15/8/12


அழுகையில் அசாம்

(புதிய தலைமுறை19/8/12 கவர் ஸ்டோரிக்காக எழுதியது)

 

 

ஒரே இரவில் 400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள். இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன. என்ன நடக்கிறது அசாமில்?
ஒரே இரவில்-400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள்.
இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன.
கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தார்கள்.
இதையடுத்து அசாம் மாநிலத்தின் எல்லாப் பகுதியிலும் ரயில்களும் பஸ்களும்  ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஊர் திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டவர்கள் 25 ஆயிரம் பேருக்குமேல்.
ஊரடங்கு சட்டத்தின்கீழ் பல நகரங்கள்
போர்க்களத்திற்குப் போவதுபோல ராணுவம்  நகரங்களில் வந்திறங்கியது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இத்தனை பெரிய அளவில் ஓர் இனக்கலவரம் நிகழ்ந்ததில்லை. வடகிழக்கு இந்திய மலைப்பகுதிகளில் ஏதோ ஒரு நாள் சிறு நடை நடந்தவர்கள் கூட அவற்றின் சலசலக்கும் நதிகள், மேலே வந்து விழும் சிறு தூறல், மெல்லக் கவியும் மஞ்சு, கம்பீரமான அந்த மலைகள் இவற்றில் தன்னை இழக்காமல் இருக்க முடியாது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள் கூட அந்தப் பகுதியின் வரலாற்றை வாசிக்க நேர்ந்தால் மனதில் ஓர் எழுச்சி பிறக்கும். அந்தப் பகுதியின் முக்கிய மாநிலமான அசாமில் இன்று இனப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
என்ன பிரச்சினை?
ஜூலை 20ம் தேதி கோக்ரஜாஹர் என்ற ஊரிலுள்ள பி.கே. சாலை என்ற நெடுஞ்சாலையில் போரோலாந்து விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேரை, இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். போரோலாந்து விடுதலைப்புலிகளுடன் பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

யார் இந்த விடுதலைப்புலிகள்?

அதைப் புரிந்துகொள்ள அசாமை சற்று ஆழ்ந்து ஊடுருவிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 350 இனக்குழுக்களைச் சேர்ந்த மூன்றரைக் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தப் பகுதியோ, மியான்மர், சீனா, பூடான், வங்கதேசம் என்ற நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியின் எல்லைகளில் 98 சதவிகிதம் இந்த அண்டை நாடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது. 2 சதவிகிதம்தான் இந்தியப் பகுதிகளோடு இருக்கிறது. இந்த எல்லா நாடுகளும் நிலத்தால் பிணைக்கப்பட்டவை. அசாம் மக்கள் அவ்வப்போது சொல்வதுபோல அவர்களுக்கு, ‘இந்தியாவிற்குப் போவதைவிட வங்கதேசத்திற்குப் போவது எளிது’.
350 இனக்குழுக்கள் என்கிற விஷயம் மானுடவியல் ஆராச்சியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால், நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு அது பெரும் தலைவலி. ஏதேனும் ஒரு குழுவை திருப்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்ற ஐந்து குழுக்களின் கோபத்தை சம்பாதித்துவிடும்.

