21/2/16

என்று தணியும் இந்தத்தாகம் ?




அறிவியலாளர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை. எந்த ஒரு நிகழ்வுக்கும் அறிவுபூர்வமான காரணங்களைச் சொல்லுவார்கள் அல்லது ஆராய்ந்து கண்டுபிடிப்பார்கள். ஆனால் நமது எல்லையில் சியாச்சின் மலைச்சரிவில் நிகழந்த ஒரு பனிப்பாறைசரிவில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர 25 அடி ஆழத்தில் உறைபனிகளுக்கு நடுவில் மைனஸ் 45 டிகிரி குளிரில் ஆறு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டிருக்கும் செய்தி அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காஷ்மீரின் லடாக்கின் பனி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 600 அடி உயரத்திலிருக்கும் சியாட்சின் பனிமலைப்பகுதிதான். உலகிலேயே மிக அதிக உயரத்தில், ஆபத்துகள் மிகுந்த போர்க்களமாக அறியபட்டிருக்கும் பகுதி. வருடம் முழுவதும் உறைபனியும், 60 டிகிரி குளிரும், மணிக்கு 100கீமி வேகத்தில் பனிக்காற்றும் வீசும் பகுதி. புல் பூண்டு எதுவும் இல்லாத இந்தப் பனி பாலைவனப்பகுதியை ஒரு நாளைக்கு 6 கோடி செலவில் இந்திய ராணுவம் பாதுகாக்கிறது.அதிரடி தாக்குதலுக்குப் பெயர் பெற்ற மெட்ராஸ் ரெஜெமெண்ட்க்கு தான் இந்தப் பணி.  1949 கராச்சி ஒப்பந்தம் 1972 சிம்லா ஒப்பந்தம் எதிலும் இந்த மலைப்பகுதியின் எல்லைப்பிரச்சனை தெளிவாக வரையறுக்கப்படாதால், இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாடுகளும் ”போர் தயார்” நிலையிலேயே எப்போதும் இந்த பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
இங்குள்ள பாகிஸ்தான் எல்லைக்கு 5 கீமி அருகே மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு 800 அடி உயரம், 400 அகலம் உள்ள பனிப்பாறை ஒன்று சரிந்து முகாமின்மேல் விழுந்து 10 வீரர்களை 25 அடி ஆழத்தில் புதைத்தது. இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பனியில் 25 அடிக்குக் கீழே புதைந்த வீரர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், விமானப் படைப்பிரிவினரும் ஈடுபட்டனர். உடனடியாக மீட்க முடியாததால், 10 பேரும் இறந்ததாகக் கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.
போரே நடக்காத இந்தப் பகுதியில் இதுவரை 869 வீரர்கள் இறந்ததாகப் பாராளுமன்றத்தில் பதிவு செய்யபட்டிருக்கிறது. இவர்கள் பனியின் சீற்றத்திற்கு பலியானவர்கள். இவர்களைத்தவிர பலநூற்றுகணக்கானவீரர்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள்
ஒரு ராணுவ வீரன் பணியிலோ அல்லது போரிலோ இறந்தால் அவரது உடலைத் தகுந்த மரியாதைகளுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதனால் இறந்த வீரர்களின் உடல்களைத் தேடும் பணி துவங்கியது. விடா முயற்சியுடன் 150 வீரர்களும், டாட் மற்றும் மிஷா என்ற இரண்டு மோப்ப நாய்களும் மீட்புபணியில் இறங்கின. எலக்ட்ரிக் ரம்பம் மூலம் பனிப்பாறைகள் அறுக்கப்பட்டு, ரேடார், ரேடியோ சிக்னல் கருவிமூலம் வீரர்களின் உடல்கள் தேடப்பட்டன. இரவு நேரத்தில் வெப்ப நிலை மைனஸ் 55 டிகிரி வரை சென்றதாலும், கடும் குளிர் காற்று வீசியதாலும் மீட்பு பணி அவ்வப்போது பாதிக்கப் பட்டது. அதையும் மீறிப் பனிப்பாறைகளைத் தோண்டியதில் ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் புதைந்திருந்ததை மீட்பு குழுவினர் கண்டு பிடித்தனர். பனியில் புதைந்து 6 நாட்களுக்குப் பின் அவர் உயிருடன் இருந்தது மீட்பு குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதிர்ச்சியில் சோர்வாக இருந்த ஹனுமந்தாவின் உடல் சூடான ஆக்ஸிஜன் மற்றும் ஹீட்டர்கள் மூலம் சூடேற்றப் பட்டு ஹெலிகாப்டரிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டுபாட்டு கேந்திரத்தில் காத்திருந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம்மூலம் உடனடியாக டெல்லி மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டார். காத்திருந்த சிறப்பு மெடிகல் டீம் தங்கள் பணியைத் தொடர்ந்தது. அனைத்தும் மின்னல் வேகத்தில் சில மணிநேரங்களில் நடந்தது .ஆனால் ஆறு நாட்கள் ஆச்சரியமாக உயிர்பிழைத்திருந்த ஹனுமந்தப்பாவை சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் காப்பாற்றமுடியவில்லை. பிராத்தனை செய்து கொண்டிருந்த தேசம், வருந்தியது
பனிச்சரிவுகளில் மீட்பு பணி மிகச் சவாலானது. நம் வீரர்களுக்கு இதற்கான பயிற்சிகளும் அளிக்கபட்டிருக்கிறது. போட்டிருக்கும் அத்தனை பாதுகாப்பு உடைகளையும் தாண்டி எலும்பைத் தாக்கும் குளிரில் மிகவும் சிக்கலான கருவிகளைத் திறம்பட இயக்கி இறந்தவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். புதைந்திருப்பது எந்தப் பகுதி என்பதை கண்டறிய ஒலிக்கதிர்களை விமானத்திலிருந்து அந்தப் பகுதியில் செலுத்தி கண்டுபிடித்தபின் அந்த இடங்களில் சக்திவாய்ந்த ட்ரில்லர்கள் மூலம் துளையிட்டு அதன் மூலம் மின் அலை சிக்கனல்களை அனுப்பினார்கள். சியாச்சினில் பணியிலிருக்கும் ராணுவத்தினர் தங்களிருப்பிடத்தை அறியும் சிக்னல் எழுப்பும் கருவி அணிந்திருப்பார்கள். சில இடங்களிலிருந்து அந்த சிக்னல்கிடைத்தவுடன்  அந்த இடங்களில் விசேஷ கட்டர்களை செலுத்தி பனிப்பாறைகளை அறுக்க வேண்டும். கல், கான்கீரிட் போன்றவைகளைவிட கடுமையான இந்தப் நீலப்பனிப்பாறைகளை அறுக்கும் கத்திகள் இயங்க தேவையான அதிசக்தி மோட்டர்கள் அதற்கான பேட்ரிகள் எல்லாம் அடிவாரத்திலிருந்து ஹெலிகாப்படரில் கொண்டுவரபட்டது. அவைகள் இயங்க நின்றநிலையில் ஒரு ஹெலிகாப்டர் என்ஜின் ஒடிக்கொண்டிருந்தது.  மீட்புப் பணிகளைப் பகலில் கடுங்குளிருடன் கண்பார்வையை இழக்க செய்யும் அளவிற்கான வெண்பனியில் பட்டுத் திரும்பும் சூரிய ஓளியிலும், இரவில் மைனஸ் 35 டிகிரி குளிரிலும் செய்திருக்கிறார்கள்.
.கடும் போராட்டத்துடன் நடந்த இந்த மீட்பு பணியில் மற்ற 8 வீரர் களின் உடல்களும் மீட்கப் பட்டு விட்டன.

