30/4/13

இந்திய ”ஸ்வாமி”யிடம் ஜோசியம் கேட்ட இங்கிலாந்தின் எதிர்கட்சி தலைவர்’



இங்கிலாந்தின் முதல் பெண்பிரதமர்திருமதி. மார்ரெட் தாட்சர். ”இரும்பு மனிஷி”யாக அறியபட்ட இந்த பெண்மணிஇங்கிலாந்தின்
பொருளாதர முகத்தை மாற்றியவர். நீண்ட நாள் பதவிவகித்த பிரதமரும் கூட. தனது 87 வயதில் கடந்த வாரம் காலமானார்..

===

 அயலுறவு துறையில் செயலராகயிருந்து ஒய்வு பெற்ற பின்னர் அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சாராக பணியாற்றியவர் நட்டுவார் சிங்.
நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பவர். அவரது “புலிகளுடன் வாக்கிங்- ஒரு ராஜதந்திர கடந்த கால கதைகள்
“Walking with lions-Tales from a diplomatic past )என்ற புத்கத்திலிருந்து…




1975ஆம் ஆண்டு நான் லண்டனில் துணைஹைகமிஷனராக இருந்த போது ஒரு நாள் அப்போது இங்கிலாந்து வந்திருந்த சந்திராஸ்வாமியிடமிருந்து போன் வந்தது. அவரை வந்து சந்திக்க வேண்டினார். “நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் தூதரகத்திற்கு வரலாம் என்று சொல்லிவிட்டேன். காவி உடை, கழுத்தில் பெரிய உத்திராட்ச மாலை நீண்ட தண்டம் சகிதம் மறுநாள் என்னை ஆபிஸில் சந்தித்த அவர் உரையாடலின்போது பல இந்திய அரசியல் பிரபலங்களின் பெயர்களை உதிர்த்தார். கிளம்பும் முன் அவர் இங்கிலாந்தின் இரண்டு முக்கிய பெயர்களை குறிப்பிட்டு சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டினார். இவரை என்னை சந்திக்க சொன்னவரின் மேல் நான் கொண்டிருந்த நன் மதிப்பால் நேரிடையாக பதில் சொல்லாமல் சமாளித்தேன். (டிப்ளமேட் இல்லையா?) சில நாட்களில் அன்றைய அயலுறவு அமைச்சர் ஒய்,பி, சவாண் அமெரிக்க போகும் வழியில் லண்டன் வந்தார். அவரிடம் சந்திரா ஸ்வாமி பற்றி சொல்லி அவர் மெளண்ட் பேட்டனையும், எதிர்கட்சி தலைவர் மார்கரெட் தாட்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்லுகிறாரே, செய்யலாமா என்றேன். செய்யுங்களேன், அவர் சந்திப்பினால் பிரச்னை ஒன்றும் இல்லையே என்ற அவரது பதில் எனக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் அளித்தது. நல்ல வேளையாக மெளண்ட்பேட்டன் விடுமுறைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாதால் சந்திப்பு இயலாது என்று சொல்லிவிட்டார். தாச்சர் எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சருக்கு நிகரானவர் என்பதால் நேரில் சந்தித்து பேசினேன்.. மறுவாரம் 10 நிமிடம் சந்திக்க சம்மதித்தார். இந்த ஆள் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டால் எனக்குதான் பிரச்சனை என பயந்துகொண்டே இருந்தேன். பாரளமன்ற வளாகத்தில் நுழைந்த்திலிருந்தே மற்றவர்கள் கவனத்தை கவர ஏதாவது செய்துகொண்டு என்னை சங்கடபடுத்திக்கொண்டே வந்தார் ஸ்வாமி ”என்னை எதற்காக பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற தாட்சரின் கேள்விக்கு “சீக்கிரமே உங்களுக்கு தெரியும்” என்று ஹிந்தியில் சொன்னதை நான் மொழிபெயர்த்தேன், (ஆசாமிக்கு ஆங்கிலத்தில் ஒரு அட்சரம் தெரியாது) ஒரு பெரிய வெள்ளை பேப்பர் கேட்டார் அதை 5 நீள துண்டுகளாக கிழித்தார். மார்கரெட் தாட்சரிடம் கொடுத்து அதில் 5 கேள்விகள் எழுத சொன்னார். சற்றே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் அவர் எழுதினார். அவைகளை கசக்கி சின்ன பந்துகள் போல் செய்து தாச்சரிடம் கொடுத்து ஏதாவது ஒன்றை திறந்து பார்க்க சொன்னார் சந்திராஸ்வாமி. அவர் பார்த்துகொண்டிருக்கும்  கேள்வியை என்னிடம் இந்தியில் சொன்னார், நான் மொழிபெயர்த்தேன். சரி என்பது தாட்சரின் கண்ணிலேயே தெரிந்தது.அடுத்தடுத்த கேள்விகளும் சரியாகவே சொன்னார். தயக்கத்திலிருந்து ஆச்சரியமாக மாறியிருந்த தாட்சர் இவர் தெய்வீகசக்தி வாய்ந்தவர் என எண்ண ஆரம்பித்தது  எனக்கு புரிந்தது, சோபாவின் நுனிக்கே வந்து விட்ட தாட்சர் மேலும் சில கேள்விகளை கேட்க பதில்கள் சொன்ன பின்னர் சட்டென்று எழுந்து சூரியன் அஸ்தமித்துவிட்டான். நான் இனி இன்று பதில் சொல்ல முடியாது என்றார். உங்களை எப்போது மீண்டும் சந்திக்கலாம்? என கேட்ட தாச்சருக்கு ”வரும் செவ்வாய்கிழமை 2.30க்கு நட்வார்சிங் வீட்டில்” என்றார். ஆடிபோனேன். என்வீட்டிலா? நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒரு தூதுவர் வீட்டிற்கு வருவதில் பல சம்பிராதயபிரச்னைகள் என்பதால் நான் இதை மொழிபெயர்த்து சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். ”சொல்லிய பின் பாருங்கள்” என்று அவர் சொல்லிகொண்டிருந்த போதே மார்கரெட் என்னவென்று விசாரித்தார்.. நான் சொன்னவுடன், ”மிஸ்டர் ஹைகமிஷனர் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?” எனகேட்டாரே பார்க்கலாம். விடைபெற எழுந்தபோது சடென்று ஒரு தயாத்தை வரவழைத்து வரும்போது இதை கையில் கட்டிகொண்டு சிவப்பு ஆடை அணிந்து வாருங்கள் என்றார். ஒருபெண் அணீய வேண்டிய ஆடையைபற்றி யெல்லாம் சொல்லுவது இங்கிலாந்தில் அநாகரிகம். எனபதால் சொல்ல மறுத்தேன். மீண்டும் தாட்சர் என்ன என்று கேட்டதனால் தலைகுனிந்துகொண்டே சொன்னேன். தாயத்தை வாங்கிகொண்டார்.
சொன்னபடி செவ்வாய் மதியம் மார்ரெட் தாட்சர் சிவப்பு உடையில் கையில் கட்டிய தாயத்துடன் வந்தார். நிறைய கேள்விகள் கேட்டார், அதில் முக்கியமானது, நான் நாட்டின் பிரதமர் ஆவேனா? எப்போது? ”நிச்சியம் இன்னும் 4 ஆண்டுகளில் என்ற ஸ்வாமி 9. 11.அல்லது 13 வருடங்கள் பிரதமாக இருப்பீர்கள்” என்றார். ஒரு நாள் பிரதமராவோம் என நம்பிய மார்கெட் தாட்சர் நீண்ட வருடங்களை நம்பவில்லை.
சந்திரா ஸ்வாமி சொன்னது பலித்தது. மார்கரெட் தாட்சர் 1979லிருந்து 1990 வரை  11 வருடம் பிரதமாரகயிருந்தார்.


