26/9/13

செவ்வாயில் ஒரு சின்ன வீடு


”உங்கள் ஊரில் வீட்டுமனைகளின் விலை ஏறிவிட்தா?  வாங்க முடியாமல் போய்விட்டதே என வருந்துகிறீர்களா? கவலையை விடுங்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு 10 ஏக்கர் வாங்கிப்போடுங்கள். ஒரு ஏக்கர் 69 டாலர்கள் தான் இன்றே  பதிவு செய்யுங்கள்”  என்று அமெரிக்காவின் பல  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் விளம்பரங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய விளம்பரங்கள் பற்றி பேசபட்டாலும் இப்போது அமெரிக்கா தனது செவ்வாய் கிரக பயண ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ”க்யூராஸிட்டி” கலத்தை அங்கு வெற்றிகரமாக தரையிறக்கியபின்னர் இந்த  மாதிரி விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன.
வேற்று கிரகங்களின் நிலம் யாருக்கு சொந்தம்? முயற்சி செய்து முதலில் இறங்கிய நாட்டிற்கா? அல்லது ஆராயச்சி செய்து கொண்டிருந்த அத்தனை நாடுகளுக்குமா?  1967 லியே ஐக்கிய நாடுகள் சபை இதற்காக ஒருஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறது. 102 நாடுகள் கையெழுத்திடிருக்கும் இந்த சாஸனத்தின் படி வேற்று கிரகங்களின் நிலங்கள் உலக மனித குலத்திற்கே சொந்தம் எந்த ஒரு தனி நாடும் அது அந்த கிரக ஆராயச்சியில் வெற்றிகண்டு முன்னணியில் இருந்தாலும் கூட உரிமை கொண்டாட முடியாது. அப்படியானால் எப்படி இவர்கள் விற்கிறார்கள்?  இந்த வியாபாரத்தை அட்டகாசமான விளமபரங்களுடன் செய்யும்  பை மார்ஸ். காம்(buy mars.com) இந்த ஒப்பந்தம் நாடுகளை தான் கட்டுபடுத்தும், எங்களைபோன்ற நிறுவனங்களை இல்லை என்கிறது. இது தான் எங்கள் தொழில் என்று அமெரிக்க சட்டங்களின் பதிவு செய்திருக்கிறோம். இதுவரை எவரும் எங்களை தடுக்க வில்லை என்று சொல்லிக்கொள்கிறது. இவர்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அதை   இந்த மாதிரி விற்பனைகளை பதிவு செய்வதற்காகவே நிறுவியிருக்கும் இன்னொரு நிறுவனத்தில் பதிவு செய்து பத்திரத்தை பிரேம் போட்டு  தருகிறார்கள்  ஸ்டாண்டர்ட், பிரிமியம், டிலெக்ஸ் என்று பேக்கேஜ் கள் வேறு.



ஏற்கனவே இது மாதிரி நிலவில் நிலம் விற்று கொண்டிருந்தவர்கள் இப்போது மீண்டும் மார்கெட்டில் குதித்திருக்கிறார்கள். போலி கம்பெனிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள் என்று அறிவிப்புகள் வேறு.  இவைகள் சட்டபூர்வமானதில்லை என தெரிந்தும் எப்படியும் எதாவது பலன் பின்னால் இருக்கும் என நம்பும் பல அமெரிக்கர்கள் பணம் கட்டிகொண்டிருக்கிறார்கள்.
இந்த விளம்பரங்களை தொடர்ந்து எழுந்திருக்கும் இன்னொரு பிசினஸ் அலை செவ்வாய்கிரகத்திற்கு பயணம். இன்னும்  அங்கு மனிதனை அனுப்புவதில் முதல் நிலையை கூட எட்டாத இந்த கட்டத்திலேயே  முன் பதிவுகளை துவக்கியிருக்கிறது ஒரு டென்மார்க் நாட்டு  நிறுவனம்  பயணமே இரண்டாண்டு காலம் இருக்கும் இந்த பயணத்தில் முதலில் 4 பேர் அனுப்படுவார்களாம். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நான்குபேர் அணிகளாக (இரண்டு பெண் இரண்டு ஆண்) அனுப்புவார்களாம். அங்குபோய் இவர்கள் ஒரு புது உலகத்தை உருவாக்குவார்களாம். அங்கேயே வாழப்போவதால் ஒரு வழி டிக்கெட் தான் வழங்கபோகிறார்களாம். முதல் பயணம் 2023ல் இருக்கும் அதற்கு இப்போதே  முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் தேர்வு செய்யபோகிறார்களாம். இந்த கதைகளை கேட்டு புக் செய்திருப்பவர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள்.  நமது ஐஎஸ்ஆர்வோ வின் செவ்வாய் ஆராய்ச்சிகளும் அறிவிப்புகளும் ஒரு காரணம்.
கண்ணில் தெரியும் எவருக்கோ சொந்தமான நிலத்தை மற்றொருவருக்கு விற்கும் நம்மூர் கில்லாடிகளைப்போல கண்ணுக்கே தெரியாத வெற்றுகிரகத்தின் நிலத்தை விற்று கொண்டிருக்கிறார்கள் இந்த சூப்பர் கில்லாடிகள். விரைவில் இவர்களின் எஜெண்ட்கள்  உங்கள் ஊரில் கடைபோட்டாலும் ஆச்சரியமில்லை. ஜாக்கிரதையாக இருங்கள்

