30/8/13

இன்னும் ஒரு ராமனுஜம்


உலகின்மிகச் சிறந்த கணித மேதைகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒருவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இவரது பெற்றோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தந்தையின் ஊர் கும்பகோணம், தாய் தஞ்சையை சேர்ந்தவர். புதுடெல்லியில் 1981ல் பிறந்த அக்‌ஷ்ய் ஆரம்ப கல்வியை அங்கே   துவங்கி தந்தையின் பணிமாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் தொடர்ந்தவர். அந்த சிறுவனுக்கு புதிய இடம், புதிய மொழி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் முதல்..  ஆஸ்திரேலிய பள்ளிகளில் இம்மாதிரி திறமையான மாணவர்களை “கிஃபட்டட் சில்ரன்” என்று அடையாளம் காணப்பட்டு விசேஷ பயிற்சிகள்  தந்து ஊக்குவிப்பார்கள்.  அக்‌ஷ்ய்யின் பள்ளியில் அந்த வாய்ப்பின் மூலம் பயிற்சி பெற்று  சர்வதேச ”பிஸிக்ஸ் ஒலிம்பியார்ட்”டில் பங்கு பெற்று பதக்கம் பெற்றார் அப்போது அவருக்கு வயது 11. ஓலிம்பியார்ட் என்பதுஉலகளவில்  ஒரு பாடத்தில் மிகச் சிறந்த மாணவனை தேர்ந்தெடுக்கும் கடினமான போட்டி. முதலில் மாவட்ட அளவில், பின்அவர்களிலிருந்து மாநில அளவில் தேர்ந்தெடுக்கபட்டு அவர்களில் சிறந்தவர்கள் இறுதியில் தேசத்தின் சார்பாக சர்வதேச  அளவில் பங்குகொள்ளும் போட்டி.  இதில் 1993ஆம் ஆண்டு மூன்றாம் இடம் பெற்ற  அக்‌ஷ்ய் அடுத்த ஆண்டு பிஸிக்ஸில் முதலிடத்திற்காக போட்டியிடுவதற்கு பதிலாக கணித ஒலிம்ப்யார்ட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்களும் ஊக்குவித்து உதவி செய்ய 1994ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்ப்பியார்ட்டில் தங்கபதக்கம் வாங்கினார். தொடர்ந்து அடுத்த அடுத்த ஆண்டுகளில் இப்படி ஒலிம்யார்ட் பதக்கங்கள்  அதுவும் வெவ்வேறு பாடங்களில் வாங்கியது இதுவரை யாரும் இல்லை. இந்த அங்கீகாரங்களின்மூலம் பள்ளியில் கிடைத்த பிரோமோஷன்களினால் பள்ளி இறுதியாண்டை 13 வயதிலேயே முடித்து விசேஷ அனுமதிகள் மூலம் 14 வயதில்  கல்லூரியில் கால்வைத்தவர் இவர்.  ஆஸ்திரேலிய பலகலைகழகத்தில் இந்த வயதில்  எவரும் இந்த சாதனையை செய்த்தில்லை. நாலு ஆண்டு கணித ஹானர்ஸ் படிப்பை இரண்டே ஆண்டில் முடித்து  17 வது வயதில் அந்த பல்கலைகழகத்தின் முதன்மை மாணவராகவும் முதல் இளம்வயது ஹானர்ஸ் பட்டதாரியாகவும்  வெளிவந்தார். இந்த காலகட்டத்தில் இவர் எழுதிய ஆராய்ச்சிகட்டுரைகளுக்கு பல பரிசுகளும் ஸ்காலர்ஷிப்புகளும் கிடைத்தது மட்டுமில்லாமல்   வெளிநாட்டு, உள்நாட்டு பலகலை கழகங்கள் ஆராய்ச்சி படிப்பை தொடர இவரை அழைத்தது. ஆனால் அக்‌ஷய்  அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில்  தான் குருவாக மதிக்கும் கணித மேதை திரு பீட்டர் ஸ்நாரக் என்பவரின் கீழ் பணிபுரிந்து ஆராய்ச்சி செய்யவே விரும்பினார்.  2002ல் தனது 21ஆவது வயதில்  பிஹெச் டி பட்டம் பெற்ற இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை கவனித்த MIT என்று உலகம் முழுவது அறியபட்டிருக்கும் புகழ் பெற்ற ’மாஸாசுஸுஸ்ட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி’ பேராசிரியர் பணி தந்து அழைத்தது. மிகப்பெரிய கவுரமான இதை ஏற்று  தன் ஆசிரிய பணியையும் ஆராய்ச்சிபணியையும் தொடர்ந்தார். ஆண்டுதோறும்  உலகின் பல பல்கலைகழகங்களிலிருந்தும், ஆராய்ச்சி மையங்களிலிருந்தும் விருதுகளும், பரிசுகளும் குவிகிறது. கணித துறையை சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாக செய்யப்படாத பல ஆராய்ச்சிகள் இவரால் குறுகிய காலத்தில் செய்து முடிக்கபட்டிருப்பதாக புகழாராம் சூட்டுகின்றனர்
.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம் 2008 ஆண்டு  சாஸ்த்ரா-ராமானுஜம் பரிசையும் பரிசுபணமாக 10,000 அமெரிக்க டாலர்களையும் மேதை ராமானுஜத்தின் ஊரான கும்பகோணத்தில் நடத்திய ஒரு சர்வ தேச கணித கருத்தரங்கில் இவருக்கு வழங்கியது.  இந்த பரிசுக்கு இவரை தேர்ந்தெடுத்தது,ஐந்து பெரிய அமெரிக்க பல்கலைகழகங்களின் மூத்த பேராசிரியர்கள்.

