கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23/9/18

அழியும் ஆபத்திலிருக்கும் ஆரண்முளா கண்ணாடிகள்


 




வரலாறு காணாத பெரும் இயற்கை சீற்றத்தின் விபரீத விளைவுகளினால் கேரளத்தில் மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளானது பல நதியோர கிராமங்கள்தான். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மெல்ல மீண்டுகொண்டிருக்கின்றனர்.
இப்படிப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று பம்பா நதிக்கரையிலிருக்கும் அழகான ஆரண்முளா கிராமம். பல கிரமங்களைப் போல வீடுகளையும் உடைமைகளையும் இழந்த இந்தக் கிராம மக்களின் துயரம் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டது. இவர்கள் தங்கள் மண்ணை இழந்தற்காகப் பெரிதும் கலங்கியிருக்கிறார்கள். மண் என்றால் அவர்களது நிலமில்லை. அவர்கள் சேமித்த பாதுகாத்து வந்த ஒரு வகை மண்.
அப்படி அந்த மண்ணில் என்ன விசேஷம்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கிராமத்தின் சரித்திரத்தையும் அங்கு உருவாகும் ஒரு கைவினைப் பொருளின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சபரிமலைக்குப் பயணம் செய்யும் பலரும் முதலில் அதற்கு 75 கீமி முன்னிருக்கும் ஆரண்முளா பார்த்த சாரதியைத்தான் தரிசிப்பார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கொண்டப்படும் இந்தக் கோவிலில்தான்.
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கிய 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின்போது இங்கிருந்து அது ஊர்வலமாக மலைக்கு எடுத்தச்செல்லப்படும்.
இந்தக் கோவிலின் அருகில் வசிக்கும் இருபத்திரண்டு குடும்பங்களின் கலைஞர்கள் பரம்பரையாகச் செய்து வரும் ஒரு கைவினைப்பொருள் ஆரண்முளா கண்ணாடிகள். கண்ணாடி என்றால் நாம் சதாரணமாகப் பயன்படுத்தும் கண்ணாடிப் பலகைகளில் ஒருபுறம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் இல்லை. இதில் கண்ணாடி என்ற பொருளே இல்லாமல் முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன கண்ணாடி. இந்தத் தயாரிப்பு முழுவதும் கைவினைக்கலைஞர்களால் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. கேரளத்தின் கதகளி போல இந்தக் கண்ணாடிகள் மிகப்பிரபலமான ஓர் பாரம்பரியச்சின்னம்.
தமிழகத்திற்கு வரும் தலைவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் நமது கோவில், நடராஜர் உருவங்களை அரசின் சார்பில் பரிசளிப்பதைப் போல, கேரளாவில் அவர்களின் பாரம்பரிய சின்னமான இந்த ஆரண்முளா கண்ணாடியைத்தான் வழங்குவார்கள். யூன்ஸ்கோ பாரம்பரிய கலையைப்போற்றும் கிராமம் என்ற கெளரவத்தையும், இந்தக் கண்ணாடிகளுக்கு உலகளவிலான புவிசார்பு குறியீட்டையும் வழங்கியிருக்கிறது.


காண்பதைப் பல ஆண்டுகளுக்குப் பளிச்சென்று காட்டும் இந்த ஆரண்முளா கண்ணாடி கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல கோவில்களிலும் ஆராதனைக்குப் பின்னர் தெய்வத்துக்குச்செய்யப்படும் உபசாரங்களில் முக்கிய இடம்பெற்றிருக்கும் ஒரு பொருள்.
இந்தக் கண்ணாடி உருவாக்கப் பயன்படும் உலோகத்தைத் தயாரிக்கும் முறை மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. வாரிசுகளுக்குமட்டும் சொல்லிக்கொடுக்கப்படும் இந்தப் பாரம்பரிய கலையைத்தொடர விரும்பாத வாரிசுகளுக்கு அந்தக் கிராமத்தில் இடம் இல்லை என்ற அளவில் ரகசியம் காக்கப்படுகிறது.


