இந்திய
நாடாளுமன்றம்
இதுவரை சந்திக்காத சில அபூர்வமான காட்சிகளுக்குப் பின்னர் ஒரு வழியாகப்
29வது மாநிலமாக தெலங்கானா பிறந்துவிட்டது. ஐம்பது ஆண்டு கால
விவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு தெலங்கானா பிரச்னை ஒரு முடிவை
நோக்கி நகர்ந்திருக்கிறது. துயரங்களையும் கசப்புகளையும் கொண்டு வராத
பிரிவினை ஏதேனும் வரலாற்றில் பதிவாகியுள்ளதா என்ன? தெலங்கானாவும் அதற்கு
விதிவிலக்கல்ல.
இந்திய
அரசியல் களத்தில் இதற்கு முன் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, புதிதாக
உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தெலங்கானா அவற்றில் இருந்து வேறுபடுகிறது.
பதிவாகியுள்ளபடி 904 மரணங்கள் தெலங்கானாவுக்காக நிகழ்ந்துள்ளன. 100
கோடிக்கும் மேல் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. மூன்று புதிய கட்சிகள்
அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தின. வேறு எந்த மாநிலப் பிரச்னையின்போதும்
இவ்வாறு நிகழவில்லை.
ஒரு
புதிய மாநிலம் சட்டபூர்வமாக பிறப்பது என்பது ஒரு சரித்திர நிகழ்வு. ஆனால்
தெலங்கானா நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அழிக்கமுடியாத ஒரு கரும்புள்ளியை
ஏற்படுத்தியபிறகே உதயமாகியிருக்கிறது. ஆந்திரப் பிரசேம் மறுச்சீரமைப்பு
மசோதா உருவான கதை கிட்டத்தட்ட போர்க்களத்தை நினைவுபடுத்துகிறது. 13
பிப்ரவரி 2013 அன்று தெலங்கானா தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல்
செய்யப்பட்டபோது இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் எழுந்தது. ஆந்திரப்
பிரிவினையைத் தடுக்க முயன்ற ஒரு காங்கிரஸ் எம்.பி கையோடு கொண்டு
வந்திருந்த மிளகு ஸ்ப்ரேயை அடித்தார். சிலரிடம் கத்தி இருந்தது. மசோதாவை
வாசிக்கவிடாமல், விவாதங்களை நடத்தவிடாமல் இவர்கள் மேற்கொண்ட
ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களங்களும் சபாநாயகர் மீராகுமார் சொன்னதைப் போல்
வெட்கித் தலை குனிய வைக்கக்கூடியவை.
ஒரு
கோரிக்கையாக இருந்த தெலங்கானா பின்னர் சட்டமாக உருவான தருணங்களில்
தொலைக்காட்சி காமிராக்கள் இயங்கவில்லை. இதற்கு தொழில்நுட்ப கோளாறே
காரணம் என்று சொல்லப்பட்டாலும் இதனை பலர் ஏற்கத் தயாராக இல்லை.
இதற்கிடையில், மிளகு தூவிய விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் லகடபதி
ராஜகோபால் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தெலங்கானா மசோதாவுக்கு
எதிராக சீமாந்திரா உறுப்பினர்கள் நீண்ட காலமாக கட்சி வித்தியாசமின்றி குரல்
கொடுத்து வருவதாக இவர் கூறியிருக்கிறார்.
தெலங்கானாவின்
மற்றொரு முக்கிய அம்சம் இது. நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு
தெலங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரித்தெடுப்பதற்கு காங்கிரஸ் ஒப்புதல்
கொடுத்திருந்தாலும் இன்னமும் கட்சிக்கு உள்ளேயே இந்த முடிவுக்கு முழுமையான
ஒப்புதல் கிடைக்கவில்லை. உச்சகட்டமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர
முதல்வரே இந்த முடிவை எதிர்த்து ராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால், பிரதான
எதிர்க்கட்சியான பாஜக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விசித்திரம்தான்,
இல்லையா?
