24/1/18

யானைக்குட்டியை தூக்கிய பாகுபலி
தான் விரும்பும் பணியைச் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வேலையை பொருளாதரா அழுத்தங்களினால் தொடர்பவர்கள் பலர். ஆனால் கோவையைச் சேர்ந்த சரத்குமார் இவர்களிலிருந்து மாறுபட்ட இளைஞர். பட்டபடிப்பு முடித்த இவருக்கு கிடைத்த வேலை ஒருதொழில் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி. காடுகளையும் யானைகளையும் நேசிக்கும் சரத்குமாருக்கு அந்த வேலையில அவ்வளவு பிடிப்பில்லை. தனது மாவட்ட எல்லையில் ஒரு நாள் யானை ஒன்று புகுந்து அட்டகாசகம் செய்து கொண்டிருந்தது. அதை விரட்ட வனத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த சரத் குமாருக்கு தெரிந்த ஒரு விஷயம் வனத்துறையில் யானைகளை தந்தங்களுக்க கொல்வதை தடுப்பதற்கும், மனிதர்கள் வாழும் பகுதியில் வரும்யானைகளை விரட்டித் திரும்ப காட்டுக்குள் அனுப்ப தனியாக ஒரு ஸ்குவாட் இருப்பது. உடனேயே பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வனத்துறையில் அந்தப் பணியில் சேர்ந்தார். சம்பளம் குறைவுதான். ஆனால் அவர் நேசிக்கும் யானைகளை தினசரி பார்க்கலாம் என்ற நிறைவு.

கடந்த மாதம் இவர் செய்த ஒரு துணிவான செயலால் இன்று இவர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் வனவிலங்குகளின் நல ஆர்வலார்களால் பாராட்டப்படுகிறார்.

பாவனி ஆற்றில் நீர் அருந்த வந்த பெரிய யானை ஒன்று நதிக்கரையிலிருக்கும் கிராமமான சமயபுரத்தின் உள்ளே புகுந்து இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் கடைகளையும் உடைத்து நொறுக்கி துவம்சம் செய்து கொண்டிருக்கிறதாக செய்தி வந்தவுடன் சரத்குமார் தன் குழுவுடன் அங்கு விரைந்தார்.
பணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கும் சரத்குமாருக்கு பலயானைகளையும் அதன் குணங்களையும் பற்றி நன்கு தெரியம். வந்திருப்பது வயதான ஒரு பெண்யானை. 3 மணி நேரம் போராடி அதைக்காட்டுக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர் குழுவினர். ஆனால் அரைமனிக்குள் திரும்பவும் வந்து கண்ணில் பட்டதையெல்லாம் மிதித்து நொறுக்க ஆரம்பித்தவிட்டது அந்த யானை. அப்போது சரத்குமார் கவனித்த விஷயம் அந்த யானை ஏதோ ஒரு கோபத்திலிருக்கிறது என்பதைத்தான். மறுபடியும் அதை விரட்டிவிட்டு அதன் கோபத்துக்கு காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே நடந்த போது அவர் பார்த்தது.

 காட்டில் உபரிநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட கால்வாயில் சிலாப் திறாந்து கிடந்த்தையும் அதன் உள்ளே   பள்ளத்தில் விழுந்திருந்த சின்ன சிறு யானைக்குட்டியையும். . பிங்க் வண்ண துதிக்கையுடன் சின்னஞ்சிறு பிறந்து 10 அல்லது 15 நாளே இருக்கும்  அந்த யானைக்குட்டி. சரியாக நிற்க, நடக்க்க் கூட தெரியாத அந்த குட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டிருக்கிறது. வெளியில் வரத்தெரியவில்லை. தாய் யானை பள்ளத்தின் ஒருபுறம் அது வெளிவர மண்னைத்தள்ளி மேடாக்கி முயற்சித்திருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியே வரத்தெரிய வில்லை. தன் அருமைக்குழந்தையை மீட்க முடியாமல் தவித்த தாயின் கோபம் தான் தாக்குதலுக்கு காரணம்.

பள்ளத்தில் தவிக்கும் குட்டியைப் பார்த்தவுடன் விஷயத்தைப் புரிந்த கொண்ட சரத் குமார் குழுவினர் பள்ளத்தினுள்ளே இறங்கி பயந்து மிரண்டு போயிருந்த அந்தக்குட்டியை வெளியே கொண்டுவந்தனர். தாயின் பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாத அந்த பச்சைக்குழந்தையை காட்டுக்குள் விரட்டமுடியாது. அதன் தாய்வரும் வரை காத்திருக்கவும் முடியாது. மேலும் மனிதர்களுடன் குட்டியைப் பார்த்தால் அவர்கள் செய்யும் உதவியைப்புரிந்து கொள்ளாமல் பயங்கரமாகத்தாக்கும் அபாயாமும் உண்டு
.
அப்போது அவர் செய்ததுதான் வீடியோவில் வைரலாகப் பரவி உலகை ஆச்சரியபடுத்திக்கொண்டிருகிறது 
அந்த குட்டி யானையை தன் தோள்களில்., பாகுபலி கனமான லிங்கத்தை தூக்கியதைப் போல 50 மீட்டர் தூரத்திலிருக்கும் ஜீப்புக்கு ஒட்டமும் நடையுமாக வேகமாக கொண்டுசென்றார். உள்ளூர் போட்டோகிராபர் எடுத்த அந்த வீடியோவை பிபிசி  செய்தியில் காட்டியது