உலோகத்தைப் பளபளப்பாக்குவது என்பது கடினமான பணியில்லை என்றாலும் பல ஆண்டுகளானாலும் மங்காமல் தெளிவாகத் தெரியுமளவுக்கு எந்த எந்திர உதவியும் இல்லாமல் ஒரு உலோகத்தை உற்பத்தி செய்வதுதான் இந்தத் தொழிலின் சிறப்பு.
இந்தக் கண்ணாடிகள் சிறிய  வட்டவடிவில் வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப் படுகிறது. பின்னர் அது ஓர் அழகான யானையின் முகம், சங்கு. மலர். போன்று தயாரிக்கப்பட்டிருக்கும் பல விதமான வெங்கல பிரேம்களில் பதிக்கப்படுகிறது.’ முதலில் கண்ணாடிகளின் அளவுகளுக்கேறப்ப வட்ட வடிவ அச்சு (மோல்ட்) உருவாக்கப்படுகிறது. இது ஒரு குடுவை போன்ற மற்றொரு அச்சினுள் பொருத்தப்படுகிறது. அந்தக் குடுவை அச்சின் மேல் பாகதத்தில் காரீயக் குண்டுகளும் வேறுசில பொருட்களும் இடப்படுகிறது. இந்த வேறு சிலபொருட்கள் என்ன என்பது தான் ரகசியம். இந்த மோல்டு மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகும் மண் அடுப்புக்களினுள் இடப்பட்டு இரண்டு நாள் முழுவதும் நெருப்பில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் அந்தக் காரீயமும் பொருட்களும் உருகி உள்ளிருக்கும் வட்டமான கண்ணாடிக்கான வடிவ அச்சில் பரவி ஒர் உலோகத்தகடாகிறது. பின்னர் அச்சு உடைக்கப்பட்டு அந்தத் தகடு வெளியே எடுக்கப்படுகிறது. அந்த உலோகத்தகடு ஒரு சதுர மரக்கட்டையில் ஓட்டப்பட்டு ஒரு வழவழப்பானதேக்குப் பலகையில் தொடர்ந்து கைகளால் ஆறு மணி நேரம் தேய்த்து, தேய்த்து பளபளப்பாக்கப் படுகிறது. இறுதியாகத் தலைமை சிற்பி தன் புருவம் தெளிவாகத்தெரிகிறதா என்று பார்த்தபின் அதைக் கண்ணாடியாக அனுமதிப்பார். இந்தக் கண்ணாடிகள் சதுர மரக்கட்டையிலிருந்து கவனமாகப் பிரிக்கப்பட்டுப் பிரேம்களில் ஓட்டப்படுகிறது. இதற்கான பசைகளையும் இவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.  கோவில்களுக்கு சன்னதியின் முன்னே நிறுத்த பெரிய அளவுகண்ணாடிகளையும் தயாரிக்கிறார்கள். அப்படி 5 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட ஒரு கண்ணாடி லண்டன் மீயூசியத்திலிருக்கிறது.














 


ஒவ்வொரு முறையும் தயாரிப்பைத் துவக்கும் முன்னரும் கண்ணாடிகளாக உருவான பின்னரும் பார்த்தசாரதி கோவிலில் பூஜைகள் செய்த பின்னரே விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்தக் கண்ணாடிகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதற்காக வைத்திருந்தைவகளும் இப்போது அழிந்துவிட்டன. இழப்பு 1.5 கோடி. ஆரண்முளா பாம்புப் படகு போட்டிகளைப்பார்க்க வரும் வெளிநாட்டுப் பயணிகளில் வழக்கமாக இங்கு தேடி வந்து வாங்க வருபவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது.