காலச்சுவடுகள்
மொழிவாரியாக
மாநிலங்கள் பிரிக்கப்படும்போதே தெலங்கானா தனி மாநில கோரிக்கை உயிர்
பெற்றுவிட்டது. 1946 தொடங்கி 1951 வரை ஹைதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் ஆதரவுடன் நடைபெற்ற விவசாயிகள் எழுச்சி இந்தியாவின் பார்வையை
தெலங்கானாவை நோக்கி திருப்பியது. மத்திய அரசாங்கம் ராணுவத்தை அனுப்பி இந்த
எழுச்சியை அடக்கியது. தெலுங்கு மொழி ஆந்திர மக்களை ஒன்றிணைக்கும்,
பிரிவினை கோஷத்தைக் காலப்போக்கில் அடக்கிவிடும் என்று பலர் நினைத்தாலும்
அன்றைய பிரதமர் நேரு தெலங்கானாவின் இயல்பை நன்றாகவே அறிந்திருந்தார்.
விவாகரத்து உரிமை பெற்ற திருமணம் என்றே ஆந்திராவுடனான தெலங்கானாவின்
இணைப்பை 1956ல் அவர் வர்ணித்தார்.
இருந்தும்
அடுத்தடுத்து அமைந்த அரசாங்கங்கள் தெலங்கானா கோரிக்கையைப் புறந்தள்ளி
அதனை ஒரு பிரிவினைவாதக் கோஷமாகவே கண்டனர். 2004ல் வலுவான அரசியல்
பிரச்னையாக தெலங்கானா எழுந்தபோது, காங்கிரஸ் தனித் தெலங்கானா தருவதாக
தேர்தல் பிரசாரத்தில் வாக்களித்தது. ஆனால் வெற்றி பெற்று ஆட்சியில்
அமர்ந்ததும் வசதியாக இந்த வாக்குறுதியை மறந்துவிட்டது. அல்லது, வெறுமனே
காலம் தாழ்த்திவிட்டது.
இனியும்
அது சாத்தியமில்லை என்னும் விதமாக ஆந்திராவில் தெலங்கானாவுக்கு ஆதரவாகவும்
எதிராகவும் பெரும் போராட்ட அலைகளும் ஆர்ப்பாட்டங்களும் எழுந்தபோது
முடிவு எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. வேறு
வழியின்றி, தனித்தெலங்கானாவை காங்கிரஸ் ஆதரிக்கவேண்டி வந்தது. ஜூலை 2013ல்
காங்கிரஸ் பிரிவினைக்கு ஆதரவாக முடிவெடுத்தது. அக்டோபர் 2013ல்
மந்திரிசபை கூட்டத்தில் இது முடிவாக, டிசம்பரில் வரைவு மசோதா தயாரானது.
கூடவே புதிய பிரச்னையும் தொடங்கியது.
ஆந்திர
முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்துக்குப் பின்னர் அவரது மகன் ஜெகன்
விரும்பியபடி அவரை முதல்வராக்காமல் கிரண்குமார் ரெட்டியைத் தேர்ந்தெடுத்து
முதல்வராக்கினார் சோனியா காந்தி. தெலங்கானா பிரிந்தால் காங்கிரஸ்
செல்வாக்கு பறிபோகும் என்று கருதிய கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் மேலிடம்
சொல்வதைக் கேட்க மறுத்தார். அதனால் மத்திய அரசின் வரைவு மசோதாவை
மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றாமல் திருப்பியனுப்பினார்.
அவரைப்
பதவி நீக்கம் செய்து மற்றொரு முதல்வரை நியமித்து அவர்மூலம் மசோதாவை
நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் தலைமையால் முடியவில்லை. கட்சிக்குள் பிளவைத்
தவிர்க்கவே பொறுமை காத்தோம் என்று பேட்டியளித்தார் ப. சிதம்பரம். ஆனால்
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாமல் போகவே, பிளவு பயத்தையும் மீறி
மசோதாவில் உறுதியாக நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மசோதாவை நேரடியாக
நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தது.
காரணங்கள், கணக்குகள்
ஏன்
இந்த அவசரம்? ஒன்றுதான். வாக்கு வங்கி அரசியல். மசோதாவைக் கொண்டுவராமல்
முன்னர் நாள்களைக் கடத்தியதற்கும், தாமதமாகக் கொண்டுவந்ததற்கும்,
ஆதரித்தற்கும், எதிர்த்ததற்கும், பின்னர் வலுவாக ஆதரித்ததற்கும்கூட வாக்கு
வங்கிதான் காரணம். எதை எப்போது செய்தால் ஆதரவு கிடைக்கும், எதைச் செய்தால்
கிடைக்காது என்னும் கணக்குதான் இங்கே காங்கிரஸுக்கு முக்கியம்.