25/4/13

கதை எழுதி கடன்களை அடைத்த எழுத்தாளார்.


உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கிரைம் நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்திலிருப்பவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இங்கிலாந்துகாரார். வயது 73. கடந்த 30 ஆண்டுகளில் எழுதியிருப்பது 31 புத்தகங்கள். 97 நாடுகளில் 33 மொழிகளில் வெளியிடபடும் இவரது புத்தகங்கள் இதுவரை விற்றிருப்பது 25 கோடிபிரதிகளுக்கும் மேல்.. 1975ல் வெளியான இவரது முதல் புத்தகம்  இதுவரை 2 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது.
சமீபத்தில் தனது 31வது புத்தகமான ”பெஸ்ட் கெப்ட் சீகரட்ஸ்” யை  இந்தியாவில் 4 நகரங்களில் அறிமுகபடுத்துவதற்காக வந்திருந்த பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தார். தனக்காக காத்திருந்த இளைஞர் பட்டாளத்தை பார்த்து பிரமித்துபோனார். ”அத்தனை இளம் பெண்களும் என்னை பார்த்த உற்சாகத்தில் குரல் எழுப்பயதில் என்னை ஒரு ராக்ஸ்டார்போல உணர்ந்தேன். தெரிந்திருந்தால் கிதாரை கொண்டுவந்திருப்பேன்” என்று சொல்லும் ஜெஃப்ரி இங்கிலாந்தில் தான் இளைஞர்களிடம் இவ்வளவு பாப்புலர் இல்லை என்பதையும் இந்திய இளைஞர்கள் நிறைய ஆங்கில புத்தகங்கள் படிக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் சொன்னார்.. இவரது முந்தய புத்தகம் வெளியானபோது இந்தியாவிற்கு வந்ததிருந்தபோது அதற்கு  கிடைத்த  அமோக வரவேற்பை பார்த்து இந்த புத்தக வெளியிட்டை இந்தியாவில் செய்ய விரும்பியிருக்கிறார். (இம்மாதிரி ”புக் டூர்” களை பதிபக்கதினர் செய்வதும் அதற்காக இவர் கட்டணம் வசூலிப்பதும் வேறு விஷயம்)
இவரது கிரைம் நாவல்களை விட சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்டது இவரது வாழ்க்கை. ஆக்ஸ்போர்ட்டில் கல்வியை முடித்தபின்னர் ஆர்வத்துடன் இறங்கியது அரசியலில். லண்டன் நகர்மன்ற உறுப்பினாராக துவங்கிய அரசியல் வாழ்க்கை 29 வயதிலே இங்கிலாந்து நாடாளுமன்ற
உறுப்பினராகும் அளவிற்கு  உயர்ந்தது, பிரகாசமான எதிர்காலம் அரசியலில் உருவாகியிருந்து கொண்டிருந்த காலகட்டத்தில். ஜெஃப்ரி மூதலீடு செய்து இயக்குனராக இருந்த கம்பெனி திவாலாகியாதால் தன் எம்பி பதவியை இழக்க நேர்ந்தது. தனது கன்ஸ்ர்வேட்டிவ் கட்சியில் செல்வாக்கையும், சொத்துகளையும் இழந்து 4 லட்சம் பவுண்ட்கள் கடனுடன் திவாலான நேரத்தில்  முடிவு  ஒரு எழுத்தாளாராவது என்பது. 34 வயதில் எழுதிய முதல் புத்தகம் “ஒரு பைசா அதிகமோ, ஒரு பைசா குறைவோ இல்லை”(
Not a Penny More, Not a Penny Less. )  என்ற நாவல்   லண்டனில் வெளியான உடனேயே சூப்பர் ஹிட்டான இந்த புத்தகம் சில வாரங்களிலேயே  17 நாடுகளில் வெளியாகி பணத்தை கொட்டியது. கடன்களை அடைத்த சந்தோஷத்தில் எழுதி தள்ளினார் ஜெஃப்ரி. . உலகம் அறிந்த எழுத்தாளாரகிய உயர்ந்தபின்னரும்  அரசியல் ஆர்வம் குறைய வில்லை. கட்சியில் செல்வாக்கு உயர்ந்து தேசிய அளவில் உபதலைவராக இருந்தபோது லண்டன் நகர் மேயராக விரும்பி உள்கட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றியும் பெற்று கட்சியின் வேட்பாளாராக 1999ல் அறிவிக்கபட்டிருந்தார். ல் தேர்தலுக்கு முன், 10 ஆணடுகளாக நடந்துகொண்டிருந்த வழக்கில் இவருக்கு பொய் சாட்சி அளித்தற்காக 4 ஆண்டு தண்டனை அளிக்கபட்டது., அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகியது. ஆனால் ஜெயிலில் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஜெப்ரி எழுதியது ”கைதியின் டைரி” என்ற புத்தகத்தின் மூன்று தொகுப்புகள்.
ஒராண்டு முழுவதும் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டியபின் 6 வாரங்களில் ஒரு நாவலின் முதல் டிராப்ட்டை எழுதும் இவர், அது மறந்துபோகுமளவிற்கு வேறு விஷயங்களில் அடுத்த 4 வாரங்கள் கவனம் செலுத்துவார். பின்னர் டிராப்ட்டை திருத்த ஆரம்பித்து பல முறை திருத்தங்கள் செய்து- ”கடைசி புத்தகத்தை 14 முறை செய்தேன்” ஒரு நாவலை உருவாக்குகிறார். நாவல்கள் எழுதும் காலங்களை எதாவது ஒரு வெளிநாட்டில் கழிக்கிறார்.
இந்தியாவில் நிறைய ஆங்கிலபுத்தகங்கள் வருவதை அறிவேன். ஆனால் நான் படிக்க என் எஜெண்ட்கள் எதையும் அனுப்பவில்லை. என்று சொல்லும் ஜெஃப்ரிக்கு எழுத்துக்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம் கிரிக்கெட். நமது வீர்ர்களில் டோனி.
 தனது புத்தகங்களில் மிக சிக்கலான நுணுக்கமான டெக்னலாஜி சமாசாரங்களைக்கூட  தெளிவாக சொல்லும் இவர் தன் புத்தகங்களை மைநிரப்பிய பேனாவின்மூலம், கையால்தான் எழுதுகிறார். சொன்ன காரணம்  “எனக்கு கம்ப்யூட்டர் டெக்னாலாஜி தெரியாது.“



