18/7/15

உயர்ந்த மனிதர்கள்சென்னை நந்தம்பாக்கம்டிரெட் செண்டர் அரங்கம். கறுப்பு கவுன் தொப்பிகளுடன்  சந்தோஷ பூக்களாக மலர்ந்திருக்கும்   மாணவர்களின் சிரிப்பும் மகிழ்ச்சி குரல்களும்  செல்பி குழுக்களும்  நிறைந்திருக்கும் அந்த வளாகத்தில் பரவசத்துடன் பெற்றோர்கள் . பேராசிரியர் பாலாவை சந்திக்க விஐபி அறையில் காத்திருக்கிறேன். 
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டின் தலைவர் திரு பாலா பாலச்சந்தரின் வாழ்க்கை கதையைதொடராக நான்  எழுதியது. புத்தகமாக வந்திருக்கிறது (கவிதா பதிப்பு) அதன் ஆங்கில பதிப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் மும்பையில் வெளியிடப்பட்டது. திரு ரத்தன் டாட்டா வெளியிடுவதாக இருந்த அந்த நிகழ்ச்சியில் இறுதி நேரத்தில் அவரால் உடல் நல குறைவினால் பங்கேற்கமுடியவில்லை. புத்தகத்தை மற்றொரு விருந்தினரான ஆதி காத்ரஜ் வெளியிட்டார்.

நேற்று (15/07/16) திரு ரத்தன் டாட்டா கிரேட் லேக்ஸின் பட்டமளிப்பு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். திரு பாலா பாலசந்திரன் என்னை விழாவிற்கு அழைத்து அவரிடம் நூலின் ஆசிரியர் என அறிமுகப்படுத்தினார்
மும்பையில் நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டிய புத்தகத்தின் ஆசிரியர் என அறிமுகப் படுத்தினார் பாலா.
கைகுலுக்கியபின் திரு ரத்தன் டாட்டாவிற்கு புத்தகத்தின் பிரதியை கொடுத்தேன். திறந்த பார்த்த அவர்
 ”கையெழுத்திட்டுகொடுங்கள்”: என்றார். 
ஆச்சரியம்,சந்தோஷம், பெருமிதம் எல்லாம் ஒருசேரத் தாக்க சிலகணங்கள் உறைந்து போனேன். இந்தியா தொழில் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எனது புத்தகத்தை கையெழுத்துடன் கேட்கிறார். (சொக்கா இது நிஜம்டா) 
கையெழுத்திட்டு புத்தகத்தை கொடுத்த பின் மற்றொரு பிரதியில் அவரது ஆட்டோகிராப் தந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றேன். 
உடனே உட்கார்ந்து என் பெயரை நிதானமாக எழுதி(இடது கை பழக்கமுள்ளவர்) வாழ்த்துகளுடன் என்று கையெழுத்திட்டுகொடுத்தார்.
ஒரு எழுத்தாளனை கௌரவித்த . இந்தப் பெரிய மனிதருக்கும் என்றென்றும் என் நினைவில் நிலைக்கபோகும் இந்த மகிழ்வான தருணத்தை எனக்குத் தந்த, பேராசியர் திருபாலா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
இந்த உயர்ந்த மனிதர் அன்றைய பட்டமளிப்பு விழாவில் வழக்கமாக நிகழம்” அறிவுரைகளை வழங்கவில்லை. மாறுதலாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மனதைத்தொட்ட அந்த எளிமையான, நேர்மையான உரையாடல் பற்றி விரைவில் எழுதுகிறேன்.  
10/7/15