100 கிலோ கனமிருக்கும் அதை எப்படி ஒருவராகத்தூக்கினீர்கள்? என்ற கேள்விக்கு சரத் சொன்னபதில். “எனக்கே தெரிய வில்லை. அந்த வினாடியில் அதை உடனடியாக ஜீப்புக்குகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணம் தான் மனதிலிருந்தது”. மேலும், இரண்டு மூன்றுபேர் ஒரு குட்டியைத்தூக்குவது என்பதும் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்குத்தெரியும்
காட்டுக்குள் 12 யானைகள் கூட்டமாக இருக்கும் ஒரு குழுவில் அதன் தாய் யானையை அடையாளம் கண்டு அதனருகில் குட்டியைவிட்டு பாதுகாப்பான தூரத்தில் காத்திருந்தோம். அப்போது காலை 3 மணி என்பதால் தாய்யானை அதை அழைத்துசென்றதைப்பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போது  காடே அதிரும்படியான அதன் சந்தோஷப் பிளிரலில் எனக்கு செய்தி கிடைத்துவிட்டது என்கிறார் சரத்குமார்
கல்கி 28/01/18ல் எழுதியது
 https://youtu.be/XufMeIFn4A8

16/1/18

குடகு மலைக் காற்றினிலே 7தலக்காவிரி, பாகமண்டலாவிலிருந்து திரும்பும்போது கவனித்த விஷயம் பல இடங்களில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஓடிப் பின் இணைந்து தீவுக் கிராமங்களை உருவாக்கியிருக்கிறது என்பதையும் அதனால் பல இடங்களில் அந்தக் கிராமங்கள் ஒரு தொங்கு பாலங்களால் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும். வெள்ளக்காலங்களில் பரிசல் விபத்துக்க:ளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஒரு பாலத்தில் நடந்து மறுகரையிலிருக்கும் கிராமத்துக்குப் போகிறோம். நடைப்பாதைப் பாலத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்ற போர்டை கடந்து வரும் அவைகள் நம்மைப் பயமுறுத்தாமல் மெல்ல உரசி செல்லுகின்றன. கரும்பு செழித்து வளர்ந்து வெட்டுப்பட உடலை வளைத்து நிற்கின்றன. 

 குஷால்பூர் மெடிக்கேரி மலையடிவாரத்திலிருக்கும் சின்ன நகரம். பல எஸ்டேட் உரிமையாளார்களீன் வீடுகளும் அலுவலகங்களும் இருப்பதால் நகரம் பெரிய வீடுகள் ஆடம்பர அலுவலக கட்டிடங்கள் என்று மெல்ல பணக்கார சாயலைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒரு திபேத்தியர்களின் பெளத்த மடத்தைப் பார்க்க விரும்பி நாம்டொரிலிங் மானஸ்ட்ரிக்கு (Namdroling Monastery) வழி கேட்கிறோம். ஓ; தங்க புத்தர் கோவிலா? எனக்கேட்டு வழி சொல்லுகிறார்கள். எளிமைப்போதித்த புத்தரை அடையாளம் காட்டுவது அவர் மீதிருக்கும் தங்கம்
,
புத்தர் நிர்வாணம் அடைந்தபின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் ஏற்பட்ட மாறு பட்ட கருத்துக்களினால் புத்தமதத்தில். 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும் மேல் திபெத்தில் பிறந்தவை. அதில் ஒன்று தான் நாம்டொரிலிங் பிரிவு. சீன ராணுவத் தாக்குதலால் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு அகதிகள் அந்தஸத்தை அளித்து இந்தியாவின் சிலபகுதிகளில் இடமும் வாழும் வசதியையும், கொடுத்தது அன்றைய அரசு. அப்படி இங்கு வந்துசேர்ந்த அகதிகளில் ஒரு புத்த பிட்சு இந்த மடத்தின் 11 வது தலைவர். அவருடன் வந்த 10 பேருடன் ஒதுக்கபட்ட காட்டுப்பகுதியில் முதலில் மூங்கிலால் உருவாக்கபட்ட கோவில் இன்று தங்கபுத்தர் கோவிலாக வளர்ந்திருக்கிறது.