ஆதித்தியா (ரமணன்)
கல்கி8/9/13

22/9/13

ஓபாமா நன்றி சொன்னார் இவருக்கு !

 

 113 வயதாகும் கார்னகில் மெலன் யூனிவர்ஸிட்டி  அமெரிக்காவின் மிகப்பெரிய பலகலைகழகங்களில் ஒன்று. பென்ஸில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பர்க் நகரில் 140 ஏக்கரில் 5 கீமி சுற்றளவில் விரிந்திருக்கும் இந்த  புகழ் பெற்ற பல்கலைகழகம் இன்று உலகின் பல நாடுகளிலும் கிளைகளுடன் இயங்குகிறது. இதன் முன்னாள் மாணவர்களில் பலர் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள். ஆண்டுக்கு 1000கோடி ரூபாய்களுக்குமேல் மானியங்களுக்காக செலவிடும் இந்த பல்கலை கழகத்தின் தலைவராக  சமீபத்தில் பொறுப்பேற்றிருப்பவர்  ஒரு இந்தியர். திரு. சுப்பரமணியம் சுரேஷ். நம் ஊர்காரர். சென்னையில் வளர்ந்து படித்தவர் 1977ல் சென்னை ஐஐடியில் கெமிகல் எஞ்ஞினியரிங் முடித்து மேற்படிப்புகாக, பயணத்திற்கா கடன் வாங்கி கையில் 100 டாலர்களுடன் அமெரிக்கா வந்தவர், படிப்படியாக வளர்ந்து பல உயரங்களை தொட்டு இன்று உலகம் முழுவதும் சுபா சுரேஷ் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியாக அறியப்பட்டிருப்பவர். 1881ல் தனது முதல் டாக்ரேட்டை எம் ஐ டி யில் பெற்ற சுரேஷ் அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பையும்பெற்றார், ஆசிரியப்பணியுடன்  ஆராய்ச்சி பணியையும் அங்கு தொடர்ந்த இவர் இதுவரை  250 கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். 22 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்பு உரிமை பெற்றிருக்கிறார்.  பொறியியல், ரசாயனம், மருத்துவம், உயிரியல் என பலவேறுபட்ட துறைகளில் தன் ஆராய்ச்சியை செய்து வந்த இவர் எம் ஐடி பல்கலைகழகத்தில் 5 வெவ்வேறு துறைகளின் தலைவராக பணியாற்றியிருக்கிறார், பெருமையான இந்த விஷயத்தை  செய்திருக்கும் முதல் ஆசிய இனத்தவர் இவரே.  உலகின் பல நாடுகளின் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருக்கும்,  100 விஞ்ஞானிகளுக்கு மேல் பணியாற்றும் இவரது ஆராயச்சி குழுவில் சேருவது விஞ்ஞானிகளிடையே  ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. உலகின் பல பல்கலைகழகங்களின் கெளரவ பேராசியராக இருக்கும் சுரேஷ் பெற்ற விருதுகள் பல. இந்திய அரசு பத்மஸ்ரீ வழங்கியிருக்கிறது.
அமெரிக்காவில் நேஷனல் ஸயின்ஸ் பௌண்டேஷன்(NATIONAL SECIENCE FOUNDATION) என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், புதிய கனடுபிடிப்புகளையும் செய்ய இளைஞர்களை ஊக்குவித்து நிதி உதவும் ஒரு அமைப்பு, கடந்த ஆண்டு இந்த அமைப்பு 3 லட்சம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் 1500க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கும்  நிதி உதவி செய்திருக்கிறது. இதன் ஆண்டு பட்ஜெட் 7 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் 100கோடி) எம் ஐ டியில் பணியைலிருந்த சுரேஷை அதிபர் ஒபாமா இதன் தலைவராக 2010ல் நியமித்தார். அங்கு பல புதிய ஆராய்ச்சிகளுகளுக்கு வழிவகுத்த சுரேஷை கார்னகில் மெலன்  பல்கலை கழகம் தலமை ஏற்க அழைத்தது. ஆராய்சிப்பணிகளையும் ஆசிரிய பணிகளையும் விரும்பிய சுரேஷ் அதைஏற்பதற்காக NSF தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போது  அதிபர் ஒபாமா  “சுபா சுரேஷ் இந்த பெளண்டேஷனுக்கு தலமையேற்று வழி நடத்தியது நம் அதிர்ஷ்டம்.  அவர் தன் சீரிய பொறியியல், ஆராய்ச்சி,நிர்வாக திறன்கள் மூலம்  நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை அர்பணித்துகொண்டவர். விஞ்ஞான தொழில்நுட்பத்தின் பயன்களை பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் குறிப்பாக பெண்களும் சிறுபான்மையினரும் பெறச்செய்தவர். அவரது சேவைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று அறிக்கை வெளியிட்டார்.  அரசின் நியமனங்களிலிருந்து விலகுபவர்களை பாராட்டி வெள்ளை மாளிகையிலிருந்து இத்தகைய அறிவிப்புகள் வருவது அபூர்வம்.