மத்தியபிரதேசத்தில் தொடரும் மர்ம மரணங்கள்


இந்த தேசம் கடந்த பல ஆண்டுகளில் பல பூதாகாரமான ஊழல்களை தொடர்ந்து  சந்தித்திருக்கிறது.. அவைகள் விசாரணைகள்,அதிரடி கைதுகள், என பரபரப்பாக முதல் பக்க செய்தியாகவுமிருந்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு  ஊழல் வெளிச்சதிற்கு வந்தபின்னர்  தொடராக அதில் சம்பந்தபட்ட 44 பேர்களின் அடுத்தடுத்த மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பது  பாரதீய ஜனதா கட்சி ஆட்சியிலிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் இப்போது வெடித்திருக்கும் “ வியாபம்” மெகா ஊழலில்தான் 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித்தேர்வைநடத்துவது ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழி பெயர்ப்பு– வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் சுருக்கமாக – "வியாபம்".
மாநில அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இதை நாட்டிலேயே நேர்மையாக நியாமாக நடக்கும் சுயாட்சி அமைப்பு இது என மத்தியபிரதேச அரசு மார் தட்டிக்கொண்டிருந்த ஒரு விஷயம்.  இதில்  நடந்த ஊழல் தான் இப்போது வெளிச்சதிற்கு வந்திருக்கிறது. அதன் தொடர்விளைவாகதான்  நடந்துகொண்டிருக்கும் மர்ம மரணங்கள்.
வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 44 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் ஒருவர்.. இந்த பட்டியலில் கடைசியாக இடம் பெற்றிருப்பவர் ஊழலால் பாதிக்கப் பட்ட ஒரு குடும்பத்தினரை பேட்டிகண்ட டிவி செய்தியாளர்அக்‌ஷய் சிங் என்ற செய்தி வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே  வியாபம் ஊழல் விசாரணைக்கு தகவல்களை அளித்து உதவி வந்த மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அருண் சர்மா, டெல்லி ஹோட்டல் ஒன்றில்  மர்மமமான முறையில் இறந்து கிடந்தார் இந்த  தொடர் மரணங்களினால்  தெரிந்த விஷயங்களைக்கூட போலீசில் சொல்ல மக்கள் அஞ்சுகின்றனர்..  மாநில போலிஸால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்களும் மீடியாக்காரர்களும் நம்ப மறுக்கிறார்கள். 
உலகிலேயே மிக எளிதாக  டாக்டராகவோ எஞ்னியாராகவோ மத்தியபிரதேசத்தில் தான் முடியும். பணம். – பணம், மட்டுமே இருந்தால் போதும். 
மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு உயர் கல்விப் பிரிவு அல்லது அரசுத் துறை ஒன்றில் வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஒருவர், அதற்காக சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லை –பணக்கட்டுகள் போதும் அவர்களைத் தேடி இடைத் தரகர்கள் வருவார்கள். நீங்களே தேர்வை எழுதுவதானால், உங்களுக்கு முன்னோ பின்னோ ஒருவர் அமர்ந்து உங்களுக்குத் தேவையான பதில்களைத் தருவார்கள்.
இல்லையென்றால், உங்கள் பெயரில் வேறு ஒருவர் தேர்வை எழுதிக் கொடுப்பார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் தேர்வாணையத்தை சரிக்கட்டுவது, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களைச் சரிகட்டுவது, விடைத்தாள் திருத்துபவர்களைச் சரிகட்டுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை கவனித்துகொள்லும் வேலையை  இடைத்தரகர்கள் கவனித்துகொள்ளுவார்கள்.
நடந்துகொண்டிருக்கும் மரணங்கள் திகில் படங்களில் வரும் காட்சிகளாக இருப்பதைப்போல  நடந்த ஊழல்களும் சினிமா பாணீயில் . சயிண்டிபிக்காக பல வழிவகைகளில் செய்திருக்கிறார்கள். இந்த வசூல் ராஜாக்கள் வடிவமைத்திருக்கும்   விஞ்ஞான பூர்வமான தேர்வு ஊழல்களில் தான் எத்தனை வகை? 
1)   ஆள்மாறாட்டம் : தேர்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாக கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வுமைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, 
2)   ரயில் இன்ஜின் / ரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்த துறை பற்றி நன்கு அறிந்த ஒருவரை)  நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 லட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக் கொள்ளலாம்
3)   காலி விடைத்தாள்கள் : அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளை காலியாக வைத்து விட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கி விடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்த காலித் தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டுவிடிவார்கள். இதெல்லாம் சாத்தியாமா? என தோன்றுகிறதல்லவா?   ஆனால், இப்படித் தான் நடந்துள்ளது. சம்பந்தபட்டவர்கள் சாட்சியம்  அளித்திருக்கிறார்கள். 
2009-ம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாக பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது –  இந்த 300 இடங்களில்தான்  லஞ்ச ஊழல் ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று நிலை நிலவுகிறது.
இதைத்தவிர 1.40 லட்சம் பேர் ஒவ்வொருவரும் 25 லட்சம் கொடுத்து பல அரசு வேலைகளை பெற்றிருக்கிறார்கள். இந்த பொதுவழக்குகள் போடும் முன் அரசுக்கு கடிதம் , பத்திரிகைகளில் கட்டுரைகள் என போராடியவர் வினோத் ராய்.  அதற்காக விலைபேசபட்டு அதை ஏற்காததால் கொலை மிரட்டலகளையும் சந்தித்துகொண்டிருப்பவர். இறுதியில் கோர்ட் ஆணைப்படி ,விசாராணை  சிறப்புபோலீஸ் புலானய்வு குழு விசாரணையை துவங்கியது.
இப்போது 28 பேர் மீது பல வழக்குகளை பதிவு செய்பட்டிருக்கிறது..  இவர் கள் 3292 வித மான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் கண்டு பிடிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பிரிவுகளில் வழக்குகள் பதிவாயிருக்கின்றன. இதுவரை இவ்வளவு பிரிவுகளில் வழக்குகள் போடபட்டதில்லை. . ஊழலுக்கு காரணமான குற்றவாளிகள் மீது குற்றங்களை நிரூபிக்கும் வகையில் 92,176 ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைக் கப்பட்டிருக்கின்றன. இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது. 
அமைச்சர்களே தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க அதிபர்  சுதீர் ஷர்மா ஆகியரோம் அடக்கம்.. இந்த ஆப்ரேஷனின் முளையாக செயல் பட்ட வினோத் பண்டாரி என்பவர்  தப்பி மொரீஷியல் தீவுக்கு சென்று விட்டார்
தவிர்க்கவே இயலாத வகையில் பல்வேறு பொதுநல வழக்குகளுக்கும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களுக்கும், நீதி மன்றங்களின் உத்தரவுகளுக்கும் பின் மத்திய பிரதேசத்தின் சிறப்புக் காவல் துறையின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்த ஊழல் மிகத்  தவறான திசையை நோக்கிச் செல்கிறது. குற்றம் இழைத்த ஒரு சிலரோடு சேர்த்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  வட இந்திய ஊடகங்கள்  எழுதுகின்றன. . மேற்கொண்டு மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் எழாமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே கைதுகள் செய்யப்படுகின்றன. என்றும் குற்றம் சாட்டுகின்றன.  அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கல்வித்துறை வல்லுனர்கள் எனப்பல துறைகளினரின் ஒருங்கிணைப்போடு மிகந்த தொழில்நேர்த்தியோடு நடந்திருக்கிறது இந்த போலி டாக்டர்களை உருவாக்கும் ஊழல். 
வெளியாகியிருப்பது  மருத்துவத்துறையில் மட்டும் தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களின்  இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம்  செய்யப்படும் பணி நியமனங்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துகொண்டால் , ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடிகள்  2ஜி ஊழலைவிட அதிகமான அளவில்   இருக்கும்  என மதிப்பிடப்பிடபடுகிறது.  இதில் இன்னுமொரு ஆச்சரியம் இத்தனைக்கு பிறகும், வியாபம் தான் இன்னும்  இந்த ஆண்டுக்கான அட்மிஷன், வேலைகளுக்கான தேர்வை செய்துகொண்டிருக்கிறது. 
.இந்த விஷயத்தில்  மாநில அரசு மெத்தனமாக இருக்கிறது. சுஷ்மா, வசுந்திரா ராஜி ஊழல் அலைகளை விட  பிரமாண்டமாக எழுந்திருக்கும் இந்த ஊழல் அலை பற்றியும் வழக்கம்போல பிரதமர் மோடி மெளனம் காக்கிறார். உச்ச நீதிமன்ற தலையிட்டு சிபிஐ விசாரணையும்,  சிறப்பு குழுவும்  அமைக்க வேண்டுகிறது காங்கிரஸ்.. முதல்வரின் ராஜினாமாவை கோருகிறது எதிர்கட்சிகள்.
மத்திய பிரதே மக்கள் இந்த   தொடர் மரணங்களை உடனே  நிறுத்த யாராவது ஏதாவது செய்யமாட்டர்களா? எனத்   துடித்துகொண்டிருக்கிறார்கள்  