செய்திஅறிந்தவுடன் பிரதமர் டிவிட்டரில்''ஹனுமந்தப்பாவை பார்க்கப் போகிறேன். அவர் உடல் நலம் தேறி வர வேண்டுமென்று நாடே வேண்டுகிறது'' எனக் குறிப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றிருக்கிறார். பிரதமரின் இந்தச் செய்கை ராணுவவீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
இறந்த வீரர்களுக்கு அஞ்சலியும் சவாலான மீட்புபணிகளை வெற்றிகரமாகச் செய்த வீரர்களுக்குப் பாரட்டுகளை தெரிவிக்கும் ஒவ்வொரு இந்தியனின் மனத்தில் எழும் கேள்வி


என்று தணியும் இந்த எல்லைப் பிரச்சனையின் தாகம்?




15/2/16

இசை அரசியின் ஏழு ஸ்வரங்கள்




தமிழ் இந்து 2016 பொங்கல் மலரில் வெளியாகியிருக்கும்  எனது கட்டுரை.


அவர் பெயரைக்கேட்டவுடனேயே மகிழ்ச்சியைச் சொல்லும் பளிச்சென்ற ஒரு முகமும் இனிய குரலும் மனதில் மின்னும் அளவிற்குத் தன் இசையால் எண்ணற்றவர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் எம்,எஸ். இசையோடு பிறந்து, இசையோடு வளர்ந்து இசையில் புதிய உயரங்களைத் தொட்ட அவரது இசை ஒரு சகாப்தம். மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் ரசிகர்கள் போற்றிப் பாராட்டும் இடத்தில் இருக்கும் இந்தக் கலைஞர் கடந்துவந்த பாதை ரோஜாமலர்களால் மட்டும் நிறைந்தது அல்ல. என்பதையும், முட்களும், தடைகளும் கொண்டிருந்தது என்பதையும் அவரது வாழ்க்கை கதை நமக்குச்சொல்லுகிறது. பலர் நடந்து பழக்கமான பாதையிலிருந்து விலகித் துணிவுடன் அவர் முதலில் நடந்து அமைத்த புதிய பாதையில்தான் இன்று இசையுலகில் பலர் எளிதாகப் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.
10வயதில் துவங்கி 77 ஆண்டுகள் தொடர்ந்த நீண்ட இசைப்பயணம் இவருடையது. இது ஒரு உலகச் சாதனை. பல இசைக்கலைஞர்களால் இன்று தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படும் இந்தப் பெண்மணியின் இத்தகைய வெற்றிக்குக் காரணம், இவருக்கு வாய்த்திருந்த தெய்வீக குரலா, எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலா, இசைஞானமா, முன்னணியிலிருக்க இவரது கணவர் செய்த தொடர்ந்து மார்கெட்டிங்கா என்பதை இவரது வாழ்க்கை பாதையுடன் சென்று ஆராய முற்பட்டபோது, இவற்றையெல்லாம் தாண்டி சில விஷயங்கள் புலப்படுகின்றன.
இவர் இசை உலகில் காலடி எடுத்துவைத்த காலத்தைச் சற்று உற்று நோக்குவோம். இசைக் கவிதை, இலக்கியம், ஏன் கல்வி கூட ஆண்களுக்கு மட்டுமே உரிய ஏக போக சாம்ராஜ்யமாக இருந்த காலம் அது. பெண் மேடையில் பாடும் பாடகியாக இருந்தால் குடும்பப்பெண்ணாக இருக்க முடியாது என நம்பப்பட்ட காலம். ”கானல்வரி கவிதை” புனைந்த நடனக்காரி மாதவி காலத்திலிருந்து தொடர்ந்த பாரம்பரியம் அது. இசைத்துறைக்கு வந்த பெண்களைப் பற்றிய சமூக மதிப்பீடுகள் மிக மோசமானதாக இருந்த காலம். இந்தக் காலகட்டத்தில் தான் மதுரை நகரில் வாழ்ந்த வீணைக் கலைஞரான எம்.எஸ்ஸின் தாய் சண்முகவடிவு தன் மகளின் குரல் வளத்தைக் கண்டுணர்ந்து அவரை ஒரு இசைக்கலைஞராக்கமுடிவு செய்கிறார். மகிழ்ச்சியில்லாத போராட்டமான அவரது வாழ்க்கையிலும் இதைச் சவாலாக ஏற்று வெற்றிகரமாகச் செய்கிறார் அந்தத் தாய். தேவதாசி குடும்பங்களுக்கென்று ஒரு தனி இசைப்பராம்பரியம்/ பாணி உண்டு. அந்தப் பாணி இசையில்லாமல் சாஸ்திரியமான கர்நாடக இசையை மேடைகளில் பாடுமளவிற்கு மகளுக்கு முறையாக குரு மூலம் கற்பிக்கிறார். மிகுந்த ஆர்வத்துடன் இசை கற்றகொண்ட அந்தசிறுபெண் பாடி வெளிவந்த முதல் இசைதட்டு பெரும் வெற்றியை அடைகிறது, தொடர்ந்து அம்மாவுடன் மேடையில் பாடத்துவங்கிய அந்தப் பெண் ஒரு கட்டத்தில் இசை தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம் என்பதை உணர்ந்து அதில் தான் சிறப்பாக வளரவேண்டும் எனத் துடிக்கிறார், ஆனால் தங்கள் குல வழக்கப்படி இசையை நன்கு அறிந்த கலையை ஆதரிக்கும் ஒரு பெரிய மனிதரின் ஆதரவில் வசதிகளுடன் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையுடன் தன் மகள் இசையைத் தொடரவேண்டும் எனத் திட்டமிடுகிறார் சண்முகவடிவு.. அதுவரை அம்மாவின் சொல்லே வேதம் என வளர்ந்த சுப்புலட்சுமி இந்தக் கட்டத்தில் அம்மாவின் வார்த்தைகளை ஏற்க மறுக்கிறார். அந்த இளம்வயதிலேயே ”நான் தேவதாசி வாழ்க்கை முறையை ஏற்க மாட்டேன். முறையாக ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தலைவியாகத்தான் வாழ்வேன்” எனத் துணிவுடன் சொல்லுகிறார் சுப்புலட்சுமி. இந்த முடிவைச்சொன்ன அந்தப் பெண் பள்ளி சென்று படித்தவரில்லை, நாகரிக சமூகத்தின் முகங்களைச் சந்திக்க வாய்ப்பில்லாத, வசதிகள்அதிகமில்லாத சூழலில் வளர்ந்தவர்.
பின்னாளில் இசையரசியாகப் போற்றப்பட்ட எம்.எஸ் இளமைக்காலத்தில் கொண்டிருந்த அசைக்கமுடியாத தன்னம்பிக்கையைக் காட்டும் இந்தச் செயல் அந்தக் குலத்தில் பின்னாளில் எழுந்த சமூக மாற்றங்களுக்கு விழுந்த ஒரு வித்து என்பதைச் சரியான முறையில் வரலாற்றாளர்கள் பதிவு செய்யவில்லை. இந்தத் தன்னம்பிக்கையும் துணிவும் அவருடைய நீண்ட இசைப்பயணத்தில் பல வெற்றிகளைச் சாதிக்க உதவியிருக்கிறது