ஒவ்வொரு கண்ணாடியின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் கைவினைக்கலைஞர்களின் கடினமான, கவனமான உழைப்பு நிறைந்திருக்கும் இந்த ஆரண்முளா கண்ணாடி தயாரிக்கும் கிராமத்தினர் இந்த வெள்ளத்தில் ஒரே நாளில் அவர்களது இரண்டு மாத உழைப்பான 6000 கண்ணாடிகளை இழந்துவிட்டார்கள். “ வீட்டில் புகுந்த வெள்ளம் கண்ணாடிகளை அள்ளிக்கொண்டு போனது, மீட்க நீந்திப்போராடினேன் முடியவில்லை என்கிறார். தலைமை விஸ்வகர்மாவின் பேரன்.
இந்த ஆரண்முளா கலைஞர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக வழங்கி வரும் ஒரு செவி வழிச் செய்தியை அறிந்தபோது ஆச்சரியமாகியிருந்தது. இங்கிருக்கும் பார்த்தசாரதி கோவிலை நிர்மாணிக்கும் பணிக்கு வந்த பல தொழிளாளார்களில் தமிழ்நாட்டின் சங்கரன் கோவிலைச் சேர்ந்த சிலரும் வந்திருக்கிறார்கள். மன்னர் கோவில் பணிகளைப்பர்வையிட வந்தபோது வேலை செய்யாமல் இருந்த அவர்கள்மீது கடும் கோபம் கொண்டு பணியிலிருந்து அவர்களை நீக்கிவிட்டார். மன்னரைச் சமாதானப்படுத்தி மீண்டும் வேலையைப்பெற அவர்கள் அதுவரை யாரும் செய்யாத ஒரு பொருளை உருவாக்கிக் காட்ட தீர்மானித்தனர். அதன் விளைவாக ஒரு பளபளப்பான உலோகதகட்டை உருவாக்கி அதில் மன்னருக்கு ஒருகீரிடம் தயாரித்துக்கொடுத்தனர். அதைக்கண்டு வியந்த மன்னர் அதில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் தயாரித்துக் கோவிலுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன் விளைவாக எழுந்தது இந்தத் ஆரண்முளா கண்ணாடித் தொழில். அந்தத் தமிழர்களின் பரம்பரையினர் தான் இந்த விஸ்வகர்மாக்கள்.



தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள் வெள்ளத்தில் போனதைவிட இவர்கள் அதிகம் வருந்தி அழுவது தாங்கள் சேமித்த மண் கரைந்திவிட்டதற்காகத் தான். அடுப்புகளையும், அச்சுக்களையும் உருவாக்க இவர்கள் பயன் படுத்தும் மண்கலவை விசேஷமானது. நதிக்கரையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்படும் அந்த மண் பல முறை சலிக்கப்பட்டு அதனுடன் சில பொருட்கள் சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படும். அந்தச் சேமிப்பு பல ஆண்டுகள் உழைப்பில்  உருவானது. அதிலிருந்து தேவையானபோது மட்டும் மண் எடுத்து அச்சுச் செய்துகொள்வார்கள். அந்த மண் குவியல் தான் இப்போது ஆற்று வெள்ளத்தில் அழிந்துவிட்டது. மழையில்லாத நாட்களில் தேர்ந்தெடுத்துச் சேமிக்கப்பட்ட அந்த விசேஷ கலவை மண்ணை மீண்டும் உருவாக்க ஒராண்டாகும் என்கிறார்கள். அதோடு காரீயகுண்டுகளுடன் கலக்கத் தயாரித்து வைத்திருந்த விசேஷ கலவைப் பொருளும் அழிந்துவிட்டது.


காலத்தால் அழியாத கண்ணாடிகளைப் படைக்கும் இந்தக் கிராம மக்களின் தொழில் அழிந்திருக்கிறது, ஆனால் அவர்கள் “எங்கள் பரம்பரைக்கு வாழ்வளித்த எங்கள் தெய்வம் பார்த்தசாரதிப் பெருமாள் இதிலிருந்தும் மீண்டுவர உதவுவார்” என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

18/7/18

சினிமாக்கள் பார்த்துதான் தொழில் கற்றேன்”



வங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல், கைதிகள் சிறையிலிருந்து தபிப்பது போன்ற காட்சிகளைப் பிரமிப்புடன் பார்க்க வைத்த ஹாலிவுட் படங்கள் 1990 களிலும்,2000களிலும் வெளிவந்த அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ் ஹீட் போன்றவை. இன்றும் ரசித்துப் பார்க்கப்படும் இந்த ஹாலிவுட் படங்களைத் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு ஒரு சிறை யிலிருந்து தப்பிக்கும் சாகசம் அண்மையில் பிரான்ஸில் நிகழ்ந்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியான சூட் பிரான்ஸிலியனில் (sud-Francilien) நவீன பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு அதி பாதுகாப்பு அமைப்புக்கொண்ட சிறைச்சாலை. இருக்கிறது.  இதில் 25 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் கிரிமினல் குற்றவாளி ரொடோய்ன் ஃபெய்ட்.( Redoine Faid)