கார்னகில் பலகலைகழகத்தில் இவரையும் குடும்பத்தினரையும் வரவேற்றதையே ஒரு அழகிய  நிகழ்ச்சியாக நிகழ்த்தினார்கள். அந்த பல்கலைகழக பராம்பரியத்தின் படி ஸ்காட்டிஷ் பைப் இசைக்கருவி வாசித்தபடி குழுவினர்  முன்னே வர குடும்பத்தினர்  மேடைக்கு  அழைக்கபட்டனர், மாணவர்கள் தயாரித்திருந்த ரோபோ கைகுலுக்கியது, 


உலகின் பல பகுதியிலிருக்கும் பல்கலை மாணவர்களும் ஆசிரியர்களும்  வாழ்த்து கூறியது விழாவில் நேரலையாக   ஒளிபரப்பட்டது.  ”இவர்களின் அனைத்து உதவிகளுக்கு நன்றி என சொல்லி தனது மனைவி மேரியையும் பெண்கள் மீரா, நீனாவையும் அறிமுகபடுத்தினார் சுரேஷ். கார்னகிலில் என்ன புதிதாக செய்ய போகிறீர்கள்? என்ற பலரின் கேள்விக்கு இவரின் பதில் 
“முதலில் சில காலம், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சொல்வதை கவனமாக கேட்கபோகிறேன்”

16/9/13

உப்பிற்கு உயிரிட்டவர்.




