19/8/14

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

ஆழம் ஆகஸ்ட் இதழில் எழுதியது. 

New post on ஆழம்

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

by ரமணன்
Chapter01எரிந்து கொண்டிருக்கிறது எண்ணெய் பூமி. இரானுடன் சண்டை, குவைத் ஆக்கிரமிப்பு, சதாம் எழுச்சி வீழ்ச்சி, அமெரிக்க முற்றுகை என்று கடந்த முப்பதாண்டுகளாக உலகச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்த இராக்கில் அண்மையில் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.
ஏன் இந்தப் போர்?
சற்றே முந்தைய வரலாற்றை ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கும். மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இராக். சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடும்கூட. மெசபடோமிய வண்டல் சமவெளி, ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள், சிரியா பாலைவனம், வடக்கு பெர்ஷிய வளைகுடாவை ஒட்டிய (58 கிலோமீட்டர் நீளம்) கடற்கரை என வேறுபட்ட நில அமைப்புகளை உள்ளடக்கிய நாடு. வடக்கில் துருக்கியும், கிழக்கில் இரானும், தென்கிழக்கில் குவைத்தும், தெற்கில் சவூதி அரேபியாவும், தென்மேற்கில் ஜோர்டானும், மேற்கில் சிரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. யூப்ரடிஸ், டைக்ரிஸ் என இருபெரும் ஆறுகள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, இராக்கின் மையப் பகுதியைக் கிழித்துக்கொண்டு ஓடுகின்றன. இதனால் பாலைவனம், ஸ்டெப்பி புல்வெளி என்பதோடு வளமான வேளாண் நிலங்களும் இராக்கில் உள்ளன. இராக்கின் புராதனப் பெயரான மெசபடோமியா என்பதற்கு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலம் என்று பொருள்.
நதிக்கரைகள்தான் நாகரிகங்களின் தொட்டில் என்பதற்குச் சான்றாக வரலாறு சொல்லும் இடங்களில் இந்தப் பகுதியும் ஒன்று. உலகுக்கு எழுத்துமுறையை வழங்கிய இந்த மண்ணில்தான் இப்போது வன்முறைக் கலாசாரம் வேறூன்றியிருக்கிறது. பாபிலோனிய பேரரசிலிருந்து தொடர்ந்த நீண்ட நெடிய மன்னர் பரம்பரைகளை வரலாறாகக் கொண்ட இராக் மற்ற நாடுகளைப்போல ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் சிக்கியிருந்தது. நாற்பதுகளில் இராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால் 1958ல் நடந்த ராணுவப் புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் இராக் அதிபராகப் பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி 2003ல் இராக்கைத் தனது ஆளுகையின்கீழ் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளின் படையும் கொண்டுவந்தது. இந்தப் போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ம் ஆண்டு தேச துரோகத்துக்காகத் தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர். ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர். பல கட்சி நாடாளுமன்ற முறை உருவாக்கப்பட்டு அமெரிக்கச் சார்பு ஆட்சி அமைக்கப்பட்டது.
அப்போது ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். சிறு கலவரங்கள் ஆரம்பமாயின. 2011ல் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறியதும் இக்கலவரங்கள் தீவிரமடைந்தன. ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திவந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டுப் போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தப் போரை நடத்துபவர் யார்?