உள்லே நுழைந்தால் எல்லாமே பிரம்மாண்டமாகயிருக்கிறது. பெரிய முற்றத்தை சுற்றி ப வடிவில் கல்லூரி ஹாஸ்டல் மாதிரி 3 மாடி கட்டங்கள். உள்ளே பசுமையான புல்வெளீயின் நுனியில் கோயில்கள். முதல் கோயிலின் முகப்பில் நிறுவியவரின் பெரிய ஸைஸ் படம். அவர் தெய்வ நிலையை அடைந்துவிட்டதால் வழிபடத் தக்கவாராம். அதன் அருகே ஒரு. பெரியதியட்டர் சைசில் இருப்பது தான் புத்தர் கோவில்.அதில் அவரும் அவரது குருவும் தங்கமயமாக இருக்கிறார்களாம். வரும் பிப்பரவரி திருவிழாவிற்காகப் புத்தர் புதிய தங்க மூலாம்பூச்சில் குளித்துக்கொண்டிருப்பதால் பார்க்க முடியாது என்றார்கள்.
அங்குள்ள கட்டடங்களின் உள்ளும் புறமும், ஜன்னல், தூண்கள் கதவு மேற்கூரை எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் அழுத்தமான வண்ணங்களில் திபேத்திய- சீனப்பாணி படங்கள் கலை வடிவங்கள், மிக அழகாக நம்மைக்கவர்கிறது. சுவர்களில் பெரிய அளவுப் படங்கள். அவை ராமாயணத்தின் அடையாளம் காட்டுவது போல இருந்தாலும் பெளத்தில் ஏது இராவணன்? எனக் குழம்புகிறோம். கண்ணில் படும் துறவிகளும் நமக்குப் பதில் சொல்லுவதில்லை, மெளன விரதமோ, மடத்துவிதியோ, ஆங்கிலம் தெரியதோ என நினைத்துக்கொள்கிறோம்.
1963ல் துவக்கப்பட்ட மடம் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்க உள்பட 10 நாடுகளில் கிளைகளுள்ள மடத்தின் தலமையகம் இது. அவர்களின் மதக்கல்வி பெற உலகின் பல இடங்களிலிருந்து துறவிகள் வருகிறார்கள். சுமாராக 3000 பேர் 800 பெண் துறவிகள் உள்பட இங்கே இருக்கிறார்கள். புத்த மதத்துறவி பயிற்சிக் கல்லூரி, துறவியாகப் போகும் மாணவர்களுக்கான பள்ளிக்கூடம், மருத்துவமனை எல்லாம். என்று ஒரு வசதியான ஹை டெக் கிராமே இந்தக் கோட்டைக்குள் இயங்குகிறது
.
செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார்கள்? நன்கொடைகள் என்கிறார்கள், மேலும் இங்கு பயிற்சி பேரும் துறவிகளுக்கான கட்டணத்தை அந்தந்த நாட்டிலிருக்கும் செல்வந்தர்கள் ஏற்கிறார்கள் என்கிறார்கள். நூலகம்-- மருந்துக்கூட ஒர் ஆங்கிலப்புத்தகம் இல்லை. எல்லாம் திபேத்திய சீனப்புத்தகங்கள். வளாகத்தினுள்ளே திபெத்தில் இவர்கள் மடம் இருந்த இடமான இமயமலைக் கிராமம் இருந்த இடத்தின் மாடலை வைத்திருக்கிறார்கள்
.
நாட்டுமக்களின் எல்லா மதங்களும் சமமானவை என்ற சார்பற்ற கொள்கைக் கொண்டிருப்பது நமது அரசியல் அமைப்புச் சட்டம். அந்தக் கெளரவத்தை வந்த அகதிகளின் மத்த்துக்கும் வழங்கி அதையும் வளர்க்க வழி செய்திருப்பதைப் பார்க்கும்போது, பெருமையாகவும், இதைப்புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்யப்படுவதைக் குறித்து வருத்தமாகவும் இருந்தது.
வளாகத்தின் ஒரு முனையில் பிரார்த்தனை, கலைப்பொருட்கள், புத்தர் வடிவங்கள் விற்கும் கடை. சிக்கிம் பூடானில் கிடைக்கும் பொருட்கள் கூடக் கிடைக்கிறது. விற்பவர்கள் துறவிகள். ஆங்கிலம் பேசுகிறார்கள். பேரம் பேசமுடிகிறது.கார்ட் ஏற்கும் வசதியில்லை.       வாங்கிய பொருளுக்கு எவ்வளவ ஜிஎஸ்டி என்று கேட்டேன். எங்களுக்கு விலக்கு இருக்கிறது ஆனால் பில் கிடையாது என்றார் துறவி.   வரி விலக்கு    உண்மைதானா?- அந்தப் புத்தருக்குதான் வெளிச்சம்.
மறுநாள் மைசூரிலிருந்து திரும்பும் பயணம். சதாப்தி மதியம் தான் என்பதால் 'சுக- வனம்' என்ற கிளிகள் காப்பகத்துக்குப் போனோம். சத்திதானந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்திலிருக்கிறது அது. அழகான தோட்டம் முழுவதும் மிகப்பெரிய கொசுவலைக்குள். உள்ளே சிறிதும் பெரிதுமாகக் கூண்டுகள். அவற்றினுள்ளும் , வெளியிலும் உலகின் பல நாட்டு வண்ணக் கிளிகள். நாம் தபால்தலைகளில் பார்க்கும் அழகான வண்ணக்கிளிகள். பல சைஸ்களில். சில கிளிகள் என்று நம்பமுடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஒரே இடத்தில் பல இனக்கிளிகள்: இருக்குமிடம்  என  கின்னஸ்  இதைச் சாதனையாகச்சொல்லுகிறது.
அழகாக இருந்தாலும், ஆசாபசங்களை கடந்து விடுதலைப்பெற மனிதர்களுக்கு வழி சொல்லும் ஆசிரமத்தில் ஏன் இவைகளை இப்படி சிறையிட்டுவைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இறைவனிடமிருந்து ஸ்வாமிகளுக்கு என்ன கட்டளையோ நமக்குத் தெரியாது. என்று எண்ணிக்கொள்கிறோம்.
சதாப்தி கிளம்பிவிட்டது. 
இன்று இரவிலிருந்து குடகுமலைக்காற்றை மறந்து “நம்ம’ சென்னைக்காற்றுதான். 