============================================================================  
ஊழலில் வந்த டாப் 10
கடந்த 2011 ல் மருத்துவ நுழைவு தேர்வு முடிந்ததும் டாப் 10 மாணவர்கள் அழைக்கப் பட்டனர். அவர்களில் யாரும் உண்மையாக எழுதி சாதிக்கவில்லை. பல லட்சம் லஞ்சம் தந்து, ஆள் மாறாட்ட முறையில் தான் அதிக மதிப்பெண் பெற்றனர்.
இவர்களுக்காக தேர்வு எழுதிய 145 பேரை கண்டு பிடிக்க போலீஸ் தீவிரமாக இறங்கியது. முதலில் சிக்கியது உபி மாநில கான்பூர் நகரை சேர்ந்த சத்யேந்திர வர்மா. இவர் 4 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு அஷிஷ் யாதவ் என்ற மாணவனுக்காக தேர்வு எழுதியுள்ளார்.
இவரில் ஆரம்பித்து தான் இந்த ஊழலின் வெளிப்பாடு. பின்னர் 145 பேர் சிக்கினர். ஆள் மாறாட்டம் செய்த மாணவர் களுக்காக தேர்வு எழுதிய இவர்களுக்கு பல லட்சம் ரூபாய் தந்துள்ளனர் இடைத் தரகர்கள். இவர்கள் பெரும்பாலோர் உபியை சேர்ந்தவர்கள்.
==========================================================================
கல்கி 19/07/15 ல் எழுதியது