17 வயதில் சுப்புலட்சுமி சென்னை சங்கீத வித்வ சபையில்(மியூசிக் அக்கடமி) செய்த முதல் கச்சேரி நகரமே பேசும் கச்சேரியாகி பலரால் பாராட்டப்படுகிறது. இதனால் மகளின் இசைக்கச்சேரிகளுக்குச் சென்னையில் வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்குக்கும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு இடம்பெயர்கிறது குடும்பம். இசைக்கச்சேரிகளுக்கான வாய்ப்புகளுடன் அந்த அழகிய பெண்ணுக்கு எதிர்பாராதவிதமாக அவர் விரும்பிய குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பும் கிடைத்தது ஆனந்தவிகடன் பத்திரிகைக்காகச் சந்தித்த துடிப்பான அழகான இளைஞர் சதாசிவத்தால் ஈர்க்கப்படுகிறார்.தொடர்ந்த சந்திப்புகளிலும் ,பயணங்களிலும் காதல் கனிகிறது. நமக்குக் குடும்ப வாழ்க்கையை அளிக்க ஏற்ற நல்ல மனிதர் இவர் என்ற எண்ணம் சுப்புலட்சுமிக்கு மிக அழுத்தமாக எழுகிறது. ஆனால் அவருடைய அன்பான அம்மா இந்தக் காதலை ஏற்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் மகள் விரும்பும் சதாசிவம் ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர். அதனால் அவர் சுப்புலட்சுமியை துணைவியாக மட்டும்தான் ஏற்பார் திருமணம் செய்து கொள்ளமாட்டார் எனத் தீர்மானமாக அவர் நம்பினார். ஏன் தன் பெண் இப்படி ஒரு வாழ்க்கையைத் தேடிப்போகிறார் என்ற சஞ்சலத்துடன் மகளின் காதலை மறுக்கிறார். தான் தன் வாழ்க்கையில் அதிக வருமானமில்லாத ஒரு சதாரணக் குடும்பஸ்தருக்குத் துணையாகிப்போய்க் கஷ்டப்பட்டதைப்போலத் தன் மகளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது எனத் துடித்தது அந்தத் தாய்யுள்ளம். ஆனால் சுப்புலட்சுமி தன்னை இரண்டாம் தாராமாகச் சதாசிவம் திருமணம் செய்துகொள்வார் என்பதில் உறுதியாக இருந்தார். அவருடன் காதலும், அன்பாக வளர்த்த அம்மாவுடன் சண்டைகளும் தொடர்ந்தது. இறுதியில் காதல் தாய்ப் பாசத்தை வென்றது. சுப்புலட்சுமி சதாசிவத்தின் குடும்பத்துடன் திருமணம் செய்து கொள்ளாமலே வாழத்துவங்கிறார். சண்முகவடிவு மனமுடைந்து மதுரை திரும்புகிறார். இந்தக் கட்டத்தில் சுப்புலட்சுமி எடுத்த முடிவு அவர் தான் நம்புவதைச் செயலாற்றக்கூடிய ஒரு மிகத்துணிச்சலான பெண் என்பதைப் புரியவைக்கிறது. இரண்டாம்தாரம் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட காலம் அது. ஆனால் அந்தப்பெண் வேறு சமூகத்தினராக இருந்தால் மனைவியாக மதிக்கப்படாத காலம் அம்மாதிரியான ஒரு காலகட்டத்தில் பிராமணர்கள் மட்டுமே வசிக்கும் அக்கிரகாரத்தில் முதல் மனைவி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு குடும்பத்தில் தன் வாழ்க்கையைத் துவக்கிய இவரது துணிச்சல், தன் காதலர் நிச்சியம் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று அவர் மீது கொண்ட அதீத நம்பிக்கை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. எதிர்பார்த்தபடி சதாசிவம் உடனடியாக அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை
அதனால் ஏமாற்றமடைந்து மனமுடைந்து அம்மாவிடம் திரும்பவில்லை சுப்புலட்சுமி. தான் நம்பியவர் நிச்சியம் வாழ்வுதருவார் எனக் காலம் கனிந்துவரும் வரை பொறுமையுடன், நம்பிக்கையுடன் காத்திருந்தார். பொறுமையுடன் நம்பிக்கையுடன் இருந்தால் நினைத்த சாதிக்க முடியும் என்ற இவருடைய இந்தக் குணம் பின்னாளில் பல கட்டங்களில் வெளிப்பட்டிருக்கிறது
புதிய வாழ்கையில் தான்விரும்பியபடி ஒரு பிராமணகுடும்பத்தலைவியாகத் தன்னைச் சுவீகரித்துக்கொண்டு, நடை, உடை, பாவனை அனைத்தையும் மாற்றிக்கொண்டு சதாசிவத்தின் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்திய சுப்புலட்சுமிக்கு அந்தக் காலகட்டத்தில் தன்வாழ்க்கையின் அடிநாதமான இசை கூட இரண்டாம்பட்சமாகத்தான் இருந்திருக்கிறது. அந்த அளவுக்குக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம். சதாசிவத்தின் முதல் மனைவியையின் குழந்தைகளின் அளவற்ற பாசம், அவரது குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் மீது காட்டிய மரியாதை எல்லாம் இவரது குல பின்னணியை மறக்கச்செய்து மற்றவர்களை நேசிக்கச் செய்திருக்கிறது. தேசபக்தராகத் தன் வாழ்க்கைதுவக்கிய சதாசிவம் நாட்டின் விடுதலைக்குப் பின்னர் தான் அந்தஸ்தும் செல்வாக்கும் கொண்ட ஒரு வாழ்க்கையை அடையவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விகடனிலிருந்து விலகிய ஆசிரியர் கலகியுடன் இணைந்து புதிய பத்திரிகையைத் துவக்க திட்டமிடுகிறார். தமிழ் சினிமா புதிய வியாபார எல்லைகளை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. தன் முயற்சிகளுக்கு நிதி ஆதாரம் தேட சுப்புலட்சுமியின் நடிப்பில் ஒரு சினிமா எடுக்கத் தீர்மானிக்கிறார். அப்போது சினிமாவில் நடித்துப் பணமும் புகழும் பெறுவது என்பது பல தேவதாசிகுடும்பத்தினரின் கனவாகவே இருந்தது. ஆனால் அதில் நாட்டமில்லாமல் விலகி சந்தோஷமான குடும்பப்பெண்ணாக வாழ்க்கையைத் துவக்கியிருந்த சுப்புலட்சுமிக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. ஆர்வம் அதிகம் காட்டாமல் தவிர்க்க முயற்சிக்கிறார். ஆனால் சதாசிவம் தீர்மானமாகவிருக்கிறார். இறுதியில் காதல் கணவரின் கட்டளையை மீற முடியாமல் ஏற்கிறார். மீரா திரைப்படம் உருவாகிறது. படம் மீராவின் கதையாக இருந்ததால் கிடைத்த நல் வாய்ப்பைப் பயன்படுத்தித் தன் இசைத்திறமை முழுவதையும் நடிப்போடு வெளிப்படுத்தினார். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தான் செய்ய வேண்டியதை மிகுந்த சிரத்தையுடன் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு மிகச்சிறப்பாகச் செய்திருந்தார். ஒரே காரணம் அது தன் அன்பு கணவரின் கட்டளை என்பது
