புதிய தலைமுற 16/4/15 இதழில் எழுதியது
(பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த
தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதை
எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில்
பதிலளிக்கும்படி எல்.கே. அத்வானி, ஜோஷி உள்பட 20 பேருக்கு நோட்டீஸ்
அனுப்ப சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தவழக்கு, இந்த அதிரடி உத்தரவின் பின்னணியைப் பற்றிய ஒரு அலசல்
).
டிசம்பர்
6 1992. இந்திய வரலாற்றில் ஒர் கருப்பு பக்கம்.
ராமஜன்ம பூமியாக வர்ணிக்கபடும் அயோத்தியாவில்,
இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும்
போராட்டங்களும் கால் நூற்றாண்டை கடந்த பின்னரும் அழியாவடுக்களாக இன்றும் பலர் மனதிலிருக்கிறது. கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின்
எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை
இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த ”விபத்து” குறித்து, நீண்ட காலம் தொடர்ந்து
, வழக்குகளும் கமிஷனின் விசாரணைகளும் நடந்து ஒய்ந்திருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
ஒரு மனுவின் அடிப்படையில் இந்த நோட்டீஸ்கள் அனுப்ப பட்டிருக்கிறது. .
பதில்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்குமானால் மீண்டும் உயிர்
பெறப்போவது வழக்கு மட்டுமில்ல. சில அரசியல் பிரச்னைகளும்தான்.
என்ன வழக்கு? ஏன் தலைவர்கள் மீது
வழக்கு?
அயோத்தி
நகரம் கடவுள்-அரசர் இராமர் பிறந்த
இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும்
கருதப்படுகிறது. 1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய
படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின்பெயரால் அயோத்தியில்
ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த
பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.
ராமர் சிலைகள் பின்னாளில் கொண்டுவந்து வைத்து வழிபட்டனர் இந்துக்கள் என்று
இஸ்லாமியர்கள் சொல்லுகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக இந்த இடம் இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத
வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்திலியே
இடத்திற்கு உரிமை கோரி வழக்குக்குள் இருந்த போதிலும் அது மத மோதலாகவோ கலவரமாகவோ
இல்லை. இந்திய
விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம்
கொண்டாடி புதிய வழக்குகளைத் தொடர்ந்தன.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1989 தேர்தலின் இந்த அயோத்தி பிரச்சனையை
தேர்தல் களத்தில் வைத்தது. . செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்தி
பிரச்னையை நாடெங்கும் எடுத்துச் செல்லும் வழியாக ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் மதவாத
உணர்ச்சி அலைகள் வீசத்துவங்கின. இன்னும்
அந்த அலைகள் ஒயவில்லை.
.
‘அயோத்தியில்
இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள்
பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்’ என்ற
‘பழிக்குப் பழி’ பாலிடிக்ஸ்தான் இதன்
அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி
பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்’ என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி
கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம்
பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. உணர்ச்சிபூர்வமான பேச்சு
ஒருங்கிணைக்கப்ட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவுவாக 475 ஆண்டுகள் பழமையான
பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
தேசமே அதிர்ந்துது போனது.
கலவரங்கள் வெடித்தன, சட்டம் மெதுவாக அதன் கடமையை
செய்ய ஆரம்பித்தது.
பாபர்
மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு இரண்டு குற்றப்
பத்திரிகைகளை தாக்கல் செய்தது. மசூதியை இடித்ததாக `பெயர் தெரியாத லட்சக்கணக்கான
கரசேவகர்கள் மீது ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மசூதியை இடிக்க
சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி
மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள்
முதல்வர் கல்யாண் சிங் உள்பட 20 பேர் மீது
மற்றொரு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தவிர மதக் கலவரத்தை
தூண்டும் வகையில் பேசியது, தேச ஒற்றுமைக்கு எதிராக
செயல்பட்டது, உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அத்வானி உள்ளிட்டோர்
மீது மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சதி திட்டம் தீட்டியதாக
அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பலர் மீது கூறப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவற்றை கைவிடுவதாக 2001, மே 4ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 மே 21ம் தேதி அளித்த தீர்ப்பில், சதி திட்டம் தீட்டியதாக
தொடரப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்த சிபிஐ
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால்,
அத்வானி உள்பட பிறர் மீது கூறப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து
ரேபரேலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தது.
