ஹிமாச்சல் பிரதேஷ்ஷில் தஹூல்தஹூர் என்ற இமயமலைத்தொடரின் கங்கரா பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது தரம்சாலா. பனி, மழை, கடும் காற்று வெய்யில் என்று எல்லாம் வரிசையாக ஆண்டுதோறும் தாக்கும் காட்டுப்பகுதி இது.
புராணங்களில் தேவபூமி என்று வர்ணிக்கப்படும் இந்த காட்டுப்பகுதிக்கு 1977ல் ஸ்வாமி சின்மையானந்தா வந்தபோது இந்த இடத்தின் அதிர்வுகளை உணர்ந்து இங்கு தன் ஆஸ்ரமத்தை தொடங்க திட்டமிடுகின்றார். பல சவால்களை எதிர் கொண்டு ஒரு சிறிய குடிலில் தொடங்கப்பட்ட அந்த ஆஸ்ரமம். இன்று ஒருஅழகான சோலையாக பல வித மரங்கள், மலர்ச்செடிகளுடன் வளர்ந்திருக்கிறது. அங்கிருப்பது தான் இந்த மெகா சைஸ் ஆஞ்சனேயர். சின்மையானந்தா இந்த இடத்தில் ஆஸ்ரம கட்டிடங்களை எழுப்பும் போது பெரும் சூறாவளி காற்று தொடர்ந்து தாக்கி ஆஸ்ரமத்தின் கட்டமைப்புகளை அழித்தது. மேற்கூரைகள் பறந்தன. தொடர்ந்த முயற்சி செய்தும் பலனில்லை. அப்போது கேரளாவிலிருந்து (சின்மையானாந்தா கேரளத்தைச்சேர்ந்தவர் பூர்வாசிரமப் பெயர் பாலகிருஷ்ண மேனன்) வந்த தாந்திரிகள். பிரசன்னம் பார்த்து இந்த இடம் ஆஞ்நேயருடையது. அவருக்கு பூஜை செய்து கட்டிடப்பணிகளை தொடங்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதன் விளைவாக எழுந்தது தான் ஆஸ்ரமத்தில் எங்கிருந்தாலும் நம்மை அன்புடன் பார்க்கும் இந்த பிரமாண்ட ஆஞ்நேயர். இன்றும் தினசரி இரண்டு வேளை பூஜை நடைபெறுகிறது.
இந்தப் பள்ளதாக்கில் பல கோவில்கள். அவற்றில் 200 கீமி சுற்றளவில் ஐந்து சக்தி பீடங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஜவ்வாலாஜி,பிரேஜ்ஸ்வரி,சிந்தப்பூரணி நைனா தேவி என்ற இந்த சக்திப்பீடங்களின் இன்றைய கட்டமைப்பு, வசதிகள் எல்லாம் திருவிழாக்காலங்களில் வரும் பெருங்கூட்டத்தைச் சொல்லுகிறது.
படு சுத்தமாக பளிச்சென்று மார்பிளிட்ட பிஹாரங்கள்,,தங்க வண்ணக் கூரைகள். மெல்லிய சாரலாக நீர் தூவும் கூலர்கள் எல்லாம் இருந்தாலும் சன்னதிகள் ஒருசிலர் மட்டுமே நுழையக்கூடிய அளவில் சிறியதாகியிருக்கிறது. சன்னதியில் அலங்கரிக்கப்ட்ட தேவி வடிவ உருவம் எதுவுமில்லாமல் இயற்கையாக எழுந்த சுயம்பு கற்கள் மட்டுமே. இவற்றை “பிண்டி” என்று அழைக்கின்றனர்.
ஜவாலஜி தேவி கோவிலில் மட்டும் ஒரு பாறையின் இடுக்கிலிருந்து இரண்டு இடங்களில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இயற்கையாகவே எரிந்து கொண்டிருக்கும் ஒரு நெருப்புச்சுடர் தான் தேவி. அதற்குத்தான் பூஜை வேண்டுதல் எல்லாம்.
அந்த இளம் நீல வண்ணச்சுடர் எப்படி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது என்பது தான் ஆச்சரியம்
“இப்படி எல்லா தேவிகளையும் எல்லோராலும் ஒரே நாளில் பிராத்திக்க முடியாது. நீங்கள் ஆசி பெற்றவர்கள்” என்று சொன்னார் எங்களை அழைத்துப்போன காரின் டிரைவர் இந்தக் கோவில்களுக்கு வருவதால் நாள் முழுவது சாப்பிடாமலிருந்தார் அவர் .
இந்தப்பயணத்துக்குத் திட்டமிட்டபோது தலைலாமாவைச் சந்திக்க அனுமதியும் நேரமும் கேட்டிருந்தேன். தர்மசாலா வந்த பின் தொடர்பு கொள்ளுங்கள். இப்போது எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்று பதில் வந்திருந்தது.
நாளை தலாய்லாமாவின் கோவிலில் அவருடைய செகரட்டரியை சந்தித்து பேசச் சொல்லி ஆஸ்ரமத்துக்கு தகவல் வந்திருந்தது.
நாளை போகவேண்டும்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்