19/11/12


இந்தியா வந்த

இரும்பு பட்டாம்பூச்சி

திருமதி ஆங்சான் சூ சி, பர்மா என்று நீண்ட நாள் அறியபட்டிருந்த நம் பக்கத்துவீட்டு மியான்மர் நாட்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர். மியான்மர் நாட்டினையே உலகில் பலர் தெரிந்துகொள்ள காரணமாகயிருந்தவர். காரணம் தன் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த போராடியதற்காக 15 ஆண்டுகள்   சிறையிலிருந்தவர். சிறையிலிருக்கும்போதே அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டு, அதை சென்று வாங்க  ஆட்சியாளார்களால் அனுமதி மறுக்கபட்டவர், உலகில் அரசியல் காரணங்களுக்காக நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரே பெண்மணி.  மெலிந்த உடல்,மென்மையானகுரல்,67வயது முதுமையை காட்டாத முகம் கொண்ட இவர் பார்க்க பட்டாம்பூச்சியாக இருந்தாலும் இரும்பு மனுஷி.  சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ஜவர்ஹலால் நேரு அமைதி பரிசை பெற்றுகொள்ள மேற்கொண்ட பயணம்.இம்மாதிரி பரிசுகளை ஏற்கும் உரையில் இந்தியாவை புகழ்ந்து தள்ளுவார்கள்.
”அண்ணல் காந்தியடிகளின் வழியில் நேருவை முன்னூதரணமாக கொண்டு நாங்கள் போராடிய காலங்களில் இந்தியா எங்களை கண்டுகொள்ளவில்லை” என்ற இவரது பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கின,

இந்தியா சுதந்திரபோராட்டத்தை தொடர்ந்து விடுதலை வேட்கை  வேகமாக பரவிய நாடுகளில் அன்றைய பர்மாவும் ஒன்று. அதன் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆங் சான். நாட்டை அன்னியர்களிடமிருந்து காக்க வலிமையான  ஒரு ராணுவத்தை உருவாக்க முயன்றுகொண்டிருந்தவர்.ஒரு நாள் படுகொலை செய்யபட்டார். அவருடைய ஒரே மகள்தான்  சூ சி. தாயினால் வளர்க்கபட்ட இவர் வளரும்போதே போராட்டங்கள் பல வற்றை சந்தித்தவர். டெல்லியில் 
கல்லூரிபடிப்பும்  தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டில் அரசியலும் படித்தபின் பணியில்சேர்ந்த இடம் ஐக்கிய நாடுகளின் சபை நியூயார்க். அங்கு பூடான் நாட்டின் கலாசாரத்தைபற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த டாக்டர் மைக்கேல் ஆரிஸுடன் காதல் திருமணம். ஒரு புத்தமதப்பெண் கிருத்துவரை மணந்ததை புரட்சியாக  பார்த்தவர்களை ஐக்கிய நாட்டுசபை வேலையைவிட்டு தாய்நாட்டு அரசியலுக்கு போகிறேன் என்ற  அவரது அடுத்த அறிவிப்பு  ஆச்சரியபடுத்தியது. காரணம் தந்தையின் படுகொலையினாலும் தாய் பட்ட கஷ்டங்களினாலும் இவர் அரசியலுக்கு வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
 ராணுவ ஆட்சியின் பிடியில் நசுக்கபட்ட ஜனநாயகத்தை மீட்டுஎடுக்க 1988ல்  மியாமரில் தேசிய ஜனநாயக அணி என்ற கட்சியை துவக்கி 8-8-88ல் ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்துகிறார். நடந்துகொண்டிருந்த ராணுவ ஆட்சியில் உள்ளோரிடையே குழப்பங்கள் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் மீண்டும்  ஆட்சியை  ராணுவமே கைபற்றியதோடு  ஆங் சான் சூ சி கைது செய்யபட்டு எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கபடுகிறார்.  சில ஆண்டுகளுக்கு பின்னர் வீட்டு கைதியாக ஒரு சிறிய வீட்டில் வைக்கப்படுகிறார். ஓரே ஒரு பணியாளை தவிர எவருமில்லாத எந்த தொடர்புகளும் மறுக்கபட்ட நிலையில் 15 ஆண்டுகள் சிறை. லண்டனிலிருக்கும் கணவர் புற்றுநோயினால் அவதிபடுகிறார் கணவர். வந்து பார்க்க அவருக்கு விசா மறுக்க படுகிறது.  இவர் அங்கு சென்று பார்க்க அனுமதி கேட்டால் கிடைக்கும் ஆனால் மீண்டும் தாய் நாட்டிற்கு வர அனுமதிமறுக்கபட்டுவிடும் என்ற நிலை. தன் கணவரை சந்திப்பதைவிட தன்தாய்  மண்ணை விட்டு வெளியேறாமல் போரடுவதையே முடிவாக எடுக்கும் இரும்பு மனிஷியின் போராட்டம் உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கிறது.கணவர் லண்டனில் இறந்துபோகிறார். சிறையிலிருக்கும் சூசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபடுகிறது. ஆனால் அதை போய் ஏற்க முடியவில்லை.அறிவிக்கபட்டு 21 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டுதான் அதை பெற்றார். அன்று பேசியபோது சொன்ன வார்த்தைகள் “ அதிகாரம் அதிலிருப்பவர்களை கெடுப்பதில்லை- மாறாக அதை இழந்துவிடுவோமோ என்ற பயம்தான் அவர்களை அக்கிரமங்கள் செய்ய தூண்டுகிறது,’“
பல உலக நாடுகள், ஐக்கியநாடுகள் சபை கொடுத்த தொடர்ந்த அழுத்தால் மியான்மர் ராணுவ அரசு 2010ல் இவரை விடுதலை செய்யவும், பொதுத்தேர்தலை நடத்தவும் சம்மதிக்கிறது.இவர் விடுதலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் தேர்தலில் பெரும்பான்மை பெற்றது முக்கிய முன்னாள் ராணுவதலைவர்கள் நிறைந்த அரசியல் கட்சி என்று அறிவிக்கபட்டது. தொடர்ந்த சர்வ தேச  குழுவின் கண்காணிப்பில் நடந்த இடைத்தேர்தல்களில் சூ சியின் கட்சி வெற்றி பெற்றதால் இப்போது எதிர்கட்சியின் தலைவியாக ஏற்றுகொள்ளபட்டிருக்கிறார். நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டமுடியும் என்று இவரும், ஒருநாள் இவர் நாட்டின் பிரதமராவார் என்று மக்களும் நம்புகிறார்கள்
நம்பிக்கைகள்தானே ஜனநாயகத்தின் அஸ்திவாரம்.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்