‘நாங்கள்தான்’ என்று ஐ.எஸ்.ஐ.எஸ் எனற அமைப்பு அறிவித்தபோது அமெரிக்க உளவு அமைப்புகள் ஆச்சரியமடைந்தன. காரணம் அவர்கள் கணிப்புப்படி இந்தப் புரட்சிகர அமைப்பு அதிக நிதி வசதி இல்லாத, பயிற்சிகள் ஏதும் பெறாத ஒரு சிறு குழு. இதன் தலைவர் யார் என்பதை அறிந்துகொண்டபோது அதைவிட ஆச்சரியம் அடைந்தது அமெரிக்கா. இந்த இயக்கத்தின் தலைவராக அறியப்பட்ட அபுதுவா என்பவர் 34 வயதில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இராக்கின் கண்காணிப்பு முகாமில் கைதியாகக் கழித்தவர். அப்போதெல்லாம் மிக அமைதியானவராகத் தோற்றமளித்த அப்பாவி. ஒரு மசூதியில் குமாஸ்தாவாகப் பணியாற்றிவந்த இவரைச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தார்கள். விசாரணையின் முடிவில் இவர் ஓர் அச்சுறுத்தல் அல்ல என்று கூறி விடுதலை செய்துவிட்டார்கள். இராக்கின் பல நகரங்களைப் புரட்சிப் படைகள் கைப்பற்றி வருவதாகக் கடந்த இரண்டு மாதங்களாக வெளிவரும் செய்திகளின் பின்னணி இவர்தான். அப்பாவி என்று நினைத்து விடுதலை செய்த அமெரிக்கா இப்போது இவர் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்திருக்கிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, ‘உங்களையெல்லாம் நியூ யார்க்கில் சந்திக்கிறேன்’ என்று சிறை அதிகாரிகளிடம் அபுதுவா கூறினாராம். அவை சாதாரண வார்த்தைகளல்ல என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. இன்னொரு பெரும் அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியிருக்குமோ என்றும் அமெரிக்கா அச்சப்படத் தொடங்கிவிட்டது. அந்த அச்சத்தின் விலைதான் 10 மில்லியன் டாலர்.
அல் காயிதாவைப்போல் மற்றொரு சவாலாக இப்போது ஐஎஸ்ஐஎஸ் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் லெவாண்ட். இராக், சிரியா, லெபனான் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய அகண்ட இஸ்லாமிய தேசம் அமைப்பதுதான் இந்த இயக்கத்தின் கனவுத் திட்டம். 2003ல் இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியபோது சின்னதொரு போராளிக் குழுவுக்குத் தலைவராக இருந்த அபுதுவா இன்று ஒரு போரையே தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி என்னும் கேள்விக்கு விடை தேடத் தொடங்கியபோது அமெரிக்க உளவுத்துறை சில விஷயங்களைக் கண்டுபிடித்தது.
  • அல் காயிதாவின் இராக் கிளையான ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக்) அமைப்பில் கவுன்சில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
  • 2009ல் அமெரிக்கக் கண்காணிப்பு முகாமில் இருந்து விடுதலை ஆன சில மாதங்களில் ஐஎஸ்ஐ தலைவர் அபு ஓமர் அல் பாக்தாதி திடீரென்று கொல்லப்பட, அவருடைய இடத்தை இவர் நிரப்பியிருக்கிறார்.
  • இராக்கில் நடந்துவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் இவரே காரணம்.
எல்லாப் புரட்சித் தலைவர்களைப்போல இவருக்கும் பல பெயர்கள், முகங்கள். ஊடகங்கள் சொல்லும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களிடையே பிரபலமான டாக்டர் இப்ராகிமும் ஒருவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய அமெரிக்காவுக்கு ஓராண்டாகியிருக்கிறது. மக்கள் மத்தியில் பிரபலமான இவருடைய பெயர் அபுதுவா. தனது படைகளுடன் பேசும்போதுகூட ஸ்பைடர்மேன் ஸ்டைலில் முகமூடி அணிந்திருப்பதால் அவர் முகம் பலருக்குத் தெரியாது. இப்போது அமெரிக்கா வெளியிட்டிருக்கும் படம்கூட பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதுதான்.