தான். இதைப்போல் இறுதிநாள் வரை எந்த விஷயத்திலும் தன் கணவர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார். இதைப் பதிபக்தி என்ற சின்னச் சொல்லில் மட்டும் அடக்கிவிடமுடியாது. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் செயலும் சதாசிவத்தினால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சுப்புலட்சுமி அதைத் தான் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதை பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார். ஒரு பெண் கணவனின் சொற்படி நடப்பது சதாரண விஷயம் என்றாலும் பல கலைஞர்களின் வாழ்க்கையில் நெருடலை ஏற்படுத்திய விஷயம் இது. கலைஞர்களின் வாழக்கையில் வெற்றிகள் குவியும்போது குடும்பத்தினரின் குறுக்கீடுகள் விபரீதமான விளைவுகள் ஏற்படுத்தியதை பார்த்திருக்கிறோம். கலைஞர் தன் கலையலக வாழ்க்கை அல்லது குடும்பம் என்று ஏதாவது ஒன்றை இழக்கும் நிலை உருவாகும். ஆனால் எம்.எஸ் இந்த சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்கவே இல்லை.
எதிர்பார்த்த படி மீரா படம் பெரிய வெற்றி. தலைநகர் டெல்லியில் பிரதமர் நேரு குடும்பத்தினர் உட்படப் பல தலைவர்கள் பங்கு கொண்ட முதல் காட்சியுடன் துவங்கிய அந்தப் படம் தேசம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிய ஒரு படம். இன்றைய சினிமா பாஷையில் சொல்லவேண்டுமானால் அருமை டூப்பர் சக்ஸஸ். தொடர்ந்த வந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்திகொண்டிருப்பாரேயானல் திரை வானில் ஒரு நட்சத்திரமாக மின்னியிருப்பார் இந்திய இசையுலகம் எம்.எஸ்சை இழந்திருக்கும். ஆனால் தன் முதல் காதலான இசையின் பல பரிமாணங்களைக் கற்று அதில் தனியிடம் பெறவேண்டும் என்ற தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த எம்.எஸ் அந்த வாய்ப்புகளை மறுத்தார். பணமும் புகழும் எளிதில் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைவிடத் தான் நேசித்த விஷயத்தில் சாதிப்பதற்காகக் காத்திருப்பதையே விரும்பினார். பலருக்குக் கனவாகவே இருந்த கனவு தொழிற்சாலையின் அழைப்புத் தன்னைத் தேடிவந்தபோதும் அதை ஒதுக்குவதற்கு அந்த வயதில் ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சலும் அதன் விளைவுகளைச் சந்திக்கும் மனோ பலமும் பெற்றவராக இருந்திருக்கிறார் இந்தப் பெண்மணி.
,சதாசிவம் சுப்புலட்சுமி தம்பதியின் வாழக்கையை ஆழ்ந்து நோக்கும் போது புரியம் மற்றொரு விஷயம் இருவரும் தங்கள் பலங்களை உணர்ந்திருக்கிறார்கள்.பரஸ்பரம் அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழக்கையைச் சிறப்பித்திருக்கிறார்கள் என்பது. அன்பு மனைவிக்குச் சினிமாவில் தொடர விருப்பமில்லை இசைத்துறையில் தான் சாதிக்க விரும்புகிறார் என்பதை உணர்ந்த சதாசிவம் அதற்கானவற்றைச் செய்கிறார். ஹிந்தி மீராவால் நாடு முழுவதும் புகழ்பெற்றிருந்த ஒரு நடிகையின் இசைக்கலைஞர் என்ற மற்றொரு முகத்தை அந்தப் புகழின் வாயிலாகவே அறிமுகப்படுத்துகிறார் மார்க்கெட்டிங் ஸ்ட்டிரஜிஸ்ட் சதாசிவம். மிகக்குறுகிய காலத்திலேயே எம்.எஸ் என்பது நாடுமுழுவதும் அறிந்த பெயராகிறது. அப்போது தென்னிந்திய கர்நாடக சங்கீத கலைஞர்கள் பின்பற்றிய பாணியான வெறும் சாஸ்த்திரிய சங்கீதம் என்ற நிலையை மாற்றி அந்தந்த பிரதேசங்களின் புகழ்பெற்றஆசிரியர்களின் பாடல்கள்,பஜன்கள் போன்றவற்றைக் கச்சேரியில் பாடுகிறார். இந்தப் பாணியினால் தங்கள் மொழிபாடல்களை ஒரு தென்னிந்தியப் பெண்ணின் வசீகரமான குரலில் கேட்டு மயங்கினார்கள் ரசிகர்கள். இசையில் எம்.எஸ் தனியிடம் பெற இது பெரிதும் உதவிற்று. இந்த வெற்றிக்கு முழுக்காரணம் சதாசிவம் தான். எம்.எஸ்ஸின் திறமையை நன்கு புரிந்திருந்திருந்த இவர் அதில் எங்கு எதை எப்படி அழகாகக் காட்ட முடியும் என்பதைச் சரியாகக் கணித்திருந்தார். ஒவ்வொரு கச்சேரியையும் அந்தந்த இடத்துக்கேற்ப, முன்னணி ரசிகர்களைக் கவரும் வகையில் திட்டமிட்டு அமைப்பார். இன்று பல இசைக்கலைஞர்கள் பின்பற்றும் இந்த முறைக்கு முன்னோடி இவர்தான். ”ஒவ்வொரு கச்சேரியிலும் நான் என்றபாடவேண்டும், எந்த வரிசையில் பாடவேண்டும் என்பதை மாமாதான் முடிவு செய்வார். எதையும் மாற்றமுடியாது” என்று எம்,எஸ் சொல்லியிருக்கிறார். நாடு முழுவதும் தன் கந்தர்வகுரலால் இசைஞானத்தால் புகழ்பெற்ற எம்.எஸ் பிரதமரால் இசைஅரசி என்று புகழப்படும் அளவிற்குப் புதிய உயரங்களைத் தொட்ட அவரை அடுத்த கட்டமாக சர்வதேச இசை அரங்குகளை நோக்கி நகர்த்த சதாசிவம் முயற்சித்து வெற்றிஅடைகிறார். இங்கிலாந்தில் எடின்பர்க் இசைவிழா, எகித்து அரசின் அழைப்பு, ஐரோப்பிய அமெரிக்கப்பயணங்கள். என இசைப் பயணம் தொடர்கிறது.
  
