24/9/17

புத்தக் வெளியீடுஎனது புத்தக வெளியிட்டு விழாவை நண்பர் விஜயன் காணிளியாக்கி யூ டுயூபில் வெளியிட்டிருக்கிறார்.  இங்கே அதப் பார்க்கலாம். 

18/9/17

பெட்ரோல் விலை ஏன் உயர்ந்துகொண்டே போகிறது?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பேரல் 109.05 டாலராக இருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இது வெறும் 28.12 டாலராக சரிந்தது. அதன்பிறகு தற்போது ஒரு பேரல் கடந்தமாத  நிழைவு வரி 

13/9/17

விற்கப் படும் வீரப்பதக்கங்கள்தலை நகரில் குடியரசு தின அணிவகுப்புக்கு முன்னர் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் உயரிய கெளரவமான பரம வீர் சக்ரா. வீர்சக்ரா போன்ற பதக்கங்களை வழங்கும்போது, அவற்றை அதிகாரிகள் பெருமிதத்தோடு பெறும் கம்பீரமான காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இந்த உயரிய விருது பதக்கங்களைத்தவிர 10 விதமான பதக்கங்களை நமது ராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வழங்குகிறது இந்திய அரசு என்ற செய்தியை நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

ஆனால் அதிர்ச்சியான செய்தி இந்தப் பதக்கங்கள் கடைகளில் விற்கப்படுகிறது என்பதுதான். செகந்திரா பாத் நகரில் லால் பஸார் என்ற பகுதியில் மிலிட்டிரி லேன் என்றழைக்கப்படும் ஒரு சிறிய சந்திலிருக்கும் கடைகளில் இந்திய ராணுவம் தரும் எந்தமெடலும் விலைக்குக் கிடைக்கிறது. மெடல்கள் மட்டுமில்லை ராணுவ அதிகாரிகள் தோள்பட்டையில் அணியும் அந்தஸ்த்தை குறிக்கும் ஸடார்கள், பட்டைகள் எல்லாமே கிடைக்கிறது. 2500 ரூபாய்களில் ஒரு ராணுவ அதிகாரி தன் வீர தீரச் செயல்களுக்காகப் பெறும் அத்தனை மெடல்களுடன் அதிகாரி அணியும் யூனிபார்மே கிடைக்கிறது.

1999 கார்கில் போர் ஆப்ரேஷன் விஜய் யில் பங்குபெற்றதற்கான மெடல் 40ரூபாய், சியாச்சின் பனிச்சிகரங்களின் பணியிலிருந்ததற்காகத் தரப்படும் உச் துங்கட்டா மெடல் 40 ரூபாய், மிகச்சிறந்த பணிக்கான மெடல் ரு 180 என விலைபட்டியலைப் பார்த்துசொல்லுகிறார்கள். மெடல்கள் ஷோ கேஸ்களில் காட்சிக்கு வைக்கபடவில்லையே தவிர, மருந்துக்கடை களிலிருப்பது போல அட்டைப்பெட்டிகளில் போட்டுப் பெயர் எழுதி அடுக்கி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மெடல் வேண்டும்? எனக் கேட்டுத் தருகிறார்கள். மெடல்கள் கோர்க்கபட்டிருக்கும் ரிப்பன்களின் கலரும் டிசைனும் அது எந்த வகை மெடலை சேர்ந்தது என்பதைச்சொல்லும். எல்லா நேரங்களிம் மெடல் அணிய முடியாதாகையால் இந்த ரிப்பன் வண்ணங்களை ஒரு குறிப்பிட்ட அளவில் பேட்ஜ்களாக அணிவார்கள். இதை அதிகாரிகள் யூனிபார்ம் அணியாத போதும் அணிந்துகொள்வார்கள். அந்த மாதிரி பேட்ஜ்களூம் கிடைக்கிறது.
யார் இதை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு—“நமது வீரர்கள் தான்” என்று வந்த பதில் நமது அதிர்ச்சியை அதிகபடுத்துகிறது. விருது பெற்ற வீரர்கள் அதை ஏன் இவர்களிடம் வாங்குகிறார்கள்?,

ராணுவத்தில் ஆண்டுதோறும் சிறந்த சேவைக்காக, திறமையான பணிக்காக என பல மெடல்கள் அறிவிக்கபட்டாலும், அந்தக் கடிதமும், சிலசமயம் அதற்கான பணப்பரிசும் அந்த வீரர்களுக்கு அனுப்பபடும். ஆனால் மெடல்கள் அவர்களுக்கு அளிக்கத் தாமதம் ஆகும். சில சமயங்களில் ஆண்டுகள் கூட ஆகிவிடுமாம். 10  ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கபட்ட மெடல்கள் இன்னும் கொடுக்கபடவில்லையாம்.  
 இந்த மெடல்களில் ராணூவத்தினரின் பெயரோ அலலது நம்பரோ பொறிக்க பட்டிருக்காது. பணப்பரிசை விட மெடல் அணிந்துகொள்வதை பெரிய  கெளவரமாகக் கருதுவதால் வீரர்கள் இந்த மாதிரிகடைகளில் கிடைக்கும் டூப்பிளிகேட்களை வாங்கி அணிந்து கொள்கிறார்கள். 
இதை டூப்பிளீகேட் எனச்சொல்லக் கூடாதாம். இவற்றிற்கு “டெயிலர் காப்பி” என்று பெயர் என்ற கடைக்காரர்களிடம் இதற்கு அவர்களுக்குரிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் மழுப்புகிறார்கள். ஒரு கடைக்காரர் யூனிபாரம் தைத்து விற்க அனுமதியிருக்கிறது. மெடல்களும் யூனிபார்மின் ஒரு பகுதிதானே என்றார். வாங்குபவர்கள் ராணுத்தினரா? என்று கூடக் கேட்பதில்லை
.
ஒரு கடையில் சில ஓரிஜனல் மெடல்களையும் விற்கிறார்கள். பஞ்சாப் மாநில போலீஸின் விருதான ஸ்பெஷல் டுயூடி மெடலை அதனுடைய பெட்டியுடன் காட்டினார்கள்.
 சரியான போர்டு கூட இல்லாத கடைகளில் இப்படி விற்கிறார்களேயென ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியிடம் கேட்டபோது, “நமது மெடல்களை தயாரிப்பது அரசின் மின்ட் தான். அவர்களால் ஒரே நேரத்தில் பல மெடல்களை உரிய நேரத்தில் தயாரித்துக்கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த மெடல்களை தயாரிக்கும் மோல்ட்களை தயாரித்து இப்படி மெடல்களைச் செய்யும் ஒரு நிறுவனம் பஞ்சாபில் துவங்கியது. இவைகள் மிகவும் மலிவான உலோகங்களில்  கனம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். ராணுவத்தினருக்கு அது ஒரிஜினல் இல்லை என்பது எளிதாகத் தெரிந்துவிடும்.
இப்போது பெரிய பிஸினஸ் ஆகி விட்டது. சில சமயம் அரசின் முடிவுகளும் காரணம். இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டுவிழா நினைவாக இந்திய ராணுவத்திலிருக்கும் அனைவருக்கும்  மெடல் என்று அறிவிக்கபட்டது. அதை எல்லோருக்கும் வினியோகிக்க 5 ஆண்டுகள் ஆனது. அதற்குள் சிலர் ஓய்வே பெற்றுவிட்டார்கள்.பலருக்கு போயே சேரவில்லை. இது போலச் சில குழப்பங்கள் என்ற அவர். இந்த ஒரிஜினல் மெடல்களை நீங்கள் ஆன்லைனிலேயே கூட வாங்கலாம்” என்றார்
.
ஆச்சரியப்பட்டு இணையத்தில் தேடியபோது  இந்திய சுதந்திர 50ஆம் ஆண்டு மெடல்  360 ருபாய்க்கும் மற்றொரு நிறுவனத்தில் அதைவிட 10 ரூபாய் குறைவாகவும் கிடைக்கிறது. இதைத்தேடும்போது பார்த்த  மற்றோரு விஷயம் இ பே என்ற ஆன்லைன் நிறுவனம் இந்திய ராணுவ  மெடல்களை ஏலத்தில் விற்கிறது. ஒன்பது வெவ்வேறு மெடல்கள் அடங்கிய ஒரு மெடல் பார் ரூ 3500 என்று ஒரு நிறுவனம் விலை சொல்லுகிறது.
 அதிகாரிகளின்பெயர்களுடனும் நம்பர்களுடனும் உள்ள ஒரிஜினல் மெடல்களுக்கு அமெரிக்க டாலரில் விலைபட்டியலிட்டிருக்கும் இ பே அவற்றை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது
.
“பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் மெடல்களை எந்த ராணுவ வீரனும் விற்க மாட்டான். அவன் உயிரைவிடவும் நேசிக்கும் விஷயம் அது. சில சமயங்களில் மரணத்துக்குப் பின் புதைக்கும்போது கூட அதை அணிந்த நிலையில் தான் புதைப்பார்கள். இப்படி விற்பனைக்குக்  கிடைப்பது திருடப்பட்டது அல்லது வீரர் இறந்த பின் எவரும் உரிமை கோராத தாக இருக்கும் என்கிறார். ஒரு மூத்த முன்னாள் ராணுவ வீரர்.

ராணுவத்தினருக்கு வெற்றி பதக்கங்கள் என்பது அவர்களின் சாதனைகளைப் பார்ப்பவருக்குச் சொல்லும் அடையாளம். சியாச்சின் பள்ளதாக்குகளின் பனிப்புயல்களிலும், இமயப்பகுதி எல்லைகளிலும் பலவிதமான இடையூறுகளுக்குமிடையில் தங்கள் சிறப்பான பணிக்காகப் பெறும் விருதுகளூம் பதக்கங்களும் அவர்களை உடனே அடைவதில்லை என்பது மிக வருத்ததுக்குரிய விஷயம்.
 எவ்வளவோ விஷயங்களை மாற்றத்துடிக்கும் இந்த அரசு இதையும் கவனிக்குமா?


2/9/17

100 வருடங்களாகத் தினமும் போட்டோ!