தற்போது அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் 32 வயதிலேயே மூத்தபேராசியாரக அங்கீகரிக்க பட்டு தன் ஆராய்சியை தொடரும் அகஷ்ய் இந்தியா வருவரா? ”2015 வரை என் பயணங்கள் முடிவு செய்யபட்டுவிட்டன,அதன்பின் பல்கலைகழகங்கள் அழைத்தால் வருவேன்” என்கிறார்.


24/8/13

நிழலின் இசையை ரசித்த மரங்கள்.



”நிழல்”இயற்கையின் கொடையான மரங்களின்,தாவரங்களின், சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்லி அவைகளை சேசிக்க சொல்லிகொடுக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு விரும்பும் ஆர்வலர்களை அழைத்து சென்று அவைகளை அறிமுகபடுத்தும் “டீரி வாக்” (Tree walk) நடைப்பயணங்களை அவ்வப்போது நடத்துபவர்கள். இந்த ஆண்டு சென்னைநகரின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து சென்ற இடம் கலாஷேத்திரா.


இசையையும் நடனத்தையும் மரபு வழுவாத பாரம்பரியத்துடன் கற்பிக்க திருமதி ருக்மணி அருண்டேல் உருவாக்கிய கலாஷேத்திரத்தாவில் நுண்கலைகளுடன் மரங்களையும் செடிகளையும் நேசித்து வளர்த்தார். அவைகள் இன்று அழகான ஒரு காடாகவும்,பூஞ்சோலையாகவும் மலர்ந்திருக்கிறது. மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத இந்த அழகான அமைதி சொர்க்கத்திற்கு சிறப்பு அனுமதியுடன் இசைக்கலைஞர் செளமியாவுடன் அங்குள்ள மரங்களை சந்திக்க. அழைத்து போனார்கள் நிழல் அமைப்பினர். இந்த பயணத்தில் ஒவ்வொரு மரத்தின் கீழும் அதன் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை, இயற்கையை காக்க அவைகள் செய்யும் பணிகளை,நமது வழி பாடுகளில் அவற்றிற்கு இருக்கும் முக்கியத்துவம பற்றி எல்லாம் சொல்லபட்டபின்னர் செளமியா அந்த மரம் குறித்த, அல்லது அதன் பெயர் இடம் பெற்ற பாடல்களின் சில வரிகளை பாடிகாட்டினார். ஒவ்வொரு மரத்திற்கும் அது அந்த பாடலில் இடம் பெற்றிருப்பதற்கான சிறப்பான காரணம், அந்த பாடலை எழுதியவர் ராகம் எல்லாவற்றையும் பிரமாதமாக விளக்கி சொல்லிவிட்டு பாடலை பாடினார். சிறிய தம்பூராவை ஒருகையில் வைத்து மீட்டியவண்ணம் பாடலின் சிலவரிகளை பாடினார். ”மைக் வேண்டாம்அமைதியாக கவனமாக இருந்தால்கேட்கும்” என்று சொல்லி  சிலப்பதிகாரம், தியாகையர், தீட்சதர்பாடல்கள்,தேவாரம், திருவாசம் என  பலவற்றிலிருந்து  தேர்ந்தெடுக்கபட்ட வரிகளை அந்தந்த மரத்தின் கீழ் பாடினார்.  முழுவதும் பாடமாட்டாரா? என எண்ணவைத்த 
செளமியா  டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இசையிலா?  பாட்டினி பாடத்திலா? என ஆச்சரியப்படும் அளவிற்கு இதற்காக ஹோம் ஒர்க் செய்திருந்தார்.. தன்கைப்பட எழுதிய பேப்பரிலிருந்து பார்த்து பாடும் செளமியா ஐ பேடில் பாடலைத்தேடி கண்டுபிடித்து பாடும் அடுத்த தலைமுறைகலைஞர்களான சீடர்களையும் உடன் அழைத்து ஊக்கபடுத்தியது   ஒரு மகிழ்ச்சியான காட்சி.
வம்சம்தழைக்க உதவும் மருத்துவ சக்தி வாய்ந்ததால்தான் கல்யாணமுருங்கை திருமணங்களில் மூஹூர்த்தகால் மரங்களாக நடப்படுகிறது, மலர்ந்து உதிர்ந்த மகிழம்பூக்கள் சருகானாலும் மணம் பரப்புவதை நிறுத்துவதில்லை. ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் கட்டி ஆடினால் அதற்கு மிகவும்வலிக்கும். மரங்களில் வண்ணவிளக்குகள் போட்டால் அதிலிருக்கும் பறவைகள் அன்று தங்கஇடமில்லமல் தவிக்கும் போன்ற பல செய்திகளை செளமியாவின் இசையுடன் நமக்கு சொன்னவர்கள் நிழல் உறுப்பினர்களான திரு பாபுவும், திருமதி லதா நாதனும்.
கலாஷேத்திராவில் ஒரு மரத்தில் வண்ணத்து பூச்சிகள் தேனடையில் தேனிக்கள் இருப்பது போல மொய்த்துகொண்டிருந்தன. அது ”டீரி ஆப் லைப்” என்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படும்வகை என்றும் சொன்னார்கள். ஒரே மரத்தில் இத்தனை வண்ணத்துபூச்சிகளை பார்த்ததைவிட ஆச்சரியம் அவை அனைத்தும் பறக்காமல் அங்ககேயே இருந்தது தான். ஒரு வேளை அவைகளும் செளமியாவின் பாடல்களினால் மெய்மறந்து பறக்க மறந்துவிட்டனவோ ?
கல்கி 01/09/13