13/1/18

குடகு மலைக்காற்றினிலே 6அமைதியாகப் பாயுமிடங்களிலெலாம பசுஞ்சோலைகளாக வயல் வெளிகளை வாரியிரைத்துக்கொண்டே போகும், பாயாததால் பிரச்சனைகளையும், அரசியலையும் உருவாக்கும் காவிரிப்பெண்ணின் பிறந்த வீடு மிக மிகச் சிறியதாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆராவார நீர்விழ்ச்சியாக விழுந்து அலைபுரணடு நதியாகப் பரந்து விரிந்து பாயும் காவிரிப் பெண் இந்த இடத்தில் சமர்த்துப்பெண்ணாக, மிகவும் சாதுவான பெண்ணாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறாள். ஆமாம் உண்மையில் உற்பத்தியாகும் சுனையைக்கூட இன்று பார்க்கமுடியவில்லை.
சங்ககாலப் பாடல்களிலிருந்து இன்றைய திரைபாடல் கவிஞர்கள்வரை பாடப்பெற்ற காவிரி பிறந்த தலைக்காவேரிக்கு மெடிக்கேரியிலிருந்து 45 கீமி தொலைவிலிருக்கும் பிரம்மகிரி என்ற மலைப்பகுதிக்கு பயணிக்கிறோம்.
வழியெங்கும் பசுமைபோர்த்திய மலைக்கிராமங்கள். பெரிய தோட்டங்களின் இடையே. சின்னச் சின்ன வீடுகள். எல்லோருடைய வீடுகளிலும் மிளகுக் கொடிகள் கிழங்கு வகைகள் காய்கறிகள் தோட்டம். நாம் சென்ற பாதைகளிலிருக்கும் வீடுகளின் வாசலில் அன்று பறித்த பச்சை மிளுகு காயவைக்கபட்டிருக்கிறது
.
ஒரு வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் தமிழ் நாட்டுக்குக் காவிரி தண்ணீர் வராதது பற்றி அவர்களுக்குத் தெரியுமா என்பது பற்றிப் பேச முயற்சித்தேன். தங்கள் வேலையிலே கவனமாக யிருந்ததாலும், பேசுவது குடகு மொழி கலந்த கன்னடமாகயிருந்தால் அதிகம் பேச முடியவில்லை.
தலக்காவிரி (இங்கு அப்படித்தான் சொல்லுகிறார்கள்) மேற்கு மலைத்தொடர்ச்சியின் மலைப்பகுதியான இதில் 4000 அடி உயரத்தில். ஒரு சிறிய வற்றாத ஜீவ நீர்ச்சுனையாக இருப்பதுதான் காவிரியின் துவக்கம். அந்தச் சுனையிருக்குமிடத்திலிருந்தும் அது நதியாகப் பெருக்கெடுக்க வில்லை. அந்த இடத்தின் கிழே பல மீட்டர்கள் ஆழத்தில் நதியாக வெளிவருகிறது ஓட்டமும் நடையுமாக 800 கீமி ஒடி (கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ.) பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது
.
நதிகளைத் தெய்வமாகப் பூஜிக்கும் நம் நாட்டில் காவிரிக்கு தனியிடமிருக்கிறது. இரண்டு மாநிலத்திலிருந்து மட்டுமில்லை வட மாநிலங்களிலிருந்து வந்தவர்களையும் இங்குப் பார்க்க முடிகிறது. மலைப்பாதையில் ஒரு சுனை போல இருந்த இடத்தை இப்போது மிகப்பெரிய வளாகமாவே ஆக்கியிருக்கிறார்கள். பிரமாண்ட நுழை வாயில் அகலமான படிகள் வரவேற்கிறது. Thalakaveri temple என்ற பெயர் பலகை இதற்குக் கோவிலின் அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருப்பதைச் சொல்லுகிறது. வழவழ தரையுடன் பெரிய பரப்பு, உட்கார்ந்து மேற்கு குடகு மலைகளை ரசிக்க வசதியான நாற்காலிகள் எல்லாம். படு சுத்தமாக இருக்கிறது
.
படிகள் ஏறி காவிரித்தாயின் பிறக்கும் இடத்தைப் பார்க்க சென்ற நம் கண்களில் படுவது ஒரு ஸ்மிங்க் பூல் மாதிரி ஒரு நீர்த்தொட்டி அதன் தலைப்பக்கத்தில் ஒரு சின்ன அலமாரி சைசில் கதவுகள் மூடிய மண்டபம். அதற்குள்ளூம் அதன் கீழும் தான் காவிரிப்பெண் முதலில் மண்ணை முத்தமிடுகிறாளாம். அந்த மண்டபத்தின் முன் சட்டையுடன் இருக்கும் பூஜாரி முன் அமர்ந்து பூஜை செய்கிறார்கள். என்ன பூஜை செய்வீர்கள்? என அந்தப் பூஜாரியிடம் கேட்டதற்கு பதில் “தம்பதிகளுக்கு 100 ரூபாய் குடும்பத்துதுக்கு 500 ரூபாய்” என்றார் . என்ன பூஜை என்பதைச் சொன்னால் இவனுக்குப் புரியாது என அவர் நினைத்திருக்கலாம். அல்லது யாரும் கேட்காத கேள்வியைக் கேட்பவனுக்கு இந்தப் பதில் போதும் என நினைத்திருக்கலாம்.

சுனையிலிருந்து வெளி வரும் நீர் இங்கு முதலில், சேர்கிறது. அதில் நீங்கள் குளித்தால் தலக்காவேரி ஸ்நானம். ஆயிற்று. உடைமாற்றிக்கொள்ள பெரிய அறைகள். துணிகளை அலசிக்கொள்ள வசதிஎல்லாம். துண்டு கொண்டுவர மறந்தவர்களுக்கு நுழைவாயிலில் விற்கிறார்கள். விலை நியாமாகயிருக்கிறது
.
இந்த இடத்திலிருந்து படிகள் ஏறி மலைமீது சென்று அந்தக் குன்றின் உச்சியை அடைய வழி செய்திருக்கிறார்கள். அங்கிருந்து பார்த்தால் மிக அழகாக இருக்கிறது. மலைமுழுவதுக்குமே பச்சை பெட்ஷிட் போர்த்தியது போல எங்கும் பசுமை பனி மூடாத நாட்களில் அரபிக் கடலையே இங்கிருந்து பார்க்கலாம் என்றார்கள். அரபி கடலைவிட மூடுபனி பிடித்திருந்தால் அதைப்பார்க்காததில் வருத்தம் இல்லை.

தலக்காவிரிக்கு போகும் வழியிலிருப்பது பாகமண்டலா கோவில். இந்த இடத்தில் காவிரி கன்னிகே என்ற உபநதியான கன்னிகே என்ற நதியுடனும் கண்ணிற்கு தெரியாத சுஜ்யோதி என்ற தரைக்கடியில் ஒடும் நதியுடன் சங்கமிப்பதால் இதைத் திரிவேணி சங்கமம் எனச் சொல்லுகிறார்கள். இங்கு குளிப்பதும் இந்த பாஹேந்தேஸ்வர் கோவிலுக்குச் செல்வதும் மிகப்புண்ணியம் என்கிறார்கள்.

