26/6/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 7

 7 சட்லெஜ் நதியைப் பார்க்க 7300 அடி உயரத்திலிருக்கும் சிம்லாவிலிருந்து மலைச்சாலையில் இறங்கிக்கொண்டிருக்கிறோம். “இந்த இரண்டு மலைகளையும் கடந்து அடிவாரத்துக்குப் போகப் போகிறோம்” என்கிறார் ஒட்டுநர். தொலைவில் ஆழத்தில் சிறிதாகக் கூடவே வந்த சட்லெஜ் சட்டென்று அருகில் ஜூம்மில் வருகிறது. பரந்த நதி. சற்றே அழுக்கு வண்ணம். நெருங்க நெருங்க நதியின் ஓசை.

“ ராஃப்டிங் (Rafting) போட்டில் (நைலானாலான காற்றடைத்த மிதவை) போக விரும்பினால் இன்னும் கிழே அழைத்துப்போகிறேன் என்கிறார்” ஒட்டுநர். அதையும் பார்த்துவிடுவோம் என்று “சரி போகலாம்” என்கிறோம். “இனி இந்தப் பாதையில் நம் கார் போகாது ஜீப் வரும்” என்று சொல்லி யாருக்கோ போன் செய்கிறார். ஜீப் வருகிறது. ராஃப்டிங் செல்ல விரும்புபவர்களை அதை நடத்தும் கம்பெனி ஜீப்பில் அழைத்துச்செல்கிறது. அங்கு நமக்கு டீ தந்து ராஃப்டிங் பயணம் பற்றி பாதுகாப்பு விதிகள்,டிக்கெட் விபரம் சொல்லுகிறார்கள். கட்டணம் அதிகம்தான். ஆனால் அருகில் ஓடும் சட்லெஜ் ஆசையுடன் அழைக்கிறது. மறுக்க முடியவில்லை.
அங்கிருந்து ஜீப் நாம் பயணம் செய்ய வேண்டிய ராஃப்ட்டை தலையில் சுமந்து கொண்டு இன்னும், கீழே இறங்குகிறது. அங்கே நிறுத்தி லைப் ஜாக்கெட் அணிவித்துத் துடுப்பைக் கொடுத்து இங்கிருந்து இறங்கி வாருங்கள் என்று சொல்லிவிட்டு நாம் போக வேண்டிய ராஃப்ட்டை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வேகமாகச் செல்கிறார்கள். பாதை என்று எதுவுமில்லாத கற்கள் நிறைந்த அந்தச் சரிவில் சர்வ ஜாக்கிரதையாகக் கடவுளை வேண்டிக்கொண்டு இறங்குகிறோம். கொடுத்த ரப்பர் துடுப்பை ஸ்டிக்காகப் பயன் படுத்தி ஒரு சின்ன டிரெக்கிங்க்கு பின் நதிக்கரையை அடைகிறோம். அதற்குள் நம் ராஃப்ட் போட்டில் காற்றைச் சரி பார்த்துப் பம்ப்பின் மூலம் நிரப்பிக்கொள்கிறார் நம் கேப்டன்.
துடுப்பை எப்படிப் பிடித்துகொள்ளவேண்டும். எந்தக் கட்டளைக்குத் துடுப்பை எப்படிப் போட வேண்டும். என்ன செய்யக்கூடாது முக்கியமாக எதுவும் போட்டில் சாப்பிடக்கூடாது. போன்ற கட்டளைகளை அவர் மொழியில் வகுப்பெடுத்தார்.. மொழி புரியாவிட்டாலும் கட்டளைகள் புரிகிறது. மொழி அவருடையாதாகயிருந்தாலும் உயிர் நம்முடையதல்லவா? ஆங்கிலம் பேசுவதுதான் இல்லையே தவிர அப்டேட் ஆகயிருக்கிறார்கள் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் gopro என்ற குட்டிக் கேமிரா பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் பயணத்தை அது வீடியோவாக எடுத்துக்கொண்டே வருகிறது. அதைப் பென் டிரைவில் காப்பி செய்து நம் போனுக்குப் பயணம் முடிந்ததும் மாற்றித் தருகிறார்கள். (அதற்குத் தனிக் கட்டணம் என்பது வேறு விஷயம்) டெலிபோட்டோ கேமிராக்களின் லென்ஸ்களைத் துடுப்பிலிருந்து