இந்த ஸ்பைடர் மேன் அபுதுவா மதக்கல்வியில் பிஹெச்டி முடித்தவர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களுக்குச் சென்று மதப் பிரசாரம் மேற்கொண்டு தீவிரவாத வெறியை ஊட்டுவதில் தன் வாழ்நாளைச் செலவழிக்கிறார். உலகளவிலான ஜிகாதி அறிவுஜீவிகளின் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஒசாமா பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல்காயிதா மீதிருந்த நம்பிக்கை இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடையே குறைந்துவரும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவராக அபுதுவா உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக இராக்கில் அடுத்தடுத்து சிறைகள்மீது திடீர் தாக்குதல்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்த இவரது நடவடிக்கைக்கு சன்னி இஸ்லாம் வகுப்பினரிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
அல் காயிதா இவரைத் தங்கள் தலைவராக ஏற்கவில்லை. அவர்களிடையே நிறைய முரண்பாடுகள் நீடிக்கிறது. நீங்கள் இராக்கில் மட்டும் தலைவராக இருங்கள் என்று சொல்லிவிட்டது. அபுதுவா தன் பங்குக்கு, நாங்கள் அல் காயிதாவின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்தர இஸ்லாமிய அமைப்பு என்றே அறிவித்துள்ளார். ஆனால் அவரது கனவு மிகப்பெரியது என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாமிய தேசக் கனவு
அபுதுவாவின் கனவு அகண்ட இஸ்லாம் தேசம். ஐரோப்பாவில் ஸ்பெயினின் வடக்கு எல்லையில் தொடங்கி, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா முழுக்க ஒரே இஸ்லாமியக் குடையின் கீழ் அமையவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்லாமிய ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசங்களை ஷரியத் சட்டம்தான் ஆளவேண்டும். இந்த லட்சியத்துக்கு முதல் படியாகத்தான் சிரியா, இராக் இரண்டு நாடுகளையும் கைப்பற்றும் நோக்கில் சிறிது காலமாகப் போராடிவருகிறார்கள். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் இவர்களது பங்கு கணிசமாக இருந்தது. இராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்றெடுத்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரை எழுதும்போது பாக்தாத்தை நெருங்கியிருந்தார்கள். முதல்கட்ட வெற்றியை ருசித்தபின் சிரியா மற்றும் இராக்கில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியிருக்கும் பகுதிகளை தனி நாடாக இந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதற்கு கலிபாவாக (மன்னராக) அபுதுவா இருப்பார் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இனி ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் இயங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய தேசம் என்னும் பெயரில் இயங்குவோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேறவேண்டும் என்று கலிபா அழைப்பு விடுத்துள்ளார். நீதிபதிகள், மருத்துவர்கள்,பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய தேசத்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியா, சிரியர்களுக்கு மட்டுமானதல்ல. இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல. முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு விரைந்து வாருங்கள். அல்லாஹ் காட்டிய வழியில் நமது புனிதப் போரை நடத்துவதைத் தவிர இந்தப் புனிதமான ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய புனிதமான பணி வேறு எதுவுமே இருக்கமுடியாது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நமது முன்னோர்களின் வழியில் செல்வோம்!’
நிதி எங்கிருந்து வருகிறது?
அமெரிக்க உளவு நிறுவனங்கள் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. முன்னாள் அதிபர் சதாமின் ரகசிய சொத்துக்கள் இவர் வசம் வந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது. கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு நிதி திரட்டியதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. அல் காயிதாவுக்கு முன்பு நிதி கொடுத்துக் கொண்டிருந்த புரவலர்கள் இப்போது இந்த அமைப்புக்கு உதவுகிறார்களா என்பதையும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் இருக்கும் செல்வங்களை அப்படியே சூறையாடும் பழங்கால ராணுவ பாணியை இந்த அமைப்பு பின்பற்றுகிறது. சமீபத்தில் இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியபோது, அங்கிருந்த வங்கியை சூறையாடியதன்மூலம் மட்டும் சுமார் நானூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இப்போது இரண்டு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு இருக்கலாம் என்பது அமெரிக்க சிஐஏவின் மதிப்பீடு.
விளைவுகள் என்ன?
இஸ்லாம் மதத்தினரின் இரு பிரிவுகளுக்கிடையே பெரும் பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இராக்கில் முதலில் தாக்கப்பட்டவை வழிபாட்டுத்தலங்கள்தாம். வடக்கு இராக் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும் வழிபாட்டுத் தர்காக்களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடி மருந்துகளை வைத்து இவற்றைத் தகர்த்தெறிந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன. வடக்கு மாகாணமான நினேவெஹ் பகுதியில் உள்ள மொசூல், டல் அஃபர் ஆகிய நகரங்களில் இத்தகைய வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்த மதவெறிப்போக்கு மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அதனால உலக அமைதி பாதிக்கப்படும் அபாயமும் அதிகம்.
தீவிரவாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் இராக் இரண்டாக உடையும் அபாயமும் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலை இராக்குக்கு ஏற்பட்டதற்கு அமெரிக்கா ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. நிலைமை கைமீறி சென்றுவிட்ட நிலையில் தற்சமயம் அமெரிக்காவும் நேச நாடுகளும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயங்குகின்றன. இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலைச் சந்தித்த பராக் ஒபாமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்திருக்கிறார். ஆனால் தன்னை உலக போலிஸாக அழைத்துக்கொள்ளும் அமெரிக்காவால் சும்மாயிருக்கமுடியுமா? முடியாது, இராக்கின் நிரந்தரப் பகையாளியான இரான் உதவியுடன் இன்னொரு போரை அமெரிக்கா உருவாக்கும் என்று சில ஐரோப்பியப் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இராக்கில் தீவிரவாதத் தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது. நிவாரணப் பணிகளைக்கூட மேற்கொள்ளமுடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. இராக்கின் உள்நாட்டுப் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள நமது பொருளாதாரத்தை இது நிச்சயம் பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நேரடியாகப் பொதுமக்களைப் பாதிக்கும். உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர். அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம். ஏராளமான இந்தியர்கள் இராக்கில் இன்னமும் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தத்தின்பேரில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பறிக்கப்பட்டு அகதிகளாக அவர்கள் வெளியேறலாம். இப்போதே பலர் வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்திய முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஜிகாதியில் பங்கு கொள்ள விசாவுக்கு விண்ணப்பித்திருப்பது அபாயத்தின் அறிகுறி. இந்தியா தங்கள் பக்கம் இருக்கிறது என்று உலகை நம்பவைக்க ஐஎஸ்ஐஎஸ் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது இடமளிக்கும். உலகின் மிக ஆபத்தான மனிதராக அபுதுவாவை மேற்கத்திய ஊடகங்கள் அடையாளம் காட்டுகின்றன. வீரமும் அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவீரவாதத் தலைவர் என்பதால் அமெரிக்கா இவரை இன்னுமொரு பின்லேடனாகவே பார்க்கிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவிலிருக்கும் இஸ்லாமியர்களை அவர்களுடைய ஆதரவாளர்களாகவே பார்க்கிறது. இந்திய அரசின் மென்மையான போக்கையும் இவர்கள் சாதகமாகவே பார்க்கிறார்கள். எனவே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தவறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக இது வளர்ந்துவிடக்கூடும்.
*****
  • 2003ல் அமெரிக்காவும் தோழமை நாடுகளும் இராக்கை ஆக்கிரமித்த அதே வேகத்தில் இந்த இயக்கம் பாக்தாத்தை நெருங்கிவந்துகொண்டிருக்கிறது.
  • ஐஎஸ்ஐஎஸ் அல் காயிதாவைவிடவும் ஆபத்தானது என்று சிலர் கருதுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இயங்கிவந்த பொகோ ஹரம் போன்ற உள்ளூர் தீவிரவாதக் குழுக்களுடன்தான் இந்த இயக்கத்தை ஒப்பிடமுடியும் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
  • ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை முறியடிக்கும் திறன் மட்டுமல்ல எதிர்த்து நின்று போவராடும் திறனும் பலமும்கூட இராக் ராணுவத்திடம் இல்லை. பின்வாங்கிச்செல்லும் இராக் ராணுவத்தினரிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி தன் பலத்தை இந்த இயக்கம் பெருக்கிகொண்டுள்ளது.
  • ஐஎஸ்ஐஎஸ் இதுவரை ஈட்டியுள்ள வெற்றிக்கு முதன்மையான காரணம் செயலிழந்தும் அதைவிட அச்சமூட்டும்வகையில் நம்பிக்கையிழந்தும் காணப்படும் இராக் ராணுவம்தான்.
  • உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது இந்த இயக்கத்தின் இன்னொரு முக்கிய பலம்.
  • பலரும் நினைப்பதைப் போல் ஐஎஸ்ஐஎஸ் இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுக்காது என்று சிலர் உறுதியாக மறுக்கின்றனர். சன்னி இஸ்லாமிய சமூகத்தின் ஏகப் பிரதிநிதியாக மாறுவது மட்டும்தான் இந்த இயக்கத்தின் நோக்கம், இஸ்ரேலுடன் மோதுவது அல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ரமணன் | August 18, 2014 at 12:21 pm | Categories: அரசியல்உலகம் | URL:http://wp.me/p2eZn6-155
Comment   See all comments

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்