புகழின் உச்சிக்குச் சென்ற பின்னர் ஒரு கலைஞர் அவர் சார்ந்த கலையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டுக் கௌரவிக்கப் படுவார். எம் எஸ் ஸின் விஷயத்தில் அவர் தமிழகத்தில், தென் இந்தியாவில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இசையின் அடையாளமாக அறியப்பட்டார். அதன் முக்கியக் காரணம் அவர் பக்தி இசைக்குக் கொடுத்த முக்கியத்துவம். பல இந்திய மொழிகளில் குறைந்த பட்சம் ஒரு பக்தி பாடலாவது பாடியிருப்பவர் அவர். கண் மூடிக் கேட்பவர்களுக்கு அவர் பாடலில் துதி செய்யும் கடவுள் காட்சி தரும் அளவுக்குப் பக்தியும் இசையும் இழைந்தோடும் குரல் அவருடையது. இசை ஆன்மீகத்தின் ஒரு வடிவம் என்பதை உணர்ந்த அவர் 80களில் நிறையப் பக்தி பாடல்கள்தான் பாடியிருக்கிறார். இந்தக் கட்டத்தில் அவர் ஆன்மீகத்தின் பக்கம் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
1954ல் சதாசிவம் மனசஞ்சலத்தில் இருந்தார். அன்பு மனைவி எம்.எஸ் உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்தது. மகள் ராதாவின் திருமணம் நிச்சியம் ஆவது தாமதமாகிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் காஞ்சி பெரியவாளை தரிசனம் பண்ணுங்கோ எல்லாம் சரியாகும் என யோசனை சொன்னவர் சதாசிவத்தின் அருமை நண்பர் செம்மங்குடி. அதை ஏற்று இருவரும் காஞ்சி பெரியவர் முகாமிட்டிருந்த தலத்தில் போய்ச் சந்தித்தனர். அந்த முதல் சந்திப்பிலேயே எம்.எஸ் பெரியவரின் காந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்தார். இவர் தான் உன் ஆன்மீக குரு என்று உள்ளே ஒரு குரல் ஒலித்தது.. அவர்களைப் பக்தர்களாக ஏற்றுக்கொண்ட காஞ்சி முனிவரைக் கடவுளாகவே வழி பட்டனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரைச் சந்தித்து அவர் முன்னிலையில் மணிக்கணக்கில் பக்தி பரவசத்தோடு பாடுவார். அதி தீவிர பக்தர்களாகிவிட்ட இந்தத் தம்பதியினர். எம்.எஸ். எந்தப் பணியைத் தொடங்கினாலும் குருவிடம் ஆசி பெறுவதையும் எந்த விஷயத்தின் வெற்றிகளையும் அவருக்குச் சமர்ப்பிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஆசிகள் எம்.எச்சின் இசைவாழ்க்கையின் தொடர்ந்த வெற்றிகளுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.
ஆன்மிக குருவிடம் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தைபோலவே தனக்கு இசையை, அதன் நுணுக்கங்களைக் கற்பித்த பல மூத்தவர் வித்துவான்களின் மீது அவர் பெருமதிப்புக் கொண்டிருந்தார். மத்தியபிரேதேச அரசு காளிதாஸ் சன்மான் என்ற விருதைப் பணமுடிப்போடு அளிக்க அழைத்தபோதும், திருப்பதி தேவஸ்தானம் ஆஸ்தான வித்துவான் கெளரவம் அளிக்க வந்தபோதும் தன் குருவிற்கு அளிக்கப்படாத விருது தனக்கு வேண்டாம் என மறுத்தார். தன்னுடைய அன்னைக்கு அடுத்தஸ்தானத்தில் குருவைப் போற்றியவர்.
உலகளவில் புகழ் பெற்று உச்சத்தைத் தொட்டாலும் எம்.எஸ் மிக எளிமையாக எவருடனும் பழகுபவராகவும் அன்பும் பாசமும் கொண்டவராகவும் இருந்தார். சங்கீதக்காரர்கள் மட்டுமில்லை சதாரண மக்கள் கூட ”நம்ப எம் எஸ்” என்று பெருமிதத்துடன் வணங்கும் நிலையை அடைந்தவர். இவர் அந்த நிலையை அடைய உதவியது அவரது தனித்தன்மை கொண்ட தெய்வீக குரல், ஆண்டவனின் அருள், முன்பிறவியில் அவர் செய்த புண்ணியம், சதாசிவத்தின் தனித்திறமையான மேல்மட்ட தொடர்புகள் எனப் பலவிதமாகப் பலரால் வர்ணிக்கப் பட்டாலும், உண்மையான அடிப்படையான காரணம் இவற்றையெல்லாம் தாண்டி அவர் தன் திறனை உணர்ந்த பின்னர் அதை வளர்த்துக்கொள்ள, செழுமைப்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட கடினமான உண்மையான உழைப்பு தான், எப்போதும் தாம் கற்றது கையளவு மட்டுமே என்ற எண்ணத்தில் கற்றுக்கொள்வதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததுதான். இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