மெல்ல நம்மைத்தொட்டுச்செல்லும் இனிய தென்றலின் இதத்தில் வழியெங்கும் புன்னகைக்கும் பூக்களைப் பார்த்தவண்ணம் நடக்க பாதைகள். பசுமையாகப் பரந்திருக்கும் மலைசிகரங்களை தொட்டு மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேகங்கள். அமைதியாகயிருக்கும் அழகான ஏரி. வெள்ளிக்கம்பிகளாக அவ்வபோது பாய்ந்து கொண்டிருக்கும் மழைச்சாரல் என இயற்கை தந்த “கொடையாக” நாம் அறிந்திருக்கும் கொடைக்கானல் தான், கடந்த நூற்றாண்டில் விண்வெளி இயற்பியலில்(ஆஸ்ட்ரோபிஸிக்ஸிக்கில்) ஒரு மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்த இடம் என்பதும், அந்த வான் மண்டல கண்காணிப்பு தொலை நோக்கு நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி சூரியனின் நிலையைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியாத செய்தி
.
நாள்தோறும் ஆதவன் ஒய்வு இல்லாமல் தன் பணியைச்செய்வதைப் போல நிறுவப்பட்ட நாளிலிருந்து சூரியனை தினமும் படமெடுத்துகொண்டிருக்கும் இந்த வான் மண்டல கண்காணிப்பு மையத் (0bservatory).திற்கு வயது 118. உலகில் நிறுவப்பட்டஇடங்களிலேயே நிலைத்து தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 மையங்களில் இது முதன்மையானாது. 1899ம்ஆண்டு சூரிய மண்டலத்தை ஆரயாய நிறுவப்பட்ட இந்த நிலயத்திலிருந்தது தினசரி சூரியனை படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம்! 100ஆண்டுகளாக தினசரி சூரியனை படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருக்கும் பல வான் மண்டல ஆராய்ச்சியாளார்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
“ஓரு பேரிடரினால் சில நன்மைகளும் உண்டாகும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப 1890-95 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பின் விளவுகளில் ஓன்று தான் இந்திய வான் ஆராய்சி மையங்கள். கிழக்கிந்திய கம்பெனி தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்துகொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், எற்பட்ட மிக மோசமான பஞ்சத்திற்கு காரணம் தொடர்ந்து மழைபொய்த்ததும், அந்த நிலையை முன்கூட்டிய அறிய வாய்ப்பில்லாது போனதுதான் என்று உணர்ந்த நிர்வாகம் வானிலை ஆராய்சி நிலையங்களைத் துவக்கியது.


ஜான் எலியட் என்ற அதிகாரி கண்டுபிடித்த “தூசி மறைக்காமல் வானம் தெளிவாகத் தெரியக்கூடிய இடமான பழனி மலைத்தொடரின் இந்தப் பகுதி” தேர்ந்தெடுக்கபடுகிறது. பின்னாளில் இது சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டபின் இது சூரியனை ஆராயும் நிலையமாக மாற்றபட்டிருக்கிறது.


“இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 9ம் நாள் 1909 ஜான் எவர்ஷெட் சூரியனிலிருக்கும் கரும்புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட சுழற்சிமுறையில் உருமாறுவதை கண்டுபிடித்தார்” என்ற பதிவுக்கல் வரவேற்கும் அந்தச் சிறிய கூடத்திலிருக்கும் டெலிஸ்கோப் மூலம் தான் சூரியனின் படம் தினசரி பதிவு செய்யப்படுகிறது.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை உருமாறிக் கொள்வதும் அதன் விளைவாக நிகழும் மாற்றங்கள் தான் பருவ நிலை மாறக்காரணம் என்ற இவரது கண்டுபிடிப்பு “எவர்ஷெட் எபஃக்ட்’ என்ற அழைக்கப்படுகிறது. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தான் அடிப்படை.

வட்டவடிவ கட்டிடத்திற்கு கோளவடிவ ஹெல்மெட் போட்டதைப் போன்ற அமைப்பு. அந்தக் கோள வடிவ மேற்கூரையை நகரும் கதவுகளுடன் கோள வடிவத்தில் (2300ரிவிட்கள்!) அமைக்கவேண்டியிருந்த அந்தப் பணிக்கு உள்ளுரில் திறமையான தொழிலாளிகள் இல்லாதால் தானே தினந்தோறும் உழைத்து அமைக்கிறார் இதன் முதல் அதிகாரியான மைக் ஸ்மித்.


சுழுலும் சக்கர கைப்பிடிகளினால் எளிதாக இயக்கித் திறக்ககூடிய இந்தக் கதவுகள் இன்றும் இயங்குகிறது. சூரியன் நகரும் பாதையை நோக்கி மட்டும் திறக்கப்படும் இதன் கதவுகளின் வழியே டெலிஸ்கோப் சூரியனைபார்க்கிறது. 1901ல் நிறுவப்பட்ட 6” டெலிஸ்கோப் சிறந்த பாரமரிப்பினால் இன்றும் பணி செய்வதை விட ஆச்சரியம் அதன் மூலம் எடுக்கபட்ட அத்தனை படங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது தான்
1999ம் ஆண்டு இதன் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபொழுது உலகெங்குமிருந்து 50 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.எப்படி படமெடுக்கிறார்கள்?. சூரியனை கேமிரா வழியாகக் கூட நேரடியாகப் பார்க்கமுடியாது. அதற்காக ஒரு மூன்று அடுக்கு அமைப்பு. மேல் மாடியில் சூரியனைப்பார்க்கும் டெலிஸ்கோப் தான் பார்ப்பதை ஒரு வட்டகண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து அது 45 டிகிரி கோணத்தில் இரண்டாவது மாடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் தெரிகிறது.  அது மீண்டும் தரையின் கிழே பூமிக்கடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் பட்டு அதன் முன்னே 60 அடி தொலைவில் இருக்கும் ஒரு வெண்திரையில் பிரதிபலிக்கிறது. அதை அதன் முன் நீண்ட பாதையில் நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கேமிரா படம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூடத் தவறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கிராப் பேப்பர்களில் கோடுகளாகப் பதிவு செய்து கோண்டிருந்த இது இப்போது டிஜிட்டலாக்கபட்டு கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. 150 மில்லியன் கீமிக்கு அப்பால் இருக்கும்(ஒரு மில்லியன் 10 லட்சம்) சூரியனின் முழூ உருவத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கண் கூசாமல் பார்க்கிறோம்

.
இப்படி சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும் மையம் உலகிலேயே இது ஒன்று தான் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மைய இயக்குனர் திரு செல்வேந்திரன். விண்வெளியியலில் சிறப்புப் பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். மிக அழகாக நமக்கு எளிதில் புரியும்படி விளக்குகிறார். பென்சிலில் இடப்பட்ட புள்ளிபோல வெண்திறையில் நமக்குத் தெரியும் இந்தக் கருப்பு புள்ளிகள் தான் பிளாக் ஸ்பாட் எனப்படும் கரும்புள்ளிகள். ஒவ்வொன்றும் பூமியைவிடப் பெரிது என்கிறார்.
வளாகத்திலிருக்கும் கட்டிடங்களில் ஒரு சிறு நூலகமும், அருங்காட்சியகமும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களுக்கிடையே காடாக இருந்த இடத்தில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்ற பல தகவல்கள், ஓரு சுவையான நாவலைப் போல எழுதப்பட்ட பல குறிப்புகள்அடங்கிய புத்தகங்கள், 1000க்குக் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால் போதிய இடமில்லாதால் மேற்கூரை வரை அடுக்கியிருக்கிறார்கள் தேவயையானபோது பெரிய ஏணிகள் மூலம் எடுப்பார்களாம்

பல அரிய படங்கள் கருவிகளின் மாதிரிகள், படங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் மனமும் நேரமும் இருந்தால் நாள் கணக்கில் செலவழிக்கலாம்.


எல்லோருக்கும் டெலிஸ்கோப் இருக்கும் கட்டிடத்திற்குள் அனுமதி இல்லை என்பதால் அது எப்படி செயல் படுகிறது என்பதை இந்த அருங்காட்சியகத்தில் அதன் சிறிய மாதிரியை அமைத்து ஒரு சிறிய டெலிஸ்கோப் வழியாகச் சூரியனின் பிம்பத்தைக் காட்டி அருமையாக விளக்குகிறார்கள் திரு செல்வேந்தரனின் உதவியாளர்கள்.

சென்னை SIET கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தங்கள் நீண்டகால நட்பைக் கொண்டாட கொடைக்கானல் வந்த குழு ஒன்று கேட்ட கேள்விகளினால் நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கணிதத்துடன் வானியல் படித்தார்களாம். ஆர்வத்துக்கு வயது இல்லை என்பது புரிகிறது

.

வானியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு நடந்த இடம், 100 வருடங்களுக்கும் மேலாக ஆதவனை அலுக்காமல் பார்த்து உலகின் வானவியல் வித்தகர்களுக்குத் தொடர்ந்து புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரே இடத்தை நாம் பார்த்தோம் என்ற பெருமிதத்தோடு வெளியே வருகிறோம்.

 


24/8/17

“நீங்களும் ஜெயிக்கலாம்”-- மின் புத்தகம்

எனது “நீங்களும் ஜெயிக்கலாம்” புத்தகத்தை Free tamilbooks com மின்னூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
 நண்பர் திரு. அன்வருக்கும் திரு, ஶ்ரீநினிவாசனுக்கும் நன்றி. இரண்டு நாட்களில் தரவிறப்பட்டிருக்கும் எண்ணிக்கை 1000 நெருங்குகிறது என்ற விஷயம் மகிழ்ச்சியாகயிருக்கிறது. நீங்களும் இந்த சுட்டியின் மூலம் தரவிறக்கி படித்துப் பாருங்களேன். உங்கள் கணணி, போன்களுக்கு ஏற்ப தரவிறக்கம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

http://freetamilebooks.com/ebooks/neengalum-jeyikkalam/புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து...
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?
உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. 
பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் !

4/8/17

ஜெயமோகனின் வலைப்பூவில் கடைசிக்கோடு......ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன். இந்த கடைசி கோடு தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு] தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.................

கடலூர் சீனு 

திரு ஜெயமோகன் அவர்களின் வலைப்பூவில் அவர் எழுதும் கட்டுரைகள்,வெண்முரசு ( மஹா பாரதம்) தவிர அவருக்கு எழுதும் முக்கிய நண்பர்களின் கடிதங்களையும் வெளியிகிறார். சில கடிதங்கள் கட்டுரையாகவே அமைந்து எதிர்வினைகளையும் எழுப்பும். கடந்த வாரம் திரு கடலூர் சீனு என்னுடைய புத்தகமான கடைசிக்கோடு பற்றி ஒரு நிண்ட விமர்சனத்தையே  ஜெயமோகனுக்கே கடிதமாக எழதியிருக்கிறார். அதற்கு வந்த எதிர்வினகளுக்கும் பதில் தந்திருக்கிறார். திரு கடலூர் சீனுவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றி
  அதை இந்த சுட்டியில்  பார்க்கலாம்.
 படித்து பாருங்களேன்


26/7/17

ஒரு மஹாராஜா ஏழையாகிவிட்டார்.