9/4/13

பகல் கனவுகளும், புரியாத கணக்குகளும்




ஏப்பரல் ஆழம் இதழில் பட்ஜெட் பற்றி எழுதியிருக்கும்
கட்டுரை இது 

 மத்திய பட்ஜெட் 2013-14 ஒரு பார்வை

நிதி ஒதுக்கீடு, பற்றாக்குறை, மந்தமானபொருளாதார வளர்ச்சி, பெருகிவரும் பணவீக்கம். தொடர்ந்து வெடித்த ஊழல்கள், எல்லாம் அதிதீவிரமாக நீடித்துகொண்டிருக்கும்  சூழ்நிலையில். இந்த ஆண்டின் பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார். 8 ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்வதை  வழக்கம்போல் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர். ரயில்வே பட்ஜெட் போன்று பொது பட்ஜெட்டில் பெரிய அளவில் கூச்சல் குழப்பம் ஏதுமில்லாதற்கு முக்கிய காரணம் நிதியமைச்சர்  
சிதம்பரத்தின் துவக்க உரை. மிக நன்றாக தயாரிக்க பட்டிருந்ததும், அதை அவர் அழகாக வாசித்ததும் ஒரு காரண..  மாறிவரும் உலகபொருளாதார சவால்கள், அதை இனி எப்படி இந்தியா எப்படி சமாளிக்க வேண்டும், இனி வரும் 10 ஆண்டுகளில் நாம் எங்கு இருப்போம் என்பதை  நோபல் அறிஞர்களின் கருத்துகள், திருக்குறள், விவேகானந்தரின் வார்த்தைகள் போன்ற மேற்கோள்களுடன் ஒரு மணி நேரம் 47 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை அவர் வாசித்தார்.  ஆனால் பட்ஜெட்?  ஒரு அற்புதமான டிரையலருக்கு பின்   மோசமான சினிமாவைப் பார்த்தது போல   பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. இந்த பட்ஜெட்டை அலசி பார்ப்பதற்கு முன் ஒரு சின்ன பிளாஷ் பேக்
2012-`13 பட்ஜெட்
'கருணை உள்ளவனாக மாறுவதற்கு நான் இரக்கமற்றவனாக இருந்தாக வேண்டும்'' என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளைக் கூறி கடந்த ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிஜமாகவே இரக்கமற்றவராக மாறி அடித்தட்டு மக்களை நேரடியாக தாக்கும் சேவை வரியை பல விஷயங்களுக்கு விஸ்தரித்து, வருமான வரியில் பெண்களுக்கு அளிக்கப்ட்டிருந்த சின்ன சலுகைகளை கூட திரும்ப பெற்றிருந்தார். பட்ஜெட் வெளியான சில தினங்களில்  “பட்ஜெட்டில் வருவாயாக காட்டப்ட்டிருக்கும் பல இனங்களில் அந்த அளவு வருவாய் வருவதற்கு வாய்ப்பில்லை,அதேபோல் செலவுகளும் குறைத்து  மதிப்பிடபட்ட்ருக்கிறது. இது ஆபத்தானது. இதன் விளைவுகள் இந்த நிதியாண்டின் இறுதிக்குள்ளாகவே தெரிந்துவிடும்” என்ற கருத்தை தெரிவித்தவர் அரசு நிதித்துறையின்  ஒரு முன்னாள் அதிகாரி. சிதம்பரத்தின் இந்த பட்ஜெட் அவர் கருத்துகள் உண்மை என்பதை உறுதிபடுத்திவிட்டன.


கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிக்கபட்டபின்  எதிர்பார்த்த வருமானத்தை  எட்டமுடியாததால் அதை குறைத்தும்  கட்டுபடுத்த முடியாதாதால் அதிகரித்த செலவுகளுடனும் பட்ஜெட் திருத்தி மதிப்பிடபட்டது. அதன் படி துண்டு விழுந்தது  1,18000 கோடி. இதை அரசு எப்படி சமாளித்தது? அடிப்படை கட்டமைப்புகளுக்கான செலவினங்ளுக்கு ”மூலதன திட்ட செலவு”
என்று பட்ஜெட்டில் ஒவ்வொருஆண்டும் ஒதுக்கபடும். கடந்த ஆண்டு இதற்காக ஒதுக்கபட்டது  4.29 லட்சம் கோடி. இதில் கை வைத்து துண்டுவிழுந்த பட்ஜெட் தொகையை சமாளித்துவிட்டார்கள். புரியும்படி சொல்லவேண்டுமானால் பாராளுமன்றத்தில் அறிவித்து ஒப்புதல் பெற்ற பட்ஜெடில் சொன்ன அடைப்படை கட்டமைப்பு செலவுகளை செய்யாமல்  மக்களை ஏமாற்றி விட்டார்கள்.  இந்த ஆண்டு பட்ஜெட்டை  UPA2 இல்லாத ஒரு அரசு அளிக்க நேர்ந்திருந்தால் இது வெளிச்சதிற்கு வந்திருக்கும்..