மீரா சினிமாவில் நடிக்கப் போனபோது இந்திப் பாடல்களை எப்படி கவனமாகக் கற்றுக்கொண்டு பாடினாரோ அதைப்போல வாழ்நாள் முழுவதும் மாணவியாக இருந்து கற்றுக்கொண்டே இருந்திருக்கிறார். பெங்காலி பாடல்களை திலிப் குமார், ஹிந்தி பாடல்களைச் சித்தேஸ்வரி தேவி என அந்தந்தத் துறை வல்லுநர்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் கற்றுக்கொண்டவர்.
60 ஆண்டுகள் இசையே தன் உயிர் மூச்சாக வாழ்வே சங்கீதமாகவே வாழ்ந்த எம்.எஸ் அவர்கள் கிட்டதட்ட 2500 பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருந்தார். எட்டு வயதில் எப்படித் தன் முதல் குருவிடம் மிககவனமாகப் பயின்றாரோ அதே கவனத்துடன், தன் 80 வது வயதிலும் புதிய பாடல்களை விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் மலையாளம், ஹிந்தி மராத்தி குஜராத்தி மொழிப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒரு ஆங்கிலப் பாடலும் பாடியிருக்கிறார்.. பள்ளிக்கூடம் சென்று முறையாகக் கல்விகற்றவர் இல்லை எம்.எஸ். ஆனால் ஒரு பாடலை சரியாகச் சிறப்பாகப் பாடவேண்டும் என்றால். அதன் மொழி, வார்த்தைகளின் சரியான அர்த்தம், அது அந்தப்பாடலில் கையாளப்பட்டிருக்கும் பாங்கு சரியான உச்சரிப்பு இவற்றை உணர்ந்து நன்றாகக் கற்றுக்கொண்ட பின் பல முறை சரிபார்த்துகொண்டபின்னர்தான் பாடுவார்.
பாடலை முதலில் தன் கைப்பட நோட்டில் எழுதிக்கொள்வார். எழுதி என்றால் வெறும் காப்பி எடுத்துக்கொள்ளவதில்லை. முதலில் பாடலின் மொழியில் பதம் பிரித்து இடைவெளியிட்டு எழுதி அதன் கீழ் தமிழில் அந்த வார்த்தைகளின் தமிழ் அர்த்தம் பின் அதன் கீழே ஒவ்வொரு வார்த்தையும் பாடலில் எப்படி உச்சரிக்கப்படவேண்டும் என்ற நொட்டேஷன் மாதிரியான குறிப்பு இப்படி ஒவ்வொரு பாடலையும் எழுதி பயிற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு புதிய பாடலைக் கற்கும் போதும் இதைச் செய்திருக்கிறார். இவ்வளவு அருமையாகத்  குறிப்புக்கள் தயாரிக்கப் பட்டிருந்த போதும் ஒரு பாடலைக்கூட அவர் நோட்டுபுத்தகத்தைப் பார்த்துப் பாடியதில்லை. ஒரு முறை எழுதி மனப்பாடம் செய்துவிட்டால் இந்தக் குறிப்புகள் பாடும் போது அவர் மனக்கண் முன்னே வருமோ என்னவோ அப்படியே பாடுவார். தனக்கு அடுத்த தலைமுறை புத்தகம் பார்த்து பாடுவதைக் கண்டு வருந்தியிருக்கிறார். ஒரு பாடலை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளாமல் பார்த்துப் பாடினால் அந்தப் பாடலை எழுதியவரை அவமதிப்பதாகும் என்று சொல்லுவார்,
வார்த்தைகள் மனதில் இருந்து வராவிட்டால் பாடலில் எப்படி உணர்ச்சிகளை வெளிக்காட்டமுடியும் என்பது அவருடைய கேள்வி.
பாடல்களை மனப்பாடம் செய்வதோடு மட்டும் எம். எஸ் நிறுத்திக்கொள்வதில்லை. அதை வார்த்தைகளில் உச்சரிப்புத் திருத்தமாக இருக்கிறதா வார்த்தைகளுக்கு இடையில் சரியான இடைவெளியில் பாடுகிறரா என அந்தப் பாடல் சம்மந்தப்பட்ட வல்லுநர்களிடம் பாடி காட்டி ஒப்புதல் பெற்றபின்னரே மேடையில் பாடுவார். கம்பராமாயணப் பாடல்கள் என்றால் கம்பனில் கரைகண்ட நீதியரசர் பாடலை கேட்டு ஒப்புதல் தந்தபின்னர்தான் ரிக்கார்டிங். சம்ஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனைகளைச் சரியாகப் பாட வேண்டும் என்பதற்காக அந்த மொழியை முதலில் கற்றவர். அவரது சம்ஸ்கிருத உச்சரிப்பை காசிநகர பண்டிதர்களே வியந்து அருமையாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார்கள்.இப்படி ’என்றென்றும் கற்கும் மாணவியாக’ இருந்ததால் தான் பலவாழ்நாள் சாதனைகளை இவரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது.
 “நெஞ்சக் கனகல் நெகிழ்ந்துருக…
பாடும்பணியே பணியாய் அருள்வாய்” என்று முருகனிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.  அதை தன் வாழ்வில் இசைப்பணியை இறைப்பணியாகவே தன் வாழ்வில் நீண்டநாள் செய்தவர் எம்.எஸ்.
அவர் அமரான செய்திகேட்ட உடன் சென்னைக்கு வந்த அப்துல் கலாம் சமர்ப்பித்த தனது அஞ்சலி கவிதையை
 ”யாழிசையில் பிறந்த ஏழிசை கீதம் நீ” எனத் துவக்குகிறார்.
தனக்குத் தெய்வம் தந்த இசையின் ஸ்வரங்களோடு தன் வாழ்க்கைப்பாடலை 
ஆர்வம்,நம்பிக்கை,கடினஉழைப்பு,புலமை பக்தி,ஈதல்.எளிமை 
என்ற எழுஸ்வரங்களுடன்  
அமைத்துக்கொண்டு வாழ்ந்து காட்டியவர் எம் எஸ்

