ஹிமாசலப் பிரதேஷின் இரண்டாவது தலைநகர் தரம்சாலா. அங்கிருந்து 8 கீமீ தொலைவில் சித்தபாரி என்ற மலைக்கிராமம். காடுகள் தொடங்குமிடம். இங்குதான் அமைந்திருக்கிறது சின்மையானாந்தா முதன் முதலில் அமைத்த தபோவனம், இப்போது பல கட்டிடங்களுடன் பெரிய அளவில் வளர்ந்து பிரம்மச்சாரிகளுக்கு வேதாந்தப் பாடங்கள் பயிற்சிகள் அளிக்கப்படும் பயிற்சிகேந்திரமாகயிருக்கிறது.
அந்தக்குழுவினருடன் அருகிலுள்ள ஒரு மலைக்கிராமத்துக்குப் போயிருந்தேன். நாம் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத அளவிலான பிற்பட்ட கிராமம். ஒரு காலத்தில் சாலையாகயிருந்த அடையாளம், மண்சுவர்களுடன் தாழ்ந்த தகரக் கூரை வீடுகள். வீடுகளுக்கு மின்சாரம் கிடையாது. பொதுக்கட்டிடத்திலும், தெருவிளக்குகளுக்கும் மட்டும் தான். வீடுகளுக்கான செங்கற்களை அவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.
அங்குள்ள சுய உதவிக்குழுக்குளுக்கு உதவி செய்யும் குழு CORD.. அதில் கனராவங்கியின் இரண்டு மேனாள் அதிகாரிகள். அது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகயிருந்தது. (நான் வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த வங்கியுடன் வாழ்ந்தவன்) சுயவுதவிக்குழுக்களுக்குக் கடன் கொடுக்க எல்லா வங்கிகளும் மகிழ்ச்சியுடன் முன் வரும். காரணம். குழுத்தலைமை ஒழுங்காகக் கடனை உரிய நாளில் செலுத்திவிடும். ஆனால் கடனாகக் கொடுத்த பணம் சொல்லப்பட்ட திட்டத்துக்குத்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறதா? என்று வங்கிகள் கவலைப்படுவதில்லை (ensuring end use)விதிகள் இருக்கின்றன. அது.பேப்பரில் மட்டும்தான். (இந்தக் கற்பனையான கிராமபொருளாதா வளர்ச்சி, சுரண்டல் குறித்து விரிவாகப் பின்னால் எழுதுகிறேன்)
இங்குத் தான் இந்த CORD உதவுகிறது. மலை விளைபொருட்களின் உற்பத்தி, விற்பனை போன்ற பல விஷயங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்கிறார்கள். இடைத்தரகர்களை ஒழித்திருக்கிறார்கள்.
நான் சந்தித்த மற்றொரு சுய உதவிக்குழுவின் தலைவி CORD குழுவினரிடம் இந்தத் தவணையுடன் கடன் முடிகிறது. எங்களுக்கு இனிக் கடன் வேண்டாம் என்று சொன்னார். அவர்களுக்கு working capital, expansion அவசியம் குறித்து நண்பர் விளக்கினார். அப்போதும் தயங்கிய அந்தப்பெண்மணி "அடுத்த கூட்டத்துக்கு வந்து எல்லோருக்கும் சொல்லுங்கள்" என்றார்.
இனிக் கடன் வேண்டாம் என்று சொல்லும் வங்கி வாடிக்கையாளரைக் காண்பது அரிது. அன்று கண்டேன்
நானும் இம்மாதிரி ஒரு மாதம் CORD குழுவுடன் பணி செய்யத் தபோவன் ஸ்வாமிஜியிடம் இன்று இரவு சந்திக்கும்போது அனுமதி கேட்க வேண்டும்