20/3/19

பியானோ இசை பிடித்திருக்கிறது இந்த யானைகளுக்கு...


  யானைகளை நேசிக்கும் தேசம் தாய்லாந்து.   அவர்களது பாரம்பரியத்திலும்  கலாச்சாரத்திலும் யானைகளுக்கும்  முக்கிய பங்குண்டு. யானை தாய்லாந்து நாட்டின்  தேசிய மிருகம் மட்டுமில்லை. 8 மாநிலங்களின் அரசு முத்திரைகளிலும்  யானை இடம்பெற்றிருக்கிறது. ஆண்டு தோறும் மார்ச் மாதக் கடைசி வாரத்தில் யானைகள் தினம் கொண்டாடுகிறார்கள்.

 உலகின் பல நாடுகளைப்போலத்  தாய்லாந்திலும் காடுகள் அழிந்து நகரங்களாகிக்கொண்டிருப்பதால், 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு லட்சத்துக்குமேல் இருந்த இந்த யானைகள் இப்போது  நான்காயிரமாகச்  சுருங்கிவிட்டது...பல நூற்றாண்டுகளாக யானைகளை மரம் இழுப்பது, கட்டுமான பொருட்களைச் சுமப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவதற்காக  வீடுகளில் வளர்க்கப்படும் ஒருமிருகமாக அனுமதிக்கப்பட்டிருப்பதால் இன்றும் சில கிராமங்களில் வீட்டுவாசலில் யானை கட்டிப்போடப்பட்டிருப்பதைப்  பார்க்கலாம். கடந்த 20 ஆண்டுகளாக இந்தநாட்டின்  கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, வேலையுமில்லாமல், வளர்க்கவும் முடியாமல் வயதாகிக்கொண்டிருக்கும் யானைகளை என்ன செய்வது? என்பது தான்.

கால்நடை மருத்துவர்  சாம்ராட்(Dr. Samart,) அவரது மனைவி கூன் ஃபூன் ( Khun Fon) இந்த வயதான யானைகளை பாங்காக் நகரிலிருந்து 30 கீமி தொலைவிலிருக்கும் காஞ்சனாபுரி  வனப்பகுதியில் யானைகள் உலகம்” (Elephant world) நிறுவிப்  பாதுகாக்கிறார்கள். தாய்லாந்தில் வனவிலங்கு சரணாலயங்கள் தனியார்தொண்டு நிறுவனமாகங்களாக இயங்குபவை. .  ஓரளவு நிதியுடன் அரசு  நிலத்தை ஒதுக்கி தரும். ஆனால் நிர்வாக, பாரமரிப்பு செலவுகளை இந்த அமைப்புகள்தான் செய்து கொள்ளவேண்டும்.   இதற்குப் பெரிய நிறுவனங்கள் நன்கொடைகள் அளிக்கிறார்கள்.யானை  வீட்டில்    வளர்க்க முடியாதவர்களும், வயதான நோயுற்ற  யானைகளை சர்க்கஸ்  நிறுவனங்களும் .  இங்கு அனுப்பிவிடுகிறார்கள். சிலர் அதன் பராமரிப்புக்கு பணமும் கொடுக்கிறார்கள்.
       
பசுமை படர்ந்திருக்கும் மலைச்சரிவுகளுக்கும் சலசலக்கும்  ஒரு சிற்றாற்றுக்கும் இடையிலிருக்குக்கிறது இந்த ரம்மியமான இடம்.   யானைகளுக்கான முதியோர் இல்லமா? என்று கேட்டால் திருமதி  சாம்ராட் வருத்தப்படுகிறார்.   மனிதர்களின் முதியோர் இல்லம் போல   இங்குக் கட்டுப்பாடுகள்,  ஒதுக்கப்பட்ட தனியிடங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு என்றெல்லாம்  இல்லை.  இங்கு அவர்கள் இஷ்டம் போல சுதந்திரமாகச் சுற்றலாம், விரும்புமிடத்தில் நிற்கலாம் விளையாடலாம். என்கிறார்.  2008ல் இரண்டு யானைகளுடன்  தொடங்கப்பட்ட   இதில் தற்போது 32 யானைகளிருக்கின்றன.  இந்த குடும்பம் ஆண்டுதோறும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