4/2/16

இளைஞர்களே இந்தியா உங்களுக்கு நன்றி சொல்லுகிறது.

 




கடந்த சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்ப வசதி. GPS. உங்கள் காரில் இருக்கும் அந்தக் கருவியில் நீங்கள் போகவேண்டிய இடத்தைச் சொன்னால் அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது சரியான பாதை போகும் நேரம் எல்லாம் அந்தக் கருவி சொல்லும். அது சொன்ன பாதையிலிருந்து மாறி நீங்கள் வேறுபாதையில் காரை ஒட்டிக்கொண்டு போனால் நீங்கள் தவறாகப் போகிறீர்கள் என்றும் அந்த இடத்திலிருந்து மீண்டும் எப்படி சரியான இடத்துக்குப் போக வேண்டும் என்றும் சொல்லும்.(திட்டாமல்- கோபித்துக்கொள்ளாமல்) ஆம்! அந்தக் கருவி பேசும். இது இப்போது இந்திய கார்களிலும் செல்போன்களிலும் வந்துவிட்டது.
இப்படியொரு ஜிபிஎஸ் கருவி இருந்தால்போதும், அமோசன் காடுகளிலோ, அண்டார்ட்டிகா பனிபாலைவனத்திலோ கூட நீங்கள் காணாமல் போகவே முடியாது ஏழு கடல், ஏழு மலையையும் சர்வசாதாரணமாகத் தாண்டி வீட்டுக்கு வந்துவிட முடியும். காரணம், தெளிவான வழிப்பாதையை அதன் மூலம் அறிய முடிவதுதான். இன்று இந்தியாவிலும் இந்த வசதி கிடைத்ததற்கு காரணம் அமெரிக்கா விண்வெளியில் நிறுத்தியிருக்கும் செயற்கை கோள்கள் தான்.
அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பும் மட்டுமே கொண்டிருக்கும் இந்தச் செயற்கை கோள் வசதியை நமது இஸ்ரோ நமக்காக  இப்போது செய்யவதற்காக அனுப்பிக் கொண்டிருக்கும் கோள்கள்தான் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். கோள்கள். .கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த வரிசையில் 5 (1-இ) வது கோளை விண்வெளிக்கு அனுப்பி சரியான இடத்தில் நிறுத்தியிருக்கிறது. இஸ்ரோவின் சாதனை மகுடத்தில் இது இன்னொரு வைரம்.
இஸ்ரோவின் நொடிப்பொழுதில் வழிகாட்டும் GPS திட்டம் சரியாக இயங்க 7 கோள்கள் கொண்ட ஒரு தொகுப்பு பூமத்திய ரேகைக்கு 36000 கீமீக்கு மேலே நிறுவப்பட வேண்டும். அதில் 3 பூமத்திய ரேகைக் மேலேயும் மற்ற 4ம்அதற்கு 29 டிகிரி சாய்வாகவும் நிறுவப்பட வேண்டும். எனக் கணக்கிட்டு 2013ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொன்றாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோள்கள் நிறுத்தப் பட வேண்டிய இடங்கள் மிக துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, அந்த இடத்தில் கச்சிதமாக நிறுத்தபடவில்லை என்றால் திட்டம் வெற்றி பெறாது. இதுவரை அனுப்பிய 4 கோள்களும் சரியான இடத்திலிருப்பதைப் போலவே இந்த 5வது கோளும் திட்டமிட்டபடி விண்வெளியில் பாய்ந்த சில நிமிடங்களில் அதன் திட்டமிட்ட இலக்கில் போய் நின்றது
 ஏன் எழு கோள்கள்?.
 இஸ்ரோ இந்த வசதியைத் திட்டமிட்டிருப்பது இந்தியாவிற்கு மட்டுமில்லை. இதனால் பலன் பெறப்போவது பல தென்கிழக்கு நாடுகளும் தான். இந்தியாவைச் சுற்றி 1500 கீமி பரப்பளவை கண்காணிக்கபோகிறது என்பதாலும், இப்போது அமெரிக்கா கோள்கள் தரும் தகவல்களைவிட மிக அதிகளவு தகவல்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும் 7 கோள்கள் திட்டமிடபட்டிருக்கிறது.
இந்தக் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். கோள்கள் எப்படி வேலைசெய்கிறது?. ஒவ்வொரு கோளிலும் சக்திவாய்ந்த ஒரு அணுசக்தி கடிகாரம் இருக்கிறது. அது அனுப்பும் மின் அலைகளைப் பூமியில் உள்ள GPS கருவி பெற்று அது இருக்குமிடத்தகவலை கோளுக்கு அனுப்புகிறது.கோளிலிருக்கும் மேப் ரிடர் போன்ற மற்ற கருவிகளின் உதவியுடன் வழிகாட்டும் பணி நடைபெறுகிறது. இவ்வளவும் ஒருவினாடியின் ஒரு லட்சம்பகுதிக்குள் நடைபெறும். வினாடி பிசகினால் வழி காட்டவேண்டிய இடம் தவறலாதாகி ஓர் லட்சம் மைல் தள்ளியிருக்கும் இடத்தைக் காட்டிவிடும் இந்தக் காரணத்தினால் கோளில் உள்ள அணுசக்தி கடிகாரம் மிக மிகத் துல்லியமாக இயங்க வேண்டும். . கோள்களில் இருக்கும் அந்தக் கடிகாரங்கள் 300மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி மட்டுமே தாமதமாகும் என்ற அளவுக்குத் துல்லியமானது. எல்லாவற்றையும் விட இந்தப் பணிகளைச்செய்ய அந்தக் கோள் மிகச்சரியான் இடத்தில் நிலைநிறுத்த பட வேண்டும்.
. இந்தச் சவாலான சாதனையைத்தான் இஸ்ரோ தவறு இல்லாமல் 5 முறையும் செய்திருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் மற்ற இரண்டையும்(1F,1G) அனுப்பி இந்தக் கோள்களின் கட்டமைப்பை உருவாக்கி விட்டால் இந்திய GPS செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
ஏற்கனவே இருக்கும் இந்த வசதியை ஏன் நாம் மீண்டும் செய்ய வேண்டும்? இப்போது அமெரிக்கா தந்திருக்கும் வசதி பிறநாடுகளில் 24 மணி நேரமும்கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் இந்தியா உருவாக்கும் இந்தச் சேவை தரை, கடல் தவிர் வான்வெளி பாதைகளுக்கும் இயற்கையின் சீற்றங்களின் போக்கை அறிவதற்கும் பயன்படப்போகிறது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசாவின், ஓராண்டு பட்ஜெட்டில் செலவழிக்கும் தொகையில் பாதியைத்தான் இதுவரையில், அதாவது கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரோ செலவிட்டுள்ளது. அதற்குள் விண்வெளித்துறையில் எந்த நாடும் எட்ட முடியாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது. இந்த வெற்றிகளுக்குப் பின்னே இருக்கும் விஞ்ஞானிகள், பொறியாளர்களில் பலர் இளைஞர்கள். உலக அரங்கில் இவர்களின் அர்ப்பணிப்பான பணிகளினால் தான் நாட்டின் பெருமையும் கெளரவும் உயர்ந்திருக்கிறது. 
அவர்கள் சாதனையால் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் நாம் அவர்களுக்கு நம் நன்றியையும் சொல்வோம்

  

3/2/16

உயிர் காப்பான் தோழன்.


