29/3/16

தேசம் பிறந்த கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நகரம்







ழகுறவடிவமைக்கபட்ட அந்தத் திரையரங்கம் நிரம்பியிருக்கிறது. அதி தொழில்நுட்ப ஒலிவசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதன் திரையில்-  ஓடும் காட்சி- கடும் இடியோசையுடன் கொட்டும் மழையில் சுழன்றடிக்கும் காற்றில் மிக வேகமாக ஓடிவரும் குதிரையின் மேல் மழைக்கோட்டும் தொப்பியும் அணிந்த மனிதர். கட்டிட வாயிலை நெருங்கும்போது உள்ளே இன்னும் 5 நிமிடத்தில் ஒட்டு போடும் நேரம் முடிகிறது என ஒருவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். நின்ற குதிரையிலிருந்து தாவிக் குதித்து  ஈர உடையுடனும் சேறு படிந்த காலணிகளுடனும் பாய்ந்த அந்த மனிதர்
 ”நான் வந்து விட்டேன் எனது ஓட்டு புதிய தேசத்துடன் இணைவதற்கானது” என்று சொல்லி ஆவணங்களில்  கையெழுத்திடுகிறார்.
 ”பிரச்சனை தீர்ந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் மாநிலமாக டெலவேர் இணைந்துவிட்டது” என்று தலைவர் அறிவிக்கிறார்.
அந்த அறையில் கூடியிருந்தோர் கைத்தட்டுகிறார்கள். அந்தக்காட்சி, அரங்கத்தில் படக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கைதட்டவைக்கிறது
.