அலகாபாத்
உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவெடுத்தது. ஆனால் 6 மாதங்களுக்குள்ளாக செய்திருக்கவேண்டிய
மேல் முறையீட்டை 8 மாதத்திற்கு பின்தான் செய்தது வழக்கை குறிபிட்ட கால
கெடுவுக்குள் செய்யாமல் தாமதபடுத்தி செய்திருந்தது. இம்மாதிரியான நடைமுறை
வீதிமீறல்கள் செய்வது எதிர்வாதம் செய்யபவர்களுக்கு
அனுகூலமாக முடியும்.ஆனால் உச்ச நீதிமன்றம் தாமதத்தை கண்டித்து காரணம் கேட்டு
சிபிஐயை விளாசியது. தாமதத்திற்காக சொல்லபட்ட காரணம் ”வழக்கில்
சம்பந்தபட்டவர்கள் அனைவரும் மிக முக்கிய
அரசியல் வாதிகள் என்பதால் மிக ஜாக்கிரதையாக கையாளுகிறோம்” என்பது. அப்போது
ஆட்சியில் இருந்தவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி. அவர்கள் இந்த வழக்கைஏன் தமாதப்படுத்தினார்கள்?
என்பது இந்திய அரசியலில் புரிந்து கொள்ள முடியாத புதிர்களில் ஒன்று.
இப்போது
மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த கட்டத்தில் தான் தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டுள்ளதால் அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கில் மேல்முறையீடு
செய்வதில் சிபிஐ
காலதாமதம் செய்து வருகிறது. வழக்கை நீர்த்துபோகும் வகையில் சிபிஐ
செயல்படுகிறதுபிஜே பி கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்கள் ஆட்சியிலும்
மூக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள். மேலும் இந்த
வழக்கில் தலைவர்கள் விடிவிக்கபட்ட்து நீதிமன்ற வரலாற்றில் வழங்கப்பட்ட முக்கியமா அநீதி. செயலைதூண்டியது, அதைச்செய்யவசதிகள்
செய்துகொடுத்தது மசூதியை உடைத்தது எல்லாமே ஒரு சதிச்செயலின் அடிப்படையில் எழுந்த
விஷயம். அப்படியிருக்க சதித்திட்டத்தைமட்டும் தனியாக பிரித்து குற்றத்திற்கான
ஆதாதரம் இல்லை என சொல்லியிருப்பது நீதிமன்ற த்தின் தவறு என்பதால் . அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி
திட்டம் தீட்டிய வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற ஹாஜி மக்மூத் அகமதுவின்
மனுவை உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதி எச்.எல். தத்து
தலைமையில் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் ஏற்றுகொண்டு
நோட்டீஸ்கள் அனுப்பிருக்கிறது.
அயோத்தி
நிகழ்வும் அரசியலும்.
பாபர்
மசூதி இடிப்பு நிகழ்வு இந்திய அரசியலில்
சில புதிய அத்தியாங்களை உருவாக்கின. மதவாதத்துக்கும் வாக்குபெட்டிக்கும் உறவு வலிமையானது..
‘‘இந்திய
முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம்
ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் இஸ்லாமியர்கள் ‘நாங்கள்
இந்தியர்’ என்று ஒருங்கிணைந்து நின்றார்கள். பாபர் மசூதியை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே நாளில்
செய்து முடித்தன’’ என்று
இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னால் உளவு அதிகாரி ராமன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.நெருக்கடி
நிலையை முழுமுச்சாய் எதிர்த்து அரசியலில் ஜனநாயகவாதிகளாக நிலை நாட்டிக்
கொண்டவர்கள் மதவாத அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டார்கள்.
