31/10/14

சீரியலுக்கு பின்னாலிருக்கும் சீரியஸான விஷயங்கள்


2


இன்றுடன் விஜய் டிவியின் மஹாபாரதம் முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கல்கியில் எழுதியதின் மீள் பதிவு 










விஜய் டிவி ஒளிபரப்பும் தமிழ் மஹாபாரதம் சிறுவர்கள், இளைஞர்கள்,குடும்பத்தலைவிகள், முதியோர்  என  அனைவரையும் கவர்ந்திழுத்து  இரவு 7மணி முதல் அரை மணி நேரம் கட்டிப்போடுகிறது. தமிழை பள்ளியில் படிக்காத, ஆங்கிலமே அதிகம் பேசும்  இளந்தலைமுறையினரையும் வசிகரிக்கிறது இந்த தொலைகாட்சி தொடர்.
பிரமிக்கவைக்கும் பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள்,  ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான சாயலில் வட இந்திய  முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று  காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும் அதை எல்லோரையும் பார்க்க வைப்பது,  அழகான தமிழ் வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக  இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த்  சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை தொடர்பு கொண்ட  போது.  ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான டப்பிங் டீமின் கடைன் உழைப்பின் வெற்றி இது.  அவர்கள் பணிகளில் நான் தலயிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”. என்றார்.

 டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ்  ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள் மேற்பார்வை.  டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார்.  இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே மொழிபெயர்த்தால்  தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம்.  மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்பது சரியாக இருக்கும்.  பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும் கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களும் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார்கள் என்கிறார்.

ஹிந்தியில் காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி  வசன்ங்கள் அமைந்த  இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும் வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன் ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள் எழுதபட்டபின்  ஒவ்வொரு எபிசோடிலும்  முதலில் பாத்திரங்களுக்காக அவரே  அதைப் பேசி   தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு  வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து  வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள். இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு  வசனம் எழுதிக்கொண்டிருப்பவர்.  இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல் செய்கிறது.

ஹிந்தி தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு  மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள்.  பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார்.  வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள்  ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்.,  எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின்  ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது . சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின் குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும் இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின் மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து  கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.

24/10/14

இயற்கையின் சிரிப்பில் இறைவனை காண்பவர்கள்









உலகின் அழகான இடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இடம் ஹவாய் தீவுகள். அடங்கிய எரிமலைகள், அடர்ந்தகாடுகள், அழகிய நீர்விழ்ச்சிகள் பரந்தபசும்புல்வெளிகள், பல வண்ணமலர்கூட்டங்கள்,, வெண் மணலைத்தொட்டுசெல்லும் நீலக்கடல் என பூலோக சொர்க்கமாக பசிபிக் பெருங்கடலில் இருக்கும் இந்த  தீவுக்கூட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலம். 8 தீவுகள் அடங்கிய இந்த தீவு கூட்டத்தின் கடைசியில் இருக்கும் குட்டி தீவு குவாய் (KUHAI). ஓரு மிதக்கும் இலையின் வடிவில் இருக்கும் இந்த  அழகானதீவு முழுவதும் பரவியிருப்பது  பலவிதமான மலர்கள். உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத மலர்களும் இங்கு இருப்பதால்   இதை மலர் தோட்ட தீவு என்றே அழைக்கின்றார்கள்  இந்த  எழில் கொஞ்சும் இடத்தில் நடராஜருக்கு  கடந்த 50  அண்டுகளாக ஒரு கோவில் இருக்கிறது.  அங்கு வழிபடப்படும் ஸபடிகலிங்கத்திற்காக  மற்றொரு பிரமாண்டமான கோவிலும் அருகில்  எழுந்து கொண்டிருகிறது.