கைதிகள் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறையில் அண்மையில் இவரைச் சந்திக்க வந்த ஒரு ஒரு உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடுமென்று நவீனத் துப்பாக்கிகளுடன் பிரான்ஸின் கமாண்டோக்கள் உடையணிந்த இருவர் கண்ணாடிக்கதவுகளை வலிமையான டிரில்லர்களால் துளைத்து உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர். கதவுகளை உடைக்கும் போதே புகைக்குண்டுகளை வெடித்ததால். புகை சூழுந்த அந்த நிமிடங்களில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொண்டு சிறைக் காவலர்கள் சுதாரிப்பதற்குள் ரொடொய்ன் ஃபெய்ட்டை இழுத்துக்கொண்டு  வெளியே ஒடி  ஒரு கமாண்டோ காவலுடன் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டனர். அதன் உள்ளே பைலட்டின் தலையில் துப்பாக்கியை வைத்திருந்த மற்றொரு காமண்டோ கட்டளையிட்டவுடன் விமானம் பறந்து சிலநிமிடங்களில் மறைந்தது.உலகச்சிறைச்சாலைகள் உடைப்பு வரலாற்றில் இதுவரை இவ்வளவு வேகமாக ஒரு சிறை தப்பிப்பு நடந்ததில்லை. உண்மையான கமாண்டோ ஆக்‌ஷன் இது.
ஒரு ஹாலிவுட் திர்ல்லர் போல 10 நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் தப்பிப்பித்தலில் துப்பாக்கிச்சூடு, மனித உயிர் இழப்பு எதுவுமில்லை. ஒத்திகைப்பார்க்கபட்ட ஒரு சினிமா ஷூட்டிங் போல ராணுவத்துல்லியத்துடன் நிகழ்ந்த இதைக் கண்டு பிரான்ஸின் போலீஸ் திகைத்து நிற்கிறது. நாட்டின் நீதித்துறை துறை அமைச்சர் இது அழகாகத் திட்டமிடப்பட்டு அருமையாகச் செயலாக்கப்பட்டிருக்கும் சிறை உடைப்புதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்
.
நிகழ்ந்த சில வினாடிகளில் வயர்லஸ், போன்களில் செய்தி பறந்தது. தேடிக்கொண்டிருந்த போலீஸ் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்தது நெடுஞ்சாலையில் 40 மைகளுக்கு அப்பால் எஞ்ஞின் எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரையும் அதனுள் மயங்கிக்கிடந்த அதன் பைலட்டையும் தான். அந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள ஒரு விமான கிளப்புக்கு சொந்தமானது. உறுப்பினர்களக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பைலட்டை துப்பாக்கி முனையில் கடத்தி அந்த ஹெலிகாப்படரில் சிறைக்குள்ளிருந்த ரொடோய்ன் ஃபெய்ட் யை அதிரடியாக மீட்டிருக்கின்றனர் அவரது நண்பர்கள்.
ஹெலிகாப்பட்டர் நின்ற இடத்திலிருந்து ஒரு அதி வேகக் காரில் 100 மையில் பயணம் செய்து பாதி வழியில் அதன் எஞ்ஞினையும் எரித்துவிட்டுத் தப்பியிருக்கின்றனர் குற்றவாளிகள். ஒரு ரயில் நிலையம். சின்ன விமான நிலையம் இருக்குமிடத்தின் அருகில் அந்த கார் இருந்ததால் அங்கிருந்து எங்கே எப்படி சென்றிருப்பார்கள் என இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
இந்தச் சிறை ஒரு அதி பாதுகாப்புச் சிறை ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத மேல்தளம், வலையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும் மைதானங்கள் போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள்.  சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் சில நிமிடங்கள் நின்று கடக்க வேண்டிய ஒரு திறந்த வெளியில் மட்டும் இந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் இல்லை. சரியாக அந்த இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கிக் காத்திருந்திருந்து காரியத்தை முடித்துவிட்டார்கள்.
.
சிசிடிவி கேமிராக்களில் புகை மூட்டத்தால் பதிவானவை எதுவும் தெளிவாக இல்லை. . இப்போது பிரான்ஸ் முழுவதும் 30000 போலீஸார் இவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
இப்படி சிறையிலிருந்து தப்பித்திருக்கும் ரொடோய்ன் ஃபெய்ட்.க்கு இப்படி சிறையிலிருந்து தப்புவது இது முதல் முறை இல்லை. வங்கிக் கொள்ளை, நகைக்கடை கொள்ளையென பலகுற்றங்களில்ஈடுபட்டிருக்கும் பெரிய கொள்ளைக்காரனா இவருக்குத் திட்டமிட்டு குற்றங்கள் செய்வதும்ஜெயிலிருந்து அட்டகாசமாகத்தப்பிப்பதும்  வாடிக்கை.