நதிக்கரையிலிருப்பதால் கோவில் தரைப்பகுதியிலிருந்து நல்ல உயரத்தில் அமைக்கபட்டிருக்கிறது. கோவில் கேரளப் பாணியிலிருக்கிறது. மூன்றடுக்கு முகப்பு உள்ளே பெரிய முற்றத்தில் செப்பு கூரையிட்ட தனிதனிக் கோவில்களில். மஹாவிஷ்ணுவுடன் முருகனும் கணபதியும் இருக்கிறார்கள்.  நம்மூர்களில் சன்னதியைப் பார்த்து நந்தி, கருடன் இருப்பது போல வினாயகர் சன்னதியைப் பார்த்து இருக்கிறார். அர்ச்சனை. ஆர்த்தியெல்லாம் நினைத்த நேரத்தில் கிடையாது. கோவில் பூஜை நேரம்வரை காத்திருக்க வேண்டும்.
1785லிருந்து 1790 வரை திப்புவின் ஆட்சிக்காலத்தில் இந்த கோவில் எரிக்கப் பட்டுவிட்டதாகவும் போரில் வென்ற குடகு மன்னன் வீர ராஜேந்திரன் வெற்றிக்குப் பின் செய்த முதல் காரியமாக இந்தக் கோவிலைச் சீரமைத்ததாக வரலாறு சொல்லுகிறது.
திரும்பும் வழியில் ஆசியாவின் முதல் மின் திட்டமான சிவசமுத்திர திட்டத்தின் ஒரு பகுதியையும், சிவசமுத்திர அருவியைத் தொலைவிலிருந்து பார்க்க ஒரு வியூ பாயிண்ட் இருக்கிறது, எங்கிருந்து பார்த்தலும் நான் அழகாகத்தான் இருக்கிறேன் என்கிறது அந்த அருவி
.
மைசூர் சமஸ்தானத்தில் பதவியிலிருந்த ஆங்கிலேயே அதிகாரிக்குப் படு வேகத்தில் மிக உயரத்திலிருந்து விழும் இந்த அருவியைப் பார்த்தவுடன் ஷாக் அடித்த்து போல எழுந்த எண்ணம் மின் உற்பத்தி. மன்னர் உடையாரிடம் திட்டத்தைசொல்ல அவர் அதையேற்று அத்தனை உதவிகளையும் செய்ய ஆணையிடுகிறார். யானை குதிரை எல்லாம் பயன் படுத்தப்பட்டு அந்த காட்டில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இழுத்து வந்து பொருத்தபட்டு மின் உற்பத்தி துவங்கிறது. அதைக் கோலார் தங்கச்சுரங்கம் வரை கொண்டு செல்ல இறக்குமதி செய்யப்பட்ட மரக்கம்பங்கள் சந்தித்த பிரச்னைகள் அரசரின் கோபம் பற்றிப் படித்த. பெயர் மறந்த புத்தகம் நினைவுக்கு வந்தது. மாலனிடம் கேட்க வேண்டும் 1902 இந்தியாவின் முதல் மட்டுமில்லை ஆசியாவின் முதல் நீர் மின் தொட்டம் இது.  700kw மின்சக்தி தரும் இது இன்னும் இயங்குகிறது 


அந்தப் பகுதில் சற்று நடந்து பின்னர் காரில் பயணத்தைத் தொடர்தோம் ஈரம் மிகுந்த காற்று நம்மைத் தீண்டுவதுபோல என தி ஜ ரா நடந்தாய் வாழி காவிரி யில் எழுதியிருக்கும் வாசகங்கள் நினைவில் தாக்குகிறது.
காவிரி ஓட்டத்தின் சத்தம், நீர்வீழ்ச்சியின் திவலைகள், கரைகளில் வளர்ந்திருக்கும் பூக்களின் வாசனை எல்லாவற்றையுமே அவரது எழுத்தின் வழியாக உணர வைத்த அந்தப் புத்தகத்தைச் சென்னை திரும்ப்பியதும் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டே கொண்டே திரும்பினோம்.

10/1/18

சென்னைப் புத்தக கண்காட்சி 2018


இன்றைய புத்தக்கண்காட்சியில் வெளியாகும்

 எனது புத்தகம் 1
........ஜன்னலோரஇருக்கையிலிருக்கும் நம்மைத்தொட்டுச்செல்லும்  மெல்லிய காற்றலைபோல விரைவாக  கடந்துபோகும் காட்சியாக இல்லாமல், சில பயணநினைவுகள்  நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கிறது.

 ஆனால் நம்மில் பலரால் அதை அழகாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.  ஆழமான பார்வையில்   இந்த தேசத்தின் வடகிழக்குபகுதிகளை தன் வார்த்தைகளின் வழியாக காட்சியாகவே காட்டுகிறார்  நூலாசிரியர். 

8/1/18

குடகு மலைக்காற்றினிலே 5

குடகு மலைக்காற்றினிலே   5

அந்தச் சின்னக் கிராமத்துக்கு வெளியே இருக்கிறது அந்தக் கோவில். கிராமியச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் படு சுத்தமான பசும் புல்வெளிக்கிடையே அழைத்துச் செல்லும் பாதையும் தோட்டமும் அது தொல்பொருள்த்துறையால் பரமரிக்கப்படுவதைச் சொல்லுகிறது. நீண்ட சுற்று சுவர்களுடனும் மிகச்சிறிய வாயிலுடனும் இருக்கும் அந்தச் சென்ன கேசவர் கோவில் முதல் பார்வையில் நம்மைக் கவரவில்லை. ஏதோ இன்னுமொரு பழைய கோவில் என நினைத்துக்கொண்டு நுழைகிறோம்.
உள்ளே நிழைந்ததும் பளீரென்று கோவிலின் அழகும், பிரமாண்டமும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. பேலூர் ஹளபேடு கோவில்களின் பாணி. வெளிச்சுவர் முழுவதும் சிற்பங்கள், சிற்பங்கள், சிற்பங்கள் முதலில் எங்களைப்பாருங்கள் என்று அழைக்கிறது.

சோமநாத்பூர் மெடிக்கேரியிலிருந்து 150 கீமி தொலைவில் உள்ள ஒரு சின்னக் கிராமம். அங்குதான் ஹொய்சளர்களால் கட்டபட்ட கடைசிக்கோவில் இருக்கிறது. கட்டாயம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொன்ன நண்பரை வாழ்த்துகிறோம்.

