24/10/14

இயற்கையின் சிரிப்பில் இறைவனை காண்பவர்கள்

உலகின் அழகான இடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இடம் ஹவாய் தீவுகள். அடங்கிய எரிமலைகள், அடர்ந்தகாடுகள், அழகிய நீர்விழ்ச்சிகள் பரந்தபசும்புல்வெளிகள், பல வண்ணமலர்கூட்டங்கள்,, வெண் மணலைத்தொட்டுசெல்லும் நீலக்கடல் என பூலோக சொர்க்கமாக பசிபிக் பெருங்கடலில் இருக்கும் இந்த  தீவுக்கூட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலம். 8 தீவுகள் அடங்கிய இந்த தீவு கூட்டத்தின் கடைசியில் இருக்கும் குட்டி தீவு குவாய் (KUHAI). ஓரு மிதக்கும் இலையின் வடிவில் இருக்கும் இந்த  அழகானதீவு முழுவதும் பரவியிருப்பது  பலவிதமான மலர்கள். உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத மலர்களும் இங்கு இருப்பதால்   இதை மலர் தோட்ட தீவு என்றே அழைக்கின்றார்கள்  இந்த  எழில் கொஞ்சும் இடத்தில் நடராஜருக்கு  கடந்த 50  அண்டுகளாக ஒரு கோவில் இருக்கிறது.  அங்கு வழிபடப்படும் ஸபடிகலிங்கத்திற்காக  மற்றொரு பிரமாண்டமான கோவிலும் அருகில்  எழுந்து கொண்டிருகிறது.இந்த கோவிலை நிறுவிய குருதேவர்  கலிபோர்னியாவில் பிறந்தவர். 11வயதில் பெற்றோரை இழந்ததால், குடும்ப நண்பரால் வளர்க்கபட்டவர். அந்த நண்பர்  இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் ஈர்ப்பு கொண்டவராதலால் இந்துமத அடிப்படைகளை அவரிடம் அறிந்தார். யோகா முறைகளையும் அறிந்தார்,  . ஆர்வத்துடன்  கிழக்கத்திய, மேற்கத்திய  நடனங்கள் கற்று  புகழ்பெற்ற சான்பிரான்ஸில்கோ நடனகுழுவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்த அந்த இளைஞன். 19 வயதில் எல்லாவற்றையும் துறந்து  ”முழுமையான உண்மையை” அறிந்து கொள்ள இந்தியாவிற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு அதன் நீட்சியாக இலங்கையை அடைந்தான். அங்கு காட்டுப்பகுதியில் ஒரு குகையில் நீண்ட நாள் தவத்திலிருந்த போது இவரைத்தேடி வந்தவர்  சிவ யோகஸ்வாமி என்ற சிவாச்சாரியர்.  அவர் அந்த இளைஞனுக்கு சுப்ரமணியன் எனப்பெயரிட்டு உபதேசித்து தீட்சை வழங்கினார். அவருடைய அருளாசியால் ஞானம் பெற்ற சுப்ரமணியன் உலகின் பலநாடுகளில் பயணித்து இறுதியில் இந்த இடத்திற்கு வந்த போது இங்கு  சிவபெருமான் வாழ்ந்ததை உணர்ந்திருக்கிறார். . இலங்கையில் அவருக்கு ஞானம் வழங்கியவர்  குரு யோகஸ்வாமி.  சைவசித்தாந்த மரபின் படி  2200 வருட பழமையான கைலாச பாரமபரியத்தில் வந்த குரு. அவர் தனது 77வது வயதில் தன் வாரிசாக சுப்பரணிஸ்வாமியை  நியமித்து தன் பணியை தொடர ஆணையிட்டார்..  அதையெற்று 1970ல் தான் சிவனை கண்ட இந்த இடத்தில்  வழிபட ஒரு கோவிலையும், அதை முறைப்படி நிர்வகிக்க ஒரு ஆதினத்தையும் உருவக்கினார். 31 ஆண்டுகள் சிவாய சுப்ரமணி ஸ்வாமியாக  அவர் வாழ்ந்த இந்த இடம்  படிப்படியாக வளர்ந்து இன்று 363 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது. 2001ல் குருவின் மறைவுக்கு பின்  அவரால் தலவராக நியமிக்க பட்ட போதிநாத வெய்லான் ஸ்வாமியால்  ஆதினம் நிர்வகிக்கபடுகிறது. இவர் கலிபோர்னியாவில் பிறந்த அமெரிக்கர். பள்ளி மாணவனாக இருந்த போதே குருவால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கபட்டவர்.    அமெரிக்கர், ஐரோப்பியர் போன்ற பலநாட்டினர்  இந்த ஆதினத்தின் மரபுகளுக்கேற்ப இந்துவாகி இங்கு வருகின்றனர், வழிபடுகின்றனர்.. உலகின் பல நாடுகளில் இவரை குருவாக ஏற்ற இந்துக்கள் இருக்கின்றனர்.  வழிபாட்டு மன்றங்களும் இருக்கின்றன.  மொரிஷிசியஸ் நாட்டில் ஒரு கோவிலையும் நிறுவயிருக்கிறார்கள்.

