26/1/14

கங்கைக் கரை ரகசியங்கள் .... 3




உலகில் சில நதிகள்மட்டுமே  பல ஆயிரமாண்டுகளாக வற்றாமல் மிக நீண்ட தூரம் ஒடிக்கொண்டிருக்கின்றன. தேசங்களும்,கலாசாரங்களும் பிறந்த தொட்டில்கள் என வர்ணிக்கப்டும் இந்த நதிகளில் ஒன்று, இந்திய துணைக்கண்டத்தில் ஒடும்  கங்கை.  ஆனால்  இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்கும் இந்த கங்கை மட்டுமே, பயணிக்கும் வழியெங்கும்  தெய்வமாக வழிபடப்படுகிறது.  இதன் கரைகளில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது.  இதிகாசங்களுக்கும் புராணங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் ரிக்வேத்தில் காசி நகரமும், கங்கைக்கரையும் பேசப்பட்டிருக்கிறது.  அந்த கங்கையில் படகில்  இன்று பயணம் செய்யலாமா?




ஈஷா அமைப்பினர் அழைத்துசென்ற காசி புனிதபயணத்தில் இம்முறை பங்களுருவிலிருந்து காசி செல்லும் சங்கமித்திரா எக்ஸ்பிரஸில்  சென்னை, விஜய்வாடா, நாக்பூர் என அங்கங்கே இணைந்துகொண்டவர்களும் நேரடியாக வாரனாசிக்கு வந்தவர்களுமாக  பங்கேற்றவர்கள் 200க்கும்மேல். பல்கலைகழக பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள்
நிறைந்த பெரிய குழு அது  இந்த பயணத்தை வழி நடத்த சத்குருவினால் நியமிக்கபட்ட தலைவர்கள் ஸ்வாமி பிரோபதா.(படம்) ”மா” கம்பீரி.(படம்) ஈஷா வில் பெண் துறவிகள் ’மா” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவ 8 பேர் கொண்ட ஒரு தொண்டர்படை அதில் இளம்துறவிகளும் அடக்கம்

 தலைவர்கள் சாமியார்களாக இருந்தாலும் சகலுமும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தேர்ந்த டிராவல் ஏஜெண்ட்கள் போல மிக அழகாக திட்டமிட்டு   செயலாற்றுகின்றனர்.
அன்றைய பகல்பொழுதை குழுவினர் விருப்பம்போல் காசி நகரில்  செலவிடலாம் என்று அறிவிக்கபட்டிருந்தது. தன் கரையெங்கும் கோவில்களாலும் சக்தியாலும்  நிரப்பியிருக்கும்  கங்கையில் படகில்  சில மணிநேரங்கள் பயணம் செய்ய நம்மைப்போல விரும்பிய ஒரு சிறு குழுவோடு நாமும் இணைந்து கொள்கிறோம். நம்விருப்பத்தை சொன்னதும் உடன் வந்து உதவினர் குழுதலைவர்கள் .அமைதியாக காணபட்டாலும் 60 அடிக்குமேல் ஆழமிருக்கும் அந்த நதியில் படகில் செல்லும்போது நாம் செய்யகூடாதை பட்டியிலிடுகிறார். மா.கம்பீரி. ஏதாவது நேர்ந்தால் உங்களுக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற வார்த்தைகள் நம்மை படகில் அசையாமல் உட்காரசெய்கிறது.

கரையிலிருந்து நதிக்குள் செல்வதற்குள் முட்டிகொண்டிருக்கும் காலிப்படகுகளின் நெரிசல். மிக லாகவமாக கைகளால் தள்ளி, படகால் இடித்து  கங்கைக்குள் பிரவேசிக்கிறார் நம் படகுக்காரார்.   இளம்வெய்யிலில் இதமான காற்றில்  தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கையின் குளுமை, மெல்லிய அலைகளாக நம்மை அழைக்கிறது.  ஆயிராமாயிரமாக ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் ஒரு புனித நதியில்,பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக காலம் காலமாக  கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளை மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையில்  இன்று நாமும் பயணிக்க பாக்கியம் செய்திருக்கிறோம் என்ற  எண்ணம்  மனதில் நிறைந்திருக்க  மெல்ல நம் கங்கைபயணம் தொடர்கிறது.

கங்கைகரையின் ஒருபக்கம் முழுவதும்  நெருக்கமாக பல படித்துறைகள். ”காட்” என்று சொல்லுகிறார்கள்.  இவைகள் இந்த புனித அன்னையில் நீராடும் ஸ்நானகட்டங்கள். மிக நெருக்கமாக ஒன்றையொன்று தொட்டுகொண்டிருக்கின்றன. 100 இருந்தனவாம் இன்று 80 இருப்பதாகவும் அதில் 64 பயன்பாட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள். எல்லா படித்துறைகளுமே நிறையபடிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. கங்கயில் வெள்ளம் அதிகரித்தாலும் நகரை தாக்காமலிருக்க செய்யபட்டிருக்கும் பாதுகாப்பு. கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததேயில்லையாம். முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகரகோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும்  சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது.  மன்னர் அளெரங்சீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க  எழுத்துபூர்வமாக இட்ட கட்டளை இன்றும் பனாரஸ் பல்கலை கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது. ஆனால் காசிநகரம் ஒருமுறை கூட கங்கையின் வெள்ளத்தால் தாக்கபட்டதாக வரலாறு இல்லை. கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட  வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது.  சக்தி நிறைந்த காசியை காக்கும் காவல் தெய்வம் அதைவிட சக்தி வாய்ந்த இந்த கங்கை.  
படகிலிருந்து பார்க்கும்பொது இந்த தீர்த்தகட்டங்களும் அதன்பின்னே உள்ளே கட்டிடங்களும் பல வண்ணங்களில் வடிவங்களில் கம்பீரமாக இருக்கின்றன. இந்தியா பல ஸ்மஸ்தானங்களாக இருந்த காலகட்டத்தில்  மன்னர் குடும்பத்தினரின் வசதிக்காக பனாரஸ் அரசரின் அனுமதியோடு எழுப்பப்பட்டிருக்கும் இந்த கட்டிடங்கள் அந்தந்த பகுதிகளின் கட்டிடகலைகளின் பிரதிபலிப்பாக அழகான சிற்பவேலைப்படுகளுடன், பெரிய தூண்கள், உப்பரிகைகள் என அழகாக  எழுப்ப பட்டிருக்கிறது. சிலவற்றின் அருகில் சென்று கட்டிடத்தின் உள்ளேயேயும்சென்று பார்க்கமுடிகிறது.  பனாரஸ் மன்னரின் படித்துறை அவர்கள் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக கட்டபட்டிருக்கும் ஒரு ஸ்நான அரண்மனை. உள்ளே குளிக்கும் அறைக்குள் கங்கை வருகிறது. சில  கட்டங்களை   குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநில அரசுகளே  பராமரிக்கின்றன.  சில பராமரிப்பின்றி பழாடைந்தும்  இருக்கின்றன. இன்னும் சில ஹோட்டல், புடவைக்கடைகளினால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுமிருப்பதை அதன் போர்டுகள் சொல்லுகின்றன.                         
நகரில் வர்ணா மற்றும் அஸி என்ற இரு சிறு நதிகள், -கங்கையை பார்த்தபின் இவைகளை நதி என்று சொல்லகூடாது.- சிற்றோடைகள் கங்கையுடன் இணைகிறது, இவைகளுக்கு இடையில் நகரம் இருப்பதால் இது வராணாசி என்றும் அழைக்கபடுகிறது.  