கலைநயம், அழகு, சிற்பகலைஞர்களின் அற்புதமான திறன் என அடிக்கொண்டே போகலம். அத்தனை அழகு, அத்தனையும் அழகு. வெளிச்சுவர்கள் மட்டுமில்லை கோபுரத்தின் மாடங்கள், பிரஹாரம் அனைத்துமே மிக அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.
. ஒரு ஆறு முனை நட்சத்திரத்தின் வடிவில் எழுப்பட்டிருக்கும் இந்தக்கோவிலின் மூன்று கோபரங்களும் அறுபட்டைக்கோணங்களில் எழுந்த நிற்கிறது. கோவிலின் வெளிப்புறமும் கோபுரங்களும் பல சிறிய சிற்பங்களால நிரப்பட்டிருக்கிறது. ஒரு சதுர அங்குலம் கூட வெறும் கல்லாக இல்லை. ராமயணம், பாரதம், பாகவதம் எனப்பலகதைகள்.சொல்லுகின்றன


                                வெளிச்சுவற்றிலிருந்து சற்றே இருட்டாகஇருக்கும் அந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடன் நிறுத்துகிறது அந்த மண்டபத்திலிருக்கும் அழகான தூண்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் ஆனால் ஒரே உயரம் சுற்றளவில். ஒன்று இரும்புத்துதூண் போல வழவழவென்று, வட்டத்தட்டுக்களை அடுக்கியது போலஒன்று பின்னப்பட்ட ஒலைக்கூட போல ஒன்று. என்றும் ஒவ்வொன்றும் அசத்துகிறது. மரங்களை மிஷினில் கடைசல் வேலை செய்து உண்டாக்கும் வளைவுகளையும்
நெளிவுகளையும் கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு சில தூண்கள் முழுவதும் இரும்பில் வார்க்க்கப்பட்ட வளையங்கள்போல, இடைவெளிகளுடன் பின்னப் பட்ட மூங்கில் கூடைகள போல நுணுக்கமாகச் செதுக்கபட்டிருக்கிறது. அந்த வளைவுகளில் விரல்களைக் கூட விட்டுப்பார்க்க முடிகிறது.


வெளியே கூம்பாகத் தெரியும் கோபுர விதானங்களில் உள்ளே ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். (படங்களைப் பாருங்கள்) அத்தனை சிற்பங்கள். வாழைப்பூ ஒன்று ஒரு இதழ் பிரிந்த நிலையில். திராட்சைகொத்து ஒன்று இலைகளூம் பூவூமாகக் கொடி ஒன்று என ஒவ்வோரு உள் விதானத்திலிருந்தும் தொங்குகிறது. அதன்சுற்று புறம் முழுவதும் சின்ன சின்ன சிற்பங்கள் கழுத்து வலிப்பதால் ஒரே சமயத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உற்று பார்க்க முடியவில்லை.

மூன்று கர்பஹகிரகங்கள் கேசவன், ஜனார்த்தனன். வேணுகோபாலன் என்று முன்று சன்னதிகள் வேணுகோபலனின் சிலையில் அழகு கொஞ்சுகிறது
. கேசவன் சன்னதியில் சிலை இல்லை. உலகின் எந்த  மியூசியத்தில் இருக்குமோ? சிலைகடத்தல் மன்னன் கபூரைக்கேட்டால் சொல்லுவானோ என்னவோ? ஜனார்த்தனும் கம்பீரமாகயிருக்கிறார்.

உற்றுகவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய அளவிற்கு தெய்வச்சிலைகள் பின்னப்படுத்தபட்டிருக்கிறது மூக்கின் நுனி, ஆசிர்வதிக்கும் கையின் விரல்கள், பாதங்களில் விரல்கள் போன்றவைகள். இவைகள் முஸ்லீம் படையெடுப்பின்போது செய்யபட்டிருக்கிறது. பின்னமான சிலைகளை இந்துக்குள் வணங்கமாட்டார்கள் என்பதால் இப்படிச்செய்வதின் மூலம் வழிபாட்டை, கோவில் பூஜைகளை நிறுத்திவிட்டார்கள் என்கிறார் கைடு.
இந்தகோவிலின் காலம் 13ம் நூறாண்டு என்கிறது வரலாறு. அதற்கு முன்னரே சாளுக்கியர்கள் கற்சிலைப்படைப்புகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். இதிலுள்ளவைகளை கச்சிதமாக் டிசைன் செய்து கல்லில் வடித்தி த்ருக்கிறார்கள். இந்த நுணுக்கமான வேலைகளுக்கு லேத் போன்ற இயந்திரங்கள் பயனபடுத்தியிருப்பார்களா? அப்படியானால் அப்போதே       tool engineering அறிந்திருப்பார்களா? மெஷின்கள் டூல்கள் பற்றி எழதும் ஜவர்லால் போன்றவர்கள் சொல்ல வேண்டும் .  இத்தனைத்  தூண்கள்  உருவாதற்குள் நிறையச் சேதமாகியிருக்குமோ எனப் பல கேள்விகள் அலைஅலையாக எழுந்தன

முழுவதும் அழகான தூண்களால் நிறைந்த நீண்ட வெளிப்பிராகாரம். அதில் சன்னதிக்கான மண்டபங்கள். பல காலியாக இருக்கிறது. கருப்புநிற பளிங்குக்கல்லில் மிக ப்பெரிய கல்வெட்டு நிற்கபதைக் கவனிக்கிறோம். அது முழுவதும் கன்னட ஜிலேபி எழுத்தில் இருப்பதால் ஒருரைப்படிக்கச்சொல்லி கேட்கிறோம். (பேசினால் புரிந்து கொள்ளும் அளவிற்குதான் நமது கன்னடஞானம்.)