கேரளகோவில் பாணியில் சரிவான கூரையிட்ட உயரமான கட்டிடத்தில் கோவில். சன்னதியில் கம்பீரமாக நடராஜர். அதன் முன்னே நுழைவாயிலில்  தனி மண்டபத்தில் பெரிய நந்தி. அருகே தாமரை பூத்த தாடகம். நுழையும் முன் தடாகத்தில் கால் அலம்பிகொண்டபின்  நந்தியாரை வலம் வந்த பின்னர் சன்னதிக்கு போக வேண்டும், வாசல் கதவு அருகிலேயே சந்தனமரத்தில் வடித்த வினயாகர்.  சன்னதிக்கு போகும் முன் கடக்கும் நீண்ட கூடத்தின் இருபுறமும் நாட்டியத்தின் 108 கர்ணங்களை காட்டும் நடராஜரின் பிரபஞ்சநாட்டியவடிவங்களில் சிறிய சிலைகள். தங்கத்தில் மின்னுகின்றன. இந்த கோவிலை நடராஜர் கோவில் என சொல்லுவதில்லை. ”கடவுள் கோவில்” என அழைக்கிறார்கள்


  சன்னதியில் நடராஜர் முன்னே ஸ்படிக லிங்கம் தினசரி காலயில் அபிஷகம் பூஜை... சன்னதிக்கு  இருபுறமும் பெரிய அளவில் பிள்ளையார், முருகன் சன்னதிகள்  தினசரி காலையில்  9 மணிக்கு வரும் பக்தர்களுக்காக பூஜை .  சமஸ்கிருத மந்திரங்களை ஸ்பஷ்ட்டமாக சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய அர்ச்சகர்கள். தமிழக சிவன் கோவில் சம்பிராதயங்கள் கடைப்பிடிக்கபடுகின்றன,  . இப்போது இந்த ஆதினத்தில்  6 நாடுகளைச்சேர்ந்த 21 ஸ்வாமிகள்(இவர்கள் சிவாச்சாரியர்கள் என்று சொல்வதில்லை) இருக்கிறார்கள். மூன்று மணி நேர காலத்திற்கு ஒருவர் என தொடர்ந்து இவர்கள் சிவபூஜை செய்துவருகிறார்கள்.    1973ல் இந்த கடவுள் கோவிலில் பூஜைதுவங்கிய காலத்திலிருந்து விடாமல் தொடர்ந்து செய்யபட்டுவருகிறதாம்.  நடராஜரின் பாதங்களுக்கு அருகில் வைத்து ஆராதிக்கப்படும்  3 அடி உயர ஸ்படிக லிங்கம் தான் உலகிலேயே உயரமான ஸ்படிகலிங்கமாம்.  இதற்கான ஒரு தனிக்கோவிலைத்தான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு ”இறைவன் கோவில்” என பெயரிட்டிருக்கிறார்கள்.  இறைவன், அல்லது கடவுள் என்பது தான் நம்மை காக்கும், உயர்ந்த சக்தி. கோவில் என்பது அந்த சக்தியின்  பல வடிவங்களின்  இருப்பிடம் அந்த வடிவங்கள்தான்  தெய்வங்கள் என்கிறார்கள்..
பசுஞ்சோலையாக இருக்கும் இந்த வளாகத்தின் ஒரு புறத்தில் இறைவனுக்கு கோவில் எழுந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பணி முடிந்தநிலையில் இருக்கும் இந்த கோவில் கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கபட்டது, இப்போது அவரது உதவியாளார்களால் தொடரப்படுகிறது. முக்கிய பகுதிகள் பங்களூர் அருகே இந்தகோவிலுக்கென்றே  ஏற்படுத்தபட்டிருக்கும் சிற்பசாலையில் உருவாக்க பட்டு இங்கே அனுப்படுகிறது. அவைகளை இணைத்து கோவிலை உருவாக்கும் பணியில் தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவிலின் தூண்கள், படிகட்டுக்கள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியுடனும், கலைநுணுக்கத்துடனும் வடிக்கபட்டுகொண்டிருக்கிறது கோவில் கட்டுமானத்தில் கற்கள் மட்டுமே-.   கான்கீரிட், சிமிண்ட் கிடையாது. சன்னதிக்கு தங்க விதானம்,  சுற்றுபுற நடைபாத தளகற்கள்  கூட பங்களுரிலிருந்து இறக்குமதி செய்யபடும் கற்கள்தான். ஒரு மாதத்திற்கு  65000 அமெரிக்க டாலர்கள் செலவாகிறதாம்.. 2017க்குள் முடிந்து கும்பாஷேகத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதற்காக  இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்து  நன்கொடைகள் சேகரிக்கிறார் மடத்தலைவர் போதிநாத வெய்லான் ஸ்வாமிகள்.  மொத்தம்  தேவையான பணம் 16 மில்லியன் டாலர்கள் என்பது  திட்டம். (ஒரு மில்லியன் 10 லட்சம்) 
கோவில்கள் ஹாவாய்தீவிலிருப்பதால் பக்தர்களைத்தவிர நிறைய டூரிஸ்ட்கள் வருகிறார்கள்.  ஒரு  சுற்றுலா சொகுசு கப்பல் இந்த கோவிலைக்காண்பிபதற்காகவே  இந்த தீவில் நிற்கிறது. கோவிலில் உணவோ, தங்க அனுமதியோ கிடையாது. அதனால் இந்த இறைவன் அருளால் அருகில் நிறைய ஹோட்டல்கள். ரிசார்ட்கள்.