இந்த கோவிலை நிறுவிய குருதேவர்  கலிபோர்னியாவில் பிறந்தவர். 11வயதில் பெற்றோரை இழந்ததால், குடும்ப நண்பரால் வளர்க்கபட்டவர். அந்த நண்பர்  இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் ஈர்ப்பு கொண்டவராதலால் இந்துமத அடிப்படைகளை அவரிடம் அறிந்தார். யோகா முறைகளையும் அறிந்தார்,  . ஆர்வத்துடன்  கிழக்கத்திய, மேற்கத்திய  நடனங்கள் கற்று  புகழ்பெற்ற சான்பிரான்ஸில்கோ நடனகுழுவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்த அந்த இளைஞன். 19 வயதில் எல்லாவற்றையும் துறந்து  ”முழுமையான உண்மையை” அறிந்து கொள்ள இந்தியாவிற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு அதன் நீட்சியாக இலங்கையை அடைந்தான். அங்கு காட்டுப்பகுதியில் ஒரு குகையில் நீண்ட நாள் தவத்திலிருந்த போது இவரைத்தேடி வந்தவர்  சிவ யோகஸ்வாமி என்ற சிவாச்சாரியர்.  அவர் அந்த இளைஞனுக்கு சுப்ரமணியன் எனப்பெயரிட்டு உபதேசித்து தீட்சை வழங்கினார். அவருடைய அருளாசியால் ஞானம் பெற்ற சுப்ரமணியன் உலகின் பலநாடுகளில் பயணித்து இறுதியில் இந்த இடத்திற்கு வந்த போது இங்கு  சிவபெருமான் வாழ்ந்ததை உணர்ந்திருக்கிறார். . இலங்கையில் அவருக்கு ஞானம் வழங்கியவர்  குரு யோகஸ்வாமி.  சைவசித்தாந்த மரபின் படி  2200 வருட பழமையான கைலாச பாரமபரியத்தில் வந்த குரு. அவர் தனது 77வது வயதில் தன் வாரிசாக சுப்பரணிஸ்வாமியை  நியமித்து தன் பணியை தொடர ஆணையிட்டார்..  அதையெற்று 1970ல் தான் சிவனை கண்ட இந்த இடத்தில்  வழிபட ஒரு கோவிலையும், அதை முறைப்படி நிர்வகிக்க ஒரு ஆதினத்தையும் உருவக்கினார். 31 ஆண்டுகள் சிவாய சுப்ரமணி ஸ்வாமியாக  அவர் வாழ்ந்த இந்த இடம்  படிப்படியாக வளர்ந்து இன்று 363 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது. 2001ல் குருவின் மறைவுக்கு பின்  அவரால் தலவராக நியமிக்க பட்ட போதிநாத வெய்லான் ஸ்வாமியால்  ஆதினம் நிர்வகிக்கபடுகிறது. இவர் கலிபோர்னியாவில் பிறந்த அமெரிக்கர். பள்ளி மாணவனாக இருந்த போதே குருவால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கபட்டவர்.    அமெரிக்கர், ஐரோப்பியர் போன்ற பலநாட்டினர்  இந்த ஆதினத்தின் மரபுகளுக்கேற்ப இந்துவாகி இங்கு வருகின்றனர், வழிபடுகின்றனர்.. உலகின் பல நாடுகளில் இவரை குருவாக ஏற்ற இந்துக்கள் இருக்கின்றனர்.  வழிபாட்டு மன்றங்களும் இருக்கின்றன.  மொரிஷிசியஸ் நாட்டில் ஒரு கோவிலையும் நிறுவயிருக்கிறார்கள்.

கேரளகோவில் பாணியில் சரிவான கூரையிட்ட உயரமான கட்டிடத்தில் கோவில். சன்னதியில் கம்பீரமாக நடராஜர். அதன் முன்னே நுழைவாயிலில்  தனி மண்டபத்தில் பெரிய நந்தி. அருகே தாமரை பூத்த தாடகம். நுழையும் முன் தடாகத்தில் கால் அலம்பிகொண்டபின்  நந்தியாரை வலம் வந்த பின்னர் சன்னதிக்கு போக வேண்டும், வாசல் கதவு அருகிலேயே சந்தனமரத்தில் வடித்த வினயாகர்.  சன்னதிக்கு போகும் முன் கடக்கும் நீண்ட கூடத்தின் இருபுறமும் நாட்டியத்தின் 108 கர்ணங்களை காட்டும் நடராஜரின் பிரபஞ்சநாட்டியவடிவங்களில் சிறிய சிலைகள். தங்கத்தில் மின்னுகின்றன. இந்த கோவிலை நடராஜர் கோவில் என சொல்லுவதில்லை. ”கடவுள் கோவில்” என அழைக்கிறார்கள்