அஸி நதி கங்கையில் கலக்கும் பகுதியில்
அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது.  இந்த நுழைவு வாயிலிருந்து தான் நம் படகு பயணத்தை துவக்கி  ஒவ்வொரு திர்த்தகட்டமாக பார்த்துகொண்டிருக்கிறோம்.  இங்கிருக்கும் 64 படித்துறைகளிலும் தவறாமல் நீராடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால் பலர்  ”பஞ்ச தீர்த்த யாத்திரை” என்று  அஸ், தசாஸ்வமேத, வரண, பஞ்சகங்கா, மனிகர்ணா ஆகிய முக்கிய ஐந்து கட்டங்களில்  நீராடி வழிபடுகிறார்கள்

 ஏன் இவ்வளவு படித்துறைகள்?   இதற்கு காசி நகரின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் பல கோவில்களை உள்ளடக்கிய வட்டவடிவமாக ஒரு சக்தி இயந்திரமாக உருவாக்கபட்டிருப்பது காசி நகரம்.



 மூன்று முக்கிய சிவன்கோவில்கள் ஒரு நேர்கோட்டிலும் சக்தி வளையமாக நிறுவபட்ட மற்ற கோவில்ககளை இணைக்கும் ஆரமாக சிறிய கல்பாவிய நடைபாதைகள். அமைக்க பட்டிருந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் இந்த வாளாகத்திலிருந்த 468 கோவில்களிலும் ஒரே நேரத்தில் சப்தரிஷி பூஜைகள் நடந்திருக்கின்றன. கங்கைநதி  காசிநகருக்கு வெளியே   ஒரு வட்டத்தின் பரிதியைப்போல சற்றே வளைந்து ஒடுகிறது  
 கங்கையில்  நீராடியபின் எளிதாக பக்தர்கள் விரும்பும் கோவில்களுக்கு நேரடியாக போய் வழிபடும் வகையில் இந்த படித்துறைகள். அமைக்கபட்டிருக்கின. இன்றும்  எந்த படித்துறையில்ருந்து நேராக நடந்தால் ஒரு கோவிலுக்கு போகும் பாதை வருகிறது.  இன்று சிறு சந்துகளாகிவிட்ட அந்த பாதைகள் தான் சக்தி வளையத்தின் ஆரங்கள்..   கோவில்களில் பூஜிப்பவர்களை தவிர மற்றவர்கள் வசிக்க அனுமதியில்லாத.  அந்தபுனிதமான பாதைகள் தான் காலசக்கர சுழற்சியில் பலரின் வாழ்விடமாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கான வியாபாரஸ்தல்மாகவும் நிறைந்து ”கல்லி” களாகியிருக்கின்றன.  இந்த செய்தியை அறிந்ததும் காசியின் குறுகிய சந்துகளின்  புனிதமான அகலமும்  அதை  நாசமாக்கிய நம்மவர்களின் குறுகிய மனமும் புரிந்தது.   
ஒவ்வொரு ”காட்”லும் ஒரு கோவில் மூன்று வேளைபூஜை. அதனால் எந்த படித்துறையில்  நீங்கள் குளித்தாலும் முதலில் அங்குள்ள தெய்வத்தை வழிபட்டபின்னரே நகருக்குள் செல்ல வேண்டும்.  , குழந்தை பிறப்பு, கல்வியின் துவக்கம், திருமணம், உடல்நலம், குடும்பத்தினர் நலம் மணவாழ்வுநலம், இறுதியாக மரணம் என்று மனித வாழ்வு சம்பந்தபட்ட ஓவ்வொருவிஷயத்திற்கும் இந்த  கங்கைக்கரையில் ஒரு தெய்வ சன்னதியிருப்பது பார்க்கும்போது எப்படி இந்த கங்கைக்கரை வாழ்வோடு  இணைந்த ஒரு விஷயமாகியிருக்கிறது என்று புரிகிறது. 
 படகில் நம்முடன் வரும் போட்டோகிராபர் படமெடுத்து, உடனே அதை படகிலேயே இருக்கும் பேட்ரியில் இயங்கும் பிரிண்ட்டரில் படமாக்கி தந்துகொண்டிருக்கிறார். டிஜிட்டல் டெக்னாலாஜி உபயம். படகு மனீகர்ணா தீர்த்த கட்டத்தை நெருங்குகிறது.   தொலைவிலிருந்து பார்த்த புகையிம் நெருப்பும் இப்போது பளீரென தெரிகிறது. மிதக்கும் படகிலிருந்து கரையில் நிகழும் மனித மரணத்தின் கடைசிகாட்சிகளை பார்க்கும்போது மனம் கனமாகி  இனம்தெரியாத உனர்வுகள் நம்மை தாக்குகிறது. எரிவது எவரோ என்றாலும் ஐயோ என்ற எண்னம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்துகொண்டு இருக்கும்போதே  பத்து நிமிடத்தில் வந்த இரண்டு உடலற்ற உடல்கள்,  அவைகளுக்கு இடமில்லாதால் எரிந்துகொண்டிருப்பவைகளை தகனமேடையிலிருந்து கிழே தள்ளப்பட்டது, உடல்களை எரியூட்ட படகுகளில் வந்துகொண்டிருந்த விறகுகள், எல்லாம்  அவர்களுக்கு இது  தினசரி வாடிக்கை என்பதை புரியவைத்தது. ஆனால் நமக்கு மறக்கவிரும்பும் மனதை பிசைந்த காட்சிகள் அவை. சராசரி ஒரு நாளைக்கு 50 உடல்கள் வரும்,  இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறுஆண்டுகளாக அணைப்பதே இல்லை என்று என படகோட்டி சொன்னபோது இந்த உலகில் நிரந்தரமாக நடக்கும் விஷயங்களில் மரணமும் ஒன்று, நமக்கும் ஒரு நாள்  நிகழும் அது வரை அது பார்க்கும்போது  வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும் என்று உரைத்தது. .  உயிரற்ற உடல்கள் உருக்குலைந்த்ததை அத்துணை அருகில் பார்த்ததினால் நம் மனம் கனமாக இருப்பதைப்போல நம்படகும் கனமாகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு படகும் மெல்ல செல்கிறது. நீரின் வேக  ஓட்டம் போதுமானதாக இருப்பதால் துடுப்பு போடவில்லை என்ற படகோட்டி சொல்லுகிறார். 
படகு கரையை அடைந்தாலும் காட்சியின் தாக்கம் கரையவில்லை. சாலையில் நடக்கும்போது காசிநகரின் எல்லாபகுதிகளிலும் கேட்கும் டிரிங், டிரிங் சைக்கிள் ரிக்‌ஷாகளின் மணியோசையும்,பலமொழிகளின் ஓசையும் மெல்ல நம்மை இந்த உலகிற்கு இழுத்துவருகிறது.
நாளைகாலை காலபைரவரை தரிசிக்க 3.30மணிக்கு கிளம்ப வேண்டும். தயாராக இருங்கள் என்ற அறிவித்திருக்கிறார்கள்.  தூங்கிகொண்டிருந்த  நம்மை ஹோட்டல்கார்கள் தவறுதலாக 2.30 மணிக்கு பதிலாக  1.30மணிக்கே வேக்-அப் கால் கொடுத்து எழுப்பியதால் தூக்கம் கலைந்தது. காலபைரவர் நம்மை ஏன் சீக்கிரமாக அழைக்கிறார் என எண்ணி   உட்கார்ந்திருக்கிறோம். இன்னும் பஸ் வரவில்லை
------------------------------------------------------------------------------------------------------------