தெறிக்கும் நீர் வீணாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கும் சட்லெஜில் பயணம் தொடங்குகிறது. போட்டுக்குள் ஷூ செருப்பு அணியக்கூடாது. கால்களை அதற்கான வளையத்தில் நுழைத்துக்கொண்டு உட்கார வேண்டும். வேகமாக முகத்தைத் தழுவிச் செல்லும் குளிர்காற்று எதிர் காற்றில் படகு செல்வதைச் சொல்லுகிறது. சட்டென்று காற்று பலமாக வீசுகிறது. கேப்டன் சொல்லும் போது மட்டும் நாம் துடுப்பை அவர் சொல்லும் திசையில் போட வேண்டும். சற்று நேரத்தில் துடுப்பு போடுவது வசமாகிவிடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரி நேவி என்சிசி கொச்சி கேம்ப் நினைவில் எழுந்து போயிற்று. இமயத்தின் இரண்டு மலைகளின் நடுவில் அகன்று பரந்து ஓடும் நதியில் தொலைவில் தெரியும் பனிச்சிகரத்தைப் பார்த்தபடி இம்மாதிரி ஒரு காற்றடைத்த போட்டில் துடுப்பு போட்டுக்கொண்டு போவது என்பது திரிலிங்க் ஆகயிருக்கிறது. வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இரு புறமும் பிரமாண்டமான மலைச்சரிவு. சில இடங்களில் நீர்ச்சுனைகள். கண்ணுக்கெட்டிய தூரம் நதி, நதி மட்டுமே.
ஒரு மலைச்சரிவில் மேகி சமைத்துக்கொடுக்கும் ஸ்டால்கள். விரும்பினால் நிறுத்தி இறங்கி அதையும் அனுபவிக்கலாம்.
நதி வேகமாக ஒடுகிறது. ஆங்காங்கே எழும் அலைகள். எவ்வளவு ஆழமிருக்கும்? "கணக்கிடமுடியாதது" என்கிறார் கேப்டன். வெள்ளம் வந்தால் நீங்கள் இறங்கிய இடம் வரை நீர் உயரும் என்றார்.
“கிளம்பி முக்கால் மணி நேரமாகியிருக்கிறது திரும்பலாமா? இன்னும் போகலாமா என்று கேட்கிறார். திரும்ப மனமில்லாமல் இன்னும் ஒரு 10 நிமிடத்துக்குப் பின் திரும்பலாம் என்கிறோம் அவ்வளவு நேரம் படகில் வந்ததேதெரியவில்லை. நம்மை மறந்து சூழலில் ஒன்றி விட்டோம். திரும்பும் போது நதியின் போக்கில் படகு செல்வதால் வேகமாகச் செல்லுகிறது.
எதிரில் வரும் ஒரு போட்டில் இருப்பவர்கள் தங்கள் துடுப்புகளைத் தூக்கிக் காட்டுகிறார்கள். அப்படித்தான் ஹலோ சொல்ல வேண்டுமாம்.இறங்க வேண்டிய இடத்தில் (இது வேறு ஒரு இடம்) ஜீப் காத்திருக்கிறது. நம்முடன் நாம் பயணித்த ராஃப்ட்டையும் சுமந்து கொண்டு கிளம்பிய இடத்துக்கு வருகிறது.
இரவில் சிம்லா திரும்பி அறைக்கு வந்த பின்னரும் மனம் இன்னும் நதிப்பயணத்திலேயே இருக்கிறது. இந்தச் சிம்லா பயணத்தைத் திட்டமிட்டபோது இந்தச் சட்லெஜ் ராஃப்ட்டிங்கை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இன்று இந்த இனிய வாய்ப்புக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுகிறோம்.
மனதில் இன்னமும் அந்த நதியின் வாசமும், அந்தப் பயணமும் நிறைந்திருப்பதால் தூக்கம் வரவில்லை.
நாளை காலை டில்லி சென்று சென்னை திரும்பவேண்டும்.
All reactions:
You, Vidya Subramaniam, மாலன் நாராயணன் and 159 others

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்