  சன்னதியில் நடராஜர் முன்னே ஸ்படிக லிங்கம் தினசரி காலயில் அபிஷகம் பூஜை... சன்னதிக்கு  இருபுறமும் பெரிய அளவில் பிள்ளையார், முருகன் சன்னதிகள்  தினசரி காலையில்  9 மணிக்கு வரும் பக்தர்களுக்காக பூஜை .  சமஸ்கிருத மந்திரங்களை ஸ்பஷ்ட்டமாக சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய அர்ச்சகர்கள். தமிழக சிவன் கோவில் சம்பிராதயங்கள் கடைப்பிடிக்கபடுகின்றன,  . இப்போது இந்த ஆதினத்தில்  6 நாடுகளைச்சேர்ந்த 21 ஸ்வாமிகள்(இவர்கள் சிவாச்சாரியர்கள் என்று சொல்வதில்லை) இருக்கிறார்கள். மூன்று மணி நேர காலத்திற்கு ஒருவர் என தொடர்ந்து இவர்கள் சிவபூஜை செய்துவருகிறார்கள்.    1973ல் இந்த கடவுள் கோவிலில் பூஜைதுவங்கிய காலத்திலிருந்து விடாமல் தொடர்ந்து செய்யபட்டுவருகிறதாம்.  நடராஜரின் பாதங்களுக்கு அருகில் வைத்து ஆராதிக்கப்படும்  3 அடி உயர ஸ்படிக லிங்கம் தான் உலகிலேயே உயரமான ஸ்படிகலிங்கமாம்.  இதற்கான ஒரு தனிக்கோவிலைத்தான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு ”இறைவன் கோவில்” என பெயரிட்டிருக்கிறார்கள்.  இறைவன், அல்லது கடவுள் என்பது தான் நம்மை காக்கும், உயர்ந்த சக்தி. கோவில் என்பது அந்த சக்தியின்  பல வடிவங்களின்  இருப்பிடம் அந்த வடிவங்கள்தான்  தெய்வங்கள் என்கிறார்கள்..
பசுஞ்சோலையாக இருக்கும் இந்த வளாகத்தின் ஒரு புறத்தில் இறைவனுக்கு கோவில் எழுந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பணி முடிந்தநிலையில் இருக்கும் இந்த கோவில் கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கபட்டது, இப்போது அவரது உதவியாளார்களால் தொடரப்படுகிறது. முக்கிய பகுதிகள் பங்களூர் அருகே இந்தகோவிலுக்கென்றே  ஏற்படுத்தபட்டிருக்கும் சிற்பசாலையில் உருவாக்க பட்டு இங்கே அனுப்படுகிறது. அவைகளை இணைத்து கோவிலை உருவாக்கும் பணியில் தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவிலின் தூண்கள், படிகட்டுக்கள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியுடனும், கலைநுணுக்கத்துடனும் வடிக்கபட்டுகொண்டிருக்கிறது கோவில் கட்டுமானத்தில் கற்கள் மட்டுமே-.   கான்கீரிட், சிமிண்ட் கிடையாது. சன்னதிக்கு தங்க விதானம்,  சுற்றுபுற நடைபாத தளகற்கள்  கூட பங்களுரிலிருந்து இறக்குமதி செய்யபடும் கற்கள்தான். ஒரு மாதத்திற்கு  65000 அமெரிக்க டாலர்கள் செலவாகிறதாம்.. 2017க்குள் முடிந்து கும்பாஷேகத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதற்காக  இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்து  நன்கொடைகள் சேகரிக்கிறார் மடத்தலைவர் போதிநாத வெய்லான் ஸ்வாமிகள்.  மொத்தம்  தேவையான பணம் 16 மில்லியன் டாலர்கள் என்பது  திட்டம். (ஒரு மில்லியன் 10 லட்சம்) 
கோவில்கள் ஹாவாய்தீவிலிருப்பதால் பக்தர்களைத்தவிர நிறைய டூரிஸ்ட்கள் வருகிறார்கள்.  ஒரு  சுற்றுலா சொகுசு கப்பல் இந்த கோவிலைக்காண்பிபதற்காகவே  இந்த தீவில் நிற்கிறது. கோவிலில் உணவோ, தங்க அனுமதியோ கிடையாது. அதனால் இந்த இறைவன் அருளால் அருகில் நிறைய ஹோட்டல்கள். ரிசார்ட்கள்.

