29/10/12

அந்த கிராமத்தின் பெயர்... ...



நாட்டின்  தலைநகரிலிருந்து  200 மைல் தொலைவில் தென்மேற்கு கோடியிலுள்ள  30000 பேர்களே வசிக்கும் அந்த சிறு கிராமம் பின்லாந்து நாட்டின் மிக அழகிய பகுதிகளில் ஒன்று. ஊரின் நடுவே அமைதியாக ஓடும் அழகிய  நதியின் பெயர்தான் அந்த நகருக்கும். ஊரின் ஜனத்தொகையில் 50% மேல் 65 வயதுகாரர்கள். அதில் பலருக்கு உலகம் முழுவதும் தங்கள் ஊரின் பெயர் உச்சரிக்கபடுவதில் மிக பெருமை. சிலருக்கு என்ன பிரயோசனம்? ஊருக்கு ஒன்றும் லாபமில்லையே என்ற ஆதங்கம். இன்னும் சிலருக்கு சொல்பவரகள் எலோருக்கும் அது நம் ஊரின் பெயர் என்றே தெரியாதே என்ற வருத்தம்.
இந்த சின்ன கிராமத்தில் 1871ல்   தொடங்கபட்ட பேப்பர் தொழிற்சாலைக்காக மரக்கூழ் தயாரிக்கும் ஆலைக்கு ஊரின் பெயரையே வைத்து வியாபரம் செய்து வந்த ஒருகுடும்பத்தின் அடுத்த தலைமுறை ரப்பர் டயர்கள் தயாரிக்கும் தொழிலை துவங்கியது. பனிகட்டிநிறைந்த சாலைகளில் ஓட்டக்கூடிய  விசேஷ டயர்களை தயாரித்து புகழ்பெற்ற அந்த நிறுவத்தின் அதற்கு அடுத்த தலைமுறை  தொழிலை புதிதாக அறிமுகமான ஒரு துறைக்கு மாற்றியது. மாற்றாதது நிறுவனத்திற்கு முன்னோர் இட்ட தங்கள் ஊரின் பெயர்
தங்கள் நாட்டின் மக்கள்  நண்பர்கள், உறவினர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டே (நம்மை விடவா?)இருக்கும் பழக்கத்தை பணம் பண்ணும்  ஒரு தொழிலாக இவர்கள் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய  தொழில்நுட்பம் 10 ஆண்டுகளில் உலகத்தையே கலக்கி தங்கள் நாட்டின் பொருளாதரத்தையே மாற்றபோகிறது என்பது அப்போது  அவர்களுக்கு தெரியாது. நாட்டின் தலைநகருக்கு மிக அருகில் மிகபிராமண்டமான நவீன தொழிற்கூடத்தில் இன்று இயங்கும்  இவர்கள் முதலில் 1987ல்    எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ என்ற அச்சத்துடன் வெளியிட்ட  கருவி இன்று  உலகில் 150 நாடுகளில் பல லட்சகணக்கான பணியாளார்களின் உதவியுடன் தயாரிக்கபடுகிறது.கருவியிலுள்ள 100%பாகங்களும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் அமைக்கபடுவதால் சுழல் மாசுபடுவதில்லை. கோடிகணக்கானோர் பயன்படுத்துகின்றனர்,அந்த தொழிலில் உலக மார்க்கெட்டில் 40% தங்கள் வசத்தில் வைத்திருக்கும் இவர்கள். தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் மீதி  மார்க்கெட்டையும்  வளைக்கிறார்கள்.
ஆனால் பெயரிலிருக்கும் சொந்த ஊரில் ஒன்று கூட தயாரிக்கபடுவதில்லை.
அந்த ஊரின் பெயரும் அந்த கருவியின் பெயரும்  நோக்கியா.!




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்