4/7/15

கிரிஸ்- திவாலாகும் தேசம்நிதி மேலாண்மையைச் சரியாக நிர்வகிக்காததால் கடன் சுமையால் தனிமனிதர்கள், வியாபார நிறுவனங்கள்ஏன்? பெரிய கார்பெரேட் நிறுவனங்கள் கூடத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுவதுண்டுரு தேசத்திற்கே அப்படி நேருமா?- நேர்ந்திருக்கிறது கீரிஸ் நாட்டுக்கு.
பால்கன் தீபகற்பத்தின் தெற்குமுனையில் ஆசிய, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவின் குறுக்கு பாதையில் அமைந்துள்ள குட்டி தேசம் கீரிஸ். மக்கள் தொகையே1.30 கோடிதான் மன்னராட்சியிலிருந்த கீரிஸ் 1970ல்தான்   மக்களாட்சிக்கு மாறியது.
கடந்த வாரம் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஒரு நாள் இரவு டிவியில் தோன்றி நாளை காலை முதல் நாட்டின் எல்லா வங்கிகளும் பங்கு சந்தையும் மூடப்படும். ஏடிஎம் மில்லிருந்து நாள் ஒன்றுக்கு 60 யூரோ மட்டுமே எடுக்க முடியும்என அதிரடியாக அறிவித்துவிட்டார். மாத முதல் வாரத்தில் பென்ஷன்பணம், சம்பளப் பணம் எடுக்கமுடியாத நிலை.ஏடிம்களில் நீள் வரிசை. வங்கிகள் இயங்காதால், வணிக உலகம் திணறுகிறது. தேசம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.

ஏன் இந்த நெருக்கடி?
கீரிஸின்  முந்தைய கரன்சி டிராஷ்மா.  கடின முயற்சிகளுக்குப் பின்னர்1981லைரோப்பிய கூட்டமைப்பில் இணைந்த நாடு.இது. 2002 முதல் யூரோ கரன்சிக்கு மாறியது. அங்கே ஆரம்பித்தது சிக்கல். வளர்ச்சியில்லாத பொருளாதார நிலையைச் சமாளிக்க அதுவரை டிராஷ்மா பணநோட்டுகளை  அதிகளவில் அச்சிட்டு வெளியிட்டு வந்த நிலையைத் தொடரமுடியவில்லை. கடன் சுமையும், பணவீக்கமும் அதிகரித்துக்கொண்டே போயின. மிகச்சிறிய நாடாக இருந்தாலும் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற முறையில் பன்னாட்டு நிதியம்,ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய ஆணையம் கீரிசுக்கு உதவிக்கரம் நீட்டின.
சிக்கன நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் 2010லிருந்து 2012 வரை  மூன்று தவணைகளில்970 கோடி யூரோ கடனாகத் தந்தது. ஆனால் கீரிஸ் தனது பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தோல்வியைச் சந்தித்ததுஇந்தக் கடனில் ஒரு தவணையான 160 கோடியூரோவைச் செலுத்த வேண்டிய நாளான ஜுன் 30ல் செலுத்தவில்லைஇதனால் எழுந்த நிலைதான் தேசம் திவாலாகும் மோசமான நிலை. திலிருந்து கிரிஸை காப்பற்ற இன்னும் 2400கோடி யூரோவைக் கடனாக இந்த நிறுவனங்கள் தர ஒரு திட்டத்தைத் தயாரித்தனர்.
ஆனால், அதற்குப் பல நிபந்தனைகளைக் கிரீசுக்கு ஐரோப்பியயூனியன் நாடுகள் விதித்துள்ளன. குறிப்பாக, கிரீஸ் அரசு கடும்சிக்கன நடவடிக்கையாக, மானியக் குறைப்பு, ஓய்வூதிய வயதை அதிகப் படுத்தி, பலனைக் குறைக்க வேண்டும், வரி, மின் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும், பட்ஜெட் தொகையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாகப் பெரும் நிதி நெருக்கடியில் கிரீஸ் சிக்கித் தவித்து அரசு சிக்கன நடவடிக்கைகளை கடை பிடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கொண்டு சிக்கன நடவடிக்கையை அதிகப் படுத்தினால், மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் என அஞ்சும் கீரிஸ் ஆட்சியாளர்கள்  வாங்கிய கடனை முழுவதுமாக ரத்து செய்துவிட்டுப் புதிய கடன்களை வழங்குமாறு கேட்கிறது 10 சுற்று  பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