சத்குருவின் பதில்கள்
காசியில் எங்களை மணிகர்ணிகாவை பார்க்கச்சொன்னீர்கள். அப்போது நாங்கள் என்ன விதமான சாதானா செய்ய வேண்டும் ? காசியில் மரணம் நிகழ்ந்தால் முக்தி கிடைக்கிறது என்பது உண்மையா?
குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் உங்களைப்போன்றவர்கள்  தியானம் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் சும்மா பார்த்துவந்தால் போதும். உடல்கள் எரிக்கப்படும் இடம் ஒரு பலிபீடம் போன்றது. அங்கிருந்து ஒரு உயிர்பிரியும் போது அபாரமான சக்தி வெளிப்படும் அதை சாதானாவிற்கு பயனபடுத்திக்கொள்ளலாம் என்பது உண்மையானாலும்  நீங்கள் செய்ய கூடாஅது. அது பயிற்சிகள் நிறைய செய்திருக்கும் பிரம்பச்சார்கள் மட்டுமே செய்ய வேண்டியது.  மரணம் என்ற மகா உண்மைய நேருக்கு நேர் நீங்கள் பார்க்க வேண்டும்.  மனத்தளவில்அதற்கான சக்தியை பெறவேண்டும் என்பதற்காக தான் பார்க்க சொன்னேன். காசியில் முக்தி பற்றி கேட்டீர்கள்.  காசியின் மகா மயானத்தில் உயிர் பிரியும்போதும், உடலை எரிக்கும்போதும் காலபைரவர் ‘‘பைரவி யாத்தனா’’ என்னும் செயலை நடத்தி வைப்பதாக கூறப்படுகிறது. யாத்தனா என்றால், ‘தீவிரமான வலி’ என்று பொருள். மரணத்தின் தருவாயில், ஒரு மனிதனின் பற்பல பிறவிகளின் கர்மவினைகளையும் ஒரே ஷணத்தில் வெளிக்கொண்டு வந்து பைரவர் கலைகிறார். எந்தமாதிரியான கர்மவினைகளை ஒரு மனிதன் பல பிறவிகளில் வாழ்ந்து தீர்க்கவேண்டுமோ, அவை எல்லாம் ஒரே ஷணத்திற்குள் தீர்கின்றன. இது யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத அளவிற்கு தீவிரத்துடனும், வலியுடனும் நடக்கிறது. ஆனால், ஒரு ஷணத்திற்குள் முடிந்துவிடுகிறது. ‘‘பைரவி யாத்தனா’’ என்ற இந்த தீவிர செயலை செய்வதற்காகவே சிவன் காலபைரவர் என்ற உக்கிரமான உருவுடன் காசி மகா மயானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நரகத்தை மிஞ்சிய வலியை இது ஏற்படுத்தினாலும், அதன் பின்னர் அந்த உயிரின் பழைய கர்மத்தினில் எதுவும் மிஞ்சாமல் ஒரு சுதந்திர முக்தி நிலை நிலவுகிறது


23/1/14

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, கடந்த 3 நாட்களாக கோவையில் நடந்த  மாலன் முன்னின்று நடத்திய கருத்தரங்கு மிகப்பெரிய சக்ஸஸ்..”தாயகம் கடந்த தமிழ்” என்ற இந்த கருத்தரங்கம் பற்றிய விபரங்களை முன்னரே பதிவிட்டிருந்தேன், துவக்க விழாவை எல்லா பேப்பர்களும் (மலையாள பேப்பர்கள் கூட)  டிவிக்களும் பெரிய அளவில் கவர் செய்திருந்தன. அதில் மாலனின் பேச்சு மிக அருமை. தி ஹிந்து தமிழ் அதை அப்படியே வெளியிட்டிருக்கிறது. சீனவானொலி, லண்டன் தீபம் டிவி களிலும் செய்தியாக வாசிக்கபட்டிருக்கிறது.


தொடர்ந்த இரண்டு நாட்களிலும் வெவ்வேறு தலப்புகளில் கட்டுரை வாசித்த  25 பேர்களும் மாலனுக்கு நன்றி சொன்னார்கள்.  உலகின் பல மூலைகளிலிருந்து- கனடாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை  இருக்கும் நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் அவர்கள்.  கோவை KMC மருத்துவமனையில் மிக ஹை டெக் காக ஒரு ஆடிட்டோரியம். 500 சீட்டுகள் அனைத்து நிரம்பிவிட்டதால்  பக்கத்து ஹாலில் வீடியோவில்  காட்டினார்கள். மக்கள் நகராமலிருந்தற்கு காரணம் பேசபட்ட விஷயங்களும் பேச்சாளர்களும்.
ஒரு சர்வ தேச கருத்தரங்கத்தை நடத்துவதற்கு பல  பேச்சாளர்களை  குறுகிய காலத்தில் அழைப்பது என்பது  மிக கடினமான ஒன்று.  அனைவரும் மாலன் அழைத்ததால் மட்டுமே ஏற்று  குறுகிய காலத்திற்குள் வந்தவர்கள்.  தனியாளாக மாலன் இதற்காக கடந்த 2 மாதம் உழைத்திருக்கிறார். 
கோவையின் KMC  தலைவர் நல்ல.பழனிசாமி அவர்கள் தான் தமிழ் பண்பாட்டு மைத்தின் தலைவர். வெளிநாட்டிலிருந்த வந்த பேச்சாளர்களின் மானபயண,தங்கும் செலவுகளை தமிழ் பண்பாட்டு மையம் ஏற்றிருக்கிறது. தங்குமிடத்திலிருந்து  எல்லாமே  தி பெஸ்ட் என்ற வகையிலிருந்தது. பல கல்வி நிறுவனங்களையும்  நடத்தும்  இந்த மனிதரின் மனமும் அவரின் நிறுவனங்களைப்போல மிகப்பெரியது.
மாலனின் சாதனைகளை கண்டு சந்தோஷ பட்டிருக்கும் . மாலனின் பெற்றோர்கள்   இதனையும்  சொர்க்கதிலிருந்து பார்த்து சந்தோஷபட்டிருப்பார்கள்
கல்கி இதுபற்றி நான் எழுதிய கட்டுரைக்கு ”தமிழுக்கு இன்னும் ஒரு மகுடம்” என தலைப்பிட்டிருந்தது.  உண்மையில் இது மாலனுக்கும் தான்.