வரவேற்பு கூடத்தில் அங்கிருக்கும் யானைகளின் படத்துடன்   அதன் பெயர், வயது, அங்கு வந்துசேர்ந்த நாள்  அதன் விசேஷ குணம் ஆகிய விவரிக்கப்பட்டிருக்கின்றன. “ நாக் மாயிஎன்ற 88 வயது பெண் யானைதான் இவர்களில் சீனியர். 18 வயதான காந்தா தான் இருப்பதில்  இளையவர்.  யானைகளைப்பார்க்கும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது எனச்சொல்லுகிறார்கள். அதில் முக்கியமானது செல்பி எடுத்துக்கொள்ளாதீர்கள். நமது யானை நண்பர்கள் அதை விரும்பவில்லை”.

மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட  ஒரு நீண்ட மரப்பாலாம்.  அதில் நாம்  நடந்து செல்லும்போது  அதனருகில்  வரும்  யானைகள் நமக்கு ஹலோ சொல்லுகிறது .அந்தப்பாப்பாதையில் யானைகளைப் பார்த்தபடி நாம் நடக்கலாம்.  சில இடங்களில் குழந்தைகள் உட்கார்ந்து  அருகில் வரும் யானைகளைத்தொட்டுப் பார்க்கிறார்கள்.
பாதுகாப்புமாகத் தொடங்கப்பட்ட இது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பேசப்படும்ஒரு  சுற்றுலாத்தலமாகியிருக்கிறது. பாதுகாப்பகத்தின் பணியாளர்கள் தவிரப் பல தன்னார்வலர்களும் டூரிஸ்ட்களுக்கு உதவுகிறார்கள்.  ஒரு நாள், இரண்டு நாள் முகாம்களும் நடத்துகிறார்கள்.
யானை வளர்ப்பு, பராமரிப்பு முறைகளை மாவுத்என்ற ஆறு மாத பயிற்சியும் அளிக்கிறார்கள். பயிற்சிக்கு இந்தோனிஷியா, கம்போடியா, வியட்நாம்  நாடுகளிலிருந்து  வந்திருக்கிறார்கள்.   சில  பல்கலைக்கழக  மாணவர்கள் இங்கு தங்கி யானைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.   குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் வருகிறார்கள். யானைகளுக்குத்தரும் அரிசிச் சாதத்தைச் சமைத்து  பெரிய கவளமாக உருட்டி அதன் நடுவில் பூசனி, வெள்ளரிக்காய்  போன்றவற்றைப் பதித்து,   டைனிங் ஹாலில் வரிசையாக காத்திருக்கும் யானைகளுக்கு வழங்கும் பணியில் இவர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் சமைத்ததைச்  சாப்பிடும் யானைகளைப்பார்த்து இவர்கள் போடும் சந்தோஷ கூச்சல் யானைகளின் பிளிரலை விட அதிகமாகயிருக்கிறது.  
வனத்தில் யானைகள் விரும்பிச் சாப்பிடக்கூடிய புல் வளர்க்கிறார்கள். அதைக் குழந்தைகளே அறுத்து  யானைகளின் அருகில் சென்று  கொடுக்கிறார்கள்.
யானைகள் குளிப்பதற்கென்று ஒரு  சின்ன நீர்த்தேக்கம் இருக்கிறது.  அதில் யானைகளை  குளிப்பாட்டிக்கொண்டு  டூரிஸ்ட்களும் குழந்தைகளும் குளிக்கிறார்கள்.  யானைகளும் அவர்கள் மீது   தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடுகிறது.  
இங்கு வாழும் யானைகளைப்பற்றி அனைத்தும் அறிந்த சாம்ராட்  தம்பதியினரும் இங்கேயே வசிக்கின்றனர். நாள் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து இவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.  அருகிலிருக்கும் ஒரு யானையை காட்டி கடந்த சில நாட்களாக நான்  பெயர் சொல்லிக் கூப்பிட்ட போது இவர் திரும்பிப் பார்க்கவில்லை. காதில் ஏதோ பிரச்சனை என் நினைக்கிறேன். ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்என்கிறார் டாக்டர்  சாம்ராட். பெரிய ஹ்யரிங்அய்ட்  வைப்பாரோ என எண்ணிக்கொள்கிறோம்

