23/9/12


மனது வைத்தால் நிச்சயம் மாற்றம் இங்கே சாத்தியம்

புதியதலைமுறை 20/9/12 இதழ்






இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்







இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்

குஜராத் மாநிலத்தில் ஒரு சிறு கிராமம். அங்கிருந்த விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை. தங்களது பசு, எருமை மாடுகளிடமிருந்து கறந்துகொண்டு வரும் பாலை போல்சன் டைரி என்ற நிறுவனத்திடம் விற்பனைக்காக ஒப்படைப்பார்கள். ஆனால் பணம் வராது. காரணம், விற்பனைக்காக மும்பைக்கு அனுப்பப்படும் அந்தப் பால் மும்பை போய்ச் சேர்வதற்குள் திரிந்துவிடும். கெட்டுப்போன பாலுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

அந்த மக்களுக்கு உதவ விரும்பினார், சர்தார் வல்லபாய் படேலின் சீடரான திருபுவன்தாஸ் படேல். அந்த மாவட்டத்தில் இருந்த விவசாயிகளைக் கொண்டு கூட்டுறவுப் பால்பண்ணை ஒன்றை உருவாக்கினார். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. அங்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டார். ‘பாலை நீங்கள் பதப்படுத்தினால்தான் அது விரைவில் கெட்டுவிடாமல் பாதுகாக்க முடியும். அதற்கு நீங்கள் பிளேட் பாஸ்ட்ரைசர் என்ற ஒரு இயந்திரத்தை வாங்க வேண்டும்’ என்றார் இளைஞர். ‘ஆனால் அது உங்களால் முடியாது’ என்றார். ‘ஏன்?’ என்றார் திருபுவன்தாஸ். ‘அதன் விலை 60 ஆயிரம் ரூபாய்’ என்றார் இளைஞர். 1949ல் அறுபதினாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை. ‘முடியும், நம்மால் முடியும்’ என்ற திருபுவன்தாஸ், கிராமத்து மக்களிடம் பேசினார். நூறு, இருநூறு எனச் சிறுகச் சிறுக ஒவ்வொருவரும் பங்களித்தனர். அந்த இளைஞர் அசந்து போனார். எளிய மக்களைக் கொண்ட கூட்டுறவு இயக்கம் எத்தனை வலிமையானது என அவருக்குப் புரிந்தது. பயிற்சி முடிந்து ஊரைவிட்டுக் கிளம்பவிருந்த அவர், அங்கேயே தங்கி அந்த இயந்திரத்தை நிறுவினார். அதன் பின் கடந்த ஞாயிறன்று தனது 90வது வயதில் இறந்து போகும்வரை அதுவே அவரது வாழ்விடமாயிற்று.

பாலைப் பதப்படுத்த முடியும் என்று தெரிந்ததும், பால்வரத்து அதிகமாயிற்று. அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. திரவமாக இருப்பதால்தானே பால் கெட்டுப் போகிறது, அதைப் பவுடராக்கி விட்டால்? என அவர் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது ஐரோப்பாவிலும், நியூசிலாந்திலும் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இங்கு அதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஐரோப்பாவில் கொழுப்புச் சத்து குறைந்த பசும்பாலில் இருந்து பவுடர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இங்கு கிடைப்பது எருமைப்பால்.

அந்தக் கிராமத்தில் உருவாகி இருந்த நவீன பால் பதப்படுத்தும் நிலையத்தைப் பார்வையிட வந்திருந்த நியூசிலாந்து நாட்டின் பால்வள ஆராய்ச்சி நிலையத் தலைமை அதிகாரி, அதன் கட்டமைப்பைக் கண்டு அசந்துபோனார். நிலையத்தின் நிர்வாகியாகயிருந்த அந்த இளைஞரைப் பெரிதும் பாராட்டி, ‘இவ்வளவு புத்திசாலியாகயிருக்கும் நீ ஏன் முட்டாள் தனமாக, உலகில் யாராலும் செய்ய முடியாத திட்டத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டபோது அந்த இளைஞர் சொன்ன பதில், ‘இதை நான் செய்து காட்டுவேன்.’