தி ஹிந்து தமிழின் பக்கம்


தமிழ் அழிவது, நலிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தமில்லை: உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் மாலன் பேச்சு

2

சேவகனாக, அடிமையாக, எழுத்துக்கூலிகளாக, அகதியாக தமிழன் எங்கெல்லாம் சென்றா லும், அவன் கங்காரு தன் குட்டியை வயிற்றில் சுமப்பது போல், தாய்ப்பூனை தன் குட்டியை வாயில் தூக்கிச் செல்வது போல் தமிழை சுமந்து சென்றுள்ளான். அங்கிருந்து படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டிருக்கிறான்.
எனவே, தமிழ்நாட்டில் தமிழ் இப்படிச் சென்று கொண்டி ருக்கிறதே, தமிழ் அழிந்து விடுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ் அயலகத் தமிழர்களால் கடல் கடந்து கொண்டாடப்பட்டு, வளமையுடன் வாழ்ந்து வருகிறது’ என்றார் எழுத்தாளரும், பத்திரிகை யாளருமான மாலன்.
3 நாள் மாநாடு:
தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பிலான உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு குறித்த 3 நாள் மாநாடு கோவை காளப்பட்டி என்.ஜி.எம் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.
டாக்டர் நல்லா பழனிச்சாமி தலைமை வகித்தார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் பேசினார். ரே.கார்த்திகேசு, இந்திரன், சேரன், அழகிய பாண்டியன், எஸ்.பொ, பெருந்தேவி என அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜெர்மனி உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு எழுத்தாளர்களும், படைப்பாளர்களும், புவியரசு, நாஞ்சில்நாடன், சிலம்பொலி செல்லப்பன், திருப்பூர் கிருஷ்ணன், சி.ஆர்.ரவீந்திரன், சுப்பரபாரதிமணியன் என நூற்றுக்கணக்கான உள்ளூர் எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.
அர்த்தமற்ற பிதற்றல்:
மாநாட்டில் மாலன் பேசியது: ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி நிற்கிற, பரவி நிற்கிற தமிழ் எழுத்தின் எழுச்சிப் பிரதிநிதிகள் இங்கே கூடியிருக்கின்றனர்.
குமரி முதல் வேங்கடம் வரை விரவி நின்ற தமிழ்கூறும் நல்லுலகு உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஆனால் இலங்கை, கனடா, ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் சென்ற தமிழர்கள் தமிழுக்கு கொடை தந்து தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் என்பது உலகம் தழுவிய மொழி. தமிழ் நலிவது, தமிழே அழிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தம் இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது தாயகம் கடந்த தமிழ்.
விரவிக்கிடக்கும் தமிழ்:
ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியம் எப்படி லண்டன் ஆங்கில இலக்கியம், அமெரிக்க ஆங்கில இலக்கியம், மூன்றாம் நாடுகளின் ஆங்கில இலக்கியம், இந்திய ஆங்கில இலக்கியம் என்று வெவ்வேறு கூறுகளுடன் நிற்கிறதோ, அதேபோல் தமிழ் இலக்கியமும் நாடு கடந்து நிற்கிறது. இலங்கை தமிழ் இலக் கியம், மலேசியா தமிழ் இலக்கியம், சீனா தமிழ் இலக்கியம், ஜெர்மன் தமிழ் இலக்கியம், அமெரிக்க, லண்டன் தமிழ் இலக்கியம் என்று விரவிக் கிடக்கிறது.
தமிழை தாங்கும் 4 தூண்கள்:
ராஜராஜன் சோழன் காலத்தில் தமிழன் கடல் கடந்து வாணிபம் செய்யப்போனான்; சேவகனாகப் போனான். ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைகளாக கடல்கடந்து போனான். சுதந்திரத்திற்குப் பிறகு கடல்கடந்து எழுத்துக்கூலிகளாகப் போனான். இடைப்பட்ட காலத்தில் அகதிகளாகக்கூட போனான். அப்போதெல்லாம் அவன் கங்காரு தன் குட்டியை சுமப்பது போல், தாய்ப் பூனை தன் வாயில் குட்டியை கவ்விச் செல்வதுபோல் தமிழை மட்டும் அன்னையின் லாவகத்தோடு கொண்டு சென்றான்.
தமிழன் எங்கு சென்றாலும் தன் மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கிறான். தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறான்.
கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை ஊடகம், தொழில்நுட்பம், இலக்கியம், கல்வி ஆகிய 4 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதுவே இக் கருத்தரங்கின் மூன்று நாட்களிலும் விவாதப் பொருளாக இருக்கும் என்றார் மாலன்.







19/1/14

கங்கைக் கரை ரகசியங்கள் 2


காசி நகரம் இந்த பிரபஞ்சத்துக்கே ஒரு பக்தியை,,பக்தி அதிர்வுகளை உருவாக்கிற, மனிதர்களில் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு புனித ஸ்தலம். சிவபெருமானே தான் வாழ வடிவமைத்துகொண்ட நகரம். இங்கு ஆம்கார் ஈஸ்வர், விஸ்வநாதர், கேதர் ஈஸ்வர் மிக முக்கியமான கோவில்கள்.. இதனுடன் ஐம்பத்தாறு விநாயகர் கோவில்கள், எட்டு திசைகளில் ஏழு அடுக்குகளில் அமைந்துள்ளன. இவை மட்டுமின்றி, அறுபத்துநான்கு யோகினி கோவில்கள், நவதுர்கா கோயில்கள், பத்து சண்டி கோவில்கள் மற்றும் பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சேர்ந்து நானூற்றி அறுபத்தெட்டு கோவில்கள் இங்கு உள்ளன. இந்த பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சூரியன் தக்ஷிணாயத்திலிருந்து உத்தராயணத்திற்கு பயணமாகும் பாதையை ஒத்து அமைந்துள்ளது.  இதைத் தவிர் 12 ஜோதிலிங்கங்களும் ஒருசேர அமைந்த ராமேஸ்வரம் கோவில்.  இந்தியாவில் மட்டுமில்லை, உலகின் எந்த நகரத்திலும் இவ்வுளவு கோவில்களோ வழிபாட்டுதலுங்களோ கிடையாது.  எல்லா கோவில்களிலும் சரியான நேரங்களில் தரிசனம் செய்ய வேண்டுமானால் நாம் காசியில் குறைந்தது ஒரு மாதம் தங்க வேண்டும். அப்படி செய்பவர்களும் சிலர் இருக்கிறார்கள்.  ஆனால் நமது குறுகிய கால பயணத்தில் முக்கியமாக நாம் பார்த்து தரிசிக்க வேண்டிய கோவில்களை சத்குருவின் வழிகாட்டுதலின் படி குழு தலவர்கள் அழைத்து செல்லுகிறார்கள்