இங்கிலாந்த்தைச்சேர்ந்த பால் பார்ட்ன்(PAUL BHARTON) ஒரு புகழ்பெற்ற பியானோ  இசைக்கலைஞர். லண்டன் ராயல்  அக்கடமி ஆப்  ஆர்ட்ஸ்ஸில் பணிபுரிந்துவந்தவர்.  57 வயதாகும் இவர்  தன் பணி ஓய்வுக்குபின் இந்த காஞ்சனா புரியின் அருகிலிருக்கும் கிராமத்தில் வசிக்கிறார்.  அவர் வாரந்தோறும் தன் பியானோவைத் தனது
சிறிய டிரக்கில் கொண்டுவந்து இந்த யானைகளுக்காக  மேற்கத்திய  சாஸ்திரிய இசையை வாசிக்கிறார்.  யானைகள் ரசித்துக் கேட்கின்றன. நான் ஒரு புதிய ராகம் வாசித்தால் மிக கவனமாகக் கேட்கும். ஏற்கனவே வாசித்தாக இருந்தால் தலையை ஆட்டி, ஆட்டி  ரசிக்கும்.  என்கிறார். லாம் டியூன் (lamp Duin)  என்ற பார்வையை இழந்த யானை இவர் வந்தவுடனேயே ஆஜாராகிவிடுமாம். சில யானைகள்  இசையைப்பற்றிக்  கவலைப்படாமல் இவரை கண்டுகொள்ளாமல்  சுற்றிக்கொண்டு போய்விடுமாம். . 
இவர்  வாசிக்கும் போது  பியானோவிற்கு  மிக அருகில் வந்து யானைகள் ரசிப்பதைத்   தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான்  அச்சமாகயிருக்கிறது. பால் பார்ட்டன் தன் இசையில் மட்டுமே  கவனமாகயிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பியானோ வாசிக்கும் போது  தன் பேத்தியையும்  மடியிலிருத்திக் கொண்டு அவரையும்   வாசிக்கச்செய்கிறார்.
 நினைவாற்றல். சொல்வதைப்புரிந்துகொள்ளும் திறன் போல இசையைப் புரிந்துகொள்ளும் திறனும், ராகங்களின் வேறுபாடுகளும்  அவர்களுக்குப் புரிகிறது.  கோபமாக அல்லது சோர்வுற்றிருக்கும்  யானைகளைப்  பால் பியோனா வாசிக்கும் போது கொண்டுபோய் நிறுத்தினால் அமைதியாகி புத்துணர்வு அடைகிறார்கள் என்கிறார்  டாக்டர் சாம்ராட்..
நமது கோவில்களில் சிறை கைதிகள் போல மண்டபங்களில்  அடைக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கும், சின்னதம்பி, ஒற்றைக்கொம்பன் போன்ற ரவுடி யானைகளுக்கும் இதுபோல ஒரு இடம் தமிழக வனப்பகுதியிலும்  அமைக்கப்பட்டால் எவ்வளவு  நன்றாகயிருக்கும்.?


18/3/19

சீஸரின் மனைவி ..



இந்திய வான்படை 75 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் , பாரம்பரியத்தையும் கொண்டது.   1932ம் ஆண்டு  அன்று  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்தப்படை . இந்திய  விடுதலைக்குப்  பிறகு  இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமானது.  இன்று  இந்திய வான்படை, 1.70 லட்சம் வீரர்களுடனும்   1,130 போர் விமானங்களுடனும்  1,700 மற்ற பயன்பாட்டு   விமானங்களுடனும்   உலகில் நான்காவது பெரிய வான்படையாகத்  திகழ்கிறது.  நமது  வான் படை வீரர்கள்  பல சாகச சாதனைகள்  செய்து பெருமையை  நிலைநாட்டியவர்கள்.

