3/9/16

இரும்பு பட்டாம்பூச்சி

இந்த மாத மங்கையர் மலரில் எழுதியிருப்பது  


 இரும்பு பட்டாம்பூச்சி 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், முதல்வர் திரு இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், சீனாவின் தூண்டுதலுடன், அவ்வப்போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டது. மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் அங்கு 1958-ஆம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட முடியும். மேலும் சந்தேகப்படும் நபர்களை யும் கைது செய்ய முடியும். அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது. 
பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், இதுதொடர்பாக பாதுகாப்புப்படையினர் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தச் சம்பவமே சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவை போராட்டத்தில் இறங்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இரோம்ஷர்மிளா அறிவித்தார்.மணிப்பூர் மாநில உரிமைகளை மீட்கக் கோரி பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுகட்ட போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.
இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து, 16 ஆண்டுக்காலம், இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்தார். உணவு, தண்ணீர் குடிக்க மறுத்து வரும் அவரை, தற்கொலைக்கு முயன்றதாக அரசு கைது செய்தது. 2006ம் ஆண்டு, டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்; பின், விடுவிக்கப்பட்டார். எனினும், மணிப்பூர் திரும்பிய அவர், மீண்டும் கைதானார். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மீது தற்கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. 
 இம்பாலில் உள்ள, ஜவகர்லால் நேரு மருத்துவமனையில், வலுக்கட்டாயமாக அவருக்கு மூச்சு குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டுவந்தது. . தொடர்ந்து, 16 ஆண்டுகளாகப் போராடி வரும்  இரும்பு பெண் என  வர்ணிக்கப்பட்ட அவர்  சிலவாரங்களுக்கு முன் இம்பால் நீதிமன்றத்தில் ஆஜரானபோது  “:ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை, உண்ணாவிரதத்தால் மட்டுமே, முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது. எனவே, ஆகஸ்ட் 9ம் தேதியுடன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என நீதிபதியிடம் தெரிவித்தார்.  
.உண்ணாவிரதப் போராட்டம் இருந்த வரை அவருக்கு இருந்த ஆதரவு அத்தனையும் அவரது அறிவிப்பு வந்தது  முதல் எதிர்ப்பாகிப் போனது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு  மணிப்பூர் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இரோம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்த அதே நேரத்திலேயே அவருக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 
தன்னுடைய  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் இரோம் ஷர்மிளா. ஆனால் தாய், சகோதரர்கள் உட்பட உறவினர்கள் யாரும் அவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. இதற்குத் தீவிரவாதிகள் வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.  இரோம் ஷர்மிளா சென்ற இடமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள்தான் நடந்தன... பின்னர் காவல்துறை அவரை மருத்துவர் தியாம் சுரேஷ் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் வேறுவழியின்றி இரோம் ஷர்மிளா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக அவர் இதுவரை சிறைவாசம் அனுபவித்த 'மருத்துவமனை'யில் தங்க வைப்பது என  முடிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கே அவர் திரும்ப நேரிட்டதுதான் சோகம்!
மறுநாள்  பத்திரிகையாளர் கூட்டத்தில் “எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன்மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன். வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடுவேன். இதில் வெற்றி பெற்று முதல்வரானால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்’’ என்று இரோம் ஷர்மிளா அறிவித்திருக்கிறார்..
எந்த  ஒரு அரசியல்கட்சியின் பின்னணியும் இல்லாமல் ஒரு மிக நீண்ட போரட்டத்தை நடத்திய இந்த இரும்பு பெண் அரசியலுக்கு வரப் போவதை நமது  அரசியல் வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?



