“அன்று
நல்ல மழை பெய்துகொண்டிருந்தாலும் சாயங்கால பூஜைக்கு நல்ல கூட்டம். பூஜைகளை முடித்துவிட்டு
கோவிலையும் மூடியபின் கோவில் வளாகத்திலேயிருக்கும் என் அறையில் இருந்தேன். இரவு 8 மணியளவில் வெளியே ஒரே சப்தம். பலர் கத்திய படி ஓடி வந்துகொண்டிருந்தனர். எட்டிபார்த்த
நான் அப்படியே உறைந்துபோனேன். கோவிலின் பின்னால் உள்ள மலைசரிவில் மேகங்கள் வெடித்து வானமே பொத்துக் கொண்டதுபோல பெரிய அளவில் வெள்ளம் வந்து கொண்டிருந்தது.
வினாடியில் சுதாரித்து கோவிலுக்குள் ஒடுவதற்குள் வெள்ளம் வேகமாக கோவில் கம்பெளண்ட் சுவரை உடைத்து பாய்ந்தது. கோவிலின் இரண்டுபக்கமும்
ஆள் உயரத்திற்கு வெள்ளம். குருஆதி சங்கரரின்
சமாதி இருந்த கோவில் உடைந்து அதிலிருந்த அவர் பளிங்கு சிலையும் மரகத லிங்கமும் அடித்து
செல்வதை பார்த்தேன். நாம் வாழ்வு இன்னும் சில
நிமிடங்கள் தான் அது இந்த தெய்வ சன்னதியில் போகட்டும் என கோவிலிலே இருக்க தீர்மானித்தேன்.
என்னுடன் 8 பேர். வெளியே பெரிய இரைச்சலோடு வெள்ளம் போய் கொண்டிருந்தாலும் கோவிலின்
உள்ளே மெல்லதான் நீர் உயர்ந்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் நின்று கொண்டே இருந்த
நான் காலயில் சற்று மழை விட்டதும் வெளியே வந்து பார்த்தேன். வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது.
ஆனால் கோவில் வாசலில் நிறைய பிணங்கள். ஊர் முழுவமே அழிந்து அடித்து செல்லபட்டிருந்தது.
என்ன செய்வது என தெரியாமல் சற்று நடந்து பார்த்ததில் மலையின் மறுபக்தியில் மக்கள் நடமாட்டம்
தெரிந்த்து. ஆனால் அங்கே போக இடையில் ஒரு சின்ன
ஓடையை கடக்க வேண்டும். எப்போது பாதம் தொட்டுமட்டுமே நீர் போகும் அதில் ஆள் உயரத்திற்கு
தண்ணீர் போய்கொண்டிருந்தது துணிவுடன் மந்திரங்களை ஜபித்து கொண்டே நீந்தி கரைய அடைந்து
24 மணி நேரதவிப்புக்கு பின்னர் ஹெலிகாப்டரில்
வந்து அழைத்துபோனார்கள். 18 வருடமாக இந்த கோவிலில் பணி செய்கிறேன். பரம்பரையாக என்
குடும்பத்தாரின் பணி இது. இதுவரை இத்தகைய கோரம் நிகழ்ந்ததாக சரித்திரமில்லை. ஏன் இப்போது
சிவபெருமானுக்கு கோபம் வந்து சிவதாண்டவம் ஆடியிருக்கிறோ தெரியவில்லை.” என்கிறார் கேதார் நாத் கோவிலின் அர்ச்சகர்களில்
ஒருவரான ரவி பட். நிகழ்ந்ததை பார்த்து தப்பித்த சிலரில் ஒருவரான இவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லுகிறார்.
இப்போது டேராடுனுக்கு அருகிலிருக்கும் கிராமத்திலிருக்கும் ரவி பட்டின் கவலையெல்லாம்
பெருமானுக்கு தினபூஜைகள் நைவேத்தியங்கள் இல்லாது
போய்விட்டதே என்பதுதான்.
நம்
நாட்டின் மிக பழமையான சிவன் கோவில்களில் ஒன்று கேதார்நாத். 12 ஜோதிர்லிங்களில் மிக
முக்கியமானதாக கருதப்படும் இந்த கோவில் இமயமலைதொடரில் ஒரு பகுதியில் இருக்கிறது. உத்தர்காண்ட்
மாநிலத்தில் ருத்தரபிர்யாக் பகுதியில் அமைந்திருக்கும் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பரல்
முதல் தீபாவளி வரைதான் திறந்திருக்கும். மீதி நாட்களில் பனிகொட்டிகொண்டிருக்கும் காலம்
எனபதால் கோவில் மூடபட்டுவிடும்,கேதார் ஊரே காலியாகி மலை அடிவாரத்திற்கு இடம் பெயர்ந்துவிடும்.