நீண்ட தேடுதலுக்குப்பின் 1990 களில் ஒரு வங்கிகொள்ளைக்காகக் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்தபின் 2010ல். தண்டனைக்காலம் முடிந்தவுடன் “நான் திருந்திவிட்டேன், இனி திருடமாட்டேன் பாவமன்னிப்புக் கேட்டுப் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன், சமூக சேவை செய்யப் போகிறேன்” என்றெல்லாம் டிவிக்களில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.  வெளிவரப்போகும் வரப்போகும் தன் புத்தகத்துக்காகப் பல நகரங்களில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்
.
ஆனால் மீண்டும் அடுத்த வருடமே ஒரு நகைக்கடை கொள்ளையில் பிடிபட்டு புத்தகம் வெளிவரும்முன்னரே உள்ளே போனார்.  அந்தக்கொள்ளையில்  ஒரு போலீஸ்காரரைக் கொன்றதால் 25 வருடத் தண்டனையுடன் 2013 ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

 ஆனால் ஒரே வாரத்தில் அந்தச் சிறையில் அவரைப் பார்க்கவந்தவர்கள் கொடுத்த டிஷ்யூ பேப்பர் பெட்டியிலிருந்த வெடிகுண்டுகளைவெடித்தும்  காவலாளிகளைப்  பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டும் சிறையிலிருந்து தப்பிவிட்டார். வலைவீசித்தேடி 6 வாரத்துக்குள் பிரான்ஸ் போலீஸ்  அவரைத் தேடிக் கண்டுபிடித்தது, மீண்டும் 25 வருடத் தண்டனை கொடுக்கப்பட்டு இந்த அதிபாதுகாப்புச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்துதான் உலக வரலாற்றிலேயே மிக துல்லிமாகத் திட்டமிடப்பட்டு வேகமாகச் செயலாக்கப்பட்டிருக்கும் இந்த சாகசச்செயலினால் இப்போது தப்பியிருக்கிறார்.

கடந்தமுறை விடுதலையாகி வந்தபோது இவர் டி வி பேட்டிகளில் சொன்னது. “நான் அல்பேஷினோ, ஸ்கார்ஃபேஸ், ஹீட் போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்த்துத்தான் என் கொள்ளைகளைத் திட்டமிட்டேன். 20 முறை பல மணிநேரம் அந்த படங்களைத் திரும்பத்திரும்பப் பார்த்துத்தான் என்னை வங்கிக்கொள்ளைக்கு தயாரித்துக்கொண்டேன். பாரிஸில் நடந்த உலகப்படவிழாவிற்கு வந்திருந்த ஹீட் என்ற படத்தின் டைரக்டர் மைக்கேல் மான் அவர்களிடமே “நீங்கள் தான் எங்கள் கொள்ளை முயற்சிகளின் டெக்னிகல் டைரக்டர்” என்று நான் சொல்லியிருக்கிறேன்
.
நிகழ்ந்த துணிகரமான சிறை உடைப்பு, வங்கிக்கொள்ளை போன்றவற்றைத்தான் நாங்கள் படமாக எடுக்கிறோம் என்று ஹாலிவுட்காரர்கள் சொல்லுகிறார்கள். . ஆனால் இவர்களின் படத்திலிருந்துதான் நான்  தொழிலைத் திறமையாகச் செய்யக் கற்றேன்  என்கிறார் இந்தக் குற்றவாளி.

உடனடியாக இல்லாவிட்டாலும் கூட அடுத்த கொள்ளை முயற்சியில் நிச்சியம் சிக்கிவிடுவான் என்று நம்பிக்கையுடன் இருக்கும் பிரான்ஸ் போலீஸின் கவலையே வேறு. 
பிடித்துச் சிறையில் அடைத்த பின் இவரை எப்படி தண்டனைக்காலம் வரை  பாதுகாப்பது என்பது தான் அது. 


21/4/17

ஹலோ ஸ்மார்ட் இந்தியா


மாரத்தான் தெரியும். வாக்கத்தான் கூட தெரியும். அதென்ன ஹாக்கத்தான்?