அயோடின் என்பது ஒரு முக்கிய நுண் உயிர்சத்து. குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அதுவும் முளைவளர்ச்சிக்கு உதவும் நுண் உயிர்சத்து. 80களில் இந்த ஊட்ட சத்தின் குறைபாட்டினால் உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது உணரபட்டது. இன்று அயோடின் உயிர்சத்தின் அவசியத்தை புரியவைத்து அதை   உலகின் பலநாடுகளில் எல்லோருக்கும்  எளிதில் கிடைக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் -ஒரு இந்தியர்.- ஒரு ”நம்ப தமிழன்”, . திரு.ஜி,கே வெங்கடேஷ் மன்னார்.
இன்று உலகெங்கும் மிகவும் பிரபலமாக அறியபட்டிருக்கும் ”அயோடினஸைட் சால்ட்” என்ற  உயிர்சத்து சேர்க்கப்பட்ட உப்பை அறிமுகபடுத்தியவர் இவர்தான்.  மிக மலிவான, தினமும் உணவில் பயன்படுத்தபடும் உப்பில் இந்த  நுண்உயிர்சத்தை சேர்ப்பதின் மூலம் எளிதாக விரைவாக மக்களை அடையும் என்பதினால் அதற்கான முயற்சிகள் எடுத்து மிக கடினமான அந்த தயாரிப்புமுறைகளை தன் ஆராய்ச்சிகள் மூலம் எளிதாக்கியவர் இவர். இன்று இந்த வகை உப்பை பயன் படுத்தியதின் மூலம் உலகம் முழுவதும் 2000 கோடி குழந்தைகள் நுண் உயிர் சத்து குறைபாட்டின் விளைவுகளில் இருந்து காப்பாற்றபட்டிருக்கின்றனர். இவரின்தயாரிப்பு முறைப்படி நுண் உயிர் செறிவுட்டபட்டிருக்கும் உப்பில் ,  இயற்கையான  ருசி, மணம், நிறம், எதுவும் மாறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால்  செரிவுட்டம் நிகழந்திருப்பதையே சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும்.
ஜி. கே வெங்கடேஷ் மன்னார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐஐடியில்  கெமிகல் எஞ்னியரிங் படித்த பின் அமெரிக்க பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தவர்.  1970 களில் இந்தியா திரும்பி தன்னுடைய குடும்பத்தொழிலான உப்பு உற்பத்தியை நவினமாக்கி டேபிள் சால்ட் தயாரிப்பு முறையை மலிவு விலையில் அறிமுகபடுத்தினார்., அந்த தயாரிப்பு முறையை பல  உப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்ற உதவினார். 70களின் இறுதியில் உப்பை எப்படி ஒரு உயிர்சத்துள்ள பொருளாக்கி அதை எளிதில் எல்லோருக்கும் கிடைக்க செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது ஐக்கிய நாட்டு சபையின் ஒரு அங்கமான யூனிஸீப்(UNICEF)  உலகின் சில நிருவனங்களுடன் இணைந்து இதை செய்ய முற்சிப்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து தன் முயற்சியை தொடர்ந்தார். சில ஆண்டுகளிலேயே  இத்தகைய முயற்சிகளிலீடுபட்டிருக்கும்  பல சர்வ தேச நிறுவனங்களின் ஆலோசகரானார். 1993ல் யூனிஸஃப்பின் குழு தலைவர்களில் ஒருவராகி 40க்கும் மேற்பட்ட நாடுகளில்  உப்பில் நுண்ணுயிர் சத்து சேர்க்கபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்கும், தொண்டுநிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்தார்.இதன் விளைவாகத்தான் இன்று பலநாடுகளில் உப்பு தயாரிப்பு முறைகளில் அயோடின்சேர்ப்பது கட்டாயமாகபட்டிருக்கிறது.  கனடா நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற இவர் இப்போது அங்கு தனது சொந்த ஆராயச்சி நிறுவனத்தை  துவக்கி தன் பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.  இவரது நிறுவனம் இன்று  உலகின் 11 நாடுகளில் பல ஆலோசகர்களுடன் இயங்குகிறது, வருடந்திர பட்ஜெட்400 லட்சம் டாலர்கள்.  இன்னும் பல நாடுகளில் குறிப்பாக தென் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் அவசியம் உணரப்படவில்லை அங்குள்ள அரசுகளின் உதவியுடன் செய்ய ஆரமபித்திருக்கிறோம் என்று சொல்லும் இவர் குழந்தைகளுக்கு எளிய முறையில் நுண்ணுயிர்சத்து கிடைக்க செய்ய வேண்டியதும்  அது எளிதில் மக்களுக்கு கிடைக்க கூடிய வகையில் மிகமலிவான விலையில் இருக்க வேண்டியதும் அரசாங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்கிறார்.பங்களாதேஷைவிட  சில ஆப்பிரிக்க நாடுகளைவிட, இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில்தான் ஊட்டசத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் என்கிறார்,
  தனது நிறுவனத்தின் அடுத்த கட்டபணியாக இவர் தேர்ந்தெடுத்திருப்பது குழந்தைகளுக்கு பள்ளியிலேயே வைட்டமின் ஏ மாத்திரைகள், வயிற்றுபோக்கை நிறுத்த துத்தநாகசத்து(ZINC TABLETS) மாத்திரைகள் வழங்குவது. இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் துவக்கபட்டிருக்கிறது.