பார்
மசூதி இடிப்பை தொடர்ந்து கிரிமினல் வழக்குகளைத் தவிர மத்திய அரசு ஒரு கமிஷன்
அமைத்தது.விசாரணைக் கமிஷன் தலைவர் லிப்ரான்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கும் 1992 ல்
டிசம்பர் பதினாறாம் தேதி அதாவது பாபர் மசூதி இடிக்கபட்ட பத்து நாட்களுக்குப் பின
நீதிபதி லிப்ரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கபட்டது. சர்ச்சைக்குரிய
கட்டிடத்தை இடித்ததில் மாநில அரசு - முதல்வர், அமைச்சர்கள்,
அரசு அதிகாரிகள், மற்றும் மதவாத அமைப்புகளின்
பங்கு என்ன? உத்திரப்பிரதேச அரசின் பாதுகாப்பு குறைபாடுகள்
என்ன? இவை பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி
கமிஷனை மத்திய அரசுகேட்டுக்கொண்டது.விசாரணைக் கமிஷனின் கெடு காலம் மூன்று மாதம்
என்றும் அறிவித்தது.
48 முறை நீடிக்கபட்ட கமிஷன் விசாரணை செய்ய நீதிபதி லிப்ரன் பதினேழு
ஆண்டு காலம் எடுத்து கொண்டார். பதினேழு ஆண்டு விசாரணைக்கு மத்திய அரசு செலவு செய்த
தொகை எட்டு கோடி ரூபாய். கமிஷனின் ரகசிய அறிக்கை அதிகாரபூர்மாக வெளியிடப்படாமலேயே
கசிந்து வெளியாகிவிட்டது. அத்வானியின் ரத
யாத்திரை, மசூதி
இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றிச் சென்ற வாஜ்பாய்,
இடிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ
ஆதாரங்கள், மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி பால்தாக்கரே,
கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் வெளியிட்ட
அறிக்கைகள் (‘ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு
எங்கு கட்டுவது?’ &ஜெயலலிதா) என்று பல ஆதாரங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தாலும் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எந்த வழக்கையும் தொடரவில்லை.
தினசரிகளில் அவ்வபோது 4 பக்கத்தில் தலைகாட்டிக்கொண்டிருந்த
இந்த விஷயம் மெல்ல மறக்கப்பட்டுகொண்டிருந்தபோது
கடந்த ஆண்டு துவக்கத்தில்
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி.,
சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,
இந்த
இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி
அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும்
கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ
அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின
மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த
படைக்கு லக்ஷ்மண சேனை என்று பெயர். என
ஒரு அதிரடி செய்தியை வெளியிட்ட்து கோப்ரா போஸ்ட். கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா
மாதிரி) இதன் இணை ஆசிரியர் கே ஆஷிஷ் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர்
ஆய்வு நூல் எழுதுவதாக சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார்இவர்களில் 15
பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது.
19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில்
தெரிவித்துள்ளது. ‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல
உண்மைகளை வெளியிட்டிருக்கும் 'கோப்ரா போஸ்ட்' இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு.
அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால்
விட்ட்து. ஆனாலும் ஐமு அணி அரசு
அசையவில்லை யார் மீதும் வழக்கு எதுவும் போடவில்லை.
இனிமேல் என்ன நடக்கலாம்?
அரசியலின் போக்கை நீதிமன்ற
வழக்குகளின் முடிவுகளும், அரசின் முடிவுகள் வழக்குகளின் போக்கையும் மாற்றும்
என்பதை சமீப அரசியல் சரித்திரங்கள் நமக்கு சொல்லுகின்றன. இந்த வழக்கை உச்சநீதி மன்றம் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தால், சமீபகாலமாக
அது கடைப்பிடிக்கும் வழிமுறையான ஒரு சிறப்பு புலனாய்வை அமைத்து நேரடியாக
தங்களிடம் அறிக்கைகள் தந்து குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழக்கை முடிக்க செய்யும். அல்லதுசிபிஐயை
கண்டித்து உடனடியாக வழக்கை நடத்தி முடிக்க முடுக்கிவிடும்.