இந்த பட்ஜெட் ”தேர்தல் பட்ஜெட்டா?”
வருமான வரி விலக்கு 9 லட்சமாக உயர்வு. பெண்களுக்கு முழு விலக்கு. விவசாய கடன் ரத்து. கார், டீவி, கம்ப்யூட்டர், செல்போன் வரிகள் பாதியாக குறைப்பு. பங்குச் சந்தையில் ஈட்டும் லாபத்துக்கு வரி இல்லை. வங்கிகளில் யார் வேண்டுமானாலும் ஜாமீன் இல்லாமல்  10 லட்சம் வரை 6 சதவீத வட்டியில் தனிநபர் கடன் பெறலாம். எந்த ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை…இது போன்ற புரட்சிகரமான அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால், அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் ஆவேசமாக விமர்சிக்கும். இந்திய பொருளாதாரம் இனி அவ்வளவுதான் என்று தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர்கள் குமுறுவார்கள். மக்கள் மனதை மன்மோகன் அரசு எப்படி புரிந்து கொண்டிருக்கிறது, பாரென்று நடுத்தர வர்க்கம் கரகோஷிக்கும்.எவருக்கும் அந்த வாய்ப்பை அளிக்காமல் ஏமாற்றி விட்டார் நிதியமைச்சர் சிதம்பரம். அவர் சமர்ப்பித்த எட்டாவது பட்ஜெட்டை பாராட்டுவதா கண்டிப்பதா என்று தெரியாமல் எதிர்கட்சி தலைவர்கள் தவித்தினர். ஏன் சிதம்பரம் இப்படி செய்திருக்கிறார் ?. இங்கே தான் அவரது அனுபவமும், சாணக்கியம் வெளிப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் எதிர் பார்க்கபடும் வருவாய் 10.56 லட்சம் கோடிகள். இது கடந்த ஆண்டின் பட்ஜெட்டைவிட 1.84 லட்சம் கோடி அதிகம். ஏற்கனவே துண்டுவிழுந்திருக்கும் பகுதியையுடன் இந்த நிதியாண்டின் செலவுகளை சமாளிக்க இந்த வருவாய் போதாது. அதனால்  எந்த பாப்புலர் திட்டத்தை அறிவித்தாலும் செய்ய முடியாது எனபதை உணர்ந்து  குறிப்பிட்டு சொல்லுகிற மாதிரி வரிகள் விதிக்காமல் 18000 கோடி வருமானத்திற்கு வழி வகுத்திருக்கிறார். இந்த சாமர்த்தியம் பாராட்டபடவேண்டிய விஷயம். ஆனால் இதன் மேலும் துண்டுவிழப்போகும் பணத்தை எங்கிருந்து கொண்டுவரபோகிறார் என்பது அமைச்சர் மட்டுமே அறிந்திருக்கும் சிதம்பர ரகசியம்.
புரியம் கனவுகளும் புரியாத கணக்குகளும்
வரும் நிதியாண்டில்  நாட்டின் பல இனங்களில் அடையக்கூடிய வளர்ச்சி வீதங்களை பொருளாதார வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் செய்யபடும் கணிப்பு இது. இது பல முறை தவறாகவும் ஆகியிருக்கிறது. ஆனாலும் கணக்கிடும் முறைகளுக்கும் வரிவிதிப்புகளுக்கும் இது தான் அடிப்படையாக உதவுகிறது. இதன் படி வரும் ஆண்டில் வளர்ச்சி 5% வீதமாகவும், பணவீக்கம் 8% வீதமாகவும் இருக்கும் என மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த அளவுகள் சரி என்று ஏற்றுகொண்டால் வரிகள் மூலம் 13% தான் அதிகமாக கிடைக்கும், ஆனால் அமைச்சர் திட்டமிட்டிருப்பது 20% அதிக வரி வசூல். எப்படி இது சாத்தியம்? என்று தான் புரிய வில்லை.
 இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு, உரம்,எரிபொருள் இவற்றிற்காக ஒதுக்கபட்ட மான்யம் 5.92 லட்சம்கோடி, ராணுவத்திற்கு ஒதுக்கபட்டிருப்பது 2.04 கோடி. ஆக இதற்கு மட்டுமே தேவையானது 7.96 லட்சம் கோடிகள். வரிகள் மூலம் எதிர்பார்க்கபடுவது 10.56 லட்சம் கோடி. இதில் நிதிகமிஷனின் சிபார்சின் படி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பிடுகளை கழித்தால்  மீதமிருக்கபோவது 88000கோடிகள் மட்டுமே. இதைவைத்துதான் மற்ற திட்டங்கள் அரசின் செலுவினங்கள் எல்லாம் சமாளிக்க பட வேண்டும்.  நிச்சியமாக புதிய கடன் சுமைகளை ஏற்றாமல் இது முடியாது. இந்த பட்ஜெட்டில் நம்முடைய தற்போதைய கடனுக்கு வட்டியாக  கட்டவேண்டியதாக காண்பிக்கபட்டிருப்பது 3.71 லட்சம் கோடிகள். இது இன்னும் உயர்ந்தால் எப்படி பணவீக்கம் குறையும்? நாட்டின் வளர்ச்சிவீதம்  எப்படி அதிகரிக்கும்?. நிதி வர்த்தகம் என இரு பிரிவிலும் பற்றாகுறை பயமுறுத்தும் இந்த நேரத்தில்  சிதம்பரம் எந்த தைரியத்தில் செலவுகளை அதிகரிக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சிக்கனம் பற்றி அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வரும் நிதியமைச்சர், விவசாயம் ஊரக வளர்ச்சி ராணுவம் போன்ற துறைகளுக்கு இவ்வளவு தாராளமாக  ஒதுக்குவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராணுவ துறையில் ஊழலின் நிழல் நீளமாகிகொண்டுவரும், ஊரக வளர்ச்சி திட்ட்தின் ஒரு அங்கமான 100 நாள் வேலை திட்டம் கடுமையாக விமர்சிக்க படும் இன்றைய சூழல்நிலையில் இத்தகைய அறிவிப்பு ஆச்சரியைத்தான் தருகிறது. மேலும்  வருவாயை அதிகரிக்க அவர் அறிவித்திருக்கும் திட்டங்களும் நம்பிக்கை தருவதாக இல்லை. பொதுத்துறை பங்குகளை விற்றும் டெலிகாம் லைசன்ஸ் கட்டணங்கள் மூலமும் திரட்டக்கூடிய தொகையாக ஆண்டைவிட இரு மடங்கு வருமானம் கிடைப்பது நிஜமாகப் போவதில்லை என்பது நிச்சியம்.