உலகம் முழுவதும் உள்ள 41  நகரங்களையும் இந்தியாவில் 72 நகரங்களையும் இது இணைக்கும் ஏர் இந்தியாவின் மஹாராஜாவிற்கு சொந்தமாக 140 விமானங்கள் இருக்கின்றன. ஆனால் ஏர் இந்தியா நிறுவனம், 52,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஏர் இந்தியா ஈட்டும் வருமானத்தைவிட 300 – 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்கிறது.  இந்த நிலையில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் இயங்க முடியாது.
140 விமானங்கள், 2,000 விமானி¬கள், 2,000 தொழில்நுட்ப வல்லுனர்கள்,  விமானங்களை பழுதுபார்க்கச் சொந்த இடம், விமானங்களை நிறுத்துவதற்கு முன்னுரிமை என்று  மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தை சந்திக்கக் காரணம் என்ன?  சுருக்கமாகச் சொல்வதானால் சொல்லுவதானால் நிர்வாக குளறுபடி, அரசியல்வாதிகளின் தலையீடு, அதிகாரிகளின் மெத்தனம், போட்டி மனப்பான்மை இல்லாமல் இயங்கியது. தான்.
1990களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை மத்திய அரசு சரியாக திட்டமிட்டுச் செயலாற்றவில்லை.  குறிப்பாக, ஏர்இந்தியாவிற்குப் புதிதாக 26 விமானங்களை வாங்க வேண்டும் என அந்நிறுவனம் 1996இல் வைத்த கோரிக்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மத்திய அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.   இந்த காலகட்டத்துக்குள்   நாட்டின் மிகப்  பெரிய விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவின் வளர்ச்சி  உள்நாட்டுச் சந்தையில் 13 சதவீதமாகச் சுருங்கி விட்டது. ஜெட் ஏர்வேஸ்,  இண்டிகோ போன்ற தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி கண்டன.
தாமதமாக விமானங்கள் வாங்க முடிவு செய்தபோது அரசியல் விளையாடியது.  தேவைக்கு அதிகமாக விமானங்கள் வாங்கித்-தள்ளியது.. ஐ.மு.கூ.,வின் முதல் ஆட்சியில், 70,000 கோடி ரூபாய் செலவில், 111 விமா¬னங்¬களை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஏர் இந்தியா 33,197 கோடி ரூபாய் செலவில் 50 விமானங்கள் வாங்குவதற்கு, போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டது. கடன் வாங்கி விமானங்களை வாங்குவது, பின்னர் வருவாய் ஈட்டி கடனை திருப்பிச் செலுத்துவது என்பதே திட்டம். ஆனால், அது நடைபெறவில்லை.  மாறக கடன் தான் அதிகரித்தது.
இவ்வளவு விமானங்கள் வாங்கியதற்கு காரணம் தனியார் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த இந்தியன ஏர்லயன்ஸ்   நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைத்து ஒரே நிறுவனமாக்கியதனால்  என்று சொல்லப்பட்டது  ஆனால் விளைவுகள் வீபரிதமாக இருந்தது. 2002 – 03ல் இவ்¬விரு விமான நிறு¬வ-னங்¬களின் மொத்த நஷ்¬டம், 63 கோடி ரூபாய்¬ தான். ஆனால், 2010 – 11ல் அதுவே 7,000 கோடி ரூபா¬யைத் தொட்¬டது. அடுத்த ஐந்து ஆண்¬டு¬களில் 20,000 கோடி ரூபா¬யைத் தாண்டியது. ஏர் இந்தியாவால், ஏற்கனவே உள்ள கடன்களுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியவில்லை. இந்த மாதிரி நிலையிலிருந்த  மல்லையாவின் நிறுவனத்தை வராகடன் பட்டியலில் சேர்த்து போராடத்தொடங்கியிருக்கும் வங்கிகள் இதில்அப்படி செய்ய முடியாது காரணம் இது பொதுத்துறை. இதன் கடனகள் அரசால் உத்தரவாதமளிக்கபட்ட ஒன்று.  அதாவது என்றாவது ஒரு நாள் கடன் திரும்பி வந்துவிடும்- நீங்களும் நானும் கட்டும் வரிப்பணத்திலிருந்து அரசு கொடுத்துவிடும்
 செயல்பாட்டு திறன்களை  மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, 2017க்குள் லாபம் ஈட்ட வேண்¬டும் என்ற  நிபந்தனைகளுடன் மத்திய அரசு, ஏர் இந்தியாவுக்கு 30 000 கோடிகள்  கடன் கொடுத்தது. 2015 –16ல் மட்டும் 105 கோடி ரூபாய் லாபம் கிடைத்தற்கு காரணம்  விமான எரிபொருள் விலை சரிவு. இப்போது மீண்டும் நஷ்டம்.
“ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக 16 விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் 2005க்கும் 2010க்கும் இடையே ரூ 4,234 கோடி இழப்பை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்திருக்கிறது” என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தேவைப்பட்டதை விட மிக அதிகமாக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டதால் ரூ 68,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு விமான நிறுவனம் கடன் இல்லாமல் இயங்கமுடியாது. .  ஜெட் ஏர்¬வே¬ஸுக்கு உள்ள கடன், 7,223 கோடி . இண்டிகோவின் கடன் 3,201 கோடி ரூபாய் . ஆனால் ஏர் இந்தியாவின் கடன் அதன் வருவாயாக மதிப்பிட்டிருக்கும் தொகையை விட பலமடங்கு அதிகம்.  சுருக்கமாக சொல்லுவதானால் ஏர் இந்தியா திவாலாகிக்கொண்டிருக்கிறது. வேறு வழியில்லாமல், ஏர் இந்தியாவை விற்றுவிட வேண்டிய நிலை  இன்று எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம்  ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த முடிவு இந்த அரசுக்குப் புதிதல்ல  கடந்த 2001ம் ஆண்டே ஏர் இந்தியாவின் 60 சதவீத பங்குகளையும், இந்தியன்  ஏர்லைன்சின் 51 சதவீத பங்குகளையும் விற்க அப்போது ஆட்சியில்   இருந்த பாஜ கூட்டணி அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்போது  அது கைவிடப்பட்டது.  அதே முடிவு இன்று வேறு வடிவம் எடுத்திருக்கிறது.
“இந்தியாவின் 86 சதவீத விமானச் சேவையை தனியாரால் வழங்க முடி-யும் என்றால், 100 சதவீதத்தையும் அவர்களால் வழங்க முடியாதா?” என்று  கேட்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ,
சரி இவ்வளவு நஷ்டத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தை யார் வாங்குவார்கள்?  கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்களா? வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வார்களா? அதெற்கெல்லாம் ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அரசு எப்படி, எவ்வளவு பங்குகளை விற்கப்போகிறது என்பதை முடிவு செய்ய ஒரு குழுவை அமைத்திருக்கிறது.
டாடா குழு¬மம் ¬ ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது.. அதற்கு காரணம் டாடா நிறுவனத்தின்  நிதி வலிமை மட்டுமில்லை..  ஏர் இந்தியாவை துவக்கியதே ஜே.ஆர்.டி. டாடா¬ தான். 1932ல் டாடா ஏர்-லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்த விமான நிறுவனமே, 1953ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஏர் இந்தியா ஆனது. அன்றைய பிரதமர் நேருவின் விருப்பத்தை ஏற்று  நீண்ட அதன் தலைவராக  இருந்தார்.ஜேஆர் டி.   அந்த சென்டிமென்ட் ஒரு காரணம். மேலும் டாடா நிறுவனம் ஏர் ஆசியா  என்ற நிறுவனத்திலும் நிறைய முதலீடு செய்திருக்கிறது.
 இன்று டாடா மட்டுமல்ல, இன்னும் மூன்று விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விரும்புகின்றன என்ற செய்திதான் ஆச்சரியத்தைத் தருகிறது.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்  ஏர் இந்தியாவிற்கு இருக்கும் கட்டமைப்புகளை இன்று உருவாக்கப் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்கின்றனர் வல்லுனர்கள். மேலும்    சிறந்த தலைமை, கண்டிப்பான நிர்வாகம், திறமையான நிதிமேலாண்மையினால் 2 அல்லது  3 ஆண்டுகளில் நிலைமையைச் சீராக்கி லாபம் ஈட்ட முடியும் என இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. 1983 ல் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் சந்தித்த இதே நிலை தனியார் நிர்வாகத்தால் 1987ல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிய முன்னுதாரணத்தைக் காட்டுகின்றனர்.
1953ல் விமானச் சேவையை அரசுடைமையாக  அறிவித்து அரசு  டாடா ஏர்லைன்ஸை எடுத்துக்கொண்டபோது  ஜே ஆர் டி டாடா சொன்னது “மக்கள் நலனுக்காக  விமான சேவை நாட்டுடமையக்கப் படுவதை நான் ஏற்கிறேன். ஆனால் இந்தியாவின் புதிய அரசாங்கத்துக்கு, விமான நிறுவனத்தை நடத்துவதில் எந்த அனுபவமுமில்லை. அதனால் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.”
இந்த வார்த்தைகள் இன்றும் உண்மையாக இருப்பது தான் ஆச்சரியம்
kalki 30/07/17

கருகிய கனவுகள்


மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது 
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக,மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி வந்த நீட்  (NEET) பிரச்சனையில் உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் நீட் தேர்வில் தகுதிபெறாத தமிழக மாணவர்கள் +2 வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட   மருத்தவ கல்லூரிகளில் சேரமுடியாது. 
 நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில்  கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்தத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் விளைவாக  2013ல் பிறபித்த தடையுத்தரவை ரத்து செய்து தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த  உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது 
இந்த  உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்திய மருத்துவ கல்வியில் ஒரு மிகப்பெரிய மாறுதலை உருவாக்கியது இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே முறையில் நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்திலும் மத்திய அரசு கட்டாயமாகி உள்ளது. என்றும் அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது.  கடந்த மே மாதம் 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 11.3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.      தமிழகத்தில்  எழுதியவர்கள் 83000க்கும் மேற்பட்டவர்கள் அதில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 32570 பேர். இதில்மிகப் பலர் சிபிஎஸ் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் காரணம் இந்த நீட் தேர்வின் கேள்விகள் 80% சிபிஎஸ் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டவை.
  மாநில பாடத்திட்டத்தில் +2 படித்த மாணவர்கள் இந்தத் தேர்வை சரிவரச் சந்திக்க முடியாமல் போய்விட்டது   என்பதைக் கணித்த அரசு  தமிழக அரசுஇந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வாங்கிடலாம் எனஅறிவித்தும் விட்டது. ஆனால்  இரண்டு சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற  மத்திய அரசு  அனுப்ப வில்லை. தங்களது சொந்தப் பிரச்சனைகளில் மத்திய அரசின் தயவை நாடி நிற்கும். மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்க வில்லை
. இவ்வாண்டு, நீட் மூலம் தான் தமிழ்நாட்டிலும் மாணவர் சேர்க்கை என அறிவித்து அதற்கான பணிகளை வாரியம்  துவங்கியிருந்தது. இந்த விஷயத்தில் தங்கள் முயற்சிகள் தோல்வியடைந்ததை உணர்ந்த மாநில அரசு அதை மறைப்பதற்காக, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொண்டு வர  ஒரு அரசாணை பிறப்பித்தது. அதாவது, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 15 விழுக்காடு இடங்கள் போக மீதி உள்ள 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காடு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், 85 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கிட அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையைத்தான்  செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்புக்கான முக்கிய காரணங்களாக நீதி மன்றம் சொல்லியிருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒரே வகுப்பில் படித்த மாணவர்களிடையே வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்கள் என்பதால் தகுதி நிலையிலேயே  வேறுபாடுகாட்டுவது  எல்லோருக்கும் சமத்தவம் என்ற நிலைக்கு மாறுபட்டதாகிவிடும். இரண்டாவது இந்த அரசாணையை  வெளியிட்டிருப்பது அரசின் செயலாளர்கள். ஒரு அரசின் கொள்கை முடிவுகள் அமைச்சரவையால் பரிசிலிக்கபட்டு ஒரு ஆணையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது  சட்டமன்றத்தில் சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டு,ம்  ஆனால் இது அப்படிச் செய்யப்படவில்லை. 
தமிழக அரசு  உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது  
ஆனால் . இப்படி வெவ்வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டரீதியாக செல்லுமா? தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும்  85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்பது  மிகப்பெரிய கேள்விக்குறி.  ஏனெனில், அரசியல் சட்டப்படி, சமூக ரீதியாக கல்விரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இப்படிப்பட்ட ஒதுக்கீடுகள் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் எனச்சொல்ல முடியாது. மேலும் 50 விழுக்காட்டுக்கு மேல் எந்த இட ஒதுக்கீடும் செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது, ஏற்கனவே, குஜராத் உயர் நீதிமன்றம் இதுபோன்ற ஒரு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த ஒதுக்கீடு  அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம். .

