அந்தச் சின்னக் கிராமத்துக்கு வெளியே இருக்கிறது அந்தக் கோவில். கிராமியச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் படு சுத்தமான பசும் புல்வெளிக்கிடையே அழைத்துச் செல்லும் பாதையும் தோட்டமும் அது தொல்பொருள்த்துறையால் பரமரிக்கப்படுவதைச் சொல்லுகிறது. நீண்ட சுற்று சுவர்களுடனும் மிகச்சிறிய வாயிலுடனும் இருக்கும் அந்தச் சென்ன கேசவர் கோவில் முதல் பார்வையில் நம்மைக் கவரவில்லை. ஏதோ இன்னுமொரு பழைய கோவில் என நினைத்துக்கொண்டு நுழைகிறோம்.
உள்ளே நிழைந்ததும் பளீரென்று கோவிலின் அழகும், பிரமாண்டமும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. பேலூர் ஹளபேடு கோவில்களின் பாணி. வெளிச்சுவர் முழுவதும் சிற்பங்கள், சிற்பங்கள், சிற்பங்கள் முதலில் எங்களைப்பாருங்கள் என்று அழைக்கிறது.
சோமநாத்பூர் மெடிக்கேரியிலிருந்து 150 கீமி தொலைவில் உள்ள ஒரு சின்னக் கிராமம். அங்குதான் ஹொய்சளர்களால் கட்டபட்ட கடைசிக்கோவில் இருக்கிறது. கட்டாயம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொன்ன நண்பரை வாழ்த்துகிறோம்.
கலைநயம், அழகு, சிற்பகலைஞர்களின் அற்புதமான திறன் என அடிக்கொண்டே போகலம். அத்தனை அழகு, அத்தனையும் அழகு. வெளிச்சுவர்கள் மட்டுமில்லை கோபுரத்தின் மாடங்கள், பிரஹாரம் அனைத்துமே மிக அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.
. ஒரு ஆறு முனை நட்சத்திரத்தின் வடிவில் எழுப்பட்டிருக்கும் இந்தக்கோவிலின் மூன்று கோபரங்களும் அறுபட்டைக்கோணங்களில் எழுந்த நிற்கிறது. கோவிலின் வெளிப்புறமும் கோபுரங்களும் பல சிறிய சிற்பங்களால நிரப்பட்டிருக்கிறது. ஒரு சதுர அங்குலம் கூட வெறும் கல்லாக இல்லை. ராமயணம், பாரதம், பாகவதம் எனப்பலகதைகள்.சொல்லுகின்றன
வெளிச்சுவற்றிலிருந்து சற்றே இருட்டாகஇருக்கும் அந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடன் நிறுத்துகிறது அந்த மண்டபத்திலிருக்கும் அழகான தூண்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் ஆனால் ஒரே உயரம் சுற்றளவில். ஒன்று இரும்புத்துதூண் போல வழவழவென்று, வட்டத்தட்டுக்களை அடுக்கியது போலஒன்று பின்னப்பட்ட ஒலைக்கூட போல ஒன்று. என்றும் ஒவ்வொன்றும் அசத்துகிறது. மரங்களை மிஷினில் கடைசல் வேலை செய்து உண்டாக்கும் வளைவுகளையும்
நெளிவுகளையும் கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு சில தூண்கள் முழுவதும் இரும்பில் வார்க்க்கப்பட்ட வளையங்கள்போல, இடைவெளிகளுடன் பின்னப் பட்ட மூங்கில் கூடைகள போல நுணுக்கமாகச் செதுக்கபட்டிருக்கிறது. அந்த வளைவுகளில் விரல்களைக் கூட விட்டுப்பார்க்க முடிகிறது.
வெளியே கூம்பாகத் தெரியும் கோபுர விதானங்களில் உள்ளே ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். (படங்களைப் பாருங்கள்) அத்தனை சிற்பங்கள். வாழைப்பூ ஒன்று ஒரு இதழ் பிரிந்த நிலையில். திராட்சைகொத்து ஒன்று இலைகளூம் பூவூமாகக் கொடி ஒன்று என ஒவ்வோரு உள் விதானத்திலிருந்தும் தொங்குகிறது. அதன்சுற்று புறம் முழுவதும் சின்ன சின்ன சிற்பங்கள் கழுத்து வலிப்பதால் ஒரே சமயத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உற்று பார்க்க முடியவில்லை.
மூன்று கர்பஹகிரகங்கள் கேசவன், ஜனார்த்தனன். வேணுகோபாலன் என்று முன்று சன்னதிகள் வேணுகோபலனின் சிலையில் அழகு கொஞ்சுகிறது
. கேசவன் சன்னதியில் சிலை இல்லை. உலகின் எந்த மியூசியத்தில் இருக்குமோ? சிலைகடத்தல் மன்னன் கபூரைக்கேட்டால் சொல்லுவானோ என்னவோ? ஜனார்த்தனும் கம்பீரமாகயிருக்கிறார்.
. கேசவன் சன்னதியில் சிலை இல்லை. உலகின் எந்த மியூசியத்தில் இருக்குமோ? சிலைகடத்தல் மன்னன் கபூரைக்கேட்டால் சொல்லுவானோ என்னவோ? ஜனார்த்தனும் கம்பீரமாகயிருக்கிறார்.