இப்படி அவசரக்கோலத்தில் தெலங்கானா பிரச்னையைத் ‘தீர்த்து வைத்ததில்’ யாருக்கு என்ன லாபம்?
சற்று
ஆழ்ந்து ஆராய்ந்தால், நமது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுமே இந்த
விளையாட்டில் கணக்குப் போட்டு ஈடுபட்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ்
கட்சி பலமாக இருக்கும் பெரிய மாநிலம் ஆந்திரா. ஆனால் தெலங்கானாவுக்கு
எதிரானவர்களும் ஆதரவாளர்களும் அதில் கிட்டத்தட்ட சரிசமமாகப் பிரிந்து
கிடக்கிறார்கள். மொத்தமுள்ள 42 எம்.பி சீட்டுகளில் 31 காங்கிரஸ்
வசமிருக்கிறது. அதில் 17 தெலங்கானா பகுதியிலும் 19 சீமாந்திராவிலும்
இருக்கிறது. ஆக எப்படி முடிவெடுத்தாலும் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
காங்கிரஸ்
வேறு கணக்கு போட்டது. தெலங்கானாவை அறிவித்தால் அதற்காகப் போராடும்
சந்திரசேகர் ராவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிடுவதாக முன்பு
கூறியிருந்தார். காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை
கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவை முற்றிலும் இழந்துவிடுவோம்
என்னும் அச்சத்தில் சந்திரசேகர் ராவின் டிஎஸ்ஆர் கட்சியின் (தெலங்கானா
ராஷ்டிர சமிதி) ஆதரவுடன் 17 எம்.பி சீட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள
கணக்குப்போட்டது காங்கிரஸ். தெலங்கானா எதிர்ப்பு சீட்டுகளை இழக்க
நேரிட்டாலும் இதை வைத்து சரிகட்டிவிடலாம் அல்லவா? சந்திரசேகர் ராவுக்கு
ஆதரவு அளித்து அவரை முதல்வராக்கிவிட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் அவரது
கட்சியை இணைத்துவிடலாம் அல்லவா?
காங்கிரஸ்
எதைச் செய்தாலும் எதிர்க்கும் பாஜக ஏன் தெலங்கானா மசோதாவை ஆதரித்தது?
அவர்கள் போட்ட கணக்கு இது. காங்கிரஸ் தெலங்கானா மசோதாவைக் கொண்டுவராமல்
காலம் தாழ்த்தும் என்று நினைத்து வந்த பாஜக, தெலங்கானாவை எதிர்க்கும்
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி
செய்தது. சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவும்
செய்தார். தெலங்கானாவில் பெரும் வியாபார,தொழில் முதலீடுகள் செய்துள்ள
சீமாந்திரா பகுதியினரின் ஆதரவு அவருக்குக் கிடைக்க சந்திரபாபு உதவுவார்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று
தெரிந்ததும் அவர்களைக் கடந்துசெல்லவும் முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணி
பற்றி சந்திரபாபு நாயுடுவின் சமீபத்திய கருத்து இது. ‘தெலங்கானா
விவகாரத்தில் பாஜக சரியான வாதங்களை முன்வைக்கவில்லை, இருப்பினும் கூட்டணி
விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு முடிவு செய்து விட முடியாது.‘
காங்கிரஸின்
கணக்கு வேறு மாதிரி திரும்பவே பாஜக விழித்துக்கொண்டது. காங்கிரஸ்
முன்வைக்கும் தெலங்கானா மசோதாவை ஆதரிக்க மறுத்தால் அதையே காரணமாகச்
சுட்டிக்காட்டி பழி போடப்படும் என்று பாஜக அஞ்சியது. தெலங்கானாவை ஆதரிக்க
காங்கிரஸையும் சேர்த்து ஆதரிக்க முடிவு செய்தது. நாங்கள் ஆரம்பம் முதலே,
அதாவது ஜன் சங் காலம் முதலே தெலங்கானா தனியாக இருப்பதையே விரும்பினோம்
என்று தங்கள் ஆதரவுக்கு நியாயமும் கற்பித்தனர். மற்றொரு பக்கம்
காங்கிரஸையும் தாக்கியது. காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் தேர்தல்
ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சுமத்தியது. எங்கள் தயவு இல்லாவிட்டால் மசோதா
நிறைவேறியிருக்காது என்றும் சொல்லிக்கொண்டது.