மாநில அரசு என்ன செய்ய வேண்டும்?                            
இதைக் கெளரவ பிரச்சனையாக கருதாமல் நீட் தேர்வை ஏற்று நமது மாநில பாடதிட்டங்களை மாற்றி அமைத்து தமிழக கல்வித்தரம் சிபிஎஸ் பாடத்திட்டத்தைவிட உயர்ந்தது என நீருபிக்க வேண்டும் 
 நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test). என்பதை உணர்ந்து நமது மாநில மாணவர்களை அதற்கு தயாரிக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  செழுமையாக்கப்படவேண்டும். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு அண்மையில் செய்திருக்கிறது. இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாகவே செயலாக்கவேண்டும். 
குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்கொடிய வழக்கம் இந்தத் தேர்வு முறையினால்  முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவஇடம் கிடைக்காது. என்று எழுந்திருக்கும் நிலையை வரவேற்க வேண்டும்.
சட்டம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், புதிய கல்விக் கொள்கை எனப் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மருத்தவ கல்லூரி கனவுகளுடன் மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும்  மாணவர்களும், கருகிய அவர்களின் கனவுகளை கண்டு கண்ணீர் விடும் அவர்கள்  பெற்றோர்களும் தான்.

19/7/17

சீனாவின் புதிய “பட்டுபாதை”சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குலகையும் சீனாவையும் இணைத்த  ஒரு வர்த்தக பாதை  சினாவின் “சில்க் ரூட்” (–பட்டுப் பாதை) என்பதை வரலாறு நமக்குச்சொல்லுகிறது.  இந்தத் தொன்மையான பட்டுப்பாதையின் வழித்தடத்தில் சீனா, இந்தியா, இலங்கை இணைந்திருந்தன. சீனாவைச் சேர்ந்த ஃபாஹியான் போன்ற  புத்தமத அறிஞர்கள்  இந்தப் பாதையில் பயணித்துதான் இலங்கைக்கு புத்தமதத்தை எடுத்துச்சென்றனர். காலப்போக்கில் நாடுகளுக்கிடையே நிலவும் இன்றைய நவீன எல்லைக்கோடுகள் இந்தப் பாதையை வெறும் சரித்திரபுத்தகங்களில் இடம் பெறும் ஒரு வார்த்தையாக மட்டும்  மாற்றிவிட்டது 

இந்த சில்க் ரூட் எனும் பாரம்பரியப் பாதையை மீண்டும்  துவக்கி தங்கள் பெருமை மிக்க கலாச்சாரத்தை தொடரப்போவதாக சிலஆண்டுகளுக்கு   முன் சீன அரசு அறிவித்திருந்தது.   2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு  'ஒன் பெல்ட், ஒன் ரோடு' (One Belt, One Road-OBOR))   என்று பெயரிட்டது.  
கடந்த 3 ஆண்டுகளாக மிகத் தீவிரமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.  பாரம்பரியமான  பட்டுப்பாதையாக இல்லாமல்  உலகப் பொருளாதார குறியீட்டில்(GDP) 60%த்தை நிர்ணயிக்கும் முக்கிய 58 நாடுகளைத்  தரை, கடல் வான் வழியாக இணைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டமாக அறிவித்திருக்கிறது.  OBOR திட்டத்தின்  கட்டுமானங்களின் மதிப்பீடு  1  டிரில்லியன் டாலர்கள். (ஒரு லட்சம் கோடி டாலர்கள்)
முதல் கட்டமாக  சீனாவின் முக்கிய நகரான குன்மிங் மற்றும் கொல்கத்தா இடையே, அதிவேக ரயில்கள் செல்லும் வழித்தடத்தை அமைப்பதற்கு, சீனா  ஒரு திட்டத்தை முன் வைத்தது.. இந்த வழித்தடம், வங்கதேசம், மியான்மார் வழியே செல்லும் என்பதால், 4 நாடுகளின் வர்த்தகத்தை, மேம்படுத்துவதற்கு, இது உதவும் என்று  சொல்லி 2,800 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில் தடத்தை அமைக்க, 4 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை சீனா  ஏற்பாடு செய்தது. இந்தியா உடனடியாக ஏற்காத இந்த  யோசனையை மற்ற நாடுகள் வரவேற்றன. 
 இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் அடுத்த  முக்கிய கட்டமாக லண்டனில் இருந்து சீனா வரையிலான  12.500 கி.மீ தொலைவுள்ள வழித்தடத்தில் சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கிச் சாதித்துள்ளது சீனாவின் ரயில்வே துறை.                                                                                                                                              சீனா ரயில்வே கார்ப்பரேஷனின் ஈஸ்ட் விண்ட் சரக்கு ரயில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டது. 20 நாள் பயணத்திற்குப் பின்னர் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ‘யிவு’வை அடைந்தது.   மறுபடியும் பிறந்திருக்கும் சில்க் ரூட்டின் வெற்றியாக வர்ணிக்கப்பட்டது இந்தப் பயணம்.                                        லண்டனில் இருந்து புறப்பட்ட இந்த சரக்குரயில், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் வழியாகச் சீனாவை வந்தடைந்துள்ளது. இதே போல் 2014ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்கு ஒரு  சரக்குரயில்  இயக்கப்பட்டது.  இந்தச் சோதனை ஓட்டங்களைச் தொடர்ந்து  கடந்த மே மாதம் பிஜெய்ங் நகரில் இந்த “ஒன்பெல்ட். ஒன்ரோட்”  திட்டத்திற்காக ஒரு உச்சி மாநாட்டைக் கூட்டியது சீனா.   29  நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 70 நாடுகள் இந்தத் திட்டத்தில்  சீனாவுடன் ஒத்துழைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  இங்கிலாந்து ஜெர்மனி போன்ற வலிமையான நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் பங்கேற்க வில்லை. சீனாவுடன் கருத்து வேறுபாடு உள்ள வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகள்  பங்கேற்றன. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
. நமது பக்கத்துவீட்டுக்காரர்களை இதில் பங்கேற்பதை தவிர்க்க நமது அரசால் எடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்க  வில்லை. பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறது.. திட்டம் மிக வேகமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 
“பாரம்பரிய கலாச்சார பாதை என்பதெல்லாம்  கண்துடைப்பு.''சீனாவின் '' ஒன் பெல்ட் ஒன் ரோடு'' எனப்படும் சில்க் ரூட் திட்டம்  உள்நோக்கம் கொண்டது என்கிறார் அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படை கமாண்டர் ஸ்காட் ஸ்விப்ட்.  சீனா, இந்திய இடையே கடல் எல்லைப் பகுதியில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்திய கடற்பரப்பை தொடர்ந்து சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், தெற்கு சீனக் கடல் பகுதியிலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை. . மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் குறிவைத்து நிலம் மற்றும் கடல் வழியாக சில்க் ரோடு என்ற திட்டத்தை பெரிய பொருளாதார செலவில் கொண்டு வருகிறது சீனா. இந்த திட்டம்.   வெறும் வணிகம் மட்டும் குறிக்கோளாகக்கொண்டது இல்லை அதற்கும் அப்பாற்பட்ட பல விஷயங்களைக்கொண்டது. என்கிறார் இவர். 

இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது இந்தியா பங்கேற்காதற்காக முதலில் சொல்லபட்ட காரணம். ஆனால் உண்மையான காரணம்  பின்னால் வெளியானது.
 சீனா பாகிஸ்தானை இணைக்கும் பொருளாதார நெடுஞ்சாலை இந்தியா சொந்தம் கொண்டாடும் பல்திஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடம் வழியாகப் பொருளாதார நெடுஞ்சாலை அமைக்கச் சீனா திட்டமிட்டிருப்பதை இந்தியா ஏற்கவில்லை.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் இந்த நெடும்பாதை குறித்து இந்தியா தனது ஆட்சேபணைகளை  பதிவு செய்திருக்கிறது.
“அண்டை நாடுகளின் வளர்ச்சிக்குச் சீனா மேற்கொள்ளும் பங்களிப்பே இது, சீனாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பான இந்தப் பாதை அரசியல் மற்றும் எல்லை தகராறு குறித்தது அல்ல, பொருளாதாரப் பாதை மட்டுமே” என்கிறார்  சீனாவின், வெளியுற  அமைச்சர்  “

உலகின் மிக சக்தி வாய்ந்த  முதல் நாடாக, சீனா இன்னும் 10 ஆண்டுகளுக்குள் ஆகி விட  வேண்டும் என்ற  சீன அதிபர் ஜின்பிங்கின் கனவின் வடிவமே அவருடைய இந்தச்  செல்லத் திட்டம்.  இந்த மிகப்பெரிய தடையில்லாத பாதையை நிறுவதின் மூலம்.  பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளை தங்கள்  வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து  சீனாவின் உற்பத்திக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி அதன் மூலம்  சீனாவின் பொருளாதார வலிமையைப் பெருக்குவதுதான் திட்டம். அதைப்புரிந்து கொண்டதனால்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. எல்லைப் போரில் எழுந்த பரஸ்பரம் நம்பிக்கையற்ற நிலையினால் இந்தியா ஏற்க மறுக்கிறது.    என்று ஐரோப்பிய பத்திரிகைகள் எழுதுகின்றன. 
60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் எல்லைப் பிரச்சனையை முடிவுக்கொண்டுவர இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தருவதை இந்தியா ஒரு நிபந்தனையாக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை முழுமை அடைய இந்தியா ஒத்துழைக்கப்போகிறதா? அல்லது ஒதுக்கித் தள்ளபோகிறதா??
திறமையான இரண்டு  செஸ் ஆட்டகாரகளின் இறுதி ஆட்டத்தை கவனிப்பது போல பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.