சொன்னபடியே செய்துகாட்டி, உலகிற்கே அந்த விஷயத்தில் வழிகாட்டினார் அந்த இளைஞர். அவர் வர்கீஸ் குரியன், செய்த விஷயம், எருமைப்பாலைப் பயன்படுத்தி பால் பவுடர் தயாரிப்பது. இன்று இந்தியா ஆண்டுக்கு 65,000 டன் பால் பவுடர் தயாரிக்கிறது. இது நியூஸிலாந்து தயாரிப்பதைவிட பல மடங்குகள் அதிகம்.

பால் விநியோகம், பால் பவுடர் என வர்த்தகம் விரிந்து கொண்டிருந்தபோது, அவர் அந்தக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களிடம் சொன்னார்: ‘நாம் இப்படியே பாலை வாங்கி விநியோகிக்கிற அமைப்பாகவே இருந்தால் முன்னேற முடியாது. நாம் மார்க்கெட்டிங்கில் இறங்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ‘பிராண்ட்’ வேண்டும்.’ அப்போது உருவானதுதான் அமுல். Anand Milk Union Limited என்பதன் சுருக்கம்தான் அமுல். ஆனந்த் என்பது அந்தக் கிராமத்தின் பெயர்.

அமுல் செய்த புரட்சி ஒரு வரலாறு. நெஸ்லே, பிரிட்டானியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு தன் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது அமுல். இன்று இதன் வெற்றியை கோ ஆப்ரேட்டிவ் கேபிடலிசம் என வகுப்பறைகளில் போதிக்கிறார்கள்.

ஆனால் அமுலின் உண்மையான வெற்றி, கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகளை ‘முதலாளி’களாக்கியது. இன்று இந்தியாவிலேயே பாலுக்கு அதிகக் கொள்முதல் விலை கொடுப்பது, குஜராத் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்புத்தான். 1948ல் 430 பேரிடமிருந்து நாளொன்றுக்கு 5,000 லிட்டர் பால் வாங்கிக் கொண்டிருந்த அமுல், இன்று 30 லட்சம் பேரிடமிருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்கிறது.
 

அமுலின் பிசினஸ் மாடல் இன்று இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இதனால் இன்று இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.
 

ஆச்சரியமான விஷயம்... ஓசையில்லாமல் இந்தப் புரட்சியை நிகழ்த்திய குரியன் பால் அருந்துவதில்லை. ‘எனக்குப் பால் பிடிக்காது என்பார் அவர். குரியன் சென்னையில் படித்தவர். 1940ல் சென்னை லயோலா கல்லூரியிலும் பின், கிண்டி பொறியியல் கல்லூரியிலும் படித்த இவர், வெளிநாட்டில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். பெரிய குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தாத்தா ஜான் மத்தாய், இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். அவர், டாடா குழுமத்தைச் சேர்ந்த டிஸ்கோவின் தலைவராக இருந்தபோது குரியனுக்கு டிஸ்கோவில் வேலை போட்டுக் கொடுத்தார். அந்த வேலையையும் பின், யூனியன் கார்பைடில் கிடைத்த வேலையையும் விட்டுவிட்டு அந்த குஜராத் கிராமத்திலேயே தன் வாழ்நாள் முழுதும் தங்கி விட்டார்.

அதன் பலன் அந்தக் கிராமத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கிடைத்தது. இளைஞர்கள் மனது வைத்தால் இந்தியாவை மாற்ற முடியாதா என்ன?










1 கருத்து :

  1. அருமையான் அஞ்சலி. அமுலின் வெற்றிகதையையும், குரியனின் வாழக்கை கதையையும் ஒரு தொடராக எழுதலலாமே

    Mount bala
    Andaman islanads

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்