இயற்கையாகவே வனப்பு மிகுந்த இந்த வனப் பகுதியை மேலும் அழகாக்கியிருக்கிறார்கள் இவர்கள். செயற்கை அருவி, நீர்தேக்கம் எல்லாமிருக்கும்  தோட்ட பகுதியை புனித காடு என அழைக்கிறார்கள்.  ஆங்காங்கே பெரிய அளவில் கருங்கலில் தக்‌ஷணாமூர்த்தி, ஆஞ்னேயர்,  ஆறுமுகன் சிலைகள்.
ஹவாய் தீவுகளுக்ககே உரிய அழகிய மலர்கள் அனைத்தும் இங்கே இருக்கிறது. சில, உலகில் இந்த தீவில் மட்டுமே மலரும் அபுர்வமான வகைகள்.  இந்த தோட்டதின் மலர்கள்தான் பூஜைக்கு பயன்படுத்தபடுகிறது. ஒரு பகுதியில் காய்கறி  கீரைகள் தோட்டம், இங்கு வசிக்கும் ஸ்வாமிகளுக்கு தேவையான உணவு பொருட்களை இங்கேயே விளைவித்து கொள்கிறார்கள். இமய மலைப்பகுதியில் வளரும் உருத்திராட்ச மரம் இங்கே வளர்வது ஒரு ஆச்சரியம்.   ரூத்திராட்ச மரத்தின் பழங்கள் நீல வண்ணத்திலிருக்கிறது
.
வெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் இந்த ஆதினம்  இந்து மதம், சைவசித்தாந்தம் குறித்து ஆராய்பவர்களுக்கு உதவியாக ஹிமாலயன் அகெடமி என்று ஒரு கல்வி நிறுவனத்தையும். ஹிந்துயிஸம் டுடே என்ற காலாண்டு பத்திரிகையும் நடத்துகிறது  ஆதின தலைவர் சத்குரு போதிநாத வெயிலான் ஸ்வாமிகள் தான் இதன் ஆசிரியர். உலகெங்கும் ஒரு லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள்.  ஆசிரியர்குழுவிலிருக்கும் ஸ்வாமிகள் எல்லாம்  ஆப்பிள் மெக்கிண்டாஷ் கம்ப்யூட்டர்கள், ஐபோன் சாட்லைட் போன் எல்லாம் பயன்படுத்தும்  ஹை டெக்கிகளாக இருக்கிறார்கள்,  இவர்களின் இணைய தளத்தின் மூலம் தலைவரின்  அருளுரைகளும் தினசரி ஒலிபரப்பபடுகிறது
உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கு தங்கள் கோவில்களை நிறுவி வழிபடுவது இந்தியர்களின்-தமிழர்களின் மரபு. ஆனால் இந்தியர்கள் மிக குறைந்த அளவிலியே இருக்கும் இந்த தீவில்  ”அமெரிக்க இந்துக்கள்” இப்படி ஒரு அழகான கோவிலை நிறுவியிருப்பதை பார்க்கும்போது ஏற்படுவது   ஒரு சந்தோஷமான ஆச்சரியம்