ஒய்எஸ்ஆர்
காங்கிரஸின் தலைவர் ஜெகனின் கணக்கு வேறு மாதிரியானது. என்னதான்
ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காகப் போராடினாலும் உண்ணாவிரதம் இருந்தாலும்
பிரிவினை தவிர்க்கமுடியாதது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய இலக்கு
ஹைதராபாத் சட்டமன்ற முதல்வர் நாற்காலி. தெலங்கானா பிரிந்தாலும்
சீமாந்திராவின் முதல்வராகும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பது அவர்
விருப்பம். இதற்கிடையில், தெலங்கானா மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை
அணுக முடிவெடுத்துள்ளனர்.
மற்றொரு பக்கம், ரெட்டி பிரிவினர்களின் ஆதிக்கத்தில் இருந்து காங்கிரஸ் நழுவிக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸிலிருந்து
பிரிந்துவரும் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு தேசத்துடன் அணி சேர்ந்து
தேர்தலைச் சந்தித்து வெல்ல முயற்சி செய்து வருகிறது.
இப்படி
எல்லோரும் அவரவருக்குத் தோதான கணக்குகள் நிறைவேற காத்திருக்கிறார்கள்.
நம்முடைய அணுகுமுறையே சரியானது என்று ஒவ்வொருவரும்
நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கணக்கு யார் போட்டாலும், அதைச் சரிபார்த்து
மதிப்பெண் போடப்போகிறவர்கள் மக்கள்தான்.
இனி என்ன?
- அதிகாரபூர்வமாக
ஆந்திரப் பிரவினை ஏப்ரல்&மே மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகே
நடைபெறும். சரியான தேதியை மத்திய அரசு குறிக்கவேண்டும்.
- மக்களவைத் தேர்தலும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் முன்பு நிகழ்ந்ததைப் போலவே நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- கிரண்குமார்
ரெட்டியின் ராஜிநாமா ஏற்கப்பட்டு விட்டது என்றாலும் புதிய அரசு அமையும்வரை
பொறுப்பில் நீடிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால்
தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் ஆளுநர் ஆட்சியே அமல்படுத்தப்படும் என்று
தெரிகிறது.
- தெலங்கானா
சாத்தியமானதைத் தொடர்ந்து நாட்டில் பிற மாநிலக் கோரிக்கைகள் வலுவடையும்
என்னும் எதிர்பார்ப்பும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
- தெலங்கானா ஒரு பார்வை
- பரப்பளவு 1.14 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
- மக்கள் தொகை 3.5 கோடி (ஹைதராபாத் சேர்த்து).
- மாவட்டங்கள் : அடிலாபாத், நிஜாமாபாத், கரிம்நகர், மேடக், வாரங்கல், ரங்காரெட்டி, கம்மம், நலகோண்டா, மஹபுக்நகர், ஹைதராபாத்.
- தெலுங்கு, உருது ஆகியவை முக்கிய மொழிகள். சில பகுதிகளில் மராத்தியும் கன்னடாவும் பேசப்படுகின்றன.
- இரும்பு,
கரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் உள்ளன. மத்திய அரசும் ஆந்திர அரசும் இணைந்து
நடத்தும் சிங்கரேனி கொலைரீஸ் இப்பகுதியிலுள்ள முக்கியப் பெரிய
நிறுவனமாகும்.
- புதிய மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக மின்சாரம் இருக்கப்போகிறது என்கிறார்கள்.
- கோதாவரி, கிருஷ்ணா இரண்டும் முக்கிய ஆறுகள். எண்ணற்ற பல ஏரிகளும் உள்ளன.
- நக்ஸல் நடவடிக்கைகளின் களமாக இருந்த பகுதி.