நீர் நிறைந்த அந்த ஏரியின் நடுவே மிதக்கிறதோ என்ற எண்ணத்தை எழுப்பும் அந்த அழகான பிரம்மாண்டமான  அரண்மனையைக் கரையிலிருந்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். நீரில் நனைந்த பின் இதமாக நம்மைத் தொட்டுச் செல்லும் மெல்லிய காற்று. மெல்லிய குரலில் பேசிக்கொள்ளும் வெளிநாட்டு டூரிஸ்ட்கள். இந்தியாவின் அழகிய நகரங்களில் ஒன்றான உதய்ப்பூரில் பிச்சலோ ஏரி அருகே இருக்கிறோம். நகரில் இது போலப் பல ஏரிகள் இருந்தாலும் அத்தனையும் செயற்கையாக உருவாக்கப் பட்ட ஏரிகள் என்ற தகவல் ஆச்சரித்தை தருகிறது. நகரில் பல அழகிய அரண்மனைகள், மலைச்சரிவுகளிலிருக்கும் கோட்டைகள் அனைத்தும் ஆடம்பர ஹோட்டல்களாகி மன்னர் பரம்பரையினருக்கு டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக எழுந்துகொண்டிருக்கும்  கட்டிடங்கள் கூட மன்னர் கால பாணியில் இருப்பதிலிருந்து ராஜஸ்தானியர்களுக்கு தங்கள் பராம்பரியத்தின் மீதுள்ள ஆர்வம் புரிகிறது.டூரிஸ்ட்களுக்கு  உள்ளூர் கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகள் நிறைந்திருக்கும்  பகுதியில்  நம்மைக் கவருவது  சாலைகளின் சந்திப்பில் இருக்கும் அந்தக் கம்பீரமான வெள்ளைக் குதிரையின் சிலை. வீரன் எவரும் இல்லாமல் தனியாக ஒரு குதிரையின் சிலை நிற்பது சற்று வினோதமாக இருந்தது. நகர சதுக்கங்களில் நிற்கும் குதிரை சிலைகளை வடிவமைப்பதில் உலகெங்கும் சில மரபுகள் கடைப்பிடிக்கபடுகிறது. குதிரையின் இரண்டுகால்கள் தரையிலிருந்து தூக்கிய நிலையிலிருந்தால் அதன்மீது இருக்கும் வீரன் போரில் இறந்தவர். ஒரு கால் மட்டும் தூக்கியிருந்தால் அதன் மீது இருக்கும் மன்னர் போரில் படுகாயமுற்றவர். நான்கு கால்களும் தரையிலிருந்தால் அதன் மீது இருக்கும் மன்னர் போரில் மரணமடையாதவர்.  இந்தச் சிவப்பு சேணமிட்டிருக்கும்  வெள்ளைக்குதிரை ஒற்றை காலைத் தூக்கி நிற்கிறது. ஏன் அதன்மீது மன்னர் எவரும் இல்லை என்று .விசாரித்ததில் அந்தக் குதிரையின் பெயர் சேத்தக். அது ராணாவுடையது. ரஜபுத்திரர்களின் பெருமைக்குரிய சின்னம் என்பதையும் சொன்னவர்  உள்ளூர் மீயூசியத்தில் மாலயில் நடைபெறும் ஒலிஒளி காட்சிக்குப் போனால் அதனுடைய வீரக்கதையை தெரிந்துகொள்ளலாம் என்றார். நம் ஆர்வம் அதிகமாகிறது.அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் ஒவியங்கள் ஒவ்வொன்றும் நம்முடன் பேசுகிறது. அத்தனை தத்ரூபம். ராஜ கம்பீரத்துடன் ராணாக்கள், தான் மணக்கப்போகும் நாயகனின் படத்தைப் பார்த்து நாணும் இளவரசி, கொழுந்துவிட்டு எரியும் தீயில் குதிக்க தயாராக ராஜகுடும்பத்தினர் என எல்லா ஒவியங்களுமே நம்மை மேலே நகரவிடாமல் நிற்க வைக்கிறது.ஒலி ஒளிகாட்சிக்கு அறிவிப்பு செய்யபட்டவுடன் குன்றின் மேல் பகுதிக்குச் செல்லுகிறோம். அங்கு ஒரு சதுக்கத்தில் ராணா பிராதப் சிங்க்கு நினைவுசின்னம். உயரமான மேடையில் ஒரு காலைத் தூக்கிய நிலையில் இருக்கும் குதிரையின் மீது ராணா ஈட்டியுடன் அமர்திருக்கிறார்.
மரணபூமி என்று அழைக்கபட்ட பாலைவனமும் பாறைகளும் நிறைந்த பூமிக்கு விரட்டபட்டு குழுக்களாக வாழ்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கை போராட்டதில் வென்று ரஜபுத்திர்கள் என்ற இனத்தை உருவாக்கிப் பின்னர் ராஜஸ்தான் தேசத்தையே உருவாக்கிய கதையைச் சொல்லும் ராஜஸ்தானி மொழி நாட்டு பாடலுடன் காட்சி துவங்குகிறது. எந்த வளமும் இல்லாத அந்தப் பகுதியிலிருக்கும் மார்வாரி என்ற குதிரைகளின் அபார திறன் கண்டு வியந்து அதை இனப்பெருக்கும் செய்து அண்டை நாட்டு மன்னர்களுக்கு விற்று செல்வம் சேர்த்து வளர்ந்தார்கள் என்று நீள்கிறது அந்தக் கதை. மொழி புரியாவிட்டாலும் இசையில் கிராமிய இசையின் மணமும் கனமும் புரிகிறது. ஆங்கிலத்தில் தொடரும் அந்த நிகழ்ச்சியில் ராணாவின் கதை சொல்லபடுகிறது. 1570 களில் ரஜபுத்தர்களின் தேசமான ராஜஸ்தானை ஆண்டுவந்தவர் ராண பிராதப் சிங். ராணா என்பது மன்னரின் பிரநிதி என்பதைக் குறிக்கும் சொல். அப்படியானால் மன்னர்யார்?. அங்குள்ள சிவபெருமான் தான் அரசர்  அவர் சார்பில் ராணாக்கள் தேசத்தை நிர்வாகம் செய்துவந்தார்கள்.சாம்ராஜ்ய எல்லைகளை விரிவாக்கத் துடித்த மொகாலய மன்னர்களின் இலக்கானது ராஜஸ்தான். அதனால் ரஜபுத்திரர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த ஆரவல்லி மலைக்குன்றுகள் மீது நீண்ட மதில் சுவர்களை அரணாக எழுப்பியிருந்தனர். எதிரிப் படைகள் மலைப்பகுதியில் ஏறி வந்தால் கூட மதில்களைப் படைகள் தாண்ட முடியாது என்பது அவர்கள் எண்ணம். அப்படியே வந்தாலும் போரிட பயிற்சி பெற்ற குதிரைகளையும் வைத்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் சேதக். ராணாவின் குதிரை.. ஆனால் இந்த பிரதேசத்தைத் தன் சாம்ராஜ்யத்துடன் இணைக்க முடிவு செய்த அக்பர் இவர்களைச் சமாளிக்க  யானைகள் கொண்ட ஒரு படை அணியை உருவாக்கிப் படையெடுத்து வருகிறார். நகருக்குள் நுழைவதற்காக ரஜபுத்திரர்கள் ஏற்படுத்தியிருக்கும் குறுகிய நுழைவாயிலை யானைப்படைகள் மூலம் தகர்த்துவிட்டு உள்ளே சென்று மலையிலிருக்கும் நகரைப்பிடிக்க திட்டம்அக்பரின் யானைப்படையை துணிவுடன் அவரது குதிரையான சேத்க்குடன் சந்திக்கிறார். ராணாபிராதப். .வெகுண்டு வரும் யானையைப் பாய்ந்து சென்று யானையின் கண்களைத் தன் குளம்புகளின் மூலம் பார்வையிழக்க செய்கிறது சேத்தக். கண் தெரியாமல் போனாலும் யானை தன் தந்தங்களினால் சேத்தக்கின் வயிற்றை கிழிக்கிறது. விழுந்த சேத்தக்கின் பின் கால்களில் ஒன்று முறிகிறது. உயரமான யானைமீது இருக்கும் தளபதியின் வேல் எளிதாக ராணாவை காயப்படுத்துகிறது.தன் மீது இருக்கும் ராணா காயமடைந்தவிட்டதால் உடனே சேத்தக் களத்தைவிட்டு ராணாவுடன் தப்பி ஓடுகிறது. மூன்று கால்களுடன் பலமைல்கள் ஒடி ஒரு சிற்றோடையை தாண்டி கடக்கும்போது அடிபட்டு இறந்துவிடுகிறது. நாட்டுடன் தன் அருமைத்தோழனை இழந்த துக்கத்தில் ராணா காட்டிலேயே நீண்ட நாள் வாழ்கிறார். அந்தக் குதிரை விழுந்த இடத்தில் சேத்தக்கின் விசுவாசத்தையும் புத்தி கூர்மையையும் பாராட்டி கல்வெட்டுடன் ஒரு சமாதியை நிறுவுகிறார். இன்றும் அது அங்கிருக்கிறது.குதிரைகளின் குளம்பொலிகளுடன் யானைகளின் பிளரியின் பின்னணியில்ராணா போரில் தோற்றிருக்கலாம் ஆனால் மார்வாரி சேத்தக் தன் ராஜவிசுவாச கடமையில் வென்றுவிட்டதுஎன்ற முதலில் கேட்ட நாட்டு பாடலுடன் நிகழ்ச்சி முடிகிறதுகாட்சி முடிந்து திரும்போது இரவில் மெல்லிய நீல வண்ண ஒளியில் மீண்டும் அதைப்பார்த்தபோது அதற்கு ஒரு சல்யூட் வைக்க வேண்டும் என்று தோன்றிற்று.