வருமான வரி விலக்கு வரம்பு ஒரு அங்குலமாவது உயரும் என்று சம்பளதாரர்கள் வழக்கம்போல எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு 2,000 இனாம் வழங்கிவிட்டு, கோடீஸ்வரர்கள் பாக்கெட்டில் கைவைத்துள்ளார்.
நாட்டில்  ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு (சூப்பர் ரிச்)  10 % கூடுதல் வரி என அறிவித்திருக்கிறார். ஆனால்  அவர்களின் எண்ணிக்கை வெறும் 42,800 என்ற சொல்லபட்டதுதான் ஆண்டின் நல்ல ஜோக். அதைவிட சிறந்த ஜோக் ”சூப்பர் ரிச்சுக்கு வரியை ஏற்றி சமானியனுக்கு எந்த வரியும் போடத பட்ஜெட்” என மீடியாக்கள் வர்ணித்ததுதான். பட்ஜெட்க்கு முன்தினம் நிதி அமைச்சகம் அவர்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டிருக்கும் நாட்டின் தற்போதைய பொருளதார நிலைமையை விளக்கும் அறிக்கையில் நாட்டில் 5 கோடிக்கு மேல் நிகர மதிப்பாக சொத்து வைத்திருப்பவர்கள் (அறிவிக்க பட்ட கணக்கின்படி) 1,25,000பேர்கள்  என்றும் மிக விலையுர்ந்த ஆடம்பரகார்களின் விற்பனை கடந்தஆண்டு 27000 எனவும் சொல்லுகிறது. இதை அடிப்படையாக எடுத்துகொண்டால் கூட1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் நிச்சியம் அதிகம் இருப்பார்கள். மேலும் இவர் கண்க்கின் படி 40000 பேர் என்று வைத்துகொண்டால் கூட இந்த கூடுதல் வரிமூலம் எவ்வளவு அதிகம் திரட்டி விட முடியும்.? அவர்களுக்கு ஒரு கோடிக்கு சற்றே குறைவாக வருமானத்தை காட்ட சொல்லிகொடுக்கூடிய ஆடிட்டர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்.?
பட்ஜெட்டினால பலனே இல்லயா?
பட்ஜெட்டை ஆழந்து நோக்கினால் நாட்டின் எதிர்காலபொருளாதார நிலை ஆபத்தான் கட்டத்திற்கு போய்கொண்டிருக்கிறதோ? என்ற அச்சத்தை தான் தருகிறது  வரும் ஆண்டுகளில் அதிக அளவில் கடன் சுமை நிச்சியமாக அதிகரிக்க போவதையும் அது நாட்டின் வளர்ச்சி வீதங்களை பாதிக்க போவதையும் மறைமுக அபாய அறிவிப்பாக இந்த பட்ஜெட் சொல்லுகிறது.
 கட்டமைப்பு துறைகளை அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிட்டால் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறார்.அமைச்சர். பொருளாதார மற்றும் , சமூக ரீதியாக எழும் இதன் பின் விளவுகளின் தாக்கம் நீண்ட நாட்கள் இருக்கும் என்பது அவருக்கு புரிந்திருந்தாலும் இதை செய்தே ஆக வேண்டிய அரசியல் நிர்பந்தத்தினால் இதை அறிவித்திருக்கலாம்.
பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் வங்கி துவங்குவதைஅறிவித்திருக்கிறார். எந்தவித பயனையும் அளிக்க போகாத ஸ்ட்ண்ட் இது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் சேர்மன் ஆக பதவிஉயரும் அளவிற்கு வஙகிகளில் திறமையான பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. வங்கிகள் மூலம் உதவி பெற்ற பல கோடி பெண் பயனாளிகள் இருக்கிறர்கள். நாடாளுமன்றத்தில் இன்னும் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கிட்டை சட்டமாக்க முடியாத நிலையையில் நாங்கள்தான் பெண்களுக்காக இதை செய்தோம் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்து கொள்ள வேண்டுமானால் பயன் படுமே தவிர பெண்களின் வாழ்க்கை தரம் உயர இது தனியாக பெரும் அளவில் உதவ போவதில்லை..
 பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பு,.
‘‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
 தூக்கங் கடிந்து செயல்‘‘
என்ற திருக்குறளை வாசித்தார் அமைச்சர் சிதம்பரம்.
தெளிவுடன் செய்யத் துணிந்ததைக் காலம் நீட்டாமல், தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.
இதை சரியாகத்தான் செய்திருக்கிறார் சிதமபரம்.
செய்ய துணிந்திருப்பது வருமானத்தை பெருக்க வழிகள் சொல்லாது, 
காலம் கடத்தாமல் உடனே செய்திருப்பது செலவுகளை அதிகரித்திருப்பது.