இயற்கையாகவே வனப்பு மிகுந்த இந்த வனப் பகுதியை மேலும் அழகாக்கியிருக்கிறார்கள் இவர்கள். செயற்கை அருவி, நீர்தேக்கம் எல்லாமிருக்கும்  தோட்ட பகுதியை புனித காடு என அழைக்கிறார்கள்.  ஆங்காங்கே பெரிய அளவில் கருங்கலில் தக்‌ஷணாமூர்த்தி, ஆஞ்னேயர்,  ஆறுமுகன் சிலைகள்.
ஹவாய் தீவுகளுக்ககே உரிய அழகிய மலர்கள் அனைத்தும் இங்கே இருக்கிறது. சில, உலகில் இந்த தீவில் மட்டுமே மலரும் அபுர்வமான வகைகள்.  இந்த தோட்டதின் மலர்கள்தான் பூஜைக்கு பயன்படுத்தபடுகிறது. ஒரு பகுதியில் காய்கறி  கீரைகள் தோட்டம், இங்கு வசிக்கும் ஸ்வாமிகளுக்கு தேவையான உணவு பொருட்களை இங்கேயே விளைவித்து கொள்கிறார்கள். இமய மலைப்பகுதியில் வளரும் உருத்திராட்ச மரம் இங்கே வளர்வது ஒரு ஆச்சரியம்.   ரூத்திராட்ச மரத்தின் பழங்கள் நீல வண்ணத்திலிருக்கிறது
.
வெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் இந்த ஆதினம்  இந்து மதம், சைவசித்தாந்தம் குறித்து ஆராய்பவர்களுக்கு உதவியாக ஹிமாலயன் அகெடமி என்று ஒரு கல்வி நிறுவனத்தையும். ஹிந்துயிஸம் டுடே என்ற காலாண்டு பத்திரிகையும் நடத்துகிறது  ஆதின தலைவர் சத்குரு போதிநாத வெயிலான் ஸ்வாமிகள் தான் இதன் ஆசிரியர். உலகெங்கும் ஒரு லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள்.  ஆசிரியர்குழுவிலிருக்கும் ஸ்வாமிகள் எல்லாம்  ஆப்பிள் மெக்கிண்டாஷ் கம்ப்யூட்டர்கள், ஐபோன் சாட்லைட் போன் எல்லாம் பயன்படுத்தும்  ஹை டெக்கிகளாக இருக்கிறார்கள்,  இவர்களின் இணைய தளத்தின் மூலம் தலைவரின்  அருளுரைகளும் தினசரி ஒலிபரப்பபடுகிறது
உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கு தங்கள் கோவில்களை நிறுவி வழிபடுவது இந்தியர்களின்-தமிழர்களின் மரபு. ஆனால் இந்தியர்கள் மிக குறைந்த அளவிலியே இருக்கும் இந்த தீவில்  ”அமெரிக்க இந்துக்கள்” இப்படி ஒரு அழகான கோவிலை நிறுவியிருப்பதை பார்க்கும்போது ஏற்படுவது   ஒரு சந்தோஷமான ஆச்சரியம்

கல்கி திபாவளி மலர் 2014ல் எழுதியது


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்