பல லட்சகணகான யாத்திரிகர்கள் வரும் இந்த கோவிலுக்கு நேரடியான போக்குவரத்து வசதிகள்
கிடையாது. கெளரி குண்ட் என்ற பகுதிவரை கார் பஸ் போகும் அங்கிருந்து 18 கீமீ மலையில் நடக்க வேண்டும். குதிரை, பல்லக்கு களிலும் போகலாம். இமயமலையின் பல பகுதிகளில் அருமையான ரோடுகளை போட்டு நிர்வகிக்கும் இந்திய ராணுவத்தின்
ஒரு அமைப்பான பார்டர் ரோடு ஆர்க்னேஷேனின் தலமை அலுவலகம் டேராடுனில் இருந்தாலும் என்ன காரணத்தோலோ இந்த இடத்தில் வாகனம் போகும்வகையில்
ரோடுகள் அமைக்க படவில்லை. முழுவதும் நடந்து ஏற
முடியாது போய்விடுமோ என்ற பயத்தில் பலர் குதிரையில்பயணம் செய்வார்கள். 1000க்கும்
மேல் குதிரைகள் இருக்கின்றன. ஒவ்வொரு குதிரையுடன் ஒரு 12 வயது பையன் “கைடு” ஆக வருவார். கோவிலை அடைய 4
மனிநேரம் ஆகும். அவர் கார்வாலி மொழியில் பேசிகொண்டே வருவார். பேசுவது நம்முடனா குதிரையுடனா
என்பது புரியாது. தரிசனம் முடிந்து திரும்பி வரும்வரை காத்திருந்து சரியாக நம்மை அடையாளம்
கண்டு பாதுகாப்பாக அழைத்து வருவார்கள். இந்த
வெள்ளத்தில் இந்த குதிரைகளும், அந்தகைடுகளும்
பெருமளவில் காணமல் போயிருக்கிறார்கள்
கோவில்
சிறியது. எந்தவிதமான சாரளமும் இல்லாமல் கற்கள் அடுக்கிகட்டபட்ட கோவில் அந்த கடும் குளிரிலும் காலை 4 மணிக்கு பூஜை துவங்கும் உள்ளே சன்னதியில் அம்ர்ந்து நீங்களே அபிஷேகம் ஆராதனை
செய்யலாம். உள்ளே இட வசதிகுறைவினால் வெளியில் நடுங்கும் குளிரில் காத்திருக்க வேண்டும்,
கோவில் ஒரு மலைச்சரிவில் அமைந்திருக்கிறது.
கோவிலை சுற்றி எழுப்ப பட்டிருக்கும் சுவரில்
திருநாவுகரசரின் உருவமும் இந்ததலத்தை பற்றிய அவரது பாடல் வரிகள் தமிழிலும், ஹிந்தியிலும்
சம்ஸ்கிருத்திலும் பொறிக்க பட்ட கல்வெட்டுகள். தமிழ்நாட்டு நகரத்தார் உபயம். சற்று தள்ளி ஆதி சங்கரர் தன் ஒரே சொத்தான தண்டத்தை
துறந்து இமயத்தின் உச்சியை நோக்கி நடந்த இடத்தை குறிக்கும் வகையில் ஒரு கைமட்டும்
தண்டத்துடன் எழுப்பட்ட சின்னம். இவையெல்லாம்
இருந்த இடம் அடையளாம் தெரியவில்லை. ஆனால் இந்த 8 நூற்ராண்டு கோவில் மட்டும் அப்படியே
நிற்பது ஆச்சரியம்
கோவில்
அருகில் பெரிய அளவில் நதி கிடையாது. (ஒரு காலத்தில்
இருந்திருக்கிறது) ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களை இந்த பகுதி சந்திக்கிறது. இதற்கு முன்பும்கூட
பலமுறை இமயமலையில் பெரும் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது அப்படியிருக்கும்போது
இந்த கோவிலில் வெள்ளம் எப்படி சூழ்ந்தது ?
1000 ஆண்டுகாலம் இல்லாமல் எப்படி இந்த பயங்கர விபத்து
இப்போது நிகழந்தது?
மழையும்
வெள்ளமும் இயற்கையின் சீற்றமாமக இருக்கலாம் ஆனால் ஆனால் இந்தப் பேரழிவுக்கான பழியை இயற்கை
மீதுபோடுவது தவறு. . இது Man Made Disaster க்கு மனிதர்களின் செயலே காரணம் என்கிறார் உத்தர்கண்ட் பகுதி சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர் மகராஜ்
பண்டிட்.
