்தகங்களின் முதுகில் அச்சிடபட்டிருக்கும் பெயர்களைக்கூட படிக்க முடிகிறது. எழுதும் மேசையிலிருக்கும் பார்க்கர் பேனாவும், வெளிநாட்டு தயாரிப்பான சின்ன சூட் கேஸும் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.  இந்திராவின் எளிமையான அறை, அண்ணல் காந்தியடிகள் காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டத்தை நடத்திய இடம், எல்லாவற்றையும் பார்த்தபின் கிழே வரும் நம்மை, கவர்வது  கிழ்தளத்தின் வராண்டாவில், ‘இந்திராவின் திருமணம் நடைபெற்ற இடம்’ என்ற அறிவிப்புடனிருக்கும் ஒரு சின்ன மேடை. திருமணம், மிக எளிமையாக நடைபெற்றிருக்கிறது எனபதை கண்காட்சியிலுள்ள படம் சொல்லுகிறது.
 அல்லிதாடகம், அழகான பூச்செடிகள்,அருமையாக பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்த சூழலை ரசித்தவண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது,  முகப்பில் காவிவண்ணத்தில் நிற்கும்   ஒரு பெரியபாறையும், அதில் நேர்த்தியாக பொருத்தபட்டிருக்கும் பட்டயமும் தான். பட்டயதில்  “செங்கலாலும்,சுண்ணாம்பாலும் எழுப்பட்ட வெறும் கட்டிடம் மட்டுமில்லை இது. தேசத்தின் சுதந்திர போராட்டத்துடன் மிக நெருங்கிய உறவு கொண்டது. இதன்  சுவர்களக்கிடையே மிகமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.” என்ற பித்தளை  எழுத்துகள் மின்னுகின்றன.
மனதைத் தொட்ட மணியான வாசகங்கள்.
 படங்கள் ரமணன் (அன்னை இந்திராவின் திருமணப்படம் அருங்காட்சியகத்தில் வாங்கியது)
(25.07.10)




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்