மூன்றாம் நரசிம்மன் என்ற ஹொய்சள மன்னரின் தண்டநயாகா (தலைமைத்தளபதி) சோமா தன்கிராமத்தில் ஒரு கிருஷ்ணன் கோவில் கட்ட அனுமதி கேட்டபோது மன்னர் அதைச் சிறப்பாகசெய்ய பணமும் இந்த கிராமத்தையும் கொடுத்ததாகவும் 1268ல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் (அதற்கு 200 ஆண்டுகளூக்கு முன்னரே ஹொய்சளர் காலம் துவங்கிவிட்டது) சொல்லபட்டிருக்கும் அந்தக்கல்லில் சொல்லபட்டிருக்கும் ஆச்சரியமான விஷயம். இந்தக்கோவில் உள்ள சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகளீன் பெயர்கள். (தமிழகத்தில் ஒரு கோவிலில் கூட இதைப்பார்க்க முடியாது) கோவிலின் வெளிச்சுவரில் இருக்கும் 194 பெரிய சிற்பங்களில் 40 யைச் செய்தவர் மல்லித்தம்மா, மற்றவைகளைச் செய்தவர்கள் பல்லையா, செளடையா, காமய்யா என்று பல பெயர்கள். இவர்கள் கல்லில் கலைவண்ணத்தை மட்டும்காணவில்லஇ கடவுளையே கண்டிருக்கிறார்கள்.


வெளியே வரும் நம்மை ஒரு பெரிய ஆலமரமும் அதைசுற்றியிருக்கும் வட்டவடிவதிண்னையும். சுகமான காற்றில் சற்று உட்காரச்சொல்லுகிறது.
அந்த மரத்தில் தொங்கும் போஸ்ட் பாக்ஸில் இந்த பெட்டியில் போடும் தபால்களில் மட்டும் இந்த கோவிலின் படத்துடன் சரித்திரசின்னம் என முத்திரையிடப்படும் என எழுதியிருந்தது. பிக்கசர் போஸ்ட் கார்டு அல்லது கவர் தருவார்களா காவலளிகளைக் கேட்டபோது அது 6 கீமியிருக்கும் போஸ்ட் ஆபிஸில் தான் கிடைக்கும் என்றார்கள்.
“ நாலு டயர்கள் வாங்கினால் கார் இலவசம். ஆனால் டயர்கள் விற்பனை செயவதில்லை” என்ற ஜோக் தான் நினைவிற்கு வந்தது. சென்னைக்கு போனவுடன் தொல்பொருள் துறைக்குக் கடிதம் எழுத வேண்டும் எனக் குறித்துக்கொண்டேன்.

அடுத்த முறை மைசூர் சென்றால் இந்தக் கலைப்பொக்கிஷத்தை மறக்காமல் போய்ப் பார்த்து வாருங்கள் மைசூரிலிருந்து 38 கீமிதான்
.
4/1/18

குடகு மலைக் காற்றினிலே 4


மலைச்சரிவில் ஒரு காபி தோட்டத்துக்கு நடுவே அமைக்கப்படிருக்கும் பாதையின் வழியே 1 கீமி நடக்க வேண்டும். பாதுகாப்பான பாதையில் நாம் போய்க்கொண்டிருந்தாலும் இருபுறமும் உயர்ந்த மரங்களூம் பசுமையான செடிகளும், இருப்பது ஒரு காடு எனபதைச்சொல்லுகிறது. காபி பழங்கள் பழுக்கத்தொடங்கி விட்டதால் ஒரு வினோதமான மணம். தாக்குகிறது. சற்று அருகில் நீர் வீழ்ச்சியின் சத்தம், நம்மை ஈர்க்கிறது. நெருங்கியபோது ஒரு அழகான அருவி. பளிரென்ற வெள்ளியாக நீர் பாய்ந்து விழுகிறது. சுற்றிலும் அருவியின் நடுவிலும் பசுமை. படர்ந்திருக்கிறது. பார்க்க ரம்மியமாக இருக்கிறது. பருவ மழை தொடங்கிவிட்டதால் பாறைகள் முழுவதையும் மறைத்து நீர் தாரையாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இதமான வானிலையும் இயற்கை சூழலும் நேரத்தை மறக்கச்செய்கிறது. நெருங்கும்போது சாரல் நீர்முத்துக்களைத் நம் மீது தூவுகிறது. எவருக்கும் குளிக்க அனுமதியில்லை


.
நல்ல வேளை இல்லாவிட்டால் நமது குற்றாலம் போல் அடுத்தவர் பூசிய எண்ணையை நாம் இலவசமாக வாங்கி வர வேண்டியிருக்கும். தமிழகத்தில் மட்டும் தான் இப்படி அருவிகளில் குளிக்க முடியும் என நினைக்கிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகின் சில நாடுகளிலும் அருவி என்பது பார்த்து ரசிக்க மட்டும்தான்.
இந்த அருவி கூட அரைநிமிட நிற்குமோ என்னவோ, ஆனால் செல்பி பிரியர்கள் கூட்டம் அலை அலையாக அதன் முன் வந்துகொண்டேயிருக்கிறது. அருவி 70 அல்லது 80 அடி உயரமிருக்கும். பக்கவாட்டில், பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். நேரடியாகப்பார்க்கும் ஒரு வசதியுடன் இருந்த தொங்கு பாலம் மிகவும் வீக் ஆகிவிட்டதால் மூடப்பட்டு இப்போது அதுவும் ஒரு காட்சிப்பொருளாக நிற்கிறது,

இதி அபி ஃபால்ஸ் என அழைக்கிறார்கள். யார் இந்த அபி எனத் தெரியவில்லை. மெடிக்கேரியிலிருந்து 8 கீமி தொலைவில் இருக்கிறது. குறுகிய பாதை என்பதால் கார்களுக்கு மட்டுமே அனுமதி. பஸ்ஸில் வருபவர்கள் 1 கீமி நடக்க வேண்டும் பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயேர் ஒருவரிடமிருந்து இந்த இடத்தை விலைக்கு வாங்கிய உள்ளுர்காரர் காபி தோட்டத்துக்காகச் சீரமைத்த போது “கண்டுபிடிக்கபட்டதாம்” இந்த அருவி. இப்போது அவரிடமிருந்து வன வாரியம் இடத்தைப்பெற்று இதை நிர்வகிக்கிறது. இந்த அருவி, காவிரியின் ஒரு சின்ன உப நதியிலிருந்து இங்கு விழுந்து கிழே மீண்டும் காவிரியில் இணைகிறது. என்றார்கள்.