19/8/13

பென்ஸ் காரின் விலையில் ஒரு எருமை

ஆதித்தியா
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சின்சுவாஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை  லட்சுமி என பெயரிட்டு அன்புடன்  வளர்த்து பராமரித்து வந்தார். அரியானா மாநிலத்தின் முர்ரா எருமை மாடுகள்  உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை நாளொன்றுக்கு 32 கிலோ அளவிற்கு கூட பால் கறக்கும்   அந்த இனத்தை சேர்ந்த லட்சுமி நாள்  ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறக்கிறது..


லட்சுமி பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் ”அழகி போட்டி” அதிக அளவு பால் வழங்கும் எருமை” போன்ற  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றதினால் இந்த கருப்பு அழகி  மாநிலம் முழுவதும் பாப்புலர்..

 பலர் விலைக்கு கேட்டும் தர மறுத்துகொண்டிருந்தார் அதன் உரிமையாளர். . கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர்   மிக அதிக விலையாக லட்சுமிக்கு 19 லட்சம் தருவதாக கேட்டபோது அவரை தவிர்ப்பதற்காக  விலை 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறார்.  ராஜீவ் அதை தர சம்மதித்து உரிமையாளர் கபூர் சிங்கை ஆச்சரியபடுத்தினார்,   இவ்வளவு பெரும் பணத்தை தனக்கு அளித்த அருமை லட்சுமியை ஒரு பிரிவுபசார விழா நடத்தி மரியாதையோடு அனுப்ப விரும்பினார் கபூர் சிங்.விழாவிற்கு நாள் குறிக்க பட்டது. அன்று லஷ்மிக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து  அலங்கரித்தார். 

 
அதை தனது கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார். மேலும்  அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்து அதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்திருக்கிறார்.   அருகிலுள்ள கிராம மக்களும் பங்கு கொண்ட  அந்த விழாவில் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாநில கால்நடைத்துறையின் மூத்த அதிகாரி இம்மாதிரி நிகழ்ச்சிகள் மேலும் பல விவசாயிகள் இத்கைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க தூண்டும்  என்று சொல்லுகிறார். நிகழச்சியை பிபிசி டிவி கவர் செய்திருக்கிறது.
இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கபூர்சிங் இதை வாங்கிய விலை 2 லட்சம்.  தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திராவிலிருந்து அரியான  வந்து  ஒரு பென்ஸ்காரின் விலையில் ஏன் இப்படி இந்த  எருமை மாட்டை வாங்குகிறார் ?  2014 ஜனவரியில் ஆந்திர அரசு நடத்தவிற்கும் கால்நடை கண்காட்சியில்  தேர்ந்தெடுக்கபடும்  சிறாந்த எருமைக்கு கிடைக்க போகும் பரிசு   ஒரு கிலோ தங்கமாம்.



