இந்திய அரசியல் வரலாற்றில் சகா வரம்பெற்ற சில செய்திகள் உண்டு. அதில் ஒன்று கோஹினுர் வைரம்.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று வர்ணிக்கின்றனர். இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது.
அப்போது முதல் இந்த வைரம் பிரிட்டன் மன்னர் பரம்பரையின் சொத்தாக மாறியுள்ளது. தற்போது மகாராணியின் மகுடத்தில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது., ஆண்டு தோறும் லண்டனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது
.
.
105 காரட், 21 கிராம் எடையும் உள்ள இந்த வைரத்தின் மதிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை. ஆனால் இது பதிக்கப்பட்டிருக்கும் கீரிடத்தின் மதிப்பை இங்கிலாந்து அரசு அறிவித்திருப்பதால் அதிலிருந்து இதன் மதிப்பை ஒரு பில்லியன் டாலர்(6700 கோடிகள்) என மதிப்பிடுகிறார்கள்
பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தைப் பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையைப் பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே மத்திய அந்த அரசு கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் “ஆல் இந்தியா ஹியூமன் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் பிரன்ட்” என்ற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்யதது. நீண்ட நாட்களுக்குப்பின் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "வெளிநாட்டு அரசாங்கத்துக்கு நாம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இத்தகைய மனுக்கள் அவசியமற்றது" என்று தீர்ப்பளித்திருக்கிறார்.
இந்த வைரம் இனி இந்தியாவிற்குத் திரும்பவாய்ப்பில்லை என்ற நிலை எழுந்திருக்கும் நேரத்தில், வெளியாகியிருக்கும் ஒரு செய்தி இந்த வைரம் கிடைத்த இடத்தில் வைரம் தேடும் வேட்டை இந்த ஆண்டு திவிரமாகத் துவங்கியிருக்கிறது.
விஜயவாடாவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லூர் கிராமம் இதுகிருஷ்ணா ஆற்றின் மீது டாக்டர் KL ராவ் சாகர் நீர்ப்பாசன திட்டத்தினால் உருவான ஒரு அணையினால் முழ்கிய 2.லட்சம் சதுர கிலோமீட்டரில் மூழ்கிய கிராமங்களில் ஒன்று. .
இந்தக் கிராமமும் அதன் பகுதிகளும் பல நூற்றாண்டுகளாக வைர சுரங்கமாக இருந்திருக்கிறது, குதுப் ஷாஹி வம்சத்தின் கீழ் அதன் தலைநகரமான கோல்கொண்டா வர்த்தகத்தின் ஒரு உலகளாவிய மையமாக இருந்திருக்கிறது மில்லியன் கணக்கான வைரங்கள் பல காரட்களில் 15லிருந்து 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான காலத்தில் கொல்லூர் நகரத்தில் இருந்து வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோஹினூர் 16 ஆம் நூற்றாண்டின் போது வெட்டப்பட்டது மற்றும் கோல்கொண்டாவில் விற்பனை செய்யப்பட்டது. கொல்லூர்-பாரிடலா பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கங்கள் 1830 ஆம் ஆண்டு வரை செயல்பட்டன, ஆனால் அவை படிப்படியாக கைவிடப்பட்டன. 1990 களில் மாவோயிஸ்டுகள் இப்பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, ஏறக்குறைய 1,000 ஏக்கர் நிலப்பரப்பை ஏழைகளுக்கு வழங்கினார்கள். பின்னர் 2004 ஆம் ஆண்டில், கிருஷ்ணாவின் தண்ணீரைத் தடுத்து ஒரு பாசன நீர் திட்டத்தை ராஜசேகர ரெட்டி அரசாங்கம் துவக்கியதின் விளைவாக கொல்லூர் உட்பட எல்லாக் கிராமங்களும் 50 அடி நீரில் முழ்கி கிடக்கிறது. அந்த கிராங்களில் வசித்தவர்களுக்கு மாற்று இருப்பிடங்கள், நிலங்கள் வழங்கப்பட்ட போதிலும் இந்த ஏரிக்கரை ஓரத்திற்கு ஒவ்வொரு கோடைக்காலத்திலும் அந்த மக்கள் வருகிறார்கள். அவர்கள் மட்டுமில்லை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரிய வைர வியாபாரிகள் என்றும் பலரும் வருகிறார்கள்.