அண்மையில்  நடந்த ஒரு தாக்குதலில் பாக்கிஸ்தானின் சக்திவாய்ந்த F16  விமானத்தையே  மிராஜ் என்ற விமானத்தின் மூலம் தாக்கி விழ்த்தினதைக்கண்டு  உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. காரணம் மிராஜ் 2000 வகை விமானங்கள் பழையவை. அவற்றை நமது HAL சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்திருந்ததால் அதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பான F16 க்கூட விழ்த்த  முடியும்  என்பதைச்  செய்துகாட்டியது.   மிராஜ் தயாரிப்பாளர்களான இஸ்ரேல்  மட்டுமில்லை  உலகிலுள்ள அனைத்து விமானப்படையினரும் வியந்துபோன விஷயம் இது. (ரபேல் பிரச்சினையில் இந்தHAL க்குதான் நவீன விமானங்களைக் கையாள  போதுமான   கட்டமைப்பு       வசதிகள் இல்லை என்று ஏற்கனவேயிருந்த ஒப்பத்தந்திலிருந்து HAL  கழட்டிவிடப்பட்டு  ரிலயன்ஸ் போன்ற தனியார்நிறுவனங்கள்  சேர்க்கப்பட்டது  என்பது தனிக்கதை)
 ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய விமானப்படை தாக்குதல் பற்றிய விமர்சனங்கள் ,சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.  விமானத் தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி தனோவா  அண்மையில்    அறிவித்திருந்தார்.   ஆனால் இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல்  ஆர்.ஜி.கே.கபூர் இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் சொன்னார்.

இந்தியாவின்  வான்வழித் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதாரம் என்ன? எவ்வளவு பேர்  கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காமலிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், அண்மையில் ‘‘பாகிஸ்தானில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.  பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா இறந்தவர்கள் 200 பேர் என்று ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.  ஆனால்  இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா  சீதாராமனிடம்  கேட்கப்பட்டபோது  அரசின் வெளி விவகார துறைச்செயலர் பத்திரிகையாளார் கூட்டத்தில் அறிவித்ததுதான்  அரசின்  அதிகாரப்பூர்வமான  கருத்து என்று சொல்லியிருக்கிறார். .(இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை)

இந்த தாக்குதல் அரசியலாக்கப்படுகிறது என்கிறார் ராகுல்காந்தி. தாக்குதல் விவகாரத்தில் விசாரணை தேவை என்கிறார் அகிலேஷ் யாதவ். விமானப்படை தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்கிறார் மம்தா.. ராணுவம் பொய் சொல்லாது. நம் ராணுவத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள். ஆனால், மத்திய பா.ஜ அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்
இந்திய  எதிர்க்கட்சி தலைவர்களின் இக்கருத்துக்கள் பாகிஸ்தானை மகிழ்ச்சியடைய  வைத்துள்ளன. இதற்காக நம் எதிர்க்கட்சி  தலைவர்கள்  வெட்கி, தலைகுனிய வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி..  ஆக இரண்டு தரப்பும் இதை அரசியலாக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே  இந்த விஷயத்தை அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
 இலக்குத் தாக்கப்பட்ட விபரங்கள் உடனடியாக வெளியிடப்படாவிட்டாலும்., சக்தி  வாய்ந்த அதிதொழில் நுட்பத்துடன் அந்த  இடம் பகலில் அடையாளம் காணப்பட்டு,  அதே இடத்துக்கு தொழில்நுட்ப உதவியுடன் இரவில் தாக்கக்கூடிய   லேசர்  குண்டுகளால்தாக்கப்பட்டிருக்கிறது.  அந்த இடம் ஒரு மதார்ஸா என்ற போர்வையில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடம்  என்பதையும்  அங்கு 300 செல்போன்கள் இயங்குவதையும்  கண்டுபிடித்தறிந்து  குறிப்பாக அந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கி,       கட்டிடத்தின்  மேற்பகுதியை துளைத்து     உள்ளே புகுந்து வெடித்து, சேதத்தை ஏற்படுத்தியது"    என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.
உலகெங்கும்  இதுபோல்  அதிரடி தாக்குதல் எதாவது நிகழ்ந்தால் உடனடியாக நிகழ்ந்ததற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று ஒரு பயங்கர வாத அமைப்பு அறிவிக்கும். அல்லது அந்த மாதிரி  அமைப்புகளின் இடங்கள் தாக்கப்பட்டால் அதைச்  செய்த அரசின் படைகள்  படங்களுடன் அந்தச் செய்தியை  வெளியிடும். ஆனால் தாக்குதல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்ட  பாக்கிஸ்தான்  அரசு உயிரிழப்பு, சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.  இறந்தவர்கள் எங்கள் ராணுவம் இல்லை பயங்கரவாதிகள்தான்  என்று சொன்னால் அவர்கள்  பாக்கிஸ்தான் எல்லைக்கு ள்ளிருந்ததை உறுதி செய்வதாகிவிடும் என்பது காரணமாகயிருக்கலாம். இந்த நிலையில்  வெளிநாட்டு ஊடகங்களும் இந்த தாக்குதலைக்  கேள்விக்குறியாகியிருப்பது  இந்தச் சர்ச்சையை வலுப்படுத்துகிறது.   
 இந்நிலையில் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பால்கோட் பகுதியின் செயற்கைகோள் எடுத்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள்  அமெரிக்காவின் சான்ஸ்ப்ரான்ஸ்கோவை சேர்ந்த பிளானட் லேப்ஸ் நிறுவனத்தால்  தாக்குதல் நடந்த  6 நாளைக்குப் பின்  எடுக்கப்பட்டவை.  அந்தப் படத்தையும் அதே இடத்தை கடந்த ஆண்டு எடுக்கப் பட்ட ஒரு  படத்துடன் ஒப்பீட்டு  அங்குள்ள கட்டிடங்களில்,  வனப்பகுதியில் மரங்களில்கூட எந்த மாறுதலும் இல்லை.  என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது.  தாக்குதலில் குறி தவறியிருக்கலாம் என்கிறார்கள் இந்த வல்லுநர்கள்.
புல்வாமா  தாக்குதலினால் கொதித்தெழுந்த  ஒவ்வொரு குடிமகனும்  இந்த பதிலடி விமானத்தாக்குதலினால்  மகிழ்ந்ததும்,  விமானி அபிநந்தன்  சாகசத்தால்  பெருமிதம் கொண்டதும் நிஜம்.  ஒன்றுவிடாமல் நாட்டிலிருக்கும்  எல்லா மீடியாக்களும்  அரசின் செயலைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தாக்குதலின் விபரங்களை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லுங்கள் என எதிர்க்கட்சிகள் கேட்பதை,அவர்கள்  ராணுவத்தைச்  சந்தேகிக்கிறார்கள்  நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று பிரதமரும் அவரது  கட்சிக்காரர்களும்  கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘நமது ராணுவத்தின் வலிமையை நாங்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. பிரதமர் கூறுவது போல் மத்திய அரசை  தர்மச்சங்கடப்படுத்தி,  எதிரி  நாட்டுப் படைகள் சந்தோஷப்படும்படியாகவும் நடந்து கொள்ளவும் இல்லை. அதேநேரம், ஒரு நாட்டின் ராணுவம், மற்றொரு நாட்டின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும்போது, அதன் முடிவு என்ன? என்பதை மக்களுக்கு  தெரிவிக்கவேண்டியது அந்த அரசின்  கடமையில்லையா? . என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
உயிர்ச் சேதம் இருப்பின் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனவும், இல்லையேல்,  உயிரிழப்பைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.  அதுதான்  நமது  ஜனநாயகத்துக்கு ஆளும்  பொறுப்பிலுள்ளவர்கள்   அளிக்கும் மரியாதை.