நாம் அடுத்தப் போக வேண்டிய யானை கேம்ப்க்கு செல்லுமிடத்திலிருக்கும் கடைசி போட் 12 மணிக்கு என டிரைவர் நினைவு படுத்துகிறார். அருகில் இருப்பதால் நாளை மாலை நேரத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்க வருகிறோம் என்று அருவியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறோம்.
மெடிக்கேரியிலிருந்து 37 km தொலைவில் இருக்கிறது துபாரே(Dubarae) யானை முகாம். வனத்துறையினர் இங்கு யானைகளை வளர்க்கிறார்கள். காடுக:ளில் மரங்களைத் தூக்கை வரபழக்கப்படுத்தவும், மைசூர் தசரா ஊர்வலத்துக்குச் செல்லவும்பயிற்சி கொடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட கேம்ப் இது. இப்போது காடுகளில் யானைகளை வேலி வாங்குவது தடை செய்யப்ட்டுவிட்டதாலும்,  மைசூர் தசரா முன் போல ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவதில்லையாதலாலும் யானைகளை என்ன செய்வது தெரியாமல் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடக அர்சுக்கு நிஜமாகவே இவை ஒயிட் எலிபென்ட்கள் தான். இப்பபோது மனிதர்களுடன் பழகச்சொல்லிக் கொடுக்கிறார்கள்,. பழக்கபடுத்த பட்ட யானைகளையும் குட்டிகளையும் கோவில்களுக்கி விற்பனை செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா குருவயூர் கோவிலுக்குக் கொடுத்த யானை கூட இங்கிருந்து தான் என்பது தானாகக் காதில் விழுந்த தகவல்.

    


காவிரி இரு பிரிவாகப் பிரிந்து ஓடும் இடத்தில் நடுவில் இருக்கும் ஒரு தீவு மாதிரியான இடத்திலிருப்பதால் படகில் போக வேண்டும். தூரம் அதிகம் இல்லை ஒடும் காவிரிநதிக்கிடையில் மரங்களும் பசுமை திட்டுக்களும் இனிய காட்சியாக இருக்கிறது, படகு சேருமிடத்தில் கேம்ப்பில் இருக்கும் யானைகள் குளிக்க வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் 3 பேர் டீம். அவர்கள் மஹாரஜாக்கள் போல அதன் மீது உட்கார்ந்து வருகிறார்கள். நீரில் அவர்கள் சொல்வது போல எல்லாம் திரும்பிக் காட்டி தேய்த்துவிடும் சுகத்தை அனுபவித்து குளிக்கிறது யானைகள். பலர் பார்க்கிறார்களே என்ற வெட்கமே தும் இல்லாமல் சந்தோஷமாகக் குளிக்கின்றன. நாம் அருகில் சென்று பார்க்கலாம் பாகன் அனுமத்திதால் யானைக்குத் தேய்த்துக்கூட விடலாம். ஒவ்வொரு யானைக்கும், நீ குளித்தது போதும் என்று அதன் பாகன் சொன்னதும் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. நான் நிறைய படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் சந்தோஷமோ அல்லது கோபமோ தெரியவில்லை அருகிலிருந்த என மனைவிமீது துதிக்கையிலிருந்த நீரைப் பீச்சி குளிபாட்டி விட்டது. ஒரு யானை. நீங்கள் மிகவும் லக்கி என்றார்கள் அங்குள்ளவர்கள். கேமிரா தப்பியது தான் லக்கி என நான் நினைத்துக்கொண்டேன்

குளித்தபின் இந்த யானைகள் சென்று நிற்கும் இடத்திலிருக்கும் 3 அடி உயர சுவர்தான் அவைகளுக்கும் நமக்கும் இருக்கும் ”அரண்” சில இடங்களில் அவைகல் அரை வினாடியில் தூக்கி ஏறியக்கூடிய மரக் கம்புகள் தான் வேலி. யானைகளின் அருகில் தந்தங்களை தொட்டுபார்க்கலாம். ஒரு ஒற்றை கொம்பனை மிகஅருகில் பார்த்தோம். வயதாகிவிட்டதால் அதற்குப் பார்வை மங்கி வருவதாக அதன் காப்பாளர் சொன்னார். யானைகளுக்குக் கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்வார்களா? யானை டாக்டர் எழுதியிருக்கும் ஜெயமோகனிடம் கேட்க வேண்டும்.
12 மணிக்கு மேல் அங்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை. சாப்பாட்டுக்குபின் யானைகள் காட்டுக்குள் போய்விடுமாம். இனி நாளைகாலைதான். மழையிருந்தால் குளியல் கிடையாது. அந்தக் காட்டுக்குள் ஒரு ஃபாரஸ்ட் லாட்ஜ் இருப்பதாகவும் வெளிநாட்டு பயணிகளூம், ஆராய்ச்சியாளர்களூம் தங்குகிறார்கள் என்று ஒரு வெளிநாட்டு தம்பதியுடன் வந்திருந்த கைடு சொன்னார். அவர்களை லாட்ஜுக்கு யானைமீது அழைத்துச் செல்வார்களாம்
.
திரும்பும்போது நதியில் நிறைய ராப்ட் போட்களை- பலூன்போல் காற்றடைத்து செல்லும் படகுகள்- பார்த்தோம். காவேரி சீறிப்பாயும் காலத்தில் இதில் பயணத்து அருகிலிருக்கு இடத்துக்கு நீரோட்டத்துடன் செல்வார்களாம். இந்தத் திரில் பயணத்துக்குக் கட்டணம். கைடு உண்டாம். அங்கிருந்து நதியை எதிர்த்து வரமுடியாத்தால் படகுகளும், பயணிகளும் லாரியில் இங்கு திரும்புவார்களாம் அடுத்தமுறை திட்டமிட்டு வந்து இதைச் செய்து பார்க்க வேண்டும்.