கல்கி திபாவளி மலர் 2014ல் எழுதியது


21/10/14

அதிகம் அறியப்படாத இந்தியருக்கு அமைதி நோபல்

அம்மா என் பள்ளிக்கூடத்தின் வாசலில் என்னை மாதிரி ஒரு பையன்  தினமும் அவன் அப்பாவுடன் செருப்பு தைத்து கொண்டிருக்கிறான். அவன் ஏன் படிக்க போகாமல் வேலைசெய்து கொண்டிருக்கிறான்?”   8 வயது மகனின்  எதிர்பாராத கேள்விக்கு அவனும் உழைத்தால் தான் அந்த குடும்பத்தினர் சாப்பிடமுடியும்என்ற பதிலை தந்தார் அந்த தாய்.
அப்படியானால் அவன் படித்து வேறு வேலைக்கு போகவே முடியாதா?” என்ற அடுத்த கேள்விக்கு அம்மாவால் உடனே பதில் சொல்லமுடியவில்லை.
விதிஷா என்பது போபால்  நகரிலிருந்து 50கீமி தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில்ஒரு மத்தியதரகுடும்பத்தில்  தந்தையையிழந்து தாயாரால் வளர்க்கபட்ட  கைலாஷ் சத்யார்த்தி தான்  அந்த கேள்வியை கேட்ட சிறுவன்இன்று நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே அடிமனத்தில்  இவருக்கு எழுந்தகேள்வி  ஏன் சிலகுழந்தைகள் மட்டும் மற்ற குழந்தைகள் போல சந்தோஷமாக இல்லாமல்   கஷ்டப்டடு வேலை செய்யவேண்டும்? பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது இவர்களுக்கு உதவிகள் செய்து  கொண்டிருந்தாலும் இதை ஒழிக்கவேமுடியாத எனற எண்ணம் எழுந்துகொண்டிருந்தது. எஞ்னியரிங்படிப்பை முடித்து பணியில் சேர்ந்த போதும் இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது.. கிராமங்களில் மட்டுமில்லாமல்  பணி செய்த நகரங்களில்  எல்லாம்கூட படிக்க வேண்டிய வயதில் தொழிலாளி ஆகும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல். காலையில் இருந்து நள்ளிரவு வரை கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும் சிறுமிகள்  பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும்  இவரை நிலைகுலைய வைத்தது.