காசிகோவில்களின் நகரமாக இருந்தாலும், முக்திக்கான நுழைவாயிலாக மதிக்கபட்டாலும். கோவில்களுக்கு செல்ல நல்ல பாதைகள் கிடையாது. எல்லாகோவில்களுமே  எதாவது ஒரு குறுகிய சந்தில் தான் அமைந்திருக்கிறது. அதிகபட்சம் 5 அல்லது 6 அடி அகலமுள்ள அந்த கல்பாவிய குறுகிய தெருக்களில் சதாரணமாகவே எளிதாக நடக்க முடியாது. பசுமாடு, சைக்கிள், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், என்று எதாவது ஒன்று உங்களை முன்புறமோ அல்லது பின்புறமோ இடித்துகொண்டே இருக்கிறது. சிரமபட்டு அவைகளை தவிர்த்தாலும் கூட அந்த குறுகியதெருவின்  இருபுறமும் இருக்கும் கடைகளில் பிஸியாக வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்களை இடித்துகொண்டுதான்  நாம் நகர முடியும். பகல் நேரத்தில் இருக்கும் இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக மட்டுமில்லாமல். காலையில்  3 மணிக்கு  துவங்கும் மங்கள் ஆர்த்தி மிக விசேஷமானது என்பதால் அதை தரிசிக்க திட்டமிட்டு  அந்த அதிகாலை நேரத்தில் நம் குழுவினருடன் சென்றுகொண்டிருக்கிறாம். அந்த குறுகிய சந்துகளில் இப்போது பிரச்னை மாடுகள் இல்லை. அவைவிட்டுபோன எச்சங்களும்  இருட்டும். அந்த வீதிகளில் தெருவிளக்குகள் கிடையாது. கடைகளின் விளக்குகள் மட்டும் தான் தெருவிற்கு வெளிச்சம். அவைகள் மூடபட்டிருப்பதால் ஒரே இருட்டு. . மிக கவனமாக அந்த இருட்டில் அசுத்தங்களை மிதிக்காமல் வழுக்கிவிழாமல் நடக்க பழகி ஒரு வழியாக கோவிலின் முகப்பை அடைகிறோம்.  செருப்புகளை வைக்ககூட வசதி இல்லையே தவிர செக்கியூரிட்டி கெடிபிடிகள்  உண்டு. கதவை திறந்தவுடன் உள்ளே நுழையும்போது நாம்தான் முதலாவாதாக இருப்போம் என நினைத்து ஏமாறுகிறோம்.  அனுமதி நேரத்திற்கு முன்னரே நுழைந்திருந்த விஐபிகள் நூறு பேர். அங்கிருந்தார்கள்.
வெண்சலவைக்கல் விரிந்திருக்கும் ஓரு பறந்த முற்றத்தின் நடுவே  நான்கு புறமும் வாயில்கள் கொண்டஒரு மண்டபம்.அதுதான் சன்னதி. நடுவே தரையின் ஒருபுறத்தில் தரையிலேயே மூர்த்தீ. சுற்றி நான்குபுறமும் பூஜைசெய்யும் அர்ச்சர்கள்.அவர்கள்தங்கள் உடலாலும்,பூஜைப்பொருட்களாலும் நுழைவாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு  சன்னதி ஸ்வாமி எதுவும் தெரியவில்லை. அனேகமாக இந்தியாவின் எல்லா மாநில முகங்களை பார்க்கமுடிந்த அந்த கூட்டத்தில் அதில் தெரிந்த எமாற்றத்தையும் உணரமுடிந்தது. நன்றாக பார்ப்பதற்கு எதாவது  எற்பாடு செய்யதிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டு அவரவர் மொழிகளில் முணு முணுப்பது புரிகிறது, ஆனால் மந்திரங்களுடனும் வேதகோஷத்துடனும் காட்டப்படும் ஆரத்தியின் உச்சகட்டத்தில் எழும் கோஷத்தில்  எல்லாம் கரைந்துபோகிறது அபிஷேகம் ஆர்த்திமுடிந்தபின் சந்நதியின் ஒரு வாயில் வழியே நம்மை  அனுமதிக்கிறார்கள். அருகில் சென்று பார்க்கிறோம். வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர்.  சில நிமிடங்களில் மலர் அலங்காரங்கள் களையப்படுகிறது ,  நாம் பூஜிக்க அனுமதிக்கபடுகிறோம்
. தரையோடு தரையாக இருக்கும்  அந்த மூலவரை மண்டியிட்டு வணங்கி  பேப்பர் டம்பளரில் அவ்வளவு நேரம் பத்திரமாக வைத்திருந்த பாலை ஊற்றி அபிஷகம் செய்கிறோம். அந்த மூர்த்தியை தொட அனுமதிக்கிறார்கள்.  அந்த ஒரு வினாடி ஸ்பரிசம் மனதில் தீயாக பரவுகிறது. நமக்கு மெய்சிலிர்க்கிறது. தரிசனத்திற்குபின்னர் வெளியே வந்த நாம்   ஒரு மகத்தான காரியம் செய்து விட்டதைபோல உணர்கிறோம் இம்மாதிரி தான் பெற்ற அனுபவத்தை எழுதியிருக்கும் மரபின் முத்தையா வின் கவிதை நினைவில் வந்து போயிற்று.
வினாடி நேரம் விரல் பிடித்த விஸ்வநாதம்
என் வினைகளெல்லாம் அவன் மடியில் விழுந்த நேரம்
கனாவில் அவன் முகம் குழாவுவும் தினம் தினம்
வினா மலர்ந்த நேரம் அவன் விடைகள் சாஸ்வதம்
 அந்த பிரம்ம மூஹூர்த்த நேரத்தில்  சன்னதிக்கு வெளியே மண்டபத்தில் அமர்ந்து குழுவினர் தியானிக்கின்றனர். இந்த கோவிலின் வளாகத்தில் தேவிக்கு சன்னதி இல்லை. சற்று அருகில் உலகிற்கே உணவிடும் அன்னபூர்ணியின் தனிக் கோவில் இருக்கிறது. இங்கு தினசரி  தேவிக்கு நைவேத்தியம் முடிந்த பின் 100 ஏழைக்களுக்கு உணவு வழங்கும் அறகட்டளை நிறுவி கடந்த 100 ஆண்டுகளாக நடத்திகொண்டிருப்பவர்கள் தமிழ் நாட்டு நகரத்தார் சமூகத்தினர். நுழைவாயிலில் இந்த விவரத்தை தமிழ் எழுத்துகளில் சொல்லும்  கல்வெட்டு நம்மை சந்தோஷபடுத்துகிறது.
கோவிலை விட்டு வெளியே வந்து மெல்ல விழிக்க துவங்கியிருக்கும் காசிநகர வீதியில் சூடான  சுவையான டீ சிறிய மண் கப்புகளில்
தருகிறார்கள். ஆஹா! பிளாஸ்டிக், பேப்பர் குப்பையில்லை என நினைத்துகொண்டிருக்குபோதே டி குடித்தவர்கள் அந்த கப்பை தரையில் எறிந்து உடைத்துபோட்டிருக்கும் குட்டி மலை கண்னை உறுத்துகிறது.   நடந்து பஸ்களுக்கு செல்லுகிறோம், குழுக்கள் பிரிந்து போகாதிருக்க ஒவ்வொரு பஸ் குழுவிற்கு ஒரு வண்ண கொடி. அந்த குழுவின் தலைவர் கொடியோடு முன்னே நடக்க நாம்  பின் தொடர வேண்டும்.
ஆரஞ்சு. சிவப்பு பச்சை நீல, என பல வண்ணங்களில் கொடிகள் ஏந்தி காலை நேரத்தில் அனிவகுக்கும் இவர்கள்  எந்த கூட்டணி? தேர்தல் இன்னும் வரவில்லையே   என்று பார்ப்பவர்கள் நினைத்திருக்கலாம். அந்த அளவிற்கு அழகான ஊர்வலம்.  இன்று காலை உணவிற்கு பின் மாலை வரை நீங்கள் காசிநகரில் விரும்புவதை பார்க்கலாம் என்று அறிவித்திருப்பதால் எதைப்போய்  பார்க்கலாம் என யோசித்து கொண்டே பஸ்ஸில்  ஏறுகிறோம்.