அரசாளுவோருக்கு எவ்வளவு அதிகாரமிருந்தாலும்

 அவர்கள் சீஸரின் மனைவியாகத்தானிருக்க வேண்டும்

2/3/19

சர்ச்சைகளில் சிக்கும் புன்னகை அரசி



இதுவரை  உலகில் மனிதன் வரைந்ததிலேயே மிகச் சிறந்த ஓவியம்' என்றும், மிக விலை உயர்ந்தது என்றும் தினசரி பல ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது  என்று  வர்ணிக்கப்படுகிறது  பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திலிருக்கும்
மோனாலிசா ஓவியம்

.அந்த மகத்தான ஓவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஓவிய மேதை  லியான்ட்ரோ டாவின்சி. இந்த ஓவியம் 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.500  ஆண்டுகளுக்குமேலாக போற்றப்படும் இந்த ஓவியம் பாராட்டுக்களைப் போலவே  தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.

இரண்டுமுறை திருடப்பட்டு தேடிக்கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை  இந்த ஓவியம். திருடியவரை இரண்டு ஆண்டுகள் கழித்து  கண்டுபிடித்தபோது அந்த இத்தாலியருக்கு கடும் தண்டனை எதுவும் கொடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில்   “இந்த ஓவியம் எங்கள் நாட்டு ஓவியர் எழுதிய கலைச்செல்வம் அது பிரான்ஸில் இருப்பதை நான் விரும்பவில்லை.  எங்கள் தாய்நாட்டில் வைப்பதற்காகத்தான் திருடினேன்” என்று அவர் சொன்ன பதில் தான் காரணம்.  இரண்டாம் முறை திருட்டு சொத்தாக கைப்பற்றப்பட்டது ஆனால் திருடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இன்று பல லட்சம் டாலர்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த ஓவியம்  துப்பாக்கி குண்டுகள் துளைக்கமுடியாத கண்ணாடிகளால் பாதுகாக்கப்படுகிறது. 