உரையின் இறுதியாக, ”நீங்கள் விரும்பும் வலிமையும், உத்வேகமும் உங்களுக்குள்தான் இருக்கிறது, ஆகவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள்” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தையும் எடுத்துக்கூறினார் 
உண்மைதான் இம்மாதிரி தொடர்ந்து துண்டுவிழும் மோசமான பட்ஜெட்களையும் அதனால் ஏற்படும் கடன் சுமைகளினால் உருவாகும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளையும் சந்திக்கும் வலிமை   சாமனிய இந்தியனுக்குதானே உண்டு.

3/4/13

நீங்களும் ஜெயிக்கலாம்


புதிய தலைமுறையில்
எழுதிகொண்டிருக்கும்
 கட்டுரைக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.
இந்த வாரம் அவர்கள் இன்பாக்ஸ்ஸில் 
 வெளியாகியிருக்கும் கடிதம் இது







28/3/13

புதிய போப்பின் முன்னே நிற்கும் ”பழைய” பாவங்கள்


காதலின் வெற்றிக்காக மகுடம் துறந்த மன்னர்களை சரித்திரம் நமக்கு சொல்லியிருக்கிறது. காதலில் தோற்றதால் மன்னராகும் வாய்ப்பு பெற்றவர் இப்போது தேர்ந்தெடுக்கபட்டபட்டிருக்கும் புதிய போப்.. உலகின் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான இவர் உலக நாடுகளால் வாடிகன் நாட்டின்  மன்னராக மதிக்கபடுபவர்.  போப் என்பவர் உலகம் எல்லாம் பரவிக் கிடக்கும் கத்தோலிக்கத் திருச்சபைகள், அதன் சொத்துக்கள், அதிகாரங்கள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒரே குடைக்குள் வைத்திருக்கும் மாபெரும் பதவியிலிருப்பவர். இந்த பதவியிலிருந்த போ பெனிடிக்ட் XVI தன் உடல் நிலையை காரணம் காட்டி பதவி விலகபோவதாக அறிவித்தார். உலகின் மிகப் பெரிய மதப் பிரிவான கத்தோலிக்கர்களின் சக்தி வாய்ந்த தலைமைப் பதவியிலிருந்து. கடந்த 600 ஆண்டுகளில் இவ்வாறு எவரும் பதவி விலகியதில்லை.  அந்த பதவிக்கு திருச்சபை மரபுப்படி, உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த, 115 கார்டினல்கள் பங்கேற்ற கூட்டத்தில் தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவை சேர்ந்த, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ, (வயது76,) புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் 16 வயதில் பக்கத்துவீட்டு பெண்னை காதலித்தார், உன்னை மணக்க ஆசைப்படுகிறேன். நீ சரி என்றால் மணப்பேன். இல்லையெனில், பாதிரியாராகி, மத சேவையில் ஈடுபடுவேன் எனகடிதம் எழுதியிருந்தார். காதலை அந்த பெண் ஏற்ககாதால் சொன்னபடியே பாதிரியார் ஆகி நாட்டின் தலமை ஆர்ச் பிஷப் வரை வளர்ந்து கார்டினலாக உயர்ந்து இன்று போப்பாகியிருக்கிறார்.

போப் பெனிடிக்டின் பதவி விலகலுக்கு  காரணம் அவரது உடல் நிலையில்லை வேறு பல காரணங்கள்  இருக்கிறது என்கிறது இப்போது கசியும் வாட்டிகன் அரண்மனை ரகசியங்கள்.

வத்திகான் லீக்சின் எதிரொலி:  போப் பதினாறாம் பெனிடிக்ட் தமது பதவியை ராஜினாமா செய்யபோவதாக செய்த அறிவிப்பு இதகத்தோலிக்க மதகுருமார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உலகின் பல  கத்தோலிக்கத் திருச்சபைகளில் இலை மறை காயாக நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் பலவும் அண்மையக் காலமாக வெளி வரத் தொடங்கி விட்டன. அத்துடன் வத்திகானின் சொத்துக்களைக் கைப்பற்றுவதில், அதிகாரங்களைத் தக்க வைப்பதில் வத்திகானுக்குள் நிகழும் அதிகாரப் போட்டிகள், அரசியல் விளையாட்டுக்கள் போன்றவற்றை  தொகுத்து ''வத்திகான் லீக்ஸ்'' என்ற தொகுப்பு கடந்த ஆண்டு வெளி வந்ததுதொடர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு பணங்களையும் ரகசியமாகப் பல மதக்குருமார்கள் தமது ரகசிய வங்கி கணக்கில் மாற்றிக் கொண்டனர் எனவும், பல இளம் வயதினர் மீது பாலியல் துன்புறுத்தல்களை பல மதக்குருக்கள் செய்கிறார்கள்  பல வத்திகான் மதக்குருமார்கள் ஓரின சேர்க்கை பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் பாதிக்க பட்டவர்கள்,சொல்லகூடாது என  மிரட்டபடுகிறார்கள் என்று  செய்தியை பத்திரிக்கையாளர் கார்லோ அப்பாதே  வெளியிட்டபோது உலகம் திடுக்கிட்டது. இதைத்தொடர்ந்து போப் வாட்டிகனின் தலமை ஆட்சி குழுவான கீயூரியா(curia)  என்ற சபையில் விஷயம் பல நாட்கள் விவாதிக்கபட்டிருக்கிறது. இதன் உறுப்பினர்கள் 80 வயதை கடந்த சீனியர் கார்டினல்கள். போப்பையே ஆட்டிவைக்கு வலிமை வாய்ந்தவர்கள்  இந்த கூட்ட முடிவுகள் ரகசியமானவை. குறிப்புகள் பலவும் போப்பினால் எழுதப்பட்டவை, திருச்சபையின் முக்கிய அங்கத்தனர்களால் பரிமாறிகொள்ளப்பட்டவை. இவைகளை போப்பின் முதன்மை பணியாளராக இருந்த பாலோ காப்பிரியல் என்பவர் திருடி வெளியிட்டு விட்டார் என்று  கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 18 மாதம் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.  இந்த கைதும் தண்டனையும்  வெளீயான செய்திகளில் உண்மையில்லாமல் இல்லை என்பதை உணர்த்தியது. இத் தகவல்கள் வெளியாவதின் பின்னணியில் பல முக்கியக் கத்தோலிக்க மதக் குருக்களும் இருக்கிறார்கள் என்பது பரவலான நம்பிக்கை.