ஆதித்தியா

12/8/13

"பேசும்” பொன்னியின் செல்வன்


 ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது.  கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள் சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா  தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில்.  கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக  சி. டி வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய ஆடியோ புக் வகையைசேர்ந்தது.  
ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர். மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர்.  ”ஸ்ரீ” என்று  பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம்.  நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ் சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர் இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.
ஆடியோ புத்தக ஐடியா எப்படி வந்தது? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில்  நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற  எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட  40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன்.   நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள்.   75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது.  இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்  ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே  ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது? ஆர்வம், சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.



   ஐ போன், ஐபேட், டேபிளட் என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம்? மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால்  போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது? உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள்  வாங்குகிறார்கள். விற்பனையைவிட  “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்”  ஆடியோ புத்தகத்தை கேட்ட  என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற  வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார். “ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”
கல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும் ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின்  பணி மகத்தானது.

-ஆதித்தியா (ரமணன்)

8/8/13

“கீதையின் மீது ஆணையாக…..”


60 களின் இறுதியில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்து மேற்படிப்புகாக டெக்ஸாஸ் பல்கலைகழகத்திற்கு வந்தவர் சொக்கலிஙம் கண்ணப்பன்.நாட்டரசன் கோட்டைகாரர். மேற்படிப்பு  முடித்தபின் அதே மாநிலத்தில் வேலைகிடைத்து பல நிருவனங்களில் பணியாற்றி  இன்று ஒரு பன்னாட்டு பொறியில் நிறுவனத்தில் டிசைன் வல்லூனராக பெரிய பதவியில் இருக்கும் இவர் ” “ஸாம்”“ எனறு மாநில முழுவதும்  பாபுலராக அறிய பட்ட  ஒரு பொறியாளார்.
பல பெரிய நிறுவனங்களுக்கும், நாஸா போன்ற அரசு அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்கிவருபவர். உயர் அழுத்ததிலும் பாதுகாப்பாக இயங்க கூடிய குழாய்களை அமைப்பதில் வல்லூரான, அத்துறையில் இவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் பல்கலை கழங்களில் பாடபுத்தகமாகியிருக்கிறது. செயல்பாட்டுக்காக ஒரு மென்பொருளையும் வடிவமைத்திருக்கிறார்.
டெக்ஸாஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம்.  இங்கு பொறியாளார்களாக பணிபுரிய  தகுதி தேர்வு எழுதி லைஸ்சன்ஸ் வாங்க வேண்டும்.இப்போது இதுபோல் அனுமதி பெற்ரிருப்பவர்கள் 57 ஆயிரம்பேர். இந்த தேர்வுகளையும், அனுமதி வழங்குவதையும் செய்வது மாநில அரசின்  (டெக்ஸாஸ் பிரொபஷனல் என்ஞ்னியரிங் போர்ட் (TexasProfessional Engineers Board)  அரசு அமைப்பான இதன் நிர்வாக குழுவின் உறுப்பினாராக சொக்கலிங்கம் கண்ணப்பன் கடந்த ஆண்டு  நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க பொறியாளார்களிடையே மிக கெளரமான பதவி இது. மாநில கவர்னர் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பொதுவாக இத்தகைய நிகழச்சியில் பைபிளில்மீது கைவைத்தோ அல்லது  நெஞ்சில் கை வைத்தோ தான் பிராமணம் எடுப்பது வழக்கம். மாறாக தன் மனைவி திருமதி மீனாட்சி பகவத் கீதையை நீட்ட அதில் கைவைத்த பின்னர்   கவர்னர்  எட் எமெட் சொன்னதை திருப்பிச்சொல்லி பிரமாணம் எடுத்தார் இவர். இந்திய துணை தூதர், ஜெர்மானிய துணை தூதர், நகர மேயர், நாஸா உயர் அதிகரிகள் பங்கு கொண்ட  இந்த விழாவில் கீதைபற்றி அறியாதவருக்கும் அது பற்றி சொல்லபட்டது. விரைவில் இந்த அமைப்பின் தேசீய குழுவிற்கு செயலாளாராகவிருக்கிறார்.