அசாமில் உள்ள இந்த இனக்குழுக்களில் முக்கியமானது போரோ (ஆங்கிலத்தில் Bodo என எழுதப்படும் இந்தக் குழுவின் சரியான உச்சரிப்பு இதுதான்). இனக்குழுவினர் என்றால் ஏதோ தோலாடையும், இறகுத் தொப்பியும் அணிந்த காட்டுவாசிகள் என நினைத்து விடக் கூடாது. இவர்கள் சமவெளியில் வாழ்கிற பழங்குடி மக்கள். தங்களுக்கென தனி மொழி, கலாசாரம்,வழிபாட்டு முறைகள் கொண்ட இனக் குழுவினர் இவர்கள். வங்க மொழி, பர்மீய மொழி இவற்றின் வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதி வந்த இவர்கள், அண்மைக்காலமாக தேவநாகரி வரிவடிவங்களைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். நெல், தேயிலை இவற்றைப் பயிரிடும் முறைகள், பன்றி, கோழி வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு இவற்றை அசாமில் அறிமுகப்படுத்தியவர்களும் இவர்கள்தான்.
அசாம் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் அளவிற்கு உள்ள இந்தக் குழுவினர் பிரம்மபுத்ராவின் வடகரையில், பூட்டான் மலைச்சாரலில் அமைந்துள்ள பகுதிகளில் கணிசமாக வசிக்கிறார்கள். தாங்கள் வசிக்கும் பகுதியை போரோலாந்து என்று அழைக்கிறார்கள். கோக்ரஜாஹர் என்ற நகரம்தான் இந்த போரோலாந்தின் தலைநகர்.
இந்தப் பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தது. உயர்கல்வி நிலையங்கள், வெகு தொலைவிலுள்ள குவாஹாத்தி, ஷில்லாங், திப்ரூகர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன. அவ்வளவு தொலைவு சென்று படித்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. எஸ்.டி. பிரிவின்கீழ் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது என்றாலும் பல பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் அந்த இட ஒதுக்கீட்டினால் அவர்களுக்குப் பலன் கிடைக்கவில்லை. அசாம் மொழி பேசும் மக்களே வேலைகளை ஆக்ரமித்துக் கொள்வதாக இவர்கள் நினைத்தார்கள். அதனால், மாணவர்கள் கொதிப்போடு இருந்தார்கள்.
அவர்களுக்கு முந்திய தலைமுறையினர், 1960களில் தங்களது மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களை, ‘உதயச்சல்என்ற யூனியன் பிரதேசமாகப் பிரிக்கக் கோரி அரசியல் கட்சி அமைத்துப் போராடினர். ஆனால், மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம், இதேபோன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய வேறு ஒரு பழங்குடி மக்களுக்காக அசாமிலிருந்து பிரித்து மேகாலயா என்ற மாநிலத்தை உருவாக்கியது.
ஆத்திரமடைந்த போரோ மக்கள், 1987ம் ஆண்டு, ‘அசாமை இரு சமபாதிகளாகப் பிரிஎன்ற முழக்கத்துடன் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர். உபேந்திரநாத் பிரம்மா என்பவரின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள். போரோ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு 1993ம் ஆண்டு போரோ மக்கள் வாழும் பகுதிகளின் நிர்வாகத்தை, அசாம் மாநிலத்திற்குள்ளேயே தன்னாட்சி உரிமைகள் கொண்ட போரோ டெரிட்டோரியல் கவுன்சில் (BTC) வசம் ஒப்படைத்தது மத்திய அரசு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது பட்டியலின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில் சட்டமன்ற, நிர்வாக, நீதித்துறை அதிகாரங்கள் கொண்டது. மாநில அரசின் சட்டங்களோ, மத்திய அரசின் சட்டங்களோ, இந்த கவுன்சிலின் அனுமதி இல்லாமல் இந்தப் பகுதியில் செல்லாது. மலைவாழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவின்கீழ் முதன் முதலில் இடம் பெற்ற சமவெளிப் பழங்குடியினர் போரோக்கள்தான்.

முரண்பாடுகளால் மோதல்

முரண்-1

நாளடைவில் அகதிகளாக இங்கு வந்து குடியேறிய இஸ்லாமியர்களின் ஜனத்தொகை மெல்ல மெல்லக் கூட ஆரம்பித்து இன்று மாநில ஜனத்தொகையில் அவர்கள் 50 சதவிகிதத்துக்கும் மேல். இவர்களில் பலர் சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள். போரோ மக்கள் அதிகம் வாழும் பகுதியிலும் இவர்களது எண்ணிக்கை போரோ மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது.
இப்போது அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் மூன்றிலொரு பகுதியினர்தான் போரோ மக்கள். மற்றவர்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல். ஆனால் ஆட்சி அதிகாரம், போரோ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிடிசியிடம் இருக்கிறது. இதனால் போரோ இனத்தைச் சேராத மக்களிடம் ஒருவித அச்சமும் சங்கடமும் நிலவுகிறது. அதனால், அவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களை பிடிசியின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதே சமயம் போரோக்கள் தங்களது அதிகாரம் பறி போய்விடுமோ எனப் பதட்டமடைகிறார்கள் .

