25/8/14

கண்ணனின் கனவு முன்னாள் நடிகை வைஜைந்திமாலா. 54 வருடங்களுக்கு முன் தான் கதாநாயகியாக நடித்த  கல்கியின் அமரகாவியாமான பார்த்திபன் கனவு  ஒரு ஒலிபுத்தகமாக வரும் என்றோ அதை தானே வெளியிடுவோம்  என்றோகனவிலும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார். சமீபத்தில்  பொன்னியன் செல்வன் நண்பர்குழுவினர் மூலம் திரு பாம்பே கண்ணன்  இந்த காவியத்தை  ஒலி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார்.  இவர்  சிவகாமியின் சபதம், பொன்னியன் செல்வன் காவியங்களையும் ஒலி புத்தகமாக்கியிருப்பவர். தமிழ் படிப்பதை மெல்ல மறந்துவரும்  இன்றைய இனிய இளையதலைமுறையினர் படிப்பதைவிட கேட்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து இவர் இதுபோன்ற  ஒலிபுத்தகங்களை தயாரிக்கிறார். மேடை நாடகங்களில் நீண்ட அனுபவம்  கொண்ட இவர்  இதைவெறும் வியாபார முயற்சியாக இல்லாமல் ஒரு தவமாகச் செய்து கொண்டிருக்கிறார்.
மிகுந்தசிரமங்களுக்கிடையே தகுந்த குரல்களை தேடிபிடித்து பயிற்சி அளித்து ஒலிப்பதிவை மேற்பார்வையிட்டு தயாரிக்கிறார்.
நல்லி குப்புசாமி,  வைஜந்திமாலா, சிவசங்கரி, ஏ ஆர் எஸ்,இந்திரா செளந்தர்ராஜன்  கலந்துகொண்ட விழாவில் பேசியவர்கள் அனைவரும்  அமரர் ஆசிரியர் கல்கியின் பல்வேறு முகங்களைப் பற்றி பாராட்டி பேசினார்கள்
.தான் பிறப்பதற்கு மூன்பே தங்கள் குடுமபத்துக்கு அறிமுகமானவர் கல்கி  என்று ஆரம்பித்து  ”கல்கி மாமா” என்று உரிமையோடு பேசிய சிவசங்கரி தொழில்நுட்ப வசதிகளற்ற காலத்திலேயே அமரர் கல்கியின் கடின உழைப்பு ஆச்சரியத்தை தருகிறது என்றார்.  பார்த்திபன் கனவு எழுதிய பின் அதன் முந்தியகாலகட்ட கதையாக சிவகாமியின் சபதத்தை தொடர்ந்த (backword integration) டெக்னிக் பிரமிப்பூட்டும் விஷயம் என்றார்.  . முடிவு தெரியாமல் போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்கிற ஆதங்கத்தில் “நான் சாகறத்துக்குள்ள பொன்னியின் செல்வன் முடிஞ்சுடுமோன்னோ...” என்று அவரின் பாட்டி கேட்டு கொண்டே இருந்ததை சொன்னபோது அரங்கம் சிரிப்பில் அதிர்ந்த்து. 
 விழாவின் ஆரம்பத்தில், பார்த்திபன் கனவிலிருந்து சில காட்சிகளை நாடகமாக நடித்தது நிறைவாக இருந்தது உடை, மேக் அப், நடித்தவர்கள், தமிழ் உச்சரிப்பு, ஒலி/ஒளி அமைப்பு எல்லாமே அருமை,    நாயகன் விக்கரமனாக நடித்த சூரஜ், நாயகி குந்தவியாக நடித்த  அர்ச்னா நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் எனபதை நிருபித்தார்கள். இந்த டீமையை வைத்து முழு நாடகமாகவே போடலாம்.
வளரும் தொழில் நுட்பத்தில் இப்படி ஒலிபுத்தகங்கள் உருவாவது பரிமாணவளர்ச்சி, வருங்காலங்களில் இதுதான் புத்தகங்களின் வடிவமாக இருக்கபோகிறது.. தனது புத்தகங்களும் இப்படி ஒரு நாள் வெளிவரும் என்றார் இந்திரா செந்திர்ராஜன்.
ஒலிபுப்த்தகம் வெளிவர நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் அயராத உழைப்பையும் தயாரிப்பாளர் சிகே வெங்கட்ராமன் அவர்களின் பெருந்தன்மையையும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய ஏஆர்ஸ்...  நாடக நடிகர்களின் சிறப்பான நடிப்பை பாராட்ட விட்டுபோனதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் மைக்குவந்து அவர்களை பாரட்டி நன்றியும் சொன்னார். 30 ஆண்டுகாலமாக நாடகமேடையை நேசிப்பவர் இலையா?
1960ல் கறுப்பு-வெள்ளை பார்த்திபன் கனவில் நடித்த வைஜயந்திமாலா பாலி  இப்பொழுதும் டிரிம்மாக இருக்கிறார். தன் மெல்லிய குரலில்  மெல்ல நாலுவரிகளில்பேசி  தன் பேச்சைமுடித்துகொண்டார். 
அரங்கம் நிறைந்திருந்தததைவிட ஆச்சரியம் நடுவே குத்துபாட்டு ரிங்டோன்கள் ஒலி  தொல்லையிலாததுதான்.
 ஒலிப்புத்தகத்தில் நடிக்கும் போது நடிகர்கள் வசனங்களைப் வெறுமனே படிக்காமல்.  நடிக்கிறார்கள்  அந்த பாத்திரமாகவேமாகி பேசுகிறார்கள்.  இதை நன்கு தெரிந்தவர் இயக்குனர் பாம்பே கண்ணன். ஆனாலும் ஒலிபுத்தகத்திற்கு குரலால் உயிர் கொடுத்தவர்களை அன்று  ஏன் மேடையில் கெளரவிக்கவில்லை என்று தெரியவில்லை. 
 மூன்று தலைமுறைகளை கடந்த கலாபூர்வமான கல்கியின் காவியங்கள்  அடுத்த தலமுறையையும் அடைந்து அதையும் தாண்டி நிற்க உதவும்  பாம்பே கண்ணனின் இந்த  ஒலிபுத்தக முயற்சி பெரிதும் பாராட்டபட வேண்டிய ஒன்று
(31/8/14 கல்கி)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்