அமெரிக்க நாட்டின் சரித்திரத்திரத்தில் மிக முக்கியமான இடம் பிலடெல்பியா நகருக்கு உண்டு. அமெரிக்கா”ஐக்கிய” நாடாகப் பிறந்தது இந்த நகரில் தான். பெருமை மிக்க தங்கள் நாடு உருவானதை சுற்றுலா பயணிகளுக்கும் வரும் தலைமுறைக்கும் சொல்ல ”நேஷனல் கான்ஸ்டியூஷன் சென்டர்” என்ற வளாகத்தை இங்கு உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சிகள், நூல்நிலையம், விவாத அரங்கு, பயிற்சிவகுப்புகள், திரையரங்குகள் எனப் பலவசதிகளுடன் பிரமாண்டமானதாக அழகாக இருக்கிறது. அமெரிக்க சட்டத்தின் முதல் வாசகத்தை முகப்பு சுவரில் கொண்டிருக்கும் இங்கு, ஆண்டுமுழுவதும் மக்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வருகிறார்கள். வெளிநாடு, உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் குவிகிறார்கள் அந்த வளாகத்திலிருக்கும் ஒரு திரையரங்கில் பார்த்த படத்தின் காட்சி தான் நாம் மேலே பார்த்தது..
சுதந்திர வேட்கை வேகமாக எழுந்து பரவி ஆங்கிலேயர்களை வெளியேற்றப் போராட்டங்கள் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் தாமஸ் ஜெபர்சன்  தலைமையில் அமெரிக்க சுதந்திரபிகடனம் அறிவிக்கப்பட்ட இடம் பிலடெலபியாவின் சட்டமன்றம். இதற்கு இன்று பிஃரிடம் ஹால் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதன் அருகில் தான் இந்த வளாகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.,
13 மாநிலங்கள் இணைந்து சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அமெரிக்க ஐக்கிய நாடு என்ற புதிய தேசம் அறிவிக்கப்பட்டவுடன் அதை ஏற்று மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக இணைய வேண்டும் என்பது திட்டம். ஆனால் பிரகடனம் தயாரானவுடன் முதலில் ஒப்புக் கொண்ட டெலவேர் மாநிலத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சரி சமமான ஒட்டு கிடைத்திருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தவிர்க்க டெலவேர் மாநில அமைப்பின் தலைவர் தன் நண்பர் சீஸர்ரோட்னிக்கு செய்தி அனுப்பி, அவர் குதிரையில் விரைந்து வந்து கையெழுத்திட்டு மெஜாரிட்டி ஒட்டு கிடைக்க செய்த காட்சியைத்தான் படத்தில் பார்த்தோம்.  அமெரிக்க தேசம் பிறந்த கதையைச்சொல்லும் இந்தப்படம் வெறும் ஆவணப்படமாக இல்லாமல் இது போல பல சுவாரசியமான காட்சிகளாலான அருமையான திரைப்படம்.
இங்கே அமெரிக்க நாட்டின் சுதந்திர சம்பந்தப்பட்ட அனைவரையும் அழகாக, ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்கள். அமெரிக்க கொடி பிறந்த கதையையும், அமெரிக்க டாலர் எப்படி வடிவமைக்கப்பட்டது பற்றியும் காதில் மாட்டியிருக்கும் போனில் ஒலிக்க காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நகருகிறோம். இதேபோல் பல தகவல்கள்.
ஜெபர்சன் தங்கி சுதந்திரபிரகடனத்தை இரண்டேநாளில் எழுதிய அறை இருந்த ஹோட்டலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து அன்றிருந்தைப்போலவே பாதுகாக்கிறார்கள். அதேபோல் சுதந்திர பிகடனம் கையெழுத்திட்ட முதல் சட்ட மன்றத்தை அன்றிருந்தது போலவே, அதே மேசைகள் பயன் படுத்திய பேனாக்கள் உட்பட அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார்கள். அழைத்துச் சென்று காட்டி விளக்கம் சொல்பவர் கூட அன்றைய பாணி உடையிலிருக்கிறார். நாட்டின் சுதந்திரம் பற்றிப் பேசும் கட்டிடங்கள் இருப்பதால் இந்தப் பகுதியை" சுதந்திர பூங்கா" என அழைக்கிறார்கள்.
இந்தச் சுதந்திர பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30அடி உயரமும், 900கிலோ எடையும் கொண்ட அந்தப் பிரமாண்டமான ”லிபர்ட்டி பெல்” அதன் பின்னே உள்ள கண்ணாடி சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு அமெரிக்க தேசிய கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது.
காட்சியகத்தில் காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலிஓளிகாட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டுவந்த சுத்தியால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7காவல். .மணியைத் தொட்டுபார்க்க முடியாதபடி அமைத்திருக்கிறார்கள்
.
அமெரிக்காவின் முதல் பாங்க், முதல் சிறை இப்படிப் பல பழைய விஷயங்கள் இந்த பிலடெல்பியா நகரில் இருந்தாலும் எல்லா அமெரிக்க நகரங்களைப் போல நவீனமாகவிருக்கிறது.முக்கியமான பழைய கட்டிடங்களை இடிக்க அனுமதியில்லாதால் அவை அருகிலிருக்கும் கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் தங்களை அழகுபார்த்துக்கொண்டிருக்கின்றன. நகரின் பழைய கட்டிடங்களின் பக்கச் சுவர்களில் மிகப்பெரிய படங்களை எழுதி அழகுட்டும் இயக்கம் ஒன்று வலுவாக இயங்கிக் கொண்டிருப்பதால் நகரில் எங்குப்பார்த்தாலும் பெரிய சவர் சித்திரங்கள்.
தங்கள் நாட்டின் சுதந்திர காலகட்டத்தை அழகாக அடுத்த தலைமுறையினருக்காக இப்படி காட்சியாக்கியிருக்கும் அமெரிக்கர்களைப் பாராட்டத் தோன்றினாலும் நாம் ஏன் இதுபோல இன்னும் செய்யவில்லை? என்று நம் மனதில் எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

(அமுத சுரபி ஏப்ரல் 2016)



2 கருத்துகள் :

உங்கள் கருத்துக்கள்