11/1/15

இருளில் நிசப்தத்தை படிப்பவர்


நண்பர் மணிகண்டனின் வலைப்பூவிலிருந்து 





JAN 11, 2015
அடேயப்பா



 நேற்று காலையில் பதற்றமாகத்தான் இருந்தது. இயல்பான பதற்றம்தான். வழக்கமாக புத்தக வெளியீட்டுக்கு முன்பாக இருக்கும். ஆனால் பதிப்பாளரும், வேடியப்பனும் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். கொஞ்ச நேரம்தான். கண்காட்சிக்குள் நுழைந்ததும் இயல்பாகிவிட்டேன். 

திருப்பதியிலிருந்து மகேஷ் தனது நண்பரின் உதவியோடு வந்திருந்தார். வழக்கமாக புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு எழுத்தாளர்கள் சார்பில் ஏதாவது நினைவுப்பொருளை வழங்குவார்கள். அதைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. ஆனால் மகேஷ் எனக்கு வழங்கினார். அதன்பிறகுதான் எனக்கு உறைத்தது. போக்குவரத்துச் செலவையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் அதையும் மறுத்துவிட்டார். பார்வை இல்லையென்றாலும் எப்படி நிசப்தத்தை வாசிக்கிறார் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அவர் கொடுத்துச் சென்ற ஏழெட்டு திருப்பதி லட்டுகளை கண்காட்சியில் எதிர்பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு அழைப்புக்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்.

அதே போலத்தான் திருமதி மீரா ரமணன் தம்பதியினரும். ரமணன் அவர்கள் தனது கைக்காசைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ட்ரஸ்ட்டுக்காக வைத்துக் கொள்ளுங்கள்என்றார். அறக்கட்டளைக்காக கையில் பணம் வாங்குவதில்லை. அது ஒரு எழுதப்படாத விதி. கையில் வாங்குவதையோ அல்லது பெர்சனல் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுப்பதையோ முழுமையாகத் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. வாங்கத் துவங்கினால் அது தேவையற்ற பேச்சுகளுக்கு இடமளித்துவிடும். அதனால் அந்தத் தொகையை பதிப்பாளரிடம் கொடுத்து அதை ராயல்டியுடன் சேர்த்துத் தரச் சொல்லிவிட்டார்கள். ராயல்டி தொகை அரசுப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு வழங்கப்படும் என்பதால் இந்த ஏற்பாடு.

இளவரசன் பத்துப் பிரதிகளை வாங்கி தனது நண்பர்களுக்கு விநியோகிப்பதாகச் சொன்னார். புகழேந்தி ஐந்து பிரதிகள் வாங்கிக் கொண்டு அவரும் அதையேதான் சொன்னார். இன்னும் நிறையப்பேர்கள். அத்தனை பேரையும் நினைவு படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

மாலை ஏழு மணிக்குள் டிஸ்கவரி அரங்கில் கொண்டு வந்து வைத்திருந்த நூறு பிரதிகளும் தீர்ந்துவிட்டன. பதிப்பாளரும், விற்பனையாளரும் இது ஆச்சரியம் என்றார்கள். எனக்கே ஆச்சரியம்தான். இவ்வளவு பேர் நம்புகிறார்கள். தாங்கிப் பிடிக்கிறார்கள். ஏற்கனவே
 ஆன்லைன் ஆர்டர்கள் கிட்டத்தட்ட நூறை நெருங்கியிருக்கும் போலிருக்கிறது. ஆக, பதிப்பாளர் தப்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இதுதான் அவசியம். நம்மை நம்பி முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றுதான் பதற்றமாக இருந்தேன். 
  
 அதெல்லாம் ஒரு பக்கம். 

புத்தகம் அச்சிடுவதும் அதை விற்பனை செய்வதும் கூட பெரிய விஷயமாகத் தெரியவில்லை. பதிப்பாளரிலிருந்து, விற்பனையாளர், வாசித்துவிட்டு நமக்காக மெனக்கெடுபவர்கள் என இப்படியான மனிதர்கள் உடன் நிற்கிறார்கள் அல்லவா? அதுதான் உச்சபட்ச சந்தோஷம். அதற்காக மட்டுமே இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். சிரமப்படலாம்.

மாலை வரை வீட்டிலிருந்து ஒரு அழைப்பும் இல்லை. கிளம்பும் போதே பார்க்கர் பேனா ஒன்றை வாங்கிக் கொடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தாள். இதெல்லாம் ஓவரா இல்லையா?’ என்றேன்.
 எந்த ஃபோட்டோவிலும் அந்தப் பேனா இல்லாமல் நீங்க இருக்கக் கூடாதுஎன்று உத்தரவிட்டிருந்தாள். யாருக்குமே பயப்படவில்லையென்றாலும் அவளுக்கு பயப்படுகிறேன். பயப்பட்டுத்தானே ஆக வேண்டும்? 

மாலையில்தான் அழைத்துக் கேட்டாள் புத்தகக் கண்காட்சியில் உங்களை மதிச்சாங்களா?’என்று. என்ன பதில் சொன்னாலும் ம்க்கும்என்ற பதில்தான் வரும் என்று தெரியும். பதில் சொன்னேன். நினைத்த பதிலேதான் வந்தது.

இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்ற வேண்டும். நேற்றே பட்டியல் தயாரித்துவிட்டேன். இன்று வாங்கி விடலாம். வழக்கமாக கையில் பணத்தோடுதான் வருவேன். இந்த மாதம் புது நிறுவனத்திற்கு மாறியதால் சம்பளம் வரவில்லை. தம்பியிடமிருந்து மூன்றாயிரம் ரூபாய் வாங்கி வந்து எண்ணி எண்ணி செலவு செய்து கொண்டிருந்தேன். அந்தக் கடவுளுக்கே பரிதாபமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பழைய நிறுவனத்தில் இறுதிக் கணக்காக ஒரு தொகையைப் போட்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ் வந்ததும் இரண்டு சிறகுகள் முளைத்ததை அருகிலிருந்தால் நீங்கள் பார்த்திருக்கலாம். இன்று தூள் கிளப்பிவிடலாம். கடவுளுக்கும் நன்றி.

எல்லாத் திசைகளிலிருந்தும் கிடைக்கும் இந்த அன்பும் பிரியமும் எனது உழைப்புக்கும் திறமைக்கும் மீறியது என்று நினைக்கிறேன். உண்மையாகவே மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்