 கல்கி 22/07/17ல் எழுதியது

12/7/17

கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவோம்சர்வ தேச சிலைகடத்தல் மன்னன் கபூர் கைது. பல கோடிகள் மதிப்புள்ள  பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தங்கள் நாட்டுக்குக் கடத்தப்பட்டு வந்த 1000 ஆண்டு பழமையான நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் நமது பிரதமரிடம் கொடுத்தார் போன்ற  தலைப்புச்செய்திகளை அவ்வப்போது பார்க்கிறோம். 
அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட சிலைகடத்தல் மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய டார்க்கெட். தமிழக காவல் துறையில் இதற்காக உயர் அதிகாரியின் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. 
ஆனால்  தன்னாலார்வர்கள் குழு ஒன்று மிகத்தீவிரமாக இந்த விஷயத்தில் பணியாற்றி அரசுக்கு உதவுகிறார்கள் என்பது பலர் அறியாத  விஷயம்.


திரு விஜய்குமார் சென்னையைசேர்ந்தவர்.  தற்போது சிங்கப்பூரில் காஸ்ட் அக்கடெண்ட் ஆகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். இவரது  இணைய தளம் இந்தியா பிரைட் பிராஜெக்ட்.(INDIA PRIDE PROJECT) 2013லிருந்து  இயங்கும் அந்தத் தளத்தில்  இந்தியாவில் காணாமல் போன கடவுள் உருவங்களின் படங்களை வெளியிட்டு விபரங்களைப் பதிவு செய்து வருகிறார். “நம் கடவுள்களை திருப்பிவீட்டிற்கு கொண்டுவருவோம்”  என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.  இதன்படி   ஏதாவது பெரிய மியூசியங்களில் அல்லது ஆர்ட் டீலர் என்று அழைக்கப்படும் விற்பனையாளர்களின் கேட்லாக்களில் தெய்வச்சிலைகள்  இருந்தால் இவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதை இவர்களின் குழு ஆராய்ந்து சம்பந்தபட்டவர்களைத்தொடர்பு கொண்டு மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதைத்தவிர நேரடியாகவும் இவர்கள் களத்தில் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறார்கள். பல மியூசியங்களிலிருக்கும் சிலைகளை ஆராய்ந்து அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்:. இதற்காக இவர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ரகசிய அதிரடி வேலைகளையும் செய்கிறார்கள். சம்மந்தப்பட்ட இடங்களில் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வது அவசியமான ஆவணங்களின் நகல்களைப்பெறுவது போன்ற பணிகள்.  இவருடைய குழுவில் சரித்தஆராய்ச்சியாளார். சிலையின் வயதைக்கணக்கிடுபவர். சந்தை விலை எவ்வளவு என மதிப்பிடுபவர்,   போன்ற எக்ஸ்பர்ட்களும்.  இருக்கின்றனர்.  அனைவரும் தன்னார்வலர்கள். 
 தமிழக போலிஸ் இதுவரை மீட்ட சிவபுரம் நடராஜர்  (11 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 10ம் நூற்றாண்டு சிலை), தஞ்சை பிகதீஸ்வரர் கோவிலிருந்து காணாமல் போன  ஐம்பொன் கணேசா, போன்றவற்றை  மீட்க இவர்கள் தந்த முக்கிய ரகசிய தகவல்கள், ஆவணங்கள் தான் உதவியிருக்கின்றன. இதுவரை 60 சிலைகளை மீட்க உதவியிருக்கிறார்கள். பிரமிக்கத்தக்க இந்தப் பணியைச் செய்யும் இவர்கள் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கிறார்கள். விளம்பரத்தை விரும்பவதில்லை. அவர்களின் இணைய தளத்தில் கூட இந்த அணியினரின் படங்கள் இல்லை. அமெரிக்கர்- தென்கிழக்கு ஆசியாவில் நமக்காக பணிசெய்பவர்.  இந்தியர்- தொன்கலை நிபுணர் அமெரிக்காவில் நம் பணி செய்பவர் என்ற ரீதியில்தான் தளத்தில்  நிழல் முகங்களுடன் விபரங்கள் இருக்கின்றன.பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவர்கள் தமிழகக் கோவில் சிலைகளை மட்டுமில்லாமல் மத்தியபிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பழுப்பு  சலுவைக்கல்லில் உருவான யஷ்ணியின் சிலையை மீட்கவும் உதவியிருக்கிறார்கள்.

 இவர்களது வெற்றிப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பது  1000 ஆண்டு பழமையான நரசிம்ஹி என்ற காளியின் உருவம். இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மியூசியத்தில் இருந்தது. அதற்கு அவர்கள்  இட்டிருந்த பெயர் பெண் புலி.   இது பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் கோவிலிலிருந்து திருடப்பட்டிருக்கிறது.
 

எப்படி இவர்கள் இதைச்செய்கிறார்கள்.? ஒரு மியூசியத்தில் அல்லது விற்பனையாளர்களின் கேட்லாக்கில் இருக்கும் ஒரு சிலையை தங்களிடமுள்ள படங்களுடன் ஆராய்கிறார்கள். உருவம் ஒத்திருந்தால் மேலும் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். அந்தக் கோவிலில் இந்தச் சிலை திருடப்பட்டிருப்பது புகார் செய்யப்பட்டிருக்கிறதா?  போன்ற விபரங்களுடன் வல்லுநர் அறிக்கைகளுடன் சரித்திர சான்றுகளுடன் மியூசியம் அதிகாரிகளை அணுகி முதலில் அது திருடப்பட்டது என்பதை நிலை நிறுத்துகிறார்கள்.  பின்னர்  இந்திய அரசு, தமிழக அரசின் போலீசுக்கு விபரங்கள் தந்து விசாரணையைத்துவக்க வைக்கிறார்கள். வழக்கும் பதிவு செய்ய உதவுகிறார்கள். இதில் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

  2013ல் முதலில் எங்கள் குழு கண்டுபிடித்தது  ஆஸ்திரேலியா மியூசியத்திலிருக்கும் விருத்தாசலம் கோவிலின் அர்த்தநாரிஸ்வரர் சிலை. காணாமல் போய் 12 ஆண்டுகளாக அதற்காக எந்தப் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிலை திருடப்பட்டிருக்கிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் அதைக் காணோம் என்று போலிஸில் செய்யபட்டிருக்கும் புகார். அதுவே இதற்கு இல்லை. 
 இதனால் தான் நாங்கள் கோவிலின் அரிய சிலைகள் பட்டியலிடப்பட்டு டிஜிட்டல் ஆவணமாக்கி ஆன் லையன்ல் தேடும் வசதியோடு இருக்க வேண்டும் எனச் சொல்லுகிறோம்.  நாங்கள் அதை முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார்  விஜய் குமார்
இவர்களும் தமிழக போலீஸும் சந்திக்கும் மற்றொரு சவால்  தமிழகத்திலிருக்கும் 4500 கோவில்களில் இருக்கும் பல சிலைகளின், சிற்பங்களின் புகைப்படங்களோ விபரங்களோ கிடையாது. காணாமல் போனால் அடையாளம் சொல்லக்கூட முடியாது. இவர்கள் முயற்சியில் 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும், ஒரு 1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையியும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அவை தமிழ் நாட்டிலிருந்துகடத்தப்பட்ட தொன்ம சிலை  என்று நம்புகிறார்கள். ஆனால் அவை எந்தக் கோவிலுடையது என்பது தெரியாதால் அதை மீட்கும் முயற்சியைத்  துவக்க  முடியவில்லை.
 எப்படி? ஏன்? இந்த ஆர்வம் இவருக்கு.  “கல்லில் கவிதை” என்ற இவரது  வலைப்பூவில் தமிழக கோவில்களின் அழகான சிற்பங்களைப் பற்றி  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வந்த இவர். அதற்கான தகவல்களை சேகரிக்கும்போது சிலைகளின் திருட்டு மற்றும் கடத்தல் பற்றி அறிந்திருக்கிறார். “ஆர்வம் அதிகரித்ததினாலும் , என் மாதிரி எண்ணங்கொண்ட நண்பர்களின் இணைந்ததாலும்  தான்   இந்த இணைய தளம்” என்கிறார்.  இந்தத் தளம் இயங்குவதற்கு முன்னால் சிலைதிருட்டு/கடத்தல் என்பது மிகப்பெரிய அளவில் அரசால் கண்காணிக்கப்படவில்லை. அவ்வப்போது சில சிலைகள் மீட்கப் பட்டாலும் அது தொடர்பாக வழக்குகள் போடப்பட்டதில்லை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்க பட்டதுமில்லை.  இதனால் தான் நியூயார்க் மெட்ரோபோலிஸ் மியூசியத்துக்கு  கடத்தல் மன்னன் கபூர் தன் மகளின் பிறந்த நாள் பரிசாக ஒரு சந்தரதுர்கா சிலையை அன்பளிப்பாக வழங்க முடிந்திருக்கிறது என்கிறார். சுபாஷ் கபூர் இப்போது புழல் சிறையில் இருக்கிறார். அவர்மீது  3 சிலைகளைக் கடத்திய வழக்கு இருக்கிறது.  ஆனால் அவரது நியூயார்க் கோடவுனில் இருப்பது 26000 சிலைகள் 
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் நமது 10,000 சிலைகள் திருடப்படுகின்றன. இதுவரை நாம் 70000 சிலைகளை இழுந்திருப்போம். அதில்  முனைந்தால் நிச்சியமாக 10000 சிலைகளை மீட்க முடியும். ஏனென்றால் அதில் 4000க்கும்மேல் மியூசியங்களில் இருக்கிறது. இப்போது 60 சிலைகள் வரை  எங்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொண்டுவரமுடியும் . திருட்டு என ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டால் மியூசியங்கள் தந்துவிடுவார்கள்  அதனால் தான் எங்களுடன் ஒத்துழைக்க ஆர்வலர்களை அழைக்கிறோம்.
என்ன செய்ய வேண்டும்?  எப்படிச் செய்ய வேண்டும்.? 
மீயூசியங்களில் அல்லது எங்காவது நீங்கள் பார்க்கும் இடங்களில் சிலைபற்றிய சந்தேகம் வந்தால் அதன்படத்தை பேஸ்புக்கில் போடுங்கள். எங்கள் தளத்துக்கு அனுப்புங்கள். . உள்ளூர் அரிய சிலைகளின் படங்களையும் விபரங்களையும் போடுங்கள்.  மற்றவற்றை நாங்கள் செய்வோம் என்கிறார்.

எளிதாகத்தானே இருக்கிறது செய்வோமே?  

11/7/17

நிசப்தம்: எப்படி இருந்தது?

நிசப்தம்: எப்படி இருந்தது?: அருமை. பதினைந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய நிகழ்வு குறித்து ஒரே சொல்லில் இப்படித்தான் சொல்ல முடியும். இந்த ஒரு சொல்லுக்குப் பின்ன...