மிகவும் சக்தி வாய்ந்த்தாக சொல்லுப்படும் காசி விஸ்வநாதர் ஒரு லிங்கத்தின் வடிவத்தில் இருப்பதாக தெரியவில்லையே.? மிகசிறியதாக தோன்றுகிறதே?
ஒரு அழகான கம்பீரமான லிங்க வடிவத்தை மனதில் நினைத்து வந்ததினால் ஏமாற்றம் ஏன்? அதிர்ச்சி கூட அடைந்திருப்பீர்கள். உருவம் பெறாத சக்தி ஒரு உருவத்தைப்பெறும்போது அதன் முதல் வடிவம் லிங்க வடிவமாக இருக்கிறது. லிங்கம் என்ற சொல்லுக்கு வடிவம் எனறு பொருள். இந்த இடத்தை விட்டு செல்லவே மாட்டேன் என்று சிவன் வாக்களித்து உருவாக்கிய இடம் காசி. நகரத்தின் வடிவமைப்பே நம்மை பிரபஞ்சத்துடன் இணைக்க ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில அமைக்கபட்டிருக்கிறது.  நம் உடலில் இருக்கும் 108 சக்கரங்களுக்கு ஏற்றார்போல் 54 சிவன் கோயிலும் 54 சக்தி கோயிலும் இருக்கிறது காசியின் வடிவமைப்பை கவனித்தீர்களேயானால்  அதன் மையத்தில்  இருப்பது காசி விஷ்வநாதர் கோயில், அந்த வடிவமைப்பு பிரகாரம் காசி விசாலாக்ஷி கோயில் அன்னப்பூரணி கோவில் என்று காசி நகரத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் விஞ்ஞான முறைப்படி அமைக்கப் பட்டிருந்தது.
மேலும், “காசியில் மொத்தம் 26,000 கோயில்கள், ஆனால் அதில் இப்போது 3000 கோயில்கள் மட்டுமே உள்ளன. மற்றவை முகலாயர்களின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுவிட்டது. இந்த சக்தி வட்டத்தின் மையத்தில் காசி விஷ்வநாதர்.காசி விஷ்வநாதர் தான் இந்த அமைப்பின் உச்சபட்ச சக்திநிலையை கொண்டுள்ளார். (Kashi Viswanathar temple is the core of this geometry). இதை எடுத்துவிட்டால் காசி அழிந்துவிடும் என்று எண்ணி முகலாய படையெடுப்பின்போது காசி விஷ்வநாதரை மட்டும் அங்கிருக்கும் இடத்திலிருந்து அகற்றி கிணற்றிற்குள் தூக்கி எறிந்து விட்டனர். பின்பு பல வருடங்களுக்கு பிறகு அந்த கிணற்றிலிருந்து லிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்கே பொருத்தப்பட்டு விட்டது.  அந்த கிணற்றை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்அப்போது முழு வடிவம் கிடைக்காதால் கிடைத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அதனால் தான் ”காசிக்க கங்கர் சிவசங்கர்” என்று சொல்லுகிறார்கள். அப்படின்னா இங்க இருக்கிற ஒரு கல்லு கூட சிவன் தான் என்று அர்த்தம்.  எப்போ இந்த நகரத்தையே ஒரு சக்திஸ்தலமாக படைத்துவிட்டானோ இங்கே இருக்கிற ஒவ்வொரு கல்லுக்கும் அந்த தன்மை வந்துவிடுகிறது.  நீங்கள் இருப்பது அப்படி ஒரு சக்தியான சூழ்நிலை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்
காசி விஷ்வநாதர் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது உண்மையாகவும் இருக்கலாம். உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் காசியின் சக்திநிலை பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை. நீங்கள் காண்பது அதன் மிச்சம்தான். அதனால் அந்த கோவில் இருக்கும் இடத்தின் சக்தியை அது அங்கு நிறுவபட்டிருப்பதை நீங்கள் உனர வேண்டும். லிங்க உருவம் ஒரு அடையாளம் தான். பூஜைகள் முடிந்ததும் நீங்கள் அங்கு சில நிமிடங்கள் உட்கார்ந்து பாருங்கள் புரியம். 



15/1/14

கங்கைக் கரை ரகசியங்கள்





  இன்னும் இருள் பிரியாத,  ஒளி பிறக்காத காலைப்பொழுது. சில்லிடும் காற்று மிதந்துபோகும் மெல்லிய பனிப்புகை. கண்ணெதிரே கடலாக விரிந்திருக்கும் கங்கை. அதன்பிரமாண்டம் நம்மை பிரமிக்கசெய்கிறது. மறுகரையே கண்ணில் தெரியாத அந்த மகாநதி அந்த இருட்டிலும்,நிசபத்திலும் தன் கம்பீரத்தை சொல்லுகிறது.  காசி நகரில் புனித கங்கையின் கரையில் அந்த அதிகாலைப்பொழுதில் ஆதவனின் வருகையின் போது தரிசிக்க காத்திருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பலர் துறையின் படிக்கட்டுகளில் நடுங்கும் குளிரிலும் ஆதவனை தரிசித்தபின்  முழ்கிகுளிக்க காத்திருக்கின்றனர். மெல்லிய குரல்களில் பலமொழிகளில் பிராத்தனைகள் ஸ்லோகங்கள் கேட்கின்றன.  “கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்" என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.  எல்லா குளிக்கும் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவைகளின் இடையில் நமக்கோர் இடத்தை கண்டுபிடித்து நிற்கிறோம். ஓடும் கங்கையின் வேகத்தை கால்கள் நமக்கு சொல்லுகிறது. மனம் கங்கையில் இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் வாழும் நதியில் இன்று நாமும் இறங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. நிற்கும் படகுக்காரர்களும் அந்த நேரத்தில் நகராத  படகில் உட்கார்ந்து தியானிக்கவிரும்பும்   வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க காத்திருக்கிறார்கள் .பளிச்சென்று பெரிய ஆரஞ்சு வண்ணபந்தாக எழுந்து தங்க தாம்பாளமாக விரிந்து  சிலநிமிடங்களில் ஓளியுடன் உயிர்பிறக்கிறது அந்த நதியில். மெள்ள வளரும் காலை ஓளியில் கங்கையின் வண்ணங்கள் மாறுகின்றன.  அழகான ஒவியமாக பரவும் அந்த சூரியயோத காட்சியில் மனதை பறிகொடுத்து நிற்கும்  நாம் அருகிலிருப்பவர்கள் குளிக்க துவங்கியதைப்பார்த்த பின்னர்தான்  நாம் காத்திருந்ததும் அதற்குதானே என்பது உறைத்து. உடனே மூழ்கி எழுகிறோம். தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கை அன்னையின் அழைப்பு அலைகள். நீண்ட நேரம் நீராடச்சொல்லுகிறது.