கனடா நாட்டின்  உயரிய விருதான ”ஆர்டர் ஆப் கனடா” என்ற விருது இந்த ஆண்டு இவருக்கு உலகில் ஊட்ட சத்து குறைபாடுகளை ஒழிக்க செய்யும் சிறந்த பணிக்காக வழங்கபடுகிறது.  சில வெளிநாட்டவரே ஆர்டர் ஆப் கனடா கெளரவத்தை பெற்றவர்கள்.
உப்பிட்டவரை உள்ள்ளவும் நினைக்க சொல்வது தமிழர் பண்பாடு. உப்பை நுண் உயிர் சத்துடன் உலகெங்கும் வழங்க வழி செய்த இந்தமனிதரை உப்பு உள்ளவரை உலகம் மறக்காது.
கல்கி13/9/13


12/9/13

கடைசிக்கோடு பற்றி



Rajana
17:42 (14 hours ago)


எனது கருதுக்ககளை பதிவு செய்ய கடைசிக்கோடு இடுகையை தேடியபோது கிடைக்கவில்லை.
எனவே  இங்கு  பதிவு செய்கிறேன் :





புத்தகத்தை முழுமையாக வாசித்தபின் :

பத்திக்குபத்தி  பொக்கிஷங்களை (புதிய விஷயங்களை) கோர்வையாக  அமைத்தவிதம்  பாராட்டுக்குரியது.
லாம்டனின் அர்ப்பணிப்பும் உழைப்பும்  வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாதது வருந்தத்தக்க விஷயம், அவருக்கு சரியான ( இறுதி மரியாதையை ) கல்லறை கூட அமைக்கதது எவரஸ்ட் செய்த மிகப்பெரும் தவறு , அது அவரின் ஆணவத்தின் வெளிப்பாடு
“கம்ப்யூட்டர் “ ராதா நாத் சிக்தார் பற்றி படிக்கும்போது, நமது சித்தர்கள்  (போதையனார் போன்றோர்) மற்றும் அறிவியலாளர்கள், எவ்வாறு  கணித  சாஸ்திரத்தில் வல்லுனர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

நான் எப்போதோ இணையத்தில் படித்து இது. ஒரு தாத்தா தன பெயர்த்திக்கு சொல்லிக்கொடுப்பதாக அமையப்பட்டிருக்கிறது :
--------------
கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை பெயர்த்தி மனப்பாடம் செய்து கொண்டிருந்த போது அதைக் கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த பாட்டனார், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.

"
ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்குஇதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.
தாத்தா: "இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார்அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
பெயர்தி: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"
தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையைபிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே,போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
போதையனார்
விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின்நீளத்தில் (அடிப்பாகம்) பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம்பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.
இக்கணித முறையைக் கொண்டுதான்அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால்வர்க்கமூலம் அதாவது Square rootஇல்லாமலேயேநம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
தமிழன் ஒரு வேலை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாகஉலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.
பெயர்த்தி: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்குஇதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
நாமும் நம்மிடையே உள்ள சிறப்புகளைஎடுத்துரைத்தால் இன்றைய மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது திண்ணம்.