இதை வேரோடு வெட்டி சாய்க்க 1980ல் தனது 26 ஆம் வயதில் "பச்பன் பசாவோ அந்தலன்" (குழந்தை பருவத்தை காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப்போராடத்தை தொடங்கினார். நேரடியாக காவல்துறையை அணுகி புகார் செய்தால் புகார் செய்தவருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால்  ; இந்த அமைப்பின் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.
இங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை ரகசியமாக  கண்காணிப்பார்கள். புகார் உறுதி செய்யப்பட்டதும் ; அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு குழந்தைகளை மீட்பார்கள். பின்னர்  சத்யார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட முக்தி ஆசிரமத்தில்  அக்குழந்தைகள் சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பிவைக்கப்படும் வரை அங்கு தங்கவைக்கப்படுவார்கள்.
தற்போது டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப் படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உணடு
சினிமா, அரசியல், சினிமாவில்-அரசியல் பாலியல் குற்றங்கள் பற்றி அதிகம் பேசும் மீடியாக்கள்  இவரைபோன்றவர்களை பற்றி  மிக குறைவாகவே பேசுவதால்நம் நாட்டுகாராரன இவரைப்பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பிபிசி, சின்பிசி போன்றவைகள்  இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவைகள் பற்றி  நிறைய ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் வெளியிட்டு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றி ருக்கிறார்.  அமெரிக்க அதிபர் கிளிண்டன் விருது கொடுத்து கெளரவித்திருக்கிறார். உஅகின் 144 நாடுகளில் இவரது அமைப்புக்கு தொடர்புகள் இருக்கிறது. அதன் மூலம் அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றவும் உதவுகிறார். சாக்ஸ் (SAACS) என்றும் அமைப்பின் தலைவர் இவர்இது  தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களை கண்காணிக்கிறது. நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் உறுப்பினராக இருக்கும் யுன்ஸ்கோவின் உயர்மட்டகுழுவில் இவரும் ஒரு உறுப்பினர்,. 2006 ஆம் ஆண்டே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டவர். ஆனால் அந்த ஆண்டு பங்களாதேஷில் கீராமியன் வங்கியை துவக்கிய மக்மத் யூனஸ்க்கு வழங்கப்பட்டது., இந்த ஆண்டு பரிந்துரைக்கபட்ட 278 பெயர்களில் இவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். இதுவரை இவ்வளவு பெயர்கள் பரிந்துரைக்கபட்டதில்லை. 2000ஆம் ஆண்டில் உலகில் குழந்தை தொழிளார்களின் எண்ணிக்கை 246 மில்லியன் ( ஒரு மில்லியன் =10லட்சம்) இன்று அது 168மில்லியனாக ஆக குறைந்திருக்கிறது இந்த நிலைக்கு கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியம் வாய்ந்தது என்கிறது நோபல் பரிசு குறிப்பு.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பாக்கிஸ்தான் மலாலாவுடன் இணைந்து பெறுகிறார். இதுவரை நோபல் பரிசுபெற்றவர்களின் சராசரி வயது 60. முதல் முறையாக 17 வயதுபெண் பரிசு பெறுகிறார்இவர் கைலாஷுடன் இணைந்தும் உலக குழந்தைகள் கல்விக்காக செயல்படுவேன் என அறிவித்திருக்கிறார்.
பரிசு அறிவிக்கபட்டவுடன் பிரதமர் மோடி நாட்டுக்கே பெருமைஎன பாராட்டியிருக்கிறார். பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வாழ்த்துகள் மழையாக கொட்டின. அதில் கவர்ந்தவைகளில் ஒன்று  பாடகர்  எஸ் பி பியின் பேஸ்புக் கமெண்ட்..” இன்று இந்திய பாக்கிஸ்தான் சரித்திரத்தில் ஒருமறக்க முடியாத நாள். இவர்களுக்கு தலைவணங்குகிறேன் மலாலாவின் பேச்சு  என் மனதைத்தொட்டது. ” எங்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் இந்த கெளரவம்தலைவர்கள், அரசியல்வாதிகள், ராணுவதளபதிகளின் கண்களை திறக்கட்டும்இனம், மதம், ஜாதி போன்ற நம்மைபிரிக்கும் அற்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம், கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கபடவேண்டியது அது என்பதை. அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.” என்று பேசியிருக்கிறது இந்த குழந்தைமலாலா நீங்கள், அவர்களை மன்னித்துவிடுங்கள்’”.உலகம் உங்கள் தன்னலமற்ற பணிகளை பெரிது மதிக்கிறது எனகேட்டுகொள்கிறேன்.   
டெல்லியில் கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள்  என முழுக்குடும்பமே  இவரது அமைப்பில் ஈடுபட்டு உதவுகிறார்கள்.
______________________________________________________________________________________
  • அன்னை தெரசா , பாரக் ஓபாமா , நெல்சன் மண்டேலா , தலாய்லாமா வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்முறை  பாகிஸ்தானின் 17 வயது  மலாலாவுடன் இணைந்து இந்தியாவின் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி அவர்களும்  பெற்றுள்ளார். 1901 ஆண்டு முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசை பெரும் எட்டாவது இந்தியர் இவர. அமெரிக்காவில் வாழும் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேதியியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

 ________________________________________________________________________________________

  • நோபல்  பணத்தை என்ன செய்யபோகிறார். எங்கள் அமைப்பில் 400 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்ட்ட பாய் ம்ஹா பஞ்சாயத் என்ற அமைப்பு இருக்கிறது. அதன் கூட்ட்த்தில் முடிவு செய்வோம். ஆனால் நிசியமாக ஒரு பைசாவைக்கூட வீணாக்க மாட்டோம் என்கிறார் சத்யார்த்தி.


 __________________________________________________________________________________________

9/10/14

விடுமுறைபயணமாக விண்வெளிக்கு போனவர் !