உத்தர்கண்ட்
மாநிலம் உருவான காலத்திலிருந்தே அவர்கள் சந்தித்த மிகபெரிய பிர்ச்சனை மின்பற்றாகுறை.
ஜீவ நதியான அலக்நந்தா (கங்கை) இருந்தும் மாநிலத்தின் மின் தேவைக்கு அண்டைமாநிலங்களை
நாட்வேண்டியிருந்தது. மாறிவந்த அரசுகள் தொடர்ந்து
சிரு சிறு அளவில் மலைப்பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க துவங்கின. இன்னும் 90நிலையங்களுக்கு திட்டமிடபட்டிருக்கிறது.
இந்த மின் நிலையங்களின் தேவைக்கு ஏற்ற பல இடங்களில்
நதிகளின் போக்குகள் திருப்பிவிடபட்டன. கங்கையின் மற்ற முக்கிய துணையாறுகளான பாகீரதி 80 சதவீதமும், அலக்நந்தா 65 சதவீதமும் பாதை
மாற்றப்பட்டுள்ளன, மின் திட்டங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்காக. மற்ற சிறிய ஆறுகள்
90 சதவீதம் அதன் போக்கிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளன..
அவற்றில் ஒன்று கேதார் கோவிலுக்கு அருகில் சென்ற
மந்தாகினியின் பிரிவு, 10 ஆண்டுகளுக்கு முன்னரே இது செய்யபட்டுவிட்டது கேதார்நாத் மூன்று
மலைகளுக்கிடையே இருக்கும் சிறு பள்ளதாக்கு, ஒன்றின் உச்சிக்கு பெயர் ”கேதார் டோம்”.
இது ஒரு பனிச்சிகரம். இந்த சிகரம்தான் உடைந்து அதன் கீழே உள்ள சர்பால் ஏரியில் விழுந்தது.
இது கோவிலுக்கு 6 கீமீ தொலைவில் இருக்கிறது, அன்று ஏற்கனவே பேய் மழை பெய்து கொண்டிருந்தாதால்
ஏரி நிரம்பிக்கொண்டிருந்தது. பல ஆயிர கன அடி தண்ணீராக பனிசிகரம் கேதார் டோம் இந்தஏரியில் விழுந்தவுடன்
ஏறி உடைந்தது. வெளியேறிய நீர் ஒரு ”இமாலய சுனாமி “யை உருவாக்கியதால், மந்தாகினி ஆறு தனது பழைய பாதையைதே தேடி பெரும் வேகத்தில்
வழியிலிருந்து மனிதர்கள், கட்டடங்கள், வாகனங்கள் அத்தனையையும் வாரிசு சுருட்டி வீசிவிட்டு ஓடியது. அதன்
விளைவாக மலையின் கீழ்பகுதியாக இருக்கும் ரிஷிகேஷில்
கங்கை கரையில் இருக்கும் 14 அடி உயர சிவன்
சிலை முழுகும் அளவிற்கு தன்சீற்றத்தை காட்டியது
கரையின் இருபுறமும் வெள்ளம் அழித்த கட்டிடங்களில்
90%க்கு மேல் அனுமதி பெறாதவை, அரசியல் வாதிகளுக்கு சொந்தமானவை. ரோடு அருகில் ஒருசின்ன
இடத்தை வாங்கி அதையொட்டி இருக்கும் மலைச்சரிவிலும் ஆற்று படுகைகளிலும் ராட்சத கான்கீரிட்
தூண்களை எழுப்பி அதன் மீது விரிந்த பரப்பில் உருவாக்கிய கட்டிடங்கள். இந்த பேரழிவில் சிக்கிய யாத்திரிகர்களையும் அவர்களை
மாநில அரசுகள் மீட்டதைபற்றியும் மீடியாக்கள்
எழுதிதள்ளுகின்றன. ஆனால் மிக அதிக அளவில்
பாதிக்கபட்டிருபது அந்த மலைச்சரிவின் 200கிராமங்களின் மக்கள்.. அவர்களில் பலருக்கு
வாழ்வாதரம் இந்த கோவில்தான். மாநில மக்கள் தொகை ஒரு கோடி, வரும் டூரிஸ்ட்கள் 2.5 கோடி.
பலருக்கு 6 மாதசீஸன் வருமானத்தில் ஒராண்டு வாழக்கை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு
வாழ வேறு வழியில்லை.
இயற்கையின் சீற்றம் ஒவ்வொருமுறையும் நமக்கு ஒரு பாடம் சொல்லிதரும். இம்முறை நதிகள் சொல்லியிருப்பது
காடுகளை அழித்து, எங்கள் போக்கை மாற்றினால் ஒரு நாள்- பெரும் அழிவிற்கு பின் நாங்களே அதை சரிசெய்து கொள்வோம். \