.
இரு கைகளால் கங்கயை ஜலத்தை எடுத்து சூரியபகவானுக்கு நதியிலேயே அர்பணம் செய்யும் பலர்,  கூப்பியகைகளை தலைக்குமேல் உயர்த்தி நிஷ்டையில் நிற்பவர்கள், தன் சின்னகுழந்தையை மிக்கவனமாக பிரார்த்தனையோடு குளிப்பாட்டும் அன்னை என அந்த இடமே கங்கயின் நீரைப்போல பக்தியால் நிரம்பியிருக்கிறது.  மெல்லகூட்டம் வரத்துவங்குகிறது. எங்கிருந்தோ ஒலிக்கும் பக்திபாடல்கள் சூழலின் அமைதியைக்கலைக்கிறது படிக்களை கடந்து சாலைக்கு வருகிறோம். காசிநகரம் விழித்துகொள்ள ஆரம்பிக்கிறது. இந்த காசி நகரம் எப்போது உருவானாது? இந்த கேள்விக்கு இன்னும் சரியான விடைகிடைக்கவில்லை.
மனித சமுதாயம் உருவான காலம்தொட்டே உலகில் பல்வேறு நகரங்கள் நாகரீகம் மற்றும் ஆன்மீகத்தின் உச்சியை அடைந்தன.  சில ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன. கிரேக்க, எகிப்து, ரோமாபுரி நாகரீகங்கள் சில உதாரணங்கள். இவற்றிக்கு எல்லாம் முன்பே கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் அறிவியலிலும் . தனது மேன்மைக்கு பல இடையூறுகள் வந்தபோதும், ஒவ்வொரு முறையும் சரிவில் இருந்து மீண்டு எழுந்திருப்பது பாரதம்.. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இந்த புண்ணிய பூமியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆயிரம் கோயில்களில் சக்தி அதிர்வுகள் இந்த கலாச்சாரத்தின் வேர்களாக இருப்பது. இவற்றில் மிக முக்கியமான ஷேத்திரமாக திகழ்வது காசி. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காசி நகரம் பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகியிருக்க கூடும் என்று சொல்கின்றனர்.

காசி என்ற பெயருக்கு பிரகாசமானது என்று பொருள். ஸ்கந்தபுராணத்தில்  பதினைந்தாயிரம் பாடல்கள் பாடப் பெற்றது காசி. நூற்றுக்கணக்கான  சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு க்தி வளையமாக திகழ்கிறது  ஆயுர்வேதம் காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

 காசி நகரமே ஒரு யந்திர வடிவில் அமைந்திருக்கிறது. இந்த வடிவில்
நானூற்றி அறுவத்தெட்டு முக்கிய கோவில்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை மையமாக கொண்டு இக்கோயில்கள் ஐந்து அடுக்குப் பாதைகளில் அமைந்திருக்கின்றன. காசி காண்ட புராணத்தில் காசி நகரமே சிவனுடைய திரிசூலத்தின் மீது இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. திரிசூலத்தின் மூன்று முனைகளை போல், காசியின் சக்தி வடிவத்திற்கும் மூன்று கோயில்கள் மையமாக இருக்கின்றன. இவை வடக்கில் ஆம்கார் ஈஸ்வரர், மையத்தில் விஸ்வநாதர் மற்றும் தெற்கில் கேதார் ஈஸ்வரர். இந்த ஒவ்வொரு கோயிலும் தனியாகவும், ஒன்று சேர்ந்தும் தங்களுடைய சக்தி பிரவாகத்தை வெளிப்படுத்துகின்றன  இந்த  பயணத்தில் இந்த கோவில்களில் நல்ல தரிசனம் கிடைக்கவேண்டும் என்று எண்ணியபடியே சாலையில் நடக்கிறோம். கங்கைநதியின் படித்துறைகளுக்கு வரும் நகரின் அந்த சாலைகளில் எந்த வாகனங்களுக்கு அனுமதியில்லாதால் சாலை முழுவதும் மக்கள். வேகமாக நதியையை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள். பலமாநில முகங்கள், மொழிகள். குறிபிட்ட இடம் வரை நடந்தபின்னர் சைக்கிள் ரிக்‌ஷாவில் நாம் தங்கியிருக்குமிடத்திற்கு திரும்புகிறோம். காசியில் தினசரி வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கைவிட அதிக அளவில் இருப்பது சைக்கிள் ரிக்‌ஷாக்கள்.பல இடங்களில் இவர்கள் வாகனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறாமல் நீங்கள் காசியில் எதையும் பார்க்கமுடியாது. கட்டணபேரம் சண்டை சத்தம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டுகார்களுக்கு அநியாயத்துக்கு குறைந்த கட்டணமாக இருக்கிறதே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவில்தான் கேட்கிறார்கள்.:. நீங்கள் அதிகம் கொடுக்க விரும்பினாலும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏற்றுகொள்பவர்கள் மிகுந்த பணிவுடன் பலமுறை நன்றி சொல்லுகிறார்கள். ஹோட்டலுக்கு வந்த பின்னர் நம்மோடு இந்த பயணத்தில் பங்கு  கொள்ள வந்துசேர்ந்திருக்கும் புதிய நண்பர்களை சந்திக்கிறோம்.
ஈஷா அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக புனித பயணங்கள் (Sacred walks) என்ற திட்டத்தில் அதன் உறுப்பினர்களை இந்த தேசத்தின்  மிகபுனிதமான இடங்களான கைலாஷ். காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.ஏதோ மத நமபிக்கைகளின் அடிப்படையில் வெறும்சடங்குகள், சம்பிராத்யங்களை மட்டுமே நோக்கமாய் கொள்ளாமல் அந்த இடத்தின் பெருமை, சக்தி அதை முழுமையாக உணர பயிற்சி போன்ற விஷயஙகளுக்கு சத்குருவின் வழிகாட்டுதலுடன் இந்த  புனித பயணங்கள் நடத்படுகின்றன. இந்த ஆண்டு  200க்கும்மேற்பட்டவர்களுடன் கங்கையின் கரையில் காசிக்கும் தொடர்ந்து அங்கிருந்து புத்தரின் தேசத்திற்கும்  பயணம் செய்தகுழுவுடன் இணைந்து நாமும் இந்த புனித  பயணத்தில் பங்குகொள்ள போகிறோம்.
பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள் நிறைந்த பெரிய குழு அது. அனைவரும் ஒரே இடத்திற்கு அழைக்கபட்டு இந்த பயணத்தில் பங்கேற்பவர்களுக்காக சத்குரு பேசிய விடியோ காட்டபடுகிறது.  பின் குழுதலைவர் ஸ்வாமி பிரோபோதா பயணத்தில் குறிப்பாக காசியில் செய்யவேண்டியது கூடாது பற்றி விளக்குகிறார்.  அன்றிரவு 2.30 மணிக்கு எல்லோரும்  காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு போகப்போவதையும் அதற்காக எல்லோரும் இரவு 1.30க்கு பஸ்சில் இருக்கவேண்டும் என்பதையும் அவர் அறிவிக்கிறார்.  இரவு 1.30க்காக? ஏன் அந்த நேரம்? என அந்த கூட்டத்திலிருந்த  எவரும் கேட்கவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புகூட இல்லை. காரணம் அவர்கள் ஈஷாவில் பயிற்சிபெற்றவர்கள். நேரதிட்டமிடலின் அவசியத்தையும் சத்குரு தீர்மானித்திருக்கும் நேரத்தின் அருமையையும் உணர்ந்தவர்கள். அன்றிரவு 1.30க்கு  5 பஸ்களிலும் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தனர். ஒரு பஸ்சின் டிரைவர் மட்டும் வராததால் காத்திருக்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சத்குரு, வாழ்க்கையில் ஒரு முறையாவது  காசிக்கு போகவேண்டும் என சொல்லுகிறீர்கள். எதற்காக அங்கு  போகவேண்டும் ?