அரசியல்

கீரிஸில் இப்போது ஆட்சியில் இருப்பதில் பெரும்பான்மையானவர்கள் இடதுசாரியினர். பெரும் போராட்டங்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது  மக்களிடையே ஏகாதிபத்திய நாடுகளின் நிபந்தனைகளுக்கு  நாம் அடிமையாகிவிடக்கூடாது என்ற குரல் வலுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடும் நிபந்தனைகளுடன் உதவியை ஏற்பதா வேண்டாமா என்பதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு போகிறார். பிரதமர்., ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் அளிக்கும் அவசரக் கால நிதி உதவியை ஏற்பதா என்பது குறித்து முடிவு செய்ய ஜூலை 5-ம் தேதி நாடாளு மன்றத்தைக் கூட்டி விவாதித்துப் பின்பு, 6-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று  நாட்டின் பிரதமர்  அறிவித்துள்ளார்.
  
விளைவுகள்
இந்த நெருக்கடியினால் கிரீஸ் நாடு திவாலாகும் நிலைக்குத் தள்ளப் பட்டு, வலுகட்டாயமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது. உடனடி விளைவாக ஐரோப்பிய பொருளாதாரம், பாதிக்கப்பட்டது,ஐரோப்பிய பங்கு சந்தை சற்று குலுங்கி முதலீட்டாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திய பின்  நின்றது.
இந்தப் பிரச்சனையில்  ஒரு வேளை கிரீஸ் ஐரோப்பிய கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது ஐரோப்பிய கூட்டமைப்புக்குப் பெரும் பலவீனமாக அமையும். மேலும், இதே நிதி நெருக்கடியில் இருக்கும் இத்தாலி, போர்ச் சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெளியேறினால் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும் என ஐரோப்பிய  கூட்டமைப்பின் தலமை கணிக்கிறது. இதனால்எப்படியாவதுசமாளித்துவிட வேண்டுமென்று  அந்த நாடுகள் விரும்புகின்றன. இதைப் புரிந்துகொண்டுவிட்டதால் தான் கீரிஸ் இந்த அளவுக்குத் துணிந்து சவால் விடுகிறது என்றும் சில பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதுகின்றன.
இந்தியா பாதிக்கப்படுமா?
சில அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் கீரிஸில் இருந்தாலும் அவை அமெரிக்க வங்கிகளின் மூலமாக இயங்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னரே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜன் லண்டனின் பேசும்போது கீரிஸில் பிரச்னை எழுந்தால் அது இந்தியாவைப் பாதிக்காது என அறிவித்திருக்கிறார். நமது அதிகமான  அன்னியச் செலவாணி கையிருப்பும், நிர்வாகத் திறனும் அவரது பேச்சில் எதிரொலித்தது.

மக்களின் தீர்ப்புக்காகக் கழுத்தை  நெருக்கும் கடனலிருக்கும் கிரிஸ் நாடு மட்டுமில்லை கடன்கொடுத்த நாடுகளும் பதற்றத்துடன் காத்திருக்கின்றன.
.
கல்கி 12/7/15ல் எழுதியது.