10/9/13

உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் அம்மா

  கோக்கோலா விற்கு போட்டியாக பானம் தயாரித்து விற்கும் கம்பெனியாக துவங்கி இன்று அதனுடன் பலவித ஸ்நாக்களையும், உணவு பொருட்களையும் உலகில் 200 நாடுகளில் தயாரித்து, விற்று தன் வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் பெப்ஸி கோ.  உணவுப் பொருள் வணிக நிறுவனங்களின் பட்டியலில் உலகளவில் இரண்டாம் இடம். கடந்த ஆண்டின்  பிஸினஸ் 66000 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒருபில்லியன்= 100கோடிகள்) மொத்த பணியாளர்கள்   2 லட்சத்துக்கும்மேல். இதன் தலைவரும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருப்பவர் ஒரு இந்தியப் பெண். பெயர் இந்திரா நூயி.  அவர்  ஒரு தமிழ்ப் பெண். என்பதால் நாம் சற்று அதிகமாகவே பெருமைபட்டுக்கொள்ளலாம். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பெண் தலைமைஅதிகாரியும் இவரே
.
 சென்னை தியாகராயநகர் வாசியான கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் மகளான இந்திரா அங்குள்ள ஹோலிஏஞ்சல் பள்ளியிலும், பின் கிருத்துவகல்லூரியிலும் படித்தவர். கணிதம், பெளதிகம்  பட்டம் பெற்றபின்  கல்கத்தா ஐஐஏம்பில் எம்பிஏ படித்தவர். இந்தியாவில் தன் தொழில் வாழ்க்கையை  ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக துவங்கியவர். 1978ல் அமெரிக்க யேல் பலகலைகழகத்தில் மேனெஜ்மெண்ட் படிக்கும் வாய்ப்புகிடைத்ததினால் அமரிக்கா சென்றார். படிக்கும்போதே பாஸ்டன் கன்ஸ்லட்டென்ஸி என்ற நிறுவனம் வேலைக்கழைத்தது.  அதன் பின் பல அமெரிக்க முன்னணி கார்ப்பேர்ட்களில் உயர் பதவி.. 1994ல் பெப்ஸி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர் 7 ஆண்டுகளில் அதன் தலைமை  நிதி அலுவலாரக உயர்ந்தார்.,.  அந்த பதவியில்  இவர் இருந்த போது கம்பெனியின்  வருமானம் 72% அதிகமானது. லாபம் இருமடங்காகியது.  கார்ப்ரேட் உலகம் இவரை கவனிக்க ஆரம்பித்தது. போட்டி நிறுவனம் உள்பட பல நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள்.  ஆனால் இந்திரா பெப்ஸியை உலக முன்னணி நிருவனங்களில்  ஒன்றாக்குவதில் உறுதியாக இருந்தார். அதேப்போல் அதை சாதித்தும் காட்டினார். பெப்ஸியின் நிர்வாக குழு ஒருமனதாக  இவரை 2006ல் பெப்ஸிகோவின் தலைவராக நியமித்தது. முதல் முறையாக ஒரு பெண்,  அதுவும் அமெரிக்கர் அல்லாத ஒருவர் அந்த பதவியில் நியமிக்கபட்ட சரித்திர சம்பவம் அது.  சம்பளம் ஆண்டுக்கு 17 மில்லியன் டாலர்கள் (ஒரு மில்லியன் = 10 லட்சம்)   இவர் தலைமையில் இப்போது பெப்ஸிகோ இன்னும் வலுவாகிகொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம்  இவரால் எப்படி முடிகிறது?
 ”உலகம்முழுவதிருக்கும் என் டீமுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறேன். வெற்றியின் பெரும்பங்கு அவர்களுடையது.  எந்த விஷயத்தையும் பெப்ஸி நிர்வாகிகள்  மாறுபட்ட கோணங்களில் பார்க்க பழக்கபடுத்தபட்டிருக்கிறார்கள்  என்று சொல்லும் இவர் ஒருநாளில் 20 மணிநேரம் வேலை செய்கிறார். மாதத்தில் இரண்டுவாரம் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.   வெறும் கோலா பான விற்பனையைமட்டுமே எப்போதும்  செய்து கொண்டிருக்கு முடியாது என்பதனால்   சிப்ஸ் போன்ற பலவகை உணவுபொருட்களை விற்கும் ஆலோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்கியதும் , அதற்காக  உலகின் பலபகுதிகளில் இருந்த அத்தகைய கம்பெனிகளை பெப்ஸி நிருவனத்துடன் இணைத்ததும் தான் இவரது சாதனைகளில் மிகப்பெரியது.,
கணவர் ராஜ் நூயி (Raj K. Nooyi) மைசூரில் படித்தபின் அமெரிக்காவில் எஞ்னியரிங்கும், எம்பிஏ யும் படித்தவர். பல நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். இப்போது  தனது நிர்வாக ஆலோசகனை நிறுவனத்தின் தலைவராகயிருக்கிறார். இரண்டு பெண்கள். இந்திய இசையை விரும்பும் இந்திரா தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இன்னும் மறக்கவில்லை. தன்   அலுவலக அறையில் சிறிய வினாயகர் சிலை வைத்திருக்கிறார்.


 இந்திரா நூயிக்கு  பல அமெரிக்க பல்கலகழகங்கள் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கிறது. நம் நாட்டின் பத்மபூஷன் விருது பெற்றவர்,  ஆனால் இவர் பெரிதும் மதிப்பது அமெரிக்காவின் ”சிறந்த அம்மா” (Best moms)க்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்தான். எவ்வளவு பிஸியாக இருந்தாலும்,தனது மகள்களின் படிப்பிலும் வளர்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர் இவர். இன்று அவர்கள் அம்மா படித்த யெல் பல்கலைகழகத்தில் பிஸினஸ் மேனெஜ்மெண்ட்படிக்கிறார்கள்.