எதற்குத் தெரியுமா? அந்த ஆற்றின் நீர் வற்றி கரைப்பகுதிகளிலிருக்கும் பாறைகளில் இடுக்குகளில் கிடைக்கும் அபூர்வ கற்களுக்காக. சுரங்கங்கள் அழிந்து பல காலங்கள் ஆனாலும் இன்னும் வைரக்கற்கள் இருக்கின்றன என அவர்கள் நம்புகின்றனர். அவ்வப்போது தொடர்ந்து கிடைக்கும் சில விலை மதிப்புள்ள கற்கள் இந்த நம்பிக்கையை வலுவடையச்செய்கிறது.
இந்த பகுதியில் வாழும் விவசாயக்கூலிகள், ஆடுமாடு மேய்ப்போருக்கு இங்கு வைரக்கற்கள் தேடுவது ஒரு பார்ட் டைம் பிசினஸ். நீர்த்தேக்கத்தில் நீர் குறைய ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பிஸியாகி விடுவார்கள். கற்களை தேடிஎடுத்து சேமித்துக்கொள்வார்கள். பின்னர் வியாபாரிகளிடம் காட்டி விற்று விடுகிறார்கள். இதற்காகவே இப்போது இங்கு வெளி மாநிலங்களிருந்து வியாபாரிகள் வந்து அருகிலிருக்கும் குண்டூர், விஜயவாடா போன்ற இடங்களில் தங்கி நேரடியாக கூலிக்கு இவர்களை அமர்த்தி கற்களை சேகரிக்கிறார்கள். கற்கள் கிடைத்தவுடன் அவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கிறார்கள். நாள் கூலியைத்தவிர கொண்டுவரும் கற்களை ஆராய்ந்து அதற்கேற்ப நல்ல விலையும் தருகிறார்கள் என்கிறார் உள்ளூர் வங்கி மேலாளர் ஒருவர்.
ஒரு கல்லை எப்படி மதிப்பிடுகிறார்கள்? இதற்கான நவீன எலக்டிரானிக் கருவிகளை இங்கு வரும் வியாபாரிகள் கொண்டுவருகிறார்கள். முதல் சோதனையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கற்கள் அதில் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு கிராம கமிட்டி தலைவர், தேடி எடுத்தவர்கள் முன்னிலையில் விலை நிர்ணயக்கபடுகிறது
பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்க்கும் ஒரு சிறுமிக்கு கிடைத்த கல்லின் மதிப்பு 7 லட்சம் என்றவுடன் அத்தனை கிராமங்களும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால் அந்தச் சிறுமியின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற நிலை எழுந்தது, கடைசியில் போலீஸார் தலையிட்டினால் அந்த பெண்ணுக்கிடைத்தது 30, 000 ரூ தான் என்கிறார் இதில் ஈடுபட்டிருக்கும் ஒரு வியாபாரி. இந்த நிலையினால் இப்போது கிராம மக்கள் கூலிக்கு வைரங்களைத் தேடுவதையே விரும்புகிறார்கள் தனியாகப் போய் தேடபவர்களும் இருக்கிறார்கள் .
அரசின் அனுதி வேண்டாமா? எந்த ஒரு நீர்ப் பாசன திட்டப்பகுதியின் நிலப்பரப்பும் அரசுக்குச்சொந்தமானது. அதில் இப்படிப் போய்த் தேடுவது சட்டப்படி குற்றம். ஆனால் 40 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வைரத்தேடல் அரசால் அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை என்பதால் ஆர்வத்துடன் வருபவர்கள் ஆண்டுதோறும் அதிகரிக்கிறார்கள் முதல் முறையாக வருபவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வழிகாட்டியாக உதவ, உள்ளூர் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.
நீங்களும் போய் முயற்சிக்கலாம். அடுத்த கோஹினூர் கிடைக்கும் அதிர்ஷடசாலி ஒரு வேளை நீங்களாக இருக்கலாமே