முரண்-2

இந்தப் பகுதியிலுள்ள நிலங்கள் போரோ இனத்தவருக்கு என  ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் மற்றவர்கள் நிலம் வாங்கத் தடையில்லை. சிறுபான்மை சமூகத்தினர் மெல்ல மெல்ல போரோக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை வாங்க ஆரம்பித்து சில கிராமங்களை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். எந்தக் காரணத்திற்காக பிடிசி உருவாக்கப்பட்டதோ அந்த மூல நோக்கத்தையே இது அர்த்தமற்றதாக்கிவிட்டது என போரோக்கள் குமுறுகிறார்கள்.
நிலம் வாங்குவது தடை செய்யப்படாததால், அண்டை மாவட்டத்திலிருந்து இந்த மாவட்டத்திற்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுக்க அண்டை மாவட்டத்தின் எல்லை மூடி, சீல் வைக்கப்பட வேண்டும் என போரோக்கள் கோருகிறார்கள்.
இந்த மாவட்டங்களில்தான் இப்போது வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அந்தியர் தூண்டுதலா?

இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்களாதேசத்திலிருந்து ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் உதவுகிறார்கள் என்று போரோக்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், அரசு அதை மறுத்து வருகிறது.
இந்தப் பகுதியில் இத்தனை கடுமையான இனக் கலவரம் மூண்டிருப்பது எங்கோ வெகு தொலைவில் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் வேண்டுமானால் பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது பதற்றம் நிறைந்த ஒரு சென்சிட்டிவான பகுதி, அதுவும் அண்டைநாடுகளால் சூழப்பட்டுள்ள பகுதி என்பது அரசுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியும் அது அலட்சியமாக இருந்து விட்டது. காரணம்? வாக்கு வங்கி அரசியல். யார் மீதாவது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அந்த வகுப்பினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோமோ என்ற அச்சம் சார்ந்த அரசியல் நோக்கு. இப்படியே போனால்-
அரசியல்வாதிகள் வாக்குகளைக் காப்பாற்றிக்கொள்ள நாம் தேசத்தையே இழந்து விடும் நாள் அதிக தொலைவில் இல்லை.
 ரமணன்


2 கருத்துகள் :

  1. கி. செல்வ ராஜ் கிடாரம் கொண்டான்17 ஆகஸ்ட், 2012 அன்று PM 2:24

    தெளிவான பின்னணி
    கவ்ர் ஸ்டோரியில் அங்கு வெடித்த இனக்கலவர்த்தின் பின்ன்னணியை மிகத் தெளிவாகவிளக்கியிருந்தீர்கள். அரசியல் வாதிகள் வாக்குகளைக் நாம் தேசத்தையே இழந்துவிடும் நாள் தொலைவில் இல்லை என்ற வேதனை வரிகளை படித்தபோது ஒரு சுதந்திர நாட்டில தான் வசிக்கிறோமா என்ற கேள்வி எழுந்தது.

    பதிலளிநீக்கு
  2. கோ. தமிழரசன் செஞ்சி17 ஆகஸ்ட், 2012 அன்று PM 2:28

    அட்டைப் படத்தில் அழுதுகொண்டிருக்கும் இளம் பெண்மணியின் முகமே அவ்ர்களின் துயரத்தை ஆழமாக பதிவு செய்தது.கட்டுரை படித்தவர்களையெல்லாம் நெகிழச்செய்தது

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்