ல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் சத்குரு ஏன் காசி யாத்திரை செய்யச் செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். சரி, எதற்காக இந்த காசி யாத்திரை?
இந்த படைப்பை அடிப்படையாக இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒரு விதம் எங்கோ ஒர் இடத்தில் கடவுள் இருப்பதாகவும், அவருக்கு வேலை ஒன்றும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த படைத்தலை செய்கிறார் என்பது. இது ஒருவிதமான நம்பிக்கை முறை. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் என்று மக்கள் எதை அழைக்கிறார்களோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி. அவர் படைத்தலுடன் தொடர்பில் இல்லை, படைத்தல் என்பது அவர் வீசி எறியும் ஒரு சமாச்சாரம்.
படைத்தலை மற்றொரு விதத்தில் பார்ப்பதை – “காஸ்மோஜெனிக்என்று சொல்லலாம். காஸ்மோஜெனிக்” (Cosmogenic) என்னும் வார்த்தை இரண்டு வார்த்தைகளில் (Cosmo+Genic) இருந்து தோன்றியுள்ளது. கிரேக்க மொழியில் காஸ்மாஸ்என்றால் ஒரு திட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுஎன்று பொருள். அதாவது எதேச்சையாக நிகழவில்லை. இது யாரோ ஒருவர் வாயிலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வந்து விழவில்லை. மாறாக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கவனம் செலுத்தும் யாரொருவருக்கும் இந்த படைப்பு ஏனோ தானோவென்று நிகழவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
இந்த பிரபஞ்சத்தை தனக்குள்ளேயே உருமலர்ச்சியும் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியமும் கொண்டதாக பார்த்த யோகிகள், அதே இயல்பை தங்களுக்கும் உரித்தாக்கிக் கொள்ளத் தூண்டப்பட்டனர். பல அற்புதமான முயற்சிகள் இந்த தேசத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகின் வேறு சில பகுதிகளிலும் இம்முயற்சி நடந்துள்ளது.கிரேக்க நாட்டில் டெல்ஃபி நகரில் காசியை போன்ற சிறு பிரதிபலிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படையாக இது எதைக் குறிக்கிறது என்றால், இங்குள்ள படைத்தல் ஒவ்வொன்றுமே, ஏதோ ஒரு விதத்தில், இந்த பிரபஞ்சத்தின் சிறு நகல் என்பதைத்தான். இது மனித உடலுக்கும் பொருந்தும். படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே அளப்பரிய சாத்தியம் உடைய இந்த பிரபஞ்சத்தின் சிறிய நகல்தான். இந்த அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன.
காசியில், ஒரு நகரின் தோற்றத்தில் ஒரு குறிபிட்ட வகையான இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். காசியை போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது மதிமயக்கமுறச் செய்யும் அசாத்திய கனவு. இதனை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினர். மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போது 72,000 கோயில்கள் இருந்தன. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்?

கல்கி 18/01/14


I

13/1/14

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த அபூர்வராகம்


11-1-14


இன்று கீரின் ஏக்கர்ஸ் கிளப் பில் சக்தி பாடினார். ஒரே வார்த்தை அற்புதம். 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்த  அருமையான கச்சேரி. தமிழ் பாடல்,கன்னட கீர்த்தனை என எல்லாமே சூப்பர்.  ஆங்கில ஒப்ரா (OPERA) பாடலைப் பாடி அதை ஒரு கர்நாடக ராகத்துடன் தமிழ்பாடலாக பாடி முடித்தார்.  . இந்த பெண்ணிடம் நிறைய விஷயமிருக்கிறது. AR ரஹ்மான்  கேட்கவேண்டும்.  கச்சேரியின் கடைசியில்  
முத்தைத் தரு பக்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முக்திக்குஒரு வித்து குருபர என ஓதும்

என்ற அருணகிரிநாதரின் திருப்புகழலிலிருந்து பாடியது தான் ஹைலைட். தமிழ்பாடகர்களே பல்லை உடைக்கும் இந்த பதிகத்தை பாடத்தயங்கும் ஒரு  பாடல் இது. இதை இந்த ஆஸ்திரேலிய பெண் அனாயசயமாக பாடியது ஆச்சரியமான விஷயம் 


12/1/14

உலகளவில் தமிழ் -புதிய பார்வை

இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் தாயகம் கடந்த தமிழ் என்ற அனைத்துலக மாநாடு கோவையில் ஜனவரி 20,21,22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அமைப்புக்குழு தலைவராக எழுத்தாளர் மாலன் உள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து
இந்த மாநாடு எதற்காக?
தமிழ் என்பது இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழ் என்று பேசும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் நாம் அதன் இலக்கியத்தை குறித்துப் பேசுகிறோம். ஆனால் மொழி என்பது இலக்கியம் மாத்திரம் அல்ல. தமிழர்களின் பாரம்பரியத் தாயகங்களான தமிழகத்திலும்   இலங்கையிலும், அந்தத் தாயகங்களுக்கு அப்பாலும் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அது தளராமல் தாங்கி நிற்பது இலக்கியம், ஊடகம், கல்வி, தொழில்நுட்பம் ஆகிய நான்கு தூண்களே. இந்தத் துறைகளில் கணிசமான பங்களித்தவர்கள் கூடிக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம். இந்தத் துறைகளில் முன்னேறிச் செல்ல இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் பயனளிக்கும் என எண்ணுகிறோம். ஒரு வேளை இதன் காரணமாக இந்தத் துறைகளிடையேஓர் கூட்டாற்றால் (synergy) ஏற்படவும் கூடும் என்றும் நம்புகிறோம்

இந்த மாநாட்டில் நீங்கள் எப்படி ஈடுபட்டுள்ளீர்கள்?
ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் பத்துப் பனிரெண்டு ஆண்டுகளாக தமிழிலக்கியம் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியம் மாத்திரமல்ல என்ற கருத்தைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் நோக்கில்  திசைகள் என்ற மின்னிதழை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து வெளியிட்டுள்ளேன். யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ் அது. 2004ல் அயலகத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து சிங்கப்பூர் தேசியப் பலகலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறேன். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம், தேசிய கலைமன்றம் இவற்றின் ஆதரவில் நடத்தப்பெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளேன். இந்த மாநாட்டின் அமைப்புக் குழு தலைவராக உள்ளேன். அயலகத்தில் உள்ள கட்டுரை வாசிப்போரைத் தேர்ந்தெடுப்பது,  கட்டுரை பெறுவது, மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது, கட்டுரைகளுக்கு நூல் வடிவம் அளிப்பது ஆகியவை என் பணிகளாக அமைந்தன

இந்த மாநாட்டினால் என்ன பயன்?
தமிழ் மக்கள் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி ஆகியவை குறித்த ஓர் புதிய பார்வையும் பெருமிதமும் பெறுவார்கள். மாநாட்டுக் கட்டுரைகள் நூலாக வெளியாகின்றன. அவை ஆய்வு மாணவர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

சந்திப்பு 

ஆதித்யா

(கல்கி19/01/14)