7/7/17

தெரியுமா? தென்கொரியர்களின் மொழி -தமிழ்!அந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம்பதியினர்.. கணவர் சில நாட்களுக்கு முன் சென்னை அலுவலகத்தில் பதவி ஏற்றிருக்கும் அதிகாரி. பின்னாலிருந்து  " அப்பா" என்று குரல் கேட்கவும் ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்கிறார். ஆச்சரியத்துக்குக் காரணம் அவர் மகனும் மகளும்  முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள்.  நம் மொழியில் யார் நம்மை அழைக்கிறார்கள்? என்று திரும்பிப்பார்த்த அவர் பார்த்தது ஒரு தமிழ் குடும்பத்தை.   தன் மொழியில் அப்பா என்றால் தந்தை என்பது போல தமிழிலும் தந்தைக்கு அப்பா தான் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டுப் போகிறார் அந்ததென் கொரிய நாட்டுக்காரர். 
அவர் திரு குயூங்குசூ கிம் (KYUNGSOO KIM)  தென் கொரியாவின் தூதர்.

சென்னைத்திரும்பியதும். தன் அலுவலகம் மூலம் கொரிய, தமிழ் மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி அறிந்து, ஆச்சரியபட்டு அது குறித்த தகவல்களைசேகரிக்கிறார்.  இரு  மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து தமிழ் நாட்டில்  பல ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்து வியக்கிறார்.  இதில் தன் பங்காக எதாவது செய்ய வேன்டும் என்று கருதி தமிழை முறையாக கற்றுக்கொள்ளத் துவங்குகிறார்.
 சென்னையில் இன்று 4000க்கு மேற்பட்ட கொரியர்கள் வசிக்கிறார்கள். ஹூண்டாய், ஹூன் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் அவர்களது குடும்பங்கள்.
கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், அது தமிழில் பேகசப்படுவது போலவே உச்சரிக்கப்படுவதை முதலில்  சொன்னவர்கள் பிரெஞ்ச் பாதிரியார்கள். இரண்டு நாடுகளிலும் பணிபுரிந்த பாதிரியார்கள் கண்டுபிடித்த விஷயம் இது. அன்று முதல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  ஹவாய் பல்கலைக்கழகத்தின்  “கொரிய மொழி மையம்” இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் ஆய்வின் படி  கிட்டத்தட்ட  கொரிய மொழியில்  4000 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.  பல வார்த்தைகளின் பொருளும் அதேதான் மட்டுமில்லை ஒலிக்கும் பாணியும் உச்சரிப்பும் கூட தமிழ் போலவே இருப்பது தான் ஆச்சரியம்.
இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவு முதல் நூற்றாண்டில் துவங்கியிருக்கிறது. சூரோ என்ற அரசன் கார்க் என்ற பகுதியை ஆண்டுவந்தார்.கார்க் என்ற சொல்லுக்கு  பண்டைய தமிழில் மீன் என்று பொருள். அந்த மன்னரின் கொடியில்  மீன் சின்னம். இருக்கிறது.  அவரும் அன்றைய பாண்டிய(வேளநாடு) மன்னர் ஆயியும் நல்ல நண்பர்கள்.  அவர்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை  கார்க் நாட்டின் இளவரசர்      திருமணம் செய்துகொண்டதால்,  வணிகம்,  அரசுப்பணிகளில், படைகளில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள்.  பின்னாளில் சூரிரத்னா என்ற   அந்தப் பெண்  நாட்டின் அரசியாகியிருக்கிறார்.
 இன்றும் அவரது  சமாதி கிம்ஹே என்ற கொரிய நகரில் இந்த விபரங்கள் பதிக்கப்பட்ட கற்பலகையுடன் இருக்கிறது.    கொரியா நாட்டில் சொல்லா என்பது ஒரு மாவட்டத்தின் பெயர் இது சோழ என்ற  சொல்லின் திரிந்த வடிவம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து நிறைய எழுதியிருக்கிறார்கள் என். கண்ணன், ஒரிஸாபாலு,  நாகராஜன் போன்ற  வரலாற்று ஆய்வாளர்கள்.
"மொழி மட்டுமில்லை கலாச்சாரத்திலும் நிறைய ஒற்றுமைகள். கொரிய குழந்தை முதலில்; அறிந்து கொள்ளும் வார்த்தைகள் அப்பா, அம்மா தான். என்பது மட்டுமில்லை. குழந்தையைத் தொட்டிலில் இடுவது, வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, போன்ற பல விஷயங்களில் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். தென்கொரியாவில் மாங்காய் கிடையாது. அதனால் மிளகாய் தோரணம் கட்டுகிறார்கள்.  குழந்தைக்குத் திருஷ்டி கூடாது என்ற பழக்கமும் இருக்கிறது".  என்கிறார்  கொரிய தூதர் குயூங்குசூ கிம்  . இவர்  தமிழ் நாட்டில் ஆர்வத்துடன் பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்து தனது கட்டுரைகளில் எழுதுகிறார்.. அவர் சொல்லும் பல விஷயங்களில் ஒன்று தமிழக கிராமங்களில் இருப்பது போலத்தான் கொரிய கிராமங்களில் குடிசைகள் அமைக்கப்படுகின்றன. உரலுக்கும்  உலக்கைக்கும்  அதேபெயர்கள், அதே பயன்கள் என்பது தான்.  இப்போது தமிழ் கற்றுவரும் இவர்  தமிழ் இலக்கணம் எழுவாய்- செயப்படுபொருள்- வினைச்சொல் அடிப்படையில் தான் கொரிய மொழியின் இலக்கணமும் இருக்கிறது  என்கிறார்.  கொரியர்களும் தமிழர்களைப்போல் அத்தை, மாமன், தாய்மாமன் உறவு முறைகளும் அதில் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.( சண்டைகள் வருவதும்  உண்டாம். )
தென்கொரியாவைச்சேர்ந்த ஒரு எண்ணை நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு நாராயணன் கண்ணன் 10 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்.  அங்கு ஒரு அறக்கட்டளையை நிறுவி இரு மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராயந்துவருகிறார். பல ஆண்டுகாலம் சீன மொழியைப் பயன்படுத்திய கொரியநட்டினர் 10ஆம் நூற்றாண்டில் ஹங்குல் என்ற மொழியை தாய் மொழியாக ஏற்றனர். இது தமிழ்மொழியின் சாயலில் இருக்கிறது. இந்த ஹங்குல் மொழியை ஏற்றபின்னர்தான் கொரியமக்களின் பொருளாதாரம் வேகமெடுத்திருக்கிறது. இன்று கொரியாவில் 99%மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். மொழியை முன்னிறுத்தியே  எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு  இது சான்று என்கிறார். இவர் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இது குறித்த தனது கட்டுரையை வாசித்தவர்.
கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. உரத்துக்கு- உரம், கண்ணுக்கு -நுகண், பல்லுக்கு =இப்பல் புல்லுக்கு =புல் எனப் பல வார்த்தைகளில் அதே பொருளில் இருப்பதை விட ஆச்சரியம் அவர்கள் தூரி, தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு ஜம்ஜம், அபூபா, ஜோ ஜோ  என  சிறு குழந்தைகளைக் கொஞ்சுவதில் கூடத் தமிழ் கொஞ்சுகிறது. மொழி, கலாச்சாரம் போல சில உணவு வகைகளையும் தோசை, கொழுக்கட்டை  சுண்டல்  ஊறுகாய் போன்றவற்றிலும்  தமிழ்நாடு இருக்கிறது.

 
மொழி, உணவு மட்டுமில்லை .நட்பு பாராட்டுவதிலும்  தமிழர்களைப் போலத்தான் என்கிறார் திருமதி மீரா.
ஒரு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி யெங் மின் ஓ வின் குடும்பம் அண்மையில் சென்னைக்கு வந்தது.  அவரது மனைவி காங் மின் (KANG MIN)   ஆங்கிலம் அதிகம் அறியாத குடும்பத்த லைவி.  உள்ளூர் மொழியும் தெரியாத புதிய சுழலில் மிரண்டு, கலங்கிய அவருக்குப்   பக்கத்து பிளாட்டில் வசிக்கும் இவர் “ நான் உன் தாய் மாதிரி பயப்படாதே எல்லா உதவியும் செய்வேன்” என்று  ஆறுதலாக ஆங்கிலத்தில்  சொன்னதில் அவருக்குப் புரிந்த  வார்த்தைகளில் ஒன்று  “மதர்”   ஒ! நீங்கள் எனக்கு  “அம்மா” என்று சொல்லி சந்தோஷமானார். அன்றிலிருந்து அந்தப்பெண்மணியை அவர் இந்திய அம்மா என்றுதான் அழைக்கிறார். மெல்ல  தமிழும் ஆங்கிலமும் கற்றுவருகிறார். குழந்தைகளுக்குச் சென்னையும் உணவும்  ரஹ்மானின் இசையும் மிகவும் பிடித்துவிட்டது.

5000 கீமிக்கு அப்பால் சீனாவைத்தாண்டியிருக்கும்  கொரியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  தமிழ் மொழியும் கலசாரமும் வேறுயூன்றியிருப்பதில் நம்மைப்போலவே கொரியர் பெருமையும் சந்தோஷமும் அடைகிறார்கள்.  ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவு முப்பாட்டன் வாழ்ந்த நிலம் என்றெல்லாம் அரசியல் செய்ய முடியாது. புதிய அரசியல் கட்சிகளுக்கு தென்கொரியாவில் அனுமதியில்லை.
கல்கி 9/07/17

4/7/17

இரண்டு நாடகங்கள்

சென்னை அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கம். அமைதியாகியிருக்கும்  பார்வையாளர்கள்.   ஆங்கில நாடகம் ஒன்றின்  துவக்கத்துக்காக காத்திருக்கிறோம்.  மேடையில் இருள் கவிகிறது. நிழலுருவாக பாத்திரங்கள்.  மெல்லத்துவங்கி அதிகரிக்கும் தவிலின் ஓசை அதிகரிக்கும் போது ஒளியுடன் முதல் காட்சி விரிகிறது. தன்னை மதித்து கெளரவத்துடன் நடத்தாமல் தன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்  “உன் கணவர்” எனத் தாயிடம் சீறும் மகன். தந்தையின் பெருமையகளைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தும் தாய் என்று துவங்கும் அந்தக் காட்சி இன்று பல குடும்பங்களில் நிகழும் ஒரு காட்சி போலிருந்தாலும் - நாடகம் மஹாபாரத்திலிருந்து  ஒரு கதை.