-என்ன மாதிரியானது என்று கண்டேபிடிக்கமுடியாத அதன் புன்னகை தான் இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாக ஓவிய வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  ஓவியத்தில்  உதடுகள் வரைந்திருக்கும் முறை,கண்களின் ஓரத்தில் செய்யப்பட்டிருக்கும் கருப்பு ஷேட் போன்றவற்றினால் அந்தப் புன்னகை தனித்துவம் பெற்றிருக்கிறது.  அந்தப் புன்னகை சொல்வது சந்தோஷமா? சோகமா? நையாண்டியா எனப் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது. 

லியான்ட்ரோ டாவின்சி  ஓவியர் மட்டுமில்லை கணிதம் விஞ்ஞானம்  அறிந்த மேதை. இவ்வளவு பெரிய அறிவாளியைக் கவர்ந்த, ஓவியமாகத் தீட்ட வைத்த முகம் யாருக்குச் சொந்தமானது, அது ஆணா, பெண்ணா? ஒருவேளை அது டாவின்சியாகவே இருக்குமோ? அதற்கு ஏன் புருவங்கள் இல்லை?  டாவின்சி  அந்த அழகுத் தேவதையை எங்குச் சந்திருப்பார்  எனப்  பல கேள்விகளும் அதற்குப் பதிலாக யூகங்களும் சர்ச்சைகளும் நீண்ட நாள் தொடர்ந்தன. இதற்கு முக்கிய காரணம் . டாவின்சி அவரது எல்லா ஓவியத்திலும்  ஏதேனும் குறிப்பை விட்டுச் சென்றிருக்கிறார் ஆனால் இதில் எதுவுமில்லை.

ஓவியத்திலிருப்பது  லிசா டெல் கியோகாண்டோ. அவர் , பிளாரன்டைனிலுள்ள பிரபல பட்டுவியாபாரி பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி என்கிறது ஒரு குறிப்பு. ஆனால் இதை ஏற்பவர்களைவிட மறுப்பவர்களே அதிகம்..


சில ஆண்டுகளுக்கு முன்  இத்தாலிய ஓவிய ஆராய்ச்சியாளர்  சில்வானோ வின்செடி என்பவர் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று  சொல்லி ஓவிய உலகத்தையே திடுக்கிட வைத்தார்.  அவர் தனது ஆய்வு முடிவில் உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனாலிசாவுக்கு போஸ் கொடுத்தவர் கியான் கியாகோமோ காப்ரோட்டி என்னும் ஆண். அவர் சுமார் 20 ஆண்டுகளாக லியோ நார்டோ டாவின்சியிடம் உதவியாளராக இருந்தார். அவரை முன்மாதிரியாக வைத்துத் தான் மோனாலிசா வரையப்பட்டுள்ளது என்றார்..நீண்ட நாள் சர்ச்சையிலிருந்த இந்த  விஷயம் பின்னர் ஒய்ந்துவிட்டது. 

ஒவியம் எழுதப்படும்போது அந்த மாடல் கர்ப்பணியாக இருந்திருக்கிறார் என்பது அவரது கன்னங்களில் தெரிகிறது என்று கூட சொல்லப்பட்டது. இப்படி   ஒவியத்தின் சிறப்புகளைவிட அந்தமாடலைப்பற்றி பேசப்பட்டது தான் அதிகம் 

லியான்ட்ரோ டாவின்சியின் ஓவியங்களிலேயே மிக அதிகமான விலை மதிப்புள்ள ஓவியம் மோனாலிசா . இந்த ஓவியத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது.? 


.இந்த ஓவியத்தில்  மோனோலிசாவின் புன்னகை  எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.. “உண்மையிலேயே புன்னகை இருக்கும்-  ஆனா இருக்காது” டைப். புன்னகைப்பது போல் தோன்றும்- ஆனால் தோன்றாது.   பார்ப்பவர் மனசுக்கேற்றார் போல் மாறும் மந்திரப் புன்னகை.  