உற்றுகவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய அளவிற்கு தெய்வச்சிலைகள் பின்னப்படுத்தபட்டிருக்கிறது மூக்கின் நுனி, ஆசிர்வதிக்கும் கையின் விரல்கள், பாதங்களில் விரல்கள் போன்றவைகள். இவைகள் முஸ்லீம் படையெடுப்பின்போது செய்யபட்டிருக்கிறது. பின்னமான சிலைகளை இந்துக்குள் வணங்கமாட்டார்கள் என்பதால் இப்படிச்செய்வதின் மூலம் வழிபாட்டை, கோவில் பூஜைகளை நிறுத்திவிட்டார்கள் என்கிறார் கைடு.
இந்தகோவிலின் காலம் 13ம் நூறாண்டு என்கிறது வரலாறு. அதற்கு முன்னரே சாளுக்கியர்கள் கற்சிலைப்படைப்புகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். இதிலுள்ளவைகளை கச்சிதமாக் டிசைன் செய்து கல்லில் வடித்தி த்ருக்கிறார்கள். இந்த நுணுக்கமான வேலைகளுக்கு லேத் போன்ற இயந்திரங்கள் பயனபடுத்தியிருப்பார்களா? அப்படியானால் அப்போதே tool engineering அறிந்திருப்பார்களா? மெஷின்கள் டூல்கள் பற்றி எழதும் ஜவர்லால் போன்றவர்கள் சொல்ல வேண்டும் . இத்தனைத் தூண்கள் உருவாதற்குள் நிறையச் சேதமாகியிருக்குமோ எனப் பல கேள்விகள் அலைஅலையாக எழுந்தன
முழுவதும் அழகான தூண்களால் நிறைந்த நீண்ட வெளிப்பிராகாரம். அதில் சன்னதிக்கான மண்டபங்கள். பல காலியாக இருக்கிறது. கருப்புநிற பளிங்குக்கல்லில் மிக ப்பெரிய கல்வெட்டு நிற்கபதைக் கவனிக்கிறோம். அது முழுவதும் கன்னட ஜிலேபி எழுத்தில் இருப்பதால் ஒருரைப்படிக்கச்சொல்லி கேட்கிறோம். (பேசினால் புரிந்து கொள்ளும் அளவிற்குதான் நமது கன்னடஞானம்.)
மூன்றாம் நரசிம்மன் என்ற ஹொய்சள மன்னரின் தண்டநயாகா (தலைமைத்தளபதி) சோமா தன்கிராமத்தில் ஒரு கிருஷ்ணன் கோவில் கட்ட அனுமதி கேட்டபோது மன்னர் அதைச் சிறப்பாகசெய்ய பணமும் இந்த கிராமத்தையும் கொடுத்ததாகவும் 1268ல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் (அதற்கு 200 ஆண்டுகளூக்கு முன்னரே ஹொய்சளர் காலம் துவங்கிவிட்டது) சொல்லபட்டிருக்கும் அந்தக்கல்லில் சொல்லபட்டிருக்கும் ஆச்சரியமான விஷயம். இந்தக்கோவில் உள்ள சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகளீன் பெயர்கள். (தமிழகத்தில் ஒரு கோவிலில் கூட இதைப்பார்க்க முடியாது) கோவிலின் வெளிச்சுவரில் இருக்கும் 194 பெரிய சிற்பங்களில் 40 யைச் செய்தவர் மல்லித்தம்மா, மற்றவைகளைச் செய்தவர்கள் பல்லையா, செளடையா, காமய்யா என்று பல பெயர்கள். இவர்கள் கல்லில் கலைவண்ணத்தை மட்டும்காணவில்லஇ கடவுளையே கண்டிருக்கிறார்கள்.
வெளியே வரும் நம்மை ஒரு பெரிய ஆலமரமும் அதைசுற்றியிருக்கும் வட்டவடிவதிண்னையும். சுகமான காற்றில் சற்று உட்காரச்சொல்லுகிறது.
அந்த மரத்தில் தொங்கும் போஸ்ட் பாக்ஸில் இந்த பெட்டியில் போடும் தபால்களில் மட்டும் இந்த கோவிலின் படத்துடன் சரித்திரசின்னம் என முத்திரையிடப்படும் என எழுதியிருந்தது. பிக்கசர் போஸ்ட் கார்டு அல்லது கவர் தருவார்களா காவலளிகளைக் கேட்டபோது அது 6 கீமியிருக்கும் போஸ்ட் ஆபிஸில் தான் கிடைக்கும் என்றார்கள்.
“ நாலு டயர்கள் வாங்கினால் கார் இலவசம். ஆனால் டயர்கள் விற்பனை செயவதில்லை” என்ற ஜோக் தான் நினைவிற்கு வந்தது. சென்னைக்கு போனவுடன் தொல்பொருள் துறைக்குக் கடிதம் எழுத வேண்டும் எனக் குறித்துக்கொண்டேன்.
அடுத்த முறை மைசூர் சென்றால் இந்தக் கலைப்பொக்கிஷத்தை மறக்காமல் போய்ப் பார்த்து வாருங்கள் மைசூரிலிருந்து 38 கீமிதான்
.