 திருமதி ஜோதிமணி (தேசிய காங்கிரஸ்)
நான் பெரிதும் மதிக்கும் ஓர் ஆளுமை இரோம் ஷர்மிளா. வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் காட்டிய சத்தியாகிரஹ வழியில் 16 ஆண்டுகள் உண்ணாவிரதமிருந்து போராடியவர். தனது இளமையையே பலி கொடுத்த அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவது என்பதை என் போன்ற பெண் அரசியல்வாதிகள் பெருமையாகப் பார்க்கும் விஷயம். அவருடைய சமூகப் பார்வையும் போராட்ட குணமும், துணிவும் அரசியலில் ஈடுபடுவோருக்கான தகுதிகள்

ஆனால் அவர் இந்த முடிவை அறிவித்தவுடன் அங்குள்ள போராளிகள் வரவேற்காமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்த விஷயம். இது இம்மாதிரி போராட்டங்களை மேற்கொள்பவர்களின் மன உறுதியை குலையச் செய்யும் கவலையளிக்கும் விஷயம். தன் குறிக்கோளை நோக்கிச் செல்ல அவர் வேறுபாதையைத் தேர்ந்தெடுக்க முயலுவதைத் தவறு என்று சொல்லுவது எந்தவகையிலும் நியாயமாகாது. அதேபோல் அவர் தன் திருமணம் பற்றி அறிவித்திருப்பதும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிரஷட்டமானது. திருமணம் செய்தபெண் அரசியலுக்கு வரக் கூடாது என்று .பேசப்படுவது பெரும் துயரமான அதிர்ச்சி
வடகிழக்கு மாநிலங்களின் எங்கள் கட்சி பொறுப்பாளராக நான் இருந்திருக்கிறேன். அதனால் அங்குள்ள பிரச்சனைகளின் முழுத்தீவீரமும் அறிந்திருக்கிறேன். சுயேட்சையாக வெற்றி பெற்று முதல்வராக முடிந்தால் கூட அவரால் மட்டும் இந்தச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அது முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில் இருக்கிறது. இப்போது மணிப்பூரில் இருக்கும் காங்கிரஸ் அரசும் இந்தச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை கருதி எல்லைப்பகுதியில் இப்படியொரு சட்டதேவையை ராணுவ அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் உணர்ந்ததனால் அங்கு இது இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அது அத்துமீறி மக்களுக்கும் குறிப்பாகப் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்படும்போது அதுகுறித்து பெரிய அளவில் விவாதம் செய்யப்படவேண்டிய விஷயம் என்பதை ஏற்கிறேன்
--------
திரு அருணன். (இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி)


   16 ஆண்டுகள் இப்படி உலகில் யாருமே செய்யத்துணியாத ஒரு உண்ணாநிலையை நிகழ்த்தித் தன் நோக்கத்தை உலகமறியச் செய்த இந்தப் பெண்மணியின் மகத்தான தியாகத்தை ஒரு அரசியல் வாதி என்ற முறையில் நான்  போற்றி பாராட்டுகிறேன். 28 வயதில் துவங்கி 44 வயது வரை இப்படித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவரை உலகம் இதுவரை சந்தித்தில்லை என் கார்டியன் பத்திரிகை எழுதியிருக்கிறது. இவர் செய்துவந்தது ஒரு தியாக வேள்வி. அதன் மூலம் தன் இலக்கை அடைவதில் வெற்றிபெற முடியவில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து தானே அதைக் கைவிடவும், ஆனாலும் தொடர்ந்து தன் லட்சியத்துக்காக வேறு வழியில் போராட துணிந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