தன் துறையில் விற்பன்னராகயிருக்கும், ஸாம்  பல இந்திய, தமிழ் அமைப்புகளின் பொறுப்பிலிருந்து அவை வளர உதவியிருக்கிறார். ஹூஸ்டனிலுள்ள  மிகப்பெரிய மீனாட்சி கோவிலை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.  அமெரிக்க நகரங்களில் இந்தியர்கள் கோவில்களையோ கலாசாரமையங்களையையோ நிறுவ விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்று அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மூன்றாம் தலைமுறையை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு வாழம் இந்துகளின் இறுதிசடங்குகள் செய்ய உதவும் குறிப்பேடும் தயாரித்திருக்கிறார்.

தன் தொடர்புகளால் பெரிய அளவில் நிதி திரட்டுவதில்  மன்னரான இவர்  தமிழ் அமைப்புகளுக்கு மட்டுமில்லாமல்  அமெரிக்காவை காத்தீரினா புயல் தாக்கியபோது  நிவாராண திரட்டிகொடுத்து உதவி தாய்நாட்டைப்போல,  வாழும் நாட்டையும் நேசிப்பவர்.



3/8/13

மொட்டை “ பாஸ்”

ஆதித்தியா
 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் இப்போது  டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூயூஸ்டன் நகருக்கு அருகே வசிக்கிறார்.   முன்னாள் அதிபர்களுக்கான உரிமைகளில் ஒன்று  முழுநேர செக்யூரிட்டி.. அதற்காக ஒரு சிறிய ரகசிய உளவுப் படைப்பிரிவு இயங்குகிறது, அந்த குழுவில் ஒருவரின் மகன் பாட்ரிக்.   வயது இரண்டு. சமீபத்தில் அந்த குழந்தை லுக்கேமியா என்ற ரத்த புற்றுநோயால் தாக்கபட்டிருப்பது கண்டறியபட்டது.  அதன் சிகிச்சையின் தீவிரத்தால் அந்த குழந்தையின் தலை முடி முழுவதும்  கொட்டி மொட்டையாகியிருக்கிறது. அந்த குழந்தைக்கு அது வினோதமாக தெரியக்கூடாது என்பதற்காக  ஒரே காலனியில் வசிக்கும் பாட்ரிக்கின் தந்தை ஜோனின் குழுவினர் அனைவரும் மொட்டை அடித்துகொண்டனர். அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதிதிரட்ட பாட்ரிக் பிரண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு  வெப் சைட்டையும் துவக்கி நன்கொடைகள் கேட்டிருக்கின்றனர்.
திடுமென ஒருநாள் தன் அத்தனை பாதுகாவலர்களும் மொட்டைதலையர்களாக இருந்ததைப்பார்த்து விசாரித்து விஷயம் அறிந்த புஷ் உடனே பெரிய அளவில் நிதிஉதவி செய்தததோடு அந்த குழுவில் தானும் இருப்பதை அறிவிக்கும் வகையில்  மொட்டை அடித்து கொண்டார்.  அவர்களோடு  ஒரு குருப் போட்டோ எடுத்து அதை அவர்களின் வெப் ஸைட்டில் வெளியிடச்செய்தார்.
நன்கொடை வசூலிப்பதற்காக நகரில் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தையத்தைதானே முன்னின்று நடத்தியிருக்கிறார். அதோடு நிற்காமல் அந்த சிறுவனோடு ஒரு படம் எடுத்துகொண்டார் அதை திருமதி புஷ் தேசிய நாளிதழ்களுக்கு அனுப்பி அந்த சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டியிருக்கிறார்.



கையில் மோட்டார்  பொம்மைகளுடன் யார் மடியில் இருக்கிறோம் என்பது கூட புரியாமல் உட்கார்ந்திருக்கும் அந்த மொட்டை சிறுவனும் மொட்டைதலையுடன்  முன்னாள் அதிபர் புஷ்ஷும் இருக்கும் அந்த படம் பலரை பாட்ரிக் நண்பர்கள் குழுவிற்கு நன்கொடை அனுப்ப செய்திருக்கிறது.
அதிபர் புஷ்ஷுக்கு இபோது வயது 89, பெர்க்கின்ஸ் நோய் தாக்கியிருப்பதால் சக்ர நாற்காலியிலிருக்கிறார்.

கல்கி11/08/13