. தூரோணாச்சாரியாரை  ஒரு ஆசானாக,  போர்முறைகளை நன்கறிந்தபடைத்தலைவனாக நாம் அறிந்திருக்கிறோம். அந்த துரோணரின்  குடும்பத்தில்  அவருக்கும், அவரது மகன், மனைவிக்கிடையே நடந்த உணர்ச்சி கொந்தளிப்பு போராட்டங்களின் இறுதியில்   ஒவ்வொருவரும் உணரும் உணமையைச்சொல்லுவது தான் ‘WHEN THINGS FALL APART’ என்ற ஆங்கில நாடகம்.
JUST US  சென்னையில் இயங்கும் ஒரு பல்கலை குழு.  இயல் இசை நாடகம் என இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் குழுவின் ஆங்கில நாடகங்கள் இந்திய இதிகாசங்களின் பாத்திரங்களின் உளவியலை ஆழ்ந்து நோக்கும் பார்வையிலிருக்கும்.  பல இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கும் இந்தக் குழுவினர் தங்களது 10ஆம் ஆண்டுவிழாவை  “JUSTFEST” என்று இரு நாள் விழாவாகக் கொண்டனார்கள். அதன் முதல் நாளில் அரங்கேறியது தான் இந்த நாடகம்.
ஒரு நாடகத்தின் வெற்றியின் பெரும்பங்கு அதன் முக்கிய நடிகர்களின்  திறமையில்தானிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாலே காதா பாத்திரங்கள் கொண்ட ஒரு நாடகத்தில்  எந்த ஒரு கலைஞரும் அடுத்தவரை மிஞ்சிவிடாமல்  கன கச்சிதமான நடிப்பால்  அவர்களுடைய  பாத்திரத்தை சிறப்பாகச் செய்யவைப்பது என்பது இயக்குநருக்கு சவாலான விஷயம். அதில் வெற்றி கண்டிருக்கிறார் இதன் இயக்குநரும் குழுவின் தலைவியுமான திருமதி கெளரி ராம்நாரயண் 
கொப்பளிக்கும் கோபத்துடன் தந்தையை நிந்திக்கும் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தந்தை அர்ஜுனனுக்கு சொல்லிக்கொடுத்த  ஒரு வித்தையை தனக்கு சொல்லிக்கொடுக்க வில்லை எனத் தாயுடன் வாதாடும் போதும்,  தந்தையுடன் மோதும்போதும். இறுதியில் போர்க்களத்தில் தன் மரணச்செய்தி கேட்டவுடன் அது தவறென அறியாமலே  அவர் உயிர்துறக்க நேரிட்டபோது அவரின் அன்பையும் பாசத்தையும் புரிந்து கொண்டு தாயிடம் கதுறும்போதும் அந்தக் கலைஞர் அந்தப் பாத்திரமாகவேவாழ்ந்து காட்டிவிட்டார்.  நடித்துக்கொண்டிருப்பது ஒரு பெண் (திருமதி அகிலா) என்பதையே மறந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு உடல் மொழி, உணர்வுகளின் வெளிப்பாடு, கம்பீரமான ஆண்மை தொனிக்கும் குரல் அசத்திவிட்டார் இந்தப் பெண்.
“என்ன மனிதன் நீ?. சபையில் திரபெளதியின் ஆடையினை களைந்து அவமானப்படுத்தப்படும்போது உன் மாணவர்களைக் கண்டிக்காமல் இருந்த நீ ஒரு பிரமாணனா? ஆச்சாரியானா? என கணவரைத் தன் வார்த்தைகளால் கடுமையாக சுடும் தரோணாச்சாரியாரின் மனைவி கிருபி தன் குரலாலும் நடிப்பாலும் “ஆமாம் இவர் சொல்வது சரிதானே? எனப்  பார்வையாளர்களையும் உணரச்செய்கிறார். அந்த அளவிற்குக் கோபத்தை  கொட்டி நடித்திருப்பவர் திருமதி சுனந்தா ரகுநாதன்.
 நாடகத்தின்  வசனங்கள் எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகள். கோபத்தில் திரபெளதியை நீங்கள்  இப்படிப் பார்க்கத்தானே  ஆசைப்பட்டீர்கள்? என தன புடவையின் மேலாக்கை நீக்கதுவங்குகிறார்.கிருபி.   துடித்துபோவது துரோணர் மட்டுமில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் தான்.  இம்மாதிரி ஒரு காட்சியை மேடையில் துளிகூட கண்ணியம் குறையாமல் காட்டியிருப்பதில் காட்சியமைப்பில் இயக்கனருக்குள்ள ஆழ்ந்த அனுபவம் பளிச்சிடுகிறது. 
ஒரு நாடகத்தின் காட்சிகளுக்கு உயிருட்டுவது இசையும் ஒளியும் தான். .  இந்தக் குழு அதை நன்கு  உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.  நாடகம் முழுவதற்கும் தவில் கஞ்சிரா ஓசை தான் பின்னணி இசை. ஒரே ஒருஇடத்தில் கிதார். மட்டும். இசை காட்சிகளுடன் இணைந்திருப்பது போல ஒளியமைப்பும்..
கருப்பு பின்னணித்திரையில் விளக்குகளின் ஒளியை மாற்றிமைப்பதின் மூலமே இரவு, பகல், புலரும் பொழுது, குடிசை, காடு என களத்தை எளிதில் புரிய வைக்கிறார் ஒளி அமைப்பாளர். அதே போல் நடிகர்களின் மீது  அவசியமில்லாத போது அதிக  அளவில் ஒளி பாயாமலிருக்கிறது. இதைச்செய்திருப்பது சென்னை ஆர்ட் தியட்டர் என்ற நிறுவனத்தின் சார்ல்ஸ் என்ற இளைஞர். ஒளியமைப்பின் தொழில் நுட்பம் மட்டுமில்லாமல் நாடகத்தின் காட்சிகளை நன்கு புரிந்துகொண்டிருக்கும் இவர் பாராட்டப்படவேண்டியவர்.

இரண்டாம் நாள் நிகழ்ந்தது ஒரு சமூக நாடகம்  ஓவியனாக வாழ்க்கைத்துவக்கி தோற்று கவிஞனான  அருண்கொலட்கர்  (Kolatkar ))   என்ற மராட்டிய கவிஞன்  ஆங்கிலத்திலும், மாராட்டியிலும் பல கவிதைகள் எழுதியிருப்பவர். இன்றைய இளம் கவிஞர்களுக்கு ஆதர்சம்.  காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசு, சாகித்திய அகதமி விருது போன்ற பல விருதுகள் பெற்ற இந்த கவிஞன் தனிமையை ரசிப்பவன், மாற்றியோசிப்பவன். அவரை  ஒரு தமிழ் நாட்டு பெண்பத்திரிகையாளார்  அவர் வசிக்கும் மும்பையின் காலா கோடா பகுதியில் அவர்  வழக்கமாக அதிக நேரம் செலவிடும் ஒரு சாலையோர ஹோட்டலில் பேட்டிக்காகச் சந்திக்கிறார். பக்தி, கடவுள்,ஆங்கில கவிதைகள்,போலிவிமர்சர்கள், இலக்கியம் போன்ற பல தளங்களில் உரையாடுகிறார்கள்  இது தான் கதை. இந்தக் குழு முதன்முதலில் போட்ட நாடகமான இதைப் பல இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். அதை மீண்டும் இப்போது நடத்தினார்கள்.

இரண்டுபேரின்  உரையாடலை அதுவும் ஒரு பத்திரிகையாளரும் கவிஞரும் உரையாடும் உலர்ந்த விஷயங்களை   ஒரு நாடகமாக்க முடியுமா?   இயக்குநர் கெளரி ராம் நாராயணன் முடியும்  என்பதை மட்டுமில்லை அதை ஒரு இசை நாடகமாகமே செய்ய முடியும் என நீருபிக்கிறார்.. 

வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனின் வாழ்க்கையில் நிகழந்ததாக செய்யபட்டிருக்கும் கற்பனை கதை என்பதை முதல் காட்சியில்  செய்தித் தாளில் படிக்கும் மரணச் செய்தியைக் கொண்டே புரியவைக்கிறார்கள் .
இந்த உலகில் எதுவுமே துச்சம் என அகம்பாவத்துடன் தன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கவிஞன், தந்து பேட்டி சிறப்பாக வரவேண்டுமே என்று துடிப்பில் இருக்கும் பத்திரிகையாளர் என இருவருமே  இயல்பாக நடிக்கிறார்கள். கூர்மையான வசனங்கள், தெளிவான உச்சரிப்பு எளிமையான அதே நேரத்தில்  களனை சிறப்பாக சொல்லும் காட்சிமைப்பு எல்லாமே அருமை.
  உரையாடல்களுக்கு நடுவே பாத்திரங்கள் சொல்லும் விபரங்கள்  இசை சித்தரமாக விரிகின்றன. ஆடல் பாடலுடன் காட்சிகள் நகர்கின்றன.  ஒருவீதியோர ரெஸ்டோரண்ட்., சின்ன பள்ளிக்கூடம் மிரட்டும் ஆசிரியை  இட்லி விற்கும் மராட்டிய பெண்கள்  டீ விற்கும் தமிழ்ப்  பெண் என்று பாத்திரங்கள்  இசை, நடன வடிவில் வந்த போகின்றனர்.  இசை என்றால் எல்லாவிதமான இசையும் வருகிறது.. கர்நாடக,மராத்தி அபங், ஜாஸ், பாப் எல்லாம் வெவ்வேறு பாடல்களில்  இடையிடையே  கவிஞர், பத்திரிகையாளர் உரையாடலும் மிக சீரியசான விஷயங்களில் தொடர்கிறது., பாடல்களில் கவஞரின் கவிதைகள் பயன்படுத்தபட்டிருக்கிறது.  இறுதியில்  ஒரு புலரும் காலையில் தன் வீட்டின் முன் பகுதியை பெருக்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் மும்மை ஏழ்மைப்பகுதியைப் பற்றிய ஒரு  கவிதையை கவிஞரே சொல்லுவது போல முடிகிறது. 
இந்த நாடகத்தின் பின்னணி இசையில் வாத்தியங்கள் எதுவும் கிடையாது. இனிய குரலில்சுத்தமான சுருதியில்  காட்சிகளுக்கேற்ப பாடல்களைப் பாடுகிறார்.  ஒரு காட்சியில் பின்னணியாக பல்வேறு ராகங்களில் சரளிவரிசையின் சா. மா. பா மட்டும் ஒலிக்கிறது. அபங், கர்நாடக இசை, இந்துஸ்தானி, வெஸ்டர்ன்  அவ்வளவையும் ஒரே பாடகி எந்த வித பக்க வாத்தியமும் இல்லாமல் பிரமாதமாக பாடுகிறார். பாடகி சவீதா நரசிம்மன். இவரது   பாடல்கள் இல்லாமலிருந்தால் இந்த நாடகம் போரான உரையாடலாகியிருக்கும்.  பின்னணி பாடும் பாடகியும் மேடையிலேயே இருக்கிறார். ஒரு பாத்திரமாகவும் வருகிறார்.

ஆங்கிலநாடகங்கள்  நடத்தும் குழுவாக இருந்தாலும் தமிழ்  நாடக உலகிற்கு பெரும்பங்களிப்புச் செய்திருக்கும் ந.முத்துசாமி அவர்களை முதல் நாள் நாடகத்துக்கு முன்னும்  திரு இந்திராபார்த்தசாரதி அவர்களை இரண்டாம் நாள் நாடகத்தின் போதும்  கௌரவித்தது மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
திரு இந்திரா பாரத்த சாரதி அரங்கத்துக்கு வர முடியாததால் அவர் இல்லத்திற்கே குழு சென்று கௌரவித்த காட்சியை  திரையில் காட்டினார்கள் . 

