அந்தப் பெரிய அறையின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் ராணுவத்தின் மிடுக்கு தெரிகிறது.. கண்ணாடிப்பேழையினுள்ளே கலைப் பொருட்கள், விருது கேடயங்கள் கோப்பைகள் எல்லாம் மின்னுகிறது. பக்கச்சுவர்களில் X குறிகளாக நிற்கும் ஈட்டிகள். அழகான ஆயில் பெயிண்ட்டிங்கள். அந்த ரெஜிமென்ட்டின் உயர் அதிகாரி எனது சகோதரர் (கஸின் பிரதர்) எங்களுக்கு ஒரு இரவு விருந்து அளிக்க அவருடைய மெஸ்ஸுக்கு அழைத்துப் போனார். மெஸ் என்றால் மைலாப்பூர் மாமி மெஸ் மாதிரி சாப்பாடு மட்டும் இல்லை. ராணுவத்தில் அதிகாரிகளின் மெஸ் என்பது பணக்கார கிளப் மாதிரி, பார், ,சாப்பாடு, சினிமாஹால், பில்லியர்ஸ் மேஜை லைப்பரரி எல்லாம் இருக்கும். மிக நேர்த்தியாக பாரமரிக்கபடும் இடம். நுழைவாயிலில் அந்த ரெஜிமென்ட்டின் சின்னமான காண்டாமிருகம் வரவேற்கிறது. இங்கு காண்டாமிருகத்துக்கு நிறைய மரியாதை. அதிகாரிகள் தொப்பி, அவர்களின் ஜீப், கார் வரை எல்லாவற்றிலும் காபி கப்பில் கூட இருக்கிறார். சார் என்று அழைக்காததான குறை.
உடன் உணவருந்த அன்று இரண்டு இளம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். சாப்பிடும் போது அந்த அதிகாரிகள் அளவாகச் சாப்பிட்டது போலவே அளவாகவே பேசினார்கள். நாம் அல்லது அதிகாரி பேசும் போதும் “ஸ்ஸார்” என்கிறார்கள். “எஸ்” என்பதின் ஆர்மி பாஷை அது. டின்னர் முடிந்து சகோதரர் எனக்கு வேலையிருக்கிறது. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் என்று கிளம்பியபின் இந்த இளைஞர்கள் சட்டென்று வேறு சானல் மாற்றிய டிவி மாதிரி இயல்பாகப் பேசினார்கள்.. .அதிகாரிகளுடன் இருக்கும்போது அவர்களின் எல்லா அசைவுகளும் கவனிக்கப்பட்டு அவர்களின் பழகும் திறன் மதிப்பிடப்பட்டுக்கொண்டேயிருக்குமாம். .
அன்று இந்த அதிகாரிகள் என்னைப் பல விஷயங்களில் ஆச்சரியப்படுத்தினார்கள். முதலில் கேப்டன் நேகா. இந்தப்பெண் இரண்டு முறை நேஷனல் ஜூடோ தேசிய சாம்பினானவர். இப்போது மூன்றாம் முறைக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.ஈ. காம்ப்பெஸ்ஸில் சூப்பர் புத்திசாலிகளை தேர்ந்த்டுக்கும் ஐபிஎம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். ஏன் ராணுவம்? குடும்பத்தில் யாராவது ராணுவ அதிகாரியா:? என்று கேட்டபோது நான் ஜூடோவில் பலமெடல்கள் பெற்றவள். மேஜையில் உட்கார்ந்து வேலை செய்வதில் ஒரு திரில்லும் இல்லை. சம்பளம் ஒரு விஷயமில்லை. அட்வெண்ட்சராக இருக்கும் ஒரு வேலையைத் தேடினேன். ராணுவத்தின் அதிகாரியாகத் தேர்வானேன், என்றார்.
அடுத்த ஆண்டு மீண்டும் சாம்பியனானால் அடுத்த பிரமோஷன் கிடைக்குமா? . அதெல்லாம் சோல்ஜர்களுக்கு மடும்தானாம் அதிகாரிகளுக்கு கிடையாதாம். ஒரு சாதனைச் செய்த சந்தோஷம் தான் என்று சொன்ன அவர் குடும்பத்தைப் பற்றிச் சொன்னபோது அசந்து போனேன். தந்தை கர்நடாகவில் ஒரு பெரிய கட்சியின் மாநிலத் தலைவர். தாய் முன்னாள் அமைச்சர். அரசியல் வாதிகளின் பிள்ளைகளை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர்களாகவோ, பெரிய நிறுவன அதிகாரிகளாகவோ இல்லாவிட்டால் வளரும் அரசியல் வாரிசாகவோ பார்த்திருந்த எனக்கு இந்தத் தகவல் “அரசியல் வாதிகளிலும் சில மாறுபட்டவர்கள் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கும் நல்ல பெற்றோர்களும் இருக்கிறார்கள்- என்பதைச் சொன்னது.
அடுத்தவர் லெப்டினட் சதிஷ். வசதியான விவசாயக் குடுமப்பபின்னணி. ராணுவப்பணி என் பள்ளிக்கால கனவு. என்றார். சைனிக்பள்யில் படித்து டேராடூனில் பயிற்சிபெற்றவர். பி.ஈ சிவில் முதல் வகுப்பு பட்டதாரி. மாநில அளவிலான கிரிகெட் வீரர். ரஞ்சித் கோப்பைக்காக ஆடியிருக்கிறார். ரயில்வேயில் விளையாட்டுவிரர்களுக்கான கோட்டாவில் வேலைகிடைத்தும் மறுத்துவிட்டு காக்கிக்குள் புகுந்திருக்கிறார். ஆங்கில இலக்கியமும் இசையும் பிடிக்குமாம். ஒரு பாட்டுப்பாடுங்களேன் என்று கேட்டேன். விதிகளின் படி மெஸ்ஸில் பாடக்கூடாதாம். (இன்னும் என்னென்வெல்லாம் விதிகளோ ? ) இவர்களின் போட்டோக்களை சுவடுகளில் போட விதிகள் என்ன சொல்லுகிறது? என தெரியாதால் காண்டாமிருகம், மற்றும் மெஸ்ஸின் டைனிங் ஹால் படங்கள் மட்டும் இணைப்பில்
நுழைவாயிலின் மேலே Rogues Gallery” என்ற போர்டுக்கு கீழே வரிசையாக பதக்கங்களுடன் அதிகாரிகளின் படங்கள். சரியாகத்தான் படிக்கிறேனா? என்று பார்த்தேன் Rogues தான். கேட்டபோது அது சும்மா ஃபன் சார், உங்கள் பேங்க்கில் திறமையான ஜிஎம்களை கில்லாடிகள் என்று சொல்வதைப் போல என்றார்கள். இது பல விஷயங்களுக்கு தனிப்பார்வை கொண்ட தனி உலகம் போலிருக்கிறது.
இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது இந்திய ராணுவம் புத்திசாலி,இளைஞர்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, மெல்ல அவர்களின் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று தோன்றிற்று. இருந்தாலும் நம் அரசும் சமூகமும் இவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் உரிய கெளரவத்தை முழு அளவில் அளிக்கிறதா? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.