. தொடர்ந்து எழுந்த அலை வாத்திகன் பாங்க் சம்பந்தபட்டது. வாத்திகனுள்ளே மட்டும் இயங்கும்  இந்த வங்கியின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருந்ததில்லை.  ஐரோப்பிய யூனியனின் கூட்டமைப்பின்  தலமை வங்கி இந்த வங்கி மூலம் நடைபெற்று கொண்டிருக்கும் சர்வ தேச பரிமாற்றஙகளின் விபரத்தை கேட்டபோது  தர மறுத்து விட்டது.  இப்போது விபரங்கள் சொல்லபடாவிட்டால் ஐரோப்பாவின்  வங்கிகள்  அனைத்தும் உங்களுடன் உறவுகள் வைத்துகொள்ள கூடாது என ஆணையிடுவோம் என்று காலகெடு தந்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.
 இண்டிபெண்டெண்ட் என்ற பிரபல தினசரி  வாத்திகன் பற்றிய தொடர் கட்டுரையை வெளியிட துவங்கியிருக்கிறது. முதல் பகுதியில் வந்த செய்தி அதிர்ச்சியானது. ஐரோப்பவின் மிக பெரிய ஆடம்பரமான ஓரினசேர்க்கை விரும்பிகளின் கிளப் இருக்கும்  வளாகத்தில் வாத்திகன் 23 மில்லியன் டாலர்களுக்கு பங்குகள் வாங்கியிருக்கிறது.  வாத்திகனால் நியமிக்கபட்ட மத பிராசகர்கள்  கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர்  கார்டினல் இவான் டைஸ்.  இவர் மும்பாயின் முன்னாள் ஆர்ச் பிஷப். இவருக்கு சர்ச்களின் இளவரசர் என்ற பட்டமும் உண்டு.  இவருக்கு 12 அறைகள் கொண்ட ஒரு ஆடம்பர பிளாட் அந்த கட்டிடத்தில் இருக்கிறது இவர் வீட்டிலிருந்து கிளப்பிற்கு வழியும் இருக்கிறது. இவர் மட்டுமில்லை இவர் போல் 18 பாதிரியார்களுக்கு அந்த கட்டிடத்தில் பிளாட்கள் இருக்கின்றன. என்கிறது அந்த கட்டுரை.  டைஸ் “ நான் அவர்களை போதனைகள் மூலம் மனம் மாற்றி திருத்த முயற்சிக்கிறேன்” என்று சொல்லுவதை யாரும் காதில் போட்டுகொள்ள வில்லை.
இந்த சூழ்நிலயில் முன்னாள் போப்  பெனடிக் 80 வயதுக்கு மேற்பட்ட 3 கார்டினல்கள் கொண்ட  ஒரு கமிட்டியை அமைத்தார். அவர்கள் தந்த ரிப்போர்ட் ”சொல்லபடுவதில் பல உண்மையானவை தகுந்த நடவடிக்கை எடுத்து திருச்சபைக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்க வேண்டும்..”ஆனால் எந்த நடவடிக்கையும் கூடாது என அழுத்தம் தந்தது வலிமை வாய்ந்த கீயூரியா. பொறுத்து பார்த்து வெறுத்துபோய் ராஜினிமா செய்ய முடிவெடுத்தார். இதற்கு முக்கிய காரணம் அவ்ரது ராஜினாமாவால்  கீயூரியா உறுப்பினர்களும் ;பதவியிழப்பார்கள். புதிய போப்   கீயூரியா சபையின் உறுப்பினர்கள் புதிதாக நியமிப்பார்.  கீயூரியா உறுப்பினர்களை தன் ராஜினாமாவால் இப்படி தண்டித்த அவர்  சிறைக்கு நேரில் சென்று  தண்டனை அனுபவித்து கொண்டிருந்த  தன் உதவியாளர் பாலோ காப்பிரியல் லை  மன்னித்து ஆசிகூறி விடுதலை செய்துவிட்டார்.

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறார் .இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்  மிகவும் எளிமையானவர் என்று 
அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில் ஏறிதான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்றும்
ஆர்ச்பிஷப்பாக இருக்கும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் சொல்லபடுகிறது. போப்பாக தேர்ந்த்டுக்கபட்டவுடன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பில்கொடுத்துவிட்டு பஸ்ஸில் மற்ற கார்டினல்களுடன் போப்பின் அரண்மனைக்கு போயிருக்கிறார்.
புதிய போப்பாண்டவர் தனது பெயராக பிரான்சிஸ் என்பதைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால் ஒரு எண் இருக்கும். அதாவது 2ம் போப் ஜான் பால், 16ம் பெனடிக்ட் என்று. ஆனால் தற்போது தேர்வாகியுள்ள ஜார்ஜ் தேர்வு செய்துள்ள பெயர் பிரான்சிஸ்.
இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி எண் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும். பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்த்டுத்தற்கு இவர்  சொன்ன காரணம். யேசுவின் சீடரான பிரான்சிஸ் ஒரு ஏழை, எளிமையாக வாழ்ந்து ஏழைகளுக்கு உதவியவர்.  நமது சர்ச்கள்  அதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது.
தவறை உணர்ந்து வருந்தி கேட்பவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் அதிகாரம் திருச்சபைகளுக்கு உண்டு. இந்த போப் அதைசெய்யபோகிறாரா? அல்லது தனக்கு முந்தியவர் முடிக்காமல் போன நிர்வாக பணியான தவ று செய்தவர்களுக்கு தண்டனைகளை அளிக்கபோகிறார? உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.



  • *
  •