இந்தப் புன்னகையை  பல விதமாக  ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்.  .சற்றுத் தொலைவைவிலிருந்து  பார்த்தால், ஆங்கிளை மாற்றினால், வெறும் கண்களை மட்டும் பார்த்தால் புன்னகைப்பது போல் தோன்றும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  வரைந்த ஓவியர் லியோர்னோ டாவின்சி மிக சாமர்த்தியமாக இப்படித் தோன்றுவதற்காகவே வாய் அருகில் சிலவகையான கலர் டச் அப் கொடுத்திருக்கிறார் என்று  சொல்லுகிறார்கள் சில ஓவிய வல்லுநர்கள். ..  இந்த  ஓவியத்தை எங்கிருந்து பார்த்தாலும் மோனோலிசாவின் கண்கள் உங்களைப் பார்ப்பது போலிருக்கும் என்பது மற்றொரு சிறப்பாகச்  சொல்லபட்டுவந்தது.



அண்மையில் ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சிக்குழு  ஓராண்டு ஆராய்ச்சிக்கு பின் அறிவித்திருப்பது. “அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. படத்தில் “மோனோலிஸா எபஃகட்” எதுவுமில்லை.. அந்த ஓவியத்தின் கண்கள் வலது பார்ப்பது போல் தான் வரையப்பட்டிருக்கிறது.  யாரோ ஒரு பார்வையாளரின் கற்பனை கருத்தாக சொல்லப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை அந்த நம்பிக்கையுடனேயே பார்வையாளர்கள் இந்த ஓவியத்தை ரசித்திருக்கின்றனர். 
நேரான பார்வையுடன் கூடிய ஒரு  ஓவியத்தின் கண்கள்.. நாம் வலது அல்லது இடது என்று எங்கிருந்து பார்த்தாலும் அதன் கண்கள் நம்மை நோக்குவது போல ஓவியங்களை எழுதுவது ஒரு கலை. இதற்கு “மோனாலிசா எபஃக்ட்” என்று பெயர். ஆனால்  மோனோலிசாவின் ஓவியம் அந்த வகையில் வரையப்படவில்லை என்கிறார்கள் ஜெர்மனியின்  பெய்லபீல்ட் பல்கலைக்கழக (Bielefeld University) ஆராய்ச்சியாளர்கள்.  இந்த ஆராய்ச்சி முடிவை குழு  ஐ பெர்ஸ்ப்ஷன்  (i perception)  புகழ் பெற்ற  ஆராய்ச்சி கட்டுரை இதழலில் வெளியிட்டிருக்கின்றனர்,
உலகம் முழுவதும் உள்ள ஓவியர்கள் இதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த ஆய்வுக்காக  ஒரிஜினலின் அளவுகளிலேயே   எடுக்கப்பட்ட மோனோலிஸாவின் படத்தை  ஒரு பெரிய கம்யூட்டர் ஸ்க்ரீனில் 2000 பேர்களுக்கு காட்டி   சோதித்திருக்கிறார்கள்.. படத்தை தலையிலிருந்து  கண்கள் வரை 15 பகுதிகளாகப் பிரித்து  வெவ்வேறு தூரங்களிலிருந்து பார்வையாளர்களைப்  பார்க்கச்செய்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்து சொன்னதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  படத்திலிருந்து அவர்கள் நிற்கும் தூரத்தையும் அளந்து குறித்திருக்கிறார்கள் இதன்மூலம் அவர்கள் நிறுவியிருக்கும் விஷயம் மோனோலிஸாவின் கண்கள் நேராகப்பார்க்கவில்ல. அது பார்வையாளரின் வலது புறம் தான் பார்க்கிறது. இப்படி கண்கள்  நேராகப் பார்க்காத படத்தில் மோனாலீஸா எபஃகெட் கொண்டுவர முடியாது.   இந்தப்படத்தில் அது இல்லை.. அது ஒரு வளமான கற்பனை என்பது தான். 
அறைக்குள் வருபவர்களை அவர்கள்  எங்கிருந்தாலும் மோனாலிஸா  பார்க்கிறாரோ இல்லையோ  ஆண்டுதோறும் உலகெங்கிலிருந்து வரும் அறுபது லட்சம் பார்வையாளர்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தி வெளியானதால் இந்த ஆண்டு அது  இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது