31/8/14

கங்கை கரை ரகசியங்கள் ....7



இன்று காசியாக அறியபட்டிருக்கும் இந்த பழமையான நகரின் பெயர் வாரணாஸீ. இப்படித்தான் இதிகாசங்களிலும் முகம்மதியர் படையெடுப்புகளின் போதும் இந்த பெயரால் தான்  அழைக்கபட்டிருக்கிறது. இங்கு பேசப்பட்ட மொழிகளில் ஒன்று பாலி மொழி. அதில்  ”பருணாசி” என்று சொல்லபட்டு வந்த இது ஆங்கிலேயர் ஆட்சியில் பனாரஸ் ஆகியிருக்கிறது.  ஆன்மிகத்தை தாண்டி  ஆங்கிலேயர்கள் இதை கைவினைக்கலைஞர்களின் நகரமாக பார்த்து அதை ஊக்குவித்திருக்கிறார்கள். அவர்களினால் தான் இங்கிருந்த  மிக நுண்ணிய வேலைப்படுகளிடுன் கூடிய பட்டுநெசவு தொழில் இங்கிலாந்து வழியாக உலகை எட்டியிருக்கிறது. 
குறைந்த விலையில் நல்ல பனாரஸ் சாரி வாங்கவேண்டும்  என்று குழுவிலிருந்த பலர் புறபட்டபோது, நாம்  இந்த சேலைகள் தயாரகுமிடத்தை பார்க்க வேண்டும் என்று  விரும்பி விசாரித்து கொண்டிருந்தோம்.  நம்முடன் இணைந்தவர்கள் குழுவிலிருந்த இரண்டு வெளிநாட்டினர்.  ”அதற்கு நீங்கள் பாலத்தை தாண்டி கங்கையின் மறு கரையிலிருக்கும் ராம்நகருக்கு  போகவேண்டும்” என்றார்கள். 14 கீமி தூரத்தில் 6 கீமி நீள பாலம். அந்த பாலத்திலிருந்து கங்கையையும் அத்தனை படித்துதுறைகளையும் பார்த்தது   இப்போதும் கண்ணில் நிற்கும் காட்சி. ஒரு நல்ல ஓவியத்தை பார்த்தது போலிருந்தது
.  மறு கரையிலிருக்கும் பனாரஸ்  நாம் பார்த்த காசிக்கு எந்தவித சம்பந்தமும்மில்லாத ஒரு தொழில்நகரம். பட்டுநெசவு, சரிகைஉற்பத்தி, பித்தளை பாத்திரங்கள், பூஜைபொருட்கள் உற்பத்தி என பல தொழில்கள். எல்லா தொழில்நகரங்களுக்கும் உள்ள பிரச்சனைகளுடன் இருக்கிறது. இந்நகர் வாசிகள் காசி நகருக்கு வருவதில்லை. பிஸினசில்தான் கவனமாகயிருக்கிறார்கள். இந்நகருக்கு முன்னே இருப்பது ராம்நகர். அங்கும்  எல்லா வீடுகளிலும் பட்டுநெசவுதுத்தொழில். தொழிலாளிகளில் பலர்  சந்தோஷமாகயில்லை. ஒரு புடவையை முடிக்க 15 நாள் ஆகும் டிசைனைப்பொறுத்து 1000 ரூபாய்வரை கூலி  கிடைக்கும். அதை புடவையின் தயாரிப்பு நிலையை பொறுத்து  அவ்வப்போது கொடுப்பர்கள் என்கிறார். 40 ஆண்டு இந்த தொழிலை செய்யும் நெசவாளி ஒருவர்
தான் நெய்து கொண்டிருக்கும் புடவையின் விலை தனக்கு தெரியாது என்றும் சொல்லுகிறார்.
ராம்நகரில் தான் பனாராஸ் மன்னரின் அரண்மனை. கங்கையின் கரையில் ஒரு கம்பீரமான கோட்டை. அதன் மதில் களை தாண்டி அரண்மனை. பாராட்டும்படியான பாராமரிப்பு  இல்லையென்றாலும் பளிச்சென்று அரண்மைக்கான களையுடன் இருக்கிறது.  அரச வம்சத்தின் இன்றைய தலைமுறை குடும்பத்தினர் இங்குதான் வசிக்கிறார்கள்.
கடைசி மன்னர் 2000ல் மறைந்த பின்னர்  வாரிசுகள் அரசர்கள் அழைக்கபடவேண்டியது இல்லை என்பது சட்டமானலும் இங்குள்ளவர்களுக்கு இவர் மாட்சிமைதாங்கிய மன்னர்தான். காசி விஸ்வநாதர் கோவிலின் தலமை அறங்காவலர். பனாரஸ் இந்து பலகலை கழகத்தின் வேந்தர்  எல்லாம் இவர் தான்.  கோவில் விழாக்கள், சிறப்பு பூஜைகள் எல்லாவற்றிக்கும் இவர் உத்தரவு தர வேண்டும்.  அரண்மனைமுகப்பில் கொடி ஏற்ற பட்டிருந்தால் மன்னர் அரண்மனையில் இருக்கிறார் என்று அர்த்தமாம். 
அரண்மனையின் ஒரு பகுதி  சரஸ்வதி மஹால். அது அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது.  மன்னர் வம்சங்களின்  கலைப்பொருட்களின் சேமிப்புகள்.   ஆடை அணிகலன்களுடன் அவர்கள் பயன்படுத்திய பல்லக்குகள் - தந்தம், மூங்கில், வெள்ளி என பல பல்லக்குகள். விதவிதமான வாட்கள், கடிகாரங்கள், எல்லாம். துளிசிதாஸ் எழுதிய ராமசரித்திரத்திரத்தின்  மூலப்பிரதி கண்ணாடிப்பேழைக்குள் பட்டு மெத்தையில் இருக்கிறது.  கடைசி அரசர் துப்பாக்கிகளின் காதலராம். 1000 வகை துப்பாக்கிகள். குறிபார்த்து சுடுவதில் வல்லுரான அவரால்  தூக்கி எறியபட்டபோது சுடப்பட்ட  நாணையங்கள் உருக்குலைந்தநிலையில் அந்த துப்பாக்கிகளுக்கு அருகில் வைக்கபட்டிருக்கிறது.  வெளியே வந்த நாம் பார்ப்பது பெரிய திறந்த வெளியின் முன்னே  ஷெட்களில் அணிவகுத்து நிற்கும்  சாரட்டுகள், பழைய கார்கள்.
இந்தியாவிற்கு வந்த முதல் ரோல்ஸ் ராய்ஸ், ஸுடூடிபேக்கர்  போன்ற கார்கள்.  எல்லவாற்றிலும் ராஜ இலச்சினை. எல்லாவற்றிலும் நம்பர் பேளேட்டில் எண் 1.  இந்த காட்சியகத்தின் பணியாளார்கள் மன்னரின் அரண்மனை பணியாளார்கள். இன்றைய மன்னர் என்ன கார் பயன்படுத்துகிறார்? என்ற நாம் கேட்டதற்கு பதில் ”மன்னரின் சொந்த விஷயங்களை நாங்கள் பேசுவதில்லை.”  வெளியில் வரும் போது எவரும் பார்க்ககூடிய ஒரு விஷயத்தை கூட சொல்ல மறுக்கும் அந்த ஊழியரின் ராஜ விசுவாசம்  நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது..  நதிக்கரையிலிருக்கும்  அந்த கோட்டையின் அருகிலிருந்து எதிர்கரைக்கு  படகிலும் போகலாம் என்பதை அறிந்தவுடன் மீண்டும் ஒரு முறை கங்கையில் படகில் போகும் வாய்ப்பு என்று மனம் துள்ளியது. படகு  கிளம்பியதும் பக்கத்து படித்துறையில் பார்த்தது வாரியிறைத்த வானவில்லாக பரந்து கிடந்த பட்டுசேலைகள். விசாரித்ததில் அது பனாராஸ் சேலையில் ஒரு வகைஎன்றும். கெமிக்கல் இல்லாத இயற்கைமுறையில் தயாரிக்கபட்ட சாயத்தில் தோய்க்கபட்ட நூல்களினால் நெய்தது என்றும் அதை கடைசியில் மீண்டும் இப்படி  ஒரு முறை இப்படி உலர்த்துவார்கள் என்றும் சொன்னார்கள்
முதல் முறை கரையின் அருகிலேயே படகில் பயணித்த நாம் இன்று கங்கையையின் குறுக்காக பயணித்து மறுகரைக்குப் போகிறோம். எதிரே தெரியும் படித்துறைகள் நம்மை நெருங்குகிறது. படகில் நம்முடனேயே  வரும் போட்டோகிராபர்  விரும்புவர்களை கங்கையின் பின்னணியில் படமெடுத்து, உடனே அதை படகிலேயே இருக்கும் பேட்ரியில் இயங்கும்  ஒரு பிரிண்ட்டரில் படமாக்கி தந்துகொண்டிருக்கிறார்.  20 ருபாய்களுக்கு நடு கங்கையில் படமெடுத்து பிரிண்ட்ட தருகிறார்கள் டிஜிட்டல் டெக்னாலாஜி உபயம்.
ஓவ்வொரு ”காட்”லும் ஒரு கோவில் மூன்று வேளைபூஜை. அதனால் எந்த படித்துறையில்  நீங்கள் குளித்தாலும் முதலில் அங்குள்ள தெய்வத்தை வழிபட்டபின்னரே நகருக்குள் செல்ல வேண்டும்.  , குழந்தை பிறப்பு, கல்வியின் துவக்கம், திருமணம், உடல்நலம், குடும்பத்தினர் நலம் மணவாழ்வுநலம், இறுதியாக மரணம் என்று மனித வாழ்வு சம்பந்தபட்ட ஓவ்வொருவிஷயத்திற்கும் இந்த  கங்கைக்கரையில் ஒரு தெய்வ சன்னதியிருப்பது பார்க்கும்போது எப்படி இந்த கங்கைக்கரை வாழ்வோடு  இணைந்த ஒரு விஷயமாகியிருக்கிறது என்று புரிகிறது. 
படகு மணீகர்ணா தீர்த்த கட்டத்தை நெருங்குகிறது.   தொலைவிலிருந்து பார்த்த புகையும் நெருப்பும் இப்போது பளீரென தெரிகிறது. மிதக்கும் படகிலிருந்து கரையில் நிகழும் மனித மரணத்தின் கடைசிகாட்சிகளை பார்க்கும்போது மனம் கனமாகி  இனம்தெரியாத உணர்வுகள் நம்மை தாக்குகிறது. எரிவது எவரோ என்றாலும் ஐயோ என்ற எண்னம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்துகொண்டு இருக்கும்போதே  பத்து நிமிடத்தில் வந்த இரண்டு உயிரற்ற உடல்கள்,  அவைகளுக்கு இடமில்லாதால் எரிந்துகொண்டிருப்பவைகள் தகனமேடையிலிருந்து கிழே தள்ளப்பட்டது, உடல்களை எரியூட்ட படகுகளில் வந்துகொண்டிருந்த விறகுகள்,
எல்லாம்  அவர்களுக்கு இது  தினசரி வாடிக்கை என்பதை புரியவைத்தது. ஆனால் நமக்கு மறக்கவிரும்பும் மனதை பிசைந்த காட்சிகள் அவை. சராசரி ஒரு நாளைக்கு 50 உடல்கள் வரும்,  இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை என்று என படகோட்டி சொன்னபோது இந்த உலகில் நிரந்தரமாக நடக்கும் விஷயங்களில் மரணமும் ஒன்று, நமக்கும் ஒரு நாள்  நிகழும் அது வரை அது பார்க்கும்போது  வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும் என்று உரைத்தது. .  உயிரற்ற உடல்கள் உருக்குலைந்ததை அத்துணை அருகில் பார்த்ததினால் நம் மனம் கனமாக இருப்பதைப்போல நம்படகும் கனமாகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு படகும் மெல்ல செல்கிறது. நீரின் வேக  ஓட்டம் போதுமானதாக இருப்பதால் துடுப்பு போடவில்லை என்ற படகோட்டி சொல்லுகிறார். 
படகு கரையை அடைந்தாலும் காட்சியின் தாக்கம் கரையவில்லை. சாலையில் நடக்கும்போது காசிநகரின் எல்லாப்பகுதிகளிலும் கேட்கும் டிரிங், டிரிங் சைக்கிள் ரிக்‌ஷாகளின் மணியோசையும்,பலமொழிகளின் ஓசையும் மெல்ல நம்மை இந்த உலகிற்கு இழுத்துவருகிறது.
நாளைகாலை  புத்த கயாவிற்கு போக இருக்கும் விவரங்களை அறிவிக்கிறார்கள்.  இறப்பின் துயரத்தை பார்த்து  துவண்டு துறவறம் பூண்ட புத்தரை தரிசிக்க நாமும் இன்று அத்தகைய  சோகங்களை பார்த்தபின் போகப்போகும் வினோத ஒற்றுமையை எண்ணிக்கொண்டே தூங்கச்செல்லுகிறோம்
^^^^^^^^^^^^^^
சத்குருவின் பதில்கள்

 நம் வேதங்கள்  இந்த காசிநகரில்தான்  எழுதபட்டதாக சொல்லப்படுகிறதே?


 பலர் நினைப்பது போல நமது நான்கு வேதங்களும் ஒருவராலோ அல்லது ஒருசிலராலோ  எழுதப்படவில்லை.  நீண்ட காலத்திற்கு வாய்வழியாக சரியான ஒலி வடிவில் மற்றவர்களுக்கு சொல்லபட்டிருக்கிறது. அது இங்கு நிறைய நடந்திருக்கிறது. வேதங்கள் இந்த பூமியின் மிகத் தொன்மையான நூல்களாக இருப்பினும், மற்ற எந்த நூலையும் விட விரிவான, விஸ்தாரமான உள்ளடக்கம் கொண்டவை. வேதங்கள் யாரோ  ஒருவர் எழுதி வைத்த ஒழுக்க விதிகள் அல்ல. அவை வெளிநிலை மற்றும் உள்நிலை சம்பந்தமான பல ஆழமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பு. பலர் செய்திருக்கிறார்கள். 
வடிவத்தை யந்திரம் என்றும், ஒலியை மந்திரம் என்றும், இவை இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தாந்திரீகம் என்றும் சொல்கிறோம்.
வடிவங்களை ஒலியாக மாற்றுவதைப் பற்றி வேதங்களின் பல்வேறு பகுதிகள் பேசுகின்றன. ஒரு ஒலியை, ஒலி அளக்கும் கருவியான ஆசிலாஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது அந்த ஒலிக்கு ஏற்ப ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருக்கிறதென்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது. ஒலிக்கும், வடிவத்திற்குமான இந்த உறவை வேதங்களில் மிக விரிவாக விளக்கியிருக்கிறார்கள். ரிக், சாம, மற்றும் அதர்வண வேதங்கள் பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சத்தை ஒலி வடிவமாக மாற்றி, அந்த ஒலியை உச்சரிப்பதன் மூலம் இந்த பிரபஞ்சத்தை நமக்குள் எதிரொலிக்கச் செய்வது பற்றித் தான் பேசுகின்றன. ஒலியின் மீது ஆளுமை பெறுவதன் மூலம், வடிவத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். இதுதான் மந்திரங்களின் விஞ்ஞானம்.

துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில் மந்திரங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. வேதங்கள், மனம் மற்றும் உள்நிலை சார்ந்த அறிவியல் என்பதால் அவற்றைக் கற்க ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பும் தேவை. அதற்காக நீங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் அவை உங்களுக்குப் பலன் தராது. உங்களுக்கு கல்வித்தகுதியாகவோ, வேலைவாய்ப்பாகவோ இதை நினைத்தால், இதனால் உங்களுக்கு எவ்விதமான பயனும் கிடைக்காது. உங்களையே அதற்கு அர்ப்பணித்தால்தான், உங்களுக்குப் அதன் பயன் கிட்டும். இதற்குத் தேவையான உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் போனதால், எல்லா வகையான தவறான புரிதல்களுக்கும், பயன்பாடுகளுக்கும் ஆளாகி இந்த விஞ்ஞானம் சீரழிந்துவிட்டது.
வேத முறைகள் எப்போதுமே மனிதனின் புரிதலை ஆழமாக்குவதை நோக்கித்தான் இருந்ததே தவிர அவன் அறிவை விஸ்தாரமாக்கவதற்காக ஏற்பட்டதில்லை.  உங்கள் புரிதல் பொருட்தன்மையைத் தாண்டி உயரும்போதுதான், உண்மையான ஆன்மீகப் பயணம் துவங்குகிறது  இதைத்தான் நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்து கொண்டிருந்தார்கள்; 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்