 சுழலும் நமது பூமிக்கு மேலே பறக்கும் பயணிகள் விமானம் அதிக பட்டசம் 30,000 அடி உயரத்தில் பறக்கமுடியும் அந்த வாயு வெளிமண்டலத்தாண்டி  இருப்பது விண்வெளி வட்டத்தின் விளிம்பு. இதை ஸ்ட்ராட்டோஸ்பியர் (stratosphere) அழைக்கிறார்கள்.   இதில் மிக சக்தி வாய்ந்த போர் விமானங்களும், ராக்கெட்களுமே பறக்க முடியம், ரஷ்யாவில் இந்த விண்வெளி விளிம்பிற்கு  சுற்றுலா பயணம் செய்ய ஒரு டிராவல் நிறுவனம் ஏற்பாடு செய்துகொடுக்கிறது.  கண்ட்டிரி டூரிஸம் என்ற இந்த நிறுவனம் அரசின் ஆதரவோடு சாகஸ விமான பயணங்களை நிகழ்த்துகிறது.  இதற்காகவே MIG 29, MIG 31  போன்ற பல வகை போர் விமானங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். விரும்புவர்கள் பணம் செலுத்தி இந்த பயணங்களைச் செய்ய முடியும்.
இந்த ஆண்டு சுதந்திரதினத்தன்று இதில் பறந்த முதல் இந்தியர்  டி, என் சுரேஷ் குமார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( ISRO)  ஹாசனிலுள்ள தலைமை கட்டுபாட்டு கேந்திரத்தில் பணிபுரியும்  மூத்த விஞ்ஞானி.  மணிக்கு 1850 கீமீ  வேகத்தில் ஜிவ்வென்று பறந்து 48 நிமிடத்தில்  விண்வெளியின் விளிம்பிற்கு  பறந்து அங்கிருந்து உலகை பார்க்க கூடிய இந்த பயணத்திற்கு செலவு 15 லட்சம் ரூபாய்கள். “இந்த பயணம்  எனது 20 ஆண்டு கனவு எனச்சொல்லும்  சுரேஷ் குமாரும் அவரது மனைவியும் இதற்காகவே வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்திருக்கிறார்கள்
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் மட்டும் இந்த பயணத்தில் போய்விடமுடியாது.  உடல்நிலை தகுதி, தகவல் தொடர்பு சாதனைங்களை கையளும் திறன், ஒரளாவது விண்வெளிவிஞ்ஞானம் திடமான மனநிலை எல்லாம் இருக்க வேண்டும், மனுச்செய்தவர்களை பரிசோதித்து தேர்ந்டுத்து பயிற்சி கொடுத்த பின்னரே பயணம்.  இவற்றையெல்லாம் 6 மாதம்  முன்னரே செய்து முடித்திருக்க வேண்டும், சுரேஷ் குமார் இந்திய அரசின் விஞ்ஞானியாதலால் பல கட்டங்களில் நிறுவனத்தின்  அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது.
 இந்த விண்வெளி விளிம்பு பயண கனவு சுரேஷ் குமாருக்கு எழுந்ததின் காரணம் ஒரு ஏமாற்றம்.  1985 ஆம் ஆண்டு நாசாவின் மூலமாக இஸ்ரோ விண்வெளிக்கு  அனுப்ப 4 பேர்களை தேர்ந்தெடுத்திருந்தது. அதில் சுரேஷ்குமாரும் ஒருவர்.  ஆனால் 1986ல்  நாசாவின் சேலன்ஜர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்து விபத்தாகி விட்டதால்  தொடர்ந்து திட்டமிடப்பட்ட  அனைத்து விண்வெளிப் பயணங்கள் நிறுத்த பட்டுவிட்டன.
அதில் மிகுந்த ஏமாற்றமடைந்த சுரேஷ் இதை சாதிப்பதை தன் கனவாக கொண்டு தன் சொந்த சேமிப்பில் நிறைவேற்றியிருக்கிறார். விண்வெளி விளிம்பிற்கு மட்டுமில்லை  எல்லா பயணங்களையும் நேசிப்பவர் இவரும் இவரைப்போலவே மூத்த விஞ்ஞானியாக பணியாற்றும் இவரது மனைவி கீதாவும். கடந்த 15 ஆண்டுகளில் 110 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.  எல்லாமே பட்ஜெட் பயணங்கள் எனச்சொல்லும் இவர்கள் இதற்காக செலவழித்த பணம் 50 லட்சம்.