அதிரடி அறிவிப்பு மன்னராகவே ஆகிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், “அமெரிக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை அறிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே காட்டி வருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்த இயலாததாகக் கூறப்படும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைச்சுவர் விவகாரம், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் நீதித்துறையின் மீது வெறுப்புணர்வு, போன்ற அறிவிப்புகளின் பட்டியலில் லேட்டஸ்ட் இது.
அதிவேகமாக மோசமடைந்துவரும் புவியின் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகச்சொல்லும், உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த அறிவிப்பில் அவர் இந்தியாவைக் குறிப்பாக தாக்கியிருக்கிறார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோபத்தைப் புரிந்துகொள்ள பாரிஸ் காலநிலை உடன்படிக்கை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது.
நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயருதல், பேய் - மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை பல வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்டப் பேரவையானது
(United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992-ம் உருவாக்கப்பட்டது. இது, தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆம் 23 ஆண்டுகள் ! உலக நாடுகளுடன் பல நகரங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்திவந்தது. ஒரு நாட்டின் கருத்தை சில அல்லது பல நாடுகள் ஏற்காமல் தொடர்ந்து அடுத்தடுத்த மாநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட விஷயம் இந்த காலநிலை உடன் படிக்கை. 2015ல் பாரிஸில் 7 நாட்களுக்குத் திட்டமிட்டு 11 நாட்களாக நீடித்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த காலநிலை மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க “பாரிஸ் உடன்படிக்கை” உருவானது. அது உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. வளரும் நாடுகளின் சார்பாக வாதிட்ட இந்தியா வளர்ந்த நாடுகள் எப்படிச் சூழலை மாசு படுத்தியிபின் வளரும் நாடுகளின் மீது கட்டுப்பாட்டை கொண்டுவருகிறது என்பதையும். இதைச் செயலாக்க வளரும் நாடுகளுக்குக் கொடுக்க வளர்ந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வாதாடி வென்றது.
குறிப்பாகப் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கவேண்டும் என்பது இந்த உடன் படிக்கையின் முக்கிய அம்சம்.
இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸைத் தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கியக் காரணமான வாயுக்களை வெளியிடும் அளவைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன. இதன் படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
.இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும்.. வரைவு ஒப்பந்தத்தில் சொல்லியிருந்த படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்பதை ஏற்றால் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்த அளவைக் குறைக்க வற்புறுத்தின. இறுதியில் அதை 1,5 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்க ஒப்புக்கொண்டன.
அந்த. மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை இந்தியா உள்பட 195 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. “இந்த உடன்பாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது” என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டி. “அனைவரும் ஒன்றானால் என்ன நடக்கும் என்பதை நாம் உலகிற்குக் காட்டியுள்ளோம்” என்று பெருமையுடன் அறிவித்தார். தொடர்ந்து நாடுகள். அதிகாரப்பூர்வமாக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்திலிருந்தான் விலகுவதாக இப்போது அறிவித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்தத் தீர்மானத்தினால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்பது அவரது கணிப்பு. மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பது தடுக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்களை நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்று, 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்கிக் கொண்டுவிடும் என்பது தான் அவரின் கோபத்துக்கு காரணம் இப்படி இந்தியாவின் மீது இருக்கும் வெறுப்பும், அதற்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற நிலையும் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு காரணம். .
வளர்ந்த நாடுகள் செலுத்தப்போகும் பணம் அவர்கள் சுற்று சூழலின் வெப்பளவை இதுநாள் வரை தொடர்ந்து அதிகரித்தற்காக தரும் ஈடுதான் என்ற புரிதல் அவருக்கு இல்லை எனச்சொல்லிவிட முடியாது.. அதிபர் தேர்தலுக்கு பல நாள் முன்னரே அவர் தனது டிவிட்டரில் பாரிஸ் மாநாட்டைக் கடுமையாக சாடியிருக்கிறார். தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தார். ஆனால் அவருடைய தேர்தல் அறிக்கையை பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த அறிவிப்பைப் பல உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமில்லை அமெரிக்காவின் கூகுள். மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் கண்டனம் செய்திருக்கின்றனர். அவரது கட்சியின் அறிவு ஜீவிகளும் எதிர்க்கிறார்கள்.
ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் எழும் இந்த மாதிரி உடன்படிக்கைகளிலிருந்து கையெழுத்திட்ட நாடுகள் வெளியேற விரும்பினால் அதற்கான விதிமுறைகளையும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். அதன் படி இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமானால் அதற்கான ஒராண்டு நோட்டிஸையே 2019 நவம்பரில் தான் கொடுக்க முடியும். அதற்கு ஒராண்டுக்குபின்னர் அதாவது 2020 நவம்பருக்குப் பின்னர்தான் வெளியேற முடியும். டிரம்பின் பதவிக்காலம் 2020 நவம்பர் 4 வரைதான்.
இது அவருக்குத் தெரியாதா? இதுமட்டுமில்லை. தெரிந்த விஷயங்களையும் தெரியாத மாதிரி அறிவிப்பது தான் அதிரடி அரசியல் என்பதும் அதிபருக்குத் தெரியும்.