கணினித்துறையினர் பலர் ஒன்றாகக்கூடி தங்களுடைய புதிய யோசனைகளை- “பெட்டிக்கு வெளியே” என்று சொல்லுவார்களே அந்த அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்கில் உதித்த புதிய எண்ணங்களை ஒரு திட்ட அறிக்கையாக சமர்ப்பித்து அதை விளக்குவார்கள். நீதிபதிகளாக இருக்கும் வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு பரிசுகளும் பெரிய நிறுவனங்கள் அந்த யோசனையை நல்லவிலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கும்.
“ ஹாக்” என்றால்கணினி மென்பொருள் திருட்டு என்ற அர்த்தத்தில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் ஒரு கணினி யின் மென்பொருள் திட்டத்தை “அலசி ஆராய்வது” என்பது. அதில் பலர் பங்கேற்று குறிபிட்ட நேரத்துக்குள் தாங்கள்: யோசனைகளைச்சொல்லும் போட்டியானதால் அதை மாராத்தானுடன் இணைத்து “ஹாக்கத்தன்” எனப் பெயரிட்டார்கள். 1990ல் மிக சாதாரணமாக ஒரு நகர அளவில் துவங்கிய இது 2010லிருந்து உலகின் பல நாடுகளில், சில சமயம் யாஹு போன்ற பெரிய நிறுவனங்களுன் நடத்த ஆரம்பித்தன. இப்போது உலகின் பல நாடுகளில் இது நடக்கிறது. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் முக்கியமான விஷயம் தன்னைப்போல சிந்திக்கும் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புதான். செலவுகள் பங்கேற்பவர்களுடையது. என்பதால் சாதாரண தங்குமிடம், (சிலசமயங்களில் டென்ட் தான்) எளிமையான உணவு போன்றவற்றுடன் ஓய்வு நேரங்களில் இளைஞர் பட்டாளம் பாட்டு, ஆட்டங்களுடன் கலக்கிக்கொண்டிருப்பார்கள்

பிரதமர் மோடி அறிவித்த டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியான ஸ்மாட் இந்தியாவின் ஒரு பகுதியாக இந்தியாவில் “ஹாக்கதான் 2017” ஒரு சில மாற்றங்களுடன். அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதை அரசின் நிறுவனங்கள் முன்னெடுக்கும். போட்டிகளை விதிகளுடன் நடத்த மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு குழு நடத்தி அரசே பரிகளையும் அளிக்கும். நாட்டிலுள்ள அனைத்து பொறியில் கல்லூரியிலிருக்கும் கணினி பிரிவு மாணவர்களின் குழு அந்தக் கல்லூரியின் சார்பாகப் பங்குகொள்ளலாம்.. ஒரு குழுவில் ஆறு பேர் இருக்கலாம்.அதில் கட்டாயமாக ஒரு மாணவி இருக்கவேண்டும். குழுவைக் கல்லூரியின் பேராசியர் ஒருவர் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டும். ஒருகல்லூரி 3 குழுக்கள் வரை அனுப்பலாம். கணனிப்பாடத்தை எடுத்துப் படிக்காத ஆனால் ஆர்வமுள்ள மாணவர்களும் அந்தக் குழுவில் இருக்கலாம் போன்ற நிபந்தனைகளுடன் திட்டம் அறிவிக்கபட்டது. உலகில் இதுவரை இந்த ஹாக்கத்தான் அரசின் ஆதரவுடன் நடந்ததில்லை

இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவிடம் இதை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அவர்கள் செய்த முதல் காரியம் அரசுத்துறைகளிடம் உங்கள் துறையில் சமூகம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பாக அல்லது இருப்பதில் எதை விரிவாக்கம் செய்ய வேண்டும்? என்று கருதுகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கக்கோரினார்கள் . 29 அமைச்சகங்களிலிருந்து வந்து சேர்ந்த பல யோசனைகளில் 598 பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதை ஒரு போட்டியாக ஹாக்கத்தான் 2017க்காக அறிவித்தார்கள்.
முதலாண்டு என்பதால் ஓரளவுதான் பங்கேற்பு இருக்கும் என எதிர்பார்த்த ஐஎஸ் ஆர்வோ போட்டிக்கு பதிசெய்தவர்களின் எண்ணிக்கைக் கண்டு மிரண்டுவிட்டது. ஆன்லனையில் பதிவு என்பதால் கடைசிநிமிடம் வரை விண்ணப்பங்கள் குவிந்தன. 42000 மாணவர்கள் பங்கேற்கும் 7531 குழுக்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 10000 மாணவர்கள் அடங்கிய 1266 குழுக்கள் மட்டும் போட்டிக்கு தேர்ந்த்டுக்கப்பட்டன. இந்தக்குழுக்கள் நாட்டின் 26 மையங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தங்கள் திட்டங்களை வல்லுநர்களுக்கு விளக்கினர். 5 நிமிடம் தான் நேரம் அதில் 3 நிமிட விளக்கஉரைக்கு 2 நிமிடம் கேள்வி பதிலுக்கு என ஒட்டம் நடந்து முடிந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் இறுதிச்சுற்று ஹாக்கதானில் பங்குகொண்டார்கள்
இந்த ஆண்டு ஹாக்த்தானை நடத்திய மையங்களில் ஒன்றான அகமதாபாத் மையம் ஹாக்கதான் 2017 இறுதிச்சுற்றை நடத்தியது. 50 குழுக்கள் பங்கேற்றன. போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 35 பிரச்சனைகளில் ஒன்றுக்கு இவர்கள் தங்கள் கண்டுபிடிப்பான தீர்வுகளை விளக்கினார்கள். தொடர்ந்து 36 மணி நேரம் மாணவர் குழுக்கள் விரைவாக தங்கள் எண்ணங்களை கொட்டிக்கொண்டிருந்தார்கள். நிபுணர்கள் குழு திக்குமுக்காடிபோனது. இறுதியில் டென்ஷனில் நகம் கடித்துக்கொண்டிருந்த போட்டியாளர்களிடம் முதல்பரிசான ஒரு லட்சதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது தமிழகத்தைச்சேர்ந்த காஞ்சிபுரத்திலிருக்கும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் டீம். சரி - இரண்டாவது இடம் யாருக்கு? எனக் காத்திருந்போது ஒலித்த அறிவிப்பு மதுரை தியாகராயர் கல்லூரி
கர்நாடக மாநிலத்தின் கல்லூரிக்கு மூன்றாம் இடமும் டில்லி, மும்பய் கல்லூரிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன. ஐஎஸ் ஆர்வோ தலைவர் பரிசுகளை வழங்கினார்.

இந்த இறுதிச்சுற்றின் முடிவில் போட்டியாளர்களுடன் விடியோ கான்பரன்ஸில் பிரதமர் உரையாற்றினார். இறுதிச்சுற்றுக்கு வராதவர்களும் போட்டிகள் நடந்த மையங்களிடமிருந்து அவருடன் உரையாடினார்கள்.
“உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்ளுகிறேன்” என்று இரவு 8 மணிக்குத் துவங்கிய பிரதமரின் உரையாடல் முடிந்தபோது இரவு மணி 11.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்படவேண்டும், கிராமப்புற இளம்பெண்களுக்கு அரசே நாப்கின்கள் வழங்க வேண்டும் என்பதிலிருந்து அதிநவீன 3டி பிரின்டிங், இயந்திரங்களின் புத்திசாலித்தனம் வரை மாணவர்கள் சொல்லும் சிலயோசனைகளை பிரதமர் பாராட்டுகிறார். சிலவற்றிற்கு கேள்விகள் கேட்கிறார். இறுதியாக

“இன்று அரசாங்கம் அடையாளம் கண்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன் வைத்திருக்கிறீர்கள். அரசாங்க பிரச்சனைகளுக்கு முடிவு சொல்ல வேண்டியது அரசாங்கம் மட்டும் தான் என்ற மாயை உடைத்து எங்களாலும் முடியும் எனச் சொல்லியிருக்கிறீர்கள்” என்று போட்டியாளர்களைப் பாராடினார்.

‘மாராத்தான் ஓட்டங்களின் வெற்றி என்பது பரிசுபெற்ற சிலரால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பங்குகொண்டவர்கள் அனைவரும் தான் இந்தப் போட்டிகளை வெற்றியாக்குகிறார்கள்’ என்ற வாசகங்கள் பாரிஸ் நகரில் இருக்கும் சர்வதேச மாராத்தன் பவுண்டேஷனின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இந்திய ஹாக்கதான் 2017க்கு அது மிகவும் பொருந்தும்.
நாடு முழுவதிலிருந்தும் 42000 ஸ்மார்ட்டான மாணவர்கள் தங்கள் எண்ணங்களை ஓட விட்டிருக்கிறார்களே .