கிளமாக்ஸாக மனுவே தள்ளுபடியும்
செய்யபடலாம். (வாய்ப்பு மிக குறைவு. விபரங்கள் கேட்டபின் பொதுவாக தள்ளுபடி
செய்யப்படுவதில்லை)
எப்படி நடந்தாலும் அது அரசியலில்
நேரிடையான தாக்கத்தை விளைவிக்கும். காரணம் எவ்வளவு விரைவாக நடைபெற்றாலும் வழ்க்கு
முடிய ஒராண்டு ஆகும்
இந்த வழக்கின்
முடிவுகள் வரும்போது 2016ல் சில மாநிலங்கள்
தேர்தலை சந்திக்கிறது. அதில் ஒன்று இந்த காட்சிகளின் களனான உத்திரபிரதேசம்,
இப்போது உபி
சட்டமன்றத்தில் 403 சீட்டுகளில் வெறும் 47 மட்டுமே வைத்திருக்கும் பிஜெபி. கடந்த
நாடாளுமன்றத்தில் கூட்டணியோடு 83 சீட்டுகளில் 70ஐ பெற்றிருப்பதால் 2017 ல் அங்கு மாநில
ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறது.
இந்த வழக்கில் தலைவர்கள் வீடுவிக்க பட்டால் தங்கள் மீது பூசப்பட்டிருக்கும்
மதவாத கரை மறைந்து விட்டதாக அறிவித்துவிடுவார்கள். மாறாக தண்டிக்கபட்டால்
ராமருக்காக நாங்கள் செய்த தியாகம் என அந்த அனுதாபத்தை ஓட்டாக மாற்ற
முயற்சிப்பார்கள்.
வழக்கு தீவிர கட்டத்தை அடைவதற்குள்
காங்கிரஸின் தலைவராகியிருக்கும் ராகுல்
இந்த வழக்கினையே ஆயூதமாக கையிலெடுத்து பிஜேபியின் மதவாத அரசியலை கண்டனம் செய்து களமிறங்கும் வாய்ப்பும்
இருக்கிறது. ஆட்சியிலிருந்த போது கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டவர்கள் இதையாவது
கோட்டைவிடாமல் செய்யவார்களா என்ற
கேள்வியும் எழுகிறது. .
எந்த பிரச்னையிலும் ஒரு வாய்ப்பை
கண்டுபிடிப்பவர்கள் அரசியல் வாதிகள். பிஜெபி தங்கள் உட்கட்சி அரசியல் பிரச்னைகளை
சரி செய்ய இந்த வழக்கை ஒரு வாய்ப்பாக
பயன்படுத்திக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.. மோடி பிரதமரான நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள்
ஒரங்கட்டபட்டார்கள்:. இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களும் அவர்கள்தான். காங்கிரஸ்
ஒரு கட்டத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை ஒதுக்கி அவர் மீதுள்ள வழக்குகளை
அவரே சமாளித்துகொள்ள வேண்டும் என சொன்னது போல
இவர்களையும் பிஜேபி ஒதுக்கி விடும் ஒரு நிலையும் ஏற்படலாம். அதன் மூலம்
இன்றைய தலைவர்கள் தாங்கள் மதவாத தீவிரவாதிகள் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தவும்
முயற்சிக்கலாம்.
எப்படியாக இருந்தாலும் இந்த வழக்கு
2016 மாநில தேர்தலுக்குமுன் மக்களின் மிக கவனம் பெரும் வழக்காக இருக்கும்.
”இந்திய அரசியலின் முக்கிய முடிவுகள்
இப்போது கோர்ட்களில் எடுக்கபடுகிறது. மக்கள் தேர்தல் முடிவுகளைப் போல சில வழக்குகளில் நீதிமன்றத்தின் முடிவுகளை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என ஒரு ஆங்கில
நாளிதழின் மூத்த செய்திஆசிரியர் எழுதுகிறார்.
அது இந்த வழக்குக்கும் பொருந்தும்.