7 சகோதரிகள் என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதிகளில் அமுலாக்கியிருக்கும் வலிமைவாய்ந்த இந்தச் சட்டத்தின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு இந்திய ராணுவம் அளித்த வலி, வேதனை இந்த நாட்டில் பலருக்குத்தெரியாது. அன்னிய ஊடூஉருவலையும், தீவிரவாதிகளையும் தடுக்க உதவும் இந்த சட்டத்தைத் துஷ்பிரோயகம் செய்து அங்குள்ள மக்கள் குறிப்பாகப் பெண்கள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதைக்கண்டு கொதித்தெழுந்த இரோம் ஷர்மிளா   தன் போராட்டத்தைத் துவங்கினார். ஒரு கட்டத்தில் மக்கள் ஆதரவு திரண்டு பெண்கள் நிர்வாணமாக நின்று சாலைமறியல் செய்தார்கள். எந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இதைச் செய்திருப்பார்கள்?. அவர்களின் இந்த நிலையை, ராணுவத்தின் அத்துமீறலை நாட்டுமக்களின், உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தது இவரின் போராட்டம் தான். இன்று அவர்  உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அங்குள்ள சிலர் எதிர்ப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எந்தவகையிலும் நியாமில்லை. கொள்கைக்காக 16 ஆண்டுகள் போராடிய ஒரு போராளியை யாரும் வாழ்நாள் முழுவதும் தொடரும் படி நிர்ப்பந்திக்க முடியாது. அது தவறு.

இரோம் ஷர்மிளா  அரசியலில் களம் இறங்குவேன் என்ற அறிவிப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. இம்மாதிரி தீவிர கொள்கைப்பிடிப்பு இருப்பவர்கள் இந்திய அரசியலுக்கு வரவேண்டியது இன்றைய சூழலுக்கு மிக அவசியம். ஆனால் சுயேட்சையாக நின்று முதல்வராகி சட்டத்தை நீக்குவேன் என்பதுதான்  சற்று புதிராக இருக்கிறது. மணிப்பூர் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். அதில் 31 பேர் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றால் தான் இது முடியும். மிகச்சவாலான இது இன்றைய பெரும்பான்மை கட்சி ஜனநாயகத்தில் இந்தக் கனவு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. சிலநாட்கள் முன் அவர் ஒரு புதிய கட்சி துவக்கி களம் காணுவார் என்ற செய்திகள் வந்தனஒருக்கால் அப்படி நிகழ்ந்தால் இவரது கனவு நனவாகும் வாய்ப்புகள் அதிகம்
-------
திருமதி வாசுகி ( தலைவி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்)


இதுநாள்  வரை ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்து  தனிநபர்  சத்தியாகிரஹ போராட்டத்திற்குக் கிடைத்த மக்கள் ஆதரவை  உணர்ந்த அவர் தன் போராட்டவடிவை மாற்றி   அரசியல் தளத்திற்கு வர முடிவுசெய்திருப்பது  மிகவும்  வரவேற்கத்தக்க விஷயம்.
சுயேட்சை வேட்பாளராக  மக்கள் ஆதரவுடன் தேர்தலில் அவர் பெரிய வெற்றி பெறலாம். ஜெயிக்கும்கட்சி  அல்லது அணி அவரை அமைச்சராகக் கூட அறிவிக்கலாம். ஆனால் அவருடைய இலக்கை அடைய  அரசியலில் அவர் எடுக்கப்போகும் நிலைப்பாடு மிக முக்கியம். அவர் இத்தனை நாள் போராடிய. விஷயத்தை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்தாலோ அல்லது சுயேட்சையாக இருந்து அவர்களின் ஆதரவைப்பெற்றாலோ  இதுநாள் வரை அவர் போராடியது அர்த்தமில்லாமல் போய்விடும்,

மணிப்பூரைப் போன்ற சுழலில் இருக்கும் திரிபுராவிலும் இந்தச் சட்டம் இருக்கிறது. அங்கு இருக்கும் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சி அதை அவசியமான எல்லைப்பகுதிகளில் மட்டும் தேவையான அளவில் செயல்படுத்துகிறது. அதைப்போல ஒரு நிலை மணிப்பூரில் ஏற்பட இடது சாரிகளுடன் இணைந்து தோள்கொடுப்பதுதான் அவர் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு என் நான் நினைக்கிறேன். இது பலவகையில் பலன் தரக்கூடிய முடிவாக இருக்கும் .
  மங்கையர் மலர்  அக் 16






கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்