மொத்தத்தில் “ஜஸ்ட்” திருவிழா இல்லை பெஸ்ட் திருவிழா
(கல்கி 9/7/17)21/6/17

அமெரிக்க அதிபரின் அடுத்த அதிரடி.. !
அதிரடி அறிவிப்பு மன்னராகவே ஆகிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில்  வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், “அமெரிக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை  அறிவித்திருக்கிறார். 
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே காட்டி வருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்த இயலாததாகக் கூறப்படும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைச்சுவர் விவகாரம், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் நீதித்துறையின் மீது வெறுப்புணர்வு,  போன்ற அறிவிப்புகளின் பட்டியலில் லேட்டஸ்ட் இது. 
 அதிவேகமாக மோசமடைந்துவரும் புவியின் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகச்சொல்லும்,  உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்  இந்த அறிவிப்பில் அவர் இந்தியாவைக் குறிப்பாக  தாக்கியிருக்கிறார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோபத்தைப் புரிந்துகொள்ள பாரிஸ் காலநிலை உடன்படிக்கை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது. 
நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயருதல், பேய் - மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை பல வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்டப் பேரவையானது
(United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992-ம் உருவாக்கப்பட்டது. இது, தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆம் 23 ஆண்டுகள் !  உலக நாடுகளுடன்  பல நகரங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்திவந்தது.  ஒரு நாட்டின் கருத்தை சில அல்லது பல நாடுகள் ஏற்காமல் தொடர்ந்து  அடுத்தடுத்த மாநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட விஷயம் இந்த  காலநிலை உடன் படிக்கை.     2015ல் பாரிஸில்  7 நாட்களுக்குத் திட்டமிட்டு 11 நாட்களாக  நீடித்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்  பிறகு, 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த காலநிலை மாநாட்டில்  வரலாற்றுச் சிறப்புமிக்க “பாரிஸ் உடன்படிக்கை” உருவானது.  அது உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. வளரும் நாடுகளின் சார்பாக வாதிட்ட இந்தியா வளர்ந்த நாடுகள் எப்படிச் சூழலை மாசு படுத்தியிபின் வளரும் நாடுகளின் மீது  கட்டுப்பாட்டை கொண்டுவருகிறது என்பதையும். இதைச் செயலாக்க வளரும் நாடுகளுக்குக் கொடுக்க  வளர்ந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வாதாடி வென்றது. 
குறிப்பாகப்  வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கவேண்டும்  என்பது இந்த  உடன் படிக்கையின்  முக்கிய அம்சம். 
இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸைத் தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கியக் காரணமான  வாயுக்களை வெளியிடும் அளவைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன.  இதன் படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
  .இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும்.. வரைவு ஒப்பந்தத்தில் சொல்லியிருந்த படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்பதை ஏற்றால்  இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்த அளவைக் குறைக்க வற்புறுத்தின.  இறுதியில் அதை 1,5 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்க ஒப்புக்கொண்டன. 

அந்த. மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை இந்தியா உள்பட 195 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. “இந்த உடன்பாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது” என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டி. “அனைவரும் ஒன்றானால் என்ன நடக்கும் என்பதை நாம் உலகிற்குக் காட்டியுள்ளோம்” என்று பெருமையுடன் அறிவித்தார்.  தொடர்ந்து நாடுகள். அதிகாரப்பூர்வமாக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.  
இந்த ஒப்பந்தத்திலிருந்தான் விலகுவதாக இப்போது  அறிவித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.  இந்தத் தீர்மானத்தினால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்பது அவரது கணிப்பு.  மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பது தடுக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்களை நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்று,  2020-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்கிக் கொண்டுவிடும் என்பது தான் அவரின் கோபத்துக்கு காரணம்  இப்படி இந்தியாவின் மீது இருக்கும் வெறுப்பும், அதற்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற நிலையும்  இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு காரணம். .
வளர்ந்த நாடுகள் செலுத்தப்போகும் பணம் அவர்கள் சுற்று சூழலின் வெப்பளவை இதுநாள் வரை தொடர்ந்து அதிகரித்தற்காக  தரும் ஈடுதான் என்ற புரிதல் அவருக்கு இல்லை எனச்சொல்லிவிட முடியாது.. அதிபர் தேர்தலுக்கு பல நாள் முன்னரே அவர் தனது டிவிட்டரில் பாரிஸ் மாநாட்டைக் கடுமையாக சாடியிருக்கிறார்.  தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தார். ஆனால்   அவருடைய தேர்தல் அறிக்கையை  பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. 
இந்த அறிவிப்பைப் பல உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமில்லை அமெரிக்காவின்  கூகுள்.  மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும்  கண்டனம் செய்திருக்கின்றனர்.  அவரது கட்சியின் அறிவு ஜீவிகளும் எதிர்க்கிறார்கள். 
 ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் எழும் இந்த மாதிரி உடன்படிக்கைகளிலிருந்து  கையெழுத்திட்ட நாடுகள் வெளியேற விரும்பினால் அதற்கான விதிமுறைகளையும் அதில்  சேர்க்கப்பட்டிருக்கும். அதன் படி இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமானால் அதற்கான ஒராண்டு நோட்டிஸையே 2019 நவம்பரில் தான் கொடுக்க முடியும். அதற்கு ஒராண்டுக்குபின்னர் அதாவது 2020 நவம்பருக்குப் பின்னர்தான் வெளியேற முடியும். டிரம்பின் பதவிக்காலம் 2020 நவம்பர் 4 வரைதான்.
இது அவருக்குத் தெரியாதா?  இதுமட்டுமில்லை. தெரிந்த விஷயங்களையும் தெரியாத மாதிரி அறிவிப்பது தான் அதிரடி அரசியல் என்பதும் அதிபருக்குத் தெரியும். 

9/6/17

டிரம்ப் தான் பிரச்சனையா? கடந்த சில வாரங்களாகத் தலைப்பு செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கும் இதைப் பற்றி ஓர் அலசல்
அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு என்ற கோஷத்துடன் தேர்தலில்  வென்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.                     
மேலும், 'வெளிநாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்துப் பணியமர்த்தும் போது, அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடுதல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.
இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
இது எந்தளவுக்கு உண்மை? என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்
இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கையை, அமெரிக்க தேர்தலுக்கு முன்னரே துவங்கிவிட்டன. அமெரிக்க அதிபரின் அறிவிப்பால்  அது தலைப்பு செய்தியாகியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா தலைமைப்பண்பு மாநாட்டில், ஐடி துறைப் பணியாளர்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அடுத்த மூன்றாண்டுகளில் ஐடி துறையில் பணியாற்றும் பலரும் தேவையற்றவர்களாகிவிடுவார்கள். நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களால், 50-60 சதவிகிதம் வரையிலான பணியாளர்களைத் தக்கவைப்பதில் நிறுவனங்கள் கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும். புதிதாகக் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களால், 35 வயதுக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வேலை இழக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன’ எனக் குறிப்பிட்டு, மெக்கின்ஸி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
 ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.
சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப்புகளும், வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவைக் கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கும் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஊழியர் களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இறங்கி யுள்ளது., எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய - ஐ.டி., துறை.     நாஸ்காம்  மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது

ஆட்குறைப்பு காரணம் இது மட்டுமில்லை. நாம் சர்வதேச தேவைகளுக்கெற்ற்ப அப்டேட் ஆக வில்லை என்பது தான்  உண்மை என்கிறார். வா. மணிகண்டன். இவர் பல பயிற்சிகள் பெற்ற பென்பொறியாளர். பங்களூருவில் பணியிலிருக்கிறார்.
“கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை வெகு வேகமாக புதிய பரப்புகளை அடைந்திருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே மொட்டுகளாக இருந்த சொற்கள் எல்லாம் இன்றைக்கு பூத்துக் காயாகி கனியாகி நிற்கின்றன. இந்தத் துறையின் வேகம் அலாதியானது. ஆனால் நாம்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எதைக் கற்றுக் கொண்டிருந்தோமோ அதையே கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திய வேலைச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களும் சரி, மாணவர்களும் சரி புதிய பிரிவுகளைப் பற்றி தெளிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.

இன்றைக்கு மென்பொருள் துறையில் வேலையில் இருக்கிறவர்களின் பெரிய பிரச்சினை தம்மை ஒரு மென்பொருளோடு பிணைத்துக் கொள்வதுதான். ஆரக்கிளிலில் வேலை செய்தால் அதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலை பலருக்கும் இருக்கிறது. மென்பொருள்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமானது இல்லை. இன்றைக்கு ஆரக்கிள் இருக்கிறது. நாளைக்கு டேரக்கிள் என்று புதியதாக ஏதேனும் வரக் கூடும். எந்தவொரு மென்பொருளையுமே பத்து நாட்கள் மண்டையை உடைத்தால் கற்றுக் கொள்ள முடியும். அது பெரிய காரியமே இல்லை. அப்படியென்றால் எது பெரிய காரியம்? நம்முடைய துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது. இன்றைக்கு தொலைத் தொடர்புத்துறைக்கான ப்ராஜக்ட் ஒன்றை .net ஐ வைத்துச் செய்து கொடுத்தால் .netஇல் பிஸ்தாவாக இருப்பதைவிடவும் தொலைத்தொடர்புத் துறையில் பிஸ்தாவாக இருப்பதுதான் பெரிய காரியம். உற்பத்தி (manufacturing), ஊர்தி (automobile) என எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ அதைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும். domain knowledge என்பார்கள். அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்னதான் மென்பொருள் மாறினாலும் சமாளித்துவிடலாம்.

புதிதாக என்ன களம் உருவானாலும் அதை நம் துறையில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிற ஆட்களுக்கு அவசியம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு ஆயிரம் வாய்ப்புகளா என்று கேட்டால், ஆம், ஆயிரம் வாய்ப்புகள்தான். என்கிறார்.
கிபி 2000 ஆம் ஆண்டுவாக்கில் சி, சி++, ஜாவா அதன் பிறகு .net என்று படித்துக்
கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருக்கிறோம். கல்லூரிகளில் இத்தகைய பாடங்களைத்தான் சொல்லித் தருகிறார்கள். Cloud, IoT, Business Intelligence மாதிரியான புதிய களங்களைக் கல்லூரிகள் சொல்லித் தருவதில்லை. சுடச்சுட வளர்ந்து வரும் பிரிவுகளைப் பற்றிக் கற்றுத் தருகிற பயிற்சி நிறுவனங்களும் வெகு குறைவு.  என்கிறார் திரு  குஹன் ரமணன். இவர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை  உலகளவில் மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்.
 எனவே பிரச்சினைகளுக்கு டிரம்ப் மட்டுமே காரணம் இல்லை நிலவும்  டிரெண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்